Saturday, October 31, 2009

86. ஸ்டைலு ஸ்டைலு தான் !!


போன வாரம் மயிலாடுதுறை சென்றிருந்த பொழுது ஒரு தோட்டத்தில் வேலை பார்ப்பவர் குடும்பத்துப் பையனைக் கிளிக்கிய போது..

“எறும்பு கிறும்பு கடிச்சிரும்... ஜட்டியப் போடுறா “ ந்னு நான் சொன்னதை ரொம்ப உன்னிப்பாக் கேட்டுக்கிட்டான்..

oOo

தீபாவளிக்கு மறுநாள் கோவை செண்ட்ரல் தியேட்டரில் இரவுக்காட்சி ஆதவன் பார்க்க சென்றிருந்தேன். தியேட்டர் ஆடிட்டர் மூலமாக வாங்கியதில் 80 ரூபாய் டிக்கெட் எண்பதுக்கே எங்களுக்குக் கிடைத்தது. மற்றவர்களுக்கு எப்படியும் அதிக விலைக்கு விற்றிருப்பார்கள்.. இருந்தாலும் காட்சி “ஹவுஸ்ஃபுல்”.. இருக்கிற விலைவாசியில் எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ


oOo

ஒரு நாள் காலை எழுந்த வுடனேயே ஷாக் !!

காலை 4 மணிக்கு எழுந்த போது பால்காரர் இன்னும் வந்திருக்கவில்லை. அவர் எப்பொழுதும் 5 மணிக்கு மேல் தான் வருவாராம்..

காபி குடிக்கும் ஆசையை அடக்க முடியவில்லையாதலால் என்ன செய்யறது என்ற கேள்விக்கு ..”சட்ட்டையைப் போட்டுக்கிட்டு இப்படியே.. இரட்டைத் தெரு முனை வரைக்கும் போயிட்ட்டு.. அங்க இருக்குற கடையிலே பால் (ஐஸ் பால் தான்) வாங்கிட்டு வந்துரு” என்று யோசனை சொன்னார் அப்பா..

கைலியுடனும் நேத்துக் கழட்டிப் போட்ட சட்டையில் இருபது ரூபாய் (ஒரு லிட்டர் தானே வாங்கப் போறோம் .. இதுவே அதிகம் என்ற நினைப்பில்...) வைத்துக் கொண்டு கடைக்குச் சென்றால்.. அவன் சொன்னது...”அண்ணே ..இப்பல்லாம் பால் லிட்டர் 28 ரூபாய்ணே...”


”அடப்பாவி.. போன தடவை வந்த போது 10 ரூபாயோ.. 12 ரூபாயோ சொன்னியே ராஜா”

“ஆமாண்ணே.. சொன்னேன்.. அது அரை லிட்டர் விலைண்ணே....”

காலை 4:30 மணிக்கு இது எனக்கு பெரீய்ய ஷாக் தான்..

நான் கடைக்கெல்லாம் போயி எதுவும் வாங்குறதில்லை.. அப்படியே வாங்கினாலும் “நீங்க எடுத்துட்டுப் போங்கண்ணே.. நான் அப்புறம் அண்ணன் கிட்டே பணம் வாங்கிக்கிறேன்” என்று அனுப்பி விடுவார்களாதலால் எதுவும் காசு விவரம் கேட்டுக் கொள்வதில்லை.. நமக்குத் தெரிஞ்ச ஒரே விலை வாசி நிலவரம் “கோல்ட் ப்ளேக் கிங்ஸ் ரூ 4.50 மட்டும் தான்” (இதுக்கெல்லாம் போயி அண்ணன் கிட்டே காசு கேக்காதே ராஜா.. நானே தர்றேன்.. வாங்கிக்க என்று சொல்லிக் கொடுத்து விடுவதால்..)


இந்த விலைவாசியிலே மக்களெல்லாம் எப்படித்தான் குடும்பம் நடத்தறாங்களோ...

oOo

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவில் .. நம்ம ஊரிலேயே ஒரு படம் பார்க்கலாமென்று ஊரில் உள்ள ஒரு பிரபல தியேட்டருக்குச் சென்றிருந்தேன். கூட வந்தவர் மயிலாடுதுறையிலேயே உள்ள பிரபல அரசியல் பிரமுகர். ரொம்ப பழக்கமானவராதலால்.. “படம் போட்டிருப்பான்.. பரவாயில்ல வாங்க தம்பி..” என்று அன்புடன் அழைத்துப் போனார்.

படம் ஆரம்பமாகியிருந்தது.. தியேட்டர் கதவுகளும் மூடியிருந்தன... வாசலில் “பேராண்மை” போஸ்டர் ஒட்டியிருந்தது.. மணி எப்படியும் இரவு 10:30 கிட்டே இருக்கும்...

எங்களை ’கேட்’ டருகில் பார்த்தவுடன்... மானேஜர் ரூமிலிருந்து ஆள் வந்து திறந்து விட்டார்..

“டிக்கெட் எல்லாம் ஒண்ணும் வேணாம் சார்.. எங்க வேண்டுமானாலும் போய் உட்கார்ந்து பாருங்க சார்..”

என்றவரை வற்புறுத்தி டிக்கெட்டு கிழிக்கச் சொன்னதுக்கு.. ரொம்ப குறைந்த விலைக்குச் சொல்லி பவ்யமாக வாங்கிக்கொண்டார்..

“படம் வேணும்னா.. ஆரம்பத்துலேருந்து போடச் சொல்லட்டுமா சார்..” என்றவரிடம்,

“அதெல்லாம் வேண்டாம்” என்று அன்பாக மறுத்துவிட்டு..

தியேட்டருக்குள் சென்றால்.. உள்ளே எங்களையும் சேர்த்து மொத்தம் 25 பேர்தான்.

படம் “பேராண்மை” இல்லை என்று புரிந்தாலும் .. இடைவேளையில் பேர் கேட்டுக்கொண்டேன் .. “ஈரம்”. பட்ம் நல்லாருந்தது..


நல்ல படம்.. தியேட்டரில் இன்னும் கூட்டம் வந்திருக்கலாம்.. நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டாமா?

oOo

திரும்பி ஊருக்குப் போகக் கிளம்பி சென்னை வந்த பொழுது.. நெருங்கிய உறவினர் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது.. உறவினர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தவர் முகம் பரிச்சயமாகத் தெரிஞ்சது..

“உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குங்களே...”

“ஆமாம் சார்.. பேரு விஜயசாரதி.. சன் டீவீயிலே நீங்கள் கேட்டவை ந்னு ப்ரொகிராமெல்லாம் பண்றேன் சார்” அப்படீன்னார்..

”அப்படிங்களா.. ரொம்ப சந்தோஷம்.. இப்ப நினைவுக்கு வந்திடிச்சி”

"...."

”நீங்க கூட ஏதோ படத்துல ஹீரோவா நடிச்சீங்க போலருக்கே.. இருங்க பேர் சொல்றேன்” என்று 5 வினாடிகள் யோசிச்சு.. “ஹாங்... பவளகொடி தானுங்களே..”

அப்படீன்னு ஒரு போடு போட்டதில்.. அவரே அசந்திட்டார்...

”எப்படிங்க உங்களுக்கு நான் நடிச்ச படம் தெரிஞ்சுது? அந்தப் படம் ஒண்ணும் பெரிசா ஓடலீங்களே” என்று ஆச்சர்யமாகக் கேட்டவரிடம்..

“ஒண்ணுமில்லீங்க .. அதைத் தயாரிச்சி டைரக்ட் செஞ்ச சரவணன் நமக்கு ரொம்ப நண்பருங்க” என்று சொன்னதில் ஆசுவாசமடைந்து அப்புறம் 30 நிமிடங்கள் நிறைவாகப் பேசிக்கொண்டிருந்தார்..