Tuesday, January 25, 2011

113. ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட் தான்..

இரண்டு தினங்களுக்கு முன் தினமலரில் இந்தப் படத்தைப் பார்த்த போது நிஜமாகவே புல்லரித்தது.

பின்னணியில் தேசிய கீதத்தை ஆரம்பித்தவுடன் அப்படியே நின்று மரியாதை செலுத்தும் தாத்தாவுக்கு பணிவான வணக்கங்கள். அவரது செயலைப் பார்த்தும் கூட அதைப் பின்பற்றாமல் அதை வேடிக்கைப் பார்க்கும் (அல்லது தாத்தாவுக்குப் பாதுகாப்பு தரும்) காவல்காரர் கற்றுக் கொள்ளவேண்டியது அதிகம்..


இதைப் படித்து விட்டு சல்யூட் வெச்சாத்தான் தேசபக்தியா.. எங்களுக்கெல்லாம் எல்லாம் மனசில இருக்கு.. அப்படீங்கிற டயலாகெல்லாம் வரும் தான்.. இருந்தாலும் புரோட்டாக்கால் பின்பற்றுவதில் எப்பொழுதுமே ஓல்ட் ஈஸ் கோல்ட்தான்..

குடியரசுதின வாழ்த்துக்க்ள்..

Thursday, January 13, 2011

112. படித்ததில் சிரித்தது...உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், தென் தமிழ்நாட்டின் பாசத்துக்குரிய தலைவர், பாண்டிச்சேரியின் ஆளப்பிறந்த மைந்தன், ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், 1987 ல் சமூகநீதி புரட்சி கண்ட புரட்சிவேந்தன், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் & பித்து கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, சத்ரிய வம்சத்தின் ஒளிவிளக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க...1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்

--தினமலரில் ஒரு வாசகரின் பின்னூட்டம்.. படித்துவிட்டு சிரிக்கத்தான் முடிந்தது...


தமிழக போக்குவரத்துத் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமாம் !!

போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு: அதிமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரவில்லை; போனஸ் தரவில்லை. அதனால், உங்களுக்கு செலவு மிச்சமானது. 18 முறை டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க, தமிழக அரசு 1,254 கோடி ரூபாய் மானியம் அளித்தது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தொழிலாளர்களுக்கு 195 கோடி ரூபாய் சம்பள உயர்வு வழங்கினோம். இப்போது நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், 520 கோடி ரூபாய் சம்பள உயர்வு வழங்கியுள்ளோம். ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கி வருகிறோம்.போக்குவரத்துக் கழகங்களில் முன்பு 700 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், தற்போது 1,000 கோடி ரூபாயாக உள்ளது.


1234 கோடி ரூபாய் மானியம் கொடுத்த பின்னாலும் 1000 கோடி ரூபாய் நஷ்டமாம.


அமைச்சர் நேருவுக்கு நிர்வாகத் திறமையில்லையென்றால் பதவியிலிருந்து ஒதுங்கிக்கொண்டு திறமையானவரிடம் பொறுப்பைக் கொடுக்கலாமே..

அமைச்சருக்கு சொந்தமாக இருக்கும் MJT Travels நிறுவனம் நல்ல லாபத்தில் ஓடுகின்றதாம். தொழிலாளர்களுக்கெல்லாம் போனஸ் கொடுத்துள்ளாராம். ..Tuesday, January 11, 2011

111. சீமாச்சுவின் தாம்பூலம் - 11 ஜனவரி, 2011

இன்று தேதி 1/11/11 (மாதம்/நாள்/வருடம் அமெரிக்க பாணியில்).. இன்று என் 111 வது இடுகையை இடுவது குறித்து மிக மகிழ்ச்சி.. அருமையான பொருத்தம் என்று இன்று மதியம்தான் நினைத்தேன்.. கீழே யுள்ள படத்தில் பாருங்கள்.. அந்தக் குழந்தை எவ்வளவு குறிபார்த்து அடித்திருக்கிறது.. அதைவிட அந்த ஃபோட்டோ எவ்வளவு துல்லியமாக அந்த மஞ்சள் நீர் குழந்தையின் மேல் படுவதற்கு சற்று முன்பாக எடுக்கப்பட்டிருக்கிறது... அவ்வளவு சந்தோஷம் எனக்கு ... ஹிஹி..

பழமைபேசி ஐயா 750 இடுகைகளும் மற்றவர்கள் ஆயிரத்துக்கு மேலான இடுகைகளும் இட்டு கொண்டாடும் நேரத்தில்.. நான் இத்தனை ஆண்டுகளில் 111 அடித்திருப்பது ஒரு குட்டி சாதனை தான்.. எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க ..”எல்லாரும் வகைவகையான மளிகை சாமான்களையெல்லாம் வெய்யிலில் உலர்த்தியிருந்தாங்களாம்.. அதைப் பார்த்த ஒரு எலி தன் வாலை வெய்ய்யிலில் உலர்த்தியிருந்ததாம்..” அது என்னதான் வாலாயிருந்தாலும் எலிக்கு அது உடலின் ஒரு முக்கியமான பாகம் தானே.. என்ன நான் சொல்றது? வர்றவங்களெல்லாம் “111 க்கு வாழ்த்துகள் அண்ணே..” என்று ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டமாவது போடுங்ககண்ணே....


oOo oOo

அமெரிக்காவிலெல்லாம் காருக்கு நம்பர் ப்ளேட் வாங்கும் போது “Personalized Tags" என்று உங்களுக்கு விருப்பமான 7-8 எழுத்து கேட்டு வாங்கலாம். அதற்கு வருடத்துக்கு $30-$50 அடிஷனல் சார்ஜ் உண்டு.. கீழே பாருங்க.. கலிஃபோர்னியாக் காரர் ஒருவர் “EarthQuake" அப்படீன்னு போட்ட்டு ஒரு ப்ளேட் போட்டிருக்காரு..அது போல சென்ற வாரம் ஒரு கார் ப்ளேட் பார்த்தேன்..அதில் “2XYNOXX" என்று போட்டிருந்தது அது பார்ப்பதற்கு Personalized Tag மாதிரி தான் தெரிந்தது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு உடனே புரிந்து விட்டது. பக்கத்திலிருந்த என் மகளிடமும் மனைவியிடமும் கேட்டேன்.. அவர்களுக்கு சட்டெனப் புரியவில்லை.. பிறகு நான் விளக்கியதும்..”ஆமாமில்லே..” அப்படீன்னு ஒத்துக்கிட்டாங்க.. உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் பின்னூட்டட்த்தில் சொல்லுங்கள்.. நிச்சயம் யாராவது சரியாகச் சொல்வீர்களென்று தெரியும்..

oOo oOo oOo


புகைவண்டிகள் போவதற்காக, கஷ்டப்பட்டு காசு செலவழிச்சி தண்டவாளங்கள் போட்டால் அதுல ஒருத்தரு எவ்வளவு ஈஸியால் சைக்கிளைத் தள்ளிக்கிட்டுப் போறாரு பாருங்க.. கொழுப்புதான்..

oOo oOo oOo

எனக்கு மிகப்பிடித்த சுயேச்சை வேட்பாளர் இவர். இவர் பெயர் ஷாம்லால் காந்தி.. இவர் அமிர்தசரஸில் இருக்கிறார். எல்லா தேர்தல்களிலும் சுயேச்சையாகப் போட்டியிடுவார். காந்தியின் கொள்கைகளைத் தவறாமல் இன்றும் பின்பற்றுகிறார். மக்கள் இவரை காந்தியென்றே அழைக்கிறார்கள். இன்றும் தன் கையாலேயே நெசவு செய்து கைத்த்றி ஆடைகளையே அணிகிறாரென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

சமீபத்திய (2009) தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு தன் கைவிரல் அடையாளமையையும் தன் வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பிக்கிறார் பாருங்கள்..தேர்தலில் போட்டியிடும் போது வாக்கு சேகரிக்க சைக்கிளில் தான் செல்வார்.. அவருக்கு ஒரு முறை தேர்தலில் போட்டியிடும் போது ஒரு காவலர் பாதுகாப்பு தரப்பட்டது.. அந்த காவலரிடம் அப்பொழுது வாகன வசதியில்லை.. அதனால் அவரையும் தன் சைக்கிளை டபுள்ஸ் அழைத்துக்கொண்டு (அவரே சைக்கிளை மிதித்துக் கொண்டு) சென்று வாக்கு சேகரித்தார்..

நான் ஓய்வுபெற்று மயிலாடுதுறையில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அப்பொழுது தேர்தலில் நின்றால் இவரைபோல இருக்க வேண்டும் (நானே நெசவு செய்து கைத்தறி அணியாவிட்டாலும்) என்று ஆசை (இதை ஆசை என்று சொன்னால் கூட அது ஆடம்பரமாகிவிடும் அபாயம் உண்டு) உண்டு..

படுபாவி ஆண்டிமுத்து இராசாவைப் பத்தி இரண்டு இடுகை போட்டதுக்கு பரிகாரமாக காந்தியைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு இந்த இடுகையில்...

கீழே படத்தில் பாருங்கள் வாக்கு சேகரிக்க காந்தி செல்கிறார்.. அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவர் பின்னே வாகனத்தில் செல்கின்றனர்.


oOo oOo

யாராவது ஆங்கிலப் புத்தாண்டை வானத்தில் ஆகாய விமானத்தில் இருக்கும் போது அனுபவித்திருக்கிறீர்களா?

1996 ம் வருட இறுதியில் அட்லாண்டாவிலிருந்தேன். என் திருமணத்துக்காக மயிலாடுதுறை செல்ல வேண்டியிருந்தது. டிக்கெட் தேடிக்கொண்டிருந்த போது டிசம்பர் 31 அன்று மாலை தான் லுஃப்தான்ஸாவில் கிடைத்தது. டிசம்பர் 31 மாலை 4:30 மணி அளவில் அட்லாண்டாவில் ஏறி ஃப்ராங்க்ஃபர்ட் விமான் நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்தில் மாறி.. ஜனவர் 2, 1997 விடியற்காலையில் சென்னையில் இறங்க வேண்டியிருந்தது. புது வருடம் வானத்தில் 38000 அடி உயரத்தில் பிறக்கப் போகிறது. விமானத்தில் ஏதாவது விசேஷமாக செய்வார்கள்.. வசந்தமாளிகை படத்தில்..”ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்..” பாட்டு மாதிரி அரைகுறை உடை (இல்லாவிட்டாலும் பரவாயில்லை) தேவதைகள் தட்டில் ஒயின் கிளாஸுடன் வந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லுவார்கள் என்றெல்லா கனவு கண்டு கொண்டிருந்தேன்.. கல்யாண கனவுகளுடன் இந்த கனவுகளும் சேர்ந்து கொஞ்சம் கிளுகிளுப்பாகத்தான் இருந்தது..

விமானத்தில் ஏற் ஒண்ணரை மணி நேரம் தான் ஆகியிருக்கும்.. அப்பொழுது அட்லாண்டாவில் மாலை 6 மணியிருக்கும்.. அப்பொழுதுதான் விமானத்தின் கேப்டன் மைக்கில் அறிவித்தார்..” Ladies and Gentleman.. It is about midnight in Frankfurt now.. On behalf of Lufthansa Airlines, I am happy to wish you a Very Happy and Prosperours New Year" என்று மட்டும் சொல்லி முடித்து விட்டார்... நான் கனவு கண்டு முடிப்பதற்குள் புது வருஷம் என்னைத் தாண்டி ஓடிவிட்டது. பக்கத்தில் உள்ளவர்களுக்கு “Happy New Year" சொல்ல வேண்டுமென்று நினைத்தால் அவர் தண்ணியடித்து மட்டையாகிவிட்டிருந்தார்.. ஒரு எக்ஸ்ட்ரா ஆல்கஹால் இல்லை.. வானத்தில் கூட தேவதைகள் இல்லை.. ரொம்ப கஷ்டமாக அப்புசாமித்தாத்தா (சீதேக்கிழவி புகழ்) லெவலில் புலம்பிக்கொண்டு தூங்கிவிட்டேன்...

சென்னையில் இறங்கியபொழுது புத்தாண்டு பரிசாக என் வருங்கால மனைவி எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.. அவரை அப்பொழுதுதான் முதல் முறையாக சந்தித்தேன்.. பயந்து பயந்து அவங்க அப்பா பின்னாடி பதுங்கி எட்டிப் பார்த்துப் பேசியவரிடம் இவ்வளவு வீரம் இருக்குமென்று என்னால் அன்று நம்பமுடியவில்லை.. நான் பேசாவிட்டாலும்.. போரில் நான் வாங்கிய விழுப்புண்கள் பேசாமலாப் போய்விடும்?

oOo


பின்குறிப்பு: சகபதிவர் கெக்கேபிக்குனி அவர்களின் கண்டனத்தை மதிக்கும் வகையில் இந்த இடுகையில் (மட்டும்?) நடிகையர் படங்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன

Monday, January 10, 2011

110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா?

எனது சென்ற பதிவின் 109. நம்ம முன்னாள் மந்திரி ராசாவால எவ்வளவு நஷ்டம் பாருங்க !! தொடர்ச்சியாகத்தான் இதனை எழுதுகிறேன். சக பதிவர்கள் கெக்கேபிக்குனி, அபிஅப்பா,பிரகாஷ் போன்றோரின் வாதங்களுக்கு பதிலாகவும்தான்.


இந்தப்பதிவுக்காக நான் ஒன்றும் உண்மைத்தமிழன் அளவுக்கு ஆராய்ச்சி செய்யவில்லை. இராசா பற்றியதான ஊடகச் செய்திகளை அவ்வப்போது படித்து ஒரு புரிதல் வைத்திருக்கும் சராசரி தமிழனுக்கு உள்ள புரிதல் மட்டுமே இந்த இடுகையின் அடிநாதம். நான் பொருளாதார வல்லுனனா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியா முன்னேறவேண்டும், ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் சராசரி குடிமகனுக்கு மேலான ஆர்வம் மட்டும் எனக்கு உண்டு என்பது என் நம்பிக்கை..பெரம்பலூர் தொகுதியில் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் அபகரித்ததாக ராசா மீது சமீபத்தில் குற்றச்சாட்டுக்கள் எல்லா பத்திரிகைகளிலும் எழுந்தன. பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடையே “தொழில் வளர்ச்சிக்காக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்துவதாகவும், அவ்வாறு கையகப்படுத்தும் நேரத்தில் நிலங்களுக்கான அரசு விலை குறைவாக நிர்ணயிக்கப்படுமென்றும், அதற்கு முன்னதாக சகாயமான விலையில் நிலத்தை வாங்கிக்கொள்வதாக” ராசாவின் ஏஜெண்டுகள் பல விதங்களில் வதந்திகளைப் பரப்பி விவசாயிகளை மிரட்டி ஏக்கர் ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒருலட்சம் வரை கொடுத்து நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளனர். இவ்வாறு வாங்குவதற்கு இராசாவின் மந்திரி பதவியும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை முதல் பல அரசு இயந்திரங்களும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றனர். சில விவசாயிகளின் மேல சில மிரட்டல் மற்றும் வன்கொடுமை வழக்குகளும் பதிந்து சிறையிலும் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு மிரட்டி வாங்கப்பட்ட நிலங்களை இராசாவின் ஆட்கள் 20 மடங்கு அதிகம் விலை வைத்து (ஏக்கர் பதினைந்து இலட்சம் ரூபாய்களுக்கு மேல்) கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று இலாபம் பார்த்திருக்கின்றனர்.

இதெல்லாம் சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்திகள் தான். இந்த விவரங்கள் உண்மையானால் இராசா குற்றவாளி என்று நீங்கள் கருதலாமா? அரசு இயந்திரங்கள் மூலம் தகாத முறையில் மிரட்டப்பட்டு தன் நிலங்களை இழந்த விவசாயிகளின் மேல் நீங்கள் பரிதாபம் கொள்வீர்களா? ஏன்?

அதே முறை Modus Operandi ஊழல் தான் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை
விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிலங்களுக்குப் பதில் அலைக்கற்றை உரிமங்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி “முன்னால் வருபவர்களுக்கு மட்டுமே உரிமம்” என்ற விதியைப் பயன்ப்டுத்தி தன் ஆதரவு பெற்ற நிறுவனங்களை முன்னால் நிறுத்தி குறைந்த விலையில் அலைக்கற்றை உரிமங்களை வாங்கி அதிக லாபத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றிருக்கிறார் இராசா. மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தான் இது.


ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் என்பது சரியான கணிப்பாக இருக்க முடியாமல் “ஊகவணிக லாபமாக” இருக்கலாம். ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கின்றதென்பது நிச்சயம் தெரிகிறது. இதற்கு அரசு இயந்திரங்களும் அதிகாரமும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது என்பது மிகத்தெளிவு..


இராசா மட்டும் தான் குற்றவாளி என்று நான் நம்பவில்லை. இராசாவால் மட்டுமே இந்தியப் பிரதமரின் அறிவுரைகளை மீறி நடந்து கொண்டிருக்க முடியும் என்று நம்பவில்லை. சென்னையில் டாட்டாவின் வோல்டாஸ் நிறுவன நிலத்தில் 300 கோடி ரூபாய் வியாபாரத்தில் சொல்லப்படும் சரவணன் என்பவரின் (இராசாத்தி அம்மாளின் நிறுவனத்தில் ஒரு உதவியாளராம்) இடத்தில் தான் இராசாவும் இந்த அலைக்கற்றை விவரத்தில். இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களென்பது விசாரணையில் வெளிவருமா என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதான் என்பதிலே எனக்கு சந்தேகம் தான். போபார்ஸ் விஷயத்தில் க்வாட்ராச்சியைக் காப்பாற்ற மத்திய அரசும், சி.பி.ஐ யும் செயல்பட்ட விஷயத்திலேயே நம் நாட்டில் நீதிபரிபாலனத்தின் கைகள் கட்டப்பட்டிருக்கும் விதம் புரிந்து கொண்டேன்.. காலம் பதில் சொல்லும் என்ற ஒரே நம்பிக்கை தான் இப்பொழுது..

ஆடிட்டர் ஜெனரலின் 59 பக்க அறிக்கையில் இராசாவின் பெயரோ அல்லது ஊழல் என்ற வார்த்தையோ குறிப்பிடப்படவில்லை என்ற அபிஅப்பாவின் வாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை ..”இவ்வளவு பணம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறதே .. யாருக்காவது தெரிந்துதான் நடந்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்புவது மட்டுமே ஆடிட்டர்களின் வேலை (எங்க அப்பா ஆடிட்டர் தான்..) .. இது ஊழலா.. இல்லையா.. இதற்கு யார் பொறுப்பு என்று முடிவு செய்வது விசாரணைகளின் முடிவிலும் நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவேண்டியது. ஆடிட்டர் அறிக்கையில் சொல்லப்படாததால் மட்டுமே ஊழல் நடைபெறவில்லையென்றோ, இராசா குற்றவாளியில்லையென்றோ நான் நம்பத்தயாரில்லை.. பெரம்பலூர் விவசாயிகளின் நில அபகரிப்பில் செய்த்து போன்றுதான் இராசா அலைக்கற்றை விஷயத்திலும் செய்திருக்கிறார்.. உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன்


பின் குறிப்பு: நடிகை ஓவியா படம் போட்டால் தான் இந்தப் பக்கத்துக்கு வருவேன் என்று சொல்லிவிட்டுப் போன டெக்ஸாஸ் சிங்கம் குடுகுடுப்பையாரை அன்புடன் எங்கள் ஓவியா “வருக வருக” என்று அழைக்கிறாள்...

Thursday, January 06, 2011

109. நம்ம முன்னாள் மந்திரி ராசாவால எவ்வளவு நஷ்டம் பாருங்க !!

நம்ம முன்னாள் மந்திரி ஆண்டிமுத்து ராசாவால நம்ம நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு அப்ப்டீன்னு விஷுவலைஸ் பண்ணிப் பார்க்கின்ற முயற்சி இது..

ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு இப்படித்தான் இருக்கு...
அதுவே பத்தாயிரம் ரூபாயின்னா இப்படியிருக்கும்... ஒன்பது நோட்டுதான் படத்துல தெரியுது.. பத்தாவது நோட்டு மேல இருக்கு..ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 100 நோட்டு வெச்சி ஒரு பண்டல் கட்டினா அது ஒரு லட்ச ரூபாய.. அது போல 100 கட்டு கட்டினா.. அது ஒரு கோடி ரூபாயாயிருக்கும்.. அது பார்ப்பதற்கு இப்படித்தான் குட்டியூண்டா இருக்கும்.. ஒரு பெரீய்ய மஞ்சப்பையில போட்டு எடுத்திட்டுப் போகலாம்...

அதுவே ஆயிரம் கோடி ரூபாயின்னா இப்படி ஒரு பெரிய்ய பொட்டியாக் கட்டிக்கிட்டுப் போகலாம்.. ஒரு கார்ல எடுத்துட்டுப் போற சைஸ்தான் இருக்கும்.. கார் நீங்க முன்னாடியே வாங்கி வெச்சிருக்கணும்.. இல்லேன்னா ஆயிரம் கோடி ரூபாயை உடைச்சி சில்லறைமாத்தி கார் வாங்க வேண்டியதாயிருக்கும்..

ஆயிரம் கோடியெல்லாம் பத்தாதுங்க.. நமக்கு பத்தாயிரம் கோடியிருந்தா நல்லாருக்கும்னு நெனச்சீங்கன்னா, இது போல 10 பெரிய பொட்டிங்க கட்ட வேண்டியிருக்குங்க...


அதுவே ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடின்னா எப்படியிருக்குங்க? நம்ம பெட்டி மாதிரி 1760 பொட்டி வெக்கணுங்க.. ஆனா நம்ம ராசா சில்லறைக்குக் கஷ்டப்படப்போறாரேன்னு எல்லாத்தையும் 100 ரூபாய் நோட்டாப் போட்டு 17600 பொட்டிகளை அடுக்கிட்டோங்க.. அது இப்படித்தான் இருக்குங்க...

அந்தப் பொட்டிக்கு ஓரமா ராசா நின்னுக்கிட்டிருக்காரு பாருங்க... தெரியறாருங்களா?


இது போதுமா நம்ம குடும்பத்துக்கும் நம்ம தலைவர் குடும்பத்துக்கும் அப்ப்டீன்னு யோசிக்கிறாரு பாருங்க...ஆனால்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் எந்த ஊழலும் பண்ணலை.. நம்புங்க.. நம்புங்க.. நம்புங்க.... இந்த பொட்டிகளை நான் எங்கேயும் பதுக்கி வெக்கலை.. அதையும் நம்புங்க...


Tuesday, January 04, 2011

108. உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் சாராத இளைஞர்கள் !!

ஒவ்வொரு முறை மயிலாடுதுறை செல்லும் போது அங்கு உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் கொள்ளைகளையும் ஊழல்களையும் மக்களிடமிருந்து கேள்விப்படுவதுண்டு. அப்பொழுதெல்லாம் தோன்றுவது என்னவென்றால்.. “ஏன் படித்தவர்கள், நாணயமானவர்கள், கட்சி சார்ந்து அரசியல் செய்யவேண்டிய தேவையில்லாதவர்கள்.. கௌரவமான பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.. தேவைக்கு அதிகமாக ஊழல் செய்து சம்பாதிக்கத் தேவையில்லாதவர்கள்.. உள்ளாட்சி தேர்தலில் நின்று நல்ல நிர்வாகம் தர முயற்சி செய்ய மாட்டேனென்கிறார்கள்? “ என்ற கேள்வி என் மனதில் எழுவதுண்டு. நான் ஓய்வு பெற்று இந்தியாவில் இருந்தால் உள்ளாட்சி தேர்தல் அமைப்பில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆசையும் எனக்குண்டு..

என் ஆசைக்கு சார்பாக அவள் விகடனிலிருந்து ஒரு கட்டுரை..

oOoசவி ராஜாவத் என்கிற 30 வயது இளம்பெண். எம்.பி.ஏ. படித்திருக்கும் இந்தப் பெண், ராஜஸ்தானின் பின்தங்கிய பகுதியான டோங் மாவட்டத்தின், சோடா எனும் தன் தாய் கிராமத்துக்காக, கார்ப்பரேட் நிறுவன பணியைத் துறந்து, அதன் பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார்! சேலைத் தலைப்பையே முக்காடாகப் போட்டுக் கொண்டு நடக்கும் பெண்களின் மத்தியில்... பிராண்டட் ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று நிற்கும் அந்தத் தலைவியின் தோற்றமே சுவாரஸ்யமாக்குகிறது சூழலை! பேச்சிலும் வேகம் இந்த மிஸ்ஸுக்கு!

''என் தாத்தா ரகுவீர் சிங், சோடா கிராமத்தில் மூன்று முறை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். என் தந்தை ராணுவத்துக்குப் பணியாற்றச் சென்றதால் நாங்கள் மட்டும் நகரவாசிகளாகிவிட்டோம். தாத்தா, பாட்டிஎல்லாம் ஊரிலிருந்த நிலங்களைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர். ஜெய்ப்பூரிலிருந்து எப்போதாவது ஊருக்கு சென்று வருவதோடு சரி. இடைப்பட்ட காலத்தில் கிராமத்தில் வளர்ச்சியே இல்லாமல் போய், மிகமிக பின் தங்கிவிட்டது ஊர்.

இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் வரவே, எங்கள் கிராமத்தை பெண்களுக்கானது என்று அறிவித்துவிட்டனர். வழக்கமாக எங்கள் குடும்பமே தலைவராக இருந்ததால், கிராம மக்கள் 100 பேர் ஜெய்ப்பூரிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்து, விஷயத்தைச் சொல்லி, தேர்தலில் நிற்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். ஆனால், அப்போது நான் டெல்லியில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மார்கெட்டிங் துறையின் தலைவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆந்திரா போர்டிங் ஸ்கூலில் படிப்பு, டெல்லியில் கல்லூரிப் படிப்பு, புனேவில் எம்.பி.ஏ., கார்ப்பரேட் வேலை என முன்னேறிச் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில், இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் யோசிக்கவே... 'எதற்கும் ஒரு முறை நம் கிராமத்தைச் சென்று பார்த்துவிட்டு வந்து முடிவெடு’ என்றார்கள் வீட்டில்.

மாநிலத்தின் பெரும்பாலான கிராமங்களைப் போல், 'சோடா'வாசிகள் கால்நடைகளை வளர்க்க முடியவில்லை. மழை நீர் மட்டுமே நீராதாரம் என்பதால், அவற்றுக்குப் போதுமான தீவனம் கிடைப்பதில்லை. ஒரு சில பயிர்கள் மட்டுமே விளையும். அதுதான் இங்குள்ள சுமார் 7,000 பேருக்கும் சோறுபோடும் தொழில். இன்னும் அடிப்படை வசதிகள், சுகாதாரம் எனும் பல விஷயங்களிலும் பின்தங்கிய நிலைதான்.

கிராமத்துக்குச் சென்று சுற்றிப் பார்த்த எனக்கு, மிகவும் வருத்தமாகிவிட்டது. 'என் நிறுவனத்துக்கு என்னைப் போல் ஆயிரம் ஊழியர்கள் கிடைக்கலாம். ஆனால், என் கிராமத்துக்கு இப்போது நான் அவசியம் தேவை...’ என்று முடிவெடுத்தேன். 'நம்மால் புரட்சிகளை, மலர்ச்சிகளை கொண்டு வரமுடியாது. என்றாலும், மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளிகளை விதைக்க முடியும்' என்ற நம்பிக்கையை, என் படிப்பும், என் கிராம மக்கள் மீதான அக்கறையும் தந்தன. கடந்த பிப்ரவரியில் தேர்தலில் நின்றேன்!''


சவி ராஜாவத் மனு தாக்கல் செய்தவுடனே ஒரே ஒருவரைத் தவிர போட்டியில் இருந்த மற்ற 15 வேட்பாளர்களும் மனுவை வாபஸ் வாங்கியிருக்கின்றனர். அமோகமாக வென்றிருக்கிறார் ராஜஸ்தானின் புகழ்பெற்ற ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவரான இந்த ராஜகுமாரி.

இந்த குறுகிய நாட்களுக்குள் சோடா கிராமத்தினருக்கு தங்கள் தலைவி பற்றி அத்தனை நிறைவு. ''கிராமத்தின் முக்கியப் பிரச்னையான தண்ணீருக்காக மழை நீரை சேமிக்க கிராமத்து பெரியவர்கள் மற்றும் ஜெய்ப்பூரின் மண் ஆய்வாளர்களின் கருத்துகளைக் கேட்டு, கிராமத்தின் நூறு ஏக்கர் அளவிலான ஏரியை ஆழப்படுத்தினார் ராஜாவத். இதற்கு உதவியாக உடல் உழைப்பை கிராம மக்கள் சுமார் 3,000 பேர் தர முன் வந்தோம். சிறுவர்கள், பெண்கள், ராஜாவத்தின் பெற்றோர் உட்பட அனைவருமாக ஏரியை வெட்டியதில் நல்ல பலன் கிடைத்துள்ளது'' என பஜன்லால் கூற, தொடர்ந்தார் ஹீராபாய்...

''முன்பெல்லாம் மழை பெய்த சில மாதங்களில் ஏரி வறண்டு விடும். இப்போது ஆழமாக வெட்டப்பட்டுள்ளதால் அதிக நீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஏரியை வெட்டும்போது அள்ளிய மண்ணை வெளியில் எங்கும் கொட்டாமல், ஏரியினுள்ளேயே குவித்து சிறிய தீவுகள் போல் செய்து விட்டார் எங்கள் தலைவி. அருகில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு, இப்போது இந்தத் தீவுத்திடல்கள் புகலிடமாகி விட்டன. இத்துடன், நூறு மரக்கன்றுகளையும் நட் டிருக்கிறார். இதெல்லாமே ராஜாவத்துக்கு கிடைத்த வெற்றி!'' எனப் புகழ்மாலை சூட்டினார்.

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மழை நீர் சேமிப்பு குறித்து ஒரு கருத்தரங்கு நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட ராஜாவத் அதில் கலந்து கொண்டு தனது கிராமத்தின் நிலை பற்றி பேசியுள்ளார். பிரச்னையை முறையாக எடுத்து வைத்ததைப் பாராட்டிய அமைச்சர், சோடா கிராமத்தின் மழைநீர் சேமிப்புக்காக 71 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறார்.

''அமைச்சர் அறிவிப்பு கொடுத்து விட்டாலும், பணத்தை பெறுவதற்கான ஃபைல்களை நகர்த்துவதில் பல்வேறு சுணக்கங்கள். கடந்த ஜூன் வரை 24.6 லட்ச ரூபாயை வாங்கி விட்டேன். பாக்கியைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். அரசு நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளியை இந்த அனுபவம் புரிய வைத்தது.

இதைச் சரி செய்ய என் போன்ற இளைய தலைமுறை பாலமாக இருப்பது அவசியம். இதுகுறித்து ஒருமுறை எஃப்.எம். ரேடியோவில் நான் அளித்த பேட்டி யைக் கேட்டுவிட்டு, தொழி லதிபர் ஒருவர் என் கிராம முன்னேற்றத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்! இதையெல்லாம் வைத்து, கிராமத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றும் வேலை களைத் தொடங்கிஇருக்கிறேன்'' என்று சொல்லும் ராஜாவத், சி.என்.என். சேனல் சார்பில், நாட்டிலுள்ள யங் லீடர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

''படித்துவிட்டு பெரிய, பெரிய நிறுவனங்களுக்காக நாம் செலவிடும் மூளையை, ஒரு கிராமத்துக்காகச் செலவிட்டால், வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு நம் நாடு மாறிவிடும்'' என்று கோரிக்கை விடுக்கும் சவி ராஜாவத், அவருடைய பெற்றோருக்கு ஒரே மகள். இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை.

பஞ்சாயத்து தலைவி பணியோடு, தன்னுடைய பூர்விக நிலத்தில் விவசாயத்தையும் தற்போது தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார். சுமார் 25 ஏக்கர் நிலம் இருந்தாலும், குறைந்த நீராதாரம் என்பதால், அதை வைத்து குறைந்த அளவில் கடுகு பயிரிட்டிருக்கிறார். இதெல்லாம் இவருடைய புகழை அக்கம் பக்கம் பரவச் செய்துகொண்டிருக்கிறது.

''ராஜாவத் அடிக்கடி நடத்தும் குறை கேட்கும் நாள் நிகழ்ச்சிகளுக்கும் கிராமத்தினரிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அருகிலுள்ள பஞ்சாயத்துக் களின் தலைவர்கள் மற்றும் தலைவிகள், இவரை அணுகி ஆலோசனை கேட்கத் துவங்கி விட்டனர். ராஜஸ்தானின் அரசியல்வாதிகளும் இவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதால், ராஜாவத்துக்கு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கலாம்'' என்று பெருமையோடு சொல்கிறார் பஜன்லால்!

வாழ்க இளைய பாரதம்!