Tuesday, March 01, 2011

115. சீமாச்சுவின் தாம்பூலம் -- 02 மார்ச்சு 2011

ஒவ்வொரு வருடமும் ஊருக்குச் செல்லும் போதும் நான் பார்க்க ஆசைப்பட்ட இடம் டாஸ்மாக். முன்னரெல்லாம் பல வர்ண நியான் போர்டுகளுடனும் சீரியல் லைட்டுக்களுடனும் மயிலாடுதுறை எங்கும் பரவலாக இருந்த (சில சாம்பிள்: மஞ்சு ஓயின்ஸ், சேகர் ஒயின்ஸ்.. இன்னும் பலபேர்களில்) ஒயின்ஸ் ஷாப்புகள் மாதிரி டாஸ்மாக்கும் இருக்கும் என்று நினைத்துத் தேடுவதுண்டு.. ”டாஸ்மாக் எங்கேயிருக்கு?” என்று யாரையும் கேட்கணும் என்று ஆசையாக நினைத்து.. அந்த நினைவாகவே மறந்து அமெரிக்கா திரும்பியிருக்கிறேன்.. கூச்சமெல்லாம் இல்லை.. என்னவோ ஒரு மறதி..

இந்த முறை நினைவு வந்துவிட்டது..

“என்ன சீனா.. என்ன சாப்பிடறே..?” என்று கேட்ட அண்ணனிடம்,

“பியர் மட்டும் போதும்ணே.. நான் போயி வாங்கிட்டு வந்திடறேன்” என்று கிளம்பினேன்.. “நீ ஏன் அங்கெயெல்லாம் போய்கிட்டு.... நான் ஆள் அனுப்பி வாங்கிட்டு வரச் சொல்றேன்” என்று தடுத்த அண்ணனிடம்..”இல்லண்ணே, கடை எப்படியிருக்குன்னு பார்த்ததில்லண்ணே.. ஒரு அனுபவத்துக்காகப் பார்க்கணும் அண்ணே” என்று விளையாட்டாகச் சொன்னேன்..

”சரி.. தனியாகப் போகாதே... இவனைத் துணைக்கு அழைச்சிட்டுப் போ..” என்று இன்னொரு நண்பரையும் கூட அனுப்பினார்..

நான் போன நேரம் அவ்வளவு கூட்டமில்லை.

“நீங்க இங்க எதிர் சாரியிலேயே நில்லுங்க.. நீங்களெல்லாம் கடைவாசலுக்கு வர வேண்டாம் (அண்ணன் சொல்லியிருப்பார் போலும்) ” என்றவரை மறுத்து நானும் கடைக்குச் சென்று எப்படியிருக்கிறது என்று நோட்டம் விட்டேன்..

ஆறு பியர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டிய போது, மீதி 50 ரூபாய் தந்தார், டாஸ்மாக் காரர்.

“ஒரு பியர் எவ்வளவுங்க?”

“75 ரூபா சார்”

“பாட்டில்ல 70 ரூபா தான் போட்டிருக்கு !!”

“நாங்க 75 ரூபாய்தான் வாங்குறது சார்..”

“அதனால என்ன.. வாங்கிக்குங்க.. எனக்கு பில் மட்டும் கொடுத்துடுங்க..”

அப்பொழுதுதான் கடைக்காரை கொஞ்சம் இறங்கி வந்தார்..

“கடை ரேட் 70 ரூபாய் தான் சார்.. நாங்க லோட் மேனுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கு சார்.. அதனால தான் 5 ரூபா கூட எடுத்துக்குறோம் சார்”

“என் காசை என்னைக் கேக்காமல் நீங்களா எடுத்துக்குவீங்களா? பியருக்கான காசை மட்டும் எடுத்துக்கிட்டு.. மத்தது எடுத்துக்கட்டுமா சார் என்று கேக்க வேண்டாமா?”

“தப்புதான் சார் ” என்று 30 ரூபாய் திருப்பிக் கொடுத்துவிட்டார்..

“இப்ப செஞ்சீங்களே.. இதுதான் சரி.. யார் காசையாவது இந்த மாதிரி எடுத்துக்குறதுக்கு முன்னாடி அவங்களை முதல்ல கேளுங்க.. அவங்க சம்மதத்தோட மட்டுமே வாங்கிக்குங்க” என்று சொல்லி அவரிடம் பத்து ரூபாய் தந்தேன்..


அப்புறம் நண்பர் ..”நாங்களெல்லாம் அந்தக் கடை முன்னாடி ரொம்ப நேரம் நிக்க மாட்டோம்.. சட்டு புட்டுனு வாங்கிட்டு வந்திடுவோம்” என்றார்

”ஊர்ல என்னைத் தெரிஞ்சவங்களுக்கு நான் டாஸ்மாக் முன்னாடி நின்னாலும் ஒண்ணும் தப்பா தெரியாது.. இந்தக் கடைமுன்னாடி நான் நின்னதுக்காக எனக்கு 5 மார்க்கு யாரும் குறைச்சிப் போட மாட்டாங்க” என்று சொன்னேன்..


”இந்த தடவை நீ அங்கே போனதே போதும்.. இனிமேல் நீ அந்தக் கடைக்குப் போகாதே.. என்ன வேண்டுமானாலும் உனக்கு எல்லாம் வீட்டிலேயே கிடைக்கும்” என்று அண்ணன் ஒரு தடையுத்தரவு போட்டுவிட்டார்.. நான் அண்ணன் சொல் மீறுவதில்லை.. எனக்கு “வாராது வந்த மாமணி” அவர்.

oOo

தமிழ் நாட்டில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. ஏப்ரல் 13 அன்று தேர்தல்.. ஒரு மாதம் கழித்து மே 13 அன்று ஓட்டு எண்ணிக்கையும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிப்பும்... கேள்விப்பட்ட எனக்குள் சில கேள்விகள்

  1. ஒரு மாதம் வரையில் வாக்கு விவரங்கள் கொண்ட எலக்ட்ரானிக் இயந்திரங்களுக்கு யார் பாதுகாப்பு தருவது? மாநில போலீஸ் என்றால், அந்த போலீசார் யார் கண்ட்ரோலில் இருப்பார்கள்? அவர்கள் வாக்கு இயந்திர்ங்களில் தவறு நடக்காமல் எப்படி உறுதி செய்வார்கள்?
  2. இரண்டாயிரம் கோடிகளுக்கு (அல்லது பல்லாயிரம் கோடிகளுக்கு) விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சம்பந்தமான முக்கியமான கோப்புகளே மாயமாக மறையும் பொழுது வாக்கு இயந்திரங்கள் மாயமாகாமல ஒரு மாதம் காப்பாற்ற முடியுமா?
  3. இயற்கை அல்லது செயற்கை விபத்துக்களால் (தீ விபத்து, வாக்கு இயந்திரங்களின் மீது தண்ணீர் பட்டு வீணாக்கப்படுதல்) போன்றவற்றால் வாக்கு இயந்திரங்கள் பாதிக்கப்பட்டால் மறுவாக்குப் பதிவு நடத்தப்படுமா?
  4. ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் அக்ன் நட்சத்திரம் அனலாய்க் கொதிக்குமே.. வாக்கு இயந்திரங்கள் ஏர்கண்டிஷண்ட் அறைகளில் பாதுகாக்கப்படுமா? அப்படி ஏர்கண்டிஷணர்கள் இயங்குவதற்கு தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்படுமா?
  5. வாக்கு இயந்திரங்கள், பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ அல்லது அரசாங்க அலுவலகங்களிலோ தான் பாதுகாக்கப்படும். அவ்வாறு பாதுகாக்கப்படும் இடங்களில், பொதுமக்கள் மற்றும் அலுவலர்களே நுழிய அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறான பொது இடங்களில் ஒரு மாதத்துக்கு மேலாக பூட்டி வைக்க முடியுமா?
  6. எல்லாவற்றுக்கும் மேலாகஒரு மாதத்திற்கு தேர்தல் முடிவுகள் சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தால் என்னைப் போன்ற மக்களுக்குத் தலை வெடித்து விடாதா?

இன்னும் நிறைய கேள்விகள் ஊற்றாகப் பெருகுகின்றன.. விடைகள் தான் தெரியவில்லை

oOo


எனக்குப் பச்சைப் பட்டாணி ரொம்பப் பிடிக்கும். அப்படியே உரிச்சி உரிச்சி சாப்பிடலாம். இங்கே அமெரிக்காவில் சார்லெட்டில் ஃப்ரோசன் பட்டாணி தான் கிடைக்கிறது. ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நான் தேடுவது பச்சைப் பட்டாணியும், சுண்டைக்காயும் தான். சில இரண்டு வார விஜயமாக வருடங்களுக்கு முன் இந்தியா வந்த போது சென்னை விமான நிலையத்திலேயே வைத்து நண்பரிடம் ”எங்கியாவது சுண்டைக்காய் கிடைச்சால் வாங்கிவாய்யா.. சாம்பாரில் போட்டு இல்லேன்னா கூட்டு பண்ணி சாப்பிடணும் போலருக்கு” என்று சொன்னேன்.. இரண்டுவாரம் நண்பரிடமிருந்து எந்த செய்தியும் காணோம். ஊர் திரும்பிப் போகும் போது சென்னை ஏர்போர்ட்டில் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நின்று கொண்டிருந்த போது, அந்த “சுண்டைக்காய்” நண்பர் ஓடி வந்தார். என்னைத் தேடிப் பிடித்து கண்டுபிடித்த போது அந்த மார்கழி இரவிலும் அவர் சட்டை வியர்வையால் நனைந்திருந்தது.. மூச்சிரைக்க வந்து என்னிடம் நின்ற அவர் கையிலிருந்த பையில் 2 கிலோ சுண்டைக்காய் இருந்தது. “உனக்காக ஊரெல்லாம் அலைஞ்சி சொல்லி, தேடிப்பிடிச்சி மயிலாப்பூர்ல வாங்கிட்டு வந்தேன்யா.. ஊருக்கு எடுத்துப் போயி சாம்பார் வெச்சி சாப்பிடு” என்று சொன்னவரின் அன்பில் உருகித்தான் போனேன். “இந்த மாதிரி பச்சைக் காய்கறிகளை அமெரிக்காவில் கஸ்டம்ஸில் அனுமதிக்க மாட்டார்கள்... நான் இதை எடுத்துப் போக முடியாது.. உன் மனைவியிடம் கொடுத்து சாம்பார்/கூட்டு வெக்கச் சொல்லி என் பேரைச் சொல்லிச் சாப்பிடுய்யா” என்று அந்த சுண்டைக்காயை ஆசையுடன் கையில் வைத்திருந்து திருப்பிக் கொடுத்துவிட்டேன்..

யாராவது காசிக்கு தீர்த்தயாத்திரை போய் வந்தால் அவர்களுக்குப் பிடித்தமான மிகப்பிடித்தமான ஒரு காய்கறியைத் துறந்து விடவேண்டும் என்று சொல்வார்கள். என் அம்மாவுக்கு கொத்தவர்ங்காய் என்றால் உயிர். அவருக்குத் திருமணமாகி ஒரு முறை காசிக்குச் சென்று வந்திருந்தார். அன்று முதல் அம்மா கொத்தவரங்காய் சாப்பிடுவதை சுத்தமாக நிறுத்திவிட்டார். காசிக்குச் சென்று வந்த பிறகு வாழ்நாளில் 38 வருடங்கள் என் அம்மா கொத்தவரங்காய் சாப்பிட்டதில்லை. எங்களுக்காக ஆசை ஆசையாகக் கொத்தவரங்காய் கறி சமைத்தாலும்.. எங்களுக்கு மட்டும் அதைப் பரிமாறிவிட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்.. எங்க அம்மா அவருக்கு மிகவும் பிடித்த கொத்தவரங்காய் சாப்பிட்டு நான் பார்த்ததேயில்லை.. நிறைய்ய முறை சமைத்த கறி (பொறியலை)க் கையில் வைத்துக் கொண்டு அழுது கெஞ்சியிருக்கிறேன்.. “காசிக்குப் போயிட்டு வந்திருக்கேண்டா.. சாப்பிட மாட்டேன்” என்று அன்பாக மறுத்து விடுவார். அது போல நான் சென்னை விமான நிலையத்தில் சுண்டைக்காயை விட்டு விட்டேன்.. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி..

தினமலரில் இந்த பச்சைப் பட்டாணி படம் பார்த்தவுடன் நினைவலைகள் பொங்கிவிட்டன..

oOo

சவூதி அரேபியாவில், ரியாத்தில் நான் இருந்த போது எனக்கு பிரகாஷ் என்ற நண்பரொருவரிந்தார். மிக மிக வித்தியாசமான மனிதர். நாங்கள் நண்பர்கள் அவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், மணிக்கணக்காகப் பேசுவோம். அவர் அடிக்கடி உதிர்க்கும் ஒரு தத்துவம்.. “ஒருத்தர் மேல குற்றம் சாட்டிப் பேசலாமேயொழிய குற்றம் சுமத்திப் பேசக்கூடாது” என்பார். ரொம்பநாள் எனக்கு அவர் என்ன சொல்கிறாரென்று புரியவில்லை.. குற்றம் சாட்டுவதற்கும், குற்றம் சுமத்துவதற்கும் என்ன வித்தியாசம் என்று யாராவது சிம்பிளா விளக்கினால் தேவலை..