Tuesday, November 28, 2006

37. தமிழ் C தெரியுமா உங்களுக்கு...?

தேன்கூடு நடத்திய போட்டியில் நண்பர் சிறில் அலெக்ஸ் முதல் பரிசு பெற்றிருக்கிறார்..


அவர் கதையை முதல் முறை படித்துச் சிரித்து பின்னர் என் மனைவிக்கும் வாய் விட்டுப் படித்துக் காட்டினேன்.

நன்றாக வந்திருந்தது.. வாழ்த்துகள் சிறில்.

பக்கத்தில் நின்றிருந்த என் 4 வயது மகள் திடீரென்று

"Daddy.. Now I know how to put Tamil C"


4 வயசு தானே.. இப்பத்தான் 1.2..3.. 100 வரையும் .. ABCD யும் எழுதுகிறாள்..


அதற்கே தடுமாறுகிறது இதில் தமிழ் C யாம்.. "சி" எல்லாம் எப்படி போடுவாள்... எனக்கே சந்தேகம் தான்...


"எங்கே போடு பார்ப்போம்?"




என் தோளைக் கட்டிக் கொண்டு.. அவள் போட்டது..



ஆங்கில C மேலேயும் கீழேயும் வட்டங்களுடன்..



சிறிலின் பக்கத்திலுள்ள தேன் தலைப்பிலிருந்த தமிழ் இரட்டைக் கொம்பை.. அவள் தமிழ் C என்று புரிந்து கொண்டு விட்டாள்..




Saturday, November 25, 2006

36. இரண்டு வருஷத்துக்கு அப்புறம்....??!!

சென்ற வருடம் நான் புதியதாக 19 அங்குல தட்டை முகப்பு கணினித் திரை (ஹிஹி.. Flat Panel monitor... சுருக்கமாக த.மு.க.திரை) வாங்கிய பின்பு என்னுடைய பழைய 17 அங்குல குஷ்பூ மானிட்டரை basement-ல் சும்மா போட்டு வைத்திருந்தேன். இது போன்று இன்னும் ரெண்டு பழைய கம்ப்யூட்டர்களும் கீழே கிடக்கின்றன.

நண்பர் ஒருவர் கம்ப்யூட்டர் திரை சின்னதாக இருப்பதாக புலம்பிக்கொண்டிருந்த போது நைசாகப் பேசி நம்ம பழைய 17 அங்குல மானிட்டரை அவரிடம் தள்ளி விட்டு விட்டேன். அப்பாடா ஒரு குப்பை ஒழிந்தது என்று நிம்மதியாக இருந்தது.. இது நடந்தது 6 மாதங்களுக்கு முன்பு.

இன்னிக்கு அந்த நண்பர் வாயெல்லாம் பல்லாக வீட்டுக்கு வந்திருந்தார். ThanksGiving Day Sale-ல் இரவு ஒரு மணிக்கு கடை வாசலில் தவமிருந்து சகாய விலைக்கு ஒரு 20 அங்குல த.மு.க.திரை வாங்கி விட்டாராம்.. உண்மையாகவே ஒரு பெரிய புன்னகையுடனும் சிவந்த கண்களுடனும் (இரவெல்லாம் கண் விழித்திருக்கிறாரே..) வீட்டுக்கு வந்தார்.. " உங்க பழைய மானிட்டரை நீங்களே எடுத்துக்குங்க.. உங்க பாடு.. என் வீட்டில் இடமில்லை " என்று வம்பு பண்ண வந்தவருக்கு.. நல்ல சாப்பாடு போட்டு.. திமிரு படமும் போட்டுக் காட்டி "பழைய மானிட்டரை என்ன வேண்டுமானலும் பண்ணு ராஜா.. என் கண்ணுல மட்டும் காட்டீடாதே.." என்று சமாதானப்படுத்தி அனுப்பு வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...

எலக்ட்ரானிக் குப்பையெல்லாம் என்ன பண்ணுவதென்று அமெரிக்காவே திணறிக்கிட்டிருக்கு. இந்த மானிட்டர் மற்றும் கம்ப்யூட்டர் பொட்டி மாதிரியான landfill எல்லாம் நிலத்தடி நீரில் வேதி விஷங்களைக் கலந்துடும் என்று பயப்படுகிறார்கள். இந்த மானிட்டர் மாதிரியான குப்பைகளையெல்லாம் கப்பலில் ஏற்றி சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பி அங்கு அவர்கள் அதை பிரித்தெடுத்து ஒரு வழி பண்ணுகிறார்கள். இந்தக் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் இளந்தொழிலாளிகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் அதனால் வரும் தொல்லைகளெல்லாம் இலவச இணைப்பு மாதிரி.. இதெல்லாம் பத்திப் படிக்கும் போது தான்...

நம்ம தமிழ்நாடு முதல்வரின் புரட்சிகரமான திட்டமான இலவச டீ.வி நினைவுக்கு வந்தது. டெல்லி கம்பெனிகளிடமிருந்து 25 லட்சம் (ஆமாம் 25 லட்சம்..) டீவிக்கள் ஆர்டர் பண்ணப் போகிறார்களாம்.. நமது தமிழர்களுக்கு டெல்லியிலிருந்து டேப்ரிகார்டர் வாங்கிய அனுபவமெல்லாம் மறந்து விட்டது போலும். "இது டெல்லி செட்டு சார்.. இது வரைக்கும் (ஒண்ணுமில்லே ஒரு ரெண்டு வாரம் தான்...) உழைச்சதே பெரிய விஷயம்.. தலையைச் சுத்து வீசியெறிஞ்சுட்டு வேற ஏதாவது நல்லதா வாங்குங்க...." என்று இளப்பமாக நம்மையும் நம்ம "National" டேப்ரிகார்டரையும் ஒரு மாதிரியாகப் பார்த்த பெரிய மெக்கானிக்கெல்ல்லாம் உண்டு...

அவனுக்கு எங்க தெரியப் போகுது...ராணிமுத்து-மாதப் பதிப்பில் அந்த "தமிழ்நாட்டு சுடோகு" மாதிரியான கஷ்டமான கணிதப் புதிரை விடுவித்து.. "இது செங்கல்லா இருக்கக்கூடாதே" யென்ற ஆயிரம் பிரார்த்தனைகளுடன்.. போஸ்ட் மேனிடம் 250 ரூபா (தபால் செலவு மட்டும் தான்..) வி.பி.பி (யாரு சார் கண்டுபிடிச்சா இதை..?) கட்டி வாங்கி .. ரெண்டே வாரத்துக்குள் உயிரை விட்ட டேப்ரிகார்டர் அது..

இது போதாதென்று.. என் அக்கா வேலைக்குப் போன புதிதில் "ஃபாரின் செட்" என்று சொல்லி 1000 ரூபாய்க்கு சிவப்பு கலரில்..ஒரு டூ-இன் - ஒன் "டெல்லி செட்டை" வாங்கி வந்தார்கள்.. ரெண்டு நாள் அது பாடியது என்று கூட சொல்ல முடியாது.. அதில் கேட்ட பாட்டெல்லாம் உண்மையில் பக்கத்து வீட்டு ரேடியோவில் பாடியதோ என்ற சந்தேகம் கூட எனக்கு ரொம்ப நாள் இருந்தது.. ரொம்ப நாள் அது பாடவில்லை.. என் அக்கா மனம் புண்படக்கூடாதென்று அப்பா தான் அதுக்கு 10 ரூபாய் (தண்டம்) விலையில் வாங்கிய ஒரு சின்ன டர்க்கி டவலைப் போர்த்தி டீபாய் மேல் வைத்திருந்தார்கள்...



இப்போ இதெல்லாம் போய 25 லட்சம் (ஆமா.. 25 லட்சம்) டெல்லி டீவீக்களாம்.. என்னதான்.. அது பாடும்.. ஆடும்.. சன் டீவீ மட்டுமாவது காட்டும் என்ற நம்பிக்கயெல்லாம் இருந்தாலும்.. ஒரு வருஷம் டர்க்கி டவலெல்லாம் போத்தி வெச்சுருந்தாலும்...ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் அது நிச்சயம் குப்பை தான்... மக்களுக்கும் அது பழகிப் போயிடும்..




எல்லாரும் குப்பையில சகட்டு மேனிக்குப் போடப்போற (நாமதான் எதையும் proper ஆ dispose செய்யக் கத்துக்கிறதில்லையே..) இந்த டீவிக்க்களால நமது சுற்றுப்புறமும் ..நிலத்தடி நீரும் எப்படி யெல்லாம் பாதிக்கப் படப்போகுதோ.... அதுக்கும் முன்னாடி.. குப்பையில கெடக்குற டீவியை வெச்சு வெளையாடறேன்னு சொல்லி எத்தனை புள்ளங்க.. (எதிர்கால எலக்ட்ரானிக் இஞ்சினீயர்கள்...) ஷாக் அடிச்சு அவதிப் படப் போறாங்களோ..


ஆண்டவனே.. என் நாட்டைக் காப்பாற்று...என்று வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை...

பழைய கம்ப்யூட்டர் குப்பைகளை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பதை விளக்கும் ஒரு உரல்: இங்கே..

Tuesday, November 14, 2006

35. ஜக்கம்மா நல்ல சேதி சொல்றா.....



சாமியோவ்... அம்மோவ்..

நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது..

ஊருல கூடிய சீக்கிரம் ஒரு நல்ல காரியம் நடக்கப் போவுது..

எங்க ஊரைச் சேர்ந்த (மயிலாடுதுறை) ஒரு பிரபலமான வலைப்பதிவருக்கு

தை பிறந்தவுடன் வழி பிறக்கப் போகுதாம்...

எல்லாம் முடிவாயிடிச்சாம். ...

இனிமேல் கடற்கரையில மணலை எண்ணிக்கிட்டுத் தனியா நடக்க வேண்டாமாம்.. கூட துணைக்கு அவுங்களும் வருவாங்களாமாம்....

எங்க இயக்கக் கொள்கைப் படி வரதட்சணையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டாராம்!!!



ஆண்டவன் அருளில் கூடிய சீக்கிரம் பத்திரிக்கை வச்சிடுவாராம்..

அய்யா... அம்மா எல்லாரும் மாயவரத்துக்கு அவசியம் வரணுமுங்கோ....


ராஜா.. என் வாழ்த்தே முதல் வாழ்த்தாக இருக்கட்டும்....
எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ செல்வ முத்துக் குமரசுவாமி அருளுவார்...

உன் மனசுக்கும்.. தர்மங்களுக்கும் பெரிய வாழ்வு கிடைக்கும் ராஜா.....

வாழ்த்துக்கள்!!!!