Sunday, December 19, 2010

107. துறவியும் துளைகளும்..

விழுப்புரம் : கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரத்தில் நடந்த அனைத்து முதலியார், வேளாளர் முன்னேற்றப் பேரவையின் நான்காம் ஆண்டு நல்விழா கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ஜாதி உணர்வு அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஒன்று. ஜாதி தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளை அரசியல் கட்சிகளால் ஒரு போதும் ஒழிக்க முடியாது. ஒரு ஜாதி மற்றொரு ஜாதியோடு மோதிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மனிதனுக்கு பக்குவம் ஏற்பட அனுபவம் தேவை. பக்குவம் வரும் போது ஞானம் வருவதால் உயர்வு பெறுகிறான்.



முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்து போடுங்கள். பிறக்கும் குழந்தைகளுக்கும், பள்ளியில் சேர்க்கும் போதும் பெயருக்கு பின் ஜாதி பெயரை சேர்த்து வையுங்கள். அப்போது தான் அவர்கள் பிற்காலத்தில் தான் பிறந்த ஜாதியை உயர்த்த பார்ப்பர்.

அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யும் போது 153 ஜாதிகளையும் ஒருங்கிணைத்து, "முதலியார் வேளாளர்' என்று ஒரே பட்டியலில் பதிவு செய்யுங்கள். சங்க நிர்வாகிகள் நன்கொடை வசூல் செய்து அதில் துவங்கும் தொழில்களுக்கு நம் ஜாதியை சேர்ந்தவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துங்கள். உங்கள் பிள்ளைகளை ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்



ஓரு துறவியின் வேடம் பூண்டு .. சமுதாயத்தின் சீர் கேடான, ஜாதி உணர்வைத் தூண்டும் வழியில் பேசிய மதுரை ஆதீனத்தைக் கண்டிக்கிறேன்.. 153 ஐக் கூட்டினால் 9 வருகிறதாம்.. அதனால் அது உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கிறதாம்.. "I love you " என்று சொல்வதற்கு 143 என்றும் குறியீடு உண்டு .. அதற்கு என்ன சொல்வாரோ..-


Wednesday, December 15, 2010

106. சீமாச்சுவின் தாம்பூலம் - 15 டிசம்பர், 2010

சமீபத்தில் இந்தியா சென்று வந்தது ரொம்ப குறுகிய கால விஜயமாக மனதில் படுகிறது. போனதென்னவோ 4 வாரங்களுக்கு.. மழையும் என் ஆசை மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளிக்கூடமும் என்னை மயிலாடுதுறையிலேயேக் கட்டிப் போட்டுவிட்டன.


அக்டோபர் 30 விடிகாலையில் சென்னை விமான நிலையத்தில் ஆசைஆசையாக இறங்கி ஆசை ஆசையாக டூட்டி ஃப்ரீ கடைக்குள் நுழைந்து ஆசை ஆசையாக பாட்டில்களை அள்ளிக் கொண்டேன். லக்கேஜுக்காக பெல்ட் அருகில் காத்திருக்கும் போது ”சீமாச்சு அண்ணா.. என்ன தண்ணி வாங்கிட்டீங்களா?” என்று ப்ழக்கப்பட்ட குரலை அருகில் கேட்டாலும் ஒரு உலகறிந்த பிரபலமாக (!!!) இருப்பதின் அவஸ்தை அப்பொழுதுதான் புரிந்தது. பக்கத்தில் பார்த்தால் நம்ம என்னால் இணைய ஆழ்வார் என்று அன்பாக அழைக்கப்படும் ‘மாதவிப்பந்தல்’ கேயாரெஸ். அவருடன் அளவளாவியதில் காத்திருந்த நேரம் அதிகமாகத் தெரியவில்லை. அவரை வரவேற்க வந்திருந்த குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி..

oOo

இருபது வருடங்களாக வருடத்துக்கு ஒரு முறை சில வாரங்கள் இந்தியா வந்து போயிருந்தாலும் சில விஷயங்கள் நான் செய்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. முக்கியமாக கடைத்தெருவுக்குச் சென்று எந்தப் பொருளையும் விலை கேட்டு வாங்கி கையிலிருந்து காசு கொடுத்ததில்லை. மூர்த்தி அண்ணன் புண்ணியத்தில் நான் ஒரு பொருள் பக்கம் திரும்பி 10 வினாடிகளுக்கு மேல் உற்றுப் பார்த்தாலே அந்தப் பொருள் பேக் செய்யப்பட்டு நான் போவதற்கு முன்னாடியே வீட்டில் இருக்கும்.

இந்த முறை அண்ணனிடம் பிடிவாதமாகப் பேசி (“இதெல்லாம் உனக்கெதுக்கு சீனா.. “) கடைத்தெருவுக்குச் சென்று விலைகள் விசாரித்ததில் கிட்டத்தட்ட மயக்கம் வராத குறைதான்.. (ஒரு முழ மல்லிகைப்பூ 15 ரூபாய், வீட்டில் ஒரு சிறிய விசேஷத்துக்கு வாங்கிய பூ மட்டும் மூவாயிரம் ரூபாய், பழம் இரண்டாயிரம் ரூபாய், ஸ்வீட் கார வகைகள் மூவாயிரம் ரூபாய்..) “ஆண்டவரே.. கீழ் நடுத்தரமக்கள் ( என் குடும்பம் 1990 வரை இருந்த இருந்த பொருளாதார நிலை கனவுபோல் வந்து போனது.. இப்பொழுதும் ஒண்ணும் கலைஞர் குடும்ப அளவிலெல்லாம் இல்லை தான்..இருந்தாலும்..) எல்லாம் எப்படி இந்த விலைவாசியில் குடித்தனம் நடத்துகிறார்கள் என்று ஆயாசமாக இருந்தது..

பாண்டி பஜாரில் பக்கத்திலேயே நடந்து வந்த நம்ம பதிவர் உண்மைத்தமிழன் ஆதரவாக.. “இதெல்லாம்.. இப்பல்லாம் அப்படிதாண்ணே..” என்று என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டே வந்தார்..

அப்படி செய்ய நினைத்த இன்னொரு விஷயம் பஸ்ஸில் போவது.. அரசு/தனியார் பேருந்தில் பயணம் (நாங்களெல்லம் ட்ரெயின் தான்) செய்து 8 வருடங்களாயிருந்தன.. கடைசியாக இதேபோல் ஆசைப்பட்டு 2002ல் போய் வந்ததுதான். இந்த முறை சென்னை - பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி - கடலூர், கடலூர் - சிதம்பர்ம், சிதம்பரம் - மயிலாடுதுறை ஒரே நாளில் பயணம் செய்தத்தில் பல வகைப்பட்ட அனுபவம்..


சென்னையில், நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் நண்பரொருவருடன் சென்னையிலிருந்து மயிலாடுதுறை பஸ் பயணம் என்று சொல்லி முடிவானதுடன் .. “கோயம்பேடு போகலாண்ணே..” என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. “அங்கெல்லாம் வேணான்ணே.. பில்லர் போயிடுங்க.. அங்கேருந்து ECR ரோட்டில் பாண்டி போக ஏஸி/ வீடியோ கோச் (இதுவரை வீடியோ பஸ்ஸில் பார்த்ததில்லை) வண்டி நிறைய கிடைக்கும் “ என்று இனிப்புத் தடவி சொன்னாரு இன்னொரு ‘அண்ணன்’. அவர் செய்தியை நம்பி பில்லர் போய் பஸ்ஸுக்கு நின்றோம்..

என் நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.. “சூப்பர் டீலக்ஸ் (அது போல ஏதோவொன்று) வீடியோ கோச்” என்று போட்ட ஒரு பஸ் ஒரு 20-30 பயணிகளுடன் வந்தது. எங்களை ஏற்றி விட வந்திருந்த நண்பர்களிருவரில் ஒருவர் ஒரு விவகாரமான கோணச் சிரிப்புடன் எங்களை ஏற்றி விட்டார்.. அப்பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்.. கொஞ்சம் இருட்டான மாலை ஆறு மணி வாக்கில் நான் உணர்ந்த் போது தான் பஸ் 20 கிமீ வேகத்தில் ECR ரோட்டில் ஊர்ந்து கொண்டிருந்தது.. பஸ்ஸ்லிருந்து ஒரு பலகீனமான ஒரு ஒட்டை உடைசல் சத்தமும் வந்து கொண்டிருந்தது.. பஸ்ஸிலிருந்த சக பயணிகளெல்லாம் முணு முணுத்துக் கொண்டிருந்தார்கள்... கொஞசம் பலமாக (மிகப் பலமாகவெல்லாம் இல்லை) சவுண்டு விட்டுக்கிட்டிருந்த பார்ட்டி..”வண்டியே மோசமான வண்டிதாங்க.. டிரைவருக்குச் சரியாக் கண்ணு தெரியலை போல.. அதனால ரொம்ப நிதானமா ஒட்டுறாருங்க.. இங்க பாருங்க எதுத்தாப்பல லைட் போட்டுக்கிட்டு இன்னொரு பஸ் வந்தாலே ஒரம் கட்டிடடறாரு பாருங்க” என்று எனக்கு பயண வரலாறு சொல்லிக்கிட்டிருந்தார்..

யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. கையிலும் எந்த மாற்றும் இருப்பதாகத் தெரியவில்லை..

சாதாராணமான பஸ்ஸில் போயிருந்தால் 7:30க்கெல்லாம் பாண்டி போய்ச் சேர்ந்திருக்கலாமாம்.. இப்பொழுது இவர் போகும் வேகத்தில் போய்ச்சேர 9 மணியாகும் போலருந்த்து.. அப்புறம் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை போய்ச் சேர நள்ளிரவு தாண்டி இர்ண்டு மணியாகலாம்... பொறுமை எல்லை மீறிக்கொண்டிருந்தது.. எனக்கு மட்டுமல்ல...

கண்டக்டரை அருகில் அழைத்தேன்..

“அண்ணே .. உங்க பேரென்னங்க..?”

“ஜெயக்குமார் சார்..”

“இப்போ பக்கத்துல பார்த்தீங்கள்ள.. ஒரு ஆ...ட்..டோக்காரன் நம்ம பஸ்ஸை முந்திக்கிட்டுப் போறாரு...”

“ஆமாம் சார்.. என்ன பண்றது..” - பொறுப்புடனும் பொறுமையுடனும் பதில்கள் தந்தார்..

“என்ன பிரச்சினைன்னு எனக்காவது கொஞ்சம் சொல்லுங்களேன்.. வண்டியில ஏதாவது பிரச்சினையா..?”

“வண்டியிலும் பிரச்சினை தான்.. ஆனால் சமாளிச்சிரலாம்.. ஆனா நம்ம டிரைவர் அடுத்த வருஷம் ரிட்டயராவுராரு சார்.. கண்ணு சரியாத் தெரியமாட்டேங்குதாம்.. நான் இப்பத்தான் முதன் முறை அவரு கூட வர்றேன் சார்.. மத்தியானமெல்லாம் சரியாத்தான் ஓட்டினாரு.. இப்பத்தான் இப்படி.. எனக்கே இப்பத்தான் தெரியும் சார்..”

“அவருக்குக் கண்ணு சரியாத்தெரியாதது தெரிஞ்சும் எப்படி வண்டி எடுக்க விட்டாங்க..?”

“இவரு வண்டி எடுத்திருக்க வேண்டாங்க.. இவரு ஆபீஸ் ட்யூட்டி கேட்டிருக்கலாம் தான்.. ஏன்னு தெரியலை சார்..”

“நீங்க வண்டி எடுப்பீங்களா.. கண்டக்டர்? “

“நான் எடுப்பேன் சார்.. ஆனால் ட்ரைவர் ட்யூட்டியிலே இருக்கும் போது கண்டக்டர் எடுக்கக் கூடாது சார்.. அது தப்பு” - அவர் தரப்பு நியாயம் சொன்னார்..


“ட்ரைவருக்கு உடம்பு சரியில்லேன்னு.. அவர் உங்களை..’நீங்க எடுங்கண்ணே’ ந்னு கேட்டால் நீங்க எடுக்கலாமா?”

“அவர் கேட்டுக்கிட்டால் நான் எடுக்கிறேங்க.. உங்களையெல்லாம் நேரத்துல பாண்டியிலே கொண்டு விட எனக்கு மட்டும் ஆசையில்லியா சார்..”

நானும் என் நண்பரும் டிரைவரிடம் சென்று வண்டியை ஓரம் கட்டச் சொன்னோம். அவருக்கும் அது தேவையாக இருந்தது போலும்.. ரொம்ப அயர்வாகக் காணப்பட்டார்.. அவரிடம் பேசி.. கண்டக்டரையே.. வண்டி எடுக்கச் சொல்லி அவரைக் கேட்டுக் கொள்ளச்சொல்லி.. கண்டக்டர் ஓட்டுனர் இடத்தில் ஏறி அமர்ந்ததும் தான் எல்லாப் பயணிகளும் சற்று நிமிர்ந்து அமர்ந்தனர்..

அடுத்த ஒரு மணி நேரம் தாண்டி மாலை 8:10க்கெல்லாம் வண்டி பாண்டிச்சேரி எல்லைக்குள் நுழையும் போதுதான் கண்டக்டரின் நன்னடத்தைக்குப் (இங்க வேற நல்ல வார்த்தை வரணும்.. நன்னடத்தை என்பது சரியில்லை.. What I want to say here is 'Conductor's service attitude of going above and beyond his responsibilities to take care of his customers.. It is really an exceptional quality among our Govt servants) பாராட்ட வேண்டுமென்று தோன்றியது. பஸ் பேருந்து நிலையத்தில் நுழைந்து விட்டால் யாருக்கும் நன்றி சொல்லவும் தோணாது.. இறங்கி விடுவிடென்று ஓடிவிடுவார்கள்.. என்று தெரியும்..

என் நண்பரிடம் (அவர் மேடையில் பேசி பழக்கமுள்ளவர்) சில குறிப்புகளைத் தந்து “கண்டக்டரைப் பாராட்டிப் பேசு.. அப்படியே இந்த பண அன்பளிப்பையும் கொடுத்து விடு “ என்று சொன்னபோது அவர் மறுத்து விட்டார்..

“இதெல்லாம் எங்க ஊரில நாங்க செய்யறதில்லை.. அவன் அவன் லேட்டாயிடிச்சேன்னு கடுப்புல இருக்கான்.. இப்போ இதெல்லாம் என்னால முடியாது”

”நீ செய்யாட்டா .. நான் செய்யுறேன்..” என்று எழுந்த போது... “ உனக்குச் சொன்னாலும் புரியாது... உனக்காகவும் புரியாது” என்று புலம்பிக்கொண்டே எழுந்தார்...


அன்பான பயணிகளே.. நமது பேருந்து ஓட்டுனரின் பார்வைக் குறைபாடும் அதனால் நாம் அனுபவித்த தாமதமும் இன்னும் சில நிமிடங்களில் நாம் பாண்டியில் இந்தப் பேருந்தை விட்டு இறங்கியதும் உங்களுக்கு மறந்து போகலாம்.. நம்மையெல்லாம் பத்திரமாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதற்காக என் நண்பரின் வேண்டுகோளை ஏற்று பேருந்தை ஓட்டுனரிடமிருந்து தகுந்த முறையில் பெற்று .. நம்மையெல்லாம் விரைவாக கொண்டு சேர்த்திருக்கிறார் நம் நடத்துனர் .. ஜெயக்குமார் அவர்கள்.. இதைச் செய்யவேண்டுமென்று அவரது வேலைக்குறிப்பில் இருக்காது... இருந்தும் நமக்காக அவர் பொறுப்பேற்று செய்தார்.. .. அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு எல்லோரும் .. ஒரு முறை கைதட்டி ஊக்குவியுங்கள்...”

என்று சொன்ன போது பலமான கைதட்டல் எழுந்து அடங்க சில நிமிடங்களாயிற்று..

தொடர்ந்து..

“நீஙகள் பேருந்தை விட்டு இறங்கும் போது மறக்காமல்.. நம் நடத்துனருக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்குங்கள்.. மேலும் நமது நடத்துனர் ஜெயக்குமாரின் சேவையுள்ளத்தைப் பாராட்டி இந்தச் சிறிய பணமுடிப்பினை ..என் நண்பர் சார்பாக அளிக்கவுள்ளேன்..” என்று சொன்னவுடன் இன்னும் இரண்டு பயணிகள்.. “அதோட என் பரிசையும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள்” என்று அவர்கள் பங்கைத் தந்ததும் நெகிழ்ச்சியாக் இருந்தது..

பேருந்து நிலையம் வந்தவுடன்.. இறங்கிய ஒவ்வொரு பயணியும் மறக்காமல் ”நன்றி சார்..” என்று பேருந்தை ஓட்டி வந்த நடத்துனரிடம் சொல்லிய போது அவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..

“காசெல்லாம் வாங்க மாட்டேன் சார்...இவ்வளவு பேரும் இறங்கும் போது நன்றி சொன்னாங்களே .. அதுவே நிறைவா இருந்திச்சி சார்..” என்று பிடிவாதமாக மறுத்த நடத்துனரிடம்.. பணத்தை ..”இது காசு மட்டும் இல்ல சார்.. இது ஒரு அடையாள அன்பளிப்பு.. நீங்க செஞ்ச பொறுப்பை வெறும் காசால் அளக்க நான் விரும்பவில்லை” என்று சொன்ன பிறகுதான் அவர் ஏற்றுக்கொண்டார்..

அவரிடம் அன்பாக சில நிமிடங்கள் நின்று பேசிவிட்டு .. புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகுதான் கடலூர் பேருந்தைப் பிடிக்க விரைந்தோம்


அன்றிரவு மயிலாடுதுறை வீட்டுக்குள் வரும் போது மணி இரவு 12:30

அடுத்த பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது தான் உடன் பயணித்த நண்பர் சொன்னார்.. “அந்த கண்டக்டருக்குச் சந்தோஷமா இருக்கும் தானே.. அவர் இந்த நாளை மறக்க மாட்டார் தானே.... ஏனோ எங்களுக்கெல்லாம் அடுத்தவங்களைப் பாராட்ட நேரமே இருக்கிறதில்லை.. ச்சின்னதாக் கையாவது தட்டணும்னு கூடத் தோணலை.. நீ சொல்றவரைக்கும்...”

oOo





பதிவு கொஞம் நீளமாகிட்டது போல.. உண்மைத்தமிழன் பேரைச் சொன்னாலே.. பதிவும் நீண்டுடுது.. எனது டாஸ்மாக் அனுபவம், பதிவுலக நண்பர்களைச் சந்தித்தது, தீபாவளி.. கடைமுகம்.. இன்னும் சுவையான அனுபவங்கள் அடுத்த பதிவில்.. விரைவில்...

என் நண்பரின் மகனின் எந்திரன் வீடியோ.. அவசியம் நிமிடம் 2:20 லிருந்து 2:45 வரை பாருங்கள். ஒரு புன்சிரிப்பு கியாரண்டி. நிச்சயம் ரீவைண்ட் செய்து பார்த்து மறுபடியும் சிரிப்பீர்கள்