Sunday, February 19, 2006
12. உங்க கிட்ட பணம் கொடுத்தா... என்ன செய்வீங்க...?
சரி. உங்க கிட்ட யாரோ ஒரு நண்பர் வந்து..."ஏலே.. குப்புசாமி..இந்தா ஒரு ஐயாயிரம் ரூபா பணம் கொஞ்சம் இருக்கு.. வெச்சுக்கோ... அப்புறம் நான் கேக்கும்போது மறக்காமல் திருப்பிக் கொடு.." ன்னு பணம் கொடுத்தா என்ன பண்ணுவீங்க?
வாங்கி வெச்சுப்போம் தானே? எங்க..? நம்ம பர்ஸுல தானே..
ஏன் கொடுக்கிறார்.. ஏதோ ஒரு காரணம்.. நம்மகிட்ட இருந்தா ஒர் பத்திரமா இருக்கும்-னு தானே..
என்னை மாதிரி கொஞ்சம் முன் ஜாக்கிரதையுள்ள ஆளுங்க.."அண்ணே.. கொடுக்கிறதப் பத்தியும் ப்ரச்சினையில்லை... திருப்பிக் கேக்குறதப் பத்தியும் ப்ரச்சினையில்லை.. நான் கொஞ்சம் செலவாளி... சமயத்தில் செலவ்ழிஞ்சுரும்... கேக்கிறதுக்கு முன்னாடி ஒரு ரெண்டு நாள் டயம் கொடுங்க... எடுத்து ரெடியா வெச்சிருக்கேன்.." சொல்லுவோம்... தப்பில்லை...
'சமயத்தில் என்ன செலவழியறது.... உடனே அடைக்க வேண்டிய கடன்களை அடைப்போம் தானே...
எதுவுமே தப்பில்லை...
சரி கொடுத்த அன்பரே.. ஒரு நாள் ராத்திரி 11 மணிக்கு கதவைத் தட்டி.."குப்புசாமீ..அந்தப் பணம்.. உடனே..தேவைப் படுது..அவசரமா..கம்பன் எக்ஸ்ப்ரஸ்..ல ஊருக்குப் போறேன்" -னு சொல்றாருன்னு வெச்சுக்கோங்களேன்...
என்ன சொல்வோம்...
"என்ன்ய்...யா.. இது... இப்படிப் பண்றே....கொஞ்சம் முன்னாடி சொல்லப் ப்டாதா...? நாளைக்கு பாங்க் லீவு ஆச்சே....இப்படிப் படுத்தறே..." சலிச்சுக்குவோமா..இல்லியா..?
இன்னும் கொஞ்சம்.. கூடுதலா.."உன்னையெல்லாம்..யாருய்யா..எங்கிட்ட கொடுக்கச் சொன்னது..? நான்...கேட்டேனா உன்னை..? "
சமயத்தில் வீட்டுக்குள்ளிருந்து மனைவியின் எரிச்ச்லும் சேருமில்லயா..? "இதுக்குத் தான் வாங்காதீங்க.. இது வேலீல போற ஓணானை..மடீல விட்டுக்கற கதை...ன்னு சொன்னேன்.. " அந்தப் பணத்தில் பட்டுப்புடவையோ.. அல்லது வீட்டுச்சாமானோ.. வாங்கிக்கிட்ட மனைவியும் ..சொல்வாங்க தானே..
கொடுக்க முடியாதுன்னு இல்லை... நம்மளை பழி சொல்லிடக்கூடாதுன்னு.. ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி... அவ்வளவுதான்...
1996-ல் எனக்கு இது போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டது...
மயிலாடுதுறையில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருந்தேன்.. கொஞ்சம் பெரிய வீடு... 2 க்ரெள்ண்ட் நிலம்.. அதில் நடுநாயகமாக 2400 சதுர அடியில் வீடு..சுற்றிலும் தோட்டம்.. பெரிய காம்பவுண்ட் சுவருடன்... பெரியதாக....
உடனே குடிபுகும் எண்ணம் இல்லையாதலால்... வீட்டைஒருவருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கும் விட்டாயிற்று...
வீட்டு வாடகையை.. எப்படி.. பெறுவது...? அதற்கும் ஒரு தேவையில்லாவிடினும்... அதை ஒரு நண்பரிடம்.. (நீண்ட நாள் நண்பரெல்லாம் இல்லை.. சமீபத்திய அறிமுகம் தான்.. ஆனாலும் நேர்மையானவரென்று பட்டது.... ) சரி வாடகையை...மூர்த்தி சாரிடம் கொடுத்துடுங்க என்று.. சொல்லிவிட்டேன்...அவரும் நான் வாங்கி வைத்திருக்கிறேன்.. என்று உத்திரவாதம் தந்துவிட்டார்...
பணத்துக்கென்று உடனடி தேவையொன்றுமில்லை... நானும் அமெரிக்கா வந்துவிட்டேன்..வாழ்க்கை வழக்கமான பாதையில்...
15 மாதம் கழித்து..திரும்பி மயிலாடுதுறை சென்றேன்.... எல்லோரையும் பார்த்து விட்டு....வீட்டையும் போய்ப் பார்த்துவிட்டு.. குடியிருந்தவரிடம்.. 'என்னங்க.. வீடு நல்லாருக்கிறதா...' என்று சம்பிரதாயமாக விசாரித்தேன்..
'எல்லாம் வசதியாக இருக்கு... மாசாமாசம் வாடகையை மூர்த்தி சார் கிட்ட கொடுத்துக்கிட்டு வர்றோம்..வாங்கிகிட்டீங்க்ளா..?" -ன்னு கேட்டார்..
'இல்லங்க.... இன்னும் சாரைப் பார்க்கல.. பார்த்து வாங்கிக்கிறேன்... ஒண்ணும் ப்ரச்சினையில்லை..."
அன்றுதான் ..விமானத்தில் வந்திருந்ததால்.. ஜெட் லாக் வேறு.. தூக்கம் வேறு வரவில்லை..யாரைப் பார்க்கலாம்.. பொழுது போகும் என்று டி.வி.எஸ்..50 எடுத்துச் சுற்றிக் கொண்டிருக்கும் போது.. மூர்த்தி சார்.. பார்த்து விட்டார்...
"எப்ப வந்தீங்க தம்பி...வாங்களேன்..வீட்டுக்கு.."
பிடிவாதமாக..வீட்டுக்குள்..அழைத்துப் போய்விட்டார்...
எல்லா நலன்களும் விசாரித்த பிறகு... வீட்டு வாடகையைப் பற்றிப் பேச்சு வந்தது..
"அதெல்லாம் ஒண்ணும் அவசரத் தேவையில்லை..ஸார்.. உங்களால் முடிஞ்ச போது குடுங்க... நான் ஒரு மாசம் இங்கதான் இருக்கப் போறேன்.."
"இல்ல தம்பி... டிக்கெட் எல்லாம்.. எடுத்து வந்திருப்பீங்க.. இங்கேயும் உங்களுக்குப் பணம் தேவைப்படலாம்...வாங்கிக்குங்க...நீங்க வர்றீங்க ன்னு கேள்விப் பட்டு பேங்க் லாக்கரிலேருந்து எடுத்து வெச்சேன்..."
உள்ளே.. திரும்பி.. மனைவியிடம்.."தரணீ.. தம்பி பையை எடுத்து வா..."
உள்ளிருந்து ஒரு மஞ்சள் கலர் சங்கம் சில்க் ஹவுஸ் பை வந்தது..
'புடிங்க் தம்பி.. உங்க வாடகைப்பணம்.."
உள்ளே திறந்து பார்த்தேன்... ஒவ்வொரு மாத வாடகையும் ..குடித்தனக்காரர் தந்தது.. தனித்தனியாக.. ரப்பர் பேண்ட் போடப்பட்டிருந்தது....
அதில்..எந்த மாதத்திற்கான வாடகை.. எந்த்த் தேதியில் தந்திருந்தார்.. என்ற குறிப்பும்.. எழுதிய பேப்பர் துண்டு ஒவ்வொரு ரப்பர் பேண்டிலும் செருகியிருந்தது....
ஆச்சரியமாக இருந்தது....
"ஏன் சார்.. இதை நீங்கள்.. உங்க தேவைகளுக்குப் பயன் படுத்தியிருக்கலாமே... நான் ஒண்ணும் சொல்லியிருக்கமாட்டேனே..?"
"நமக்கு எதுக்குத் தம்பி உங்க பணம்....ஆண்டவன் நமக்கு நெறயக் கொடுத்திருக்கான்....பத்திரமா... கொடுக்கணுமேன்னு தான் பேங்க்ல...லாக்கர் ல வெச்சிருந்தேன்...."
இந்த மாதிரி ஒரு இருபது பைகள்.. அவர் லாக்கரில் எப்பொழுதும் இருக்கிறது.. சமயங்களில்.. . கூடவும்.. இருக்கும்.. எல்லாம்.. மற்றவர் பணம்... அவர் அதைத் தொடுவதில்லை.... எடுத்து தன் பேங்க் அக்கவுண்டிலும்போடுவதில்லை...
வாங்கி வைத்திருந்தால்.. எப்ப கேட்டாலும் கிடைக்கும்.. நீங்கள் கொடுத்த அதே நோட்டு.... அதே நம்பர்களுடன்...
இதைப் போல் நிறைய அதிசயங்க்ள் அவரிடம் உண்டு....
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் பட்டதில்லை... ஏதாவது கேட்டால்..
"ஆண்டவன் நமக்கு..நெறய கொடுத்திருக்கான் தம்பி...."
சபலமேயிருந்ததில்லை.. அவரிடம்....
இத்தனைக்கும் அவர் .. குடும்பச் சூழ்நிலைகளால்.. அதிகம் படித்ததில்லை.... ..
Saturday, February 18, 2006
11.. அம்மா... உனக்கு இப்ப த்ருப்தியா.. சொல்லு,,,,
அக்கா தங்கையுடன் சேர்ந்து மூன்று குழ்ந்தைகள். எப்பொழுதும் அம்மா கூடவே இருந்துதான் படித்தோம். அப்பா வேலையாக டில்லியில்..
வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் வருவார்..
மற்றப்டி படிக்கும் காலத்தில் எப்போதும் அம்மா.. அம்மா.. அம்மாதான்..
ஒரே பையன்.. அம்மா செல்லம் வேறு.. தட்டில் சாதம் போட்டு... கையில் விடும் அதிகப்படியான நெய்யில் .. நான் அம்மா செல்லம் என்று எனக்குத் தெரியும்..
"படிச்சு...முடிச்சு.. வேலைக்குப் போயி எனக்கு என் பையன் பட்டுப் புடவை வாங்கித் தருவான்.,.", அம்மா பெருமிதம் எப்பொழுதும் 1970களில்..
பட்டுப்புடவை.. பட்டுப்புடவை.. இது தான் அம்மாவின் கனவுகள் அப்பொழுது..

1990 களில் வீட்டில் வசதி வந்துவிட்டது... நான் சவுதி போய் சம்பாதிக்க் ஆரம்பித்து விட்டேன்.. பணவசதி சொல்லிக்கொள்ளும் படி இல்லையென்றாலும்... பஞ்சமில்லை.. ஆண்டவன் அருள்..
1991 -ல் ஒரு நாள்.. திடீரென்று.. அம்மா சொல்லிவிட்டாள்.. "நான் இனிமேல் நிதப்படிக்கு பட்டுப்புடவை தான் கட்டிக்கப் போறேன்.." தினமும் பட்டுப்புடவை.... தினமும்.. தண்ணீரில் துவைத்து ..பிழிந்து .. காயவைத்து...
பக்கத்து வீட்டுப் பெண்களின்... "பையன் வாங்கித்தரான்னு.. அந்த்ப் பட்டுப் புடவையை எப்படிப் படுத்தறா பாரு மாமி.. ட்ரை க்ளீன் பண்ணி .. அயன் பண்ணி கட்டிக்கக் கூடாதா.."... அம்மாவுக்கு அதெல்லாம் பத்திக் கவலையில்லை..... எப்போதும் போல சாதா அம்மா தான்...ஓரு கனவு நிறைவேறிய த்ருப்தி....
தொண்ணூறு இறுதியில்.. "எனக்கு பவுனில் வளையல் வாங்கிக் கொடுடா..சீனா.." கேட்டுக் கொண்டிருந்தாள்.. அம்மா.... 'நம்ம அம்மா தானே..' அப்புறம் செய்யலாம்னு.. ஒரு உரிமை கலந்த அலட்சியம்... கொஞ்சம் கண்டு கொள்ளவில்லை.....
கையில் நிறைய வளையல் போட்டிருந்து.. மயிலாடுதுறையில் தனியாக இருக்கும் போது யாராவது வந்து அம்மாவை அடித்துப் போட்டுவிட்டு எடுத்துப் போய்விட்டால்.... வளையல்போகட்டும்....அம்மாவுக்கு ஏதாவது...ஆயிடுச்சுன்னா.." என்ற ஜாக்கிரதை உணர்ச்சியும் ஒரு புறம்..
எங்களுக்கு முதல் குழந்தை பெண்மகவு (நம்ம சூப்பர் ..டூப்பர் தான்...) பிறந்த போது...நான் பிரசவ அறைக்குள்தான் இருந்தேன்.. மனைவி படும் துயரம் பார்த்டு.. அம்மாவும் என்னைப் பெற்றெடுக்க இவ்வளவு கஷ்டம் பட்டிருப்பாதானே.. என்று உடலெல்லாம் பதறியது..
மனைவிக்காவது.. அமெரிக்காவில் உள்ள பெரிய மருத்துவமனை..... நான்.. ஏதோவொரு வீட்டு நடுக்கூடத்தில் தான் பிறந்தேன்.. அப்பொழுதெல்லாம்.. பெயின் கில்லர்கள் கூடக் கிடையாது...'பொறக்கும் போதே.. உனக்குத் தலை கொஞ்சம் பெரிசுரா.... நீ ஒரு மண்டை பெருத்த மகாதேவன்...டா.." அம்மா சொல்வதுண்டு...
"என்னைப் பெக்க இவ்வளவு கஷ்டம் பட்டிருக்கியாம்மா.. " என் நெஞ்சு விம்மியது... உடனே..நகைக் கடைக்குப் போய்.. 1 டஜன் வளையல்கள் அம்மாவிற்கு... 24 பவுன்..அம்மாவிற்குக் கொடுத்தவுடன்.. பெருமை பிடிபடவில்லை.. அம்மாவிற்கு.... இதை இன்னும் கொஞ்சம் முன்னாடியே செஞ்சிருக்கலாம்..
கடைசி நாட்களில்.. அம்மாவிற்கென்று தேவைகள் அதிகம் இருக்கவில்லை...
அம்மா கையால் நிறைய தான தருமங்கள் செய்ய வைத்தாகிவிட்டது.. அப்பாவுடன் தனியாக இருக்க ஆரம்பித்ததால்... அம்மாவுக்கு நிறைய நேரம் மிச்சப்பட்டது.. 'வாயில்லா ஜீவன்கள்.. " என்று பசுமாடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்ள்... வீட்டில் பசுக்கள் கிடையாது.. தெருவில் வரும் பசுக்கள் தான்.. அவைகளிடம் நிறையப் பேசுவாள்... அகத்திக்கீரை கட்டு கட்டாகக் கொடுப்பாள்.. வாசலில்வரும் ஆடு மாடுகளுக்கெனெ.. ஏதாவது எப்பொழுதும் சாப்பிட வைத்திருப்பாள்.. வாசலில் வரும் பசுக்களும்.. அம்மாவுக்காக வாசல் கேட்டில்.. நின்று கொண்டிருக்கும்...
அம்மா காலமாகி வீட்டில் காரியம் நடந்து கொண்டிருக்கும் போது... அம்மா அன்பு வைத்திருந்த எல்லா ஜீவன்களும்.. வாசலில் வந்திருந்தன.. அம்மாவைக் காட்டுக்குக் கொண்டு செல்லும் போது.. ஒரு பசுமாடு....பின்னாடியே.. ரொம்ப தூரம் வந்தது..... கண்ணில் ஒரு ஏக்கம் தெரிந்தது...கலங்கியேப் போய்விட்டேன்..
வீட்டுப் பக்கத்தில் வதான்யேஸ்வரர் கோயிலில் ஏழெட்டுப் பசுக்கள் உண்டு.. பக்தர்கள் கோவிலுக்கு நேர்ந்துவிட்டவை...அவை தரும் பாலில் கோவிலில் அபிஷேகம் நடக்கும்.. அவைகளுக்குக்கென்று கோவில் ப்ரகாரத்தில் நிழல் த்ரும் இட்மோ.. ப்ராமரிக்கக் கட்டுமானங்களோ இன்னும் வந்திருக்க்கவில்லை..
சென்ற நவம்பர் 7, 2005ல்.. அம்மா நினைவு நாளில்.. அம்மா பெயரில்.. கோவிலில் ஒரு பசுமடம் (கோசாலை) கட்டி.. அப்பா கையால்.. திறந்து வைத்தேன்.. பத்து முதல் பதினைந்து பசுக்கள் தாராளமாகக் கட்டலாம்.. அவை நீரருந்த தண்ணீர்த்தொட்டி.. தண்ணீர்த்தொட்டிக்கு நீர் பிடிக்க மோட்டார் வசதிகள்.... பசுக்களைக் குளிப்பாட்ட வசதிகள்....பராமரிப்புச் செலவுகளுக்கு மாதாமாதம் பண வசதி...பக்தர்களுக்கு பசுவின் பெருமை தெரிய முகப்பில் காமதேனு ஓவியம்...பக்தர்கள் வந்து பசுக்களுக்கு கீரை கொடுத்து தொட்டுச் செல்ல வசதிகள்..
கோவிலுக்கு வரும் பக்தர்கள்.. பசுக்களுக்கு அகத்திக்கீரை வாங்கித்தர வசதியாக்... வாசலில் அர்ச்ச்னை தட்டு விக்கும் பாட்டியிடம் தனியாக பணம் தந்து.."பாட்டி.. எப்பவும் ஒரு 25 கட்டு அகத்திக்கீரை கட்டு வெச்சிருக்கணும்..இந்த பணத்தை வெச்சி முதல்ல வாங்கிப்போடு.." என்று சொல்லி வைத்தோம்...
எல்லாம் பார்த்துப் பார்த்து.. என் அருமை அண்ணன் (என் உடன் பிறக்காவிட்டாலும்... எங்கள் வீட்டுத் தலைமகன்... நான் தெயவத்துக்குச் சம்மாக மதிக்கும் ஒரு அதிசயப் பிறவி.. இவரைப்பற்றி நிறைய எழுதணும்..) ..ஆலோசனையில்.. எல்லாம் பாத்து..ப்பாத்து.. செய்திருக்கிறோம்..
அம்மாவுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.. அம்மாவுக்குப் பிடித்த ஒரு விஷய்ம்...
எல்லாப் பசுக்களும் ஒரு வகையில் அம்மா தான்...
அம்மா.. நீ வந்து பாத்தியா..? உனக்குத் த்ருப்திதானே.....
இது முடிவல்ல இன்னொரு ஆரம்பம் தான்... உன் தயவில்.. உன் அருளில்.. அண்ணனும்.. அப்பாவும்.. நம் குடும்பமும் அருகிருக்க.. இன்னும் நிறைய செய்வோம்.... எல்லோருக்கும் செய்வோம்...
Thursday, February 16, 2006
நண்பனே.. எனது உயிர் நண்பனே

என் மகள் a.k.a சூப்பர் டூப்பரின் இரண்டாவது கதை. இந்தப் படத்தில் இரண்டு கோழிகள் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து கோழி மொழியில் பேசிக் கொண்டிருக்கின்றன்.. ஒரு கோழியின் பெயர் டீனா...இன்னொன்று டயானா...சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்.. ஆம் அமெரிக்க வெள்ளைக் கோழிகள்..அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கின்றன்? தொடர்ந்து படியுங்கள்.. கோழிகளுக்குத் தமிழ் தெரியாத்தால்....கதை...ஆங்கிலத்தில்..
There were two friends.
They were hens and lived on Kevin's farm.
Their names were Tina and Diana.
Diana said to Tina, "let's escape from the farm".
Tina said, "OK... let's leave"
The next morning the hens left. On their way, they found a cottage.They found blankets and sofas.They found other stuff too.
They sat in the couches in front of the fireplace with blankets.
They discovered they didnt have wood to light fire in the fire place.
So they went to the woods.
There they found out there wasnt an axe to chop wood.
So Tina used her sharp beek and made an ax out of wood.
After they chopped wood and came back,
Tina said "Its CLUCK.. I mean warm in here".
They both laughed and went to sleep on the couches in the little cottage.
THE END
எப்படி இருக்கு இந்தக் கதை...
Sunday, February 12, 2006
09. படம் பார்த்து கதை சொல்லு...

மேலே உள்ள படம் புரிகிறதா? நான்கு எறும்புகள் உணவை எடுத்துக்கொண்டு வரிசையாகச் செல்கின்றன். என் மகள் (இரண்டாம் வகுப்பு) வகுப்பில் இந்தப் படத்திற்கு ஒரு கதை எழுதச் சொல்லியிருந்தார்கள்..
கதைக்கு முன்... இது அவளது சொந்தக் கற்பனை. நாங்கள் யாரும் அவள் கற்பனைக்கு உதவவில்லை...
அந்த எறும்புகளுக்கு.. சில்வியா, ப்ரியன்னா, ஜாஷ், சாம் என்று பெயர் வைத்துள்ளார்.. நல்ல இந்தியப் பெயர்களாக.. கவிதா, வினிதா, குமுதா, நர்மதா என்று வைத்திருக்கலாம்.. பரவாயில்லை...
அவள் வகுப்பிலேயே..அவள் கதை மட்டும் தான் எல்லோருக்கும் படிக்கப் பட்டு..."க்ரேட்.. சூப்பர் டூப்பர்.." என்று குறிக்கப் பட்டுள்ளது...
இப்பொழுது கதை ஆங்கிலத்தில்....
There was once a batch of ants. Their names are Silvia, Brenna, Josh and Sam.
Silvia said "Let's hunt for food".
So they went hunting for food. Soon they reached a zoo.
There they saw a cockroach named Simba.
Simba was guarding a pile of acorns. The ants said they wanted some acorns
Simba said "You need a magic word for taking the acorns".
So they went to Mario, Simba's friend. They asked him the magic word.
Mario said, "The magic word is Abracadabracazzoo".
"Thanks", said Brenna.
The ants went back to the zoo.
They said, "We know the magic words. They are Abracadabracazzoo.."
said Brenna.
Simba said,"Take as many acorns as you want."
The ants took some and went home.
The ants went home and had a party
THE END
எப்படி இந்தக் கதை...
அடுத்த SuperDuper கதை இன்னும் சில நாட்களில்...
Tuesday, February 07, 2006
தேர்தலில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் !!
தேர்தலில் போட்டியிட தியாகிகள் சங்கம் முடிவு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட நெல்லை மாவட்ட தியாகிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த தொகுதிகளில் தியாகிகள் சங்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காம் தியாகிகள் சங்க கூட்டம், சங்கத் தலைவர் முன்னாள் கலெக்டர் லட்சுமிகாந்தன் பாரதி தலைமையில் வரும் 11 ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தென்காசி மலர் ஐ.டி.ஐயில் கூடுகிறது. தியாகிகள் சங்க உறுப்பினர்களும், மற்றும் காந்தீயவாதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று பாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.
யாருக்காவது இந்த சங்க உறுப்பினர்களைத் தெரியுமா? என் குடும்பத்தினர் சார்பாக, அவர்களின் தேர்தல் செலவுகளுக்கு, என்னாலியன்ற நிதியுதவி செய்ய ஆசைப்படுகின்றேன்... அவர்களை அறிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லவும்.
நல்லவர்கள் நோக்கம் நிறைவேற ஆண்டவனை வேண்டுவோம்.
Sunday, January 22, 2006
7. ச்சின்னஞ்சிறு கதை - எங்கேயோ படித்தது
ஒரு வகுப்பில் ஒரு போட்டி நடந்தது. மாணவர்கள் ஆளுக்கு ஒரு சிறுகதை எழுதவேண்டும். கதைக்கான கரு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும் சில விதிகள்..
1. கதை ஒரு அரச பரம்பரை கதையாக இருந்தால் நலம்.
2. குடும்பம் சம்பந்தமாகவும் இருக்கவேண்டும்.
3. அதில் காதல் இருப்பது உத்தமம்
4. கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும்.
5. கதை ரொம்ப பெரியதாக்க இருக்கக் கூடாது. ச்சின்னதாக இருப்பது நலம்.
இந்தப் போட்டியில் பரிசு பெற்ற ரொம்பச் சின்னஞ்சிறுகதை.
கதையின் தலைப்பு: மகத நாட்டு இளவரசி
"
இளவரசியார் கர்ப்பமாக இருக்கிறாராம். யாரந்தக் காதலன்?
"
என் கேள்விக்கு என்ன பதில்?
இங்கு அமெரிக்காவிலிருக்கும் சராசரி இந்திய கம்ப்யூட்டர் கன்சல்டண்ட் குடும்பச் சூழல் தான் நமக்கும். நான்.. என் அலுவலகம் உண்டு.. வேலையுண்டு.. வீடு உண்டு என்று இருக்கும் சராசரி இந்தியக் குடிமகன் தான்.
ஆண்டவன் அருளில் எனக்கு அமைந்த மனைவிதான் குடும்ப மற்றும், குழந்தைகளின் தேவைகளையும் என் தேவைகளையும் கவனிப்பது எல்லாம். ஒரு எவர்சில்வர் தட்டில் சாம்பார் சாதமோ, ரசம் சாதமோ, தயிர் சாதமோ பிசைந்து போட்டு, காய்கறிகள் போட்டு, ஒரு ஸ்பூனும் போட்டு, தட்டு விளிம்பை துடைத்து (இல்லாட்டி ஐயாவுக்கு கோபம் வந்திரும் இல்ல!!) கொண்டு வந்து கையில் கொடுப்பது வரை.. எல்லாம் நமக்கு நடக்கும் (யாரும் கண்ணு கிண்ணு போட்டுடாதீங்கப்பா... பெண்ணியவாதிகள் யாரும் நான் ஆபீஸ் போகும் வழியில் கருப்புக் கொடி காட்டிடாதீங்க...!)
வீட்டுக்குத் தேவையான பால், தயிர், காய்கறி எல்லாம் வாங்கி வருவதும், வாரயிறுதியில் யார் வீட்டில் பார்ட்டி என்பதை நினைவு வைத்திருந்து சொல்வதும் மனைவிதான் (டுபுக்கு பாணியில் சொல்வதானால் தங்கமணி தான்.. என் பாணியில் சொன்னால் ரப்ரி தேவி)
குழந்தைகளைப் பொறுத்தவரை எல்லாமும் அம்மாதான். காலையில் அவர்களை எழுப்பி, பள்ளிக்கூடத்துக்குத் தயார்ப் படுத்தி, அவர்களை பள்ளியில் விட்டு.. மாலை வீட்டுக்கு அழைத்து வருவதும், அவர்களுடன் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்ய வைப்பதும், சாப்பாடு பரிமாறுவதும், அப்புறம் தூங்கப் போகும் போது அவர்களுக்கு கதைகள் சொல்லி, பாட்டுப்பாடித் தூங்க வைப்பதும் எல்லாம் அம்மாதான்.
ஒரு நாளிரவு நானும் பொழுது போகாமல் 'இன்னிக்கு நான் உங்களைத் தூங்க வைக்கிறேன்' என்று சொன்னேன்.
சில சிணுங்கல்கள்.. மற்றும் மனைவியுடனிருந்த சமாதான வார்த்தைகள் 'ஒரு நாள் அப்பாவோடத்தான் தூங்குங்களேன்..' எல்லாம் முடிந்து குழந்தைகளுடன் படுக்கையில் நான்.
இந்தப்பக்கம் ச்சின்னப் பெண் (3 வயது). இந்தப் பக்கம் பெரிய பெண் (7 வயது).. நடுவில் நான்... எனக்குத் தெரிந்த சசின்ன வயசுக் கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன் (அப்பொழுதுதான் உணர்ந்தேன்.. வாழ்க்கையில் ஒரு பெரிய மகிழ்ச்சியை நான் ரொம்ப நாள் கண்டுக் கொள்ளாமலிருந்திருக்கிறேன் என்று...)
என் மகளுடனான உரையாடலில் ஒரு பகுதி.. வழக்கமாக என் கேள்விகள் அல்லது பதில்கள் தமிழில்.. என் மகள் ஆங்கிலத்தில்...
மகள்: அப்பா! நான் ஒண்ணு கேட்டால் கோச்சுக்கக் கூடாது...
நான் :ஏண்டா கண்ணம்மா.. நான் கோச்சுக்க மாட்டேன்.
மகள்: I Love you a lot !! நீ அதனால எல்லாம் கவலைப் படாதே!! ஆனால் எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..
நான்: (கொஞ்சம் தயக்கத்துடன்) தெரிஞ்ச வரையிலும் சொல்றேம்மா.. தெரியாட்டா நாம ரெண்டு பேரும் internet-ல தேடி பதில் கண்டு பிடிக்கலாம்.
மகள்: மறுபடியும் சொல்றேன் I Love you.. தப்பா நெனச்சுக்காதே..
நான்: கவலைப் படாதே.. தப்பா நெனச்சுக்கலை.... I Love you too !!
மகள்: எனக்கு எல்லாமும் அம்மா தான் செய்யறா.. என்னை எழுப்பி விடறதுல இருந்து, ஸ்கூல் போய் வரும் வரை.. தூங்கப் பண்ணுவது வரை.. எல்லாம் அம்மாதான் செய்யறா..
.................Then Why in the world we need Daddies ???
அதற்குப் பிறகு நான் பேசவேயில்லை. ஏழு வயது மகளுக்கு பயாலஜி க்ளாஸ் எடுக்காமல் அவளுக்குப் புரியவைக்க எனக்கு இன்னும் தெரியவில்லை...
என் மகளின் சந்தேகத்தைத் தீர்க்கும் பதில் தருபவருக்கு, மரவண்டு கணேஷிடம் சொல்லி ஒரு நல்ல புத்தகம் பார்சல் செய்யப்படும்.
Monday, January 16, 2006
புதிய கோணங்கள் - 1
மகளுக்கு அப்பொழுது வயது நான்கு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் அதிகம் (அளவுக்கு அதிகமான) மற்ற குழந்தைகளுடன் நேரம் செலவிட வழியில்லை.
கூடுமான வரையில் எனது நண்பர்களுக்கெல்லாம் ஒன்று திருமணமாகவில்லை அல்லது ஒரிரண்டு வயதில் பெண் மகவு மட்டுமே உண்டு.
என் மகள் படிக்கும் பள்ளியிலும் (வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே.. அதுவும் மூன்று மணி நேரம்) எல்லோரும் அனேகமாக பெண் குழந்தைகளே !!
பக்கத்து வீட்டில் ஒரு பெங்காலி-மலையாளி குடும்பம் குடி வந்தது. அவர்கள் வீட்டில் ஒரு நான்கு வயது பையன் உண்டு.
என் மனைவிக்கும் இது ஒரு வசதியாக இருந்தது. சில (வெகு சில) நேரங்களில் மகளை அவர்கள் வீட்டுக்கு விளையாட அனுப்புவார்கள்.
ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்திருந்த நேரம். வழக்கமாக ஓடி வந்து கட்டிக் கொள்ளும் மகள் என்னிடம் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தாள். மனைவிக்கும் என்ன விஷயமென்று தெரிந்திருக்க வில்லை.
"மதியம் சாயோக் (பக்கத்து வீட்டுப் பையன் பேர்) வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ஒரு யோசனையாகவே இருக்கிறாள் என்ன வென்று தெரியவில்லை" - மனைவி
என் மகளிடம் என்னவென்று கேட்போமென்று நெருங்கினேன்.
உரையாடல் வழக்கமான பாணியில்.. நான் தமிழில் கேள்விகள், என் மகள் எல்லாக் குழந்தைகள் பாணியில் ஆங்கிலத்தில் பதில். உரையாடல் சுவை கருதி அனைத்தும் தமிழில்...
"என்னடா கண்ணம்மா !!"
"ம்ம்.. ஒண்ணுமில்லப்பா.."
"சும்மா சொல்லு.."
"நான் ஒண்ணு சொல்றேன்.. யார் கிட்டேயும் சொல்ல மாட்டியே"
"சரி"
"அம்மா கிட்ட கூட சொல்லக் கூடாது'
"சரி"
"பின்கி ப்ராமிஸ்"
இரண்டு பேரும் வலது கை சுண்டி விரல் கோர்த்து சத்தியம் செய்து கொண்டோம்.
"இன்னிக்கு சாயோக்கைப் பார்த்தேன் "
"சரி. என்ன சொன்னான்?"
"ட்ரெஸ் இல்லாமல் பார்த்தேன்.."
"அதனால என்ன? அவனும் பேபிதானே"
"இல்ல இது வேற.."
"என்ன? சரியாச் சொல்லு"
"This guy has got A TAIL !!!!!!!!!!!!!!!!!!!!!!"
Wednesday, January 04, 2006
பாலாபிஷேகம்.

ஆஞ்சனேய ஜெயந்திக்கு பாலாபிஷேகம் செய்யும் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனசு என்னவோ கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1008 குடங்கள். ஒரு குடத்துக்கு 4 லிட்டர் பால் என்று கொண்டால் கூட ஏறக்குறைய 4000 லிட்டர் பால். பஞ்சவடி ஆஞ்சனேயருக்கு ஒரு 1008 லிட்டர். எவ்வளவு பால், குழந்தைகளுக்கான ஒரு அத்யாவசியமான உணவுப்பொருள் வீணடிக்கப்பட்டிருக்கிறது?
இந்த நாட்டில் எத்தனைக் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா ஆன்மீக வாதிகளுக்கு கொஞ்சமாவது ஒரு சமுதாயப் பொறுப்பிருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா.
இறைவன் என்றால் என்னவென்றுதான் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
பக்தி என்றால் என்னவென்று உண்மையாகவே இவர்களுக்குத் தெரியவில்லையா.
இதெல்லாம் ஒரு தனி மனிதனின் வழிபாட்டு முறைகள். இதில் தலையிடக்கூடாதென்றெல்லாம் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இது போன்ற மெகா விஷயங்கள் எல்லாமே ஒரு ஈகோ விஷயமாகவே படுகிறது. அரசியல்வாதிகள் தான் ஒரு பக்கம் சமுதாயச் சீரழிவுக்குக் காரணமாகிறார்களென்றால், இப்பொழுது ஆன்மீகவாதிகளும் ஒரு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.
தனிமனிதர்களின் செயல்கள் சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் போது எதிர்த்துக் கேட்பதில் தவறொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் கூட, சில மாதங்களில் வறட்சி என்று அறிவிக்கப்பட்டால், தண்ணீரை அநாவசியமாக்ச் செலவு செய்யக்கூடாது. கார் அலம்புதல், புல்வெளிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற செயல்கள் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகக் கருதப்படும்.
அதுபோல், இந்தியாவில் பிறந்திருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் குடிக்கக் கிடைக்கும் வரை இதுபோல் "மெகா" (கவனிக்க. மெகா மட்டுமே) அபிஷேகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்தத் தடையையும் மக்கள் உளமாற ஏற்று, கோவில்களில் போலீஸ் வந்து அளக்கும் படியில்லாமல் மனசாட்சிப் படி அனுசரிக்க வேண்டும்.
இது போன்ற முரட்டு பக்தர்களை, அந்த ஆஞ்சனேய மகாபிரபு தான் வந்து திருத்த வேண்டும்.
பின் குறிப்பு:
1. தயவு செய்து இதை மாற்று மதத்து கண்ணோட்டங்களுக்கு சென்று, பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். சீமாச்சு யாரிடமும் விலை போகவில்லை. என் மனதில் அந்த ஆஞ்சனேயரே வந்து சொல்லித்தான் இதை எழுதியுள்ளேன்.
2. நான் ஒன்றும் நாத்திகவாதியில்லை. எத்தனை முறை ஆஞ்சனேயர் கோயிலைச் சுற்றியுள்ளேன் என்பது மயிலாடுதுறை திருஇந்தளூர் ஆஞ்சனேயருக்குத் தெரியும்.
Wednesday, December 28, 2005
Will be coming back shortly..
எனக்குத் தோன்றுவதை மீண்டும் எழுதத் துவங்கலாம் என்று இருக்கிறேன். தமிழ் எழுத்துரு கணிணியில் போட்டாகிவிட்டது..எழுத ஆரம்பிப்பதுதான் பாக்கி. கூடிய விரைவில் செய்யலாம்.
இனி என்றும்....
இன்பக் காற்று வீசட்டும்.
எட்டுத்திக்கும் பரவட்டும்.
மனிதப்பூக்கள் மலரட்டும்.
மனங்கள் இன்னும் விரியட்டும்.
குற்றம் குற்றம் குறையட்டும்.
சுற்றம் சுற்றம் வாழட்டும்.
வட்டம் வட்டம் விரியட்டும்.
வானம் தொட்டு வளரட்டும்.
கூடுமான வரையில்..
நல்லதையே எண்ணுவோம். நல்ல முறையில் எழுதுவோம் என நம்புகிறேன். பார்ப்போம் எப்படி செல்கிறது என்று.
அடுத்த பதிவு மிக விரைவில்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு.


