Thursday, July 10, 2008

65. வேலை பார்க்கும் போது படித்துத் தான் தீரணுமா?

முதலில் ஒரு சின்ன ஜோக்.. பழசுதான்.. இருந்தாலும் இந்த இடத்துக்குப் பொருந்துகிறது..

ஒரு அலுவலகத்தில் வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு பெரிய வி.ஐ.பி யின் சிபாரிசில் இண்டர்வியூவுக்கு ஒரு பையன் வந்திருந்தான். பையனின் தகுதிகளைப் பார்த்த போதே.. இவன் சிபாரிசின் பலத்திலே மட்டுமே வந்திருக்கிறான் என்று புரிந்து விட்டது. சரி, சம்பிரதாயமாகவாவது சில கேள்விகள் கேட்போம் என்று கேட்ட கேள்விகளுக்குக் கூட சரியான பதில்களைப் பையனால் சொல்ல இயலவில்லை..

கடைசியில் ஒரு கேள்வி. ரொம்ப எளிதுதான்.. "காஃபி" என்ற சொல்லுக்கு ஸ்பெல்லிங் சொல்லுங்கள்... ( முழுவதும் சரியாகச் சொல்லாவிட்டாலும் .. பையன் (VIP சிபாரிசு ஆயிற்றே..) ஒரே ஒரு எழுத்தாவது சரியாக சொல்லி விட்டால் அவனுக்கு வேலை கொடுத்து விடலாம் என்று எண்ணம்..)

நிதானமாக யோசித்துப் பையன் சொன்ன பதில்..


K..A...P....H....I

oOo

அதை விடுங்கள் அது ஒரு ஜோக்குதான்..

சில மாதங்களுக்கு முன் என் அலுவலகத்தில் வேலைக்கு ஆள் தேவைப் பட்டது.. IT .. தான் Java, Oracle. கொஞ்சம் மட்டும் தெரிந்திருந்தால் உடனே வேலை..

இண்டர் வியூவிற்கு ஒருவர் வந்திருந்தார்.. சுமார் 35 வயதிருக்கும்... சமீபத்தில் வேலை இழந்த்திருந்தார்.. புள்ளைக் குட்டிக்காரர்.. விரைவில் வேலையில் சேரவேண்டுமென்பது அவர் நிர்ப்பந்தம்.. சேமிப்பு கரையத் தொடங்கியிருந்தது...


ஐ.டி யில் 12 வருடங்கள் குப்பை கொட்டியதாக ஜாதகம் (resume) சொன்னது. .. அவர் பெயரில் ஒரு வித தெலுங்கு வாடை வீசினாலும்.. அவரே தனக்குத் தமிழ் தெரியும் என்று சொன்னார்.. என் பெயரிலிருந்து அவர் நான் தமிழாக இருக்கும் என்று ஊகித்துக் கொண்டு அவரே முன் வந்து சொன்ன செய்தி.. (இதெல்லாம் நாங்கள் இண்டர்வியூவில் கேட்கக் கூடாது.. அவரே சொன்னாலும் அதை அப்படியே விட்டுவிட வேண்டும் என்பது எங்கள் அலுவலக் நியதி..)



"நம்ம தமிழ் ஆளாச்சே.." எடுத்துக் கொள்ளலாம்.. எப்படியும் 12 வ்ருஷ அனுபவத்தில் 7 வ்ருஷம் OB அடித்ததாக எடுத்துக் கொண்டாலும் மிச்ச 5 வ்ருஷம் solid experience இருக்கும்.. வேலைக்கு எடுத்து விடலாம் என்று தான் நினைத்தேன்.. கேள்விகளை.. சின்னச்சின்னதாக எளிதாகக் கேட்டாலும்..



"அதெல்லாம் எப்பவோப் படிச்சது சார்.. மறந்து போயிடிச்சி.. உங்களுக்கு எப்ப்டி இதெல்லாம் நினைவிருக்கு " என்று அப்பாவியாகக் கேட்டார்..


"அதனாலென்ன பரவாயில்லை" யென்று அவர் வேலை பார்த்ததிலிருந்து கேட்டால்.. அதற்கும் அவர் சரியான பதில் சொல்ல இயல்வில்லை..


"நீங்க ப்ரொக்ராம் கொடுங்க சார்.. பண்ணிடுறேன்.. இந்த மாதிரி கேள்வி கேட்டால் .. டக்க்குனு பதில் சொல்ல முடியலை சார்.." என்றார்..


"டக்குனு எல்லாம் சொல்ல வேண்டாம்.. கொஞ்சம் யோசிச்சாவது சொல்லுங்களேன்... அவ்வளவு சரியான விடை கூட வேண்டாம்... கொஞ்சம் நெருக்கமாக வந்தால் கூட போதும்... ஒரு ப்ரச்சினை (troubleshooting) யின் போது நீங்கள் எந்தெந்த கோணத்தில் சிந்திக்கிறீர்களென்பது தான் முக்கியம்.. சரியான் விடை முக்கியமில்லை" என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன்.. (நம்ம தமிழ் ஆளாச்சே..)


ஹூஹூம்... கடைசி வரை அவர் நிலைமை KAPHI கதை தான்..


பன்னிரெண்டு வருடங்கள் வேலை அனுபவமிருந்தும்.. அவர் எதுவுமே தியரி யோ அல்லது முன்னேற்றமோ படிக்க முயற்சி பண்ணவில்லை என்று தெரிந்தது... கேட்டால் நேரமில்லை என்றுதான் சொல்லியிருப்பார்.. கேட்டிருக்கவும் முடியாது.. இண்டர்வியூ சமயங்களில் தேர்வாளராக இருக்கும் போது என்ன வார்த்தைகள் பிரயோகிக்கிறோம் என்பது முக்கியம்.. ஏதாவது கேட்டால்.. அது நம் மீதே.. ஒரு தலைப் பட்சமாக நடந்து கொண்டதாக வழக்கு சந்திக்க நேரிடும் (அது தனிக் கதை..)


மனதில் வலியுடன் தான் அவரை அனுப்ப வேண்டியிருந்தது....

oOo

இப்போ மனதுக்கு இதமாக இந்த செய்தி.. இன்றைய தினமலரிலிருந்து.....

ஆமதாபாத் நூலகத்தில், அறைகளைக் கூட்டி, சுத்தம் செய்யும் பியூனாக வேலையில்சேர்ந்தார் அவர்; சும்மா இருந்த நேரங்களில் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்தார்;அடுத்த சில ஆண்டுகளில் பட்டதாரி ஆனார்; பின் நூலகருக்கான சர்ட்டிபிகேட்படிப்பையும் முடித்தார். இப்போது அவர், நூலகராகவும் ஆகிவிட்டார். அவர் தான் கங்காராம வகேலா; குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நூலகத்தில் பணியாற்றிவருகிறார்.



நூலகத்துக்கு பியூன் வேலைக்கு ஆள் தேவையென்று 1981 ஆம் ஆண்டு விளம்பரம்பார்த்து விண்ணப்பித்தார் வகேலா. தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்தார்; தினமும்அறைகளை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்து, புத்தகங்களை அந்தந்த பிரிவுகளில்அடுக்கி வைக்க வேண்டும். தினமும் இதைச் செய்து வந்தவருக்கு சும்மா இருந்தநேரத்தில் புத்தகங்களைப் பிரித்துப் பார்க்கத் தூண்டியது. சில முக்கிய புத்தகங்கள்வேண்டுமானால் வகேலாவைக் கேட்டால் கிடைக்கும் என்ற அளவுக்கு அனுபவத்தைவளர்த்துக் கொண்டார்.


நூலகத்தில் உள்ள மற்றவர்கள் ஊக்கம் கொடுத்ததால், உள்ளூர் கல்லூரியில் குஜாராத்திஇலக்கியத்தை முக்கிய பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்தார்; அதில் படித்துத்தேர்ச்சியும் பெற்றார். அத்துடன் நிற்காமல் நூலகருக்கான சர்ட்டிபிகேட் கோர்சிலும் சேர்ந்து, அதையும் பெற்றார். இந்த நிலையில் 1998 ல் நூலகர் பிரகாஷ் ஓய்வு பெற்றார்அவர் சொன்னதன் பேரில் வகேலாவை தற்காலிக நூலகராக அமர்த்தினர் உயர்அதிகாரிகள். இப்போது அவர் நூலக புத்தகங்களை கம்பியூட்டர் மயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு விடுகிறார்..

Tuesday, July 08, 2008

64. பள்ளி மாணவிகளுக்கு உதவும் தொழிலாளி....

கழிவறை சுத்தம் செய்து பெற்றோரை இழந்த மாணவிகளுக்கு உதவும் தொழிலாளி



கோவை: குடும்பத்தைக் காப்பார்ற வெல்டிங் வேலை; பெற்றோரை இழந்த பள்ளிமாணவிகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுக்க கழிவறை சுத்தம் செய்யும் வேலை என், இரண்டி வேலைகளை செய்து குடும்பத்துக்கும், பள்ளி மாணவிகளுக்கும் உதவி வருகிறார்,கோவை நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த திரு லோகநாதன். இவரது மனைவி சசிகலாதேவி,குடும்பத் தலைவி, மகன் சிவகுரு பி.காம் படிக்கிறார். மகள் அன்னபூரணி, நான்காம்வகுப்பு படிக்கிறார்,
காலையில் இருந்து மதியம் 1 மணி வரை வெல்டிங், கேஸ் கட்டிங் வேலைகளைச்செய்யும் லோகநாதன், 1:15 மணிக்கு மதிய உணவை முடித்து விடுகிறார். மீதியுள்ள45 நிமிடங்களில் அருகிலுள்ள வீடுகள், நிறுவனங்களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்கிறார். மீண்டும் வெல்டிங் வேலைக்கு மதியம் 2 மணிக்குத் திரும்பிமாலை 6 மணிக்கு வேலையை முடிக்கிறார். பிறகு மாலை 6 மணிக்குப் பல வீடுகளுக்குச்சென்று கழிவறைகளை சுத்தம் செய்கிறார்.
வெல்டிங் வேலையில் மாதம் ஆறாயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கிறாது. இந்தச்சம்பளத்தை குடும்பத்துக்கு ஒதுக்கி விடுகிறார். கழிவறை சுத்தம் செய்யும் வேலையில்கிடைக்கும் வருமானத்தைத் தனியே சேமிக்கிறார். சில மாதங்களாகச் சேகரித்துவைத்த ஐந்தாயிரம் ரூபாயை, கோவை காந்தி மாநகரில் உள்ள சமூக நலத்துறைக்கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சத்யா அம்மையார் நினைவு அரசு காப்பகத்துக்குவழங்கினார். இந்தப் பணத்தை, காப்பகத்தில் தங்கியுள்ள 10 வது பிளஸ் 1, பிளஸ் 2படிக்கும் மாணவிகளுக்கு, "கைடு" வாங்க பயன்படுத்துமாறு கூறினார்..

இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட காப்பகக் கண்காணிப்பாளர் கிரிஜா,காப்பகத்தில் உள்ள 47 பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடு வழங்கினார்.கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில்நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் லோகநாதனை கலெக்டர் பழனிக்குமார் பாராட்டினார்.
லோகநாதன் கூறுகையில் "உழைத்துக் கிடைக்கும் வருமானத்தில், பெற்றோரை இழந்தகுழந்தைகளின் படிப்புக்கு உதவுவதில் இருக்கும் மன திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை என்றார்.
அன்பு லோகநாதன் அவர்களே.. உங்கள் சேவைக்குத் தலை வணங்குகிறேன்..
லோகநாதன் அவர்களின் சேவையை பெருமையுடன் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்ட தினமலருக்கு நன்றி..
.திரு லோகநாதன் அவர்களின் முகவரி.
திரு லோகநாதன்
எஸ். எம் இஞ்ஜினீயரிங்
697 ராமநாதபுரம்
கோவை 45
போன்: 99526-21150

63. உதவிய நெஞ்சங்களுக்கு உளமார்ந்த நன்றி...



சென்ற வாரம் முழுவதும் ஒரு பிரளயமாகப் போய்விட்டது. மனைவியின் நெருங்கிய உறவினர்.. படிப்பதற்காக அமெரிக்கா வந்த இளைஞர், எதிர் பாராத முறையில் மரித்து விட.. அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய நிலையில்.... என்ன செய்வதென்று தெரியாமல்.. திகைத்து நின்றேன்..



உடனடியாகத் தோன்றியது நமது பதிவுலக நண்பர்கள் தான்.. கேள்விப்பட்டவுடன்.. அனைத்து நண்பர்களும்.. எனக்குத் தொலைபேசி.. தேவையான உதவிகளைச் செய்து தந்தனர்.



மறைந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் ச்டங்குகள் அவரது பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க ஆஸ்டின் நகரிலேயே நடத்தப்பட்டது...



உதவிய உள்ளங்களுக்கு நன்றி.. அனைவரையும் தொலைபேசியில் அழைத்து என் தனிப்பட்ட நன்றியைச் சொல்வேன். அதற்கு முன்.. இந்தப் பதிவு..





நிறைய நண்பர்கள்.. இவர்களை நண்பர்களாகப் பெற்றது.. இறைவன் செயல்..



செய்தியைச் சொன்ன உடனேயே.... பதிவெழுதி..சுவரொட்டியிட்ட கேஆரெஸ்..



பதிவைப் பார்த்த உடனேயே.. இரவு பதினோரு மணிக்கு மேலும் போன் செய்து நண்பர்களின் தொடர்பு தந்த அருமை நண்பர் டாக்டர் வீயெஸ்கே,



நண்பர்கள் தொலைபேசியையும் அவர்களிடம் எனது தேவையையும் சொல்லி உதவச்சொன்ன பதிவரும், மயிலாடுதுறை வாசியுமான எங்கள் பள்ளி முன்னாள் மாணவர் முத்துக்குமார்..



என் பெயரையே (அவர் பெயரை நான் தான் வைத்துக் கொண்டுள்ளேன்..) வைத்திருக்கும் எங்கள் ஊர்க்காரர் அன்பு வாசன் பிள்ளை, அவர் சகோதரர் நிரஞ்சன் பிள்ளை, அவர் நண்பரும் ஆஸ்டின் நகர சாய்பாபா மைய நிறுவனருமான அன்பு நண்பர் காங்கேயன்,



என்னை அழைத்து.. உதவி தேவையானால் எந்த நேரமும் அழைக்கத் தவறாதீர்கள் என வாக்களித்த் ஆஸ்டின் நகர நண்பர் சீனிவாசன்,



அமெரிக்க சூழல் சார்ந்த ஏராளமான செய்திகளை தந்து உதவிட்ட சக பதிவர் திருமதி பத்மா அரவிந்த், அவரது உறவினர் திருமதி சுஜாதா



வாகன உதவியும், உணவும், ஆறுதலும் அள்ளித்தந்த நண்பர் சேவியர், நண்பர் கணேஷ்குமார்..



இன்னும் நிறைய நல்ல நெஞ்சங்கள்...



இவர்களின் நட்பைப் பெற என்ன தவம் செய்தேனோ....





அனைவருக்கும் மனமார்ந்த் நன்றிகள்...





சோகமான நிகழ்ச்சியாயினும் ஒரு பெரிய அனுபவம் கிடைத்தது.. இது போல நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவெழுதி வைக்க வேண்டுமென்று நினைத்துள்ளேன்..



மனம் இன்னும் ஆறவில்லை.. முடிந்த போது எழுதுகிறேன்...

எங்கள் குடும்ப சோகத்தில் எனக்காக பிரார்த்தித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் !!








Saturday, June 28, 2008

62. எனக்கே ஸ்பீடிங் டிக்கெட் கொடுத்துட்டாங்கோ !!!

***** 29 July 2008 அன்று சேர்க்கப்பட்ட பகுதி...
கோர்ட்டுக்குச் செல்லவில்லை. ஓரு நல்ல (?) அட்டர்னி பிடித்து அவரிடம் கேஸை ஒப்படைத்தேன்.. ஆபீஸ் நேரத்தில் கோர்ட் படி ஏற விரும்பவில்லை... தட்சணை $150/-

அவர் எனக்காக கோர்ட்டுக்குச் சென்று வாதாடி (?) என் ஸ்பீடு டிக்கெட்டை 83 மைல் என்பதை 65 மைல்களாகக் குறைத்து விட்டார்..

கோர்ட்டுக்கு தண்டம் $135/-

மொத்த தண்டம் இதுவரை $285/-

என் ட்ரைவிங் ரிக்கார்டில் 3 பாயிண்டுடன் கணக்கு இனிதே தொடங்கப்பட்டது... இன்சூரன்ஸ்காரன் தண்டம் ஒரு தொடர்கதை..


நீதி: ஓவர் ஸ்பீடு போகாதே.. போனாலும் மாட்டிக் கொள்வது மாதிரி போகாதே !!!

என்க்கு ஆர்வத்துடன் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி..

வக்கீல் முகவரியும் போனும் தந்த நண்பர் விஜய்பாபு கண்ணனுக்கு நன்றி...


**** சேர்க்கப்பட்ட ப்குதி நிறைவுற்றது *************


நாலு நாளைக்கு முன்னாடிதான் யூ ட்யூபில் மேயந்து கொண்டிருந்த போது இந்தியன் படத்தின் இந்த சீனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியன் தாத்தா ஒரு ட்ராபிக்க் சார்ஜெண்ட் -ஐ மடக்கும் காட்சி... இந்தியாவிலே இப்படியெல்லாம் இருக்கே-ன்னு கவலைப் பட்டுகொண்டிருந்தேன்.. இது நடந்தது சென்ற செவ்வாய் இரவில்...








வியாழக்கிழமை காலை..வழக்கம் போல அலுவலகம் சென்று கொண்டிருந்தேன்.. இரண்டு வருஷங்களாக சென்று கொண்டிருக்கும் பாதை தான்.. ட்ராபிக் கொஞ்சம் குறைச்சலாக இருக்கவே.. ஆக்ஸிலேட்டரை ஒரு அழுத்து அழுத்தி விட்டேன் போலேயிருக்கு.,.

பின்னாலிருந்து சத்தம்.. ரியர் வியூ க்ண்ணாடியில் நீலக் கலர் பல்பு.. நன்கு பார்த்தால் .. டூ-வீலரில் ஒரு போலீஸ் அதிகாரி... இளம் வயது ஆப்ரிக்கன் அமெரிக்கன்..

"அண்ணே உங்களைத்தான்.. கொஞ்சம் வண்டியை ஓரம் கட்டுறீங்களா?"

தலைவிதியே என்று ஓரம் கட்ட வேண்டியதாகிவிட்டது..

அவரும் வண்டியை என் பின்னால் நிறுத்திவிட்டு அருகில் வந்து கண்ணாடியை இறக்கச் சொன்னார்..

"இங்க ஸ்பீடு லிமிட் என்ன-ன்னு உங்களுக்குத் தெரியுமா சார்?"

"55 சார்" - இது நான்..

"I have locked you down at 83 Sir .. Can I get your papers please.."



நான் மணிக்கு 55 மைல் வேகத்தில் போக வேண்டிய ஹைவேயில்.. 83 மைல் வேகத்தில் சென்றிருக்கிறேன்..


வேணும் தான்.,..

வண்டிக்குத் திரும்பிப் போய் ..முழ நீளத்தில் பிங்க் கலரில் டிக்கெட் கொண்டு வந்து கொடுத்தார்.




கஷ்டகாலமே--யென்று..

"எவ்வளவு சார் ஃபைன்? " என்று கேட்டதற்கு..

ஃபைன் எல்லாம் .. 15 மைல் அதிகம் செல்பவர்களுக்குத்தானாம்.. நான் 28 மைல் அதிகம் சென்றிருப்பதால்.. (Mandatory Court Appearance) அவசியம் கோர்ட்டுக்கு சென்று நீதிபதியைச் சந்திக்க வேண்டுமாம.. ஜூலை 28 அன்று காலை 9 மணிக்கு செல்ல வேண்டும்..



குற்றம் நிரூபிக்கப்பட்டால்.. 30 நாட்கள் லைசென்ஸை சஸ்பெண்ட் செய்வார்களாம்.. கஷடம் தான்..

இது முதல் தடவை என்பதால்.. பாதுகாப்பு பற்றிய வகுப்பில் சேர்ந்தால்.. மன்னிக்கப் படலாம் என்று சொல்கிறார்கள்..

பார்ப்போம்...

ஆமாம்.. உங்களுக்கு யாருக்காவது.. இங்க MLA .. MP .. யாரையாவது.. தெரியுமா???

Tuesday, June 10, 2008

61. எங்க வீட்டுத் தோட்டத்தில் பாவனா...

மேக்கப் இல்லாத பாவனா படம் போடறேன்னு சொல்லி.. வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல.. போட்டிருக்காங்க.. பசங்க கேக்கறாங்களேன்னு.. அவங்க அவங்களுக்குத் தெரியாம மேக்கப் போட்டிட்டு போஸ் கொடுத்துட்டாங்க...





ஆனால்.. எங்க மயிலாடுதுறையில் எங்க வீட்டுக்கு (அவங்க தோழி சரண்யா வோட) வந்த போது.. எங்க மயிலாடுதுறை மாஃபியாவின் வேண்டுகோளுக்கிணங்க.. எங்க வீட்டு ஊஞ்சலில் ஆடிய போது.. நாங்க ஃபோட்டோ எடுத்திட்டோம்..





பாவனா ரசிகர் மன்றம்.. வட அமெரிக்கா வட கேரலைனா.. சார்லட் மாநகர 25 வது வட்டத்தின் சார்பாக இந்த படத்தை வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்..




ஃபோட்டோவை க்ளிக்கி அவங்களின் விசுவ ரூப தரிசனத்தைப் பார்க்கலாம்..






அவங்களே.. மேக்கப்போட...






Thursday, April 10, 2008

60. தமிழாசிரியர் குணமடைந்து வருகிறார்...

எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் - DBTR National Higher Secondary School, Mayiladuturai, Tamil Nadu


குள்ளமான உருவம்.. சட்டென்று லாலு பிரசாத் யாதவை நினைவு படுத்தும் வட்டமான முகம். நெற்றியில் எப்பொழுதும் திருமண். கண்ணியமான தோற்றம். தன்னலமற்று .. எல்லோர் நலமும் வேண்டி.. எப்போதும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் மனம்..




ஆசிரியராக வேலை பார்ப்பதாக நினைக்காமல் ஆசிரியராகவே வாழ்பவர்...



மாணவர்களுக்கு தான் படித்த தமிழ் மட்டுமின்றி.. இசையும், ஆன்மீகமும், அறநெறியும் கலந்து போதித்தவர்...


ஐம்பத்தியிரண்டு வயதிலும் மாணவனாக .. ஆராய்ச்சி மாணவனாக மாறி முனைவர்பட்டம் பெற்றவர்...



எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...





கம்பரையும் வால்மீகியையும்.. கரைத்துக் குடித்தவர்.. வில்லி பாரதத்தில் வித்தகர்.. பிரபந்த்த்தில் மூழ்கித் திளைத்தவர்...




oOo




மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது.. ஒவ்வொரு நாளும்.. காலையில்..திரு இந்தளூரிலிருந்து டாக்டர் இராமமூர்த்திசாலை வழியாக நடந்துதான் பள்ளிக்கு வருவார். வரும் வழியில் தான் அவர் படித்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி.. ஒவ்வொரு நாளும் அங்கு வரும் பொழுது.. சில விநாடிகள்.. நின்று.. காலணிகளைக் கழற்றி.. தான் படித்த ப்ள்ளியை வணங்கி விட்டுத் தான் தொடருவார்... இது ஒவ்வொரு நாளும் காணக்கிடைத்த காட்சி..


இப்படிப்பட்ட ஆசிரியரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்..

கடந்த ஏப்ரல் (2007) மாதத்தில் அவர் உடல்நிலை சரியில்லாதிருந்தார். அவர் பிழைப்பது மருத்துவ ரீதியாக மிகக் கடினம் அவர் இருந்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர் குணமடைய வேண்டுமென்று...இவ்வாறு பிரார்த்தித்திருந்தேன்..

//எல்லா மருத்துவ சூழ்நிலைகளையும் தாண்டி.. எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் மீண்டு எழ.. எல்லாம் வல்ல இறைவன்.. திருமருந்தீஸ்வரரின் செல்லப் புதல்வர்.. ஆசிரியர்க்கெல்லாம் முதன்மையான் ஆசிரியர்.. என் மனம் நிறை தெய்வம்.. எல்லோரையும் காத்து நிற்கும் வைத்தீஸ்வரன்கோயில் செல்வமுத்துக்குமரசாமியை வேண்டுகிறேன்...
//

எங்கள் வேண்டுதல் கேட்டு, ஆசிரியர் சீரிய முறையில் குணமடைந்து வருகிறார்.

ஆசிரியரை கடந்த மார்ச் மாதம் 19 -ம் தேதி பாண்டிச்சேரியில் சந்தித்தேன். உடல் நிலை தேறி வருகிறது. இன்னும் பேச் வரவில்லை. எத்தனை பிரபந்த்ங்கள், உபன்யாசங்கள் 30 வருட ஆசிரியர் தொழில்.. இவ்வளவும் பேசிய வாயால்.. இப்பொழுது அட்சரம் உச்சரிக்க இயலவில்லை. அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.




அவரைச் சந்தித்து அவரிடம் மாணவர்களின் பிரார்த்தனைகளைச் சொன்னேன். நமக்காக அவர் நல்ல முறையில் குணமடைந்து வருவார் என நம்புகிறேன்..

(இந்த சுட்டியைத் தந்து உதவிய நம்து சக வலைப் பதிவர் இணைய ஆழ்வார் மாதவிப்பந்தல் KRS அவர்களுக்கு நன்றி )
அப்பல்லோ மருத்துவமனையில் ஆசிரியர் இருந்த போது, எங்கள் (சீமாச்சு, அபிஅப்பா) வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு ஸ்பெஷல் உதவிகள் பெற்றுத் தந்த டாக்டர் டெல்பின் விக்டோரியா அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.


Saturday, March 29, 2008

59. தரை தொட்டதுமே ஒரு உதவி....

சென்ற மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து... அவசரமாக மயிலாடுதுறை செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. மிகக் குறுகிய காலத்தில் டிக்கெட் எடுத்து.. அவசர அவசரமாக வேலையில் லீவு சொல்லிவிட்டு உடனேயே ஜெட் ஏர்வேஸில் பயணம்.

ஜெட் என்னவோ நல்ல வசதியாய்த்தான் இருந்தது. Charlotte to Newark NJ to Brussels Belgium to Chennai India. சென்ற முறை எமிரேட்ஸில் சென்றுவிட்டு அதன் வசதிகளைச் சிலாகித்துவிட்டு.. அது போல் இன்னொரு ஏர்லைன்ஸ் வருவது கடினம் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, ஜெட் அதன் மிக அருகாமையில் வந்தது மிக்க மகிழ்ச்சி.. என்ன இருந்தாலும் நம்ம் நாட்டுக்காரர்களாயிற்றே...


பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியத்தில் ஏறியதுமே.. பக்கத்து வரிசையில் அமர்ந்திருந்த இளம் (ரொம்ப இளம் 15 முதல் 18 வயதுதான் இருக்கும்...) ஐரோப்பிய ஜோடி கண்ணைக் கவர்ந்த்து.. இவ்வளவு ச்சின்ன பையன் + பொண்ணாயிருக்காங்களே.. கூட யாரும் துணைக்கு வரலை போல இருக்கே.. சென்னை தான் வருகின்றார்க்ளோ அல்லது சென்னை வழியாக சிங்கப்பூர், மலேசியா.. ஆஸ்திரேலியா செல்பவர்களாக இருக்குமோ என்று நினைத்தேன்..


அப்ப அப்ப பார்த்ததில் பள்ளிக்கூட மாணவர்களாகத்தான் பட்டது. ஒருவர் விரல் கூட மற்றொருவர் மீது படவில்லை.. ஒரு வேளை சகோதர சகோதரிகளாக் இருக்கும் என்று கூட நினைத்தேன்..

அப்புறம் அவர்கள் பற்றி யோசிக்க முடியவில்லை.. சொந்தக் கவலைகள் வாட்டியது...

விமானம் தரையிறங்கியதுமே.. இறங்க வேண்டிய அவசரத்தில் கவனித்தது.. ஜோடி.. பாண்டிச்சேரிக்கு வழி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.. மற்றவர் பேசிக் கொண்டிருந்ததில் கேட்டது.. இரவு 1:15 க்கு விமானம் தரையிறங்கியதுமே.. சென்னை செண்ட்ரல் சென்று அங்கு ஒர் லாட்ஜில் மீதி இரவைக் கழித்து இளைப்பாறிவிட்டு.. மறு நாள் காலையில் பஸ் பிடித்து பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என்று சொன்னது காதில் விழுந்தது..

நமக்கென்ன.. என்று விட்டு விட்டாலும்...தமிழ் தெரிந்த நாமே சென்னையில் இந்தப் பாடு படும் போது.. இந்தக் குழந்தைகளை யாராவது ஏமாற்றி விட்டால் என்ன பண்ணுவது என்று உறுத்திக் கொண்டேயிருந்தது.. அவர்களைப் பொறுத்த மட்டில் பாண்டிச்சேரியில் தான் அவர்களின் நண்பர்கள் சந்திக்க முடியும்..

Immigration-ல் நின்று கொண்டிருக்கும் போதும் அவர்கள் கண்ணில் பட்ட போதும் .. நம்மால் என்ன செய்ய முடியும் என்று தான் நினைத்தேன்.. அப்புறம் தான் தோன்றியது... நமக்குத்தான் மயிலாடுதுறையிலிருந்து வண்டி வந்திருக்குமே.. அவர்களை போகும் வழியில் பாண்டியில் இறக்கி விடலாமேயென்று தோன்றியது....


அவர்களைத் தனியே சந்தித்து... "என்னிடம் வாகனமிருக்கிறது.. நீங்கள் பஸ்ஸிலெல்லாம் செல்ல வேண்டாம்.. உங்களை பாண்டிச்சேரியிலேயே இறக்கி விடுகிறேன்.." என்று சொல்லிவிட்டேன்.


இடையில் என்னை அழைக்க வண்டி கொண்டு வந்த மூர்த்தி அண்ணனிடமும் கேட்டுக் கொண்டு விட்டேன்.. "பரவாயில்லை சீனா.. அழைச்சிட்டு வந்திடு.. கார்ல இடம் இருக்கு.. பாண்டில தானே... விட்டுடலாமே...."


அவர்களை நயமாகப் பேசி.. வ்ண்டியில் ஏற்றி பாண்டியில் அவர்கள் நண்பர்களிடம் இறக்கி விட்டு விட்டுத்தான் போனோம்.. (கீழே படத்தில் நான் அவர்களுடன்..)





பெண் (Mirha) ஜெர்மன் பெண்.. பையன் (Felix) ப்ரான்ஸைச் சேர்ந்தவர். இருவரும் வகுப்புத் தோழர்கள்.. இந்தியாவில் சமூக நலப் பணி செய்வதற்காக மூன்று மாத விடுப்பில் வந்திருக்கிறார்கள்..

ஜெர்மன், ப்ரெஞ்ச் பேசுபவர்கள் என்று சொன்னதுமே.. நம்ம டோண்டு மாமா நினைவு வந்து.. அவர் போன் நம்பரை அவர்களிடம் தந்துவிட்டேன்.. இந்த தமிழ்நாட்டில்.. உங்க மொழி பேசி நான் அறிந்த நபர் இவர்தான்.. ஏதாவது தேவையென்றால்.. அவருக்கு போன் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.. பண்ணினார்களா.. என்று தெரியவில்லை....

அப்புறம் தான் தோன்றியது... நாம் நினைக்குமளவுக்கு இந்தியா ஒண்ணும் அவ்வளவு மோசமாக இருக்காது.. இப்பொதெல்லாம்.. நிறைய வெளிநாட்டுக்க்காரர்கள்.. இங்கு பத்திரமாக நடமாடுகிறார்களே... நாம தான் ரொம்ப பயந்துட்டோமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..

நான்கு நாட்கள் கழித்து.. கோவாவில்.. மயக்க மருந்து கொடுத்து.. கற்பழித்து கொலையும் செய்யப்பட்ட இந்த Scarlett Keeling என்ற இந்த 15 வயது பிரிட்டன் தேச பெண்ணைப் பற்றிய செய்தியைக் கேட்கும் வரை...



ஸ்கார்லெட்.. உனக்கு நடந்த வன்முறை பற்றி கேள்விப்பட்டு மிக த்துயரடைந்தேன்... இந்தியா ஒன்றும் நீ நினைப்பது போல கொடூரமான நாடல்ல.. உனக்கு நேர்ந்தது வெறும் விபத்துதான்... இந்தியாவில் என்னைப் போன்ற பொறுப்பு மிக்க இளைஞர்களும் அதிகம்.. எங்களால் உன்னைப் போன்ற குழந்தைகள் பலர் காக்கப் பட்டிருக்கின்றார்கள்...

உன் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்.. உனக்கு பாதகம் விளைவித்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தாலும் .. ஆண்டவர் பிடியிலிருந்து தப்ப முடியாதென்று நம்புகிறோம்... இது தான் இந்தியா...

Wednesday, February 20, 2008

58. ஹையா...பாஸ் பண்ணிட்டேன்....


நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்த தேர்வில் (Financial Risk Manager from http://www.garp.com) முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று விட்டேன். நண்பர்களின் நல்லெண்ணங்களும் ஊக்குவிப்பும் எனக்கு மிக உதவியாக இருந்தன...
என் பெயருக்குப் பின்னால் இப்பொழுது FRM எனறு போட்டுக் கொள்ளலாம். வெற்றி தந்த ஊக்கத்தில் இன்னும் 3 தேர்வுகளுக்கும் பதிவு செய்து விட்டேன்...
  1. Chartered Alternate Investment Analyst (CAIA) இரண்டு தேர்வுகள். March 2008 and September 2008
  2. Certified in Investment Performance Measurement (CIPM) இரண்டு தேர்வுகள்..April 2008 and October 2008
  3. Chartered Financial Analyst (CFA) மூன்று தேர்வுகள்.. June 2008, June 2009, June 2010
மூன்றிற்கும் படிப்பு இப்பொழுது முழு வேகத்தில் செல்கிறது..
நாமெல்லாம் ஐ.டி துறையில் சாதித்ததைப் போன்று Financial Industry-யிலும் சாதிக்க வேண்டும். ஒரு விக்ரம் பண்டிட் (Citigroup CEO) மட்டும் போதாது.. நம்மில் நிறைய பேர் வர வேண்டும்.. இந்தத் துறையில் நான் நிறைய சீனர்களையும், யூதர்களையுமே பார்க்கிறேன்.
இதிலும் நம் இந்தியர்கள் வர வேண்டுமென்பதே என் அவா..
இந்தத் தேர்வுகள் எழுதுவதற்கோ.. இதில் வரும் வேலை வாய்ப்புகள் குறித்தோ அறிந்து கொள்ள விரும்புபவர்கள், தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளவும். என்னாலான, என்னிடமுள்ள எல்லா தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

Sunday, November 25, 2007

57. பரீட்சை முடிஞ்சுப் போச்சு.....

நவம்பர் 17 .. GARP (Global Association of Risk Professionals) என்ற அமைப்பினர் நடத்திய Financial Risk Manager(FRM) என்ற தகுத்க்கான பரீட்சை எழுதினேன்.

கடந்த 6 மாதங்களாகவே இதற்குப் படித்து வந்துள்ளேன்... இது படித்துத் தேர்வானால் என் தொழிலில் என் வாழ்க்கையில் முன்னேறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

படித்து முடித்து .. ஐடி தொழிலுக்கு வந்த பின்னரும் நிறைய தேர்வுகள் எழுதியுள்ளேன்.. பெரும்பாலும் அவை ஐடி சம்பந்தப் பட்டவை. தேர்வுகள் கம்பியூட்டரில் இருக்கும். முடிந்தவுடன் பாஸா.. ஃபெயிலா.. என்று தெரிந்து விடும்.

இந்தத் தேர்வு இது கொஞ்சம் வித்தியாசமானது. இது நிதி சம்பந்தமான ரிஸ்க் பற்றியது. மருந்துக்கும் Oracle, JAva, C, C++ எல்லாம் கிடையாது (அதுவாக இருந்தால் அடிச்சு ஆடிடுவோமில்ல...) நிறைய கணிதம், புள்ளியியல், நிதி நிர்வாகம்.. அனைத்திலும் கேள்விகள் இருந்தது..

ஐடி தேர்வுகளில் பெயிலானால் மறுநாளே (அடுத்த அட்டெம்ப்ட்) எழுதிடலாம்.. இந்த தேர்வு வருடா வருடம் நவம்பர் மாதம் மட்டுமே.. இந்த வருடம் தவறினால் அடுத்த வருடம் நவம்பர் தான்

தேர்வு எழுத கணிணி கிடையாது. பேப்பர், பென்சில் (பேனா கூட கிடையாது), கால்குலேட்டர் மட்டும். தேர்வு மொத்தம் 5 மணி நேரம்.

காலையில் 9 - 11:30 வரை. மதியம் 1-3:30 வரை.

எனக்குள் .. ஒரு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் அக்கறையும் பதற்றமும் இருந்தது. இரண்டு நாள் முன்னாடியே பென்சிலகளைத் தேர்ந்தெடுத்து சீவி.. சாமி (மற்றும் அம்மா) படம் முன்பு வைத்து விட்டேன். கால்குலேட்டரும் சாமியிடம்..

தேர்வுக்கு முதல் நாளிரவு 1 மணிவரை படித்து காலை ஐந்து மணிக்கே எழுந்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிவிட்டு.. 7 மணிக்கே.. தேர்வுமையத்துக்குக் கிளம்பிச் சென்றுவிட்டேன்..

என்னையும் சேர்த்து மொத்தம் 22 பேர் தான் இந்த மையத்தில் தேர்வு எழுதினர். நன்றாகவே எழுதியுள்ளேன்.. உலகம் முழுவதும் மொத்தம் 10000 பேர் எழுதுவர். பொங்கல் சமயத்தில் தேர்வு முடிவு வரும். கண்டிப்பாக பாஸ் செய்வோம் என்று நம்பிக்கையுள்ளது..


(B.Sc, M.Sc) கணிதம் படித்து விட்டு ஐடி-யில் இருப்பவர்களுக்கு இந்தத் தேர்வு ஒரு நல்ல திருப்பம் தரும். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்.. பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.. என்னாலான உதவிகள் செய்யத் தயார்..

Tuesday, August 28, 2007

56. என் நண்பனே.. நடராஜா.. !!

நியூ டெல்லி: ஆகஸ்ட் 30, 1989 அதிகாலை..


"நம்ம நடராஜ் ஆக்ஸிடெண்ட்லே இறந்துட்டானாம் டா..", இரவு முழுவதும் NIC யில் வேலை பார்த்து விட்டு வந்துவிட்டு.. காலையில் கதவைத்திறந்த என் நண்பன் சொன்னான்.

"எந்த நடராஜு? நம்ம நடராஜா? எப்படி? என்ன ஆச்சு?", வழக்கமாகவே கதை விடும் நண்பன் சொல்வதும் பொய்யாக இருக்கக் கூடாதா என ஒரு ஆதங்கத்துடனும் அழுகையுடனுமே கேட்டேன்.

"ஆமாம்.. நம்ம நடராஜே தான்.. வேலூர்-லே தான்.. நேத்து சாயங்காலம் .. லைப்ரரி புக் ரிடர்ன் செய்துட்டு வரும் போது.. ஃபுட் போர்ட்லேருந்து ஸ்லிப் ஆகி விழுந்துட்டானாம்..."

"பின் சக்கரம் வயித்துல ஏறிடிச்சாம்.. நேத்து நைட் கம்ப்யூட்டர்ல மெட்ராஸ் NIC லேருந்து தட்டிக்கிட்டே இருந்தானுங்க... ராத்திரி முழுக்க அழுது தீத்துட்டேன்..."

ரொம்ப சோகமாயிட்டேன்.... நான் என் நிலைக்கு வர சில வாரங்கள் ஆயிடிச்சி..

oOo oOo

இறக்கும் போது நடராஜுக்கு 26 வயசு.. கை நிறய்ய சம்பளம் வாங்கும் வேலை.. அப்பொழுதுதான் தொடங்கப்பட்டு மாவட்டம் தோறும் கிளை பரப்பிக் கொண்டிருந்த மத்திய அரசின் NIC (National Informatics Center) (ராஜீவ் காந்தியின் கனவு நிறுவனம்) யில் வேலூர் மாவட்டத்தில் தலைமைப் பதவி.. மாவட்ட கலெக்டரின் அறைக்கு அடுத்த அறை அவன் அறை தான்.. எப்பொழுது வேண்டுமானாலும் கலெக்டரைச் சந்திக்கலாம்..

காதலித்தவளையே கல்யாணம் கட்டி அன்றுடன் 126 நாளாகியிருந்தது...

ஆடி மாதம் கழிந்து குடித்தனம் வைக்கலாமென்று மயிலாடுதுறையிலிருந்து ஆசை மனைவியும் குடும்பத்தாரும் சீர் செனத்திகளோடு முதல் நாளிரவு தான் வந்திறங்கியிருந்தார்கள்... கொண்டு வந்த மூட்டைகளின் கட்டு கூட இன்னும் பிரிக்கவில்லை....

மாப்பிள்ளை உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி கட்டி வாங்கிக் கொண்டுச் சென்றார்கள்...

oOo oOOo

நடராஜ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்....

நான் B.Sc and M.Sc கணிதம் படிக்கும் போது எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல படிப்பாளி.. Calculus, DIfferential Equations, Classical Mechanics எல்லாம் தலைகீழ் பாடம்.

B.Sc., கணிதத்தில் கல்லூரியில் முதலிடம்.. M.Sc., கணிதத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாமிடம்.. எது கேட்டாலும் பொறுமையாக்ச் சொல்லித் தருவான்..

M.Sc முடித்துவிட்டு.. அண்ணாமலையில் PGDCA .. பெங்களூர் IISc (Indian Instititute of Science)-ல் Master of Engineering (Computer Science) முடித்தவர். அந்தக் காலத்தில் மாயவரத்தில் ME என்பதெல்லாம் ரொம்ப அதிகம்.. நிறைய்ய பேர் பார்க்க முடியாது.. ஊருக்கே ஒருத்தர் ரெண்டு பேர் தான் இருப்பாங்க...

oOo oOo




1986, 1987 ஜூனில் நாங்களெல்லாம் வேலையில்லாப் பட்டதாரிகள்.. சொல்லிக்கொள்ளும் படியான நிரந்தர வேலையில்லா விட்டாலும் படித்த கணிதம் சோறு போட்டது. +2 மற்றும் B.Sc மாணவ/மாணவிகளுக்கு டியூஷன் எடுத்துக் கொஞ்சம் டீ/சிகரெட் குடிக்கக் காசு பார்த்துக் கொண்டிருந்தோம்



1987 ஜூலையில் நான் IIT Kharagpur M.Tech படிக்கச் செல்ல மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயிலேறிக் கொண்டிருந்த நேரம்.. அரக்கப் பரக்க ஓடிவந்து..

"இங்க வா மாப்பிள்ளை... இந்தா இதுல 300 ரூபா இருக்கு.. இப்பத்தான் டியூஷனில் வசூலாச்சு.. நீயும், வெளியூர்/வெளிமாநிலம் போயி IIT-ல படிக்கப் போற... படிச்சு எப்படியும் பெரிய ஆளாயிடுவே.... எங்களையெல்லாம் மறந்துராதரா..."


கட்டித் தழுவி அன்போடு சொல்லிச்சென்ற நண்பன் முகம் மறக்கவில்லை.. அவன் சொல்லிச் சென்ற சொற்களும் மறக்கவில்லை....

அவன் போய்ச் சேர்ந்து தான் இன்றோடு 18 வருடங்களாயிடிச்சி... அவன் நினைவுகள் மட்டும் எப்பொழுதும் மடை திறந்த வெள்ளமாக.... வற்றியதேயில்லை...