Saturday, October 31, 2009

86. ஸ்டைலு ஸ்டைலு தான் !!


போன வாரம் மயிலாடுதுறை சென்றிருந்த பொழுது ஒரு தோட்டத்தில் வேலை பார்ப்பவர் குடும்பத்துப் பையனைக் கிளிக்கிய போது..

“எறும்பு கிறும்பு கடிச்சிரும்... ஜட்டியப் போடுறா “ ந்னு நான் சொன்னதை ரொம்ப உன்னிப்பாக் கேட்டுக்கிட்டான்..

oOo

தீபாவளிக்கு மறுநாள் கோவை செண்ட்ரல் தியேட்டரில் இரவுக்காட்சி ஆதவன் பார்க்க சென்றிருந்தேன். தியேட்டர் ஆடிட்டர் மூலமாக வாங்கியதில் 80 ரூபாய் டிக்கெட் எண்பதுக்கே எங்களுக்குக் கிடைத்தது. மற்றவர்களுக்கு எப்படியும் அதிக விலைக்கு விற்றிருப்பார்கள்.. இருந்தாலும் காட்சி “ஹவுஸ்ஃபுல்”.. இருக்கிற விலைவாசியில் எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ


oOo

ஒரு நாள் காலை எழுந்த வுடனேயே ஷாக் !!

காலை 4 மணிக்கு எழுந்த போது பால்காரர் இன்னும் வந்திருக்கவில்லை. அவர் எப்பொழுதும் 5 மணிக்கு மேல் தான் வருவாராம்..

காபி குடிக்கும் ஆசையை அடக்க முடியவில்லையாதலால் என்ன செய்யறது என்ற கேள்விக்கு ..”சட்ட்டையைப் போட்டுக்கிட்டு இப்படியே.. இரட்டைத் தெரு முனை வரைக்கும் போயிட்ட்டு.. அங்க இருக்குற கடையிலே பால் (ஐஸ் பால் தான்) வாங்கிட்டு வந்துரு” என்று யோசனை சொன்னார் அப்பா..

கைலியுடனும் நேத்துக் கழட்டிப் போட்ட சட்டையில் இருபது ரூபாய் (ஒரு லிட்டர் தானே வாங்கப் போறோம் .. இதுவே அதிகம் என்ற நினைப்பில்...) வைத்துக் கொண்டு கடைக்குச் சென்றால்.. அவன் சொன்னது...”அண்ணே ..இப்பல்லாம் பால் லிட்டர் 28 ரூபாய்ணே...”


”அடப்பாவி.. போன தடவை வந்த போது 10 ரூபாயோ.. 12 ரூபாயோ சொன்னியே ராஜா”

“ஆமாண்ணே.. சொன்னேன்.. அது அரை லிட்டர் விலைண்ணே....”

காலை 4:30 மணிக்கு இது எனக்கு பெரீய்ய ஷாக் தான்..

நான் கடைக்கெல்லாம் போயி எதுவும் வாங்குறதில்லை.. அப்படியே வாங்கினாலும் “நீங்க எடுத்துட்டுப் போங்கண்ணே.. நான் அப்புறம் அண்ணன் கிட்டே பணம் வாங்கிக்கிறேன்” என்று அனுப்பி விடுவார்களாதலால் எதுவும் காசு விவரம் கேட்டுக் கொள்வதில்லை.. நமக்குத் தெரிஞ்ச ஒரே விலை வாசி நிலவரம் “கோல்ட் ப்ளேக் கிங்ஸ் ரூ 4.50 மட்டும் தான்” (இதுக்கெல்லாம் போயி அண்ணன் கிட்டே காசு கேக்காதே ராஜா.. நானே தர்றேன்.. வாங்கிக்க என்று சொல்லிக் கொடுத்து விடுவதால்..)


இந்த விலைவாசியிலே மக்களெல்லாம் எப்படித்தான் குடும்பம் நடத்தறாங்களோ...

oOo

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவில் .. நம்ம ஊரிலேயே ஒரு படம் பார்க்கலாமென்று ஊரில் உள்ள ஒரு பிரபல தியேட்டருக்குச் சென்றிருந்தேன். கூட வந்தவர் மயிலாடுதுறையிலேயே உள்ள பிரபல அரசியல் பிரமுகர். ரொம்ப பழக்கமானவராதலால்.. “படம் போட்டிருப்பான்.. பரவாயில்ல வாங்க தம்பி..” என்று அன்புடன் அழைத்துப் போனார்.

படம் ஆரம்பமாகியிருந்தது.. தியேட்டர் கதவுகளும் மூடியிருந்தன... வாசலில் “பேராண்மை” போஸ்டர் ஒட்டியிருந்தது.. மணி எப்படியும் இரவு 10:30 கிட்டே இருக்கும்...

எங்களை ’கேட்’ டருகில் பார்த்தவுடன்... மானேஜர் ரூமிலிருந்து ஆள் வந்து திறந்து விட்டார்..

“டிக்கெட் எல்லாம் ஒண்ணும் வேணாம் சார்.. எங்க வேண்டுமானாலும் போய் உட்கார்ந்து பாருங்க சார்..”

என்றவரை வற்புறுத்தி டிக்கெட்டு கிழிக்கச் சொன்னதுக்கு.. ரொம்ப குறைந்த விலைக்குச் சொல்லி பவ்யமாக வாங்கிக்கொண்டார்..

“படம் வேணும்னா.. ஆரம்பத்துலேருந்து போடச் சொல்லட்டுமா சார்..” என்றவரிடம்,

“அதெல்லாம் வேண்டாம்” என்று அன்பாக மறுத்துவிட்டு..

தியேட்டருக்குள் சென்றால்.. உள்ளே எங்களையும் சேர்த்து மொத்தம் 25 பேர்தான்.

படம் “பேராண்மை” இல்லை என்று புரிந்தாலும் .. இடைவேளையில் பேர் கேட்டுக்கொண்டேன் .. “ஈரம்”. பட்ம் நல்லாருந்தது..


நல்ல படம்.. தியேட்டரில் இன்னும் கூட்டம் வந்திருக்கலாம்.. நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டாமா?

oOo

திரும்பி ஊருக்குப் போகக் கிளம்பி சென்னை வந்த பொழுது.. நெருங்கிய உறவினர் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது.. உறவினர் வீட்டில் பேசிக் கொண்டிருந்தவர் முகம் பரிச்சயமாகத் தெரிஞ்சது..

“உங்களை எங்கியோ பார்த்த மாதிரி இருக்குங்களே...”

“ஆமாம் சார்.. பேரு விஜயசாரதி.. சன் டீவீயிலே நீங்கள் கேட்டவை ந்னு ப்ரொகிராமெல்லாம் பண்றேன் சார்” அப்படீன்னார்..

”அப்படிங்களா.. ரொம்ப சந்தோஷம்.. இப்ப நினைவுக்கு வந்திடிச்சி”

"...."

”நீங்க கூட ஏதோ படத்துல ஹீரோவா நடிச்சீங்க போலருக்கே.. இருங்க பேர் சொல்றேன்” என்று 5 வினாடிகள் யோசிச்சு.. “ஹாங்... பவளகொடி தானுங்களே..”

அப்படீன்னு ஒரு போடு போட்டதில்.. அவரே அசந்திட்டார்...

”எப்படிங்க உங்களுக்கு நான் நடிச்ச படம் தெரிஞ்சுது? அந்தப் படம் ஒண்ணும் பெரிசா ஓடலீங்களே” என்று ஆச்சர்யமாகக் கேட்டவரிடம்..

“ஒண்ணுமில்லீங்க .. அதைத் தயாரிச்சி டைரக்ட் செஞ்ச சரவணன் நமக்கு ரொம்ப நண்பருங்க” என்று சொன்னதில் ஆசுவாசமடைந்து அப்புறம் 30 நிமிடங்கள் நிறைவாகப் பேசிக்கொண்டிருந்தார்..






Wednesday, July 29, 2009

85. நாம இந்த யோசனை சொன்னா விகடன் கேக்குமா?

இந்த மினிஸ்டர் ராஜா கூட பெரிய்ய ரோதனையாப் போச்சி.. அந்த ஆளூ எல்லா ஊழலும பண்ணுவாராம் ஆனால் அதை விகடன் மாதிரி பத்திரிக்கைகள் பிரசுரிக்கக் கூடாதாம்.

நியாயமான ஆளா இருந்தால் ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டையும் நியாயமான முறையில் எதிர்த்து வெளியில வரணும். அப்படியில்லியா, பொது எம்.பி பதவியையே ராஜினாமா பண்ணிட்டு குடும்பத்தோட எங்கியாவது போய் செட்டிலாயிடணும். ரெண்டும் இல்லாமல் கோர்ட்டுக்குப் போயி “என்னக் கிள்ளீட்டான் சார்...” ரேஞ்சுக்குப் போயி தடை வாங்கறது அழுகுணி ஆட்டம். இதெல்லாம் ஒரு delay tactics தான். எப்படியும் தீர்ப்பு வர ஒரு ஆறு மாசமாச்சும் நிச்சயமா ஆகும். அது வரைக்கும் விகடன் வாயைக் கட்டி வெச்ச மாதிரி ஆச்சி. அப்படியே தீர்ப்பு பாதகமா வந்தால் மேல் முறையீடு இருக்கவே இருக்கு... ஒரு 5 வருஷம் இப்படி ஓட்ட முடியாதா என்ன?

இந்த மாதிரி ஊழல் பெருச்சாளிகளை விகடன் தோலுரிப்பதை ஒரு சராசரி பொதுஜனமாக நான் வரவேற்கிறேன்..

இராஜா இப்படி அழுகுணி ஆட்டம் ஆடினால், சட்டத்துக்கும் நீதிக்கும் பங்கம் வராமல் விகடன் அதை எப்ப்டி எதிர் கொண்டு ராஜா பற்றிய ஊழல்களைப் தொடர்ந்து மக்களுக்குத் தருவது? அதுக்குத் தான் இந்த ஐடியா !!





இப்போ குங்குமம் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க அதனுடன் இலவச இணைப்பாக மஞ்சள் பொடி, மசாலாத் தூள், சிந்தால் சோப்பு, நகப் பாலீஷ் போன்ற பொருட்கள் தரவில்லையா? இது போன்று மற்றொரு தயாரிப்பாளர் தயாரிக்கும் பொருட்களை ஒரு பத்திரிக்கை இலவசமாகக் கொடுக்கும் போது அதனால் ஏற்படும் பாதகங்களுக்கு பத்திரிக்கை பொறுப்பேற்காது. ஏனென்றால் அது அவர்கள் தயாரிப்பே இல்லை. மற்றபடி அது இலவசமாகவே கொடுக்கப் பட்டது. அதனால் no liability.

அது போல வேறொரு பதிப்பகம் (இந்தப் பதிப்பகம் தமிழ்நாட்டிலென்ன.. இந்தியாவிலேயே கூட இருக்க வேண்டாம்.. ஏதாவது வெளிநாட்டில் இருக்கலாம். அதனால் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாது )தொடங்கி ராஜாவின் ஊழல்களை அந்த புத்தகத்திலே (ரொம்ப பெரிசு வேண்டாம்.. ஜூவியிலே ஒரு 4 பக்கம் வர்ற மாதிரி ஒரு மினி புத்தகமாகக் கூடப் போடலாம்.. நம்ம கிழக்குப் பதிப்பகம் பத்ரியைக் கேட்டால் நிறைய ஐடியா தருவாரு!!) பிரசுரிச்சி அதை நம்ம ஜூனியர் விகடனுடன் இலவசமாகவே தரலாம்.


அது நம்ம ராஜா வாங்கியிருக்கிற தடைக்கு எதிராக வராது. ஏனென்றால் அந்தப் இலவச இணைப்பு விகடன் பிரசுரமே இல்லை... அது இலவச மசாலாப் பொடி மாதிரிதான்.. அதனுள் இருக்கும் செய்திகளுக்கு விகடன் பொறுப்பாகாது.. சட்டத்தை மதித்த் மாதிரியும் இருக்கும் .. சமுதாயக் கடமை ஆற்றிய மாதிரியும் இருக்கும்...

அதிக பட்சம் அந்த பதிப்பகம் அல்லது புத்தகத்தைத் தடை செய்வாங்க. அதுக்கு ஒரு ஆறு மாசம் ஆகும். நாமளும் சட்டத்தை மதிச்சி வேறு பதிப்பகம் வேறு நாட்டில் தொடங்கி வேற புத்தகம் போட்டு இலவச இணைப்பாத் தந்தாப் போச்சி.. எல்லாம் இராஜா கத்துக் கொடுத்த வழிதான்.. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும் !!


எப்பூடி???

திட்டாதீங்கப்பா !! இந்த திராவிட கட்சிகளோட சேர்ந்து சேர்ந்து நமக்கும் பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி...



பின் குறிப்பு: நம்ம கிட்டே இனிமேல சினேகா போட்டோ தீர்ந்து போச்சி. நம்ம அச்சமுண்டு அச்சமுண்டு டைரக்டர் அருண் வைத்தியநாதன் கிட்டே தான் கேக்கணும் போல இருக்கு.. நாகை சிவா, கோச்சிக்காதீங்க.. இந்தப் பொண்ணும் அசப்புல சினேகா மாதிரி தான் இருக்கு !! அடுத்த பதிவு வர்ற வரையில பொறுத்துக்கோங்க !!!!!

Sunday, July 26, 2009

84. அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்

அண்ணலும் நோக்கினார்..அவளும் நோக்கினாள்” என்ற கம்பரின் வரிக்கு, புலவர் கீரன் (இவர் மயிலாடுதுறைக்காரர் தெரியுமோ?) அவர்கள் தந்த ஒர் அருமையான விளக்கத்தை “இதயம் பேத்துகிறது” வலைப்பதிவில், ஜவஹர் இட்டிருந்தார்.

“அண்ணல் நோக்கினான்;அவளும் நோக்கினாள்” என்று அவளுக்கு மட்டும்தானே உம் போட வேண்டும்? என்ற ஒரு அருமையான கேள்வியை முன் வைக்கிறார். பின்னர் அதற்கு ஒரு விபத்துக் காட்சியை விளக்கிவிட்டு இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால் இரண்டு உம்மைகள் என்ற சொல்கிறார்.

இரண்டு உம் வருகிற இடங்கள் எல்லாமே-தற்செயலாக நிகழ்பவை. அதாவது ஆக்சிடேண்டலாக நிகழ்பவை. ராமனும் சீதையும் திட்டமிட்டு சைட் அடிக்கவில்லை என்பதைக் காட்டவே கம்பர் இரண்டு உம் போட்டார்.

நியாயமான வாதம். கொஞ்சம் சிந்திக்க வேறு செய்தது.

கம்பராமாயணத்தில் நான் ஒன்றும் பெரிய மேதையில்லை. ஆனால் என் தமிழாசிரியர் முனைவர் இராமபத்ராச்சாரியார் அவர்கள் “கம்பன் கவி இசைச்செல்வர்” என்ற விருது வாங்கியவர். கம்பராமாயணத்தைத் தேனொழுகக் கவிபாடிப் பாடம் நடத்துவார். கம்பனின் “இந்த இப்பிறவிக்கு இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன்” என்ற வரிக்கு இரண்டு மணி நேரம் கூட வியாக்கியானம் சொல்வதில் வல்லவர். அவரிடம் படித்த எனக்கு, புலவர் கீரனின் விளக்கம் யோசிக்க வைத்ததில் வியப்பேதுமில்லை.

சொல்லப்போனால், மயிலாடுதுறையில் புலவர் கீரன் இல்லமும் என் தமிழாசிரியர் இல்லமும் அடுத்தடுத்த தெருக்கள் தான். கீரன் இருந்தது திருஇந்தளூர் வடக்கு வீதி, என் தமிழாசிரியர் இருப்பது திருஇந்தளூர் சன்னதித் தெரு.

சரி “அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்” என்ற வரிக்கு வருவோம்.

சாதாரணமாக பெண்கள் ஆண்களை நோக்கிவதில் ஒரு டெக்னிக் இருக்கும். டிஜிட்டல் காமிரா மாதிரி இமைக்கும் நேரத்தில் பார்த்து விடுவார்கள். அந்த ஒரு கணத்திலேயே தான் பார்த்த ஆடவனைப் பற்றிய (தனக்குத் தேவையான) விவரங்களைக் கண்டுவிடுவார்கள். முன்பின் அறியாத ஆடவனிடம் எப்பொழுதும் நேருக்கு நேர் பார்வையைத் தவிர்த்து விடுவார்கள். தான் பார்ப்பதை அந்த ஆடவன் பார்த்துவிட்டால் அடுத்த split second லேயே பார்வையை வேறெங்காவது திருப்பிவிடுவார்கள்.. (எத்தனை தமிழ் சினிமா பார்த்திருப்போம் !!)


அதுவும் சீதை அரசனின் மகள்; சுயம்வரத்துக்குத் தயாராயிருப்பவர். தனியாக மாடத்தில் நின்று கொண்டிருந்திருக்க மாட்டார். அப்பவும் தோழிகள் அருகில் இருந்திருப்பார்கள்.

இராமனும் தனியாக வரவில்லை. முனிவர் விஸ்வாமித்திரருடனும் இளவல் இலக்குவனுடனும் வந்திருக்கிறார். அப்படியிருக்கும் போது இருவரும் மெய்மறந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருக்க
முடியாது. அது எப்படியும் இருவரின் தகுதிகளுக்கும் உகந்ததல்ல. விஸ்வாமித்திரர் போன்ற ஒரு கோபக்கார முனிவருடன் வரும் போது இராமரும் அப்படிச் செய்யத் துணிந்திருக்க மாட்டார்.

அப்புறம் என்னதான் நடந்திருக்கும்?

oOo


இந்த உரையாடல் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று..


“அந்தாளை நீ பாத்தியா?”
“பார்த்தேன் டா”
“இது அந்தாளுக்குத் தெரியுமா?”
“அவரும் பார்த்தாருடா”

இதில் வந்த ”அவரும்” என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “அவர் என்னைப் பார்த்தார்” என்ற பொருள் மட்டுமா? “நான் அவரைப் பார்த்ததை அவர் பார்த்தார்” என்ற பொருள் வருகிறதில்லையா? இந்த இடத்தில் ”அவர் இவரைப் பார்த்தார் ” என்ற நேர் பொருளை விட “அவர் என்னைப் பார்த்துவிட்டார்” என்று உணர்வு பூர்வமான ஒரு மறைபொருள் தான் மிக முக்கியமானது.


அது போலத்தான் இராமரும் சீதையும் பார்த்துக் கொள்கிறார்கள்.. சீதை தன்னைப் பார்த்ததை அண்ணலும் நோக்கினார்; அது போல் அண்ணல் பார்த்ததை சீதையும் நோக்கினாள்; என்ற பொருள் வருகிறதல்லவா?
இதில் பார்வைகள் சந்தித்துக் கொள்வது split of a second தான். ஆனால் அந்தப்
பார்வைகளின் பொருள் “நீ என்னை பார்த்ததை நான் பார்த்துவிட்டேன்” என்று இருவர் மனதிலும் தோன்றிய எண்ணங்கள் பரிமாறப்பட்டன என்பது தான் இங்கு சிறப்புச் செய்தி.

oOo
ஒன்பதாவது படிக்கும் போது தமிழ் இலக்கணத்துல தற்குறிப்பேற்றணி என்ற ஒரு அணி பாடமாக வரும். அதாவது “இயற்கையாக நடக்கும் ஒரு காட்சியின் மேல் கவிஞன் தன் சொந்தக் குறிப்பை ஏற்றிக் கூறும் அழகு”. இதற்கு பாடப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டு கூறப்பட்டிருக்கும். தமிழ்த் தேர்வுகளில் நான் இதற்கு கம்பராமாயணச் செய்யுள் தான் எப்பொழுதுமே எடுத்துக்காட்டாக எழுதுவேன்.

தேர்வு நேரத்தில் எல்லா விடைத்தாள்களையும் திருத்தும் தமிழாசிரியர் வழக்கமான சிலப்பதிகார எடுத்துக்காட்டே படிச்சுப் படிச்சு போரடிச்சிப் போயிருக்கும் போது நான் வித்தியாசமாக கம்பராமாயணம் எழுதியதைப் படிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு முழு மதிப்பெண்கள் போட்டு விடுவார்.


முனிவருடனும், இலக்குவனுடனும் ராமபிரான் மிதிலை நகரத்துக்கள் நுழைகிறாராம். அப்பொழுது மிதிலா நகரத்துக் கொடிகள் காற்றில் மிக வேகமாக அசைகின்றன. அதற்குப் பொருளாக கம்பர் இப்படிக் கூறுகிறார். “இந்த மிதிலா நகரம் செய்த தவத்தின் விளைவாக இலக்குமி (செய்யவள்) தேவியே இங்கு வந்துப் பிறந்து உனக்காகக் காத்திருக்கிறார். அவளை மிகவும் காக்க வைத்துவிடாதே.. தயவு செய்து விரைந்து வா (ஒல்லை வா !!) என்று அழைப்பது போல மிதிலா நகரத்துக் கொடிகள் அசைகின்றன” என்று தனது குறிப்பைக் கம்பர் கொடியசைவின் மேல் ஏற்றிக் கூறுகிறார்


மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்த கடிநகர், கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வாவென்று அழைப்பது போன்றதம்மா !!

சீமாச்சுவின் மனசாட்சி: கம்பராமாயணத்துக்கெல்லாம் வியாக்கியானம் பேசி மாட்டிக்காதே.. அதுக்கெல்லாம் தான் மாதவிப்பந்தல் கேயாரெஸ் இருக்காரே.. அவர் எழுதறதைவிடவா சுவாரசியமா எழுதப்போறே.. இதுல சினேகா மட்டுமில்லாம மீனா படம் வேற !! அவர்கிட்ட மாட்டத்தான் போறே.. இருக்குடீ உனக்கு !!

Wednesday, July 22, 2009

83. தொண்ணூத்தியொண்ணு + ஒண்ணு


Monday, July 13, 2009

82. விஞ்ஞானமும் தேரோட்டமும்

மயிலாடன் என்பவர் விடுதலை இதழில் எழுதிய “விஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர, கடவுள் சக்தியால் அல்ல என்பதையாவது ஒப்புக்கொண்டால் சரி!” என்ற வரி ரொம்ப யோசிக்க வைத்தது. மயிலாடன் எவ்வளவு பெரிய்ய விஞ்ஞானி என்பது தெரியாது. எல்லாவற்றையும் (அவர் பகுத்தறிவு கொண்டு பார்க்க விரும்பாததைத் தவிர்த்து) அவர் கொள்கையில் பார்ப்பவர் என்பது மட்டும் புரிகிறது.

oOo

எதையுமே ஆழ்ந்து கற்றவர்க்குத்தான் தெரியும் அவர் இன்னும் கற்க வேண்டியது உலகளவு என்பது. படிக்கப் படிக்கத் தான் வரும் நமக்குத் தெரியாதது நிறைய என்ற பயம். அந்த பயம் வரவில்லையென்றால் போதுமான அளவு கற்கவிலை என்று பொருள்.


இரண்டாம் வகுப்பு படிக்கும் பையனிடம் கேளுங்கள் “6 ல் 4 போனால் எவ்வளவு?” என்று? உடனேயே சொல்லிவிடுவான் “2” என்று. அவனிடமே “4ல் 6 போனால் எவ்வளவு?” என்று கேட்டுப்பாருங்கள். “போகவே போகாது .. உனக்கு கணக்கே தெரியவில்லை” என்று சொல்லிவிடுவான். அவனளவுக்கு அது தான் சரி





அது போல எல்லாவற்றுக்குமே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து உலகம் நகைக்கும். நீங்கள் படித்தது வெறும் இரண்டாம் வகுப்பு தான் என்றால் உங்களுக்குப் பாராட்டு நிச்சயம். அந்தப் பாராட்டு மட்டுமே உங்களை அறிவாளி ஆக்கிவிடாது. அதிக பட்சம் 3ம் வகுப்புக்கு பாஸ் செய்யப் படுவீர்கள். அது தான் தகுதி “உலகை வென்றுவிட்டோம்” என்று நினைத்தால் ஆபத்துதான்..


விஞ்ஞானம் என்பது இன்றும் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் துறை மட்டுமே. அதனால் தான் இன்னும் ஆராய்ச்சிக்கென்று பல பில்லியன் டாலர்கள் செலவழிக்கப் படுகிறது. இன்னும் கண்டுபிடிக்கப் படவேண்டியது எவ்வளவோ. இன்னும் நம்மால் செயற்கை இரத்தம் கண்டுபிடிக்கப் படவில்லை. மரணம் என்பதை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இது தான் மரணம் என்று சொல்லிவிட்டால்.. மரணம் வராமலிருக்க வழி கண்டுபிடித்து விடலாம். இன்னும் சொல்லத் தெரியவில்லை. மரணத்தின் விளைவுகள் மட்டுமே விவரிக்க முடிகிறது. எவ்வளவோ சொல்லலாம்.

கடலுக்கடியில் நாற்பதாயிரம் அடியில் தொலைந்துவிட்ட விமானத்தின் கையகல கருப்புப் பெட்டியை கண்டிபிடிக்க முடியும் என்று 10 நீர்மூழ்கிக் கப்பல்களையும் துடைப்பைக்கட்டை அளவு மானியையும் வைத்துக்கொண்டு கடலையே அளந்து தேடியவர்களைக் கேளுங்கள்..” இந்தப் பெட்டி கிடைக்க வேண்டுமென்று ஆண்டவனை எப்படியெல்லாம் பிரார்த்தித்தார்களென்று”.. அவர்களுக்குத் தெரியும் ஆண்டவன் அருளில்லாமல் அது கிடைக்காதென்று. முடிந்த அளவு முயற்சி செய்யவும், முயற்சி திருவினையாக்கும் என்று நம்பவும் மட்டுமே முடியும். ஆழ்கடலில் தேடிய அனுபவம் மட்டுமே கிடைக்கும். நம் எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்களையும் விட ஆண்டவன் படைத்த இயற்கை எவ்வளவு பெரியதென்ற ஞானம் மட்டுமே மிச்சம்.


விஞ்ஞானம் இன்னும் யுகங்களுக்கு முழு வளர்ச்சி அடையாது. அதுவரை காத்திருக்கவும் நம்க்கு வாழ்க்கை இருக்காது. அதுவரை ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து.. ஆக்க பூர்வமான சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. ”மக்கள் சேர்ந்து தேர் ஓட்டுகிறார்களா” அவர்கள் உணர்வுகளை மதித்து அவர்களுடன் சேர்ந்து தேர் இழுங்கள். இல்லையேல், ஒதுங்கியிருந்து உங்கள் வேலையைப் பாருங்கள். இது தவிர்த்து விஞ்ஞானத்தில் ஆர்வம் இருந்தால் விஞ்ஞானியாகத் தேர்ந்து ஏதாவது முயற்சி செய்யுங்கள். அரைகுறையாகப் பேசுவது நம் அறியாமையையே வெளிச்சம் போட்டுக்காட்டும்.






திருவிழாக்கள் எல்லாமே ஒரு team development activity தான். ஒரு குழு மனப்பான்மையை வளர்க்கும் ஒரு விஷயம்தான். அதை எல்லாரும் சேர்ந்து செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே. அதனால் தான் “ஊர் கூடித் தேரிழுக்க வேண்டும்” என்றார்கள். எந்தப் பணக்காரனும் என்னிடம் பணம் இருக்கிறது நான் தேரிழுக்கப் போகிறேன் என்று சொன்னதில்லை. அவன் ஒருவனால் மட்டுமே இழுக்கப் பட முடியக்கூடாதென்பதால்தான் தேர் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது.




“கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னது கூட... அந்த ஊரில் உள்ளவர்களிடம் ஒற்றுமையிருக்காதென்று சொல்லத்தான். ஊர் ஒற்றுமையாக இருந்தால் கோவில், தேரோட்டம், சமூகப் பணிகளில் நாட்டம் இவற்றைக் குறிப்பதாகவே நினைத்தார்கள் அந்தக் காலத்தில். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற எண்ணங்களை வளர்ப்பதற்காகவே இவையெல்லாம் வந்திருக்க வேண்டும்.




இறைபக்தி என்பது ஒரு moral driving force. அது இல்லாவிட்டால் உலகம் சுடுகாடாகிவிடும்.


கட்டுடைப்பதென்பது வெகு எளிது.. கோணல் மாணலான சிந்தனைகளே போதும். மனநோயாளிகளெல்லாமே தீவிரமான கட்டுடைப்பாளர்கள் தான். உண்மையான சோதனையென்பதே கட்டமைப்பதில் தான் இருக்கிறது.



கலைஞரைக் கேளுங்கள், திமுக என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் உள்ள சிரமங்களை. முடிந்தால் அது போன்று ஒரு கட்சியைத் தொடங்கி நாட்டுக்கு நல்ல ஆட்சியைத் தர முயற்சி செய்யுங்கள். அதற்கு ஒருவரின் வாழ்நாள் போதும் என்று தோன்றவில்லை. முடியலாம்..எல்லா சக்திகளும் உங்கள் அருகில் இருந்தால்..


கோவம் கொண்ட ச்சின்னக் குழந்தையைப் போல எல்லாவற்றையும் கட்டுடைக்கப் போகிறேன் என்று சமுதாய சீர்குலைவுக்கு வழி பார்க்காதீர்கள்..


விஞ்ஞானம் ஒரு மிகப் பயனுள்ள துறை, அது வளரவேண்டியது அவசியம். அது வளர்ந்தால் உலகத்தில் வறுமையை ஒழிக்க முடியும். எல்லோரும் நலமாக வாழ முடியும். அந்த அளவு முழு வளர்ச்சி பெற வேண்டுமென்பது தான் எல்லா விஞ்ஞானிகளும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். அப்துல் கலாமைக் கேளுங்கள். இதையேதான் சொல்வார். ஆண்டவன் சக்தியை விஞ்ஞானம் வென்றுவிட்டதென்ற வெற்றுவாதங்கள் விஞ்ஞானத்தை வளர்க்காது..

Saturday, June 27, 2009

81. பைத்தியக்காரன்..சாரு நிவேதிதா..ஜெயமோகன்..

இன்னிக்குப் பொழுது போகாமல் பதிவர் பைத்தியக்காரன் அவர்களின் ”சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்” என்ற பதிவுக்குப் போய்விட்டேன்.

முழுவதுமாக படித்து முடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது. சாரு பதிவு போட்ட மறுநாளே தலைவர் போட்டுவிட்டதால் எதையுமே refer பண்ணி எழுதின மாதிரி தெரியவில்லை.

தலைவர் மனதிலிருந்து அப்படியே கொட்டியிருக்கிறார். எவ்வளவு விஷயங்கள் மனதில் வைத்திருக்கிறார். எல்லாமே ச்சின்னச்சின்ன சண்டைகள்..பூசல்கள்.. மற்றும் நிகழ்ச்சிகள்.

தேதி வாரியாக “நீ இப்படி எழுதினே”..”அவர் இப்படி எழுதினார்” என்று ச்சும்மா புட்டுப்புட்டு வைக்கிறார்.

இவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வதென்றால் உண்மையிலேயெ பெரீய்ய்ய ஆள்தான். அவசியம் சந்திக்க வேண்டும். ஆனால் சிறு பத்திரிகைகளோ இலக்கியங்களோ நமக்கு அவ்வளவு பழக்கமில்லை. அதிகம் படித்ததில்லை.

சினிமா பத்திப் பேசலாம் என்றால் நம்ம ரேஞ்சே தனிதான்.. அதிக பட்சம் சிவாஜி, பசங்க, சந்தோஷ் சுப்பிரமணியம், அபியும் நானும் பேசலாம்.. மத்தபடி “கிம் கி டுக்” எல்லாம் நமக்குத் தெரியாது.. முடிஞ்சால் சந்திச்சுப்பார்ப்போம்.. பேச விஷயமா கிடைக்காது..



இவர் இப்படி எழுதியிருக்கிறாரே.. சாரு அப்படி என்னதான் எழுதியிருக்கார் அதையும்தான் பார்த்திடுவோமே என்று அங்கு போனால் அது பெரிய குப்பையாக இருந்தது...

தொடர்ந்து ஜெயமோகனையும் படித்தேன். ஜெயமோகனை எனக்கு மரத்தடி குழும நாட்களிலிருந்து தான் தெரியும். அங்கு அப்பொழுது குழுவினரின் கேள்விகளுக்கு ஜெயமோகனிடமிருந்து பதில் கேட்டுப் போட்டார்கள்.

அவர் பதில்களை அப்பத்தான் படித்தேன். நான் ஏதோ “அரசு பதில்கள்” லெவலுக்கு 2 வரி எழுதியிருப்பார்னு நெனச்சேன். மனிதர் ஒவ்வொரு கேள்விக்கும் 5 பக்கம் விரிவான பதில் எழுதியிருந்தார். ஒவ்வொரு பதிலிலும் ஒரு சின்சியாரிட்டி தெரிந்தது. அது முதல் ஜெயமோகன் பத்திகள் படித்திருக்கிறேன். நல்லா எழுதுகிறார் என்ற அபிப்பிராயம் இருந்ததால் அவ்வப்போது படிக்கிறதுண்டு..


இப்போ இவங்க ரெண்டு பேர் போடும் சண்டையைப் படிச்சால் குப்பத்து சண்டையை விடக் கேவலமாக இருக்கிறது. படிக்கும் போதே ஒரு அருவருப்பு வந்து விடுகிறது. “இவனுங்களுக்கு எழுத வேற விஷயமே கிடைக்கலையா? அல்லது விஷயஞானம் இல்லியா” என்கிற சந்தேகம் வந்திடிச்சி. .. இப்படி குப்பையை எழுதிக் கொண்டிருப்பதற்கு இவங்க பேசாமல் எங்கியாவது வேற வேலைக்குப் போகலாம்..


நானெல்லாம் பெரிய்ய இலக்கியவாதியெல்லாம் கிடையாது. எங்கியாவது நல்ல மேட்டர் இருந்தால் தேடிப்படிக்கும் ஒரு சராசரிக்குக் கீழான வாசகன். வீட்டுல மட்டும் நம்ம கலெக்‌ஷன்ல ஒரு ஆயிரம் தமிழ்ப்புத்தகங்கள் இருக்கு.. அப்பப்ப படிப்பதுண்டு.. வருஷா வருஷம் இந்தியா போகும்போது குறைந்த பட்சம் 10000 ரூபாய்க்காவது புத்தகம் வாங்கி வருவதுண்டு.. எதையாவது படிச்சால் ஏதாவது புதுசாத் தெரிஞ்சுக்கலாமா அப்படீன்னு மட்டும் தான் நினைப்பதுண்டு.. இன்னிக்கு இந்தக் குப்பைகளைப் படிச்சி மனசு குப்பையானது நான் மிச்சம்.


கன்னா பின்னான்னு திட்டத் தோணுது.. நாகரீகம் தடுக்கிறது.. இவனுங்க தான் எழுத்தாளர்கள் ..இவனுங்க எழுதுவதுதான் இலக்கியம் அப்ப்டீன்னு சொன்னா அதெல்லாம் எனக்குத் தேவையில்லை-ன்னு முடிவுக்கு வந்தாச்சி.. இதை ஒரு தனிப்பட்ட ஒரு சீமாச்சுவின் எண்ணமாகப் பார்க்காமல் ஒரு சராசரி வலை வாசகனின் எண்ணமாகப் பாருங்க..


இவங்களையெல்லாம் இனி ஜென்மத்துக்கும் படிக்கப் போறதில்லை.. வேற ஏதாவது உருப்படியாச் செய்யலாம் அப்படீன்னு முடிவுக்கு வந்தாச்சி..


குப்பைகள் !!!!


பி.கு: பதிவில் இருவரைக் குறிப்பிடும் போதும் விகுதிகள் மரியாதை குறைந்து விழுந்துள்ளன. அது என் தார்மீகக் கோபத்தில் வந்தது தான்.. ”அது எப்படி எழுதலாம்” என்ற கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை..

பி.கு: சாரு பத்தி எழுதும்போது சினேகா போட்டா போடாவிட்டால் எப்படி?

Monday, June 08, 2009

80. சூர்யா .. என்ன ஒரு பிரார்த்தனை !!

அமெரிக்காவிலிருந்து இந்தியா கிளம்பிப் போவதென்றால் ஒரு ஆறு வயசுக் குழந்தை ஆண்டவனிடம் என்ன பிரார்த்தனை செய்யும்?

மனைவி, குழந்தைகளெல்லாம் வெள்ளிக்கிழமை கிளம்பி இந்தியா போய்ச் சேர்ந்து விட்டார்கள். இன்னும் 10 வாரத்துக்கு வீட்டில் தனிமைதான். வருடா வருடம் இந்த நேரம் இப்படித்தான்.. 91 வயசு அப்பாவுக்கு பேத்திகளுடன் விளையாட மகன் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக கடந்த 9 வருடங்களாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன். எங்கேயும் அதிகமாக பயணிக்க மாட்டார்கள். மயிலாடுதுறையில் தாத்தாவுடன் இருப்பது மட்டுமே வேலை..


கடந்த சில மாதங்களில் இரண்டு விமான விபத்துக்கள் !! US Airways விமானம் ஒன்று பறவைகளால் சேதப்பட்டு ஹட்சன் நதியில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அது நியூ யார்க்கிலிருந்து எங்க ஊருக்கு வந்த விமானம் !!

சில தினங்களுக்கு முன் Air France விமானம் அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளாகி 228 பேர் பலியானார்கள் !!

இதெல்லாம் பள்ளிக்கூடத்தில் டீச்சர் குழந்தைகளிடம் பேசுவார்கள் போலிருக்கிறது.. சூர்யா படிப்பது ஒண்ணாங் கிளாஸ். அவளுக்கு இந்த விபத்துக்கள் பற்றித் தெரிந்திருக்கிறது..

ஊருக்குக் கிளம்புமுன் இதுதான் அவள் பிரார்த்தனை !!

Muthamma !! (இது வைத்தீஸ்வரன் கோயில் செல்வமுத்துக்குமரசுவாமிக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர்)..

Muthamma !! we are travelling to India today. Please make sure no flying birds gets into our plane's engine. Dont make our plane blast midway in the air !! Please save all of us !!

என்னிடம் திரும்பி.. “Daddy, please pray for us to Muthamma !!"

அந்தச் சின்ன மனசுக்குள் எவ்வளவு பெரிய பாரம் !!! ப்ளேனில் போகும் அந்த 22 மணி நேரங்களும் இந்த பயமே அவள் மனது முழுவதும் இருந்திருக்குமோ !!

இதெல்லாம் வகுப்பில் விவாதித்தே ஆகவேண்டிய விஷயமா !!


குழந்தைகளுக்கு இதெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை !! நானெல்லாம் ஒண்ணாம் வகுப்பில் வானத்தில் அண்ணாந்து பார்த்துத்தான் விமானம் பார்த்திருக்கிறேன். பயணித்ததில்லை !!


Wednesday, May 13, 2009

79. பதிவுலக கிசுகிசு - முடிஞ்சால் கண்டுபிடிங்க!!

பதிவுலகத்துல இருக்குற ”பழம்பெரும்” பதிவருக்கு சமீபத்தில் கிடைத்தது இரட்டை சந்தோஷமாம்..

தினமும் ஒரு பதிவு (பதிவுன்னு சொன்னா திட்டுவாருங்.. இடுகைன்னே சொல்லிக்கிறனுங்க !!) என்று போட்டுத் தாக்கிக்கிட்டிருந்தவருக்கு இப்போ நேரம் கிடைக்கிறதே கஷ்டமாயிடுமாம்.. அதிக வருகை மற்றும் பின் தொடர்பவர்கள் இருக்கும் பதிவாதலால் அதை மொத்த விலைக்குத் தருகிறாரா என்று ஒரு மூத்த பதிவர் வேறு விசாரித்து விட்டாராம். பேரம் படிந்தாலும் படியுமாம் !!













இப்போ தாய்க்குலத்துக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டதால்.. பதிவரை ஒரு கை பார்த்துவிடலாமென்றிருக்க்கிறாராம்.. ஏற்கெனவே அட்லாண்டா போனபோது “அடிபட்ட” அனுபவம் பதிவருக்கு உண்டாம்..!!


செய்தி கேட்டு அடிக்கடி கனவில் வந்த சிலேடைப்புலவர் “தம்பி .. இரட்டை வாழ்த்துக்கள் .. சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டாராம்..” அவர் இனி வேறு பதிவர் கனவில் வரலாமென்று போய்விட்டாராம்...

”சிலேடைப் புலவர் கனவுல வந்ததாலதான் இரட்டை சந்தோஷம்.. சாதாரண புலவர் வந்திருந்தால் இப்படி சந்தோஷம் இரட்டிப்பு ஆகியிருக்குமா” அப்படீன்னு ஒருத்தர் சீண்டினாராம்..



மனசு நிறைய்ய சந்தோஷங்களோடு..”பதிவாவது... உலகமாவது..” என்று பதிவர் அசிரத்தை காட்டுகிறாராம்..


அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த “இரட்டை வாழ்த்துக்கள்” ஐயா...


நீங்களும் சொல்லிக்கிடுங்க.. பதில் வர இரண்டு மாசமானாலும் ஆகும்... நமக்கு பதிலாங்க முக்கியம்.. நம்ம பதிவர் குடும்ப சந்தோஷம் தானே முக்கியம்”


சூதனமா விடையைக் கண்டுபிடிச்சு வாழ்த்துங்கோ மக்களே !!





பி.கு: இதுக்கும் சினேகாதானுங்களா? அப்படீன்னு கேக்குறவங்களுக்கு.. புன்னகை தாங்க பதில்.. புன்னகை இளவரசியின் ரசிகருக்கு வேற என்ன தெரியுமுங்க !!







Thursday, April 09, 2009

78. சூரியன் அட்டகாசம் தாங்க முடியவில்லை..

என் பொண்ணு சூர்யாவுக்கு 6 வயசு ஆகுது. வீட்டுல அவளுக்குன்னு ஒரு ரூம் இருக்கு. ரூமுக்குள்ள நுழையறதுக்கு அவள் ரூல்ஸ் எல்லாம் தெளிவா எழுதி பாஸ்வேர்ட் போட்டு வெச்சிட்டா. அதை ரூம் கதவுலயும் ஒட்டியாச்சு. யார் அவ ரூமுக்கு வர்றதாயிருந்தாலும் கதவுகிட்ட நின்னு பாஸ்வேர்ட் சொல்லிட்டுத்தான் நுழையணும்..




Soorya's Room

3 Basic Rules

  • No Punching
  • No Kicking
  • No Hitting
  1. First get a toy and when your finished put it back and get a new one.
  2. Clean up after your mess.
  3. Please say the password before you come at the door.

அங்கே தான் பிரச்சினையே. பாஸ்வேர்ட் ஒரு நாளைக்கு 8 தடவ மாத்திடுவா..

I changed my room's password. I can tell that to you only Daddy. Dont tell mami and Shanmuga..

இப்படி 10 நிமிஷத்துல எல்லார்கிட்டேயும் சொல்லிடுவா. பாஸ்வேர்ட் எல்லாம் strawberry pie, Sameeya is a good girl, Thanksgiving day, memorial day இப்படி ஜனரஞ்சகமாத்தான் இருக்கும்.

இதுவரைக்கும் ஒரு 100 தடவை பாஸ்வேர்ட் மாத்தியாச்சி..

போதாக்குறைக்கு என் ரூமுக்கும் ரூல்ஸ் எழுதி ஒட்டி பாஸ்வேர்ட் போட்டாச்சி.. இதுல பாருங்க ரூல்ஸ் எழுதின பேப்பர்ல தேதிபோட்டு அதுல டாடி கையெழுத்தும் வாங்கிட்டா. அதை கதவுலயும் ஒட்டிட்டா. யாரும் ”எனக்குத் தெரியாதே” ந்னு சொல்லித் தப்பிக்க முடியாது...



Daddy's Room

4 Basic Rules

  • No Hitting
  • No Punching
  • No Crying
  • No Kicking

Rules Include:

  1. Take 1 book at a time and after you finish put it back!
  2. Don't touch things that are on the office table. They are IMPORTANT
  3. Give a hug to him before you leave his room

என் ரூம் பாஸ்வேர்ட் இப்போ “சரணம் சரணம் சண்முகா சரணம்”.. நீங்க வர்றதுக்குள்ள மாறிடும்.


என் ரூம் ரூல்ஸ்-ல ஒண்ணு.. ”Give him a hug before you leave the room".


பக்கத்து வீட்டு கன்னட மாமி ரூமுக்குள்ள வந்துட்டு திணறிட்டாங்க. அவங்க வீட்டுக்காரை கோச்சுக்காம எனக்கு Hug தர முடியாதுங்கிறதால அவங்களுக்காக 10 வினாடிகள் ரூல்ஸ் தளர்த்தப்பட்டது..


இன்னும் கொஞ்ச நாள்ல வீடு கோட்டை மாதிரி பாதுகாப்பா இருக்கும். திருட்டுப் பய உள்ள நுழைய முடியாது.. அவனுக்குத்தான் பாஸ்வேர்ட் தெரியாதே...


நீங்களும் உங்க ரூமுக்கு ஒரு பாஸ்வேர்ட் வெச்சிருங்க...

Tuesday, April 07, 2009

77. கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாத் தப்பில்லை ..

இப்ப இருக்குற புள்ளைங்களப் பாத்தா நானெல்லா அம்மாஞ்சியாவே வளர்ந்துட்டேனோன்னு தோணுது. கீழே இருக்குற குழந்தையைப் பாருங்க. எவ்வளவு வெவரமா படிச்சுப் பாக்குது...

யாரெல்லாம் நமக்கு பர்த் டே கிஃப்ட் கொடுத்திருக்காங்க.. இன்னும் வரவேண்டியது பாக்கி எவ்வளவு இருக்கு எல்லாம் பாத்தே தெரிஞ்சுக்கிடுவாங்க !!!

எதா இருந்தாலும் படிச்சாவது கேட்டாவது தெரிஞ்சுக்கணும்னு நெனக்குதுங்க..

நானெல்லாம் 9ம் கிளாஸ் படிக்கிற வரைக்கும் ஃபோன்லயே பேசினதில்லை. மயிலாடுதுறையிலேயே எனக்குத் தெரிஞ்ச 4 - 5 வீடுகள்-ல தான் போன் இருந்திச்சி. அதுல 2 பேர் Telephones ல Junior Engineer ஒண்ணு மளிகைக்கடை, 2 டாக்டர்கள். அப்ப மயிலாடுதுறை போன் நம்பரெல்லாம் வெறும் 3 இலக்கங்கள் தான். இப்பத்தான் முன்னாடி 3 தடவை 2 சேர்த்து 6 இலக்கமாயிருக்கு. எங்க ஊரு பெரிய்ய சிட்டி மாதிரி (!!). இதுக்கு மேலே எங்க ஊரை நான் கிண்டல் பண்ணி எழுதினா அபிஅப்பா அடிக்க
வந்துடுவாரு..

வீட்டுல ஒரு தடவை சமையலறை கேஸ் தீர்ந்துப் போச்சி. கேஸ் வாங்கணுமுன்னா, அப்ப கூறைநாட்டுல (வீட்டுலேருந்து 2 கிலோமீட்டர்) இருந்த சிவசக்தி கேஸ் ஏஜென்ஸியில் ரிஜிஸ்டர் பண்ணணும். எனக்கும் சைக்கிள் ஓட்டத்தெரியாது. நடந்து போகணும் இல்லேன்னா யாராவது (சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச) பிரெண்ட்டுக்கு ஐஸ் வெச்சி சைக்கிள்ல டபுள்ஸ் போயிட்டு வரணும். அப்பதான் JE வீட்டு நடராஜ் புண்ணியத்துல
முதன் முதலில் ஃபோன்ல பேசினேன். அதையும் என் அம்மா நம்பாமல் என்னை பொடிநடையா இன்னொரு தடவ நடக்க விட்டுட்டாங்க.. (எங்க அம்மாவுக்கு அப்பல்லாம் ஃபோன்ல நம்பிக்கை கிடையாது). நேரில போய்ச் சொன்னாலும “கார்டை எடுத்து வெச்சுக்கிட்டானா? நீ கண்ணால பாத்தியா? அது நம்ம கார்ட் தானா?” அப்படீன்னு மூணு கேள்விக்கும் பதில் சொல்லணும்.


காலேஜ் படிச்சி முடிக்கும் வரை மொத்தமா 10 தடவை போனில் பேசியிருந்தால் பெரிய்ய்ய விஷயம் இப்போ என் மூணாவது பொண்ணு பொறந்து 2 மாசத்துல செல் போனில் “முகுந்தா முகுந்தா பாட்டு போட்டாத்தான் பால் குடிக்கிறா !!”


அத விடுங்க...

இப்ப போனவாரம் என் 6 வயசு பொண்ணு சூர்யா கூட பேசிக்கிட்டிருந்தேன்.. ரொம்ப சுவாரசியமா போன் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம்..

“Daddy... Mommy has a phone number, you have one, thatha and Patti also have phone numbers..

Does GOD give us all phone numbers when we are born?

Do you have my phone number? "


என்னமோ ஆண்டவனே பொறக்கும் போது எல்லாருக்கும் ஃபோன் நம்பர்
கொடுத்துடுவார்-னு நெனச்சிக்கிட்டிருந்திருக்கா.. !!

நியாயமான சந்தேகம் தான்.. அடுத்த தடவ நம்ம பழமைபேசி மணிவாசகம் மாமா வீட்டுக்கு வந்தா கேட்டுச் சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அவர் தான் இந்த ஆவிஅமுதா ரேஞ்சுல எல்லார் கிட்டேயும் பேசிக்கிட்டிருக்காரே !!!