Tuesday, January 25, 2011

113. ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட் தான்..

இரண்டு தினங்களுக்கு முன் தினமலரில் இந்தப் படத்தைப் பார்த்த போது நிஜமாகவே புல்லரித்தது.

பின்னணியில் தேசிய கீதத்தை ஆரம்பித்தவுடன் அப்படியே நின்று மரியாதை செலுத்தும் தாத்தாவுக்கு பணிவான வணக்கங்கள். அவரது செயலைப் பார்த்தும் கூட அதைப் பின்பற்றாமல் அதை வேடிக்கைப் பார்க்கும் (அல்லது தாத்தாவுக்குப் பாதுகாப்பு தரும்) காவல்காரர் கற்றுக் கொள்ளவேண்டியது அதிகம்..


இதைப் படித்து விட்டு சல்யூட் வெச்சாத்தான் தேசபக்தியா.. எங்களுக்கெல்லாம் எல்லாம் மனசில இருக்கு.. அப்படீங்கிற டயலாகெல்லாம் வரும் தான்.. இருந்தாலும் புரோட்டாக்கால் பின்பற்றுவதில் எப்பொழுதுமே ஓல்ட் ஈஸ் கோல்ட்தான்..

குடியரசுதின வாழ்த்துக்க்ள்..

Thursday, January 13, 2011

112. படித்ததில் சிரித்தது...



உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், தென் தமிழ்நாட்டின் பாசத்துக்குரிய தலைவர், பாண்டிச்சேரியின் ஆளப்பிறந்த மைந்தன், ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், 1987 ல் சமூகநீதி புரட்சி கண்ட புரட்சிவேந்தன், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் & பித்து கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, சத்ரிய வம்சத்தின் ஒளிவிளக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க...



1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்

--தினமலரில் ஒரு வாசகரின் பின்னூட்டம்.. படித்துவிட்டு சிரிக்கத்தான் முடிந்தது...


தமிழக போக்குவரத்துத் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமாம் !!

போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு: அதிமுக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரவில்லை; போனஸ் தரவில்லை. அதனால், உங்களுக்கு செலவு மிச்சமானது. 18 முறை டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க, தமிழக அரசு 1,254 கோடி ரூபாய் மானியம் அளித்தது.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தொழிலாளர்களுக்கு 195 கோடி ரூபாய் சம்பள உயர்வு வழங்கினோம். இப்போது நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், 520 கோடி ரூபாய் சம்பள உயர்வு வழங்கியுள்ளோம். ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கி வருகிறோம்.போக்குவரத்துக் கழகங்களில் முன்பு 700 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், தற்போது 1,000 கோடி ரூபாயாக உள்ளது.


1234 கோடி ரூபாய் மானியம் கொடுத்த பின்னாலும் 1000 கோடி ரூபாய் நஷ்டமாம.


அமைச்சர் நேருவுக்கு நிர்வாகத் திறமையில்லையென்றால் பதவியிலிருந்து ஒதுங்கிக்கொண்டு திறமையானவரிடம் பொறுப்பைக் கொடுக்கலாமே..

அமைச்சருக்கு சொந்தமாக இருக்கும் MJT Travels நிறுவனம் நல்ல லாபத்தில் ஓடுகின்றதாம். தொழிலாளர்களுக்கெல்லாம் போனஸ் கொடுத்துள்ளாராம். ..



Tuesday, January 11, 2011

111. சீமாச்சுவின் தாம்பூலம் - 11 ஜனவரி, 2011

இன்று தேதி 1/11/11 (மாதம்/நாள்/வருடம் அமெரிக்க பாணியில்).. இன்று என் 111 வது இடுகையை இடுவது குறித்து மிக மகிழ்ச்சி.. அருமையான பொருத்தம் என்று இன்று மதியம்தான் நினைத்தேன்.. கீழே யுள்ள படத்தில் பாருங்கள்.. அந்தக் குழந்தை எவ்வளவு குறிபார்த்து அடித்திருக்கிறது.. அதைவிட அந்த ஃபோட்டோ எவ்வளவு துல்லியமாக அந்த மஞ்சள் நீர் குழந்தையின் மேல் படுவதற்கு சற்று முன்பாக எடுக்கப்பட்டிருக்கிறது... அவ்வளவு சந்தோஷம் எனக்கு ... ஹிஹி..

பழமைபேசி ஐயா 750 இடுகைகளும் மற்றவர்கள் ஆயிரத்துக்கு மேலான இடுகைகளும் இட்டு கொண்டாடும் நேரத்தில்.. நான் இத்தனை ஆண்டுகளில் 111 அடித்திருப்பது ஒரு குட்டி சாதனை தான்.. எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க ..”எல்லாரும் வகைவகையான மளிகை சாமான்களையெல்லாம் வெய்யிலில் உலர்த்தியிருந்தாங்களாம்.. அதைப் பார்த்த ஒரு எலி தன் வாலை வெய்ய்யிலில் உலர்த்தியிருந்ததாம்..” அது என்னதான் வாலாயிருந்தாலும் எலிக்கு அது உடலின் ஒரு முக்கியமான பாகம் தானே.. என்ன நான் சொல்றது? வர்றவங்களெல்லாம் “111 க்கு வாழ்த்துகள் அண்ணே..” என்று ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டமாவது போடுங்ககண்ணே....


oOo oOo

அமெரிக்காவிலெல்லாம் காருக்கு நம்பர் ப்ளேட் வாங்கும் போது “Personalized Tags" என்று உங்களுக்கு விருப்பமான 7-8 எழுத்து கேட்டு வாங்கலாம். அதற்கு வருடத்துக்கு $30-$50 அடிஷனல் சார்ஜ் உண்டு.. கீழே பாருங்க.. கலிஃபோர்னியாக் காரர் ஒருவர் “EarthQuake" அப்படீன்னு போட்ட்டு ஒரு ப்ளேட் போட்டிருக்காரு..



அது போல சென்ற வாரம் ஒரு கார் ப்ளேட் பார்த்தேன்..அதில் “2XYNOXX" என்று போட்டிருந்தது அது பார்ப்பதற்கு Personalized Tag மாதிரி தான் தெரிந்தது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு உடனே புரிந்து விட்டது. பக்கத்திலிருந்த என் மகளிடமும் மனைவியிடமும் கேட்டேன்.. அவர்களுக்கு சட்டெனப் புரியவில்லை.. பிறகு நான் விளக்கியதும்..”ஆமாமில்லே..” அப்படீன்னு ஒத்துக்கிட்டாங்க.. உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் பின்னூட்டட்த்தில் சொல்லுங்கள்.. நிச்சயம் யாராவது சரியாகச் சொல்வீர்களென்று தெரியும்..

oOo oOo oOo


புகைவண்டிகள் போவதற்காக, கஷ்டப்பட்டு காசு செலவழிச்சி தண்டவாளங்கள் போட்டால் அதுல ஒருத்தரு எவ்வளவு ஈஸியால் சைக்கிளைத் தள்ளிக்கிட்டுப் போறாரு பாருங்க.. கொழுப்புதான்..

oOo oOo oOo

எனக்கு மிகப்பிடித்த சுயேச்சை வேட்பாளர் இவர். இவர் பெயர் ஷாம்லால் காந்தி.. இவர் அமிர்தசரஸில் இருக்கிறார். எல்லா தேர்தல்களிலும் சுயேச்சையாகப் போட்டியிடுவார். காந்தியின் கொள்கைகளைத் தவறாமல் இன்றும் பின்பற்றுகிறார். மக்கள் இவரை காந்தியென்றே அழைக்கிறார்கள். இன்றும் தன் கையாலேயே நெசவு செய்து கைத்த்றி ஆடைகளையே அணிகிறாரென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

சமீபத்திய (2009) தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு தன் கைவிரல் அடையாளமையையும் தன் வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பிக்கிறார் பாருங்கள்..



தேர்தலில் போட்டியிடும் போது வாக்கு சேகரிக்க சைக்கிளில் தான் செல்வார்.. அவருக்கு ஒரு முறை தேர்தலில் போட்டியிடும் போது ஒரு காவலர் பாதுகாப்பு தரப்பட்டது.. அந்த காவலரிடம் அப்பொழுது வாகன வசதியில்லை.. அதனால் அவரையும் தன் சைக்கிளை டபுள்ஸ் அழைத்துக்கொண்டு (அவரே சைக்கிளை மிதித்துக் கொண்டு) சென்று வாக்கு சேகரித்தார்..

நான் ஓய்வுபெற்று மயிலாடுதுறையில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அப்பொழுது தேர்தலில் நின்றால் இவரைபோல இருக்க வேண்டும் (நானே நெசவு செய்து கைத்தறி அணியாவிட்டாலும்) என்று ஆசை (இதை ஆசை என்று சொன்னால் கூட அது ஆடம்பரமாகிவிடும் அபாயம் உண்டு) உண்டு..

படுபாவி ஆண்டிமுத்து இராசாவைப் பத்தி இரண்டு இடுகை போட்டதுக்கு பரிகாரமாக காந்தியைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு இந்த இடுகையில்...

கீழே படத்தில் பாருங்கள் வாக்கு சேகரிக்க காந்தி செல்கிறார்.. அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அவர் பின்னே வாகனத்தில் செல்கின்றனர்.


oOo oOo

யாராவது ஆங்கிலப் புத்தாண்டை வானத்தில் ஆகாய விமானத்தில் இருக்கும் போது அனுபவித்திருக்கிறீர்களா?

1996 ம் வருட இறுதியில் அட்லாண்டாவிலிருந்தேன். என் திருமணத்துக்காக மயிலாடுதுறை செல்ல வேண்டியிருந்தது. டிக்கெட் தேடிக்கொண்டிருந்த போது டிசம்பர் 31 அன்று மாலை தான் லுஃப்தான்ஸாவில் கிடைத்தது. டிசம்பர் 31 மாலை 4:30 மணி அளவில் அட்லாண்டாவில் ஏறி ஃப்ராங்க்ஃபர்ட் விமான் நிலையத்தில் சென்னை செல்லும் விமானத்தில் மாறி.. ஜனவர் 2, 1997 விடியற்காலையில் சென்னையில் இறங்க வேண்டியிருந்தது. புது வருடம் வானத்தில் 38000 அடி உயரத்தில் பிறக்கப் போகிறது. விமானத்தில் ஏதாவது விசேஷமாக செய்வார்கள்.. வசந்தமாளிகை படத்தில்..”ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்..” பாட்டு மாதிரி அரைகுறை உடை (இல்லாவிட்டாலும் பரவாயில்லை) தேவதைகள் தட்டில் ஒயின் கிளாஸுடன் வந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லுவார்கள் என்றெல்லா கனவு கண்டு கொண்டிருந்தேன்.. கல்யாண கனவுகளுடன் இந்த கனவுகளும் சேர்ந்து கொஞ்சம் கிளுகிளுப்பாகத்தான் இருந்தது..

விமானத்தில் ஏற் ஒண்ணரை மணி நேரம் தான் ஆகியிருக்கும்.. அப்பொழுது அட்லாண்டாவில் மாலை 6 மணியிருக்கும்.. அப்பொழுதுதான் விமானத்தின் கேப்டன் மைக்கில் அறிவித்தார்..” Ladies and Gentleman.. It is about midnight in Frankfurt now.. On behalf of Lufthansa Airlines, I am happy to wish you a Very Happy and Prosperours New Year" என்று மட்டும் சொல்லி முடித்து விட்டார்... நான் கனவு கண்டு முடிப்பதற்குள் புது வருஷம் என்னைத் தாண்டி ஓடிவிட்டது. பக்கத்தில் உள்ளவர்களுக்கு “Happy New Year" சொல்ல வேண்டுமென்று நினைத்தால் அவர் தண்ணியடித்து மட்டையாகிவிட்டிருந்தார்.. ஒரு எக்ஸ்ட்ரா ஆல்கஹால் இல்லை.. வானத்தில் கூட தேவதைகள் இல்லை.. ரொம்ப கஷ்டமாக அப்புசாமித்தாத்தா (சீதேக்கிழவி புகழ்) லெவலில் புலம்பிக்கொண்டு தூங்கிவிட்டேன்...

சென்னையில் இறங்கியபொழுது புத்தாண்டு பரிசாக என் வருங்கால மனைவி எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.. அவரை அப்பொழுதுதான் முதல் முறையாக சந்தித்தேன்.. பயந்து பயந்து அவங்க அப்பா பின்னாடி பதுங்கி எட்டிப் பார்த்துப் பேசியவரிடம் இவ்வளவு வீரம் இருக்குமென்று என்னால் அன்று நம்பமுடியவில்லை.. நான் பேசாவிட்டாலும்.. போரில் நான் வாங்கிய விழுப்புண்கள் பேசாமலாப் போய்விடும்?

oOo


பின்குறிப்பு: சகபதிவர் கெக்கேபிக்குனி அவர்களின் கண்டனத்தை மதிக்கும் வகையில் இந்த இடுகையில் (மட்டும்?) நடிகையர் படங்கள் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளன

Monday, January 10, 2011

110. முன்னாள் அமைச்சர் ராசாவால் நமக்கு நஷ்டமா?

எனது சென்ற பதிவின் 109. நம்ம முன்னாள் மந்திரி ராசாவால எவ்வளவு நஷ்டம் பாருங்க !! தொடர்ச்சியாகத்தான் இதனை எழுதுகிறேன். சக பதிவர்கள் கெக்கேபிக்குனி, அபிஅப்பா,பிரகாஷ் போன்றோரின் வாதங்களுக்கு பதிலாகவும்தான்.


இந்தப்பதிவுக்காக நான் ஒன்றும் உண்மைத்தமிழன் அளவுக்கு ஆராய்ச்சி செய்யவில்லை. இராசா பற்றியதான ஊடகச் செய்திகளை அவ்வப்போது படித்து ஒரு புரிதல் வைத்திருக்கும் சராசரி தமிழனுக்கு உள்ள புரிதல் மட்டுமே இந்த இடுகையின் அடிநாதம். நான் பொருளாதார வல்லுனனா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியா முன்னேறவேண்டும், ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் சராசரி குடிமகனுக்கு மேலான ஆர்வம் மட்டும் எனக்கு உண்டு என்பது என் நம்பிக்கை..



பெரம்பலூர் தொகுதியில் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் அபகரித்ததாக ராசா மீது சமீபத்தில் குற்றச்சாட்டுக்கள் எல்லா பத்திரிகைகளிலும் எழுந்தன. பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடையே “தொழில் வளர்ச்சிக்காக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்துவதாகவும், அவ்வாறு கையகப்படுத்தும் நேரத்தில் நிலங்களுக்கான அரசு விலை குறைவாக நிர்ணயிக்கப்படுமென்றும், அதற்கு முன்னதாக சகாயமான விலையில் நிலத்தை வாங்கிக்கொள்வதாக” ராசாவின் ஏஜெண்டுகள் பல விதங்களில் வதந்திகளைப் பரப்பி விவசாயிகளை மிரட்டி ஏக்கர் ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒருலட்சம் வரை கொடுத்து நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளனர். இவ்வாறு வாங்குவதற்கு இராசாவின் மந்திரி பதவியும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை முதல் பல அரசு இயந்திரங்களும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றனர். சில விவசாயிகளின் மேல சில மிரட்டல் மற்றும் வன்கொடுமை வழக்குகளும் பதிந்து சிறையிலும் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு மிரட்டி வாங்கப்பட்ட நிலங்களை இராசாவின் ஆட்கள் 20 மடங்கு அதிகம் விலை வைத்து (ஏக்கர் பதினைந்து இலட்சம் ரூபாய்களுக்கு மேல்) கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று இலாபம் பார்த்திருக்கின்றனர்.

இதெல்லாம் சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்திகள் தான். இந்த விவரங்கள் உண்மையானால் இராசா குற்றவாளி என்று நீங்கள் கருதலாமா? அரசு இயந்திரங்கள் மூலம் தகாத முறையில் மிரட்டப்பட்டு தன் நிலங்களை இழந்த விவசாயிகளின் மேல் நீங்கள் பரிதாபம் கொள்வீர்களா? ஏன்?

அதே முறை Modus Operandi ஊழல் தான் ஸ்பெக்ட்ரம் அலைகற்றை
விஷயத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிலங்களுக்குப் பதில் அலைக்கற்றை உரிமங்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி “முன்னால் வருபவர்களுக்கு மட்டுமே உரிமம்” என்ற விதியைப் பயன்ப்டுத்தி தன் ஆதரவு பெற்ற நிறுவனங்களை முன்னால் நிறுத்தி குறைந்த விலையில் அலைக்கற்றை உரிமங்களை வாங்கி அதிக லாபத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றிருக்கிறார் இராசா. மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தான் இது.


ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் என்பது சரியான கணிப்பாக இருக்க முடியாமல் “ஊகவணிக லாபமாக” இருக்கலாம். ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கின்றதென்பது நிச்சயம் தெரிகிறது. இதற்கு அரசு இயந்திரங்களும் அதிகாரமும் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது என்பது மிகத்தெளிவு..


இராசா மட்டும் தான் குற்றவாளி என்று நான் நம்பவில்லை. இராசாவால் மட்டுமே இந்தியப் பிரதமரின் அறிவுரைகளை மீறி நடந்து கொண்டிருக்க முடியும் என்று நம்பவில்லை. சென்னையில் டாட்டாவின் வோல்டாஸ் நிறுவன நிலத்தில் 300 கோடி ரூபாய் வியாபாரத்தில் சொல்லப்படும் சரவணன் என்பவரின் (இராசாத்தி அம்மாளின் நிறுவனத்தில் ஒரு உதவியாளராம்) இடத்தில் தான் இராசாவும் இந்த அலைக்கற்றை விவரத்தில். இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களென்பது விசாரணையில் வெளிவருமா என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதான் என்பதிலே எனக்கு சந்தேகம் தான். போபார்ஸ் விஷயத்தில் க்வாட்ராச்சியைக் காப்பாற்ற மத்திய அரசும், சி.பி.ஐ யும் செயல்பட்ட விஷயத்திலேயே நம் நாட்டில் நீதிபரிபாலனத்தின் கைகள் கட்டப்பட்டிருக்கும் விதம் புரிந்து கொண்டேன்.. காலம் பதில் சொல்லும் என்ற ஒரே நம்பிக்கை தான் இப்பொழுது..

ஆடிட்டர் ஜெனரலின் 59 பக்க அறிக்கையில் இராசாவின் பெயரோ அல்லது ஊழல் என்ற வார்த்தையோ குறிப்பிடப்படவில்லை என்ற அபிஅப்பாவின் வாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை ..”இவ்வளவு பணம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறதே .. யாருக்காவது தெரிந்துதான் நடந்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்புவது மட்டுமே ஆடிட்டர்களின் வேலை (எங்க அப்பா ஆடிட்டர் தான்..) .. இது ஊழலா.. இல்லையா.. இதற்கு யார் பொறுப்பு என்று முடிவு செய்வது விசாரணைகளின் முடிவிலும் நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவேண்டியது. ஆடிட்டர் அறிக்கையில் சொல்லப்படாததால் மட்டுமே ஊழல் நடைபெறவில்லையென்றோ, இராசா குற்றவாளியில்லையென்றோ நான் நம்பத்தயாரில்லை.. பெரம்பலூர் விவசாயிகளின் நில அபகரிப்பில் செய்த்து போன்றுதான் இராசா அலைக்கற்றை விஷயத்திலும் செய்திருக்கிறார்.. உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்புகிறேன்


பின் குறிப்பு: நடிகை ஓவியா படம் போட்டால் தான் இந்தப் பக்கத்துக்கு வருவேன் என்று சொல்லிவிட்டுப் போன டெக்ஸாஸ் சிங்கம் குடுகுடுப்பையாரை அன்புடன் எங்கள் ஓவியா “வருக வருக” என்று அழைக்கிறாள்...

Thursday, January 06, 2011

109. நம்ம முன்னாள் மந்திரி ராசாவால எவ்வளவு நஷ்டம் பாருங்க !!

நம்ம முன்னாள் மந்திரி ஆண்டிமுத்து ராசாவால நம்ம நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு அப்ப்டீன்னு விஷுவலைஸ் பண்ணிப் பார்க்கின்ற முயற்சி இது..

ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு இப்படித்தான் இருக்கு...




அதுவே பத்தாயிரம் ரூபாயின்னா இப்படியிருக்கும்... ஒன்பது நோட்டுதான் படத்துல தெரியுது.. பத்தாவது நோட்டு மேல இருக்கு..



ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை 100 நோட்டு வெச்சி ஒரு பண்டல் கட்டினா அது ஒரு லட்ச ரூபாய.. அது போல 100 கட்டு கட்டினா.. அது ஒரு கோடி ரூபாயாயிருக்கும்.. அது பார்ப்பதற்கு இப்படித்தான் குட்டியூண்டா இருக்கும்.. ஒரு பெரீய்ய மஞ்சப்பையில போட்டு எடுத்திட்டுப் போகலாம்...





அதுவே ஆயிரம் கோடி ரூபாயின்னா இப்படி ஒரு பெரிய்ய பொட்டியாக் கட்டிக்கிட்டுப் போகலாம்.. ஒரு கார்ல எடுத்துட்டுப் போற சைஸ்தான் இருக்கும்.. கார் நீங்க முன்னாடியே வாங்கி வெச்சிருக்கணும்.. இல்லேன்னா ஆயிரம் கோடி ரூபாயை உடைச்சி சில்லறைமாத்தி கார் வாங்க வேண்டியதாயிருக்கும்..





ஆயிரம் கோடியெல்லாம் பத்தாதுங்க.. நமக்கு பத்தாயிரம் கோடியிருந்தா நல்லாருக்கும்னு நெனச்சீங்கன்னா, இது போல 10 பெரிய பொட்டிங்க கட்ட வேண்டியிருக்குங்க...


அதுவே ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடின்னா எப்படியிருக்குங்க? நம்ம பெட்டி மாதிரி 1760 பொட்டி வெக்கணுங்க.. ஆனா நம்ம ராசா சில்லறைக்குக் கஷ்டப்படப்போறாரேன்னு எல்லாத்தையும் 100 ரூபாய் நோட்டாப் போட்டு 17600 பொட்டிகளை அடுக்கிட்டோங்க.. அது இப்படித்தான் இருக்குங்க...

அந்தப் பொட்டிக்கு ஓரமா ராசா நின்னுக்கிட்டிருக்காரு பாருங்க... தெரியறாருங்களா?






இது போதுமா நம்ம குடும்பத்துக்கும் நம்ம தலைவர் குடும்பத்துக்கும் அப்ப்டீன்னு யோசிக்கிறாரு பாருங்க...



ஆனால்.. எல்லாரும் கேட்டுக்குங்க.. நான் எந்த ஊழலும் பண்ணலை.. நம்புங்க.. நம்புங்க.. நம்புங்க.... இந்த பொட்டிகளை நான் எங்கேயும் பதுக்கி வெக்கலை.. அதையும் நம்புங்க...


Tuesday, January 04, 2011

108. உள்ளாட்சி அமைப்புகளில் அரசியல் சாராத இளைஞர்கள் !!

ஒவ்வொரு முறை மயிலாடுதுறை செல்லும் போது அங்கு உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் நடக்கும் கொள்ளைகளையும் ஊழல்களையும் மக்களிடமிருந்து கேள்விப்படுவதுண்டு. அப்பொழுதெல்லாம் தோன்றுவது என்னவென்றால்.. “ஏன் படித்தவர்கள், நாணயமானவர்கள், கட்சி சார்ந்து அரசியல் செய்யவேண்டிய தேவையில்லாதவர்கள்.. கௌரவமான பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.. தேவைக்கு அதிகமாக ஊழல் செய்து சம்பாதிக்கத் தேவையில்லாதவர்கள்.. உள்ளாட்சி தேர்தலில் நின்று நல்ல நிர்வாகம் தர முயற்சி செய்ய மாட்டேனென்கிறார்கள்? “ என்ற கேள்வி என் மனதில் எழுவதுண்டு. நான் ஓய்வு பெற்று இந்தியாவில் இருந்தால் உள்ளாட்சி தேர்தல் அமைப்பில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆசையும் எனக்குண்டு..

என் ஆசைக்கு சார்பாக அவள் விகடனிலிருந்து ஒரு கட்டுரை..

oOo



சவி ராஜாவத் என்கிற 30 வயது இளம்பெண். எம்.பி.ஏ. படித்திருக்கும் இந்தப் பெண், ராஜஸ்தானின் பின்தங்கிய பகுதியான டோங் மாவட்டத்தின், சோடா எனும் தன் தாய் கிராமத்துக்காக, கார்ப்பரேட் நிறுவன பணியைத் துறந்து, அதன் பஞ்சாயத்து தலைவியாகி இருக்கிறார்! சேலைத் தலைப்பையே முக்காடாகப் போட்டுக் கொண்டு நடக்கும் பெண்களின் மத்தியில்... பிராண்டட் ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று நிற்கும் அந்தத் தலைவியின் தோற்றமே சுவாரஸ்யமாக்குகிறது சூழலை! பேச்சிலும் வேகம் இந்த மிஸ்ஸுக்கு!

''என் தாத்தா ரகுவீர் சிங், சோடா கிராமத்தில் மூன்று முறை பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். என் தந்தை ராணுவத்துக்குப் பணியாற்றச் சென்றதால் நாங்கள் மட்டும் நகரவாசிகளாகிவிட்டோம். தாத்தா, பாட்டிஎல்லாம் ஊரிலிருந்த நிலங்களைப் பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர். ஜெய்ப்பூரிலிருந்து எப்போதாவது ஊருக்கு சென்று வருவதோடு சரி. இடைப்பட்ட காலத்தில் கிராமத்தில் வளர்ச்சியே இல்லாமல் போய், மிகமிக பின் தங்கிவிட்டது ஊர்.

இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் வரவே, எங்கள் கிராமத்தை பெண்களுக்கானது என்று அறிவித்துவிட்டனர். வழக்கமாக எங்கள் குடும்பமே தலைவராக இருந்ததால், கிராம மக்கள் 100 பேர் ஜெய்ப்பூரிலிருந்த எங்கள் வீட்டுக்கு வந்து, விஷயத்தைச் சொல்லி, தேர்தலில் நிற்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். ஆனால், அப்போது நான் டெல்லியில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மார்கெட்டிங் துறையின் தலைவியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆந்திரா போர்டிங் ஸ்கூலில் படிப்பு, டெல்லியில் கல்லூரிப் படிப்பு, புனேவில் எம்.பி.ஏ., கார்ப்பரேட் வேலை என முன்னேறிச் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கையில், இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. நான் மிகவும் யோசிக்கவே... 'எதற்கும் ஒரு முறை நம் கிராமத்தைச் சென்று பார்த்துவிட்டு வந்து முடிவெடு’ என்றார்கள் வீட்டில்.

மாநிலத்தின் பெரும்பாலான கிராமங்களைப் போல், 'சோடா'வாசிகள் கால்நடைகளை வளர்க்க முடியவில்லை. மழை நீர் மட்டுமே நீராதாரம் என்பதால், அவற்றுக்குப் போதுமான தீவனம் கிடைப்பதில்லை. ஒரு சில பயிர்கள் மட்டுமே விளையும். அதுதான் இங்குள்ள சுமார் 7,000 பேருக்கும் சோறுபோடும் தொழில். இன்னும் அடிப்படை வசதிகள், சுகாதாரம் எனும் பல விஷயங்களிலும் பின்தங்கிய நிலைதான்.

கிராமத்துக்குச் சென்று சுற்றிப் பார்த்த எனக்கு, மிகவும் வருத்தமாகிவிட்டது. 'என் நிறுவனத்துக்கு என்னைப் போல் ஆயிரம் ஊழியர்கள் கிடைக்கலாம். ஆனால், என் கிராமத்துக்கு இப்போது நான் அவசியம் தேவை...’ என்று முடிவெடுத்தேன். 'நம்மால் புரட்சிகளை, மலர்ச்சிகளை கொண்டு வரமுடியாது. என்றாலும், மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளிகளை விதைக்க முடியும்' என்ற நம்பிக்கையை, என் படிப்பும், என் கிராம மக்கள் மீதான அக்கறையும் தந்தன. கடந்த பிப்ரவரியில் தேர்தலில் நின்றேன்!''


சவி ராஜாவத் மனு தாக்கல் செய்தவுடனே ஒரே ஒருவரைத் தவிர போட்டியில் இருந்த மற்ற 15 வேட்பாளர்களும் மனுவை வாபஸ் வாங்கியிருக்கின்றனர். அமோகமாக வென்றிருக்கிறார் ராஜஸ்தானின் புகழ்பெற்ற ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவரான இந்த ராஜகுமாரி.

இந்த குறுகிய நாட்களுக்குள் சோடா கிராமத்தினருக்கு தங்கள் தலைவி பற்றி அத்தனை நிறைவு. ''கிராமத்தின் முக்கியப் பிரச்னையான தண்ணீருக்காக மழை நீரை சேமிக்க கிராமத்து பெரியவர்கள் மற்றும் ஜெய்ப்பூரின் மண் ஆய்வாளர்களின் கருத்துகளைக் கேட்டு, கிராமத்தின் நூறு ஏக்கர் அளவிலான ஏரியை ஆழப்படுத்தினார் ராஜாவத். இதற்கு உதவியாக உடல் உழைப்பை கிராம மக்கள் சுமார் 3,000 பேர் தர முன் வந்தோம். சிறுவர்கள், பெண்கள், ராஜாவத்தின் பெற்றோர் உட்பட அனைவருமாக ஏரியை வெட்டியதில் நல்ல பலன் கிடைத்துள்ளது'' என பஜன்லால் கூற, தொடர்ந்தார் ஹீராபாய்...

''முன்பெல்லாம் மழை பெய்த சில மாதங்களில் ஏரி வறண்டு விடும். இப்போது ஆழமாக வெட்டப்பட்டுள்ளதால் அதிக நீர் சேமிக்கப்பட்டுள்ளது. ஏரியை வெட்டும்போது அள்ளிய மண்ணை வெளியில் எங்கும் கொட்டாமல், ஏரியினுள்ளேயே குவித்து சிறிய தீவுகள் போல் செய்து விட்டார் எங்கள் தலைவி. அருகில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு, இப்போது இந்தத் தீவுத்திடல்கள் புகலிடமாகி விட்டன. இத்துடன், நூறு மரக்கன்றுகளையும் நட் டிருக்கிறார். இதெல்லாமே ராஜாவத்துக்கு கிடைத்த வெற்றி!'' எனப் புகழ்மாலை சூட்டினார்.

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மழை நீர் சேமிப்பு குறித்து ஒரு கருத்தரங்கு நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட ராஜாவத் அதில் கலந்து கொண்டு தனது கிராமத்தின் நிலை பற்றி பேசியுள்ளார். பிரச்னையை முறையாக எடுத்து வைத்ததைப் பாராட்டிய அமைச்சர், சோடா கிராமத்தின் மழைநீர் சேமிப்புக்காக 71 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறார்.

''அமைச்சர் அறிவிப்பு கொடுத்து விட்டாலும், பணத்தை பெறுவதற்கான ஃபைல்களை நகர்த்துவதில் பல்வேறு சுணக்கங்கள். கடந்த ஜூன் வரை 24.6 லட்ச ரூபாயை வாங்கி விட்டேன். பாக்கியைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். அரசு நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் இடையே இருக்கும் பெரிய இடைவெளியை இந்த அனுபவம் புரிய வைத்தது.

இதைச் சரி செய்ய என் போன்ற இளைய தலைமுறை பாலமாக இருப்பது அவசியம். இதுகுறித்து ஒருமுறை எஃப்.எம். ரேடியோவில் நான் அளித்த பேட்டி யைக் கேட்டுவிட்டு, தொழி லதிபர் ஒருவர் என் கிராம முன்னேற்றத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவினார்! இதையெல்லாம் வைத்து, கிராமத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றும் வேலை களைத் தொடங்கிஇருக்கிறேன்'' என்று சொல்லும் ராஜாவத், சி.என்.என். சேனல் சார்பில், நாட்டிலுள்ள யங் லீடர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

''படித்துவிட்டு பெரிய, பெரிய நிறுவனங்களுக்காக நாம் செலவிடும் மூளையை, ஒரு கிராமத்துக்காகச் செலவிட்டால், வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு நம் நாடு மாறிவிடும்'' என்று கோரிக்கை விடுக்கும் சவி ராஜாவத், அவருடைய பெற்றோருக்கு ஒரே மகள். இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை.

பஞ்சாயத்து தலைவி பணியோடு, தன்னுடைய பூர்விக நிலத்தில் விவசாயத்தையும் தற்போது தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார். சுமார் 25 ஏக்கர் நிலம் இருந்தாலும், குறைந்த நீராதாரம் என்பதால், அதை வைத்து குறைந்த அளவில் கடுகு பயிரிட்டிருக்கிறார். இதெல்லாம் இவருடைய புகழை அக்கம் பக்கம் பரவச் செய்துகொண்டிருக்கிறது.

''ராஜாவத் அடிக்கடி நடத்தும் குறை கேட்கும் நாள் நிகழ்ச்சிகளுக்கும் கிராமத்தினரிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அருகிலுள்ள பஞ்சாயத்துக் களின் தலைவர்கள் மற்றும் தலைவிகள், இவரை அணுகி ஆலோசனை கேட்கத் துவங்கி விட்டனர். ராஜஸ்தானின் அரசியல்வாதிகளும் இவருடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதால், ராஜாவத்துக்கு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைக்கலாம்'' என்று பெருமையோடு சொல்கிறார் பஜன்லால்!

வாழ்க இளைய பாரதம்!

Sunday, December 19, 2010

107. துறவியும் துளைகளும்..

விழுப்புரம் : கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரத்தில் நடந்த அனைத்து முதலியார், வேளாளர் முன்னேற்றப் பேரவையின் நான்காம் ஆண்டு நல்விழா கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ஜாதி உணர்வு அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஒன்று. ஜாதி தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளை அரசியல் கட்சிகளால் ஒரு போதும் ஒழிக்க முடியாது. ஒரு ஜாதி மற்றொரு ஜாதியோடு மோதிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மனிதனுக்கு பக்குவம் ஏற்பட அனுபவம் தேவை. பக்குவம் வரும் போது ஞானம் வருவதால் உயர்வு பெறுகிறான்.



முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்து போடுங்கள். பிறக்கும் குழந்தைகளுக்கும், பள்ளியில் சேர்க்கும் போதும் பெயருக்கு பின் ஜாதி பெயரை சேர்த்து வையுங்கள். அப்போது தான் அவர்கள் பிற்காலத்தில் தான் பிறந்த ஜாதியை உயர்த்த பார்ப்பர்.

அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யும் போது 153 ஜாதிகளையும் ஒருங்கிணைத்து, "முதலியார் வேளாளர்' என்று ஒரே பட்டியலில் பதிவு செய்யுங்கள். சங்க நிர்வாகிகள் நன்கொடை வசூல் செய்து அதில் துவங்கும் தொழில்களுக்கு நம் ஜாதியை சேர்ந்தவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துங்கள். உங்கள் பிள்ளைகளை ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்



ஓரு துறவியின் வேடம் பூண்டு .. சமுதாயத்தின் சீர் கேடான, ஜாதி உணர்வைத் தூண்டும் வழியில் பேசிய மதுரை ஆதீனத்தைக் கண்டிக்கிறேன்.. 153 ஐக் கூட்டினால் 9 வருகிறதாம்.. அதனால் அது உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கிறதாம்.. "I love you " என்று சொல்வதற்கு 143 என்றும் குறியீடு உண்டு .. அதற்கு என்ன சொல்வாரோ..-


Wednesday, December 15, 2010

106. சீமாச்சுவின் தாம்பூலம் - 15 டிசம்பர், 2010

சமீபத்தில் இந்தியா சென்று வந்தது ரொம்ப குறுகிய கால விஜயமாக மனதில் படுகிறது. போனதென்னவோ 4 வாரங்களுக்கு.. மழையும் என் ஆசை மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளிக்கூடமும் என்னை மயிலாடுதுறையிலேயேக் கட்டிப் போட்டுவிட்டன.


அக்டோபர் 30 விடிகாலையில் சென்னை விமான நிலையத்தில் ஆசைஆசையாக இறங்கி ஆசை ஆசையாக டூட்டி ஃப்ரீ கடைக்குள் நுழைந்து ஆசை ஆசையாக பாட்டில்களை அள்ளிக் கொண்டேன். லக்கேஜுக்காக பெல்ட் அருகில் காத்திருக்கும் போது ”சீமாச்சு அண்ணா.. என்ன தண்ணி வாங்கிட்டீங்களா?” என்று ப்ழக்கப்பட்ட குரலை அருகில் கேட்டாலும் ஒரு உலகறிந்த பிரபலமாக (!!!) இருப்பதின் அவஸ்தை அப்பொழுதுதான் புரிந்தது. பக்கத்தில் பார்த்தால் நம்ம என்னால் இணைய ஆழ்வார் என்று அன்பாக அழைக்கப்படும் ‘மாதவிப்பந்தல்’ கேயாரெஸ். அவருடன் அளவளாவியதில் காத்திருந்த நேரம் அதிகமாகத் தெரியவில்லை. அவரை வரவேற்க வந்திருந்த குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி..

oOo

இருபது வருடங்களாக வருடத்துக்கு ஒரு முறை சில வாரங்கள் இந்தியா வந்து போயிருந்தாலும் சில விஷயங்கள் நான் செய்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. முக்கியமாக கடைத்தெருவுக்குச் சென்று எந்தப் பொருளையும் விலை கேட்டு வாங்கி கையிலிருந்து காசு கொடுத்ததில்லை. மூர்த்தி அண்ணன் புண்ணியத்தில் நான் ஒரு பொருள் பக்கம் திரும்பி 10 வினாடிகளுக்கு மேல் உற்றுப் பார்த்தாலே அந்தப் பொருள் பேக் செய்யப்பட்டு நான் போவதற்கு முன்னாடியே வீட்டில் இருக்கும்.

இந்த முறை அண்ணனிடம் பிடிவாதமாகப் பேசி (“இதெல்லாம் உனக்கெதுக்கு சீனா.. “) கடைத்தெருவுக்குச் சென்று விலைகள் விசாரித்ததில் கிட்டத்தட்ட மயக்கம் வராத குறைதான்.. (ஒரு முழ மல்லிகைப்பூ 15 ரூபாய், வீட்டில் ஒரு சிறிய விசேஷத்துக்கு வாங்கிய பூ மட்டும் மூவாயிரம் ரூபாய், பழம் இரண்டாயிரம் ரூபாய், ஸ்வீட் கார வகைகள் மூவாயிரம் ரூபாய்..) “ஆண்டவரே.. கீழ் நடுத்தரமக்கள் ( என் குடும்பம் 1990 வரை இருந்த இருந்த பொருளாதார நிலை கனவுபோல் வந்து போனது.. இப்பொழுதும் ஒண்ணும் கலைஞர் குடும்ப அளவிலெல்லாம் இல்லை தான்..இருந்தாலும்..) எல்லாம் எப்படி இந்த விலைவாசியில் குடித்தனம் நடத்துகிறார்கள் என்று ஆயாசமாக இருந்தது..

பாண்டி பஜாரில் பக்கத்திலேயே நடந்து வந்த நம்ம பதிவர் உண்மைத்தமிழன் ஆதரவாக.. “இதெல்லாம்.. இப்பல்லாம் அப்படிதாண்ணே..” என்று என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டே வந்தார்..

அப்படி செய்ய நினைத்த இன்னொரு விஷயம் பஸ்ஸில் போவது.. அரசு/தனியார் பேருந்தில் பயணம் (நாங்களெல்லம் ட்ரெயின் தான்) செய்து 8 வருடங்களாயிருந்தன.. கடைசியாக இதேபோல் ஆசைப்பட்டு 2002ல் போய் வந்ததுதான். இந்த முறை சென்னை - பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி - கடலூர், கடலூர் - சிதம்பர்ம், சிதம்பரம் - மயிலாடுதுறை ஒரே நாளில் பயணம் செய்தத்தில் பல வகைப்பட்ட அனுபவம்..


சென்னையில், நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் நண்பரொருவருடன் சென்னையிலிருந்து மயிலாடுதுறை பஸ் பயணம் என்று சொல்லி முடிவானதுடன் .. “கோயம்பேடு போகலாண்ணே..” என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. “அங்கெல்லாம் வேணான்ணே.. பில்லர் போயிடுங்க.. அங்கேருந்து ECR ரோட்டில் பாண்டி போக ஏஸி/ வீடியோ கோச் (இதுவரை வீடியோ பஸ்ஸில் பார்த்ததில்லை) வண்டி நிறைய கிடைக்கும் “ என்று இனிப்புத் தடவி சொன்னாரு இன்னொரு ‘அண்ணன்’. அவர் செய்தியை நம்பி பில்லர் போய் பஸ்ஸுக்கு நின்றோம்..

என் நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.. “சூப்பர் டீலக்ஸ் (அது போல ஏதோவொன்று) வீடியோ கோச்” என்று போட்ட ஒரு பஸ் ஒரு 20-30 பயணிகளுடன் வந்தது. எங்களை ஏற்றி விட வந்திருந்த நண்பர்களிருவரில் ஒருவர் ஒரு விவகாரமான கோணச் சிரிப்புடன் எங்களை ஏற்றி விட்டார்.. அப்பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்.. கொஞ்சம் இருட்டான மாலை ஆறு மணி வாக்கில் நான் உணர்ந்த் போது தான் பஸ் 20 கிமீ வேகத்தில் ECR ரோட்டில் ஊர்ந்து கொண்டிருந்தது.. பஸ்ஸ்லிருந்து ஒரு பலகீனமான ஒரு ஒட்டை உடைசல் சத்தமும் வந்து கொண்டிருந்தது.. பஸ்ஸிலிருந்த சக பயணிகளெல்லாம் முணு முணுத்துக் கொண்டிருந்தார்கள்... கொஞசம் பலமாக (மிகப் பலமாகவெல்லாம் இல்லை) சவுண்டு விட்டுக்கிட்டிருந்த பார்ட்டி..”வண்டியே மோசமான வண்டிதாங்க.. டிரைவருக்குச் சரியாக் கண்ணு தெரியலை போல.. அதனால ரொம்ப நிதானமா ஒட்டுறாருங்க.. இங்க பாருங்க எதுத்தாப்பல லைட் போட்டுக்கிட்டு இன்னொரு பஸ் வந்தாலே ஒரம் கட்டிடடறாரு பாருங்க” என்று எனக்கு பயண வரலாறு சொல்லிக்கிட்டிருந்தார்..

யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. கையிலும் எந்த மாற்றும் இருப்பதாகத் தெரியவில்லை..

சாதாராணமான பஸ்ஸில் போயிருந்தால் 7:30க்கெல்லாம் பாண்டி போய்ச் சேர்ந்திருக்கலாமாம்.. இப்பொழுது இவர் போகும் வேகத்தில் போய்ச்சேர 9 மணியாகும் போலருந்த்து.. அப்புறம் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை போய்ச் சேர நள்ளிரவு தாண்டி இர்ண்டு மணியாகலாம்... பொறுமை எல்லை மீறிக்கொண்டிருந்தது.. எனக்கு மட்டுமல்ல...

கண்டக்டரை அருகில் அழைத்தேன்..

“அண்ணே .. உங்க பேரென்னங்க..?”

“ஜெயக்குமார் சார்..”

“இப்போ பக்கத்துல பார்த்தீங்கள்ள.. ஒரு ஆ...ட்..டோக்காரன் நம்ம பஸ்ஸை முந்திக்கிட்டுப் போறாரு...”

“ஆமாம் சார்.. என்ன பண்றது..” - பொறுப்புடனும் பொறுமையுடனும் பதில்கள் தந்தார்..

“என்ன பிரச்சினைன்னு எனக்காவது கொஞ்சம் சொல்லுங்களேன்.. வண்டியில ஏதாவது பிரச்சினையா..?”

“வண்டியிலும் பிரச்சினை தான்.. ஆனால் சமாளிச்சிரலாம்.. ஆனா நம்ம டிரைவர் அடுத்த வருஷம் ரிட்டயராவுராரு சார்.. கண்ணு சரியாத் தெரியமாட்டேங்குதாம்.. நான் இப்பத்தான் முதன் முறை அவரு கூட வர்றேன் சார்.. மத்தியானமெல்லாம் சரியாத்தான் ஓட்டினாரு.. இப்பத்தான் இப்படி.. எனக்கே இப்பத்தான் தெரியும் சார்..”

“அவருக்குக் கண்ணு சரியாத்தெரியாதது தெரிஞ்சும் எப்படி வண்டி எடுக்க விட்டாங்க..?”

“இவரு வண்டி எடுத்திருக்க வேண்டாங்க.. இவரு ஆபீஸ் ட்யூட்டி கேட்டிருக்கலாம் தான்.. ஏன்னு தெரியலை சார்..”

“நீங்க வண்டி எடுப்பீங்களா.. கண்டக்டர்? “

“நான் எடுப்பேன் சார்.. ஆனால் ட்ரைவர் ட்யூட்டியிலே இருக்கும் போது கண்டக்டர் எடுக்கக் கூடாது சார்.. அது தப்பு” - அவர் தரப்பு நியாயம் சொன்னார்..


“ட்ரைவருக்கு உடம்பு சரியில்லேன்னு.. அவர் உங்களை..’நீங்க எடுங்கண்ணே’ ந்னு கேட்டால் நீங்க எடுக்கலாமா?”

“அவர் கேட்டுக்கிட்டால் நான் எடுக்கிறேங்க.. உங்களையெல்லாம் நேரத்துல பாண்டியிலே கொண்டு விட எனக்கு மட்டும் ஆசையில்லியா சார்..”

நானும் என் நண்பரும் டிரைவரிடம் சென்று வண்டியை ஓரம் கட்டச் சொன்னோம். அவருக்கும் அது தேவையாக இருந்தது போலும்.. ரொம்ப அயர்வாகக் காணப்பட்டார்.. அவரிடம் பேசி.. கண்டக்டரையே.. வண்டி எடுக்கச் சொல்லி அவரைக் கேட்டுக் கொள்ளச்சொல்லி.. கண்டக்டர் ஓட்டுனர் இடத்தில் ஏறி அமர்ந்ததும் தான் எல்லாப் பயணிகளும் சற்று நிமிர்ந்து அமர்ந்தனர்..

அடுத்த ஒரு மணி நேரம் தாண்டி மாலை 8:10க்கெல்லாம் வண்டி பாண்டிச்சேரி எல்லைக்குள் நுழையும் போதுதான் கண்டக்டரின் நன்னடத்தைக்குப் (இங்க வேற நல்ல வார்த்தை வரணும்.. நன்னடத்தை என்பது சரியில்லை.. What I want to say here is 'Conductor's service attitude of going above and beyond his responsibilities to take care of his customers.. It is really an exceptional quality among our Govt servants) பாராட்ட வேண்டுமென்று தோன்றியது. பஸ் பேருந்து நிலையத்தில் நுழைந்து விட்டால் யாருக்கும் நன்றி சொல்லவும் தோணாது.. இறங்கி விடுவிடென்று ஓடிவிடுவார்கள்.. என்று தெரியும்..

என் நண்பரிடம் (அவர் மேடையில் பேசி பழக்கமுள்ளவர்) சில குறிப்புகளைத் தந்து “கண்டக்டரைப் பாராட்டிப் பேசு.. அப்படியே இந்த பண அன்பளிப்பையும் கொடுத்து விடு “ என்று சொன்னபோது அவர் மறுத்து விட்டார்..

“இதெல்லாம் எங்க ஊரில நாங்க செய்யறதில்லை.. அவன் அவன் லேட்டாயிடிச்சேன்னு கடுப்புல இருக்கான்.. இப்போ இதெல்லாம் என்னால முடியாது”

”நீ செய்யாட்டா .. நான் செய்யுறேன்..” என்று எழுந்த போது... “ உனக்குச் சொன்னாலும் புரியாது... உனக்காகவும் புரியாது” என்று புலம்பிக்கொண்டே எழுந்தார்...


“அன்பான பயணிகளே.. நமது பேருந்து ஓட்டுனரின் பார்வைக் குறைபாடும் அதனால் நாம் அனுபவித்த தாமதமும் இன்னும் சில நிமிடங்களில் நாம் பாண்டியில் இந்தப் பேருந்தை விட்டு இறங்கியதும் உங்களுக்கு மறந்து போகலாம்.. நம்மையெல்லாம் பத்திரமாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதற்காக என் நண்பரின் வேண்டுகோளை ஏற்று பேருந்தை ஓட்டுனரிடமிருந்து தகுந்த முறையில் பெற்று .. நம்மையெல்லாம் விரைவாக கொண்டு சேர்த்திருக்கிறார் நம் நடத்துனர் .. ஜெயக்குமார் அவர்கள்.. இதைச் செய்யவேண்டுமென்று அவரது வேலைக்குறிப்பில் இருக்காது... இருந்தும் நமக்காக அவர் பொறுப்பேற்று செய்தார்.. .. அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு எல்லோரும் .. ஒரு முறை கைதட்டி ஊக்குவியுங்கள்...”

என்று சொன்ன போது பலமான கைதட்டல் எழுந்து அடங்க சில நிமிடங்களாயிற்று..

தொடர்ந்து..

“நீஙகள் பேருந்தை விட்டு இறங்கும் போது மறக்காமல்.. நம் நடத்துனருக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்குங்கள்.. மேலும் நமது நடத்துனர் ஜெயக்குமாரின் சேவையுள்ளத்தைப் பாராட்டி இந்தச் சிறிய பணமுடிப்பினை ..என் நண்பர் சார்பாக அளிக்கவுள்ளேன்..” என்று சொன்னவுடன் இன்னும் இரண்டு பயணிகள்.. “அதோட என் பரிசையும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள்” என்று அவர்கள் பங்கைத் தந்ததும் நெகிழ்ச்சியாக் இருந்தது..

பேருந்து நிலையம் வந்தவுடன்.. இறங்கிய ஒவ்வொரு பயணியும் மறக்காமல் ”நன்றி சார்..” என்று பேருந்தை ஓட்டி வந்த நடத்துனரிடம் சொல்லிய போது அவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..

“காசெல்லாம் வாங்க மாட்டேன் சார்...இவ்வளவு பேரும் இறங்கும் போது நன்றி சொன்னாங்களே .. அதுவே நிறைவா இருந்திச்சி சார்..” என்று பிடிவாதமாக மறுத்த நடத்துனரிடம்.. பணத்தை ..”இது காசு மட்டும் இல்ல சார்.. இது ஒரு அடையாள அன்பளிப்பு.. நீங்க செஞ்ச பொறுப்பை வெறும் காசால் அளக்க நான் விரும்பவில்லை” என்று சொன்ன பிறகுதான் அவர் ஏற்றுக்கொண்டார்..

அவரிடம் அன்பாக சில நிமிடங்கள் நின்று பேசிவிட்டு .. புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகுதான் கடலூர் பேருந்தைப் பிடிக்க விரைந்தோம்


அன்றிரவு மயிலாடுதுறை வீட்டுக்குள் வரும் போது மணி இரவு 12:30

அடுத்த பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது தான் உடன் பயணித்த நண்பர் சொன்னார்.. “அந்த கண்டக்டருக்குச் சந்தோஷமா இருக்கும் தானே.. அவர் இந்த நாளை மறக்க மாட்டார் தானே.... ஏனோ எங்களுக்கெல்லாம் அடுத்தவங்களைப் பாராட்ட நேரமே இருக்கிறதில்லை.. ச்சின்னதாக் கையாவது தட்டணும்னு கூடத் தோணலை.. நீ சொல்றவரைக்கும்...”

oOo





பதிவு கொஞம் நீளமாகிட்டது போல.. உண்மைத்தமிழன் பேரைச் சொன்னாலே.. பதிவும் நீண்டுடுது.. எனது டாஸ்மாக் அனுபவம், பதிவுலக நண்பர்களைச் சந்தித்தது, தீபாவளி.. கடைமுகம்.. இன்னும் சுவையான அனுபவங்கள் அடுத்த பதிவில்.. விரைவில்...

என் நண்பரின் மகனின் எந்திரன் வீடியோ.. அவசியம் நிமிடம் 2:20 லிருந்து 2:45 வரை பாருங்கள். ஒரு புன்சிரிப்பு கியாரண்டி. நிச்சயம் ரீவைண்ட் செய்து பார்த்து மறுபடியும் சிரிப்பீர்கள்

Wednesday, October 06, 2010

105. அமைச்சரும் கலெக்டரும்

அமைச்சர் துரைமுருகன் ஒரு நேர்முகத்தில்..

'நீங்கள் எப்படியும் அன்புமணிக்கு ஸீட் கொடுப்பீர்கள் என நம்பித்தானே சட்டமன்றத்தில் ஆளும் கட்சி கொண்டுவந்த மேலவைத் தீர்மானத்தை பா.ம.க. ஆதரித்தது?''

''சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருகிறார்கள் என்றால், அது மக்களை பாதிக்குமா... இல்லை மக்களுக்கு சாதகமான விஷயம்தானா என்பதை ஆராய்ந்துதான் ஒரு கட்சித் தலைமை முடிவெடுக்க வேண்டும். மேலவை முடிவு மக்களுக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை... தன் மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்தால் சரி என ராமதாஸ் நினைப்பதை என்னவென்று சொல்வது? 'தி.மு.க. துரோகம் செய்யும் என நினைத்திருந்தால், மேலவைத் தீர்மானத்தை ஆதரிக்கும் முன்பே அவர்களிடம் எழுதி வாங்கி இருப்பேன்!' என ராமதாஸ் சொல்லி இருக்கிறார். மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கொடுத்தால் சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் கொண்டுவந்தாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு அவர் ஆதரிக்கத் தயாராக இருக்கிறாரா? 'தமிழகத்திலேயே கொள்கையும் லட்சியமும்கொண்ட கட்சி பா.ம.க-தான்!' என கூட்டத்துக்குக் கூட்டம் முழங்கும் ராமதாஸ், மகனுக்கு ஸீட் வாங்குவதை மட்டும்தான் கொள்கையும் லட்சியமுமாகச் சொல்கிறாரா?!''


படத்தில் இருப்பது எங்க ஊரு மயிலாடுதுறை Downtown !!




கடந்த வாரத்தில் வெளியான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்ற அறிவிப்பில் நாமக்கல் கலெக்டர் சகாயத்தின் பெயரும் இருந்தது. ஆனால், அவருக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

சகாயத்தின் மாறுதல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கலெக்டரின் மாறுதல் உத்தரவை திரும்பப் பெறக் கோரி மாவட்டம் முழுக்கப் பொதுமக்கள் தினம் தினம் போராட்டத்தை நடத்துகின்றனர்.

இது ஒரு பக்கம்னா... மாவட்டம் முழுக்க இருக்கும் வி.ஏ.ஓ-க்கள், பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குறதுக்கு கலெக்டர் ரொம்பவே இடையூறா இருந்தார். வி.ஏ.ஓ-க்கள் ஒன்று கூடி கலெக்டருக்கு எதிராப் போராட்டம் நடத்தினாங்க. இப்போ அதிகார மையத்துக்காரரும் இதில் சேர்ந்துக்கிட்டாரு...'' என்று சொன்னார். ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளில் இவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி முதல்வருக்கு அனுப்ப இருக்கிறார்களாம்



செய்திகள்: நன்றி ஜூனியர் விகடன்..


ஊழலற்ற நிர்வாகம் அமைப்பதில் உறுதியாக இருக்கும் கலெக்டர் சகாயம் அவர்களுக்கு என் ஆதரவுகள்.. நாமக்கல் மாவட்டத்தில் இந்த நேர்மையாளரின் பொறுப்புக்கள் இன்னும் தேவைப்படும் நேரத்தில் அரசியல் உள்நோக்கங்களுக்காக அவரை பொறுப்பிலிருந்து மாற்றிய தமிழக அரசை நாமக்கல் மக்கள் சார்பில் நானும் கண்டிக்கிறேன் !!






Monday, October 04, 2010

104. எந்திரன்++

இப்போ அப்போ என்று ஒரு வருடமாக பேசிக்கொண்டிருந்த எந்திரன் வந்து விட்டது. முதல் நாள் டிக்கெட் விலை 30 டாலர்.. இரண்டாம் நாளிலிருந்து 20 டாலராம். அவ்வளவு காசெல்லாம் கொடுத்துப் பார்க்கக்கூடாது. அந்தக் காசை (குடும்பம் முழுவதும் பார்ப்பதென்றால் 80 டாலர்) நம்ம பள்ளிக்கூடக் கட்டடத்துக்கு 10 மூட்டை சிமெண்ட் வாங்கலாம் என்றெல்லாம் பெரிய்ய வீறாப்போடு இருந்ததெல்லா வேஸ்ட். “நீங்க வாங்க சார்.. பள்ளிக்கூடத்துக்குத் தனியா சிமெண்ட் வாங்கித்தர்றேன்” என்று சொல்லி என் விரதத்தையெல்லா கலைத்து என் குடும்பத்தையே மொத்தமாகத் தூக்கிக் கொண்டுபோய் தியேட்டரில் உட்கார்த்தி வைத்துவிட்டார் நண்பர். கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடுதான் ப்டம் பார்க்க ஆரம்பித்தாலும், போகப் போக எல்லாம் சரியாகி படமும் நன்றாக இருந்தது என் நல்ல நேரம் தான்..



வசீகரனாக வந்த ரஜினி மட்டும் தான் ஒரிஜினல் ரஜினி போலும்.. தசாவதாரத்தில் கமல் ஃப்ளெட்சர் மாதிரி மேக்கப் போட்டு வந்தது போல வேறு யாரோ டூப்புக்கு ரஜினியாக மேக்கப் போட்டு சிட்டியாக (சில க்ளோசப் காட்சிகள் தவிர) உலவவிட்டு விட்டார்கள்..

“நீங்க பேசாம இங்க உக்காருங்கண்ணே.. பாக்கி நாங்க செய்யறதையெல்லாம் பார்த்திட்டிருங்க” என்று ரஜினிகிட்டேயே சொல்லிட்டு எல்லாம் தயாரிச்ச மாதிரியிருக்கு. அதனாலதானோ என்னவோ ரஜினி கூட “இது முழுக்க முழுக்க சங்கர் படம்” என்று சொல்லிட்டாரு போல.

“ரஜினி முகத்துக்கு மட்டும் தான் காசு.. ரஜினி படத்துல ரஜினி அடிக்கடி வந்தாத்தான் மக்கள் விரும்புவாங்க” அப்படீங்கிற ச்சின்ன ஃபார்முலாவை அப்படியே பெரிசாக்கி.. “அப்ப்டீன்னா... ஒரு ரஜினி.. இரண்டு ரஜினி..என்ன நூறு ரஜினி காட்டுவோம்”னு கிராபிக்ஸ் துணையில காட்டிய சங்கரின் வியாபார மூளைக்கு ஒரு சல்யூட் !!


சார்லெட்டில் தியேட்டரில் படத்தில் ரஜினி பெயர் வந்தபோது ”ரஜினின்னா ச்சும்மாவா”ன்னு எல்லோரும் ஒரே கத்தல்... ஐஸ்வர்யா பெயருக்கு யாரும் கத்த முன் வராத போது “ஐஸுன்னா .. சும்மாவா”.. என்று ஓங்கி தனியாக ஒலித்த குரல் என்னுடையது மட்டுமே.. (சார்லெட்) மக்களுக்கு ரசனையே இல்லாமல் போயிடிச்சி..

சனிக்கிழமை காலை சமீயாவிடம் பேசும் போது “எந்திரன் பாட்டு பாடுறா.. செல்லம்” அப்படீன்னா ..”ஹ..ஹ..ஹ..ஹா...” அப்படீன்னு ஹம்மிங் பண்ணினா.. அதனால் கிளிமாஞ்சரோ பாட்டுக்கு மட்டும் ஸ்பெஷல் அட்டென்ஷனோடு கவனித்தேன்...

படம் விட்டு வரும் போது “கிளிமாஞ்சரோ அப்படீன்னா என்ன Dad?" அப்படீன்னு கேட்ட என் மூத்த பெண்ணுக்கு என்ன சொல்வதென்று யோசிச்சிச் சொல்வதற்குள் ”It is the highest mountain in Africa" என்று அடிச்சிச் சொல்லிய தங்கமணியைப் பார்த்துப் பெருமைப்படுவதா, பொறாமைப்படுவதா என்று தெரியவில்லை. என்னதான் பொது அறிவு எல்லாம் படிச்சி தேர்வு எழுதி IAS இண்டர்வியூவெல்லாம் பாஸ் பண்ணியிருந்தாலும், சில நேரங்களில் பதில் மட்டும் உடனே சொல்ல வர்றதில்லை..

நாலு நாளா.. ”காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 என்று தெரியும்.. வருஷம் தெரியுமா? ” அப்படீன்னு 10 பேர்கிட்டே கேட்டு யாருக்கும் தெரியவில்லை. நான் தான் கரெக்டா 1869 என்று அடிச்சிச் சொல்லிக்கிட்டிருக்கேன். அதெல்லாம் பொது அறிவிலே சேர்த்தின்னாலும், கிளிமாஞ்சரோன்னா என்னன்னு தெரிஞ்சுக்காம இருந்திட்டமேன்னு கொஞ்சம் வெட்கம் வந்தாலும்.. “இப்பத்தான் தெரியுமே” அப்படீங்குற அலட்சியத்தையும் ஜெயிக்க முடியலை..

சார்லெட்டுல 8 வருஷமாயிருக்கேன்னு பந்தா விட்டுக்கிட்டிருக்குற பிரபல பதிவருக்கு எந்திரன் வெளியிடற தியேட்டருக்கு வழி தெரியலை.. “இங்கதாண்ணே எங்கியோ இருக்கு” ன்னு சொல்லிட்டே மெட்ராஸ் ஆட்டோக்காரர் மாதிரி 5 மைல் தள்ளி ரவுண்டெல்லாம் அடிச்சிக் கொண்டுவிட்டாரு. நாம ஏன் அவரு மானத்தியெல்லாம் வாங்குவானேன்...


0Oo

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குடும்பத்தினர் இந்தியா போயிருந்தனர்..” உங்க புள்ளைஙகளை அழைச்சிக்கிட்டு எங்கியும் என்னால இனிமே போக முடியாது.. ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்கிட்டு உங்க மானத்தை வாங்குதுங்க” அப்படீன்னு சலிச்சிக்கிட்ட தங்கமணியைச் சமாதானம் பண்ணுவதற்காக, என் பிரிய பொண்ணுங்களிடம்..”ஏண்டா இப்படி என் மானத்தை வாங்குறீங்க” என்று அன்பா கேட்டதற்கு உடன் வந்த பதில் “I didnt buy your மானம் Daddy.. your wife only did... When we fight, she kept showing everybody that we are fighting.." என்று சூடான பதில் தான் வந்துது..

நம்ம நாட்டாமைத்தனம் நம்ம வீட்டுலயே பலிக்க மாட்டேங்குது. சொம்பை வெளியே எடுக்கு முன்னாடியே நசுங்கிப் போயிடுது..

oOo

”எந்திரனுக்கு அப்புறம் என்னடா” அப்படீன்னு இரண்டு வயசு சமீயாவைக் கேட்டத்ற்கு உடனே வந்த பதில்..

எந்திரன்
O - திரன்
P - திரன்
Q - திரன்
R - திரன்
S - திரன்
T - திரன்
U - திரன்
V - திரன்
W - திரன்
X - திரன்
Y - திரன்
Z - திரன்

முழுதும் சொல்லிவிட்டுத்தான் மூச்சே விட்டாள்.. அவள் சொன்ன வேகத்தில் எனக்கே மூச்சு முட்டியது..