Wednesday, August 22, 2007

55. வாத்தியாரப் பத்தி.. எல்லாரும் எழுதுங்கய்யா...!!

நம்ம சிந்தாநதி.. ஆசிரியர் தினத்துக்காகப் போட்டி அறிவிச்சிருக்காரு.. உங்களுக்கும் பரிச் உண்டு.. நீங்க எழுதிய ஆசிரியருக்கும் பரிசு உண்டு..



இதனால் பல நல்ல விஷயங்கள் வெளீயில வரும்-னு நம்புறோம்...



தயவு செஞ்சு எழுதுங்க..







ச்சின்ன வயசுல என்னையெல்லாம் உக்காத்தி வெச்சுப் பாடம் சொல்லிக்கொடுத்த அந்த ரொம்ப நல்ல ஆசிரியர்கள் இல்லாம இருந்திருந்தால்.. நானெல்லாம் .. இந்தப் பையன் மாதிரி பஞ்சு மிட்டாய் விக்கத் தான் போயிருப்பேன் !!
இப்ப ப்திவுலகத்துல இருக்கற நிறைய பதிவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களென்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்..
ஆசிரியர் தொழில் மாதிரி நன்றியும் உடனடிப் பாராட்டும் கிடைக்காத தொழில் உலகத்துல கிடையாது...
என் வேலையில யெல்லாம் நான் ஏதாவது நல்லா பண்ணினால்.. அன்னிக்கே யாராவது பாராட்டிடுவாங்க.. அல்லது பாராட்ட வெச்சிடுவேன்...

இந்த ஆசிரியர் தொழில்ல பாருங்க.. மாணவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கினா.. 'மாணவன் புத்திசாலி' என்ற பெயர் வருமே தவிர.. ஆசிரியர் புத்திசாலி என்றோ நல்லவரென்றோ யாரும் சொல்வதில்லை..

ஆனா இதே மாணவன் சரியாகத் தேர்வாகவில்லையென்றால்.. உடனடிப் பழி.. ஆசிரியர் தலையில் விழும்.. "வாத்யார் சரியில்ல சார்... அப்புறம் எப்படிப் பசங்க படிப்பாங்க..." என்பது தான் பேச்சாக இருக்கும்..
நல்லா.. யோசிச்சுப் பாருங்க...

உங்களுடைய முன்னேற்றத்துல.. இப்ப நீங்க இருக்குற நிலைமைக்கு நிச்சயம் பல ஆசிரியர்கள் காரணமாக இருப்பார்கள்..
உங்களுக்கு நினைவில்லையென்றால் உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்.. நிச்சயம் நினைவூட்டுவார்கள்..
அந்த ஆசிரியர்களையெல்லாம் நினைவூட்ட ஒரு சந்தர்ப்பம் இது.. அவங்க செஞ்ச நன்மைக்கெல்லாம்..இப்ப ஒரு பாராட்டாவது.. பாராட்டி எழுதுங்க.. அவங்க மனசு குளிரும்...
தயவு செஞ்சு...

பரிசு பெற வாழ்த்துக்கள்..
காதைக் காமிங்க.. சிந்தாநதி சொன்ன மாதிரி.. ச்சின்ன பரிசெல்லாம் இல்லை.. நிஜமாவே.. பெரிய பரிசாத் தரத்தான் ஆசைப்படறோம்..
முடிஞ்சால் உங்க தங்கமணி/ரங்கமணியையும் எழுதச் சொல்லுங்க.. பரிசு ஒரு பட்டுப்புடவைக்காவது நிச்சயம் ஆகும்...

54. என்னே கலைஞரின் சொற்சிலம்பம்..!!

கத்தரிக்காய் வாங்க கடைக்குப் போறீங்க-ன்னு வெச்சுக்கலாம்....

எல்ல எடத்துலயும் கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய் ன்னு போட்டிருக்கு-ன்னு பாக்கறீங்க...ன்னும் வெச்சுக்கலாம்.. (எனக்கு சென்னயில் இப்ப கத்தரிக்காய் என்ன வெலைன்னு தெரியாது... விவசாயி இளா கிட்ட தான் கேக்கணும்... )

ஒரே ஒரு ஆளு மட்டும் "கத்தரிக்காய் கிலோ 100 ரூபா" னு போட்டிருக்காருனு வெச்சுக்குவோம்..

அவர் கிட்ட போயி, "என்னப்பா.. கத்தரிக்காய் கிலோ 100 ரூபா சொல்றே.. கொறக்கக் கூடாத.. அங்கேயெல்லாம் கிலோ 10 ரூபா தானே சொல்றாங்க.." அப்படீன்னு கேட்டாக்க.. அவர் என்ன சொல்லலாம்?


  1. "சார் இது சிங்கப்பூர் கத்தரிக்கா சார் .... நேத்து ராத்திரி பிளேன் ல வந்துது சார்"
  2. 'எனக்கு வாங்கின வெலையே கிலோ 95 ருபா சார்..'
  3. "இது ஸ்பெஷல் உரம் போட்டு வெளஞ்சுது சார்... இத்ச் சாப்பிட்டா.. நோய் வராது சார்.."

இந்த மாதிரி ஏதாவது சொன்னால்... செய்தி உண்மையோ.. பொய்யோ.. சொல்வதில் ஏதோ ஒரு நியாயமோ அல்லது.. ஒரு கத்தரிக்காய் சம்பந்தப்பட்ட வேல்யூ இருப்பதாகத் தெரிகிறது...

அதை விட்டிவிட்டு.. "நான் ஏழை சார்.... அதனால தான் கிலோ 100 ரூபாய் போட்டிருக்கேன்.." அப்படீன்னு சொன்னா.. அதுல என்ன நியாயம் இருக்கு -ன்னு ச்சொல்றது????

oOo

கத்தரிக்காயை விடுங்க.. கலைஞருக்கு வாங்க...

எனக்குத் தெரிஞ்சு... இது வரைக்கும் எந்தக் கேள்விக்கும் கலைஞர் பதில் சொல்லாமலேயே இருந்ததில்லை... கேள்வி கேக்குறவனுக்கு எல்லாம் பதில் கிடைக்கணும் என்பது ஒவ்வொருவனின் அடிப்படை உரிமை-ன்னு நம்பி பதில் சொல்பவர் போலே தான் (அது தனக்குத்தானே.. கேட்டுக்கிட்ட கேள்வியாக இருந்தாலும் ..) எனக்குத் தெரிகிறது...



அந்த பதிலில் கேட்டவனுக்குத் திருப்தியோ .. அல்லது பாதிக்கப் பட்டவனுக்கு ஆறுதலோ.. கெடச்சாலும் கெடைக்கா விட்டாலும்.. தமிழ்மொழி.. ஒரு இஞ்ச்சாவது வளர்ந்திருக்கும்-னு நம்புற உடன்பிறப்புக்கள் இருக்கத்தான் இருக்காங்க...

அப்புறம்.. கலைஞரின் நாவன்மையென்றோ.... சமயோசிதமான பதில் என்றோ.. எதிர் கட்சியின் வாயைச் சாதுர்யமாக அடக்கினாரென்றோ பதிவோ புத்தகமோ எழுதிட்டாப் போறது....!!

அது போல கலைஞரின் சமீபத்திய சொற்சிலம்பம்...

கேள்வி: தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றதே.. ஏன்?

கலைஞரின் நாவன்மை: தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள்.. தமிழகத்தின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு தான் இருக்கிறது...

பாராட்டாமல் இருக்க முடியவில்லை....

Wednesday, August 15, 2007

53. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போண்டா சாப்பிடுவாரா?

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி போண்டா சாப்பிடுவாரா? வலையுலகில் பெரிய கேள்வி அதுதான்..

நமக்கெல்லாம் போண்டா-ன்ன உடனேயே யாரு ஞாபகம் வரும்-னு எல்லோருக்கும் தெரியும்..

தமிழ் வலையுலகின் மூத்த பதிவர், வலையுலக டெண்டுல்கர்.. இணைய உலக முதல் பிரபல போண்டாப் பிரியர்.. டோண்டு மாமா ஞாபகம் வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை..


நம்ம ரஜினி சாருக்கும் போண்டா.. அதுவும் பெங்களூரூ போண்டா சாப்பிடணும்-னு ஆசை வந்திடிச்சாம்...


நம்ம ரசிகர்களெல்லாம்.. அவர் கட் அவுட்டுக்கு.. பாலாபிஷேகம் பண்ணிக்கிட்டிருக்கச்சே...


அவர் மாறு வேடத்துல......டோண்டு சார் பிஸியா இருக்கறதுனால.. அவர் மாதிரி இருக்கற் ஒருத்தர் கூடப் போயி.... போண்டா சாப்பிட்டு வந்திருக்காராம்...





நீங்களே பாத்துக்குங்க...!!!!



வலது பக்க கடைசியில இருக்கிறவர் நம்ம வலையுலக டெண்டுல்கர் மாதிரியில்லை... !!!!!

பி.கு: நல்ல வேளை இந்தப் படம் நம்ம விகடன் ஆசிரியர்கள் கண்ணில் படவில்லை.... பட்டிருந்தால்.. "சூப்பர் ஸ்டாரின் போண்டா பயணம்.. எக்ஸ்குளூசிவ் போட்டோக்கள்" என்று விகடன் முத்திரை வாட்டர் மார்க்கோட படங்கள் போட்டு... போகும வழியில் அவர் சொன்னதா ஒரு 38 குட்டிக் கதைகளையும் சேர்த்து... ஒரு 24 வாரத் தொடர் எழுதியிருப்பாங்க!!

தொடரின் முடிவில் சூப்பர் ஸ்டார் கிட்ட கேட்டு ஒரு 4 வார பேட்டியும்.. அவருக்குப் பிடித்த மாதிரி எப்படி போண்டா போடுவது என்ற ரெசிப்பியும் கேட்டு வாங்கி.. தூள் கெளப்பியிருப்பாங்க..

நம்ம அதிர்ஷ்டம்...

Tuesday, August 14, 2007

52. இவனுங்களைப் பொட்டியோட வூட்டுக்கு அனுப்பணும்

எனது சென்ற பதிவான "51. இந்திய ஐ.டி துறையினரிடம் திறமைக்குறைவா?" என்பது பற்றி சென்னையில் உள்ள என் ஐ.டி நண்பரிடன் தொலை பேசினேன்.

"ராஜா.. இதெல்லாம் ஐடி துறையில மட்டும் இப்ப நடக்குறது இல்ல.....அதுக்கும் மேல....."


நண்பர் ஐ.டி துறையில் வேலை பார்த்தாலும் அவர் மனைவி ஒரு திறமையான மருத்துவர். அதனால் மருத்துவத் துறையில் நடப்பதைப் பற்றி நண்பருக்கு விரிவான் செய்தியறிவு இருக்கும். சமயத்தில் பத்திரிகையில் வராத செய்தியெல்லாம் "குமுதம் ரிப்போர்ட்டர்" பாணியில் சொல்லுவார். இன்று அவர் சொன்ன செய்திகள் 'பகீர்' ரகம்.



1. இவரைப் போல் இன்னொரு நபரும் டாக்டர் மனைவியை வைத்து அறுவை சிகிச்சை கிளினிக் நடத்துகிறார். ஒவ்வொரு அறுவைச் சிகிச்சையின் போதும் மயக்க மருந்து நிபுணருக்கு அதிகம் பணம் தரத் தேவையாய் இருக்கிறதே என்று யோசித்த இந்த நபர், மருத்துவம் படிக்காத இந்த நபர் , யாரிடமோ சென்று 3 நாட்கள் வகுப்பு எடுத்து வந்தாராம். அது முதல் வரும் எல்லா அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இவர் தான் மயக்க மருந்து தருவாராம். இவர் இருப்பது சென்னையில்....
சமீபத்தில் இவர் சிகிச்சையளித்த ஒரு நோயாளி, இவரின் தவறான சிகிச்சையால் (தேவைக்கு அதிகமான மயக்க மருந்தாலோ அல்லது தரப்பட்ட விதத்தாலோ..) நீண்ட கோமாவுக்குச் சென்று விட்டாராம். நோயாளியின் சொந்தங்களும் .. குல தெய்வத்தை கண்டபடி திட்டி விட்டு நோயாளியுடன் வீடு சென்று விட்டனராம்.
2. இன்னொரு செய்தியில் .. நடு இரவு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அவரின் மகப்பேறு நிபுணர்.. தூக்கத்தைக் காரணம் காட்டி உதவிக்கு வர மறுத்து விட்டாராம்.. அருகிலிருந்த ஒரு குழந்தைநல மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டியாகிவிட்டதாம்..

இவரிடம் கேட்டது போதாதென்று.. இன்றைய செய்தியில் மதுரை சிவா (போ)பாலி கிளினிக் பற்றி செய்தி வேறு.. இந்த செய்தியில் நோயாளி இறந்தே விட்டாராம்.. அதற்கு அந்த டாக்டரின் விளக்கம் அதிர்ச்சியுற்வே செய்தது..
சிவா பாலிகிளினிக் டாக்டர் சிவகுருநாதனை அவரது வீட்டில் சந்தித்தோம். "என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டுறாங்க" என்றவர், அது பற்றி விளக்கினார்.

"மீனாவின் வயிற்றைக் ஸ்கேன் செய்தபோது கட்டி இருந்தது தெரிய வந்தது. எல்லா டெஸ்ட்டும் செய்து பார்த்த பிறகு, மாலை நான்கு மணியளவில் ஆப்பரேஷன் தொடங்கி நல்ல படியாக முடிந்தது. சீனியர் டாக்டர் அதியமான் என்பவர் ஆப்பரேஷன் செய்தார். ஆப்பரேஷனுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு குறைந்து வியர்க்கத் தொடங்கியது. அரசு ஆஸ்பத்திரிக்குப் போக ஆம்புலன்ஸில் ஏற்றி ஐநூறு ரூபாயும் கொடுத்து அனுப்பினேன். இங்கிருந்து புறப்படும் வரை உயிருடன் தான் இருந்தார். அவர் இறந்ததற்குக் காரணம் தெரியவில்லை..."



இந்த மாதிரி டாக்டர்களையெல்லாம்.. இது மாதிரி மூட்டை கட்டி எங்கயாவது அனுப்பி விட்டு....

அறுவைச் சிகிச்சை முடித்த பின்னரும் உயிரோட இருக்குற பேஷண்ட்டுகளோட சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கிற இந்த மாதிரி அழகான டாக்டர்களை நமது நாடு உருவாக்க வேண்டும்...



பி.கு: ச்சின்னதோ பெரியதோ.. அறுவை சிகிச்சை செய்து கொண்ட எந்தவொரு நோயாளியையும் கேட்டுப் பாருங்கள்.. அவங்களுக்கு அவங்க டாக்டர் எவ்வளவு அழகாகத் தெரிகிறார்களென்று.... உயிர் கொடுத்த எல்லா தேவதைகளுமே அழகிகள் தான்.. நம்மை ஈன்ற தாய் உட்பட....


Saturday, August 11, 2007

51. இந்திய ஐ.டி. துறையினரிடம் திறமைக்குறைவா..?

அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தன் வேலை பார்க்கும் இடத்தில் சில இடங்களை நிரப்ப வேண்டுமென்றும் தகுதியான் நபர்கள் நண்பர்களிருந்தால் தெரிவிக்கும்படியும் சொன்னார்...

அவர் சமீபத்தில் நிறைய பேரை (குறிப்பக இந்தியரை) நேர்முகத்தேர்வு செய்திருந்ததால் அவரின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..

அவர் சொன்னதிலிருந்து சில கருத்துக்கள்:




  1. இந்திய ஐ.டி துறையினரிடம் (அதுவும் இளைய .. 26லிருந்து 35 வயதுக்குட்பட்டோரிடம்) திறமைகள் தற்போது கேள்விக்குரியதாகவெ இருக்கிறது. அவரவர் resume-ல் சொல்லப்படும் திறமைகளையும் அடிப்படை அறிவுத்திறன்களும் நிரூபிக்கக்படும் அளவு இல்லை.
  2. அடிப்படை கணிணி சார்ந்தத அறிவுத்திறன் ரொம்பக் குறைவாகவே இருக்கிறது
  3. நேர்முகத் தேர்வுக்கும்.. தொழில் சார்ந்த கேள்விகளுக்கும் திறமையாக பதில் சொல்ல இயலாதவர்களாகவே இருக்கிறார்கள்.
  4. வசதியான வேலை (அன்றாட வாழ்க்கையில் சுலபமான வேலை) அல்லது சவலான வேலை இரண்டுக்கும் வாய்ப்புகள் வரும் பட்சத்தில் சவாலான வேலை எடுத்துச் செய்யும் மனோபாவம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதெல்லாம் நண்பர் படித்த் குறைபாடுகள். நிறைகள் இல்லாமலில்லை. அவரை பொருத்த மட்டில் 25 பேர் வரை இண்டர்வியூ செய்தும் ஒருவர் கூட திறமையாகத் தேற்வில்லையே என்ற ஆயாசம் தெரிந்தது..


இவர் சொன்ன குறைகள் பட்டியலை எடுத்துக் கொண்டு TCS மற்றும் Infosys கம்பெனிகளில் மேலாளர்களாக இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் கருத்துக் கேட்ட பொழுது.. அவர்கள் சொன்னது..

  1. இந்த்ப் பிரச்னை கல்லூரிகளிலேயே தொடங்கி விடுகிறது. நமது கல்லூரிகள் பெருகிய அளவு திறமையான பேராசிரியர்கள் பெருகவில்லை.. சென்ற ஆண்டு படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத மாணவர்களே இந்த ஆண்டு விரிவுரையாளர்களாக வரும் போது என்ன தரம் மாணவர்களுக்குக் கிடைத்து விடுகிறது?
  2. மற்றும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் (திறமையோ பாடப்பிரிவோ இல்லை) மட்டும் (for example applications testing, operations or bug-fixing அல்லது ஆணி பிடுங்குவது..) திறமைகளை வளர்த்துக் கொள்வதால் மற்ற துறைகளில் அவ்வளவாகச் சோபிக்க முடிவதில்லை
  3. இப்பொழுது IT இளைஞர்களில் கவனத்தைத் திருப்பும் விதமான் பல விஷயங்கள் பெரூகிவிட்டதால் கற்பதில் அவர்கள் ஆர்வம் குறைந்து விடுகிறது.
  4. முக்கியமாகத் தமிழ் IT இளைஞர்கள் விகடன், குமுதம் என்று இறங்கி விடுகிறார்கள்.. அலுவலக நேரத்தில் இந்தத் தளங்களைப் படிக்காத தமிழர்களே இல்லை என்றார்
  5. இந்தியாவில் இப்பொழுது சவாலான வேலைகள் கிடைப்பதில்லை.
  6. இப்பொழுதெல்லாம் இந்தியாவில் 2 வருடம் .. 3 வருடம் வேலை பார்த்தவனெல்லாம் project lead.. 5 வருடம் வேலை பார்த்தவன் project manager அதுக்கு மேலே வேலை பார்த்தவன் client account executive என்று ஆகும் போது அவன் மூன்றாவது வருடத்திலிருந்தே hands-on experience-ஐ விட்டு விடுகிறான்

நிலைமை இருவர் சொன்ன மாதிரியும் அவ்வளவு மோசமானதாக இல்லை என் நான் பூரணமாக நம்புகிறேன்.... நான் இந்தியாவை விட்டு வந்து இப்பொழுது 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ ஓரிரண்டு வாரங்கள் சென்று வருவதால்.. எனக்கென்று கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் அளவு என்னிடம் உறுதியான் செய்திகளில்லை..

தமிழில் வலை பதிபவர்கள் அதிகம் ஐடி துறையினராதலால்.. உங்கள் கருத்துக்கள் என்னெவென்பதைச் சொல்லுங்களேன்..

அறிய ஆவலாயுள்ளேன்..

Wednesday, August 08, 2007

50. தாலாட்டுகளும்.... காமெடிகளும்...


1975-ல் மயிலாடுதுறையில் நடந்ததாக என் அப்பா சொன்னது:

10 வயது பெண்ணொன்று அவள் தங்கையைத் தூளியில் போட்டுத் தூங்க வைத்துக்கொண்டிருந்த போது பாடிக்கொண்டிருந்த ..தாலாட்டு....


நான் கேட்டேன்.. அவன் தந்தான்..
தா...லா...ட்டும் தா..யா...னேன்..........

(அப்பொழுது பிரபலமான ஒரு மெலோடியஸ் பாட்டு.. எனக்கும் பிடிக்கும்)..

அதன் அர்த்தத்தையும் பாடும் பெண்ணின் வயதையும் சூழ்நிலையையும் நினைத்து வியந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார்..


oOo

1990 களில் என் நண்பன் மார்ட்டின் சொன்னது:

வாசு.... (என்னை வாசு என்று வித்தியாசமாகக் கூப்பிடும் வெகு சிலரில் ஒருவன்..)

என் தங்கையை ஒரு நாள் ..தூளியில் வைத்து தூங்கப் பண்ணிக்கிட்டிருந்தேன்.. அப்ப ஒரு பாட்டுப் பாடினேன்...

அப்பத் தான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த எங்க அப்பா என்னை பெல்டை வெச்சி விளாசியெறிஞ்சுட்டாருடா...

"அப்படி யென்னடா மச்சி.. பாடினே..?" - இது நான்

"மாங்கா திருடி திங்கிற பொண்ணே மாசம் எத்தனையோ?.." - எம்ஜியார் பாட்டுப் பாடினேன் என்றான்..


oOo

2007-ல் (அமெரிக்கவில் வசிக்கும்) என் நண்பர் அரவிந்தன் சொன்னது...

"இன்னிக்கு என் ச்சின்னப் பையனைத் தூங்கப் பண்ண பாட்டுப் பாடிக்கிட்டிருந்தேன் வாசன்... "

"என்னப் பாட்டுங்க..?"


"உதயகீதம் படத்திலிருந்து... ஒரு பாட்டு..'

"பா..டு நிலாவே..." என்று தொடங்குமே அது...

அந்தப் பாட்டுல.. வரும்....

"பால் கொடுத்த நெஞ்சிலே... ஈரம் இன்னும்... காயலே....
பால் மணத்தைப் பார்க்கிறேன்... பிள்ளை உந்தன் வாயிலே..."


இந்த வரிகளைப் பாடி முடித்ததும்.. அவர் 9 வயது பையன் யஷ்வந்த் சொன்னது..

"Daddy.. Stop singing that song.... you are singing girly stuffs.."

Tuesday, July 24, 2007

49. ஐயா, நலமுடன் எழ வேண்டும் ...

குள்ளமான உருவம்.. சட்டென்று லாலு பிரசாத் யாதவை நினைவு படுத்தும் வட்டமான முகம். நெற்றியில் எப்பொழுதும் திருமண். கண்ணியமான தோற்றம். தன்னலமற்று .. எல்லோர் நலமும் வேண்டி.. எப்போதும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் மனம்..


ஆசிரியராக வேலை பார்ப்பதாக நினைக்காமல் ஆசிரியராகவே வாழ்பவர்...


மாணவர்களுக்கு தான் படித்த தமிழ் மட்டுமின்றி.. இசையும், ஆன்மீகமும், அறநெறியும் கலந்து போதித்தவர்...


ஐம்பத்தியிரண்டு வயதிலும் மாணவனாக .. ஆராய்ச்சி மாணவனாக மாறி முனைவர்பட்டம் பெற்றவர்...


எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...



கம்பரையும் வால்மீகியையும்.. கரைத்துக் குடித்தவர்.. வில்லி பாரதத்தில் வித்தகர்.. பிரபந்த்த்தில் மூழ்கித் திளைத்தவர்...



oOo



மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது.. ஒவ்வொரு நாளும்.. காலையில்..திரு இந்தளூரிலிருந்து டாக்டர் இராமமூர்த்திசாலை வழியாக நடந்துதான் பள்ளிக்கு வருவார். வரும் வழியில் தான் அவர் படித்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி.. ஒவ்வொரு நாளும் அங்கு வரும் பொழுது.. சில விநாடிகள்.. நின்று.. காலணிகளைக் கழற்றி.. தான் படித்த ப்ள்ளியை வணங்கி விட்டுத் தான் தொடருவார்... இது ஒவ்வொரு நாளும் காணக்கிடைத்த காட்சி..



இப்படிப்பட்ட ஆசிரியரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்..


oOo


ஆசிரியர் இப்பொழுது நோய்வாய்ப் ப்ட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சுயநினைவின்றி இருக்கிறார். அவரைப் பற்றியும் அவர் நோயைப் பற்றியும் எங்கள் நண்பர் டாக்டர் திருமதி டெல்பின் விக்டோரியா அவர்கள் அவர் பதிவில் எழுதியுள்ளார்கள்..



எல்லா மருத்துவ சூழ்நிலைகளையும் தாண்டி.. எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் மீண்டு எழ.. எல்லாம் வல்ல இறைவன்.. திருமருந்தீஸ்வரரின் செல்லப் புதல்வர்.. ஆசிரியர்க்கெல்லாம் முதன்மையான் ஆசிரியர்.. என் மனம் நிறை தெய்வம்.. எல்லோரையும் காத்து நிற்கும் வைத்தீஸ்வரன்கோயில் செல்வமுத்துக்குமரசாமியை வேண்டுகிறேன்...





பி.கு: அன்புநிறை நம் ஆசிரியரின் மருத்துவச் செலவுகளுக்கு உதவவிரும்பும் முன்னாள் மாணவர்கள்.. பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.


Sunday, June 03, 2007

47. இப்படியெல்லாம் நாம் மாற முடியுமா?

நான்கு வயது மட்டுமே நிரம்பியுள்ள என் இளைய மகளிடம் பேசிக் கொண்டிருந்த போது கற்றுக் கொண்ட ஒர் யோசிக்க வேண்டிய விஷயம்..



குழந்தையின் கை விரல்களில் கொஞ்சம் பெரியதாக வளர்ந்து விட்ட நகங்களை கவனித்துவிட்டு அதை வாராவாரம் வெட்டிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அவள் நகங்களை வெட்டிக் கொண்டே அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

"ஏண்டா, கண்ணம்மா .. நகமெல்லாம் இவ்வளவு வள்ர்ந்திருக்கே.. அம்மா கிட்ட சொல்லி வெட்டிக்கக் கூடாதா? இங்க பாரு அப்பா மேல scratch பண்ணிட்டே பாரு.. அப்பாவுக்கு வலிக்காதா?"

"சாரி டாடி.. நான் வேண்டுமென்றே செய்யவில்லை.. அது ஒரு ஆக்ஸிடெண்ட்... "

(என் கையில் கீறியிருந்த இடத்தில் ச்சின்னதாக ஒரு முத்தம் தந்தாள்.)

"இப்ப வலிக்கலைடா செல்லமே.. இனிமேல் நகத்தை சரியாக வெட்டிக்கோ..!"

"சரி டாடி.. என் டீச்சர் Jodi .. அவங்க கையில் பெரிய பெரிய நகங்கள் வளர்த்து இருக்காங்க.."

"அப்படியா... அப்ப அவங்க.. க்ளாஸில் உன்னைத் தொடும் போது எப்பவாவது உன்னை hurt பண்ணியிருக்காங்களா?"

(தகப்பனுக்கான ஜாக்கிரதை உணர்ச்சியில் இந்தக் கேள்வி வந்தது.. இதற்கு என் மகள் தந்த பதில் தான் என்னை யோசிக்க வைத்து விட்டது.. அவள் பதில் அவள் வார்த்தைகளிலேயே.. )

She is my TEACHER daddy... How can she HURT ME?

"She is my TEACHER" என்ற இடத்தில் ஒரு பெருமையின் பிரதிபலிப்பு... "How can she HURT me?" என்ற இடத்தில் நிச்சயமாக என் ஆசிரியர் என்னைக் காயப்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு அதீதமான நம்பிக்கை என்னை ஆச்சர்யப் படுத்தியது..

நாமெல்லாம் வளர்ந்த பொழுது "ஏதாவது விஷமம் பண்ணினால் .. வாத்யார் கிட்ட சொல்லி அடிக்கச் சொல்வேன்" என்று சொல்லித்தான் வளர்க்கப் பட்டோம். ஆசிரியர் என்பவரே ரொம்பக் கண்டிப்பானவர் என்று உருவகிக்கப் பட்டுத் தான் நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கப் பட்டது.

இங்கு அமெரிக்காவில் என் மகள் படிக்கும் பொழுது அவளின் வார்த்தை ஒரு பெரிய சிந்தனையை என்னுள் தோற்றுவித்து விட்டது... என்றாவது நம் சமூகம் இது போன்ற அன்பான பாதுகாப்பான சிந்தனைகளை நம் குழந்தைகளிடம் வளர்பதற்கான சூழ்நிலைகள் நம் நாட்டில் தோன்றுமா?

இதற்கு நடுவில் "எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியரின் செக்ஸ் குறும்பு" போன்ற ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் டைப் தலைப்புக்கள் வந்து ... நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது..

எங்கு.. எந்த இடத்தில் தவறு ஆரம்பமாகிறது? எப்படித் தடுப்பது?

46. எங்க ஸ்கூல் பொண்ணூ.. மாநிலத்திலேயே III Rank

நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில், ஐநூறுக்கு 488 மதிப்பெண்கள் மாநிலத்திலேயே மூன்றாவதாக வந்த எங்கள் பள்ளி (மயிலாடுதுறை தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப் பள்ளி) மாணவி, ஆர்த்திக்கு தமிழ் வலையுலக மயிலாடுதுறை மாஃபியா மன்ற சார்பாக வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறோம்..


ஆர்த்தியின் அம்மா எங்கள் பள்ளியில் தமிழாசிரியையாக இருக்கிறார் என்பது மற்றுமொரு பெருமைக்குரிய செய்தி...





இந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், மாநில அளவில் எல்லா முதன்மை இடங்களையும் பெண்கள் கைப்பற்றியிருக்க, தனியொருவனாக மூன்றாம் இடத்தில் அமர்ந்து ஆண்கள் குலத்தின் மானம் காத்த கடலூர் கார்த்திகேயனுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்..


வருடாவருடம் தவறாமல் முதன்மையாளர்கள் பட்டியலை ஆர்வமாக கவனித்து வருபவன் நான். கவனிக்கத்தக்க வகையில், இந்த வருடம் ஐநூறுக்கு 489 மதிப்பண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்ற இஸ்லாமிய சகோதரி ஜமீமா சுலைகா வுக்கு சிறப்புப் பாராட்டுக்கள்.. மதக் காரணங்களை முன்னிட்டோ அல்லது குடும்பக் காரணங்களாலோ இவர் படிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து படித்து நல்ல நிலையில் உயர்ந்து இஸ்லாமிய சமூகத்துக்கும் நம் நாட்டுக்கும் சேவையாற்றிட என் நல்லெண்ணங்களும் நல்லாசிகளும்.







Monday, May 14, 2007

45. ரொம்பக் காஸ்ட்லி முத்தங்கள் !!


தமிழகத்தில் இந்த வருடம் +2 தேர்வுகளில் ரம்யா, ரூபிகா என்ற மாணவிகள் முதலிடம் வந்துள்ளனர்.

ரம்யா 1200 க்கு 1182 மதிப்பெண்களும் ரூபிகா 1180 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.

இந்த மதிப்பெண்கள் எடுத்த்தின் பின்னால் உள்ள உழைப்புதான் எத்தனை !!

நானும் இதுபோல் எடுக்க வேண்டும் என்று முயற்சித்து ஒரு சில மதிப்பெண்களில் இந்த முதல் ரேங்க்கைக் கோட்டை விட்டவன் என்ற முறையில் அதன் பின்னாலுள்ள உழைப்பையும் தியாகத்தையும் உணர முடிகிறது...





எத்தனை தூக்கமில்லாத இரவுகள்..

எத்தனைத் தியாகங்கள்.. அந்தந்த வயசுக்கு மீறிய தியாகங்கள்.. சாதாரண் ஆசைகளைக் கூட 'தேர்வுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம்' என்று ஒத்திப்போடுவதற்கு முன் எத்தனை ஏக்கங்களைப் புறந்தள்ள வேண்டியிருந்திருக்கும்.

எல்லாம் எதற்காக.. இந்த ஓரு தருணமும்... அந்த பெற்றோரின் பெருமித முத்தத்திற்காகவும் தானே !!!

நன்றாக படித்து இன்று வெற்றி வாகை சூடியுள்ள ரம்யாவுக்கும் ரூபிகாவிற்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள் !!

என்னைப் போன்று.. குறைவில்லாமல் உழைத்து, இந்த முதலிரண்டு இடங்களைக் கோட்டைவிட்ட அனனத்து மாணவ நெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்கள் !!!

நன்றாகப் படியுங்கள்.. உங்களின் தேவை நாட்டிற்குத் தேவை !! உங்களைப் போன்றவர்களின் எதிர் காலத்தில் தான் நம் நாட்ட்டின் எதிர்காலமும் உள்ளது...