Tuesday, April 27, 2010

97. சீமாச்சுவின் தாம்பூலம் - 28 ஏப்ரல் 2010

பள்ளியில் நாம் படிக்கும் போது நமக்கு அமையும் ஆசிரியர்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றங்களை உண்டாக்குகிறார்களென்பது வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரைச் சந்திக்கும் போதும் உணரமுடியும். ஆனந்த விகடனில் வரும் ஒரு தொடரில் உதயச்சந்திரன் IAS அவர்களின் பேட்டியிலிருந்து சில வரிகள்..

பள்ளியில் குமாரசாமின்னு ஒரு சார்தான் எனக்கு சரித்திரம், பூகோளம் பாடங்கள் எடுத்தார். வகுப்புக் குள் நுழைந்ததும் 'குப்தர்கள் காலம்'னு கரும்பலகையில் எழுதிட்டு, 'ராஜஸ்தான் முதல்வர் யார்?', 'கியூபாவின் அதிபர் யார்?'னு தினமும் சில பொதுஅறிவுக் கேள்விகளோடுதான் பாடங்களை ஆரம்பிப்பார். அவருக்காகவே பள்ளிப் பருவத்திலேயே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் வந்தது. அந்தப் பழக்கம் கல்லூரிக்குள் கால் வைக்கும்முன்னரே தி.ஜா., சுந்தர ராமசாமி போன்றோர்களைப் பரிச்சயப்படுத்தியது. பொது அறிவு, தமிழ், இலக்கியம்னு என்னைச் சுத்தி அமைஞ்ச சூழலை கல்லூரிப் பருவம் வரை அபாரமாக் கிரகிச்சுக்கிட்டேன்!''

உதயச்சந்திரன் IAS
வய்து 38
நிர்வாக இயக்குநர்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்





நான் படித்த எங்கள் ஊர் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளியில் இதுபோல நிறைய ஆசிரியர்கள் மாணவர்க்ளின் முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தார்கள்.. எனக்கு அமைந்த ஒவ்வொரு ஆசிரியருமே நான் பெற்று வந்த வரம் தான்.

ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் என் மகளுக்கு சென்ற வாரம் என் மகளுக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிந்த்து நான் என் ஒன்பதாம்/பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி ஐயரை (Shri SK sir) அவர்களை எனக்குத் தெரியாமலேயே இமிடேட் செய்து கொண்டிருந்தேன் என்பது. எனக்குக் கணித்த்தில் இயல்பாகவே ஈடுபாடு இருந்ததென்றாலும், அதைப் பலவகையில் தூண்டி என்னை வளர்த்தது என் ஆசிரியர் என்பதை என்னால் எங்கும் தெளிவாகக் கூற முடியும்.

எங்கள் பள்ளி ஆர்குட் குழுமத்தில் 1990 களில் எங்கள் பள்ளியில் படித்த மாணவரொருவர் எழுதிய பின்னூட்டம் "எனக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்த ஜெயசீதா மேடம் எனக்குத் தெய்வம் போன்றவர்.. அவர் மட்டும் எனக்கு ஆசிரியராக அமைந்திராவிட்டால் என் இக்காலத்தை என்னால் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது"

oOo

குமுதம் ரிப்போர்ட்டரில் நித்யானந்தா பற்றி சாரு நிவேதிதா எழுதி வரும் தொடர் பெரிய அபாண்டம். நித்யானந்தா செய்ததையோ அல்லது அவர் சீடர்களின் நம்பிக்கையைக் குலைத்ததையோ நான் மறுக்க வில்லை. ஆனால் அவரைப் பற்றி சாரு எழுதுவது அவதூறு என்பது மட்டும் அந்தத் தொடரைப் படித்தாலே புரியும். ஒரு கணவன் மனைவிக்கிடையில் விவாகரத்து நடக்க் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதை விட்டு விட்டு நித்யானந்தாதான் குடும்பத்தைப் பிரித்து விட்டார், சொத்தை அபகரித்து விட்டார் என்றெல்லாம் எழுதுவது கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை. அவர் எழுத்திலேயே சொல்லிவிடலாம் அவர் சொல்லுவதெல்லான் எந்த தருக்க வாதத்திலும் சேர்க்க முடியாதென்பதை..

எதை வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி வேண்டுமானாலும் மனசாட்சியில்லாமல், சாட்சியங்களில்லாமல் எழுதலாம் என்று வந்த பிறகு, இவரையெல்லாம் படிப்பவர்களை நினைத்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நியாயமாக, நல்லதாக சாரு எதை எழுதினாலும் நான் படிக்கக் காத்திருக்கிறேன். குப்பைகளைப் படித்த் பின் அதற்கான நேர விரயத்தையும் மன உளைச்சல்களையும் நினைத்தால் தான் வேதனையாகிறது.


oOo

சமீபத்தில் மிகப் பிரபலமான் ஊடக நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன், கழுகு, வம்பானந்தா இன்ன பிற பத்திரிக்கை செய்திகளைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்பொழுது அவர் சொன்னது இத்தான் " அவற்றில் வரும் அரசியல் யூகங்கள் மற்றும் செய்திகள் எல்லாம் முழுக்க முழுக்கக் கற்பனைகளே. அரசியல்வாதிகளின் பாத்திரங்களும் அந்த நிகழ்ச்சி நடக்கும் இடங்களும் உண்மைதான். மற்ற் செய்திகளெல்லாம் அவர்கள் நடத்தும் மெகா சீரியல்கள் மாதிரிதான். நன்றாகக் கூர்ந்து கவனித்தால் தெரியும். அவர்களே செப்டம்பர் மாதம் தேர்தல்.. கலைஞ்ர் மனத்தில் எண்ண்வோட்டம் என்றெல்லாம் எழுதி ஜல்லியைடிப்பார்கள். சில வாரங்கள் கழித்து அவர்களே தேர்தலை 2011 க்கு மாற்றிக் கொள்ளலாம் என்று கலைஞர் முடிவெடுத்து விட்டார் என்று எழுதுவார்கள்.. தேர்தல் என்னவோ எப்ப வேண்டுமானாலும் நடக்கும் .ஆனால் அதற்கான பரபரப்பையும் அதனைப் ப்ற்றிய யூகங்களையும், உரையாடல்களையும் கற்பனையிலேயே எழுதி காசு பார்ப்பதென்பது தான் இத்தகைய பத்திரிகையின் சாரங்கள் என்று பல் ஆதாரங்களுடன் அவர் அடுக்கிய பொழுதுதான் அதன் உண்மைமுகம் எனக்கும் புரிந்த்து.


அப்ப நம்மைப் போன்ற பொது ஜனங்களைப் பற்றி இந்தப் பத்திரிகைகள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றன்..?



oOo

நித்யானந்தாவுக்கு நெஞ்சுவலி என்று செய்தி படித்தவுடன் "பரவாயில்லையே..இவரும் அரசியல் வாதி அளவுக்குத் தேறிவிட்டாரே" என்று தான் பட்டது.. ஆனால் இன்றைய செய்தி "நித்யானந்தா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்" என்று படித்த போதுதான் செய்தியை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று புரிந்தது. "உள்நோயாளிப் பிரிவிலிருந்து discharge செய்யப்படுவதற்கு" டீசண்டான தமிழ் வார்த்தை எனக்கும் தான் தெரியவில்லை..


அது சரி, ஒருத்தர் எனக்கு நெஞ்சுவலிக்கிறதென்று சொல்லும் போது.. "அதெல்லாம் உனக்கு வலிக்கவில்லை.. நீ வீட்டுக்குப் போகலாம் என்று 6 மணி நேரத்தில் எப்படிக் கூறமுடியும்?" என்ன மாதிரி டெஸ்ட்டுக்கள் எடுத்திருந்தால் அவ்வளவு நம்பிக்கையுடன் "உனக்கு வலியெல்லாம் இல்லை.. நீ போகலாம் " என்று சொல்ல முடியும்? நெஞ்சுவலி என்று கதறிக்கொண்டு மருத்துவமனையில் தங்கியிருந்த எந்த அரசியல்வாதியையும் இது போல திருப்பி அனுப்பியதாக நான் படித்ததில்லையே? சமீபத்திய உதாரணமான் சத்யம் ராமலிங்க ராஜு கூட தீவிரக் கண்காணிப்பில் சில வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்ததாகத் தான் நினைவு.


நித்யானந்தாவை நான் ஆதரிக்க வில்லை. என்னைப் பொறுத்தவரை அவரை நான் வணங்கவோ பின்பற்ற்வோ இல்லை. சட்டம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான சலுகைகளையும் தீர்ப்புக்களையும் வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் வாழும் ஒரு சராசரி குடிமகன் தான்.

oOo


1968 ம் வருடத்திய விகடன் இதழ்களிலிருந்து இரு துணுக்குகள் :


துணுக்கு 1

லண்டன் நகரில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் தானாகவே இயங்கும் மாடிப்படி (Escalator) முதன் முதலில் 1911 ல் பொருத்தப் பட்ட போது பொது ஜனங்கள் அதில் சாதாரணமாக ஏறுவதற்கு அஞ்சியதால், அவர்களுக்கு பயம் போவதற்கும், அதில் ஆபத்து ஒன்றுமில்லை என்று காண்பிப்பதற்கும் மரக் கால்களையுடைய மனிதன் ஒருவனை அந்தத் தானியங்கி மாடிப்படிகளில் கீழேயும் மேலேயும் அடிக்கடிப் போய்வரச் செய்தார்கள்.

ஆனால் அந்த ஏற்பாடு அதிக நாட்கள் நிடீக்கவில்லை. மரக்கால் மனிதனும் சீக்கிரமே வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.

அதற்குக் காரணம் "இந்த மாதிரியான புதுமையான் கருவிகளை உபயோகிப்பதால் தான் இந்த மாதிரி ஆகிறது" என்று மரக்கால்களையுடைய மனிதனைப் பார்த்து மக்கள் அதிகமாக பயம் கொண்டது தான்.


- 1911 லேயே தானியங்கி மாடிப்படிகளும் அதுவும் பொதுமக்களுக்காக இரயில்வே ஸ்டேஷன்களில் (!!!) , மரக்கால் பொறுத்திய மனிதர்களும் லண்டனில் இருந்தார்கள். இந்தியாவுக்கு வர எவ்வளவு காலமாயிருக்கிறது !!!!!

துணுக்கு 2

கோவாவின் ஒருபகுதியில் சமீபத்தில் நடந்த் பஞ்சாயத்துத் தேர்தலில் ஒரே தொகுதியில் இரு சகோதரர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட்டார்கள் . தொகுதி மக்கள் எவ்வளவோ சொல்லியும் இருவரில் ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்து விட்டன்ர். எனவே தொகுதிமக்கள் எவரும் தேர்தலில் ஓட்டுப் போட மறுத்து விட்டனர்.

இரு சகோதரர்களும் தங்களுக்காகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அவர்களது தாயார் மூத்தவருக்கு வாக்களித்துவிட அவர் ஜெயித்து விட்டார்.


இளையவருக்கு ஒரே ஒரு (அவரது) வாக்கு மட்டும் தான். என்றாலும் அவர் டெபாஸிட் இழக்கவில்லை. காரணம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கை அவர் பெற்றுவிட்டதால் !!!

இதுக்குத்தான் 49-O வேண்டுமென்பது !!




Monday, April 26, 2010

96. உலகம் பல விதம்..

உன்னுடைய பிள்ளைகள் கெட்டவர்களாயிருந்தால் நீ அவர்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க வேண்டாம். அவர்கள் நல்லவர்களாயிருந்தால் உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை - பல்கேரியா

ஒர் ஆணி ஒரு லாடத்தைக் காக்கும்; ஒரு லாடம் ஒரு குதிரையைக் காக்கும்; ஒரு குதிரை ஒ்ரு வீரனைக் காக்கும்; ஒரு வீரன் நாட்டையேக் காப்பான் - துருக்கி

காப்பியும் காதலும் சூடாயிருந்தால் தான் ருசி - ஜெர்மனி



பதவியில் இல்லாத போது ஒருவன் கண்டிக்கிற குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிறான் - சீனா


சில வருடங்களுக்கு முன்பு, மரவண்டு என்ற கணேஷ்குமார், நிறைய தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்துத் தந்தார். ரொம்ப சுவாரசியமாக இ்ருந்தது. அவற்றில் சில.

அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்

அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை

அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்

அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்

ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு

அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்; அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்; அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு; அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்; ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்

வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான்

இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது

உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..

உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்

தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது

பழமொழியில் உமி கிடையாது

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்; மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும்

உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்

ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்





மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும் ஒரு விலாங்கும் இருக்கும்

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள் ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்

சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

பழைய இஞ்சியில் காரம் அதிகம்

உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்

பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்

மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம் விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்

தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்

தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

பின் குறிப்பு: மேலேயுள்ளவை பழமொழிகளின் தொகுப்பு மட்டுமே. அவற்றில் என் கருத்தென்று எதுவும் இல்லை. குறிப்பாக, மனைவி, திருமணம், மங்கையர் ஆகியவற்றின் மேல் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை

Wednesday, April 14, 2010

95. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு..

ரொம்ப நாள் முன்னாடி, தமிழ் செய்தித் தளத்தில் சொர்ணமால்யா நடிக்கும் ஒரு படத்துக்கான் ஸ்டில்ஸைப் பார்த்த போது சொரேரென்றது. ஒரு நல்ல நடனம் தெரிந்த நடிகை, அந்த மாதிரி ஒரு ஏடாகூடக் கோணத்தில் நடிகர் ஸ்ரீமானுடன் இருக்கும் ஸ்டில்லைக் கண்டவுடனேயே, அந்தப் படத்தை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். படமும் வெளியில் வந்து பெட்டியில் சுருண்டு விட்டது போலும். அமெரிக்காவில் வழக்கமாக நான் டிவிடி வாங்கும் கடை வரைக்குமெல்லாம் கூட படம் வரவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனபோது அவர் வீட்டில் ஒரு பெரிய அட்டைப்பெட்டி முழுக்கத் தமிழ்ப்பட டிவிடிக்கள் இருந்தன. அசுவாரசியமாகக் குடைந்து கொண்டிருந்தபோது சிக்கினார் மீண்டும் ஸ்வர்ணமால்யா. படத்தின் பெயர் "சாரி எனக்குக் கல்யாணமாயிடிச்சி". ஏடாகூடமான படமாயிருக்கும் போலருக்கே என்று வீட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு பார்த்தால் (ஹையா.. நானும் உலக சினிமாவெல்லாம் பார்க்கிறேனே... அமெரிக்காவில் உட்கார்ந்து பார்த்தால் எல்லா தமிழ்ப்படமும் இங்கு உலகசினிமாதான்..) ஒரு முழுநீள பாக்யராஜ் படம் போலத்தான் இருந்தது. ஸ்வர்ணமால்யா படு டீஸண்டாக நடித்திருந்தார். பாண்டு, எம். எஸ் பாஸ்கர் இன்னும் ஒரு நடிகர் மூவருக்கும் சபலிஸ்டான கேரக்டர்கள். கதை சாதாரணமான கதை தான். குழந்தைகள் எல்லாம் தூங்கின பிறகு மனைவியுடன் திட்டு வாங்காமல் தைரியமாகப் பார்க்கலாம்..

oOo oOo oOo


நாகலிங்கப் பூ ஒரு விசேஷமான பூ. பள்ளிக்கூட நாட்களில் ஒரே ஒரு இடத்தில் நாகலிங்கப்பூ பூக்கும் மரம் பார்த்திருக்கிறேன். மயிலாடுதுறையில் மணிக்கூண்டு அருகே ராஜ்பில்டிங் (எங்க ஊரின் முதல் பல மாடி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது) 1976ல் கட்டினார்கள். கடையெல்லாம் மேல் மாடியில் வைத்தால் யார் போய் வாங்குவார்கள் என்று விசேஷமாகப் பார்த்த நாட்கள். முதல் மாடியில் ஒரு பெரிய ஆபீஸில் மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் (DEO Office) இருந்தது. பத்தாவது பொதுத் தேர்வு முடிவுகள் வந்து ஒரு வாரம் கழித்து மதிப்பெண் தாள்கள் DEO ஆபீஸில் வந்திருப்பதாக செய்தி வந்தது. எங்கள் பள்ளியிலிருந்து தலைமையாசிரியர் P இராமசாமி ஐயரைத் தொடர்ந்து ராஜ்பில்டிங் வந்து (அவரைத் தொடர்ந்து வந்தது நாங்கள் மொத்தம் 30 மாணவர்கள் ) அவரை அலுவலகத்துக்குள் அனுப்பிவிட்டு ராஜ் பில்டிங் கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்தோம். எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மதிப்பெண்கள் மாடியிலிருக்க, இதயங்கள் இது வரையில்லாத வேகத்தில் தந்தியடிக்க, வாய் மட்டும் கந்தர் ஷஷ்டி கவசம் முணுமுணுத்துக் கொண்டிருக்க கொல்லையில் இருந்த அந்த மரத்தினடியில் பார்த்தால் நிறைய பூக்கள் உதிர்ந்து கிடந்தன. பார்த்தால் அத்தனையும் நாகலிங்கப்பூக்கள். உள்ளங்கை அகலத்தில் பெரீய்ய பூக்கள். படமெடுத்தாடும் ஐந்து தலை நாகத்தினடியில் சிவலிங்கம் இருக்கிற மாதிரி இருக்கும். பார்க்க விசித்திரமாக இருக்கும். தினமலரில் படத்தைப் பார்த்தவுடன் பத்தாம் வகுப்பு நினைவலைகள் வந்துவிட்டன.
oOo oOo oOo



என் பள்ளியின் மேல் காதல் கொண்டு நான் அலைவதைப் பார்த்து என் அப்பாவுக்கும் அவர் படித்த் பள்ளியைப் பார்க்கும் ஆசை வந்து விட்டது. அப்பாவுக்கு இப்பொழுது 92 வயது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவர் பள்ளிக்கும் போய் தான் படித்த வகுப்பறைகளையும் இன்றைய மாணவர்களையும் போய்ப் பார்த்து வந்தார். தன் பேத்திகளுக்கும் ஆசிரியர்களையும் இந்நாள் மாணவர்களையும் அறிமுகப்படுத்திவிட்டு தன்னையும் முன்னாள் மாணவராக அறிமுகம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார். 1930 முதல் 1936 வரை அப்பா படித்த உயர்நிலைப் பள்ளி அது. தஞ்சாவூர் செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி. அப்பா படித்த நினைவாக இந்தப் பள்ளிக்கும் ஏதாவது உதவிகள் செய்கிறேனென்று அப்பாவிடம் சொல்லியுள்ளேன்.

தாத்தாவின் ஸ்கூலைப் பார்த்ததில் என் மகள்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அப்பா படித்த போது இருந்த தலைமையாசிரிய ஆசிரியர்களெல்லாம் உயரே புகைப்படத்திலிருந்த அப்பாவையும் என் மகள்களையும் ஆசிர்வதித்தார்கள். பள்ளியில் படித்த் போது அதிக மதிப்பெண்கள் எடுத்து தலைமையாசிரியரிடமிருந்து பரிசாகப் பெற்ற ஷேக்ஸ்பியர் புத்தகம் இப்பொழுது என் கையில்.


oOo oOo oOo

தமிழகத்துக்கு மேலவை வரப்போகுதாம். தீர்மானமெல்லாம் நிறைவேற்றி அனுப்பியாகிவிட்டது. மேலவை என்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனாலும் இத்தனை வருடங்கள் இல்லாமல் பழகியாகிவிட்டது. இப்பொழுது எதற்கு என்பது தான் புரியவில்லை. இருக்கும் சட்டசபையே ஒரு புகழ்ச்சி மேடையாகிவிட்டது. இதில் மேலவை வேறா? ஊழல் செய்வதென்று முடிவு செய்துவிட்ட அரசியல்வாதிகள் எப்படி செய்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். என்றாவது ஒருநாள் ஒரு நேர்மையான அரசும் அதிகாரிகளும் நமக்குக் கிடைப்பார்களென்று கனவு கண்டு கொண்டிருக்கும் சாதாரண குடிமகன் நான். எந்தக் கட்சியையும் சாரவில்லை. கல்லூரியில் படிக்கும் போது நண்பரொருவர் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த திமுக உறுப்பினர் அட்டை வீட்டில் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கிறது..

oOo oOo oOo

சானியா மிர்சா இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டதில் ஒரு ரசிகனாக எனக்கு உடன்பாடில்லை.. நம்மளைக் கேட்டாக் கல்யாணம் பண்ணிக்கிடறாங்க. சொல்லியிருந்தால் நல்ல அமெரிக்க மாப்பிள்ளையாக பார்த்து நாம கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்க மாட்டோமா. ஏன், தோஹாவில் இருக்கும் நம்ம தம்பி ஆயில்யனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா? கேரளா பொண்ணுதான் வேணும்னு ஒத்தைக்காலில் நின்னுக்கிட்டிருக்கும் ஆயில்யன் போனாப் போவுதுன்னு தெலுங்குப் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்க மாட்டாரா ? போயும் போயும் பாக்கிஸ்தான் மாப்பிள்ளைதான் கிடைச்சாரா? எப்படியோ நல்லாஇருந்தால் சரிதான். எங்கிருந்தாலும் வாழ்க. வருங்காலத்தில் சானியாவை இந்தோ‍‍பாக் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கலாம்.

பிரபலமான பெண்களெல்லாம் ஏன் இரண்டாம் தாரமாகப் போவதையே விரும்புகிறார்களென்று ரொம்ப நாள் முன்னாடி ஒரு மனநல மருத்துவர் ஆராய்ந்து எழுதியிருந்தார். ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான கட்டுரை அது. நினைவிலில்லை. இப்பொழுதெல்லாம் மனநல மருத்துவரெல்லாம் தமிழ் இணையத்தில் சாதிச் சண்டை போடுவதில் ரொம்ப பிஸியென்று ஒரு பிரபல பதிவர் அங்கலாய்த்துக் கொண்டார்.. நமக்கேன் வம்பு ?


தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Tuesday, April 06, 2010

94. உங்க கிட்டே ஒரு ரூபாய்/டாலர் இருக்குமா?


நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு வழக்கமான காலை நேரம். நானும் கூட வேலை பார்க்கும் இன்னொரு நண்பரும் காபி அருந்த கஃபேடரியா போயிருந்தோம். காபி கலந்து கையில் எடுத்து வரும் போது எதிரே இன்னொரு நண்பர் வந்தார். அலுவலக்த்தில் இன்னொரு மீட்டிங் முடித்து விட்டு அவசரமாக வரும் வழியில் கஃபேடரியா வந்து விட்டார். காபி வாங்க கையில் காசு எடுத்து வரவில்லை. அவரின் டெஸ்க் இருக்கும் அலுவலகம் போய் எடுத்து வரவும் நேரமில்லை. அப்படிப் போய் வந்தால் அடுத்த மீட்டிங்குக்கு நேரமாகிவிடும். எங்களைப் பார்த்தவுடனே என் நண்பரிடம் வந்தார்.

"கையில ஒரு டாலர் இருக்காங்க? காஃபி வாங்கணும். பர்ஸ் ஆபீஸ்ல இருக்கு" ‍ நியாயமான காரணம். எல்லாருக்கும் ஏற்படற சூழ்நிலைதான்.

என்னுடன் வந்த நபர், தன் கையில் வைத்திருந்த காபி கப்பை என்னிடம் கொடுத்து விட்டு உடனேயே பர்ஸைப் பிரித்து ஒரு 20 டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்தார். அவரும் வாங்கிக் கொண்டு அவசரமாகச் சென்றுவிட்டார். அவர் பர்ஸைத் திருப்பி வைக்கும் போது தான் கவனித்தேன் அவரிடம் சில ஒரு டாலர் நோட்டுக்களும் இருந்தன.

"என்னங்க, அதான் ஒரு டாலர் நோட்டுத்தான் உங்க கிட்டே இருக்குதே. அதைக் கொடுத்திருக்க வேண்டியது தானே.. ஏன் 20 டாலர் கொடுத்தீங்க?"


"நீங்களே யோசிச்சிச் சொல்லுங்க, பார்க்கலாம்"

"தெரியலீங்களே.. நானாயிருந்தா ஒரு டாலர் கொடுத்துவிட்டு பேசாமல் போயிருப்பேனே"

"அது தான் தப்பு. வந்தவர் ஒரு மேனேஜர். ரொம்ப பிஸி ஆன ஆளு.. நானும் ஒரு டாலர் கொடுத்திருந்தால் அவர் வாங்கிக்கிட்டு மறந்து போயிருவார். என்னாலயும் அவரை அடுத்த தடவை பார்க்கும் போது 'என் கிட்டே ஒரு டாலர் வாங்கினீங்களே.. கொடுக்கறீங்களா?' ந்னு கேட்க முடியாது. அல்பமா ஒரு பார்வை பார்த்தாலும் பார்ப்பார். இதே இருபது டாலர் கொடுத்தால், காபி வாங்கி பாக்கி அவர் பையில் இருக்கும். நாள் முழுக்க எப்போ அந்தப் பணத்தைப் பார்த்தாலும் அவருக்கு என் கிட்டே வாங்கினது நினைவுக்கு வரும். மறக்காமல் திருப்பிக் கொடுத்திடுவார். அப்படியே இல்லேன்னாலும், நான் அவர் கிட்டே கேட்டு வாங்கும் போது சில்லியாத் தோணாது. இப்பச் சொல்லுங்க, ஒரு டாலர் கொடுத்திட்டு மறந்து போறது நல்லதா, இல்லே இருபது டாலர் கொடுத்திட்டு திரும்பி வாங்கறது நல்லதா?"

"விளக்கமெல்லாம் நல்லாருந்தது.. உங்க கிட்டே ஒரு டாலர் இருக்குமா?"






இதே மாதிரி ஒரு சூழ்நிலை. மயிலாடுதுறையில் இருக்கும் போது மூர்த்தி அண்ணன் வீட்டில் அவருடன் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பேன். ஊரில் எல்லாருக்கும் உதவும் ஒரு பெரிய பரோபகாரி அவர். ஊரில் என்ன ஒரு விசேஷம் இருந்தாலும் அவரிடம் நன்கொடை கேட்டு வந்து விடுவார்கள். அவரும் சமயத்துக்குத் தகுந்தாற் போல் ஏதாவது பொறுப்பு எடுத்து உதவுவார். சில சமயம், சிலர் சொந்தக் காரணங்களுக்காக உதவி கேட்டு வருவதும் உண்டு.

ஒரு நாள் இப்படி உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கும் போது ஒருவர் வந்தார். கொஞ்சம் பழக்கப்பட்ட முகம் போல் இருந்தது. அண்ணனின் கட்டட வேலைகளில் முன்னாட்களில் வேலை செய்து வந்தவர். சமீப காலங்களில் அவரை நான் பார்த்ததில்லை. என்னைப் பார்த்தவுடன், பரிச்சயம் உணர்ந்து "என்ன தம்பீ நல்லாருக்கீங்களா" என்று விசாரித்து விட்டு அண்ணனைப் பார்த்து தலை சொறிந்தார்.

"என்ன நைனா, எப்படியிருக்கீங்க.. ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணோமே..?

"ஆமாண்ணே.. இப்பல்லாம் உடம்புக்கு முடியலை.."

"என்ன விசேஷம்.. எங்க இந்தப்பக்கம்? இப்பத்தான் உங்களுக்கு இந்த வழி தெரிஞ்சுதாக்கும்?"

"இல்லண்ணே.. அவசரமா ஒரு தேவை.. உங்க கிட்டே வந்தால் ஏதாவது செய்வீங்க‍ன்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்" ‍ சொல்லிவிட்டு என்னைப் பார்த்து தலை சொறிந்தார்..

"சொல்லுங்க .. பார்ப்போம். ஒண்ணும் ப்ரச்சினையில்லை. தம்பி நம்ம தம்பிதான்.. பரவாயில்லை.. கூச்சப்படாமல் சொல்லுங்க"

"என் பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன். ஒரு லட்ச ரூபாய் போலக் குறையுது.. நீங்க கடன் கொடுத்தால் 2 மாசத்துல திருப்பிக் கொடுத்துடறேன். பணம் வெளியிலேருந்து வரவேண்டியிருக்குங்க.. வந்த உடனே கொடுத்திடறண்ணே"

"என்ன நைனா, இப்ப சொல்றீங்க. இப்பத்தான் போக்கு வரத்து சிலது முடிச்சேன். இப்ப வந்து சொல்றீங்களே.. உங்களுக்குத் தராம இருக்க முடியுமா?"

"உங்களுக்கு குறைச்சலா அண்ணே.. பணம் எப்படியும் எனக்கு 2 மாசத்துலே வந்திரும். கொடுத்திடறேண்ணே.. ஒரு ரூவா முடியாட்டாலும் பாதியாவது கொடுத்து உதவுங்கண்ணே.. வர வேண்டிய இடத்துலேருந்து பணம் வந்த உடனே உங்களுக்கு முதல்ல திருப்பிடறேண்ணே.. பொண்ணு கல்யாணம் வெச்சாச்சு.." ‍ திருப்பித் திருப்பி அதையே சொல்லிக்கொண்டிருந்தார்..


கடைசியாக அண்ணன்,
"பொண்ணு கல்யாணம்னு சொல்றீங்க.. நானும் கொடுக்கணும் ஆசைதான்.. இப்ப நேரம் சரியில்ல.. என்னால முடிஞ்சது, கல்யாணத்துக்கு ஒரு மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்துடறேன்.. சந்தோஷமா கல்யாணத்தை நடத்துங்க"

வந்தவரும் வேறு வழில்லாமல், ஒரு மூட்டை இலவச அரிசிக்கு உத்திரவாதம் (இதெல்லாம் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசி காலத்துக்கு முன்னால்) வாங்கி சந்தோஷமாகச் சென்றுவிட்டார்.

அப்புறம் அவர் போனப்புறம், அண்ணன் அவர் லாஜிக்கை சொன்னார்.

"சீனா, இவரு நல்லவருதான். நம்ம கட்டடத்துலயெல்லாம் வேல பார்த்திருக்காரு. ஒரு வகையில நாணயஸ்தரும் கூட. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அவருக்கு இருக்குற சூழ்நிலையிலே திருப்பிக் கொடுக்க முடியாது. அப்புறம் நம்மளைப் பார்க்க கூச்சப்பட்டுக்கிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போவாரு. கட்டடத்துக்கு வேலைக்கும் வரமாட்டாரு. எங்க நாம அவர் கூலியை கடனிலே கழிச்சிருவோமோன்னு வேலைக்கும் வரமாட்டாரு.. ஒரு லட்ச ரூபா கடனாக் கொடுத்தா நம்க்கு பணமும் வராது. ஒரு நல்ல தொழிலாளியும் கிடைக்க மாட்டாரு. இதே ஒரு மூட்டை அரிசி கொடுத்தா, நமக்கு கல்யாணத்துக்கு உதவி செஞ்ச புண்ணியமாவும் போகும். அவரும் அடுத்தாப்பல நம்மகிட்டே வேலைக்கும் வருவாரு"

நல்ல லாஜிக். நிறைய பேர்கிட்டே இந்த மாதிரி பணம் கொடுத்து அனுபவப்பட்டிருக்காரு. அனுபவத்தைப் போல சிறந்த ஆசான் எதுவும் இல்லை..



சில சமயங்கள்ல மக்கள் விதவிதமா யோசிக்கிற விஷயம் வியப்பா இருக்கு. ஒரே சிச்சுவேஷன், இரண்டு பேரு இரண்டு விதமாச் செஞ்சது நியாயமாவேப் பட்டது. உங்களுக்கும் இந்த விதமான சூழ்நிலை (கடன் கேட்ட போதோ, அல்லது கொடுக்கும் போதோ அல்லது மறுக்க முடியாம மாட்டிக்கிட்ட போதோ) இருந்திருந்தால் சொல்லுங்க..


பி.கு: சினேகா விடுப்பில் இருப்பதால்.. இப்போதைக்கு மீரா ஜாஸ்மின்..

Wednesday, March 24, 2010

93. இந்த அனுபவம் தனியொரு விதம் ..

பள்ளி வாழ்க்கையிலும் அதற்குப் பின்னான என்னை ஆளாக்கிய என் பள்ளிகளின் தொடர்பிலும் பல முன்னாள், இந்நாள் மாணவர்களைச் சந்தித்ததுண்டு. நல்லவிதமாக தன்னைப் பயிற்றுவித ஆசிரியர்களை நினைவு கூறாத மாணவரே இருக்க மு்டியாது.

ஒவ்வொருவருக்கும் ஆதர்சமாக ஒ்ன்றோ அல்லது பலவோ ஆசிரியர்கள். மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றில் உள்ள மிகப்பெரிய வங்கியில் முதன்மைத் தனி அதிகாரியாக இருக்கும் எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் திரு ஆர். சீத்தாராமன் தன் ஆசிரியரைச் சந்தித்ததும் அதற்குப் பின் நடந்ததும் ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

  • தன்னை உயர்த்திய பள்ளியையும் ஆசிரியரையும் பெருமையாய் நினைக்கும் மாணவரையும்,
  • தன்னலம் கருதாத ஆசிரியரையும்,
  • தன் மாணவனைப் பெருமையாக மடியில் ஏந்திய பள்ளியும்,
  • தன் மகன் அவரின் தந்தை பெயரில் செய்த நற்கொடையைப் பெருமையாகத் திறந்து வைக்கும் தாயையும்,
  • எல்லாரும் வணங்கியே பார்த்திருந்த தன் தந்தை, ஒரு பெரிய வங்கியின் CEO ஆன தன் தந்தையே பொதுமேடையில் காலில் விழுந்து பெருமையுடன் வணங்கும் ஒரு எளிமையான ஆசிரியரைப் பார்த்த மகளும், மகனும்..
  • இவரெல்லாம் நம்ம ஸ்கூலில் படிச்சாரா.. நாமளும் நல்லாப் படிச்சா இவர் மாதிரி கோட் போட்டுக்கிட்டு வந்து நம்ம வாத்யாரைப் பார்க்கலாமா” என ஆச்சரியம் பொங்க பார்க்கும் இந்நாள் மாணவர்களும்..

ஒருசேரக் காணக்கிடைப்பது அரிதினும் அரிது..

பணியுமாம் என்றும் பெருமை !!!


எங்கள் பள்ளிப் பதிவில் இடப்பட்டுள்ள இந்த இடுகையை நான் விவரித்த உணர்ச்சி குறையாமல் தனது தீந்தமிழில் எழுதிக்கொடுத்த அன்பு அண்ணன், கொங்கு மைந்தன், என் இனிய தோழர் பதிவர் பழமைபேசிக்கு நன்றி் !!

இனி தொடர்ந்து கீழுள்ள சுட்டியைக் கிளிக்கி எங்கள் பள்ளியின் பதிவில் படியுங்க




From DBTR-Seetharaman-Visit082009

Tuesday, March 02, 2010

92. நித்யானந்தர், வைகோ, மருத்துவர், சீமாச்சு,,,

நித்யானந்தர்

நித்யானந்தர் வீடியோ சன்டீவியில் காட்டினார்களாம்.. அலுவலகத்தில் முக்கியமான ஒரு அலுவலில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பிரபல பதிவர் அவசரமாக ஃபோனில் பேசினார். ரொம்ப கவலையாக இருந்தது. கொள்கையளவில் ஆபீஸில் வீடியோ பார்ப்பதில்லை. அதுவும் நித்யானந்தர் மாதிரி பிரபல வீடியோக்களை அலுவலகக் கணினியில் பார்த்து இருக்கும் வேலைக்கும் உலை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இதில் வேறு "யூ ட்யூபில் வீடியோவைத் தூக்கி விடுவார்கள் உடனே பார்த்து விடுங்கள்" என்று பதட்டப்படுத்திவிட்டார்.

வீடாவது அருகில் இருந்திருந்தால் சட்டென்று வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்து விடலாம். வீட்டுக்காரம்மாவுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லலாமென்றால்.. அம்மையார் வீடியோவை உடனே பார்த்து விடுவார். அப்புறம் சுவாரசியமாகப் பேச விஷயம் இருக்காது. சாயங்காலம் வீட்டுக்கு வரும் போது நியூஸ் ஆறிப்போய்விடும். 6 மணி நேரம் நெருப்பில் உட்கார்ந்திருந்தது மாதிரி யிருந்தது.

எப்படி இப்படி ஒரு சோதனை வைத்தாய் இறைவா? வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் படுக்க வைத்துவிட்டு வீடியோ இப்பத்தான் பார்த்தேன். உடனே இந்த இடுகையை எழுதி இலக்கியசேவை ஆற்ற நினைக்கும் என் முயற்சிகள் என்னையே பிரமிக்க வைக்கின்றன். இதை எழுதி முடிக்கும் போது இப்பொழுது மணி அதிகாலை மூன்று.. (ஒரு பிரபல எழுத்தாளர் எழுதுவதன் சாயல் அடிப்பது போலிருந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !!). எழுதி முடித்து ஒரு நீண்ட தூரம் நடக்க வேண்டும் போலிருந்தது. தெரு நாய்கள் துரத்தும் அபாயமிருப்பதால் அதைப் பிறகு பார்த்துக்க் கொள்ளலாம்..நிறைய கோபங்கள்..

1. உடனிருப்பது ரஞ்சிதாவா, ராகசுதாவா? ரஞ்சிதாவாக இருக்கக் கூடாது என்று வேண்டாத தெய்வமில்லை. "மலரே மௌனமா.." பாட்டுக் கேட்டு ஒரு இரண்டு நாள் சினேகாவை மறந்துவிட்டு ரஞ்சிதா ரசிகனாக இருந்த நன்றிக்காவது ரஞ்சிதா மாட்டியிருக்கக்கூடாது.. ராகசுதாவாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும. அந்த அம்மா யாரென்று கூட எனக்குத் தெரியாது.

2. இந்த வீடியோவை தமிழ் நாட்டில் டீவீயில் போட்டார்களா? குழந்தைகள் பார்த்திருந்தால் என்னாவது? கொஞ்சம் கூட ஒரு பொறுப்புணர்ச்சியில்லையே இந்த சன் டீவீ காரங்களுக்கு. பரபரப்புக்காக என்ன வேணா செய்வாங்களா?

3. என்னதான் சாமியாராக இருந்தாலும் அவரின் படுக்கையறையைப் படமெடுத்தது தவறல்லவா? எனக்கு அவர் மேல் பெரிய நம்பிக்க்கையெல்லாம் இருந்ததில்லை.. இருந்தாலும் அவர் மீது வருத்தம் தான். அவர் சொன்ன விஷயங்கள் (கதவைத் திற்.. காற்று வரட்டும்... இன்னும் பல..) இதற்காக பொயத்துப் போகப்போவதில்லை. அந்தந்த விஷயங்கள் நமக்குப் உபயோகப்பட்டால் பயன் படுத்திக்கொள்ள வேண்டியதுதான். பொது வாழ்வில் இருப்ப்வர்களிடம் தனி மனித ஒழுக்கத்தை எதிர் பார்பப்தென்பது நம் தவறுதான்..காலம் கெட்டுக்கிடக்கு..


4. என் நண்பரும் அவர் மனைவியும் நித்யானந்தரிடம் தீட்சை எடுத்துக் கொண்டவர்கள் இருவரும் கழுத்திலும் நல்ல ஓரளவுக்குப் பெரிய ருத்திராட்ச மாலை இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருக்கும்... எப்பொழுதும். அதையும் உடுப்புக்களுக்கும் வெளியில் தெரியும் படி அணிந்திருப்பார்கள். வீட்டிலேயே தியான மையம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மயிலாடுதுறையில் எங்கள் பள்ளி வளாகத்தில் தியான மையம் நடத்திக் கொள்ள நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத் தர என்னிடம் மிகவும் கேட்டுக் கொண்டார்கள்.. நானே ஒப்புமையில்லாத ஒரு விஷயத்திற்கு பள்ளி நிர்வாகத்தை வற்புறுத்த எனக்கு மனது இடம் தரவில்லை. நல்ல வேளை நான் அதை முயற்சிக்கவில்லை. இந்த விஷயத்தால் எனக்கும் எங்கள் பள்ளிக்கும் பெயர் வீணாப் போயிருக்கும்.


5. நண்பரின், மற்றும் அவர் மனைவியின் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. நித்யானந்தரை தெய்வத்துக்கு மேல் நினைத்திருந்தார்கள். வீடெங்கும் அவரின் ப்டங்கள் பெரிது பெரிதாக மாட்டியிருப்பார்கள். அவர்களின் இர‌ண்டு குழந்தைகளும் பெங்களூரில் நித்யானந்தர் பள்ளியில் தான் படிக்கிறார்கள். என்ன செய்யப் போகிறார்களென்று விசாரிக்க வேண்டும். ஒரு சாமியாரை நம்பி குழந்தைகளை அங்கு படிக்க வைக்க வேண்டாம் என்று மன்றாடியும், "தமிழகத்திலுள்ள அத்தனை இஞ்சினீயரிங் கல்லூரிகளிலும் ஸ்வாமி கேட்டால் உடனே இடம் கிடைக்கும். என் பிள்ளைகளுக்கு ஸ்வாமி எப்படியும் இலவசமாக இஞ்சினீயரிங் சீட் வாங்கித் தருவார்" என நம்பிக்கையோடு சொன்னார்கள்.. ரொம்ப சிரமம். "ஒரு மனிதனின் நம்பிக்கையை எக்காரணம் கொண்டும் குலைக்காதீர்கள்.. சமயங்களில் அதுவே அவனது கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடும்" என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.. ஆண்டவா இது போன்ற நல்ல மனிதர்களை இந்த மாதிரி போலிச் சாமியார்களிடமிருந்து காப்பாற்று...






வைகோ
நல்ல ஒரு மனிதர். இவர் கட்சி ஆரம்பித்த் பொழுதில் திமுகவிலிருந்து விலகி மதிமுகவில் சேர்ந்து இவர் பின்னால் சுற்றித்திரிந்த என் சக கல்லூரித் தோழர்களைத் தெரியும்.. பின்னால் ஒன்றுக்கும் உதவாமல் இன்னும் திருமணம் கூட கூடாமல் பூக்கடையில் பூக் கட்டிக்கொடிருக்கிறார்கள். பூக் கட்டுவதென்பது நச்சு பிடித்த வேலை.. ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்கும் நாள் முழுவதும் கட்டினால் கண்ணில் பூச்சி பறக்கும். நார் பிடித்துப் பிடித்து கை விரல்களெல்லாம் வலி எடுத்துவிடும். நாள் முழுவதும் பூ கட்டினால் (14 மணி நேரம்) தினக்கூலி 150 ரூபாய்.. "என்னடா சேகரா.... வைகோ என்ன சொல்றாரு" என்று போற போக்கில் விசாரித்தால் அவன் கண்ணில் கண்ணீர் வந்துவிடும்.. கேட்பதில்லை வைகோ பொதுக்கூட்டங்களில் உணர்ச்சி வசப்படுவது எனக்குப் பிடிக்காது. ஒரு தலைவன் உணர்ச்சி வசப் படக்கூடாதென்பது என் கொள்கை. அதை விடுங்கள் அவர் பாடு வைகோ பாடு.. நமக்கென்ன!!! மதிமுகவை வளர்ப்பதற்காகத் தமிழகம் முழுவதும் கிராமங்களுக்குச் சென்று 50000 (ஆமாம் ஐம்பதாயிரம் ) கொடிமரங்கள் நட்டு மதிமுக கொடியேற்றப் போகிறாராம்.. ஒன்றுக்குமே உதவாத ஒரு விஷயமென்றால் அது இந்த கட்சி க்கொடிக்கம்பங்கள் தான். மயிலாடுதுறையில் எங்கள் தெருவில் இரண்டு கோடிகளிலும் மொத்தம் 10 கொடிக்கம்பங்கள் இருக்கின்றன. எந்த கட்சிக்காரனும் எங்கள் தெருவுக்கு எதுவும் உருப்படியாப் பண்ணினதில்லை. 50 பேர் பெயர்களை கடப்பக் கல்லில் பொறித்து கொடி மட்டும் ஏற்றி விடுவார்கள்.. சில கம்பங்களில் கொடி காற்றில் கிழிந்து போய் வெறும் இரும்புக் கம்பி மட்டும் நிற்கிறது. வைகோ (நான் ஒருமுறை உங்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டு உங்களுக்கு விடை கொடுத்திருக்கிறேன்.. முகம் நினைவில்லாவிட்டால் பரவாயில்லை) உங்களிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்.. தயவு செய்து கொடிக்கம்பங்கள் வேண்டாம். வேறு ஏதாவது உருப்படியாகச் செய்யுங்கள்.. நீங்கள் ஐம்பதாயிரத்தில் ஆரம்பித்தீர்களென்றால் அப்புறம் மத்த கட்சிக்காரர்கள் அதை லட்சக்கணக்கில் ஏற்றி விடுவார்கள்.. பயமாயிருக்கிறது.. வேண்டாம்
மருத்துவர் இராமதாஸ்

பெண்ணாகரம் தொகுதி வாக்காளர்களிடம் இராமதாஸ் சொன்னாராம். "மனசாட்சிப் படி நடந்து ஒட்டுப் போடுங்கள் " என்று. இதைத் தானே ஐயா உங்கள் கட்சி ஆளுங்கட்சிக் கூட்டணியிலிருந்த போதும் உங்கள் மகன் மத்தியில் மந்திரியாக இருந்த போதும் உங்களிடம் வேண்டினோம். நீங்கள் மனசாட்சியுடன் நடந்திருந்தால் எங்கள் மனசாட்சிகள் எப்பொழுதுமே உங்கள் பின்னால் இருந்திருக்குமே...

சீமாச்சு..

இந்த அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை.. இரண்டு மூன்று பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மயிலாடுதுறையில் என் வீட்டுக்குச் சென்று என்னுடைய பழைய கண்க்கு நோட்டு, அறிவியல் வரலாறு புவியியல் நோட்டெல்லாம் சுட்டுக்கிட்டு வந்துட்டாங்களாம். எங்க அப்பா திட்டறாரு.. ஏண்டா இப்படித் தொல்லை பண்றாங்கன்னு.. எனக்கென்ன்ன் தெரியும்? அவங்க பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் வைக்க என் நோட்ஸாக் கிடைச்சது.. எப்படியோப் பசங்களை பாஸ் போட்டாச் சரிதான்..

என்ன நான் சொல்றது?


Monday, February 22, 2010

91. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு

இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கென ஒரு புனைப்பெயர் சூட்டிக்கொள்ள வேண்டிய காலத்தில் நானாக வைத்துக் கொண்டது தான் இந்த சீமாச்சு என்பது. அதற்கு முன் என்னை யாரும் சீமாச்சு என்று கூப்பிட்டதாக நினைவில்லை.. 2003ல் மரத்தடி யாகூ குழுமத்திலும் பிறகு எனக்கென வலைப்பதிவு தொடங்கிய பொழுதிலும் கூட அந்தப் பெயரிலும் யாரும் என்னை அப்படிக் கூப்பிடவில்லை. இப்படியாகப்பட்ட காலத்தில் (2004) என்றோ ஒருநாள் ஒரு பதிவர் அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க "சீமாச்சு இருக்காரா" எனத் தொலைபேசியில் அழைத்த போதுதான் என் பெயர் சீமாச்சு என்பதே எனக்குப் பதிவாகியது.

அந்த நியூஜெர்ஸி பதிவர் என்னை அவரது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். வரலாற்று ஆசிரியர்கள் கவனிக்க. கல்லும் மண்ணும் தோன்றி (கல்தோன்றி மண் தோன்றாக் காலம் என எழுதினால் அடிக்க வருவார்கள்..) இங்கொன்றும் அங்கொன்றுமாக தமிழ்ப் பதிவுகள் முளைக்கத் தொடங்கிய காலத்தில்.. தமிழ்மணம் என்ற திரட்டி கூட முற்றுப் பெறாத காலகட்டத்தில் அமைந்த முதல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பென்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது அப்பொழுதுதான்..

அப்பொழுதெல்லாம் அமெரிக்காவில் சிறுவரிடையே Pokemon போக்கிமான் என்ற வஸ்து ரொம்ப பிரபலம். அவற்றில் பலதரப்பட்ட வகைகளுக்கு பலவிதமான பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.. அதில் ஒன்றின் பெயர் Picachu பிகாச்சு என்பது. (படம் கீழே.. சினேகா படத்துக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது).. சக பதிவரின் 10 வயது மகனிடம் .."I am Seemachu.. Cousin of Picachu" என்று... அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை..

நான் "சீமாச்சு" தானா என அவன் பலமுறை உறுதிப்ப்டுத்திக் கொண்டான்.. அவனது அப்பாவும் அம்மாவும் என்னிடம் "வாங்க சீமாச்சு".. "உக்காருங்க சீமாச்சு" எனச் சொல்வதைக் கவனித்தான். நான் தான் சீமாச்சு என்பது உறுதியானவுடன் நான் பிகாச்சுவின் கஸின் தான் என்பதில் அவனுக்கு அறவே சந்தேகமிருக்கவில்லை.. அவனுக்குத் தலைகால் புரியவில்லை.. பிகாச்சுவின் கஸின் சீமாச்சு தன் தந்தையின் நண்பரென்பதும் இப்பொழுது சீமாச்சு தன் வீட்டில் சாப்பிட்ட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுமே அவனுக்கு ரொம்பப் பெருமையாகிவிட்டது..

சாப்பிட்டு முடித்துப் பார்த்தால் வாசலில் அவன் வயதையொத்த பத்துப் பதினைந்து சிறுவர்கள். அனைவரிடமும் அவன் பெருமையாக "This is Seemachu.. Cousin of Picachu.. My Daddy's Friend " என்று அறிமுகப் படுத்திய போது எனக்கே தமிழ் வலைப்பதிவின் சக்தி புரிந்தது.. அதிலும் அவன் My Daddy's Friend என்ற வார்த்தையில் (அழுத்திய அழுத்தம்) தெரிந்த பெருமிதம் அவன் வாழ்நாளில் கண்டிருக்க மாட்டான்..நான் அவர் வீட்டிலிருந்து கிளம்பியபோதும்.. நான் காரை நோக்கி நடக்கும் போதும் அத்தனைக் கண்களும் என் முதுகைத் துளைத்ததும் என் கார் தெரு முனையில் மறையும் வரை எனக்கு அத்தனை சிறுவர்களும் கை காட்டிக் கொண்டிருந்ததும் மறக்கவியலாதது...


oOo

ரொம்ப ச்சின்ன விஷயங்கள் தான்.. வாழக்கையில் அவற்றுக்கு சக்தி அதிகம். மாற்றுக்கருத்தை நோகாமல் சொல்வதென்பதை மூர்த்தியண்ணனிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்.. ஆனாலும் அதைக் கடைப்பிடிக்க அவ்வப்பொழுது வரமாட்டேனென்கிறது. என்னதான் அண்ணனிடம் கற்றுக் கொண்டாலும் அதைச் செயல் படுத்த முனைவதற்குள் எனக்குள் இருக்கும் சீமாச்சு தலையைக் காட்டிவிடுவான்.. ”ஆஹா.. வடை போச்சே.. அண்ணன் சொல்ற மாதிரி.. சொல்லியிருக்கலாமே" எனத் தோன்றும்..

மயிலாடுதுறையிலோ அல்லது மற்ற ஊர்களிலோ அண்ணனுடன் கடைக்குச் செல்வது வழக்கம்.. வாங்க வந்த பொருள் ஒன்றாக இருக்கும் ஆனால் நான் கண்ட இடங்களில் மேய்ந்து கொண்டிருப்பேன்.. சமயத்தில் ஏதாவது பொருள் கண்ணில் படும்.. வாங்கலாமே என நினைத்து.. "அண்ணே .. இங்க வாங்க.. இதைப் பாருங்க.. நல்லாருக்கே.. வாங்கலாமா" என்பேன்..

அண்ணன் என் முகத்தைப் பார்த்துவிட்டு.. அந்தப் பொருளையும் பார்த்து விட்டு ..உடனேயே.. "வாங்கலாமே.. சீனா.. என்ன விலை பாரு.. எனக்கும் ஒண்ணு வாங்கிக்கிறேன் ..நல்லாருக்கே.." அப்படீன்னுடுவாங்க.. எனக்கோ ஒரு நல்ல ஐட்டத்தை அடையாளம் கண்டுபிடிச்சி அண்ணனுக்கே காட்டிய பெருமை பிடிபடாது..

அப்படியே.. ஏதாவது பேசிவிட்டு ஒரு நிமிஷம் கழித்து.. "இங்க வா.. சீனா.. நீ காட்டினது நல்லாருக்கு... ஆனா....... அதை......... விட.... இங்க பாரு... இது இன்னும் நல்லாருக்கே " என்று அவர் வேறு ஏதாவது காட்டுவார்.. உண்மையாக அது நான் காட்டியதை விட நல்லாவே இருக்கும்.. அதை அவர் முன்னமேயே பார்த்து வைத்திருந்திருப்பார்.. இருந்தும் நான் காட்டியபொழுது.. என்னமோ புதிதாகப் பார்ப்பது போல் பாராட்டும் அண்ணனிடம் நான் பலமுறை தோற்றிருக்கிறேன்.. இருந்தாலும் என் அண்ணனிடம் நான் தோற்பதென்பது நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் ஒன்று..

இப்பொழுதெல்லாம்அண்ணனுடன் ஷாப்பிங் போனால்.. கிண்டலாக.. "அண்ணே .. இத்த்த்து.. நல்லாருக்கு.. இத்த்த்த்த வி..ட.. அது நல்லாருக்கண்ணே" அப்படீம்பேன்.. அதையும் சிரிச்சிக்கிட்டே.. "எது சொன்னாலும்.. 'கப்'புனு புடிச்சிக்கிறே சீனா..நீ.. உன்னை மாதிரி தான் புள்ளங்க இருக்கணும்" என்பார்.. எல்லோரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதென்பதும் அடுத்தவர் மனதை நோகடிக்காமல் பேசுவதென்பதும் அண்ணனுக்கு கை வந்த கலை..

இத்தனை வருடங்கள் யார் சொல்லியுமே கேக்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுக்கப் பழகியிருந்த என் அப்பா கூட.. இந்த 92 வயதில் எது செய்வதென்றாலும்.. அண்ணனிடம் "நீ என்னப்பா சொல்றே" என்று கேட்பதைப் பார்த்தால் என் காதில் புகை வரும்.. இன்று வரை அவர் என்னிடம் எதுக்குமே “நீ என்னப்பா சொல்றே” என்று கேட்டதில்லை... அப்படியே இனி கேட்டாலும் என்னால் அவர் அதைக் கேட்டதாக நம்ப முடியாது !!








சமீபத்தில் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம்..

பள்ளியின் ஒரு வேலை நாளில், மயிலாடுதுறையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக எங்கள் பள்ளி சாராத ஒரு பொது நலன் அமைப்பு காலை 10 முதல் 12 வரை ஒரு நிகழ்ச்சி நடத்தியது. நிகழ்ச்சி பள்ளிவளாகத்தின் வெளியே ஏதோவொரு கல்யாண மண்டபத்தில் நடந்தது. மயிலாடுதுறையின் பல பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. எங்கள் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் 50 பேரை எங்கள் தலைமையாசிரியர் திரு கேயார் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுப்பியிருந்தார்.. பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் தலைமையில் மாணவர்கள் அந்த நிகழ்ச்சிக்குச் காலை 9:30 மணிக்குச் சென்றுவிட்டு மதியம் 12 மணிக்குத் திரும்பிவந்து மதிய உணவு உண்டுவிட்டு மதியம் வகுப்புக்குத் திரும்பிவிடவேண்டும். இது தான் அன்றைய திட்டம்..

வழக்கம் போல் 12 மணிக்கு முடிவடையவேண்டிய நிகழ்ச்சி முடிய மதியம் 1:30 ஆகி விட்டது. நிகழ்ச்சி முடிய தாமதமாகியும் மாணவர்களின் மதிய உணவுக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அமைப்பினர் எந்த முயற்சியும் செய்திருக்கவில்லை. பசியுடன் பள்ளி திரும்பிய மாணவர்கள் தாங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு வகுப்புக்குத் திரும்பிவிட்டனர்.

மதிய வகுப்பில் ஒரு மாணவர் சரியாகப் பாடத்தில் கவனம் செலுத்தாததால் அந்த மாணவனுக்கு தண்டனை தரும் எண்ணத்தில் அவரை அந்த வகுப்பின் வாசலில் நிறுத்தியிருந்தார் வகுப்பாசிரியர். மதியம் மணி அடித்த பிறகு வழக்கமாக சுற்று வரும் தலைமையாசிரியர் கேயார் மாணவன் வகுப்புக்கு வெளியில் (அப்பொழுது மணி மதியம் 2:30) நிற்பதைக் கவனித்து விசாரித்திருக்கிறார்.. அப்பொழுது தான் அந்த மாணவர் காலை நிகழ்ச்சிக்குச் செனறு வந்தது அவருக்கு நினைவு வந்தது.. அந்த மாணவன் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருபவர் அல்ல. அவர் மதியம் பள்ளியிலேயே சத்துணவு சாப்பிடும் மாணவர். அவர் வந்த நேரம் சத்துணவு முடிந்து விட்டதால் அன்று எதுவுமே சாப்பிடவில்லை.. அப்பொழுதுதான் அது நினைவுக்கு வர அவனிடம் கேயார் கேட்ட முதல் கேள்வியே "மதியம் ஏதாவது சாப்பிட்டியா?" என்பதுதான்..

அவன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.. பசியுடன் இருந்திருக்கிறார் என்பது அறிந்தவுடன் அவனை உடனடியாகத் தன் அறைக்கு அழைத்துச் சென்ற கேயார் (தலைமையாசிரியர்) அன்று அவர் தனக்காக வீட்டிலிருந்து எடுத்து வந்த மதியச் சாப்பாட்டை அப்படியே அவனுக்குப் பரிமாறி அவன் சாப்பிட்ட பின் அவனை வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.. தன் பசிக்கு அன்று அவர் வெளியில் போய் ஹோட்ட்டலில் சாப்பிட்டார்.


"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று கேட்டிருக்கிறேன்.. அதற்கு ஒரு உதாரணம் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் மட்டுமல்ல.. அங்கு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தான். அப்படிப்பட்ட பள்ளியின் மாணவன் நான்.

இன்று அந்தப் பள்ளியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்தாலும் நான் சொல்லிக் கொள்வதென்னவோ இன்னும் மாணவன் தான்.


oOo

சில பள்ளி ஆசிரியர்கள் பற்றிய பதிவர் வெண்பூவின் அனுபவம் கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம் என்ற அவர் இடுகையிலிருந்து...

மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(

இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.

டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.

அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆ
சிறியர்கள் விடப்போவதில்லை


oOo

நாட்டைக் காக்கும் நல்ல பல தூண்கள் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள்.. இன்னமும் வருவார்களென்பது உறுதி.. என்று கூறி...அன்பு அண்ணன் ஜவகரைப் பார்த்து “எப்பூடீ...” என்று கேட்கிறார் தமன்னா...


Tuesday, February 16, 2010

90. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு

சமீபத்தில் சக பதிவர் ஜவகர்லால் மயிலாடுதுறைக்குச் சென்றிருந்தார். என் கனவுத்திட்டங்களில் ஒன்றான் யங் இந்தியாவையும், அதன் சார்பான சில செயல்பாடுகளிலும் அவ்ரை ஈடுபடுத்தி எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்குச் பல்லாற்றல் வழிகளிலே பயிற்சி தருவது குறித்து அவரை ஈடுபடுத்த வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு அவரைப் பயன்படுத்த வேண்டுமென்ற என் என்ணங்களின் முதல் படியாக அவரை மயிலாடுதுறை வரச் சொல்லியிருந்தேன்.. அவர் வருவது பற்றி முன்னரே எங்கள் பள்ளி ஆசிரியர்களிடமும், மூர்த்தி அண்ணனிடமும் சொல்லி அவரைச் சிறப்பாக கவனிக்க வைத்ததன் பயன் ஒரு அருமையான் இடுகை.. நான் படிச்ச் ஸ்கூலைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருந்தார்.. காக்கா கறியும் கருவாடும் சைவர்களும் என்று வித்தியாசமான தலைப்பிட்ட அந்த இடுகை இதோ

oOo oOo
பள்ளி நாட்களின் சோகம் என்று சொன்னால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியர் இறப்பது ஒன்று. ஜவஹர் சென்றிருந்த போது வியாழக்கிழமை அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஆசிரியர் ரவிக்குமார் (வயது 52) இரண்டு நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர மாரடைப்பால் மறைந்துவிட்டார்.. எங்கள் பள்ளியின் மேல்நிலை வகுப்புக்களுக்கான பொருளியல் ஆசிரியர் அவர். மாணவர்களிடையே (அதுவும் III Group மாணவர்களிடையே) நல்ல ஆசிரியர் என்று பெயரெடுப்பது ரொம்ப கடினம். பத்தாவது வகுப்பில் மார்க் குறைந்து மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களின் பெரும்பான்மையர் பொருளியல் வகுப்பில் சேருவர். அவர்களிடையே நல்ல பெயர் எடுக்க வேண்டிய நிலை என்பது மிகக் கடினம். அந்த மாணவர்களிடையே பாசமாகவும், ந்ல்ல ஒரு ஆசிரியராக்வும் போதித்து நல்லன்பைப் பெற்ற திரு ரவிக்குமார் இப்பொழுது எங்களிடையே இல்லை என்பது மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது. அவரது ஒரே மகளுக்கு முதல் குழந்தை பிறந்து இன்றுடன் 10 நாட்கள் தான் ஆகிறது. பிறப்ப்பையும் இறப்பையும் ஒரு சேர சந்தித்த் அந்த ஆசிரியர் குடும்பம் மன நிம்மதியை விரைவில் அடைய பிரார்த்திக்கிறேன்..


பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் திரு ரவிக்குமாரின் மாணவர்கள் மிகவும் வருத்த்த்திலிருக்கிறார்கள்,. இந்த சொந்த சோகத்தையும் மீறி அவர்கள் தேர்வில் நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண் பெற்று அந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பைப் நிறைவு செய்யவேண்டும்..



இதேபோல் 1980 ஆம் ஆண்டு நான் பள்ளியில் படிக்கும் போது எனக்கு வேதியியல் போதித்த் திரு மஹாதேவய்யர் என்ற ஆசிரியர் கல்வியாண்டின் இடையில் டிசம்பர் மாதம் 3ம் தேதி காலமானார். எனக்கு ரொம்ப சோகமாக இருந்தது. அவர் இறப்பு செய்தி கேள்விப்பட்டதில் இருந்து 3 நாட்கள் அவர் வீட்டு வாசலில் தான் நாங்கள் 500 மாணவர்களும் இருந்தோம்.. அவர் உடலை இடுகாட்டுக்குக் கொண்டு சென்ற போது பெய்த் மெல்லிய மழைத் தூறலில் நாங்கள் எல்லா மாணவர்களும் அவருடனேயே சென்று அவரை வழியனுப்பி வைத்தது மற்க்க முடியாதத்து..

இந்த பாதிப்பு எவ்வளவு நாட்கள் இருந்ததென்றால்.. நான் படித்த இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு நான் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்ட்டம் (படங்கள் ஜவஹர் பதிவில்) கட்டிக் கொடுத்த் போது கட்டடத்துக்கு பெயர் வைக்கும் நேரம் வந்த போது நான் எழுதிக்கொடுத்த பெயர் "ஸ்ரீ மஹாதேவய்யர் நினைவரங்கம்" என்பது. அந்தக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அவரது மகனை அழைத்து கௌரவித்தது மறக்கவியலாதது. தன் கணவர் மறைந்து 22 வ்ருடங்கள் கழித்து (எல்லோரும் அவரை மறந்து விட்டார்களோயென்று நினைத்த பொழுது) அவர் பெயரில் அவர் மாணவர் ஒரு கட்டடம் திறந்து வைத்தது நினைத்து அவ்ரது மனைவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி..
oOo oOo

வாலண்டைன்ஸ் நாளன்று ஒரு மயிலாடுதுறை "மாப்பிள்ளை" நண்பர் வீட்டில் பழமைபேசி ஐயாவுடன் விருந்து நடந்த்து. ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து உபசரித்த நண்பரின் குடுமப்த்தினரின் விருந்தோம்பல் மறக்க முடியாதது. நண்பர் ஒரு மருத்துவர். நரம்பியல் நிபுணர். அவரே அவர் கைப்பட சில பதார்த்தங்கள் செய்து சுடச்சுட பரிமாறினது மறக்க் முடியாத்தது..

எனக்க்கு சுரேஷ் என்ற சின்னாளப்பட்டிக்கார நண்பர் ஒருவர் உண்டு.. இரவு எத்த்னை மணிக்கு அவர் வீட்டுக் கதவு தட்டினாலும்.. அவர் கேட்கும் முதல் வார்த்தை "சாப்பிட்டியா மச்சி.. ஏதாவது சாப்பிடறியா?" என்பது தான். "பசிக்குது என்று சொல்லிவிட்டால்" உடனே அடுப்பு மூட்டி சமைத்துப் போட்டு பக்கத்தில் இருந்து பரிமாறிவிட்டுத் தான் அடுத்த காரியமே..

மயிலாடுதுறையாகட்டும், சவுதி அரேபியாவாகட்டும்.. நியூ ஜெர்ஸியோ, சார்லெட்டோ எந்த இடமாக இருந்தாலும் என்னைச் சுற்றி நல்ல நண்பர்களைத் தந்த அந்த இறைவனுக்கு நன்றி..
எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு !!

Wednesday, January 20, 2010

89. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு

புது வருஷம் நல்லபடியாப் பொறந்திடிச்சி. சொந்த வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்புக்கள் இல்லையென்றாலும், முயற்சிகளுக்குக் குறைவில்லாமல் வருடத்தைக் கடக்கவேண்டுமென்பது அவா.

எங்கள் பள்ளிக்கூடத்தைப் (DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை) பொறுத்தவரையில் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டுக்கான முக்கியப்பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளேன். கடந்த 108 வ்ருடங்களில் (எங்க ஸ்கூலுக்கான வயசுங்கோவ்) எங்க ஸ்கூலில் படித்துச் சென்ற முன்னாள் மாணவர்களையும் அவர்தம் சந்ததிகளையும் தொடர்புகொண்டு அவர்களிடமிருந்த நிதிபெற்று எங்கள் ஸ்கூலை பெரிய கட்டமைப்பு வசதிகளுடன் கட்ட வேண்டிய பொறுப்பு எனக்கும் எங்கள் நிர்வாகக் குழுவினருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் என் முயற்சிகளனைத்தும் இதைச் சார்ந்தே அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் பேசுவதே ரொம்ப சுவாரஸ்யமானதாக இருக்கிறது. "என் கூட 1980-ல 9A படிச்ச சரசு இப்ப எங்க இருக்காங்க தெரியுமா சார்?" என்ற முன்னாள் தோழிகள் பற்றிய ஆட்டோகிராப்தனமான கேள்விகளை, முன் வழுக்கை விழுந்து இரண்டு மூன்று குழந்தைகளுடன் இருக்கும் 30-40 வயது முன்னாள் மாணவர்களிடமிருந்து கேட்கும் போது.. என்னதான் ஃபோனில் பேசினாலும் அவர்களின் கண்களில் தெறிக்கும் பளிச்..பளிச் களைக் உணரமுடிகிறது.. இன்னும் சுவாரசியங்கள் விரியும் கதைகள் கிடைக்கலாம்.. எல்லாவற்றையும் சொன்னவர்களும் ரசிக்கும் விதமாக "தாம்பூலத்தில்" எழுதலாமென்றிருக்கிறேன்..

இப்போதைக்கு என் பதிவைப் படிக்க இன்னும் 10 சிறப்பு வாசகிகள் (நம்புங்க சார்..) கெடச்சிருக்காங்க...







oOo oOo
மயிலாடுதுறையிலிருக்கும் போது வருஷா வருஷம் எதிர்பார்க்கிற திருவிழான்னா.. ஐப்பசி மாதத்து கடைமுகமும் தேரும் தான். ச்சின்னவயசில இந்த 10 நாட்களும் ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். எங்க ஊரு மகாதானத்தெருவில் இரண்டு பக்கமும் கிட்டத்தட்ட அரைக்கிலோமீட்டருக்கு திருவிழாக்கடைகள் பரப்பியிருக்கும்.. எல்லா விதமான விளையாட்டுச் சாமான்களும் ("எதையெடுத்தாலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்" வகையறாக்கள்.. நான் சொல்வது 1980-களில்) கிடைக்கும்.. அப்பொழுது ஆசைப்பட்டதென்றால் ஒரு பக்கட் தண்ணீரில் தானாக ஓடும் ஒருச் சின்னக் கப்பல் (ஓடம்?) போன்ற பொம்மைதான்.. சிவப்பும் கருப்பும் கலந்த திமுக கொடி கலரில் இருக்க்ம்.. தகரத்தில் செய்யப்பட்டிருக்கும்.. பின்னால் ஒரு சூடம் கொளுத்தி வைக்கவேண்டும்.. கொஞ்சம் மண்ணெண்ணை ஊத்திவிட்டால்.. கப்பல் வாயகன்ற பாத்திரத்திலுள்ள தண்ணீரிலோ அல்லது பக்கெட்டிலோ "டுட்..டுட்.." என்ற சத்தத்துடன் ஓடும்.. அந்தக் கப்பல் அப்பொழுதெல்லாம் 2 ரூபாய்தான்.. அப்போதைய என் பொருளாதாரத்துக்கு அது ரொம்பவே அதிகம்..

அப்பொழுதெல்லாம் அந்த ஆப்பிள் பலூன் 30 காசுதான்.. வாங்க ஆசை மட்டுமிருக்கும்.. எப்பொழுதோ அப்பாவிடம் கேட்டது நினனவிருக்கு.. இந்த முறை ஊருக்குப் போனபோது (30 வருஷம் கழித்து)... ஆசையாக ஆப்பிள் பலூன் ஒன்று எங்கிருந்தோ வாங்கி வந்து கொடுத்தார்.. சிரிப்பு வந்தது.. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்று தெரியவில்லை.. கொஞ்ச நேரம் என் சைக்கிளில் கட்டி வைத்திருந்துவிட்டு ஒரு குழந்தையிடம் கொடுத்துவிட்டேன்..

சில சமயம் எப்பொழுதோ கேட்ட அல்லது ஏங்கிய சில விஷயங்கள் ரொம்ப காலதாமதமாக நட்க்கிறது..

இது போல் 1980 களில் எனக்கொரு முக்கியமான தேவையிருந்தது.. ஒரு என்னுடைய இந்தத் தேவையினால்..பலன் என்னவோ எங்க ஊரு சாமிங்களுக்குத்தான் ..மூன்று வருடங்களுக்கு என்க்கு இது தான் பிரார்த்தனை.. தினமும் கோவிலுக்குச் சென்று விடுவேன்... சிலசமயம் பல கோயில்களுக்கு.. காவிரிக்கரை மங்கள் வினாயகர் பிள்ளையார், மலைக்கோவில் முருகன், ஐயப்பன், சேந்தங்குடி துர்க்கையம்மன், வள்ளலார் கோவில் மேதா தக்ஷிணாமூர்த்தி, திருவிழந்தூர் ஆஞ்சநேயர் எல்லார் கிட்டேயும் அப்ளிகேஷன் போட்டிருந்தேன்.. அருணா சூடம் வில்லைகள்.. நடராஜ் கற்பூரக் கட்டிகள்.. வாங்கி எல்லாருக்கும் ஏத்தியிருக்கேன்.. இந்த எல்லா சாமிகளும் எனக்கு ரொம்ப கடன் பட்டிருக்காங்க.. ஏன்னா.. என் பிரார்த்தனனகளையெல்லாம் கேட்டுவிட்டு .. என் ஸ்லோகமெல்லாம், சூடமெல்லாம் வாங்கிக்கிட்டு அப்பொழுதெல்லாம் ஒண்ணுமே செய்யலை.. "சீமாச்சு.. வேற் ஏதாவது வேலையிருந்தாப் போயிப் பாரு" ன்னு வெரட்டி விட்டுட்டாங்க....

30 வருஷம் கழித்து எல்லா சாமிக்கும் இப்போத்தான் என் பிரார்த்தனை நினைவுக்கு வந்த மாதிரி.. எல்லாம் சேர்ந்து இப்போ "அதை நிறைவேற்றவா" என்று காலிங் பெல் அடிக்கிறாங்கள்.. அதெல்லாம் ஒண்ணு வேணாம்-னு சாமிக்கிட்டே சொல்லி அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சி..

ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சுது.. அப்பா வாங்கிக்கொடுத்த ஆப்பிள் பலூனுக்கும் ஆண்டவன் முருகன் வேணுமான்னு கேட்ட பழைய பிரார்த்தனைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.. ஆப்பிள் பலூன்களுக்கு வயசாவதில்லை...





oOo oOo

சமீபத்தில் ஒரு அறுபது வயது பெரியவரைச் சந்தித்தேன்.. ஒரு பார்ட்டியில்.. அவர் பீர் உட்பட எந்த விதமான மதுபானமும் அருந்துவதில்லையென்று சொன்னார்.. அவர் சொன்ன காரணம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்தது..

அவர் காலேஜ் படிக்கும் நாட்களில்... ஒரு நாள் வர் காலேஜ் கிளம்பிக் கொண்டிருந்த போது அவரின் அம்மா சிகரெட், மது பற்றிய கேட்டார்களாம்.. தன் மகன் எங்கே அதெல்லாம் ஆரம்பித்து விடப்போகிறானோ என்ற் ஒரு கவலையில் அந்தப் பேச்சு வந்ததாம்.. அப்பொழுது அவர் சொன்னாராம் "இன்னும் அதெல்லாம் தொடவேண்டிய தேவை எனக்கு வரவில்லை.. நிச்சயம் வராதென்று நம்புகிறேன்.." என்று சொன்னாராம்.. பெரிய்ய வாக்குறுதியெல்லாம் இல்லை.. அது ஒரு சாதாரண் உரையாடல் தான்..

அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்புவதற்குள் ஏதோ ஒரு விபத்தில் அவர் அம்மா கோமாவுக்குச் சென்று சில நாட்களில் இறந்து விட்டார்..

அம்மாவுடன் தனக்கு ஏற்பட்ட அந்தக் கடைசி உரையாடலின் நினைவாக அவர் இன்னும் (கிட்டத்தட்ட 45 வருடங்களாக) சிகரெட், மது இரண்டும் தொடுவதில்லையாம்..

அவர் விவரித்த விதம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.. அம்மாவுடனான.. அவரின் அன்பும் அதன் மேலான் மரியாதையும் புரிந்தது..

நானும் ஒரு "அம்மா செல்லம்.. அம்மா பையன் தான்.."

oOo

ஆதவன் படம் நன்றாக இருந்தது.. ஊரிலேயே (கோவையில் செண்ட்ரல் தியேட்டரில்) ஒரு முறை பார்த்துவிட்டிருந்தாலும் இங்கு வந்து வீட்டிலும் குடும்பத்துடன் பார்த்தேன்..

நயன் தாரா "Its ....OK" என்று முகத்தைச் சுழட்டிச் சொல்லுமிடங்களில் ரீவைண்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்ததில்ல் தங்கமணி முகத்தில் அனல் பறந்தது...

இதுக்கெல்லாம் பயப்படுற் ஆளாயென்ன நாம?


Friday, December 18, 2009

88. கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள் !!

நம்ம தம்பி விவசாயி இளா பதிவுல போயி அவரோட ஆணிவேர் என்ற சிறுகதையைப் படிச்சேன். ரொம்ப நல்ல கதை. ஊர் பாசத்தையும் சொந்தங்களின் வலிமையையும் பத்தி அழகா எழுதியிருக்கார்.

அங்கிருந்து இந்த காசாங்காடு ஊரின் வலையகத்துக்குச் செல்ல நேர்ந்தது.. ரொம்பவே அசத்திட்டாங்க. அவங்க ஊரைப் பத்தின எல்லா விஷயங்களும்.. எல்லா விஷயங்களும்னா.. எல்லாமுமே அங்க இருக்கு.. அதுவும் அழகா வகைப்படுத்தி.. என்னமா.. அசத்தியிருக்காங்க..

இப்படியே நம்ம எல்லா கிராமங்களைப் பத்தியும் இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..

சில பேர் ஆர்வக்கோளாறில (MS உதயமூர்த்தி ஐயா பாணியில் சொல்லணுமா சோடா பாட்டில் உற்சாகம்) ஆரம்பிப்பாங்க. ஆரம்பத்தில இருந்த அந்த சுறுசுறுப்பு அப்புறம் குறைஞ்சுப் போயி அப்புறம் வலைப்பக்கங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது.. அது போல இல்லாமல் 2008 அக்டோபர் மாசத்துலேயிருந்து ஆரம்பிச்சி முந்தாநாள் இறந்து போன நடுத்தெரு செட்டியார் வீட்டு மாசிலாமணி ஐயா வீட்டு செய்தி வரை இணையத்துல எழுதியிருக்காங்க..



படிக்கப் படிக்க ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. அவசியமா காசாங்காடு Global Village (அப்படித்தான் சொல்றாங்க) இணையத்தளத்துக்குப் போயிப் பாருங்க. அவ்வளவு நல்லா இருக்கு.. http://www.kasangadu.com/

ஊரில் உள்ள பள்ளிகள், கோவில்கள், தெருக்கள், அரசு அலுவலகங்கள், திருமண மண்டபம் எல்லாம் போட்டோக்களோட போட்டிருக்காங்க..

ஊராட்சி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களெல்லாம் இருக்கு. போக்குவரத்து வசதிகள், ஊரில் உள்ள வீட்டுப் பெயர்கள் எல்லாம் இருக்கு..

டிசம்பர் மாசம் ஒண்ணாம் தேதி கிராமத்துல ஒரு தெருவுல தண்ணி வராம இருந்து மறுபடியும் சரி பண்ணினாங்களாம்.. அந்த செய்தியும் அங்க இருக்குங்க...


ஊரில் உள்ள தெருக்கள் எல்லாம் அவ்வளவு சுத்தமா இருக்கு... பள்ளிக்கூடங்களெல்லாம் அவ்வளவு அழகா இருக்கு.. இதெல்லாம் பார்க்க ஒரு மகிழ்ச்சிதான்..

ஊருக்குள்ள எவ்வளவு ஒற்றுமையிருந்தால் இவ்வளவும் நடந்திருக்கும் !!

இன்னும் பெரிய ஆச்சரியம் எதிலுமே ஊராட்சித் தலைவர் பெயரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சி பெயரும் இல்லை..

ஊருக்குள்ள அரசியல் கட்சிகளை நுழைய விடாமல் இருந்தால் ஊர் ஒற்றுமையாகவும் இருக்கும் .. ஊரும் நல்ல முன்னேற்றம் அடையும்.



காசாங்காடு கிராம மக்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

உங்களைப் போல நாங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்..