நான் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம்.. 1977 ஆம் வருடம். மயிலாடுதுறையில் திவான் பகதூர் ரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப்பள்ளி...
என் வகுப்பு ஆசிரியர் எப்பொழுதுமே என் மரியாதைக்குரியவர். இந்தப் பகுதியில் நான் சொல்லும் ஒரு சம்பவம் அவ்வளவு ஒன்றும் அவர் மதிப்பைக் கூட்டுவதாக இல்லாததனால் அவர் பெயரை இங்கே தவிர்க்கிறேன்.
பள்ளியில் அவர் ஒரு விதத்தில் பிரபலம். அவரிடம் எப்பொழுதும் 40 மாணவர்கள் டியூஷன் படித்துக் கொண்டிருப்பார்கள்... முக்கியமாக நகரின் செல்வந்தர்கள் மகன்கள் அவரிடம் நிச்சயமாக டியூஷன் படிப்பார்கள், எனக்கு டியுஷன் தேவையில்லாததனாலும், என் குடும்பத்தில் அதற்கு போதிய அளவு பணச்செழுமை இல்லாததனாலும்(மாதம் நாற்பது ரூபாய் என்று நினைக்கிறேன்) நான் அவரிடம் டியூஷன் சேரவில்லை...
ஓரே ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போய் அவர் டியூஷன் கிளாஸ் எப்படி எடுக்கிறார் என்று மட்டும் பார்த்திருக்கிறேன்... அவ்வளவுதான்..
என்னதான் வீட்டிலே தனியாக வகுப்பு எடுத்தாலும்.. பள்ளிக்கூடத்தில் நடத்தும் போது அப்படி ஒன்றும் குறை வைத்துவிடமாட்டார்.. அதற்கு அவரை பாராட்டித்தான் தீரவேண்டும்...
அவர் பள்ளியில் 'பிரபலம்' என்று சொன்னேன் அல்லவா... ! ஏனென்றால்.. தேர்வு சமயங்களில் அவர் தன்னிடம் தனிவகுப்பு (டியூஷன் தான்...) படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக்கு மிகச்சில நாட்கள் முன்பு 'முக்கிய கேள்விகள்' குறித்துக் கொடுப்பார்.. அவர் கொடுக்கும் 'முக்கிய கேள்விகள்' எப்படியும் தேர்வில் வந்தே தீரும். என்னதான் மற்ற ஆசிரியர்களும் 'முக்கிய கேள்விகள்' குறித்துக் கொடுத்தாலும், 'அவை வந்தாத்தான் வரும்' என்று பெயர் வாங்கியவை. என் ஆசிரியர் குறித்துக் கொடுக்கும் கேள்விகளுக்கு இதனால் 'அதி முக்கிய கேள்விகள்' என்று பெயர்.. அதனால், தேர்வு சமயங்களில்..'சார் முக்கிய கேள்வி கொடுத்தாச்சா' என் பதுதான் பெரிய பேச்சாக இருக்கும்... சமயங்களில் நாங்களே (பள்ளி வகுப்பு மாணவர்களே) அவர் பின்னால் 'சார்..சார்..' என்று பின்னால் அலைவோம்.. எங்களிடம் எப்படியும் டபாய்த்து விடுவார்.. அவர் டியூஷன் பையன்களுக்கு மட்டும் தான் குறித்துக் கொடுப்பது சமயங்களில் எனக்கு பெரிய வருத்தமாகவே இருக்கும். இருந்தாலும் நமக்கு எப்பொழுதும் வகுப்பில் முதலிடம் தான் என்பதால்.. இது அவ்வளவாக என்னை பாதிக்க விடுவதில்லை...
அவரிடம் தனி வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் இந்த கேள்விக்குறிப்புகளைத் தந்துவிடமாட்டார்கள்.. சமயங்களில் அவை கசிந்து விடுவதும் உண்டு.. சில தனிவகுப்பு மாணவர்கள் சிலர் இரக்க சுபாவத்தின் பேரில் அவ்ற்றை ஒரிருவருக்கு கொடுத்துவிடுவார்கள்..
சொல்ல மறந்துவிட்டேனே... என் ஆசிரியர் எங்களுக்கு ஆங்கிலம் மற்றும் வரலாறு புவியியல் வகுப்புகள் தான் எடுப்பார். இருந்தாலும்.. அவர் மற்ற பாடங்களுக்கும் (தமிழ், கணக்கு, அறிவியல்) முக்கிய கேள்விகளும் கொடுப்பார்.. அந்த கேள்விகளூம் தவறாமல் தேர்வில் வரும்.. எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.. 'எப்படி சாருக்கு.. மற்ற பாடங்களும் தெரிந்து.. அந்த தேர்வில் வரும் வினாக்களும் தெரியும்' என்று.. என் மனதில் அப்பொழுதெல்லாம்.. மிகப் பெரிய ஆச்சரிய பிம்பம் அவர்...
தேர்வு முடிந்து வரும் போது பள்ளியிலேயே எங்காவது கண்ணில் படுவார்.. அப்பொழுது அவர் தனி வகுப்பு மாணவர்கள் 'நீங்க குறிச்சுக் கொடுத்ததெல்லாம்.. அப்படியே எக்ஸாமில் வந்தது சார்..' என்று பெருமையாக சொல்வார்கள்.. உதடோரம் ஒரு சின்ன புன்னகையுடன் 'இதெல்லாம் எனக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை' என்பது போல் ஒரு ச்சின்ன புன்னகையைத் தவழ விடுவார்...
எல்லாம் முடிந்து.. சமீபத்தில்.. (2004 ஆம் ஆண்டு..) கிட்டத்தட்ட 27 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆசிரியரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.. இப்பொழுது தான் புரிந்தது.. அந்த பள்ளியிலேயே வினாத்தாள் குறிக்கும் மற்ற ஆசிரியர் வீட்டுக்குச் சென்று.. தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே ஒரு நோட்டம் விட்டு வந்துவிடுவார் என்பது...
என்னமோ தெரியவில்லை.. இந்த விடை தெரிந்தபொழுது என் மனதில் இருந்த ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்த்ற்கு ஒரு விடை கிடைத்தது போல் தான் இருந்ததேயொழிய.. என் ஆசிரியர் மேல் கடுகளவும் மரியாதை குறையவில்லை.. ஏனென்றால்..தன் பள்ளி வகுப்பறையில பாடம் நடத்தும் போது அவர் எந்த குறையையும் வைத்ததில்லை...
Wednesday, June 09, 2004
Subscribe to:
Posts (Atom)