Tuesday, August 28, 2007

56. என் நண்பனே.. நடராஜா.. !!

நியூ டெல்லி: ஆகஸ்ட் 30, 1989 அதிகாலை..


"நம்ம நடராஜ் ஆக்ஸிடெண்ட்லே இறந்துட்டானாம் டா..", இரவு முழுவதும் NIC யில் வேலை பார்த்து விட்டு வந்துவிட்டு.. காலையில் கதவைத்திறந்த என் நண்பன் சொன்னான்.

"எந்த நடராஜு? நம்ம நடராஜா? எப்படி? என்ன ஆச்சு?", வழக்கமாகவே கதை விடும் நண்பன் சொல்வதும் பொய்யாக இருக்கக் கூடாதா என ஒரு ஆதங்கத்துடனும் அழுகையுடனுமே கேட்டேன்.

"ஆமாம்.. நம்ம நடராஜே தான்.. வேலூர்-லே தான்.. நேத்து சாயங்காலம் .. லைப்ரரி புக் ரிடர்ன் செய்துட்டு வரும் போது.. ஃபுட் போர்ட்லேருந்து ஸ்லிப் ஆகி விழுந்துட்டானாம்..."

"பின் சக்கரம் வயித்துல ஏறிடிச்சாம்.. நேத்து நைட் கம்ப்யூட்டர்ல மெட்ராஸ் NIC லேருந்து தட்டிக்கிட்டே இருந்தானுங்க... ராத்திரி முழுக்க அழுது தீத்துட்டேன்..."

ரொம்ப சோகமாயிட்டேன்.... நான் என் நிலைக்கு வர சில வாரங்கள் ஆயிடிச்சி..

oOo oOo

இறக்கும் போது நடராஜுக்கு 26 வயசு.. கை நிறய்ய சம்பளம் வாங்கும் வேலை.. அப்பொழுதுதான் தொடங்கப்பட்டு மாவட்டம் தோறும் கிளை பரப்பிக் கொண்டிருந்த மத்திய அரசின் NIC (National Informatics Center) (ராஜீவ் காந்தியின் கனவு நிறுவனம்) யில் வேலூர் மாவட்டத்தில் தலைமைப் பதவி.. மாவட்ட கலெக்டரின் அறைக்கு அடுத்த அறை அவன் அறை தான்.. எப்பொழுது வேண்டுமானாலும் கலெக்டரைச் சந்திக்கலாம்..

காதலித்தவளையே கல்யாணம் கட்டி அன்றுடன் 126 நாளாகியிருந்தது...

ஆடி மாதம் கழிந்து குடித்தனம் வைக்கலாமென்று மயிலாடுதுறையிலிருந்து ஆசை மனைவியும் குடும்பத்தாரும் சீர் செனத்திகளோடு முதல் நாளிரவு தான் வந்திறங்கியிருந்தார்கள்... கொண்டு வந்த மூட்டைகளின் கட்டு கூட இன்னும் பிரிக்கவில்லை....

மாப்பிள்ளை உடலை போஸ்ட்மார்ட்டம் பண்ணி கட்டி வாங்கிக் கொண்டுச் சென்றார்கள்...

oOo oOOo

நடராஜ் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்....

நான் B.Sc and M.Sc கணிதம் படிக்கும் போது எனக்கு ஒரு வருடம் சீனியர். நல்ல படிப்பாளி.. Calculus, DIfferential Equations, Classical Mechanics எல்லாம் தலைகீழ் பாடம்.

B.Sc., கணிதத்தில் கல்லூரியில் முதலிடம்.. M.Sc., கணிதத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாமிடம்.. எது கேட்டாலும் பொறுமையாக்ச் சொல்லித் தருவான்..

M.Sc முடித்துவிட்டு.. அண்ணாமலையில் PGDCA .. பெங்களூர் IISc (Indian Instititute of Science)-ல் Master of Engineering (Computer Science) முடித்தவர். அந்தக் காலத்தில் மாயவரத்தில் ME என்பதெல்லாம் ரொம்ப அதிகம்.. நிறைய்ய பேர் பார்க்க முடியாது.. ஊருக்கே ஒருத்தர் ரெண்டு பேர் தான் இருப்பாங்க...

oOo oOo




1986, 1987 ஜூனில் நாங்களெல்லாம் வேலையில்லாப் பட்டதாரிகள்.. சொல்லிக்கொள்ளும் படியான நிரந்தர வேலையில்லா விட்டாலும் படித்த கணிதம் சோறு போட்டது. +2 மற்றும் B.Sc மாணவ/மாணவிகளுக்கு டியூஷன் எடுத்துக் கொஞ்சம் டீ/சிகரெட் குடிக்கக் காசு பார்த்துக் கொண்டிருந்தோம்



1987 ஜூலையில் நான் IIT Kharagpur M.Tech படிக்கச் செல்ல மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயிலேறிக் கொண்டிருந்த நேரம்.. அரக்கப் பரக்க ஓடிவந்து..

"இங்க வா மாப்பிள்ளை... இந்தா இதுல 300 ரூபா இருக்கு.. இப்பத்தான் டியூஷனில் வசூலாச்சு.. நீயும், வெளியூர்/வெளிமாநிலம் போயி IIT-ல படிக்கப் போற... படிச்சு எப்படியும் பெரிய ஆளாயிடுவே.... எங்களையெல்லாம் மறந்துராதரா..."


கட்டித் தழுவி அன்போடு சொல்லிச்சென்ற நண்பன் முகம் மறக்கவில்லை.. அவன் சொல்லிச் சென்ற சொற்களும் மறக்கவில்லை....

அவன் போய்ச் சேர்ந்து தான் இன்றோடு 18 வருடங்களாயிடிச்சி... அவன் நினைவுகள் மட்டும் எப்பொழுதும் மடை திறந்த வெள்ளமாக.... வற்றியதேயில்லை...

Wednesday, August 22, 2007

55. வாத்தியாரப் பத்தி.. எல்லாரும் எழுதுங்கய்யா...!!

நம்ம சிந்தாநதி.. ஆசிரியர் தினத்துக்காகப் போட்டி அறிவிச்சிருக்காரு.. உங்களுக்கும் பரிச் உண்டு.. நீங்க எழுதிய ஆசிரியருக்கும் பரிசு உண்டு..



இதனால் பல நல்ல விஷயங்கள் வெளீயில வரும்-னு நம்புறோம்...



தயவு செஞ்சு எழுதுங்க..







ச்சின்ன வயசுல என்னையெல்லாம் உக்காத்தி வெச்சுப் பாடம் சொல்லிக்கொடுத்த அந்த ரொம்ப நல்ல ஆசிரியர்கள் இல்லாம இருந்திருந்தால்.. நானெல்லாம் .. இந்தப் பையன் மாதிரி பஞ்சு மிட்டாய் விக்கத் தான் போயிருப்பேன் !!
இப்ப ப்திவுலகத்துல இருக்கற நிறைய பதிவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களென்று கேட்டுத் தெரிந்து கொண்டேன்..
ஆசிரியர் தொழில் மாதிரி நன்றியும் உடனடிப் பாராட்டும் கிடைக்காத தொழில் உலகத்துல கிடையாது...
என் வேலையில யெல்லாம் நான் ஏதாவது நல்லா பண்ணினால்.. அன்னிக்கே யாராவது பாராட்டிடுவாங்க.. அல்லது பாராட்ட வெச்சிடுவேன்...

இந்த ஆசிரியர் தொழில்ல பாருங்க.. மாணவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கினா.. 'மாணவன் புத்திசாலி' என்ற பெயர் வருமே தவிர.. ஆசிரியர் புத்திசாலி என்றோ நல்லவரென்றோ யாரும் சொல்வதில்லை..

ஆனா இதே மாணவன் சரியாகத் தேர்வாகவில்லையென்றால்.. உடனடிப் பழி.. ஆசிரியர் தலையில் விழும்.. "வாத்யார் சரியில்ல சார்... அப்புறம் எப்படிப் பசங்க படிப்பாங்க..." என்பது தான் பேச்சாக இருக்கும்..
நல்லா.. யோசிச்சுப் பாருங்க...

உங்களுடைய முன்னேற்றத்துல.. இப்ப நீங்க இருக்குற நிலைமைக்கு நிச்சயம் பல ஆசிரியர்கள் காரணமாக இருப்பார்கள்..
உங்களுக்கு நினைவில்லையென்றால் உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்.. நிச்சயம் நினைவூட்டுவார்கள்..
அந்த ஆசிரியர்களையெல்லாம் நினைவூட்ட ஒரு சந்தர்ப்பம் இது.. அவங்க செஞ்ச நன்மைக்கெல்லாம்..இப்ப ஒரு பாராட்டாவது.. பாராட்டி எழுதுங்க.. அவங்க மனசு குளிரும்...
தயவு செஞ்சு...

பரிசு பெற வாழ்த்துக்கள்..
காதைக் காமிங்க.. சிந்தாநதி சொன்ன மாதிரி.. ச்சின்ன பரிசெல்லாம் இல்லை.. நிஜமாவே.. பெரிய பரிசாத் தரத்தான் ஆசைப்படறோம்..
முடிஞ்சால் உங்க தங்கமணி/ரங்கமணியையும் எழுதச் சொல்லுங்க.. பரிசு ஒரு பட்டுப்புடவைக்காவது நிச்சயம் ஆகும்...

54. என்னே கலைஞரின் சொற்சிலம்பம்..!!

கத்தரிக்காய் வாங்க கடைக்குப் போறீங்க-ன்னு வெச்சுக்கலாம்....

எல்ல எடத்துலயும் கத்தரிக்காய் கிலோ 10 ரூபாய் ன்னு போட்டிருக்கு-ன்னு பாக்கறீங்க...ன்னும் வெச்சுக்கலாம்.. (எனக்கு சென்னயில் இப்ப கத்தரிக்காய் என்ன வெலைன்னு தெரியாது... விவசாயி இளா கிட்ட தான் கேக்கணும்... )

ஒரே ஒரு ஆளு மட்டும் "கத்தரிக்காய் கிலோ 100 ரூபா" னு போட்டிருக்காருனு வெச்சுக்குவோம்..

அவர் கிட்ட போயி, "என்னப்பா.. கத்தரிக்காய் கிலோ 100 ரூபா சொல்றே.. கொறக்கக் கூடாத.. அங்கேயெல்லாம் கிலோ 10 ரூபா தானே சொல்றாங்க.." அப்படீன்னு கேட்டாக்க.. அவர் என்ன சொல்லலாம்?


  1. "சார் இது சிங்கப்பூர் கத்தரிக்கா சார் .... நேத்து ராத்திரி பிளேன் ல வந்துது சார்"
  2. 'எனக்கு வாங்கின வெலையே கிலோ 95 ருபா சார்..'
  3. "இது ஸ்பெஷல் உரம் போட்டு வெளஞ்சுது சார்... இத்ச் சாப்பிட்டா.. நோய் வராது சார்.."

இந்த மாதிரி ஏதாவது சொன்னால்... செய்தி உண்மையோ.. பொய்யோ.. சொல்வதில் ஏதோ ஒரு நியாயமோ அல்லது.. ஒரு கத்தரிக்காய் சம்பந்தப்பட்ட வேல்யூ இருப்பதாகத் தெரிகிறது...

அதை விட்டிவிட்டு.. "நான் ஏழை சார்.... அதனால தான் கிலோ 100 ரூபாய் போட்டிருக்கேன்.." அப்படீன்னு சொன்னா.. அதுல என்ன நியாயம் இருக்கு -ன்னு ச்சொல்றது????

oOo

கத்தரிக்காயை விடுங்க.. கலைஞருக்கு வாங்க...

எனக்குத் தெரிஞ்சு... இது வரைக்கும் எந்தக் கேள்விக்கும் கலைஞர் பதில் சொல்லாமலேயே இருந்ததில்லை... கேள்வி கேக்குறவனுக்கு எல்லாம் பதில் கிடைக்கணும் என்பது ஒவ்வொருவனின் அடிப்படை உரிமை-ன்னு நம்பி பதில் சொல்பவர் போலே தான் (அது தனக்குத்தானே.. கேட்டுக்கிட்ட கேள்வியாக இருந்தாலும் ..) எனக்குத் தெரிகிறது...



அந்த பதிலில் கேட்டவனுக்குத் திருப்தியோ .. அல்லது பாதிக்கப் பட்டவனுக்கு ஆறுதலோ.. கெடச்சாலும் கெடைக்கா விட்டாலும்.. தமிழ்மொழி.. ஒரு இஞ்ச்சாவது வளர்ந்திருக்கும்-னு நம்புற உடன்பிறப்புக்கள் இருக்கத்தான் இருக்காங்க...

அப்புறம்.. கலைஞரின் நாவன்மையென்றோ.... சமயோசிதமான பதில் என்றோ.. எதிர் கட்சியின் வாயைச் சாதுர்யமாக அடக்கினாரென்றோ பதிவோ புத்தகமோ எழுதிட்டாப் போறது....!!

அது போல கலைஞரின் சமீபத்திய சொற்சிலம்பம்...

கேள்வி: தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றதே.. ஏன்?

கலைஞரின் நாவன்மை: தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள்.. தமிழகத்தின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு தான் இருக்கிறது...

பாராட்டாமல் இருக்க முடியவில்லை....

Wednesday, August 15, 2007

53. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போண்டா சாப்பிடுவாரா?

நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி போண்டா சாப்பிடுவாரா? வலையுலகில் பெரிய கேள்வி அதுதான்..

நமக்கெல்லாம் போண்டா-ன்ன உடனேயே யாரு ஞாபகம் வரும்-னு எல்லோருக்கும் தெரியும்..

தமிழ் வலையுலகின் மூத்த பதிவர், வலையுலக டெண்டுல்கர்.. இணைய உலக முதல் பிரபல போண்டாப் பிரியர்.. டோண்டு மாமா ஞாபகம் வந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை..


நம்ம ரஜினி சாருக்கும் போண்டா.. அதுவும் பெங்களூரூ போண்டா சாப்பிடணும்-னு ஆசை வந்திடிச்சாம்...


நம்ம ரசிகர்களெல்லாம்.. அவர் கட் அவுட்டுக்கு.. பாலாபிஷேகம் பண்ணிக்கிட்டிருக்கச்சே...


அவர் மாறு வேடத்துல......டோண்டு சார் பிஸியா இருக்கறதுனால.. அவர் மாதிரி இருக்கற் ஒருத்தர் கூடப் போயி.... போண்டா சாப்பிட்டு வந்திருக்காராம்...





நீங்களே பாத்துக்குங்க...!!!!



வலது பக்க கடைசியில இருக்கிறவர் நம்ம வலையுலக டெண்டுல்கர் மாதிரியில்லை... !!!!!

பி.கு: நல்ல வேளை இந்தப் படம் நம்ம விகடன் ஆசிரியர்கள் கண்ணில் படவில்லை.... பட்டிருந்தால்.. "சூப்பர் ஸ்டாரின் போண்டா பயணம்.. எக்ஸ்குளூசிவ் போட்டோக்கள்" என்று விகடன் முத்திரை வாட்டர் மார்க்கோட படங்கள் போட்டு... போகும வழியில் அவர் சொன்னதா ஒரு 38 குட்டிக் கதைகளையும் சேர்த்து... ஒரு 24 வாரத் தொடர் எழுதியிருப்பாங்க!!

தொடரின் முடிவில் சூப்பர் ஸ்டார் கிட்ட கேட்டு ஒரு 4 வார பேட்டியும்.. அவருக்குப் பிடித்த மாதிரி எப்படி போண்டா போடுவது என்ற ரெசிப்பியும் கேட்டு வாங்கி.. தூள் கெளப்பியிருப்பாங்க..

நம்ம அதிர்ஷ்டம்...

Tuesday, August 14, 2007

52. இவனுங்களைப் பொட்டியோட வூட்டுக்கு அனுப்பணும்

எனது சென்ற பதிவான "51. இந்திய ஐ.டி துறையினரிடம் திறமைக்குறைவா?" என்பது பற்றி சென்னையில் உள்ள என் ஐ.டி நண்பரிடன் தொலை பேசினேன்.

"ராஜா.. இதெல்லாம் ஐடி துறையில மட்டும் இப்ப நடக்குறது இல்ல.....அதுக்கும் மேல....."


நண்பர் ஐ.டி துறையில் வேலை பார்த்தாலும் அவர் மனைவி ஒரு திறமையான மருத்துவர். அதனால் மருத்துவத் துறையில் நடப்பதைப் பற்றி நண்பருக்கு விரிவான் செய்தியறிவு இருக்கும். சமயத்தில் பத்திரிகையில் வராத செய்தியெல்லாம் "குமுதம் ரிப்போர்ட்டர்" பாணியில் சொல்லுவார். இன்று அவர் சொன்ன செய்திகள் 'பகீர்' ரகம்.



1. இவரைப் போல் இன்னொரு நபரும் டாக்டர் மனைவியை வைத்து அறுவை சிகிச்சை கிளினிக் நடத்துகிறார். ஒவ்வொரு அறுவைச் சிகிச்சையின் போதும் மயக்க மருந்து நிபுணருக்கு அதிகம் பணம் தரத் தேவையாய் இருக்கிறதே என்று யோசித்த இந்த நபர், மருத்துவம் படிக்காத இந்த நபர் , யாரிடமோ சென்று 3 நாட்கள் வகுப்பு எடுத்து வந்தாராம். அது முதல் வரும் எல்லா அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இவர் தான் மயக்க மருந்து தருவாராம். இவர் இருப்பது சென்னையில்....
சமீபத்தில் இவர் சிகிச்சையளித்த ஒரு நோயாளி, இவரின் தவறான சிகிச்சையால் (தேவைக்கு அதிகமான மயக்க மருந்தாலோ அல்லது தரப்பட்ட விதத்தாலோ..) நீண்ட கோமாவுக்குச் சென்று விட்டாராம். நோயாளியின் சொந்தங்களும் .. குல தெய்வத்தை கண்டபடி திட்டி விட்டு நோயாளியுடன் வீடு சென்று விட்டனராம்.
2. இன்னொரு செய்தியில் .. நடு இரவு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு அவரின் மகப்பேறு நிபுணர்.. தூக்கத்தைக் காரணம் காட்டி உதவிக்கு வர மறுத்து விட்டாராம்.. அருகிலிருந்த ஒரு குழந்தைநல மருத்துவர் பிரசவம் பார்க்க வேண்டியாகிவிட்டதாம்..

இவரிடம் கேட்டது போதாதென்று.. இன்றைய செய்தியில் மதுரை சிவா (போ)பாலி கிளினிக் பற்றி செய்தி வேறு.. இந்த செய்தியில் நோயாளி இறந்தே விட்டாராம்.. அதற்கு அந்த டாக்டரின் விளக்கம் அதிர்ச்சியுற்வே செய்தது..
சிவா பாலிகிளினிக் டாக்டர் சிவகுருநாதனை அவரது வீட்டில் சந்தித்தோம். "என் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டுறாங்க" என்றவர், அது பற்றி விளக்கினார்.

"மீனாவின் வயிற்றைக் ஸ்கேன் செய்தபோது கட்டி இருந்தது தெரிய வந்தது. எல்லா டெஸ்ட்டும் செய்து பார்த்த பிறகு, மாலை நான்கு மணியளவில் ஆப்பரேஷன் தொடங்கி நல்ல படியாக முடிந்தது. சீனியர் டாக்டர் அதியமான் என்பவர் ஆப்பரேஷன் செய்தார். ஆப்பரேஷனுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் நன்றாகத்தான் இருந்தார். அதன் பிறகு ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு குறைந்து வியர்க்கத் தொடங்கியது. அரசு ஆஸ்பத்திரிக்குப் போக ஆம்புலன்ஸில் ஏற்றி ஐநூறு ரூபாயும் கொடுத்து அனுப்பினேன். இங்கிருந்து புறப்படும் வரை உயிருடன் தான் இருந்தார். அவர் இறந்ததற்குக் காரணம் தெரியவில்லை..."



இந்த மாதிரி டாக்டர்களையெல்லாம்.. இது மாதிரி மூட்டை கட்டி எங்கயாவது அனுப்பி விட்டு....

அறுவைச் சிகிச்சை முடித்த பின்னரும் உயிரோட இருக்குற பேஷண்ட்டுகளோட சிரிச்சுப் பேசிக்கிட்டிருக்கிற இந்த மாதிரி அழகான டாக்டர்களை நமது நாடு உருவாக்க வேண்டும்...



பி.கு: ச்சின்னதோ பெரியதோ.. அறுவை சிகிச்சை செய்து கொண்ட எந்தவொரு நோயாளியையும் கேட்டுப் பாருங்கள்.. அவங்களுக்கு அவங்க டாக்டர் எவ்வளவு அழகாகத் தெரிகிறார்களென்று.... உயிர் கொடுத்த எல்லா தேவதைகளுமே அழகிகள் தான்.. நம்மை ஈன்ற தாய் உட்பட....


Saturday, August 11, 2007

51. இந்திய ஐ.டி. துறையினரிடம் திறமைக்குறைவா..?

அமெரிக்காவில் ஒரு பெரிய வங்கியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. தன் வேலை பார்க்கும் இடத்தில் சில இடங்களை நிரப்ப வேண்டுமென்றும் தகுதியான் நபர்கள் நண்பர்களிருந்தால் தெரிவிக்கும்படியும் சொன்னார்...

அவர் சமீபத்தில் நிறைய பேரை (குறிப்பக இந்தியரை) நேர்முகத்தேர்வு செய்திருந்ததால் அவரின் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்..

அவர் சொன்னதிலிருந்து சில கருத்துக்கள்:




  1. இந்திய ஐ.டி துறையினரிடம் (அதுவும் இளைய .. 26லிருந்து 35 வயதுக்குட்பட்டோரிடம்) திறமைகள் தற்போது கேள்விக்குரியதாகவெ இருக்கிறது. அவரவர் resume-ல் சொல்லப்படும் திறமைகளையும் அடிப்படை அறிவுத்திறன்களும் நிரூபிக்கக்படும் அளவு இல்லை.
  2. அடிப்படை கணிணி சார்ந்தத அறிவுத்திறன் ரொம்பக் குறைவாகவே இருக்கிறது
  3. நேர்முகத் தேர்வுக்கும்.. தொழில் சார்ந்த கேள்விகளுக்கும் திறமையாக பதில் சொல்ல இயலாதவர்களாகவே இருக்கிறார்கள்.
  4. வசதியான வேலை (அன்றாட வாழ்க்கையில் சுலபமான வேலை) அல்லது சவலான வேலை இரண்டுக்கும் வாய்ப்புகள் வரும் பட்சத்தில் சவாலான வேலை எடுத்துச் செய்யும் மனோபாவம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இதெல்லாம் நண்பர் படித்த் குறைபாடுகள். நிறைகள் இல்லாமலில்லை. அவரை பொருத்த மட்டில் 25 பேர் வரை இண்டர்வியூ செய்தும் ஒருவர் கூட திறமையாகத் தேற்வில்லையே என்ற ஆயாசம் தெரிந்தது..


இவர் சொன்ன குறைகள் பட்டியலை எடுத்துக் கொண்டு TCS மற்றும் Infosys கம்பெனிகளில் மேலாளர்களாக இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் கருத்துக் கேட்ட பொழுது.. அவர்கள் சொன்னது..

  1. இந்த்ப் பிரச்னை கல்லூரிகளிலேயே தொடங்கி விடுகிறது. நமது கல்லூரிகள் பெருகிய அளவு திறமையான பேராசிரியர்கள் பெருகவில்லை.. சென்ற ஆண்டு படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத மாணவர்களே இந்த ஆண்டு விரிவுரையாளர்களாக வரும் போது என்ன தரம் மாணவர்களுக்குக் கிடைத்து விடுகிறது?
  2. மற்றும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலையில் (திறமையோ பாடப்பிரிவோ இல்லை) மட்டும் (for example applications testing, operations or bug-fixing அல்லது ஆணி பிடுங்குவது..) திறமைகளை வளர்த்துக் கொள்வதால் மற்ற துறைகளில் அவ்வளவாகச் சோபிக்க முடிவதில்லை
  3. இப்பொழுது IT இளைஞர்களில் கவனத்தைத் திருப்பும் விதமான் பல விஷயங்கள் பெரூகிவிட்டதால் கற்பதில் அவர்கள் ஆர்வம் குறைந்து விடுகிறது.
  4. முக்கியமாகத் தமிழ் IT இளைஞர்கள் விகடன், குமுதம் என்று இறங்கி விடுகிறார்கள்.. அலுவலக நேரத்தில் இந்தத் தளங்களைப் படிக்காத தமிழர்களே இல்லை என்றார்
  5. இந்தியாவில் இப்பொழுது சவாலான வேலைகள் கிடைப்பதில்லை.
  6. இப்பொழுதெல்லாம் இந்தியாவில் 2 வருடம் .. 3 வருடம் வேலை பார்த்தவனெல்லாம் project lead.. 5 வருடம் வேலை பார்த்தவன் project manager அதுக்கு மேலே வேலை பார்த்தவன் client account executive என்று ஆகும் போது அவன் மூன்றாவது வருடத்திலிருந்தே hands-on experience-ஐ விட்டு விடுகிறான்

நிலைமை இருவர் சொன்ன மாதிரியும் அவ்வளவு மோசமானதாக இல்லை என் நான் பூரணமாக நம்புகிறேன்.... நான் இந்தியாவை விட்டு வந்து இப்பொழுது 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையோ ஓரிரண்டு வாரங்கள் சென்று வருவதால்.. எனக்கென்று கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளும் அளவு என்னிடம் உறுதியான் செய்திகளில்லை..

தமிழில் வலை பதிபவர்கள் அதிகம் ஐடி துறையினராதலால்.. உங்கள் கருத்துக்கள் என்னெவென்பதைச் சொல்லுங்களேன்..

அறிய ஆவலாயுள்ளேன்..

Wednesday, August 08, 2007

50. தாலாட்டுகளும்.... காமெடிகளும்...


1975-ல் மயிலாடுதுறையில் நடந்ததாக என் அப்பா சொன்னது:

10 வயது பெண்ணொன்று அவள் தங்கையைத் தூளியில் போட்டுத் தூங்க வைத்துக்கொண்டிருந்த போது பாடிக்கொண்டிருந்த ..தாலாட்டு....


நான் கேட்டேன்.. அவன் தந்தான்..
தா...லா...ட்டும் தா..யா...னேன்..........

(அப்பொழுது பிரபலமான ஒரு மெலோடியஸ் பாட்டு.. எனக்கும் பிடிக்கும்)..

அதன் அர்த்தத்தையும் பாடும் பெண்ணின் வயதையும் சூழ்நிலையையும் நினைத்து வியந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார்..


oOo

1990 களில் என் நண்பன் மார்ட்டின் சொன்னது:

வாசு.... (என்னை வாசு என்று வித்தியாசமாகக் கூப்பிடும் வெகு சிலரில் ஒருவன்..)

என் தங்கையை ஒரு நாள் ..தூளியில் வைத்து தூங்கப் பண்ணிக்கிட்டிருந்தேன்.. அப்ப ஒரு பாட்டுப் பாடினேன்...

அப்பத் தான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த எங்க அப்பா என்னை பெல்டை வெச்சி விளாசியெறிஞ்சுட்டாருடா...

"அப்படி யென்னடா மச்சி.. பாடினே..?" - இது நான்

"மாங்கா திருடி திங்கிற பொண்ணே மாசம் எத்தனையோ?.." - எம்ஜியார் பாட்டுப் பாடினேன் என்றான்..


oOo

2007-ல் (அமெரிக்கவில் வசிக்கும்) என் நண்பர் அரவிந்தன் சொன்னது...

"இன்னிக்கு என் ச்சின்னப் பையனைத் தூங்கப் பண்ண பாட்டுப் பாடிக்கிட்டிருந்தேன் வாசன்... "

"என்னப் பாட்டுங்க..?"


"உதயகீதம் படத்திலிருந்து... ஒரு பாட்டு..'

"பா..டு நிலாவே..." என்று தொடங்குமே அது...

அந்தப் பாட்டுல.. வரும்....

"பால் கொடுத்த நெஞ்சிலே... ஈரம் இன்னும்... காயலே....
பால் மணத்தைப் பார்க்கிறேன்... பிள்ளை உந்தன் வாயிலே..."


இந்த வரிகளைப் பாடி முடித்ததும்.. அவர் 9 வயது பையன் யஷ்வந்த் சொன்னது..

"Daddy.. Stop singing that song.... you are singing girly stuffs.."