Tuesday, April 27, 2010

97. சீமாச்சுவின் தாம்பூலம் - 28 ஏப்ரல் 2010

பள்ளியில் நாம் படிக்கும் போது நமக்கு அமையும் ஆசிரியர்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றங்களை உண்டாக்குகிறார்களென்பது வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரைச் சந்திக்கும் போதும் உணரமுடியும். ஆனந்த விகடனில் வரும் ஒரு தொடரில் உதயச்சந்திரன் IAS அவர்களின் பேட்டியிலிருந்து சில வரிகள்..

பள்ளியில் குமாரசாமின்னு ஒரு சார்தான் எனக்கு சரித்திரம், பூகோளம் பாடங்கள் எடுத்தார். வகுப்புக் குள் நுழைந்ததும் 'குப்தர்கள் காலம்'னு கரும்பலகையில் எழுதிட்டு, 'ராஜஸ்தான் முதல்வர் யார்?', 'கியூபாவின் அதிபர் யார்?'னு தினமும் சில பொதுஅறிவுக் கேள்விகளோடுதான் பாடங்களை ஆரம்பிப்பார். அவருக்காகவே பள்ளிப் பருவத்திலேயே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் வந்தது. அந்தப் பழக்கம் கல்லூரிக்குள் கால் வைக்கும்முன்னரே தி.ஜா., சுந்தர ராமசாமி போன்றோர்களைப் பரிச்சயப்படுத்தியது. பொது அறிவு, தமிழ், இலக்கியம்னு என்னைச் சுத்தி அமைஞ்ச சூழலை கல்லூரிப் பருவம் வரை அபாரமாக் கிரகிச்சுக்கிட்டேன்!''

உதயச்சந்திரன் IAS
வய்து 38
நிர்வாக இயக்குநர்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

நான் படித்த எங்கள் ஊர் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளியில் இதுபோல நிறைய ஆசிரியர்கள் மாணவர்க்ளின் முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தார்கள்.. எனக்கு அமைந்த ஒவ்வொரு ஆசிரியருமே நான் பெற்று வந்த வரம் தான்.

ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் என் மகளுக்கு சென்ற வாரம் என் மகளுக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிந்த்து நான் என் ஒன்பதாம்/பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி ஐயரை (Shri SK sir) அவர்களை எனக்குத் தெரியாமலேயே இமிடேட் செய்து கொண்டிருந்தேன் என்பது. எனக்குக் கணித்த்தில் இயல்பாகவே ஈடுபாடு இருந்ததென்றாலும், அதைப் பலவகையில் தூண்டி என்னை வளர்த்தது என் ஆசிரியர் என்பதை என்னால் எங்கும் தெளிவாகக் கூற முடியும்.

எங்கள் பள்ளி ஆர்குட் குழுமத்தில் 1990 களில் எங்கள் பள்ளியில் படித்த மாணவரொருவர் எழுதிய பின்னூட்டம் "எனக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்த ஜெயசீதா மேடம் எனக்குத் தெய்வம் போன்றவர்.. அவர் மட்டும் எனக்கு ஆசிரியராக அமைந்திராவிட்டால் என் இக்காலத்தை என்னால் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது"

oOo

குமுதம் ரிப்போர்ட்டரில் நித்யானந்தா பற்றி சாரு நிவேதிதா எழுதி வரும் தொடர் பெரிய அபாண்டம். நித்யானந்தா செய்ததையோ அல்லது அவர் சீடர்களின் நம்பிக்கையைக் குலைத்ததையோ நான் மறுக்க வில்லை. ஆனால் அவரைப் பற்றி சாரு எழுதுவது அவதூறு என்பது மட்டும் அந்தத் தொடரைப் படித்தாலே புரியும். ஒரு கணவன் மனைவிக்கிடையில் விவாகரத்து நடக்க் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதை விட்டு விட்டு நித்யானந்தாதான் குடும்பத்தைப் பிரித்து விட்டார், சொத்தை அபகரித்து விட்டார் என்றெல்லாம் எழுதுவது கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை. அவர் எழுத்திலேயே சொல்லிவிடலாம் அவர் சொல்லுவதெல்லான் எந்த தருக்க வாதத்திலும் சேர்க்க முடியாதென்பதை..

எதை வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி வேண்டுமானாலும் மனசாட்சியில்லாமல், சாட்சியங்களில்லாமல் எழுதலாம் என்று வந்த பிறகு, இவரையெல்லாம் படிப்பவர்களை நினைத்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நியாயமாக, நல்லதாக சாரு எதை எழுதினாலும் நான் படிக்கக் காத்திருக்கிறேன். குப்பைகளைப் படித்த் பின் அதற்கான நேர விரயத்தையும் மன உளைச்சல்களையும் நினைத்தால் தான் வேதனையாகிறது.


oOo

சமீபத்தில் மிகப் பிரபலமான் ஊடக நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன், கழுகு, வம்பானந்தா இன்ன பிற பத்திரிக்கை செய்திகளைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்பொழுது அவர் சொன்னது இத்தான் " அவற்றில் வரும் அரசியல் யூகங்கள் மற்றும் செய்திகள் எல்லாம் முழுக்க முழுக்கக் கற்பனைகளே. அரசியல்வாதிகளின் பாத்திரங்களும் அந்த நிகழ்ச்சி நடக்கும் இடங்களும் உண்மைதான். மற்ற் செய்திகளெல்லாம் அவர்கள் நடத்தும் மெகா சீரியல்கள் மாதிரிதான். நன்றாகக் கூர்ந்து கவனித்தால் தெரியும். அவர்களே செப்டம்பர் மாதம் தேர்தல்.. கலைஞ்ர் மனத்தில் எண்ண்வோட்டம் என்றெல்லாம் எழுதி ஜல்லியைடிப்பார்கள். சில வாரங்கள் கழித்து அவர்களே தேர்தலை 2011 க்கு மாற்றிக் கொள்ளலாம் என்று கலைஞர் முடிவெடுத்து விட்டார் என்று எழுதுவார்கள்.. தேர்தல் என்னவோ எப்ப வேண்டுமானாலும் நடக்கும் .ஆனால் அதற்கான பரபரப்பையும் அதனைப் ப்ற்றிய யூகங்களையும், உரையாடல்களையும் கற்பனையிலேயே எழுதி காசு பார்ப்பதென்பது தான் இத்தகைய பத்திரிகையின் சாரங்கள் என்று பல் ஆதாரங்களுடன் அவர் அடுக்கிய பொழுதுதான் அதன் உண்மைமுகம் எனக்கும் புரிந்த்து.


அப்ப நம்மைப் போன்ற பொது ஜனங்களைப் பற்றி இந்தப் பத்திரிகைகள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றன்..?oOo

நித்யானந்தாவுக்கு நெஞ்சுவலி என்று செய்தி படித்தவுடன் "பரவாயில்லையே..இவரும் அரசியல் வாதி அளவுக்குத் தேறிவிட்டாரே" என்று தான் பட்டது.. ஆனால் இன்றைய செய்தி "நித்யானந்தா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்" என்று படித்த போதுதான் செய்தியை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று புரிந்தது. "உள்நோயாளிப் பிரிவிலிருந்து discharge செய்யப்படுவதற்கு" டீசண்டான தமிழ் வார்த்தை எனக்கும் தான் தெரியவில்லை..


அது சரி, ஒருத்தர் எனக்கு நெஞ்சுவலிக்கிறதென்று சொல்லும் போது.. "அதெல்லாம் உனக்கு வலிக்கவில்லை.. நீ வீட்டுக்குப் போகலாம் என்று 6 மணி நேரத்தில் எப்படிக் கூறமுடியும்?" என்ன மாதிரி டெஸ்ட்டுக்கள் எடுத்திருந்தால் அவ்வளவு நம்பிக்கையுடன் "உனக்கு வலியெல்லாம் இல்லை.. நீ போகலாம் " என்று சொல்ல முடியும்? நெஞ்சுவலி என்று கதறிக்கொண்டு மருத்துவமனையில் தங்கியிருந்த எந்த அரசியல்வாதியையும் இது போல திருப்பி அனுப்பியதாக நான் படித்ததில்லையே? சமீபத்திய உதாரணமான் சத்யம் ராமலிங்க ராஜு கூட தீவிரக் கண்காணிப்பில் சில வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்ததாகத் தான் நினைவு.


நித்யானந்தாவை நான் ஆதரிக்க வில்லை. என்னைப் பொறுத்தவரை அவரை நான் வணங்கவோ பின்பற்ற்வோ இல்லை. சட்டம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான சலுகைகளையும் தீர்ப்புக்களையும் வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் வாழும் ஒரு சராசரி குடிமகன் தான்.

oOo


1968 ம் வருடத்திய விகடன் இதழ்களிலிருந்து இரு துணுக்குகள் :


துணுக்கு 1

லண்டன் நகரில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் தானாகவே இயங்கும் மாடிப்படி (Escalator) முதன் முதலில் 1911 ல் பொருத்தப் பட்ட போது பொது ஜனங்கள் அதில் சாதாரணமாக ஏறுவதற்கு அஞ்சியதால், அவர்களுக்கு பயம் போவதற்கும், அதில் ஆபத்து ஒன்றுமில்லை என்று காண்பிப்பதற்கும் மரக் கால்களையுடைய மனிதன் ஒருவனை அந்தத் தானியங்கி மாடிப்படிகளில் கீழேயும் மேலேயும் அடிக்கடிப் போய்வரச் செய்தார்கள்.

ஆனால் அந்த ஏற்பாடு அதிக நாட்கள் நிடீக்கவில்லை. மரக்கால் மனிதனும் சீக்கிரமே வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.

அதற்குக் காரணம் "இந்த மாதிரியான புதுமையான் கருவிகளை உபயோகிப்பதால் தான் இந்த மாதிரி ஆகிறது" என்று மரக்கால்களையுடைய மனிதனைப் பார்த்து மக்கள் அதிகமாக பயம் கொண்டது தான்.


- 1911 லேயே தானியங்கி மாடிப்படிகளும் அதுவும் பொதுமக்களுக்காக இரயில்வே ஸ்டேஷன்களில் (!!!) , மரக்கால் பொறுத்திய மனிதர்களும் லண்டனில் இருந்தார்கள். இந்தியாவுக்கு வர எவ்வளவு காலமாயிருக்கிறது !!!!!

துணுக்கு 2

கோவாவின் ஒருபகுதியில் சமீபத்தில் நடந்த் பஞ்சாயத்துத் தேர்தலில் ஒரே தொகுதியில் இரு சகோதரர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட்டார்கள் . தொகுதி மக்கள் எவ்வளவோ சொல்லியும் இருவரில் ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்து விட்டன்ர். எனவே தொகுதிமக்கள் எவரும் தேர்தலில் ஓட்டுப் போட மறுத்து விட்டனர்.

இரு சகோதரர்களும் தங்களுக்காகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அவர்களது தாயார் மூத்தவருக்கு வாக்களித்துவிட அவர் ஜெயித்து விட்டார்.


இளையவருக்கு ஒரே ஒரு (அவரது) வாக்கு மட்டும் தான். என்றாலும் அவர் டெபாஸிட் இழக்கவில்லை. காரணம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கை அவர் பெற்றுவிட்டதால் !!!

இதுக்குத்தான் 49-O வேண்டுமென்பது !!
Monday, April 26, 2010

96. உலகம் பல விதம்..

உன்னுடைய பிள்ளைகள் கெட்டவர்களாயிருந்தால் நீ அவர்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க வேண்டாம். அவர்கள் நல்லவர்களாயிருந்தால் உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை - பல்கேரியா

ஒர் ஆணி ஒரு லாடத்தைக் காக்கும்; ஒரு லாடம் ஒரு குதிரையைக் காக்கும்; ஒரு குதிரை ஒ்ரு வீரனைக் காக்கும்; ஒரு வீரன் நாட்டையேக் காப்பான் - துருக்கி

காப்பியும் காதலும் சூடாயிருந்தால் தான் ருசி - ஜெர்மனிபதவியில் இல்லாத போது ஒருவன் கண்டிக்கிற குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிறான் - சீனா


சில வருடங்களுக்கு முன்பு, மரவண்டு என்ற கணேஷ்குமார், நிறைய தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்துத் தந்தார். ரொம்ப சுவாரசியமாக இ்ருந்தது. அவற்றில் சில.

அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்

அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை

அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்

அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்

ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு

அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்; அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்; அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு; அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்; ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்

வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான்

இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது

உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..

உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்

தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது

பழமொழியில் உமி கிடையாது

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்; மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும்

உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்

ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும் ஒரு விலாங்கும் இருக்கும்

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள் ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்

சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

பழைய இஞ்சியில் காரம் அதிகம்

உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்

பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்

மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம் விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்

தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்

தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

பின் குறிப்பு: மேலேயுள்ளவை பழமொழிகளின் தொகுப்பு மட்டுமே. அவற்றில் என் கருத்தென்று எதுவும் இல்லை. குறிப்பாக, மனைவி, திருமணம், மங்கையர் ஆகியவற்றின் மேல் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை

Wednesday, April 14, 2010

95. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு..

ரொம்ப நாள் முன்னாடி, தமிழ் செய்தித் தளத்தில் சொர்ணமால்யா நடிக்கும் ஒரு படத்துக்கான் ஸ்டில்ஸைப் பார்த்த போது சொரேரென்றது. ஒரு நல்ல நடனம் தெரிந்த நடிகை, அந்த மாதிரி ஒரு ஏடாகூடக் கோணத்தில் நடிகர் ஸ்ரீமானுடன் இருக்கும் ஸ்டில்லைக் கண்டவுடனேயே, அந்தப் படத்தை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். படமும் வெளியில் வந்து பெட்டியில் சுருண்டு விட்டது போலும். அமெரிக்காவில் வழக்கமாக நான் டிவிடி வாங்கும் கடை வரைக்குமெல்லாம் கூட படம் வரவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனபோது அவர் வீட்டில் ஒரு பெரிய அட்டைப்பெட்டி முழுக்கத் தமிழ்ப்பட டிவிடிக்கள் இருந்தன. அசுவாரசியமாகக் குடைந்து கொண்டிருந்தபோது சிக்கினார் மீண்டும் ஸ்வர்ணமால்யா. படத்தின் பெயர் "சாரி எனக்குக் கல்யாணமாயிடிச்சி". ஏடாகூடமான படமாயிருக்கும் போலருக்கே என்று வீட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு பார்த்தால் (ஹையா.. நானும் உலக சினிமாவெல்லாம் பார்க்கிறேனே... அமெரிக்காவில் உட்கார்ந்து பார்த்தால் எல்லா தமிழ்ப்படமும் இங்கு உலகசினிமாதான்..) ஒரு முழுநீள பாக்யராஜ் படம் போலத்தான் இருந்தது. ஸ்வர்ணமால்யா படு டீஸண்டாக நடித்திருந்தார். பாண்டு, எம். எஸ் பாஸ்கர் இன்னும் ஒரு நடிகர் மூவருக்கும் சபலிஸ்டான கேரக்டர்கள். கதை சாதாரணமான கதை தான். குழந்தைகள் எல்லாம் தூங்கின பிறகு மனைவியுடன் திட்டு வாங்காமல் தைரியமாகப் பார்க்கலாம்..

oOo oOo oOo


நாகலிங்கப் பூ ஒரு விசேஷமான பூ. பள்ளிக்கூட நாட்களில் ஒரே ஒரு இடத்தில் நாகலிங்கப்பூ பூக்கும் மரம் பார்த்திருக்கிறேன். மயிலாடுதுறையில் மணிக்கூண்டு அருகே ராஜ்பில்டிங் (எங்க ஊரின் முதல் பல மாடி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது) 1976ல் கட்டினார்கள். கடையெல்லாம் மேல் மாடியில் வைத்தால் யார் போய் வாங்குவார்கள் என்று விசேஷமாகப் பார்த்த நாட்கள். முதல் மாடியில் ஒரு பெரிய ஆபீஸில் மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் (DEO Office) இருந்தது. பத்தாவது பொதுத் தேர்வு முடிவுகள் வந்து ஒரு வாரம் கழித்து மதிப்பெண் தாள்கள் DEO ஆபீஸில் வந்திருப்பதாக செய்தி வந்தது. எங்கள் பள்ளியிலிருந்து தலைமையாசிரியர் P இராமசாமி ஐயரைத் தொடர்ந்து ராஜ்பில்டிங் வந்து (அவரைத் தொடர்ந்து வந்தது நாங்கள் மொத்தம் 30 மாணவர்கள் ) அவரை அலுவலகத்துக்குள் அனுப்பிவிட்டு ராஜ் பில்டிங் கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்தோம். எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மதிப்பெண்கள் மாடியிலிருக்க, இதயங்கள் இது வரையில்லாத வேகத்தில் தந்தியடிக்க, வாய் மட்டும் கந்தர் ஷஷ்டி கவசம் முணுமுணுத்துக் கொண்டிருக்க கொல்லையில் இருந்த அந்த மரத்தினடியில் பார்த்தால் நிறைய பூக்கள் உதிர்ந்து கிடந்தன. பார்த்தால் அத்தனையும் நாகலிங்கப்பூக்கள். உள்ளங்கை அகலத்தில் பெரீய்ய பூக்கள். படமெடுத்தாடும் ஐந்து தலை நாகத்தினடியில் சிவலிங்கம் இருக்கிற மாதிரி இருக்கும். பார்க்க விசித்திரமாக இருக்கும். தினமலரில் படத்தைப் பார்த்தவுடன் பத்தாம் வகுப்பு நினைவலைகள் வந்துவிட்டன.
oOo oOo oOoஎன் பள்ளியின் மேல் காதல் கொண்டு நான் அலைவதைப் பார்த்து என் அப்பாவுக்கும் அவர் படித்த் பள்ளியைப் பார்க்கும் ஆசை வந்து விட்டது. அப்பாவுக்கு இப்பொழுது 92 வயது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவர் பள்ளிக்கும் போய் தான் படித்த வகுப்பறைகளையும் இன்றைய மாணவர்களையும் போய்ப் பார்த்து வந்தார். தன் பேத்திகளுக்கும் ஆசிரியர்களையும் இந்நாள் மாணவர்களையும் அறிமுகப்படுத்திவிட்டு தன்னையும் முன்னாள் மாணவராக அறிமுகம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார். 1930 முதல் 1936 வரை அப்பா படித்த உயர்நிலைப் பள்ளி அது. தஞ்சாவூர் செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி. அப்பா படித்த நினைவாக இந்தப் பள்ளிக்கும் ஏதாவது உதவிகள் செய்கிறேனென்று அப்பாவிடம் சொல்லியுள்ளேன்.

தாத்தாவின் ஸ்கூலைப் பார்த்ததில் என் மகள்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அப்பா படித்த போது இருந்த தலைமையாசிரிய ஆசிரியர்களெல்லாம் உயரே புகைப்படத்திலிருந்த அப்பாவையும் என் மகள்களையும் ஆசிர்வதித்தார்கள். பள்ளியில் படித்த் போது அதிக மதிப்பெண்கள் எடுத்து தலைமையாசிரியரிடமிருந்து பரிசாகப் பெற்ற ஷேக்ஸ்பியர் புத்தகம் இப்பொழுது என் கையில்.


oOo oOo oOo

தமிழகத்துக்கு மேலவை வரப்போகுதாம். தீர்மானமெல்லாம் நிறைவேற்றி அனுப்பியாகிவிட்டது. மேலவை என்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனாலும் இத்தனை வருடங்கள் இல்லாமல் பழகியாகிவிட்டது. இப்பொழுது எதற்கு என்பது தான் புரியவில்லை. இருக்கும் சட்டசபையே ஒரு புகழ்ச்சி மேடையாகிவிட்டது. இதில் மேலவை வேறா? ஊழல் செய்வதென்று முடிவு செய்துவிட்ட அரசியல்வாதிகள் எப்படி செய்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். என்றாவது ஒருநாள் ஒரு நேர்மையான அரசும் அதிகாரிகளும் நமக்குக் கிடைப்பார்களென்று கனவு கண்டு கொண்டிருக்கும் சாதாரண குடிமகன் நான். எந்தக் கட்சியையும் சாரவில்லை. கல்லூரியில் படிக்கும் போது நண்பரொருவர் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த திமுக உறுப்பினர் அட்டை வீட்டில் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கிறது..

oOo oOo oOo

சானியா மிர்சா இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டதில் ஒரு ரசிகனாக எனக்கு உடன்பாடில்லை.. நம்மளைக் கேட்டாக் கல்யாணம் பண்ணிக்கிடறாங்க. சொல்லியிருந்தால் நல்ல அமெரிக்க மாப்பிள்ளையாக பார்த்து நாம கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்க மாட்டோமா. ஏன், தோஹாவில் இருக்கும் நம்ம தம்பி ஆயில்யனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா? கேரளா பொண்ணுதான் வேணும்னு ஒத்தைக்காலில் நின்னுக்கிட்டிருக்கும் ஆயில்யன் போனாப் போவுதுன்னு தெலுங்குப் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்க மாட்டாரா ? போயும் போயும் பாக்கிஸ்தான் மாப்பிள்ளைதான் கிடைச்சாரா? எப்படியோ நல்லாஇருந்தால் சரிதான். எங்கிருந்தாலும் வாழ்க. வருங்காலத்தில் சானியாவை இந்தோ‍‍பாக் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கலாம்.

பிரபலமான பெண்களெல்லாம் ஏன் இரண்டாம் தாரமாகப் போவதையே விரும்புகிறார்களென்று ரொம்ப நாள் முன்னாடி ஒரு மனநல மருத்துவர் ஆராய்ந்து எழுதியிருந்தார். ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான கட்டுரை அது. நினைவிலில்லை. இப்பொழுதெல்லாம் மனநல மருத்துவரெல்லாம் தமிழ் இணையத்தில் சாதிச் சண்டை போடுவதில் ரொம்ப பிஸியென்று ஒரு பிரபல பதிவர் அங்கலாய்த்துக் கொண்டார்.. நமக்கேன் வம்பு ?


தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Tuesday, April 06, 2010

94. உங்க கிட்டே ஒரு ரூபாய்/டாலர் இருக்குமா?


நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு வழக்கமான காலை நேரம். நானும் கூட வேலை பார்க்கும் இன்னொரு நண்பரும் காபி அருந்த கஃபேடரியா போயிருந்தோம். காபி கலந்து கையில் எடுத்து வரும் போது எதிரே இன்னொரு நண்பர் வந்தார். அலுவலக்த்தில் இன்னொரு மீட்டிங் முடித்து விட்டு அவசரமாக வரும் வழியில் கஃபேடரியா வந்து விட்டார். காபி வாங்க கையில் காசு எடுத்து வரவில்லை. அவரின் டெஸ்க் இருக்கும் அலுவலகம் போய் எடுத்து வரவும் நேரமில்லை. அப்படிப் போய் வந்தால் அடுத்த மீட்டிங்குக்கு நேரமாகிவிடும். எங்களைப் பார்த்தவுடனே என் நண்பரிடம் வந்தார்.

"கையில ஒரு டாலர் இருக்காங்க? காஃபி வாங்கணும். பர்ஸ் ஆபீஸ்ல இருக்கு" ‍ நியாயமான காரணம். எல்லாருக்கும் ஏற்படற சூழ்நிலைதான்.

என்னுடன் வந்த நபர், தன் கையில் வைத்திருந்த காபி கப்பை என்னிடம் கொடுத்து விட்டு உடனேயே பர்ஸைப் பிரித்து ஒரு 20 டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்தார். அவரும் வாங்கிக் கொண்டு அவசரமாகச் சென்றுவிட்டார். அவர் பர்ஸைத் திருப்பி வைக்கும் போது தான் கவனித்தேன் அவரிடம் சில ஒரு டாலர் நோட்டுக்களும் இருந்தன.

"என்னங்க, அதான் ஒரு டாலர் நோட்டுத்தான் உங்க கிட்டே இருக்குதே. அதைக் கொடுத்திருக்க வேண்டியது தானே.. ஏன் 20 டாலர் கொடுத்தீங்க?"


"நீங்களே யோசிச்சிச் சொல்லுங்க, பார்க்கலாம்"

"தெரியலீங்களே.. நானாயிருந்தா ஒரு டாலர் கொடுத்துவிட்டு பேசாமல் போயிருப்பேனே"

"அது தான் தப்பு. வந்தவர் ஒரு மேனேஜர். ரொம்ப பிஸி ஆன ஆளு.. நானும் ஒரு டாலர் கொடுத்திருந்தால் அவர் வாங்கிக்கிட்டு மறந்து போயிருவார். என்னாலயும் அவரை அடுத்த தடவை பார்க்கும் போது 'என் கிட்டே ஒரு டாலர் வாங்கினீங்களே.. கொடுக்கறீங்களா?' ந்னு கேட்க முடியாது. அல்பமா ஒரு பார்வை பார்த்தாலும் பார்ப்பார். இதே இருபது டாலர் கொடுத்தால், காபி வாங்கி பாக்கி அவர் பையில் இருக்கும். நாள் முழுக்க எப்போ அந்தப் பணத்தைப் பார்த்தாலும் அவருக்கு என் கிட்டே வாங்கினது நினைவுக்கு வரும். மறக்காமல் திருப்பிக் கொடுத்திடுவார். அப்படியே இல்லேன்னாலும், நான் அவர் கிட்டே கேட்டு வாங்கும் போது சில்லியாத் தோணாது. இப்பச் சொல்லுங்க, ஒரு டாலர் கொடுத்திட்டு மறந்து போறது நல்லதா, இல்லே இருபது டாலர் கொடுத்திட்டு திரும்பி வாங்கறது நல்லதா?"

"விளக்கமெல்லாம் நல்லாருந்தது.. உங்க கிட்டே ஒரு டாலர் இருக்குமா?"


இதே மாதிரி ஒரு சூழ்நிலை. மயிலாடுதுறையில் இருக்கும் போது மூர்த்தி அண்ணன் வீட்டில் அவருடன் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பேன். ஊரில் எல்லாருக்கும் உதவும் ஒரு பெரிய பரோபகாரி அவர். ஊரில் என்ன ஒரு விசேஷம் இருந்தாலும் அவரிடம் நன்கொடை கேட்டு வந்து விடுவார்கள். அவரும் சமயத்துக்குத் தகுந்தாற் போல் ஏதாவது பொறுப்பு எடுத்து உதவுவார். சில சமயம், சிலர் சொந்தக் காரணங்களுக்காக உதவி கேட்டு வருவதும் உண்டு.

ஒரு நாள் இப்படி உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கும் போது ஒருவர் வந்தார். கொஞ்சம் பழக்கப்பட்ட முகம் போல் இருந்தது. அண்ணனின் கட்டட வேலைகளில் முன்னாட்களில் வேலை செய்து வந்தவர். சமீப காலங்களில் அவரை நான் பார்த்ததில்லை. என்னைப் பார்த்தவுடன், பரிச்சயம் உணர்ந்து "என்ன தம்பீ நல்லாருக்கீங்களா" என்று விசாரித்து விட்டு அண்ணனைப் பார்த்து தலை சொறிந்தார்.

"என்ன நைனா, எப்படியிருக்கீங்க.. ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணோமே..?

"ஆமாண்ணே.. இப்பல்லாம் உடம்புக்கு முடியலை.."

"என்ன விசேஷம்.. எங்க இந்தப்பக்கம்? இப்பத்தான் உங்களுக்கு இந்த வழி தெரிஞ்சுதாக்கும்?"

"இல்லண்ணே.. அவசரமா ஒரு தேவை.. உங்க கிட்டே வந்தால் ஏதாவது செய்வீங்க‍ன்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்" ‍ சொல்லிவிட்டு என்னைப் பார்த்து தலை சொறிந்தார்..

"சொல்லுங்க .. பார்ப்போம். ஒண்ணும் ப்ரச்சினையில்லை. தம்பி நம்ம தம்பிதான்.. பரவாயில்லை.. கூச்சப்படாமல் சொல்லுங்க"

"என் பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன். ஒரு லட்ச ரூபாய் போலக் குறையுது.. நீங்க கடன் கொடுத்தால் 2 மாசத்துல திருப்பிக் கொடுத்துடறேன். பணம் வெளியிலேருந்து வரவேண்டியிருக்குங்க.. வந்த உடனே கொடுத்திடறண்ணே"

"என்ன நைனா, இப்ப சொல்றீங்க. இப்பத்தான் போக்கு வரத்து சிலது முடிச்சேன். இப்ப வந்து சொல்றீங்களே.. உங்களுக்குத் தராம இருக்க முடியுமா?"

"உங்களுக்கு குறைச்சலா அண்ணே.. பணம் எப்படியும் எனக்கு 2 மாசத்துலே வந்திரும். கொடுத்திடறேண்ணே.. ஒரு ரூவா முடியாட்டாலும் பாதியாவது கொடுத்து உதவுங்கண்ணே.. வர வேண்டிய இடத்துலேருந்து பணம் வந்த உடனே உங்களுக்கு முதல்ல திருப்பிடறேண்ணே.. பொண்ணு கல்யாணம் வெச்சாச்சு.." ‍ திருப்பித் திருப்பி அதையே சொல்லிக்கொண்டிருந்தார்..


கடைசியாக அண்ணன்,
"பொண்ணு கல்யாணம்னு சொல்றீங்க.. நானும் கொடுக்கணும் ஆசைதான்.. இப்ப நேரம் சரியில்ல.. என்னால முடிஞ்சது, கல்யாணத்துக்கு ஒரு மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்துடறேன்.. சந்தோஷமா கல்யாணத்தை நடத்துங்க"

வந்தவரும் வேறு வழில்லாமல், ஒரு மூட்டை இலவச அரிசிக்கு உத்திரவாதம் (இதெல்லாம் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசி காலத்துக்கு முன்னால்) வாங்கி சந்தோஷமாகச் சென்றுவிட்டார்.

அப்புறம் அவர் போனப்புறம், அண்ணன் அவர் லாஜிக்கை சொன்னார்.

"சீனா, இவரு நல்லவருதான். நம்ம கட்டடத்துலயெல்லாம் வேல பார்த்திருக்காரு. ஒரு வகையில நாணயஸ்தரும் கூட. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அவருக்கு இருக்குற சூழ்நிலையிலே திருப்பிக் கொடுக்க முடியாது. அப்புறம் நம்மளைப் பார்க்க கூச்சப்பட்டுக்கிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போவாரு. கட்டடத்துக்கு வேலைக்கும் வரமாட்டாரு. எங்க நாம அவர் கூலியை கடனிலே கழிச்சிருவோமோன்னு வேலைக்கும் வரமாட்டாரு.. ஒரு லட்ச ரூபா கடனாக் கொடுத்தா நம்க்கு பணமும் வராது. ஒரு நல்ல தொழிலாளியும் கிடைக்க மாட்டாரு. இதே ஒரு மூட்டை அரிசி கொடுத்தா, நமக்கு கல்யாணத்துக்கு உதவி செஞ்ச புண்ணியமாவும் போகும். அவரும் அடுத்தாப்பல நம்மகிட்டே வேலைக்கும் வருவாரு"

நல்ல லாஜிக். நிறைய பேர்கிட்டே இந்த மாதிரி பணம் கொடுத்து அனுபவப்பட்டிருக்காரு. அனுபவத்தைப் போல சிறந்த ஆசான் எதுவும் இல்லை..சில சமயங்கள்ல மக்கள் விதவிதமா யோசிக்கிற விஷயம் வியப்பா இருக்கு. ஒரே சிச்சுவேஷன், இரண்டு பேரு இரண்டு விதமாச் செஞ்சது நியாயமாவேப் பட்டது. உங்களுக்கும் இந்த விதமான சூழ்நிலை (கடன் கேட்ட போதோ, அல்லது கொடுக்கும் போதோ அல்லது மறுக்க முடியாம மாட்டிக்கிட்ட போதோ) இருந்திருந்தால் சொல்லுங்க..


பி.கு: சினேகா விடுப்பில் இருப்பதால்.. இப்போதைக்கு மீரா ஜாஸ்மின்..