Tuesday, May 11, 2010

98. மாநகர மேயருடன் சீமாச்சு...

"திங்கள்கிழமை, சார்லெட் நகர மேயருடன் மதிய உணவருந்த நம் கம்பெனியிலிருந்து 8 பேர் போக வேண்டும். நீங்களும் வருகிறீர்களா?” - என்று ஒரு அதிகாரி சொன்னவுடனேயே, பறக்காவட்டித் தனமாக “இதோ வந்தூட்டேன்” அப்படீன்னு சொல்லாமல் ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் சொல்கிறேன்” என்று வாய்தா வாங்கிவிட்டேன்..முடிவு சொல்வதற்கு முன்னர் வடக்கு கேரலைனா மாநில சார்லெட் மாநகர மேயர் Anthony Foxx பற்றி கொஞ்சம் கூகுளிட்டுத் தெரிந்து கொண்டேன். மேயர்னா இங்கெல்லாம் ”மாநகரத் தந்தை “ என்றெல்லாம் பந்தா பண்ணுவதில்லை போல. 154 பவுன் தங்க மாலை போட்டுக்குவாரா? ஒரு சன் டீவீ , மூன் டீவீ கவரேஜ் உண்டா? அட்லீஸ்ட் இன்னும் 5 வருஷத்துக்குள்ள ஒரு துணைமுதல்வர் ஆவதற்கு சான்ஸ் உண்டா? ‘அஞ்சா நெஞ்சன்” மாதிரி அண்ணன்மார்கள் யாராவது உண்டா என்றெல்லாம் ஆராய்ச்சி செஞ்சுத்தான் பார்த்தேன்.. ஹூஹூம் .. ரொம்ப எளிமையான + இனிமையான + இளமையான மேயர் சார்லெட்டுக்கு வாய்த்தது ஒரு அதிர்ஷ்டம்தான்.

சார்லெட் மாநகரத்தை ஒரு “உலகத்தரம்” வாயந்த நகரமாக்குவதற்கும், இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், நகரத்தில் பன்னாட்டுக் கலாச்சாரத்தைப் போற்றுவதற்கும், வெளிநாட்டு மக்கள் இந்த நகரத்தின் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தை பேணிக்காக்க உதவியதற்கு நன்றி நவிலவும் இந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. என் கம்பெனி சார்பில் ஆசிய அமெரிக்கர் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டிருந்தேன்.

மேயரின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ள சார்லெட் பன்னாட்டு அமைப்பின் (Charlotte International Cabinet) தலைவராக இருக்கும் திருமதி டாக்ட்ர் மஹா கிங்க்ரிச் (அமெரிக்கரை மணந்து இங்கு பலவருடங்களாக இருக்கும் ஒருஇந்தியப் பேராசிரியை. பரதநாட்டியத்தில ப்ண்டிதையும் கூட..) தலைமை தாங்க, இந்திய இந்து கோவிலின் பிரதிநிதி விஷ்ணு சஹஸ்ரநாமத்திலிருந்து சில ஸ்லோகங்கள் சொல்லி தொடங்கி வைக்க, விழாவும், மதிய உணவும் மிக நன்றாக நடந்தது.

இந்த ஊரு அரசியல்வாதிகளெல்லாம் அவங்க அவங்க ஊரை முன்னேற்றுவதற்கு எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று நினைத்த போது ரொம்ப பெருமூச்சு தான் வந்தது. மாநகர வளர்ச்சி குறித்தான் மேயரின் சிந்தனைகள் பாராட்டத்தக்கதாக இருந்தன. இனிமேல் இவர் செய்வதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அமெரிக்காவில் இவ்வளவு வருஷமிருந்திருந்தாலும், “ஊருக்கு யார் மேயர்” என்றெல்லாம் தெரிந்து கொண்டதில்லை. ( நாங்களெல்லாம் , மாநில கவர்னர், நாட்டுத் தலைவர் லெவல் மட்டும் தான் கேட்டுக்கிறதாக்கும் !!). இனிமேல் உள்ளூர் விஷயங்களிலும் ஏதோ ஒரு விஷயத்தில் பங்கெடுத்துக்கிறதென்று முடிவு பண்ணியாச்சு..

“மேயருடன் லஞ்ச்” என்று முதல்நாள் வீட்டில் பந்தா விட்டதில், 7 வயசு சூர்யாவுக்கு இருப்பு கொள்ளவில்லை.. “Daddy, when you meet the Mayor, can you get his autograph for me? " என்று கேட்டு அவளின் நோட்டையும், பேனாவையும் உடனேயே என் ஆபீஸ் பையில் வைத்து விட்டாள். திங்கள் கிழமை ஸ்கூலுக்குக் கிளம்பும் போது “மேயர்கிட்டே ஆட்டோகிராப் வாங்கிட்டு வரட்டுமாடா” என்று கேட்டதற்கு, ’நம்ம அப்பாவாவது மேயர்கிட்டே பேசறதாவது’ என்று எண்ணம் வந்திருக்கும் போல, “Try Daddy, But you dont need to.." என்று ராகமாக சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்..

மறக்காமல் சூர்யா நோட்டை மேயரிடம் எடுத்துச் சென்று, அவளை (இரண்டாங் கிளாஸ்)ப் பற்றி பெருமையாக சொல்லிவிட்டு அவளுக்கு அவள் நோட்டில் அதில் அவர் ஆட்டோகிராப்பும் வாங்கிவிட்டேனாக்கும்.

திங்கள் மாலை அவளிடம் ஆட்டோகிராப் நோட்டையும் கொடுத்து, நான் எடுத்துக் கொண்ட போட்டோவையும் காட்டிய பிறகு அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. மறுநாள் (இன்று) அந்த நோட்டை எடுத்துப் போய் அவள் வகுப்பில் ஆசிரியையிடமும், மற்ற நண்பர்களிடமும் காட்டிப் பெருமைப் பட்டாயிற்று.. “Soorya, you are so lucky to have our Mayor's autograph" என்று அவள் வகுப்புத் தோழிகள் சொன்னார்களாம்..

oOo oOo

மயிலாடுதுறை செல்லும் போது எங்க ஊரு MLA, MP, Chairman, பல கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வழக்கமுண்டு. பல மக்கள் பிரதிநிதிகள் எங்கள் வீட்டுக்கும் வருவார்கள்.. போவார்கள்.. அப்படிப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியுடன் “உற்சாக பான விருந்து” சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இனிய மாலைப் பொழுதில், அவர் மூன்றாவது ரவுண்டு தாண்டியபோது கேட்டது “சீனு... நீங்க தான் அமெரிக்காவுல பெரிய்ய பேங்குல வேலைப் பாக்கறீங்களே.. கொஞ்சம் பணம் தர்றேன் .. உங்க பேங்க்குல அக்கவுண்ட் ஆரம்பிச்சிப் போட்டுத் தர்றீங்களா?”

அவர் “கொஞ்சம்” என்று சொன்ன அமவுண்டில் எங்க ஊரு DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாக இடித்து 100 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் வசதியாகப் படிக்கலாம். நம்நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !!