Wednesday, July 29, 2009

85. நாம இந்த யோசனை சொன்னா விகடன் கேக்குமா?

இந்த மினிஸ்டர் ராஜா கூட பெரிய்ய ரோதனையாப் போச்சி.. அந்த ஆளூ எல்லா ஊழலும பண்ணுவாராம் ஆனால் அதை விகடன் மாதிரி பத்திரிக்கைகள் பிரசுரிக்கக் கூடாதாம்.

நியாயமான ஆளா இருந்தால் ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டையும் நியாயமான முறையில் எதிர்த்து வெளியில வரணும். அப்படியில்லியா, பொது எம்.பி பதவியையே ராஜினாமா பண்ணிட்டு குடும்பத்தோட எங்கியாவது போய் செட்டிலாயிடணும். ரெண்டும் இல்லாமல் கோர்ட்டுக்குப் போயி “என்னக் கிள்ளீட்டான் சார்...” ரேஞ்சுக்குப் போயி தடை வாங்கறது அழுகுணி ஆட்டம். இதெல்லாம் ஒரு delay tactics தான். எப்படியும் தீர்ப்பு வர ஒரு ஆறு மாசமாச்சும் நிச்சயமா ஆகும். அது வரைக்கும் விகடன் வாயைக் கட்டி வெச்ச மாதிரி ஆச்சி. அப்படியே தீர்ப்பு பாதகமா வந்தால் மேல் முறையீடு இருக்கவே இருக்கு... ஒரு 5 வருஷம் இப்படி ஓட்ட முடியாதா என்ன?

இந்த மாதிரி ஊழல் பெருச்சாளிகளை விகடன் தோலுரிப்பதை ஒரு சராசரி பொதுஜனமாக நான் வரவேற்கிறேன்..

இராஜா இப்படி அழுகுணி ஆட்டம் ஆடினால், சட்டத்துக்கும் நீதிக்கும் பங்கம் வராமல் விகடன் அதை எப்ப்டி எதிர் கொண்டு ராஜா பற்றிய ஊழல்களைப் தொடர்ந்து மக்களுக்குத் தருவது? அதுக்குத் தான் இந்த ஐடியா !!

இப்போ குங்குமம் பத்திரிக்கையின் விற்பனையை அதிகரிக்க அதனுடன் இலவச இணைப்பாக மஞ்சள் பொடி, மசாலாத் தூள், சிந்தால் சோப்பு, நகப் பாலீஷ் போன்ற பொருட்கள் தரவில்லையா? இது போன்று மற்றொரு தயாரிப்பாளர் தயாரிக்கும் பொருட்களை ஒரு பத்திரிக்கை இலவசமாகக் கொடுக்கும் போது அதனால் ஏற்படும் பாதகங்களுக்கு பத்திரிக்கை பொறுப்பேற்காது. ஏனென்றால் அது அவர்கள் தயாரிப்பே இல்லை. மற்றபடி அது இலவசமாகவே கொடுக்கப் பட்டது. அதனால் no liability.

அது போல வேறொரு பதிப்பகம் (இந்தப் பதிப்பகம் தமிழ்நாட்டிலென்ன.. இந்தியாவிலேயே கூட இருக்க வேண்டாம்.. ஏதாவது வெளிநாட்டில் இருக்கலாம். அதனால் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்படாது )தொடங்கி ராஜாவின் ஊழல்களை அந்த புத்தகத்திலே (ரொம்ப பெரிசு வேண்டாம்.. ஜூவியிலே ஒரு 4 பக்கம் வர்ற மாதிரி ஒரு மினி புத்தகமாகக் கூடப் போடலாம்.. நம்ம கிழக்குப் பதிப்பகம் பத்ரியைக் கேட்டால் நிறைய ஐடியா தருவாரு!!) பிரசுரிச்சி அதை நம்ம ஜூனியர் விகடனுடன் இலவசமாகவே தரலாம்.


அது நம்ம ராஜா வாங்கியிருக்கிற தடைக்கு எதிராக வராது. ஏனென்றால் அந்தப் இலவச இணைப்பு விகடன் பிரசுரமே இல்லை... அது இலவச மசாலாப் பொடி மாதிரிதான்.. அதனுள் இருக்கும் செய்திகளுக்கு விகடன் பொறுப்பாகாது.. சட்டத்தை மதித்த் மாதிரியும் இருக்கும் .. சமுதாயக் கடமை ஆற்றிய மாதிரியும் இருக்கும்...

அதிக பட்சம் அந்த பதிப்பகம் அல்லது புத்தகத்தைத் தடை செய்வாங்க. அதுக்கு ஒரு ஆறு மாசம் ஆகும். நாமளும் சட்டத்தை மதிச்சி வேறு பதிப்பகம் வேறு நாட்டில் தொடங்கி வேற புத்தகம் போட்டு இலவச இணைப்பாத் தந்தாப் போச்சி.. எல்லாம் இராஜா கத்துக் கொடுத்த வழிதான்.. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும் !!


எப்பூடி???

திட்டாதீங்கப்பா !! இந்த திராவிட கட்சிகளோட சேர்ந்து சேர்ந்து நமக்கும் பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி...பின் குறிப்பு: நம்ம கிட்டே இனிமேல சினேகா போட்டோ தீர்ந்து போச்சி. நம்ம அச்சமுண்டு அச்சமுண்டு டைரக்டர் அருண் வைத்தியநாதன் கிட்டே தான் கேக்கணும் போல இருக்கு.. நாகை சிவா, கோச்சிக்காதீங்க.. இந்தப் பொண்ணும் அசப்புல சினேகா மாதிரி தான் இருக்கு !! அடுத்த பதிவு வர்ற வரையில பொறுத்துக்கோங்க !!!!!

Sunday, July 26, 2009

84. அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்

அண்ணலும் நோக்கினார்..அவளும் நோக்கினாள்” என்ற கம்பரின் வரிக்கு, புலவர் கீரன் (இவர் மயிலாடுதுறைக்காரர் தெரியுமோ?) அவர்கள் தந்த ஒர் அருமையான விளக்கத்தை “இதயம் பேத்துகிறது” வலைப்பதிவில், ஜவஹர் இட்டிருந்தார்.

“அண்ணல் நோக்கினான்;அவளும் நோக்கினாள்” என்று அவளுக்கு மட்டும்தானே உம் போட வேண்டும்? என்ற ஒரு அருமையான கேள்வியை முன் வைக்கிறார். பின்னர் அதற்கு ஒரு விபத்துக் காட்சியை விளக்கிவிட்டு இரண்டும் ஒரே நேரத்தில் நடந்ததால் இரண்டு உம்மைகள் என்ற சொல்கிறார்.

இரண்டு உம் வருகிற இடங்கள் எல்லாமே-தற்செயலாக நிகழ்பவை. அதாவது ஆக்சிடேண்டலாக நிகழ்பவை. ராமனும் சீதையும் திட்டமிட்டு சைட் அடிக்கவில்லை என்பதைக் காட்டவே கம்பர் இரண்டு உம் போட்டார்.

நியாயமான வாதம். கொஞ்சம் சிந்திக்க வேறு செய்தது.

கம்பராமாயணத்தில் நான் ஒன்றும் பெரிய மேதையில்லை. ஆனால் என் தமிழாசிரியர் முனைவர் இராமபத்ராச்சாரியார் அவர்கள் “கம்பன் கவி இசைச்செல்வர்” என்ற விருது வாங்கியவர். கம்பராமாயணத்தைத் தேனொழுகக் கவிபாடிப் பாடம் நடத்துவார். கம்பனின் “இந்த இப்பிறவிக்கு இரு மாதரை என் சிந்தையாலும் தொடேன்” என்ற வரிக்கு இரண்டு மணி நேரம் கூட வியாக்கியானம் சொல்வதில் வல்லவர். அவரிடம் படித்த எனக்கு, புலவர் கீரனின் விளக்கம் யோசிக்க வைத்ததில் வியப்பேதுமில்லை.

சொல்லப்போனால், மயிலாடுதுறையில் புலவர் கீரன் இல்லமும் என் தமிழாசிரியர் இல்லமும் அடுத்தடுத்த தெருக்கள் தான். கீரன் இருந்தது திருஇந்தளூர் வடக்கு வீதி, என் தமிழாசிரியர் இருப்பது திருஇந்தளூர் சன்னதித் தெரு.

சரி “அண்ணலும் நோக்கினார்; அவளும் நோக்கினாள்” என்ற வரிக்கு வருவோம்.

சாதாரணமாக பெண்கள் ஆண்களை நோக்கிவதில் ஒரு டெக்னிக் இருக்கும். டிஜிட்டல் காமிரா மாதிரி இமைக்கும் நேரத்தில் பார்த்து விடுவார்கள். அந்த ஒரு கணத்திலேயே தான் பார்த்த ஆடவனைப் பற்றிய (தனக்குத் தேவையான) விவரங்களைக் கண்டுவிடுவார்கள். முன்பின் அறியாத ஆடவனிடம் எப்பொழுதும் நேருக்கு நேர் பார்வையைத் தவிர்த்து விடுவார்கள். தான் பார்ப்பதை அந்த ஆடவன் பார்த்துவிட்டால் அடுத்த split second லேயே பார்வையை வேறெங்காவது திருப்பிவிடுவார்கள்.. (எத்தனை தமிழ் சினிமா பார்த்திருப்போம் !!)


அதுவும் சீதை அரசனின் மகள்; சுயம்வரத்துக்குத் தயாராயிருப்பவர். தனியாக மாடத்தில் நின்று கொண்டிருந்திருக்க மாட்டார். அப்பவும் தோழிகள் அருகில் இருந்திருப்பார்கள்.

இராமனும் தனியாக வரவில்லை. முனிவர் விஸ்வாமித்திரருடனும் இளவல் இலக்குவனுடனும் வந்திருக்கிறார். அப்படியிருக்கும் போது இருவரும் மெய்மறந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருக்க
முடியாது. அது எப்படியும் இருவரின் தகுதிகளுக்கும் உகந்ததல்ல. விஸ்வாமித்திரர் போன்ற ஒரு கோபக்கார முனிவருடன் வரும் போது இராமரும் அப்படிச் செய்யத் துணிந்திருக்க மாட்டார்.

அப்புறம் என்னதான் நடந்திருக்கும்?

oOo


இந்த உரையாடல் சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்று..


“அந்தாளை நீ பாத்தியா?”
“பார்த்தேன் டா”
“இது அந்தாளுக்குத் தெரியுமா?”
“அவரும் பார்த்தாருடா”

இதில் வந்த ”அவரும்” என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? “அவர் என்னைப் பார்த்தார்” என்ற பொருள் மட்டுமா? “நான் அவரைப் பார்த்ததை அவர் பார்த்தார்” என்ற பொருள் வருகிறதில்லையா? இந்த இடத்தில் ”அவர் இவரைப் பார்த்தார் ” என்ற நேர் பொருளை விட “அவர் என்னைப் பார்த்துவிட்டார்” என்று உணர்வு பூர்வமான ஒரு மறைபொருள் தான் மிக முக்கியமானது.


அது போலத்தான் இராமரும் சீதையும் பார்த்துக் கொள்கிறார்கள்.. சீதை தன்னைப் பார்த்ததை அண்ணலும் நோக்கினார்; அது போல் அண்ணல் பார்த்ததை சீதையும் நோக்கினாள்; என்ற பொருள் வருகிறதல்லவா?
இதில் பார்வைகள் சந்தித்துக் கொள்வது split of a second தான். ஆனால் அந்தப்
பார்வைகளின் பொருள் “நீ என்னை பார்த்ததை நான் பார்த்துவிட்டேன்” என்று இருவர் மனதிலும் தோன்றிய எண்ணங்கள் பரிமாறப்பட்டன என்பது தான் இங்கு சிறப்புச் செய்தி.

oOo
ஒன்பதாவது படிக்கும் போது தமிழ் இலக்கணத்துல தற்குறிப்பேற்றணி என்ற ஒரு அணி பாடமாக வரும். அதாவது “இயற்கையாக நடக்கும் ஒரு காட்சியின் மேல் கவிஞன் தன் சொந்தக் குறிப்பை ஏற்றிக் கூறும் அழகு”. இதற்கு பாடப்புத்தகத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்துக்காட்டு கூறப்பட்டிருக்கும். தமிழ்த் தேர்வுகளில் நான் இதற்கு கம்பராமாயணச் செய்யுள் தான் எப்பொழுதுமே எடுத்துக்காட்டாக எழுதுவேன்.

தேர்வு நேரத்தில் எல்லா விடைத்தாள்களையும் திருத்தும் தமிழாசிரியர் வழக்கமான சிலப்பதிகார எடுத்துக்காட்டே படிச்சுப் படிச்சு போரடிச்சிப் போயிருக்கும் போது நான் வித்தியாசமாக கம்பராமாயணம் எழுதியதைப் படிக்கும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு முழு மதிப்பெண்கள் போட்டு விடுவார்.


முனிவருடனும், இலக்குவனுடனும் ராமபிரான் மிதிலை நகரத்துக்கள் நுழைகிறாராம். அப்பொழுது மிதிலா நகரத்துக் கொடிகள் காற்றில் மிக வேகமாக அசைகின்றன. அதற்குப் பொருளாக கம்பர் இப்படிக் கூறுகிறார். “இந்த மிதிலா நகரம் செய்த தவத்தின் விளைவாக இலக்குமி (செய்யவள்) தேவியே இங்கு வந்துப் பிறந்து உனக்காகக் காத்திருக்கிறார். அவளை மிகவும் காக்க வைத்துவிடாதே.. தயவு செய்து விரைந்து வா (ஒல்லை வா !!) என்று அழைப்பது போல மிதிலா நகரத்துக் கொடிகள் அசைகின்றன” என்று தனது குறிப்பைக் கம்பர் கொடியசைவின் மேல் ஏற்றிக் கூறுகிறார்


மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக்கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்த கடிநகர், கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வாவென்று அழைப்பது போன்றதம்மா !!

சீமாச்சுவின் மனசாட்சி: கம்பராமாயணத்துக்கெல்லாம் வியாக்கியானம் பேசி மாட்டிக்காதே.. அதுக்கெல்லாம் தான் மாதவிப்பந்தல் கேயாரெஸ் இருக்காரே.. அவர் எழுதறதைவிடவா சுவாரசியமா எழுதப்போறே.. இதுல சினேகா மட்டுமில்லாம மீனா படம் வேற !! அவர்கிட்ட மாட்டத்தான் போறே.. இருக்குடீ உனக்கு !!

Wednesday, July 22, 2009

83. தொண்ணூத்தியொண்ணு + ஒண்ணு


Monday, July 13, 2009

82. விஞ்ஞானமும் தேரோட்டமும்

மயிலாடன் என்பவர் விடுதலை இதழில் எழுதிய “விஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர, கடவுள் சக்தியால் அல்ல என்பதையாவது ஒப்புக்கொண்டால் சரி!” என்ற வரி ரொம்ப யோசிக்க வைத்தது. மயிலாடன் எவ்வளவு பெரிய்ய விஞ்ஞானி என்பது தெரியாது. எல்லாவற்றையும் (அவர் பகுத்தறிவு கொண்டு பார்க்க விரும்பாததைத் தவிர்த்து) அவர் கொள்கையில் பார்ப்பவர் என்பது மட்டும் புரிகிறது.

oOo

எதையுமே ஆழ்ந்து கற்றவர்க்குத்தான் தெரியும் அவர் இன்னும் கற்க வேண்டியது உலகளவு என்பது. படிக்கப் படிக்கத் தான் வரும் நமக்குத் தெரியாதது நிறைய என்ற பயம். அந்த பயம் வரவில்லையென்றால் போதுமான அளவு கற்கவிலை என்று பொருள்.


இரண்டாம் வகுப்பு படிக்கும் பையனிடம் கேளுங்கள் “6 ல் 4 போனால் எவ்வளவு?” என்று? உடனேயே சொல்லிவிடுவான் “2” என்று. அவனிடமே “4ல் 6 போனால் எவ்வளவு?” என்று கேட்டுப்பாருங்கள். “போகவே போகாது .. உனக்கு கணக்கே தெரியவில்லை” என்று சொல்லிவிடுவான். அவனளவுக்கு அது தான் சரி

அது போல எல்லாவற்றுக்குமே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களைப் பார்த்து உலகம் நகைக்கும். நீங்கள் படித்தது வெறும் இரண்டாம் வகுப்பு தான் என்றால் உங்களுக்குப் பாராட்டு நிச்சயம். அந்தப் பாராட்டு மட்டுமே உங்களை அறிவாளி ஆக்கிவிடாது. அதிக பட்சம் 3ம் வகுப்புக்கு பாஸ் செய்யப் படுவீர்கள். அது தான் தகுதி “உலகை வென்றுவிட்டோம்” என்று நினைத்தால் ஆபத்துதான்..


விஞ்ஞானம் என்பது இன்றும் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் துறை மட்டுமே. அதனால் தான் இன்னும் ஆராய்ச்சிக்கென்று பல பில்லியன் டாலர்கள் செலவழிக்கப் படுகிறது. இன்னும் கண்டுபிடிக்கப் படவேண்டியது எவ்வளவோ. இன்னும் நம்மால் செயற்கை இரத்தம் கண்டுபிடிக்கப் படவில்லை. மரணம் என்பதை என்னவென்று சொல்லத் தெரியவில்லை. இது தான் மரணம் என்று சொல்லிவிட்டால்.. மரணம் வராமலிருக்க வழி கண்டுபிடித்து விடலாம். இன்னும் சொல்லத் தெரியவில்லை. மரணத்தின் விளைவுகள் மட்டுமே விவரிக்க முடிகிறது. எவ்வளவோ சொல்லலாம்.

கடலுக்கடியில் நாற்பதாயிரம் அடியில் தொலைந்துவிட்ட விமானத்தின் கையகல கருப்புப் பெட்டியை கண்டிபிடிக்க முடியும் என்று 10 நீர்மூழ்கிக் கப்பல்களையும் துடைப்பைக்கட்டை அளவு மானியையும் வைத்துக்கொண்டு கடலையே அளந்து தேடியவர்களைக் கேளுங்கள்..” இந்தப் பெட்டி கிடைக்க வேண்டுமென்று ஆண்டவனை எப்படியெல்லாம் பிரார்த்தித்தார்களென்று”.. அவர்களுக்குத் தெரியும் ஆண்டவன் அருளில்லாமல் அது கிடைக்காதென்று. முடிந்த அளவு முயற்சி செய்யவும், முயற்சி திருவினையாக்கும் என்று நம்பவும் மட்டுமே முடியும். ஆழ்கடலில் தேடிய அனுபவம் மட்டுமே கிடைக்கும். நம் எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புக்களையும் விட ஆண்டவன் படைத்த இயற்கை எவ்வளவு பெரியதென்ற ஞானம் மட்டுமே மிச்சம்.


விஞ்ஞானம் இன்னும் யுகங்களுக்கு முழு வளர்ச்சி அடையாது. அதுவரை காத்திருக்கவும் நம்க்கு வாழ்க்கை இருக்காது. அதுவரை ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்து.. ஆக்க பூர்வமான சமுதாயப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. ”மக்கள் சேர்ந்து தேர் ஓட்டுகிறார்களா” அவர்கள் உணர்வுகளை மதித்து அவர்களுடன் சேர்ந்து தேர் இழுங்கள். இல்லையேல், ஒதுங்கியிருந்து உங்கள் வேலையைப் பாருங்கள். இது தவிர்த்து விஞ்ஞானத்தில் ஆர்வம் இருந்தால் விஞ்ஞானியாகத் தேர்ந்து ஏதாவது முயற்சி செய்யுங்கள். அரைகுறையாகப் பேசுவது நம் அறியாமையையே வெளிச்சம் போட்டுக்காட்டும்.


திருவிழாக்கள் எல்லாமே ஒரு team development activity தான். ஒரு குழு மனப்பான்மையை வளர்க்கும் ஒரு விஷயம்தான். அதை எல்லாரும் சேர்ந்து செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானதே. அதனால் தான் “ஊர் கூடித் தேரிழுக்க வேண்டும்” என்றார்கள். எந்தப் பணக்காரனும் என்னிடம் பணம் இருக்கிறது நான் தேரிழுக்கப் போகிறேன் என்று சொன்னதில்லை. அவன் ஒருவனால் மட்டுமே இழுக்கப் பட முடியக்கூடாதென்பதால்தான் தேர் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது.
“கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னது கூட... அந்த ஊரில் உள்ளவர்களிடம் ஒற்றுமையிருக்காதென்று சொல்லத்தான். ஊர் ஒற்றுமையாக இருந்தால் கோவில், தேரோட்டம், சமூகப் பணிகளில் நாட்டம் இவற்றைக் குறிப்பதாகவே நினைத்தார்கள் அந்தக் காலத்தில். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற எண்ணங்களை வளர்ப்பதற்காகவே இவையெல்லாம் வந்திருக்க வேண்டும்.
இறைபக்தி என்பது ஒரு moral driving force. அது இல்லாவிட்டால் உலகம் சுடுகாடாகிவிடும்.


கட்டுடைப்பதென்பது வெகு எளிது.. கோணல் மாணலான சிந்தனைகளே போதும். மனநோயாளிகளெல்லாமே தீவிரமான கட்டுடைப்பாளர்கள் தான். உண்மையான சோதனையென்பதே கட்டமைப்பதில் தான் இருக்கிறது.கலைஞரைக் கேளுங்கள், திமுக என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் உள்ள சிரமங்களை. முடிந்தால் அது போன்று ஒரு கட்சியைத் தொடங்கி நாட்டுக்கு நல்ல ஆட்சியைத் தர முயற்சி செய்யுங்கள். அதற்கு ஒருவரின் வாழ்நாள் போதும் என்று தோன்றவில்லை. முடியலாம்..எல்லா சக்திகளும் உங்கள் அருகில் இருந்தால்..


கோவம் கொண்ட ச்சின்னக் குழந்தையைப் போல எல்லாவற்றையும் கட்டுடைக்கப் போகிறேன் என்று சமுதாய சீர்குலைவுக்கு வழி பார்க்காதீர்கள்..


விஞ்ஞானம் ஒரு மிகப் பயனுள்ள துறை, அது வளரவேண்டியது அவசியம். அது வளர்ந்தால் உலகத்தில் வறுமையை ஒழிக்க முடியும். எல்லோரும் நலமாக வாழ முடியும். அந்த அளவு முழு வளர்ச்சி பெற வேண்டுமென்பது தான் எல்லா விஞ்ஞானிகளும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றார்கள். அப்துல் கலாமைக் கேளுங்கள். இதையேதான் சொல்வார். ஆண்டவன் சக்தியை விஞ்ஞானம் வென்றுவிட்டதென்ற வெற்றுவாதங்கள் விஞ்ஞானத்தை வளர்க்காது..