Wednesday, November 23, 2011

131. பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா !!


காலைப் பொழுது வழக்கம்போல் தான் விடிந்தது.. வழக்கமான அதிக மாற்றங்களில்லாத காலைதான்..

குளித்து முடித்து வேலைக்குக் கிளம்பும் போதுதான் இந்த இரண்டு வரிகளை வாய் முணுமுணுத்தது..

“பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீ...யா....
பூவுக்கொரு பூஜை செய்யப் பிறந்தவன் நானில்லை....யா...”

ராகமும் சரியாகத்தான் இருந்தது... ஆனால் முதல் வரியோ அதற்கடுத்த வரிகளோ நினைவுக்கு வரவில்லை..

திரும்பத் திரும்பப் பாடிப் பார்த்தும அடுத்த வரி வரவில்லை..

அலுவலகத்துக்கு 40 நிமிட ட்ரைவ் காரில்.. காரில் போகும் போதும் இதே சிந்தனைதான்.. இதுதான் பிரச்சினை..

இருபது நிமிட வேதனையில் இன்னும் இரண்டு வரிகள் ...

“ஓடோடி வந்ததால் உள் மூச்சு வாங்குது...
உன் மூச்சில் அல்லவா... என் மூச்சும் உள்ளது...”

ஆரம்பம் தெரியவில்லை இன்னும்...

காரிலிருந்தே வீட்டுக்குப் ஃபோன் செய்து தங்கமணியிடம் கேட்டாகிவிட்டது.. “நீங்க காலையில பாடும் போதிலிருந்தே நானும் தான் யோசிக்கிறேன்.. எனக்கும் நினைவில்லை.... இது இதயத்தாமரை படம்னு நினைக்கிறேன்.. கார்த்திக் பாட்டு..”

கார்த்திக் பாட்டுன்னு எப்படி இவங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருது... வழக்கமா.. ராதா பாட்டு... அம்பிகா பாட்டு.. ரேவதி பாட்டுன்னு.. தானே நாம நினைவு வெச்சிக்குவோம்.. இவங்க மட்டும் என்ன ‘கார்த்திக்’ பாட்டுன்னு சொல்றாங்க...” அப்படீன்னு ஒரு கோவம் வந்திச்சி.. இருந்தாலும் நமக்கு இப்போ தேவை “மன்னரின் குழப்பத்துக்கு விடை..” அதுவரை பொறுமை காப்போம்.. மற்றவை மாலையில்...



அலுவலகத்துக்குப் போயும் இதுதான் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது..

என் சகலை விஸ்வநாதன் தமிழ்ப் பாட்டுக்களில் பெரிய்ய பிஸ்தா.. கோவையில் இருக்கிறார்..

மணி இப்போ இந்தியாவில் இரவு 9:30 இருக்கும்.. இருந்தால் என்ன? ராத்திரி 9:30 மணிக்கெல்லாம் தூங்குறவனெல்லாம் ஒரு மனுஷனா?

அப்படியும் நமக்கு எவ்வளவு பெரீய்ய்ய சந்தேகம்.. இதுக்கு பதில் தெரிய தூங்குறவனை எழுப்பினாலும் பரவாயில்லை...

வானேஜ் புண்ணியத்தில்.. அவருக்கும் ஃபோன் பேசி கேட்டாகிவிட்டது....

“இது ரேவதி பாட்டு தலை... ஆனால் நினைவுக்கு சட்டுனு வரமாட்டேங்குது...”

அவர் சொன்ன “ரேவதி.. பாட்டு..” மனசுக்கு ஆறுதல்..

இவர் மனுஷன்.. பாட்டை எப்படி நினைவுக்கு வெச்சிக்கணுமோ அப்படி நினைவு வெச்சிக்கிறார்...

இத விட்டுட்டு..”கார்த்திக் பாட்டாமே.... கார்த்திக் பாட்டு....”


அலுவலகத்தில் இண்டர் நெட்டுல தேடலாம்தான்.. என் கொள்கை தடுத்தது.. அலுவலகக் கணிணியில் தமிழ் படிப்பதில்லை என்பது என் கொள்கை... தலை போய்விடாதுதான்...ஆனால் ஆரம்பித்துவிட்டால்..அனாவசியத் தொல்லை.. கட்டுப்படுத்துவது கடினம்..

மதியத்தில் அலுவலகவேலைகளில் மூழ்கிவிட்டதால் மறந்தேவிட்டது. மாலை வீட்டுக்கு வரும் போது மறுபடியும் ஆயிரம் எறும்புகள் தலைக்குள்...

அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தவேகத்தில் கணிணியில் தேடிக் கண்டேடேடே.. பிடித்துவிட்டேன்..



ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.....

எவ்வளவு அருமையான இசை... தமிழ் சொட்டும் வரிகள்...!!!


பெண் : யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ

ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

பெண் : கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது

ஆண் : ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது


பாட்டுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் தங்கமணியுடன் சண்டைக்கு இப்பொழுது தடை.. விரைவில் தொடரும்....

அதுவரை பாட்டை நீங்களும் தான் கேளுங்களேன்.....