Monday, February 22, 2010

91. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு

இணையத்தில் தமிழில் எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கென ஒரு புனைப்பெயர் சூட்டிக்கொள்ள வேண்டிய காலத்தில் நானாக வைத்துக் கொண்டது தான் இந்த சீமாச்சு என்பது. அதற்கு முன் என்னை யாரும் சீமாச்சு என்று கூப்பிட்டதாக நினைவில்லை.. 2003ல் மரத்தடி யாகூ குழுமத்திலும் பிறகு எனக்கென வலைப்பதிவு தொடங்கிய பொழுதிலும் கூட அந்தப் பெயரிலும் யாரும் என்னை அப்படிக் கூப்பிடவில்லை. இப்படியாகப்பட்ட காலத்தில் (2004) என்றோ ஒருநாள் ஒரு பதிவர் அவர் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்க "சீமாச்சு இருக்காரா" எனத் தொலைபேசியில் அழைத்த போதுதான் என் பெயர் சீமாச்சு என்பதே எனக்குப் பதிவாகியது.

அந்த நியூஜெர்ஸி பதிவர் என்னை அவரது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். வரலாற்று ஆசிரியர்கள் கவனிக்க. கல்லும் மண்ணும் தோன்றி (கல்தோன்றி மண் தோன்றாக் காலம் என எழுதினால் அடிக்க வருவார்கள்..) இங்கொன்றும் அங்கொன்றுமாக தமிழ்ப் பதிவுகள் முளைக்கத் தொடங்கிய காலத்தில்.. தமிழ்மணம் என்ற திரட்டி கூட முற்றுப் பெறாத காலகட்டத்தில் அமைந்த முதல் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பென்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது அப்பொழுதுதான்..

அப்பொழுதெல்லாம் அமெரிக்காவில் சிறுவரிடையே Pokemon போக்கிமான் என்ற வஸ்து ரொம்ப பிரபலம். அவற்றில் பலதரப்பட்ட வகைகளுக்கு பலவிதமான பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.. அதில் ஒன்றின் பெயர் Picachu பிகாச்சு என்பது. (படம் கீழே.. சினேகா படத்துக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது).. சக பதிவரின் 10 வயது மகனிடம் .."I am Seemachu.. Cousin of Picachu" என்று... அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை..

நான் "சீமாச்சு" தானா என அவன் பலமுறை உறுதிப்ப்டுத்திக் கொண்டான்.. அவனது அப்பாவும் அம்மாவும் என்னிடம் "வாங்க சீமாச்சு".. "உக்காருங்க சீமாச்சு" எனச் சொல்வதைக் கவனித்தான். நான் தான் சீமாச்சு என்பது உறுதியானவுடன் நான் பிகாச்சுவின் கஸின் தான் என்பதில் அவனுக்கு அறவே சந்தேகமிருக்கவில்லை.. அவனுக்குத் தலைகால் புரியவில்லை.. பிகாச்சுவின் கஸின் சீமாச்சு தன் தந்தையின் நண்பரென்பதும் இப்பொழுது சீமாச்சு தன் வீட்டில் சாப்பிட்ட்டுக் கொண்டிருக்கிறார் என்பதுமே அவனுக்கு ரொம்பப் பெருமையாகிவிட்டது..

சாப்பிட்டு முடித்துப் பார்த்தால் வாசலில் அவன் வயதையொத்த பத்துப் பதினைந்து சிறுவர்கள். அனைவரிடமும் அவன் பெருமையாக "This is Seemachu.. Cousin of Picachu.. My Daddy's Friend " என்று அறிமுகப் படுத்திய போது எனக்கே தமிழ் வலைப்பதிவின் சக்தி புரிந்தது.. அதிலும் அவன் My Daddy's Friend என்ற வார்த்தையில் (அழுத்திய அழுத்தம்) தெரிந்த பெருமிதம் அவன் வாழ்நாளில் கண்டிருக்க மாட்டான்..நான் அவர் வீட்டிலிருந்து கிளம்பியபோதும்.. நான் காரை நோக்கி நடக்கும் போதும் அத்தனைக் கண்களும் என் முதுகைத் துளைத்ததும் என் கார் தெரு முனையில் மறையும் வரை எனக்கு அத்தனை சிறுவர்களும் கை காட்டிக் கொண்டிருந்ததும் மறக்கவியலாதது...


oOo

ரொம்ப ச்சின்ன விஷயங்கள் தான்.. வாழக்கையில் அவற்றுக்கு சக்தி அதிகம். மாற்றுக்கருத்தை நோகாமல் சொல்வதென்பதை மூர்த்தியண்ணனிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்.. ஆனாலும் அதைக் கடைப்பிடிக்க அவ்வப்பொழுது வரமாட்டேனென்கிறது. என்னதான் அண்ணனிடம் கற்றுக் கொண்டாலும் அதைச் செயல் படுத்த முனைவதற்குள் எனக்குள் இருக்கும் சீமாச்சு தலையைக் காட்டிவிடுவான்.. ”ஆஹா.. வடை போச்சே.. அண்ணன் சொல்ற மாதிரி.. சொல்லியிருக்கலாமே" எனத் தோன்றும்..

மயிலாடுதுறையிலோ அல்லது மற்ற ஊர்களிலோ அண்ணனுடன் கடைக்குச் செல்வது வழக்கம்.. வாங்க வந்த பொருள் ஒன்றாக இருக்கும் ஆனால் நான் கண்ட இடங்களில் மேய்ந்து கொண்டிருப்பேன்.. சமயத்தில் ஏதாவது பொருள் கண்ணில் படும்.. வாங்கலாமே என நினைத்து.. "அண்ணே .. இங்க வாங்க.. இதைப் பாருங்க.. நல்லாருக்கே.. வாங்கலாமா" என்பேன்..

அண்ணன் என் முகத்தைப் பார்த்துவிட்டு.. அந்தப் பொருளையும் பார்த்து விட்டு ..உடனேயே.. "வாங்கலாமே.. சீனா.. என்ன விலை பாரு.. எனக்கும் ஒண்ணு வாங்கிக்கிறேன் ..நல்லாருக்கே.." அப்படீன்னுடுவாங்க.. எனக்கோ ஒரு நல்ல ஐட்டத்தை அடையாளம் கண்டுபிடிச்சி அண்ணனுக்கே காட்டிய பெருமை பிடிபடாது..

அப்படியே.. ஏதாவது பேசிவிட்டு ஒரு நிமிஷம் கழித்து.. "இங்க வா.. சீனா.. நீ காட்டினது நல்லாருக்கு... ஆனா....... அதை......... விட.... இங்க பாரு... இது இன்னும் நல்லாருக்கே " என்று அவர் வேறு ஏதாவது காட்டுவார்.. உண்மையாக அது நான் காட்டியதை விட நல்லாவே இருக்கும்.. அதை அவர் முன்னமேயே பார்த்து வைத்திருந்திருப்பார்.. இருந்தும் நான் காட்டியபொழுது.. என்னமோ புதிதாகப் பார்ப்பது போல் பாராட்டும் அண்ணனிடம் நான் பலமுறை தோற்றிருக்கிறேன்.. இருந்தாலும் என் அண்ணனிடம் நான் தோற்பதென்பது நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் ஒன்று..

இப்பொழுதெல்லாம்அண்ணனுடன் ஷாப்பிங் போனால்.. கிண்டலாக.. "அண்ணே .. இத்த்த்து.. நல்லாருக்கு.. இத்த்த்த்த வி..ட.. அது நல்லாருக்கண்ணே" அப்படீம்பேன்.. அதையும் சிரிச்சிக்கிட்டே.. "எது சொன்னாலும்.. 'கப்'புனு புடிச்சிக்கிறே சீனா..நீ.. உன்னை மாதிரி தான் புள்ளங்க இருக்கணும்" என்பார்.. எல்லோரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதென்பதும் அடுத்தவர் மனதை நோகடிக்காமல் பேசுவதென்பதும் அண்ணனுக்கு கை வந்த கலை..

இத்தனை வருடங்கள் யார் சொல்லியுமே கேக்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுக்கப் பழகியிருந்த என் அப்பா கூட.. இந்த 92 வயதில் எது செய்வதென்றாலும்.. அண்ணனிடம் "நீ என்னப்பா சொல்றே" என்று கேட்பதைப் பார்த்தால் என் காதில் புகை வரும்.. இன்று வரை அவர் என்னிடம் எதுக்குமே “நீ என்னப்பா சொல்றே” என்று கேட்டதில்லை... அப்படியே இனி கேட்டாலும் என்னால் அவர் அதைக் கேட்டதாக நம்ப முடியாது !!
சமீபத்தில் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஒரு சம்பவம்..

பள்ளியின் ஒரு வேலை நாளில், மயிலாடுதுறையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக எங்கள் பள்ளி சாராத ஒரு பொது நலன் அமைப்பு காலை 10 முதல் 12 வரை ஒரு நிகழ்ச்சி நடத்தியது. நிகழ்ச்சி பள்ளிவளாகத்தின் வெளியே ஏதோவொரு கல்யாண மண்டபத்தில் நடந்தது. மயிலாடுதுறையின் பல பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. எங்கள் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் 50 பேரை எங்கள் தலைமையாசிரியர் திரு கேயார் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுப்பியிருந்தார்.. பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் தலைமையில் மாணவர்கள் அந்த நிகழ்ச்சிக்குச் காலை 9:30 மணிக்குச் சென்றுவிட்டு மதியம் 12 மணிக்குத் திரும்பிவந்து மதிய உணவு உண்டுவிட்டு மதியம் வகுப்புக்குத் திரும்பிவிடவேண்டும். இது தான் அன்றைய திட்டம்..

வழக்கம் போல் 12 மணிக்கு முடிவடையவேண்டிய நிகழ்ச்சி முடிய மதியம் 1:30 ஆகி விட்டது. நிகழ்ச்சி முடிய தாமதமாகியும் மாணவர்களின் மதிய உணவுக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த அமைப்பினர் எந்த முயற்சியும் செய்திருக்கவில்லை. பசியுடன் பள்ளி திரும்பிய மாணவர்கள் தாங்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு வகுப்புக்குத் திரும்பிவிட்டனர்.

மதிய வகுப்பில் ஒரு மாணவர் சரியாகப் பாடத்தில் கவனம் செலுத்தாததால் அந்த மாணவனுக்கு தண்டனை தரும் எண்ணத்தில் அவரை அந்த வகுப்பின் வாசலில் நிறுத்தியிருந்தார் வகுப்பாசிரியர். மதியம் மணி அடித்த பிறகு வழக்கமாக சுற்று வரும் தலைமையாசிரியர் கேயார் மாணவன் வகுப்புக்கு வெளியில் (அப்பொழுது மணி மதியம் 2:30) நிற்பதைக் கவனித்து விசாரித்திருக்கிறார்.. அப்பொழுது தான் அந்த மாணவர் காலை நிகழ்ச்சிக்குச் செனறு வந்தது அவருக்கு நினைவு வந்தது.. அந்த மாணவன் வீட்டிலிருந்து உணவு எடுத்து வருபவர் அல்ல. அவர் மதியம் பள்ளியிலேயே சத்துணவு சாப்பிடும் மாணவர். அவர் வந்த நேரம் சத்துணவு முடிந்து விட்டதால் அன்று எதுவுமே சாப்பிடவில்லை.. அப்பொழுதுதான் அது நினைவுக்கு வர அவனிடம் கேயார் கேட்ட முதல் கேள்வியே "மதியம் ஏதாவது சாப்பிட்டியா?" என்பதுதான்..

அவன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.. பசியுடன் இருந்திருக்கிறார் என்பது அறிந்தவுடன் அவனை உடனடியாகத் தன் அறைக்கு அழைத்துச் சென்ற கேயார் (தலைமையாசிரியர்) அன்று அவர் தனக்காக வீட்டிலிருந்து எடுத்து வந்த மதியச் சாப்பாட்டை அப்படியே அவனுக்குப் பரிமாறி அவன் சாப்பிட்ட பின் அவனை வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.. தன் பசிக்கு அன்று அவர் வெளியில் போய் ஹோட்ட்டலில் சாப்பிட்டார்.


"பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று கேட்டிருக்கிறேன்.. அதற்கு ஒரு உதாரணம் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் மட்டுமல்ல.. அங்கு இருக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் தான். அப்படிப்பட்ட பள்ளியின் மாணவன் நான்.

இன்று அந்தப் பள்ளியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் என்ற பொறுப்பிலிருந்தாலும் நான் சொல்லிக் கொள்வதென்னவோ இன்னும் மாணவன் தான்.


oOo

சில பள்ளி ஆசிரியர்கள் பற்றிய பதிவர் வெண்பூவின் அனுபவம் கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம் என்ற அவர் இடுகையிலிருந்து...

மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(

இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.

டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.

அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆ
சிறியர்கள் விடப்போவதில்லை


oOo

நாட்டைக் காக்கும் நல்ல பல தூண்கள் எங்கள் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள்.. இன்னமும் வருவார்களென்பது உறுதி.. என்று கூறி...அன்பு அண்ணன் ஜவகரைப் பார்த்து “எப்பூடீ...” என்று கேட்கிறார் தமன்னா...


Tuesday, February 16, 2010

90. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு

சமீபத்தில் சக பதிவர் ஜவகர்லால் மயிலாடுதுறைக்குச் சென்றிருந்தார். என் கனவுத்திட்டங்களில் ஒன்றான் யங் இந்தியாவையும், அதன் சார்பான சில செயல்பாடுகளிலும் அவ்ரை ஈடுபடுத்தி எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்குச் பல்லாற்றல் வழிகளிலே பயிற்சி தருவது குறித்து அவரை ஈடுபடுத்த வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு அவரைப் பயன்படுத்த வேண்டுமென்ற என் என்ணங்களின் முதல் படியாக அவரை மயிலாடுதுறை வரச் சொல்லியிருந்தேன்.. அவர் வருவது பற்றி முன்னரே எங்கள் பள்ளி ஆசிரியர்களிடமும், மூர்த்தி அண்ணனிடமும் சொல்லி அவரைச் சிறப்பாக கவனிக்க வைத்ததன் பயன் ஒரு அருமையான் இடுகை.. நான் படிச்ச் ஸ்கூலைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருந்தார்.. காக்கா கறியும் கருவாடும் சைவர்களும் என்று வித்தியாசமான தலைப்பிட்ட அந்த இடுகை இதோ

oOo oOo
பள்ளி நாட்களின் சோகம் என்று சொன்னால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியர் இறப்பது ஒன்று. ஜவஹர் சென்றிருந்த போது வியாழக்கிழமை அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஆசிரியர் ரவிக்குமார் (வயது 52) இரண்டு நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தீவிர மாரடைப்பால் மறைந்துவிட்டார்.. எங்கள் பள்ளியின் மேல்நிலை வகுப்புக்களுக்கான பொருளியல் ஆசிரியர் அவர். மாணவர்களிடையே (அதுவும் III Group மாணவர்களிடையே) நல்ல ஆசிரியர் என்று பெயரெடுப்பது ரொம்ப கடினம். பத்தாவது வகுப்பில் மார்க் குறைந்து மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்காத மாணவர்களின் பெரும்பான்மையர் பொருளியல் வகுப்பில் சேருவர். அவர்களிடையே நல்ல பெயர் எடுக்க வேண்டிய நிலை என்பது மிகக் கடினம். அந்த மாணவர்களிடையே பாசமாகவும், ந்ல்ல ஒரு ஆசிரியராக்வும் போதித்து நல்லன்பைப் பெற்ற திரு ரவிக்குமார் இப்பொழுது எங்களிடையே இல்லை என்பது மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது. அவரது ஒரே மகளுக்கு முதல் குழந்தை பிறந்து இன்றுடன் 10 நாட்கள் தான் ஆகிறது. பிறப்ப்பையும் இறப்பையும் ஒரு சேர சந்தித்த் அந்த ஆசிரியர் குடும்பம் மன நிம்மதியை விரைவில் அடைய பிரார்த்திக்கிறேன்..


பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதும் திரு ரவிக்குமாரின் மாணவர்கள் மிகவும் வருத்த்த்திலிருக்கிறார்கள்,. இந்த சொந்த சோகத்தையும் மீறி அவர்கள் தேர்வில் நல்ல முறையில் எழுதி நல்ல மதிப்பெண் பெற்று அந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பைப் நிறைவு செய்யவேண்டும்..இதேபோல் 1980 ஆம் ஆண்டு நான் பள்ளியில் படிக்கும் போது எனக்கு வேதியியல் போதித்த் திரு மஹாதேவய்யர் என்ற ஆசிரியர் கல்வியாண்டின் இடையில் டிசம்பர் மாதம் 3ம் தேதி காலமானார். எனக்கு ரொம்ப சோகமாக இருந்தது. அவர் இறப்பு செய்தி கேள்விப்பட்டதில் இருந்து 3 நாட்கள் அவர் வீட்டு வாசலில் தான் நாங்கள் 500 மாணவர்களும் இருந்தோம்.. அவர் உடலை இடுகாட்டுக்குக் கொண்டு சென்ற போது பெய்த் மெல்லிய மழைத் தூறலில் நாங்கள் எல்லா மாணவர்களும் அவருடனேயே சென்று அவரை வழியனுப்பி வைத்தது மற்க்க முடியாதத்து..

இந்த பாதிப்பு எவ்வளவு நாட்கள் இருந்ததென்றால்.. நான் படித்த இன்னொரு பள்ளிக்கூடத்துக்கு நான் ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்ட்டம் (படங்கள் ஜவஹர் பதிவில்) கட்டிக் கொடுத்த் போது கட்டடத்துக்கு பெயர் வைக்கும் நேரம் வந்த போது நான் எழுதிக்கொடுத்த பெயர் "ஸ்ரீ மஹாதேவய்யர் நினைவரங்கம்" என்பது. அந்தக் கட்டடத் திறப்பு விழாவுக்கு அவரது மகனை அழைத்து கௌரவித்தது மறக்கவியலாதது. தன் கணவர் மறைந்து 22 வ்ருடங்கள் கழித்து (எல்லோரும் அவரை மறந்து விட்டார்களோயென்று நினைத்த பொழுது) அவர் பெயரில் அவர் மாணவர் ஒரு கட்டடம் திறந்து வைத்தது நினைத்து அவ்ரது மனைவிக்கு மட்டற்ற மகிழ்ச்சி..
oOo oOo

வாலண்டைன்ஸ் நாளன்று ஒரு மயிலாடுதுறை "மாப்பிள்ளை" நண்பர் வீட்டில் பழமைபேசி ஐயாவுடன் விருந்து நடந்த்து. ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து உபசரித்த நண்பரின் குடுமப்த்தினரின் விருந்தோம்பல் மறக்க முடியாதது. நண்பர் ஒரு மருத்துவர். நரம்பியல் நிபுணர். அவரே அவர் கைப்பட சில பதார்த்தங்கள் செய்து சுடச்சுட பரிமாறினது மறக்க் முடியாத்தது..

எனக்க்கு சுரேஷ் என்ற சின்னாளப்பட்டிக்கார நண்பர் ஒருவர் உண்டு.. இரவு எத்த்னை மணிக்கு அவர் வீட்டுக் கதவு தட்டினாலும்.. அவர் கேட்கும் முதல் வார்த்தை "சாப்பிட்டியா மச்சி.. ஏதாவது சாப்பிடறியா?" என்பது தான். "பசிக்குது என்று சொல்லிவிட்டால்" உடனே அடுப்பு மூட்டி சமைத்துப் போட்டு பக்கத்தில் இருந்து பரிமாறிவிட்டுத் தான் அடுத்த காரியமே..

மயிலாடுதுறையாகட்டும், சவுதி அரேபியாவாகட்டும்.. நியூ ஜெர்ஸியோ, சார்லெட்டோ எந்த இடமாக இருந்தாலும் என்னைச் சுற்றி நல்ல நண்பர்களைத் தந்த அந்த இறைவனுக்கு நன்றி..
எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு !!