Tuesday, August 22, 2006

31. சிறு பிள்ளைக் குறும்புகள்....


நன்பரின் மகன் ரமணா.. மூன்று வயது தான் ஆகிறது..

நிமிடத்துக்கு நூறு விஷமம் குறைவில்லாமல் செய்வான். எப்பொழுதுமே பெரியவர்களை 'இப்ப என்ன விஷமம் செய்யப்போறானோ' என்ற ஒரு திகிலுடன் தான் வைத்திருப்பான்.

நேற்று எதுவும் அதிகம் பேசாமல் குடுகுடுவென்று ஓடிக்கொண்டிருந்த பையனை நண்பர் மனைவி சந்தேகத்துடன் துரத்தினார். வீட்டில் நிறைய விருந்தினர்கள் வேறு. அவனை கவனிக்க நேரமிருந்ததில்லை.

அதிகம் பேசாமல் ஓடியவனை மிரட்டி அருகே இழுத்து.. வாய்க்குள் விரலை விட்டால..

வாயிலிருந்து ஒரு குட்டி ஸ்படிக லிங்கம்.


நிஜமாகவே ஒரு ஸ்படிக லிங்கம்..

வந்த விருந்தினர்களெல்லாம் 'பையன் இப்பவே வாயிலிருந்து லிங்கமெல்லாம் எடுக்கிறானே... வருங்காலத்தில்.. பெரிய பாபா (பாஸ்டன் பாலாஜி இல்ல.. சத்திய ஸாயிபாபா) மாதிரி வருவானாக்கும்' என்று ஒரே பக்தியுடன் கூடிய பாராட்டு மழை...


(பையன் யாரும் கவனிக்காத போது பூஜை அறைக்குள் சென்று லிங்கத்தை வாயில் போட்டுக் குதப்பிக் கொண்டு இருந்திருக்கிறான்)


oOo

இதே ரமணாவின் இன்னொரு லீலை...

அபார்ட்மெண்டின் வாட்ச்மேன் பையனுக்கு 22 வயது.. இந்த வயதுக்கேயுரிய காதல் எண்ணங்கள்.. அவனின் காதல் கனவுகள் பற்றி வந்தவர்களுடன் எப்பொழுதோ கதைத்திருக்கிறார் நண்பரின் மனைவி.. "வாட்ச்மேன் பையன் 'அனிதா' ன்னு யாரையோ லவ் பண்ணுகிறானாம்.. அதனால் பெரியதாக A என்று போட்ட டாலர் வைத்து செயின் போட்டிருக்கிறான் கழுத்தில்" என்று பேசிக்கொண்டிருந்திருக்கிறார்..

இதெல்லாம் முடிந்து ஒரு நாள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த ரமணாவை வாட்ச் மேன் பையன் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அவன் செயினை பிடித்து இழுத்து.. டாலரை பிடித்து இழுத்து விளையாடிய குழந்தை சொன்னது..


'A for..'

'A for...'

'A for ... Anitha'

oOo

என் இளைய மகளின் (சூர்யா) நான்காவது பிறந்த நாள் சமீபத்தில் நடந்து முடிந்தது. பிறந்த நாள் பற்றி பல விதமான கற்பனைகள் அவள் மனதில் (நமக்கே இந்த வயசில் இருக்கிறதே.. )முதல் நாள் இரவில் அவள் அம்மாவுடன் நடத்திய உரையாடல்..

'நாளைக்குத் தான் எனக்கு பர்த் டேயா?'

'ம்ம்ம்ம்'

'காலையிலே நான் தூங்கி எழுந்தவுடனேயே பர்த் டே வந்து விடுமா?;

'ம்ம்ம்ம்'

'நிறைய கிப்டெல்லாம் வாங்கித்தருவியா?'

'ம்ம்ம்ம்'

'காலையிலே எழுந்திருக்கும் போது எனக்கும் Snow White மாதிரி hair எல்லாம் long ஆ வளர்ந்திருக்குமா...?"


'!!!!!!!"

Monday, August 14, 2006

30. எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்


நேற்று என் காங்கிரஸ் நண்பரிடம் பேசி அநியாயத்தைக் கேட்க நேரிட்ட பாவத்தை இந்த காமராஜ் திரைப்பட்ம் பார்த்து தீர்த்துக் கொண்டேன்!!

காமராஜ் 1975 அக்டோபர் 2 அன்றே காலமாகி விட்டாராம். அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்திருப்பேனாயிருக்கும். காந்தி ஜெயந்தி அன்று காலமானாராகையால் பள்ளிக்கூடம் லீவு விட்டாங்களா என்னவென்று நினைவில்லை (நான் என்ன டோண்டு சாரா?- எல்லா சமீபத்தையும் நினைவு வெச்சுக்கறதுக்கு). காமராஜைப் பத்தி நான் அறிந்திருந்தது வெகு குறைவு. அவர் நினைவாக எனக்குத் தெரிந்தது அந்த மதிய உணவு மட்டுமே. அதுவும் சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளே யாதலால் என்னால் மதிய உணவுக்குப் பேர் கொடுக்க முடியவில்லை.

காலையில் 11 மணிக்கெல்லாம் வகுப்பில் உள்ள பெரிய பசங்கள் மதிய உணவு 'கிண்டுவதற்கென்று' ஸ்பெஷல் பர்மிஷனோடு அலுமினியக் கரண்டியும் கையுமாக அலைவார்கள். எப்பொழுதும் ஒரே மெனுதான். ஒரு மாதிரியாக ஒரு கோதுமை சாதம். சாப்பிட முயன்றதில்லை.

அந்தத் திட்டத்தின் பின்னாலான் ஒரு பெரிய தத்துவத்தை இத்தனை நாளும் கேள்விப் பட்டிருக்கிறேனேயொழிய உணர்ந்ததில்லை.

இந்தப் படம் பார்க்க வேண்டுமென்று இரண்டு வருடங்களாக நினைத்திருந்தாலும்... இந்த படத்தின் வினியோக உரிமை எடுத்துள்ள நம்ம விருதுநகர் முருகன் ஞானவேல் (நியூஜெர்சியில் வசிப்பவர்) என் நெருங்கிய நண்பராதலால் அவரிடமிருந்து DVD விலைக்கு வாங்கிவிட எப்பொழுதோ சொல்லி வைத்திருந்தும் ( முருகன் சார்.. அதைக் கொஞ்சம் இப்படி அனுப்பி வையுங்க சார்!!) அவரைச் சந்திக்க வாய்ப்புகிடைக்கவில்லை.

எப்படியோ படத்தின் வீடியோ கேசட் கடையில் பார்த்ததுமெ எடுத்து வந்து விட்டேன்.
ஆரம்பத்திலிருந்து ஒரே மூச்சில் பார்த்து விட நினைத்தாலும் இரண்டு சிட்டிங்கில் தான் பார்க்க முடிந்தது...

எவ்வளவு ஒரு தங்கமான மனிதர்..

"படிப்பு சொல்லிக் கொடுக்கறதுக்கு காசு வாங்கறது தாய்ப்பாலை காசுக்கு விக்கிறதுக்குச் சமம்ண்ணேன்..."

"எப்பவும் நாமளே ஜெயிச்சுக்கிட்டிருக்க முடியுமான்னேன்... அவங்களும் ஜெயிக்கட்டும்ணேன்... அது தான் ஜனநாயகம்ணேன்..."

"குழந்தைங்க.. பொய் சொல்ல மாட்டாங்கன்னேன்.."

"சுதந்திரம் வாங்கியும் இவ்வளவு வருஷங்களாகியும் ஜனங்க பட்டினியைப் போக்க முடியலையே..."

அவரின் ஒவ்வொரு வசனங்களின் பின்னால் உள்ள ஒரு தெய்வீக மனதை தரிசிக்க முடிந்தது.

அவரை.. அவரின் வெள்ளையுள்ளத்தை.. பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை...
இத்தனை நாள் அவரை பத்தி விவரமாக அறிந்து கொள்ளாமைக்கு வெட்கப் பட்டேன்..

படம் பார்க்கும் போது சில இடங்களில் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை!!

பார்த்து முடித்த உடன் மூன்று எண்ணங்கள் தோன்றின...

1. இந்தியாவுக்குச் சென்றிருக்கும் மனைவிக்குப் போன் பண்ணி ஒரு அழகான காமராஜ் படம் எடுத்து வர வேண்டும்.

2. காமராஜ் பற்றிய நல்ல புத்தகங்கள் எடுத்து வரச்சொல்ல வேண்டும் (தம்பி .. ரஜினி ராம்கி.. கொஞ்சம் வாங்கி அனுப்ப முடியுமா ராஜா..?)

3. நம்ம விருதுநகர் முருகன் சார் கிட்ட சொல்லி ஒரு 10 DVD வாங்கி எனக்குத் தெரிந்த தமிழ் இளைஞர் பட்டாளத்தை அவசியம் பார்க்கச் சொல்ல வேண்டும்.

இந்த இனிய சுதந்திர நன்னாளில் பெருந் தலைவர் காமராஜர் பற்றி அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

எல்லோரும் அவசியம் ஒரு முறை இந்தப் படத்தைப் பாருங்க.. ! காமராஜ் ஆட்சின்னா என்னன்னு புரியும்..

Saturday, August 12, 2006

29. இப்படியெல்லாமும் நடக்குது தான்!!

தமிழகத்தில் ஒரு ச்சின்ன ஊரில் உள்ள நண்பர் குடும்பத்துடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் குடும்பத்தின் நலன் கருதி ஊரும் பேரும் வெளியிட விரும்பவில்லை.


மிக ஏழ்மை நிலையில் உள்ள குடும்பம்தான். ஊரில் நண்பர் வளர்ந்து வரும் அரசியல்வாதி. (இந்திரா) காங்கிரஸ்காரர். காலையிலும் மாலையிலும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு கட்சி ஆபீஸே கதியென்று கிடப்பவர்.

நண்பரின் மனைவி காங்கிரஸ் கட்சி சார்ந்த வார்டு கவுன்சிலர். அங்கங்கே அவ்வப்பொழுது கிடைக்கும் கமிஷன் மட்டுமே வருமானம். (ஆமாம் இதில் எவ்வளவு வருமானம் வரும்? எனக்குத் தெரியாது!). கணவன், ஒரு மனைவி (அரசியல்வாதியில்லையா.. அதனால் அந்த 'ஒரு' தேவைபடுகிறது) ஒரு பையன் (இவனைப் பற்றிய சம்பவம் தான் இப்பொழுது..) மற்றும் இரண்டு பெண்கள். சொல்லத்தக்க சேமிப்புகள் என்று எதுவும் கிடையாது!!

நான் 7-8 வருடங்களாக நிதியுதவி செய்து படித்து வரும் நிறைய மாணவர்களில் இவனும் ஒருவன். இவனின் மூன்றாவது வகுப்பிலிருந்து இவனின் பள்ளிச்செலவுகள் அனனத்தும் என்னைச் சார்ந்தவை. சாதாரணமாக நன்முறையில் படிக்கும் ஒரு மாணவன். அவ்னின் மதிப்பெண்களில் எனக்கு அவ்வளவாக எதிர்பார்ப்புகள் இல்லையென்றாலும்.. அந்தக் குடும்பத்திலிருந்து ஒரு பையன் படித்து வளர்ந்து முன்னேற வேண்டுமென்பது என் ஆசை.

பையன் இந்த வருடம்தான் மெட்ரிகுலேஷனில் பத்தாவது தேர்வு எழுதியிருந்தான். சாதாரணமாக பிள்ளைகள் தேர்வு எழுதி ரிசல்ட் வந்தால் எனக்கு செய்திகள் வரும்தான். நானும் ஆர்வமாக இதெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொள்ளும் வகைதான். பையனின் தேர்வு முடிவுகள் எனக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அதனால் பேச்சினூடே விசாரிக்க வேண்டியதாகிவிட்டது.

நண்பரின் மனைவியிடம் (கவுன்சிலர் அம்மா) நடந்த உரையாடலின் ஒரு பகுதி... உரையாடலில் பையனின் பெயர் அவனின் நலம் கருதி மாற்றப்பட்டுள்ளது.

'அப்புறம் என்னங்க விசேஷம்?"

"ஒண்ணும் இல்லீங்க.. நம்ம அருணுதான் இப்படிப் பண்ணிட்டான்!!"

"ஏன் அவனுக்கு என்ன ஆச்சு..?"

"இல்லே.... இப்பத்தான் பரிட்சை எழுதியிருக்கான். இந்த வாரம்தான் மார்க்கு வரும் போலத்தெரியுது"

"அப்படியா.. எல்லாருக்கும் மார்க் வந்திருச்சி போலத்தெரியுதே.. ஏன் இவனுக்கு மட்டும் தாமதம் ஆகுது?"

"இல்லைங்க.. இவனுக்கு ஒரு பேப்பர்ல ஒரு மார்க்குல போயிட்டுது.. மறுபடியும் எழுதியிருக்கிறான்.. அதான் தாமதம்"

"அப்படியா.. எனக்குச் சொல்லவேயில்லீங்களே... நிறைய பேர் மார்க்.. பாஸ் எல்லா விவரமும் சொன்னாங்க.. இவன் விஷயம் மட்டும் நமக்கு வரவேயில்லீங்களே.. இதான் காரணமா?"

"ஆமாங்க ! வெளியில சொல்லவே வெட்கமா இருக்குங்க!! அதான் சொல்லலை.. இல்லேன்னா நானே போன் பண்ணிச் சொல்லிருப்பேனுங்களே"

"பரவாயில்லையே! அதனால என்ன? மறுபடியும் எழுதினா பாஸ் பண்ணிட்டுப் போறான்! இன்னும் நல்லாப் படிச்சிருக்கலாம்... மாமா ரொம்ப வருத்தப்பட்டாங்க-ன்னு சொல்லிடுங்க!!"

"இல்லைங்க.. இவனுக்கு ஒரு மார்க்குல போயிடிச்சின்ன உடனே பள்ளிக் கூடத்துலேருந்து டீச்சரெல்லாம் வீட்டுக்கே வந்துட்டாங்க !!"

(எனக்கு இது ஒரு ஆச்சரியமான செய்திதான்!! பையன் பெயிலானா டீச்சரெல்லாம் இப்ப வீட்டுக்கே வந்துடறாங்களா.. நாங்க படிக்கிற காலத்துல பையனோட அப்பா அம்மா வெல்லாம் தானே பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்க்கணும்?)

"அப்படீங்களா?"

"அப்புறம்.. மெட்ராஸெல்லாம் போய் டைரக்டரை எல்லாம் பாத்து ஏதாவது செய்ய முடியுமான்னெல்லாம் முயற்சி பண்ணினோம்.. நெறய செலவெல்லாம் ஆச்சு"

"அப்படீங்க்ளா?"

"இவங்க அப்பா மெட்ராஸ்ல அமைச்சர் பொன்முடியெல்லாம் வேற பாத்தாங்க.. அவர் மூலமா ஏதாவது செய்ய முடியுமான்னெல்லாம் முயற்சி பண்ணினோம்!! இவனுக்காக பண்ணாத செலவெல்லாம் இல்லீங்க!!"

"அப்படீங்களா?"

"அப்புறம் தான் இதெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரிஞ்சுது. இதெல்லாம் பண்ணியிருக்கக் கூடாதோ?"

"ஏங்க! வேஸ்ட்டுன்னுதான் தெரிஞ்சுதா? தப்புன்னெல்லாம் தெரியலையா?"

"ம்ம்ம்ம்ம்"

"நாங்களெல்லாம் படிக்கும் போது பையன் படிக்கணும்னு எங்க அப்பா அம்மாவெல்லாம் ரா முழுக்க முழிச்சிக்கிட்டு எங்களைப் படிக்க வைக்க எல்லா தியாகமும் செய்வாங்க!! அவன் பரிச்சைக்குப் படிக்கும் போது நீங்க இதெல்லாம் பண்ணின மாதிரி தெரியல.. இப்ப போய் இப்படி பண்ணினேன்னு சொல்றீங்களே?"

"இல்லீங்க.. பள்ளிக் கூடத்துல தான் அவங்க சொன்னாங்க.. மினிஸ்டரைப் பாருங்க அப்படீன்னாங்க.. அதான் செஞ்சோம்"

"இப்ப பள்ளிக்கூடத்துலயே இதெல்லாம் சொல்றாங்களா?"

"ஆமாம்.. இவனும் பாஸ் பண்ணிட்டா.. பள்ளிக்கூடம் பேரு நல்லாயிடுங்களே! அதுக்காக சொன்னாங்களா யிருக்கும்!!"

"இப்படி சொன்னாங்களே.. இதைச் செய்யலாமான்னு நீங்க யோசிச்சீங்களா? இல்ல .. என்னைத் தான் நீங்க கேட்டீங்களா?"

"இல்லீங்க.. தோணலீங்க.. பையனுக்கு ஒரு வருஷம் வேஸ்டாயிடுமோன்னு தான் இப்படி செஞ்சோம்..."

இவ்வளவு அக்கறையாயிருக்கிற நீங்கள் அவன் படிக்கும் போது அவன் பக்கத்துலயிருந்து சொல்லிக் கொடுத்து ஊக்கப் படுத்தியிருக்கலாமில்லே!!"

"ம்ம்ம்ம்ம்"

"இப்ப நீங்க செஞ்சதெல்லாம் தர்மத்தைத் தாண்டிய செயல்கள்!! தயவு செஞ்சு இனிமே இப்படியெல்லாம் செய்யாதீங்க... அப்படி செஞ்சுட்டு என் கிட்டே நட்பு பாராட்டி உதவி கேட்டெல்லாம் வராதீங்க!! ரொம்ப நன்றிங்க!!"

oOo

அவர்கள் மனம் புண்படக் கூடாது என்று வேறு விஷயங்களைப் பேசி உரையாடலை மிதமாக முடித்தேன்.

இதுல எனக்கு என்ன புரிஞ்சுது?

இப்பல்லாம் மக்களுக்குத் தப்பு எது, தர்மம எதுன்னே யோசிக்கத் தெரியலயா இல்ல யோசிக்க விரும்ப மாட்டேங்கறாங்களா?

அமைச்சர் பெருமக்களெல்லாம் எல்லோருக்கும் அணுகும் முறையில இருந்தாலும் மக்கள் அவர்களை ஒரு நியாயமான ப்ரச்சினைகளுக்காக அணுகுவதில்லையோ?

இது தப்பாயிருந்தாலும் என் நண்பரே இன்னும் கொஞ்சம் பணம் தள்ளியிருந்தா இதுவும் நடந்திருக்குமோ?

என் நண்பரே இதை "நான் EVKS இளங்கோவன் கோஷ்டி ங்கிறதால் இத பொன்முடி எனக்கு செஞ்சு கொடுக்கல... நான் வாசன் கோஷ்டியா இருந்தா செஞ்சிருப்பானுங்க... திமுக பொன்முடி நினைச்சிருந்தா என் பையனுக்கு ஒரு வருஷம் மிச்சமாயிருக்கும்" அப்ப்டீன்னு திசை திருப்பியிருக்கலாமோ ? (தன் பையன் சரியாகப் படிக்காததோ அல்லது இவர் அவன் படிக்கும் போது அவன் மேல் கவனம் செலுத்தாததோ ஒரு ப்ரச்சினையேயில்லை என்று ஒரம் கட்டப்பட்டிருக்குமோ?)

அரசியல்வாதிங்கிறதால அவர் எப்படி வேணும்னாலும் திசை திருப்பலாம..

நான் படிக்க வெச்ச.. படிக்க வைக்க நிதியுதவி செய்கிற ஒரு பையன் பெயிலானதில் எனக்கு வருத்தங்கள் இருந்தாலும்... அவனின் பெற்றோர்களின் தவறான் அணுகுமுறைகள் தோல்வியடைந்ததில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் தெரிகிறது.

இன்னும் அந்தப் பையனிடம் நான் பேசவில்லை..பேசினால்..
"அம்மா அப்பாதான் இப்படித் தவறாக முயற்சி செஞ்சாங்கன்னா..நீ வேணாம்னு தடுத்திருக்க வேண்டாமா?" என்று கேட்க வேண்டும்.

அடுத்த தலைமுறையின் மீது எனக்கு இன்னும் நம்பிக்கையிருக்கிறது!!!

Friday, August 11, 2006

28. இப்ப நீங்க எங்க இருக்கீங்க?


1994-ல் ஏப்ரல் மாதத்தில் அட்லாண்டா நகரில் முதன்முதலில் வந்து இறங்கியதால்.. நமக்கு முதலில் அடைக்கலம் கொடுத்த ஊர் ஆச்சேயென்று அட்லாண்டா மேலே ஒரு பாசமேயிருந்தது. அப்பொழுது திருமணமும் ஆகியிருக்கவில்லை.


கொஞ்சம் கொஞ்சமாக இந்தியக் கண்ணிப் பொறியாளர்கள் அமெரிக்காவில் தலை காட்ட ஆரம்பித்திருந்த நேரம் அது.

நானும் என் நண்பர்கள்...முன்னாள் வகுப்புத் தோழர்கள் என்று பலரை எனது கம்பெனிக்கு அடையாளம் காட்டி H1B விசாக்கு அப்ளை பண்ணி நிறைய பேரை அட்லாண்டாவிற்கு அழைத்து வந்திருந்தேன். அது தவிரவும் புதிதாக அங்கேயே சேர்ந்த நண்பர்களால் அந்த ஒரு இடத்தில் மட்டுமே எனக்கு 20-30 பேர் நண்பர்களாக இருந்தார்கள்... அவர்களுடன் மிக எளிதாக நேரம் போவதான பொழுதுபோக்கு வசதி இருந்தது...

யாருக்குப் ப்ராஜெக்ட் பார்ப்பதானாலும் அவர்கள் கம்பெனியில் முடிந்தவரை அட்லாண்டாவிலேயெ பாருங்க.. வேற எங்கேயும்னா.. சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று சொல்லிவிடுவார்கள்... கூடுமானவரை நண்பர்கள் ஒரே இடத்தில் இருக்கலாமல்லாவா? அவர்களும் தலையாட்டிவிட்டு வெளியில் பாஸ்டன், நியூஜெர்சி, கலிபோர்னியா என்று தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் (நாம சொல்றதை யாரு கேக்கறாங்க?)

அப்பொழுதெல்லாம் (இப்பொழுது மட்டும் என்னவாம்?) எல்லாரும் ப்ராஜெக்ட் பார்ப்பதனால் குறைந்தது 6 மாதம் அல்லது ஒரு வருஷம் அல்லது அதற்கு மேல் செல்லும் ப்ராஜெக்டாகப் பாருங்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு இடத்திலும் போய் அந்த ஊரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, அபார்ட்மெண்ட் பார்த்து வாடகை எடுத்து செட்டிலாகி ஒரு பழகுவதற்கு ஒரு 2 மாசம் ஆகலாம். அதற்குள் ப்ராஜெக்ட் முடிந்துவிட்டால் மறுபடியும் இந்த வேலைகளை இன்னொரு இடத்திலிருந்து ஆரம்பிப்பதென்பது ஒரு பெரிய கடி.

இந்த விஷயத்தில் என்னுடைய அணுகுமுறையே தனி.

அப்பொழுது திருமணமாகியிருக்கவில்லையாதலால் எனது மொத்த சொந்தமே இரண்டு சூட்கேஸுகளுக்குள் அடங்கிவிடும். தேவைக்கு அதிகமாக எதுவும் சொத்து சேர்ப்பதில்லை. அப்படியே ஒரு ஊரில் ஏதாவது வாங்கினால் அதை அந்த ஊரிலேயே அறைத் தோழர்களுக்கோ அல்லது வேறு நண்பர்களுக்கோ அன்பளிப்பாகவோ அல்லது (நான் மீண்டும் கேட்கும் வரை) பயன்படுத்தும் உரிமையையோ தந்துவிடுவது உண்டு. இவ்வாறு நான் விட்டுவந்தது மிக அதிகம். சில நூறு தமிழ்ப் புத்தகங்களும் அதில் அடக்கம்.

நான் என் கம்பெனியில் கேட்கும் ப்ராஜெக்ட் வகைகள் தனி. எனக்கு அதிக பட்சமாக 6 வாரத்துக்கு மேல் எந்தவித ப்ராஜெக்ட்டும் பார்க்காதீர்கள் என்று சொல்லிவிடுவது உண்டு. இந்தமாதிரி ப்ராஜெக்ட்களில் ஒரு வசதியென்னவென்றால்.. ஓட்டலின் அறை வாடகை, வாடகைக் கார், மற்றும் இதர செலவுகள் கம்பெனியோ அல்லது வாடிக்கையாளரோ தந்து விடுவார்கள். நமக்கு கைக்காசு பைசா செலவழியாது. சமயங்களில் வாரத்துக்கு இருபதிலிருந்து முப்பது மணிநேரம் ஓவர்டைமும் கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனிக்கும் இதில் வருமானம் அதிகம். அதனால் அந்த கம்பெனிக்கு நான் ஒரு செல்லப் பிள்ளையாகவே இருந்தேன் (அப்பொழுது..)

1995-ல் ஜூன் மாதத்தில் இப்படித்தான் ஒரு முறை நான் பாஸ்டனில் சென்று மாட்டிக்கொண்டென். எனக்கென எல்லா வசதிகளும் உள்ள ஒரு தனி அறை.. அதில் நான் மட்டுமே. வேலையிலிருந்து வந்தவுடன் பொழுது போகாமல் என் அட்லாண்டா நண்பர்களுக்குப் போன் செய்து பேசிக்கொண்டிருப்பேன். (அப்பொழுது இண்டர்நெட்டில் அவ்வளவு வளர்ச்சி கிடையாது. யாஹூ, கூகுள், ச்சாட், ப்ளாக் எல்லாம் பிறக்காத நேரம். ஏன் .. செல்போன் கூட இவ்வளவு மலிவாகக் கிடையாது.. அதெல்லாம் ஒரு கனவு சமாச்சாரம் மட்டும் தான்)

தினமும் மாலை வந்தவுடன் பாஸ்டனிலிருந்துகொண்டு அட்லாண்டா நண்பர்களுக்குப் போன்.. அப்படியொன்றும் பெரிய விஷயங்களெல்லாமில்லை.. வெறும் வெட்டி அரட்டை தான்.. தினமும் ஒரு இரண்டு மணி நேரம் இப்படியே எல்லாருக்கும் போன் போட்டுபேசிக் கொண்டிருப்பது தான் ஒரே பொழுதுபோக்கு.

அப்பொழுது தான் ஒரு நாள் மனசுக்குள் ஒரு மின்னல் அடித்தது.

நாம என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? - மனசுக்குள் ஒரு கேள்வி.

ஏன்? ஒண்ணும் தப்பா தெரியலையே... நண்பர்கள் கிட்டதானே பேசிக்கிட்டிருக்கோம்..

இங்க பாஸ்டனில் நாம இருக்கும் போது.. அட்லாண்டா நண்பர்கள் கிட்ட என்ன தினசரி பேச்சு?

ஏன் பேசினால் என்ன?

பேசக்கூடாதூன்னு சொல்லலை? ஏன் தினசரி பேச்சுன்னுதான் கேக்குறேன்?

பேசினால் என்ன தப்பு? - மறுபடியும் நானே

பேசறதூங்கறதை விடு.. நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே அப்படீன்னு சுருக்கமா சொல்லிப்பாரு...

இங்க பாஸ்டனில் வந்து இருந்து கொண்டு 1000 மைல் தொலைவில் உள்ள அட்லாண்டாவில் மனதளவில் வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்

ஏன் அப்படி செய்யணும்?

ஏன்னா.. எனக்கு இங்க பாஸ்டனில் நண்பர்கள் இல்லை..

அப்பொழுது தான் புரிந்தது என் தவறு.
அடிக்கடி அட்லாண்டா நண்பர்களுக்குப் போன் செய்வதை விட்டுவிட்டு வெளியில் சென்று பழகத்துவங்கினேன். நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. அதற்குப்பின் என் நடைமுறையில் நிறைய மாற்றங்கள். பாஸ்டனிலேயே நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இதே போக்கில் போகும் ஒவ்வொரு ஊரிலும் நிறைய நண்பர்கள்... எனக்குள் ஒரு பெரிய மாற்றமே நிகழ்ந்தது..

oOo

இதை ஏன் இப்ப எழுதினேன்? இங்க வலைப்பூவில் நிறைய நண்பர்களைப் பார்க்கிறேன்.

இவங்க எதைப் பத்தி எழுதறாங்க?

அவர்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடங்களும் செய்யும் தொழில்களும் அபரிமிதமானவை. சில பேர் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு Ph.d யெல்லாம் வாங்கியிருக்காங்க. அவர்கள் இருக்கும் இடங்களில்..அங்கு வாழும் வாழ்க்கையில் அவர்கள் அனுவங்களில் சுவையான விஷயங்கள் அதிகமாக இருக்கும். இதைப் பற்றி எழுதலாம்..

அல்லது அவர்கள் சிறு வயதில் சொந்த ஊரில் நடந்த சில் நல்ல காரியங்கள் அல்லது சந்தித்த சிறந்த மனிதர்களைப் பற்றி எழுதலாம்.

அதெல்லாம் எழுதினால் படிப்பவர்களுக்கும் அது ஒரு சிறந்த சுவையான அனுபவச் சித்திரமாக இருக்கும்.

இதெல்லாம் இங்கு கிடைப்பது அபூர்வமாகவே இருக்கிறது. அதை விட்டுவிட்டு இவர்கள் எதை எழுதுகிறார்கள்?

இவர்களே சொந்த ஊரில் இருந்தால் படித்துவிட்டு தூக்கியெறிந்துவிட்டு அல்லது மறந்துவிட்டு செல்லும் செய்திகளையும் அல்லது அங்கிருந்தால் படிக்க நேரமேயில்லாத செய்திகளையும் இங்கிருந்து படித்துவிட்டு.. அதற்கு ஒரு மணிநேரம் செலவு செய்து பதிவு எழுதி.. அதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலும் எழுத எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் பாருங்கள்...

ஏன் இப்படி?

பத்துவருடங்களுக்கு மேல் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் எழுதிய புத்தகத்துக்கு விமரிசனம் எழுதிய ஒருவர்.."தமிழகத்தில் வசிக்கும் ஒரு சராசரித் தமிழனுக்குக் தெரிந்த அளவை விட மிக அதிகமாக இந்த ஆசிரியருக்கு தமிழ்ச் சிறுபத்திரிகை அரசியல் தெரிந்திருக்கிறது" என்று எழுதினார்.

அவர் சொன்னதன் காரணம் எனக்கு என்னென்னவோ புரிய வைக்கிறது..

தமிழகத்தில் வசிக்கும், தமிழ்ப்பதிவுகளுக்கு ரொம்ப அறிமுகமில்லாத ஒருவர் சமீபத்தில் சில தமிழ்ப்பதிவுகளைப் படித்துவிட்டு என்னிடம் சொன்னது..
"இங்க இந்தியாவுல இருக்கறவனெல்லாம் வெளிநாடு போக மாட்டோமா-ன்னு கனவு கண்டுகிட்டிருக்கான். இவங்களெல்லாம் ஏதோ முன்னோர் பண்ணிய புண்ணியத்தில் அதிர்ஷ்டவசமாக வெளிநாட்டில் இருக்கும் பாக்கியம் பெற்றிருக்காங்க.. அங்க போய உட்கார்ந்து நல்ல விஷயங்களை எழுதலாமில்லே.. ஏன் இப்படி பைசா பெறாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்கிறாங்க?"

அவருக்கு என்னிடம் பதிலில்லை... யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

(பாவனா படம் ஒரு அழகுக்காகத்தான். நன்றி: விகடன்)

Friday, August 04, 2006

இந்தக் கேள்விக்கெல்லாம் யாருக்காவது பதில் தெரியுமா?

சென்னையைச் சேர்ந்த ஒரு பகதர் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் மதிப்புள்ள வைரத்தினால் செய்யப்பட்ட காதணிகளை வழங்கியுள்ளார்.

அதே பக்தர் நேற்று முன் தினம் திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோவிலுக்கு 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1008 தங்கக் காசுகளுடன் கூடிய லட்சுமி சகஸ்ரநாம தங்க மாலையை வழங்கியுள்ளார்.
இரண்டு கொடையிலும் தனது பெயர் வெளியில் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் இந்த முகம் தெரியாத பக்தர்.

இவரது பக்திக்கும் கொடைக்கும் எனது பாராட்டுக்கள்..

ஆமாம் இவர் ஏன் தன் பெயர் வெளியில் தெரிவதை விரும்பவில்லை?
1. நியாயமான தன்னடக்கம் மட்டும் தானா அல்லது தனது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி (இவ்வள்வு பெரிய பணக்காரரென்று தெரிந்தால் யாராவது அவர் குடும்பத்தினரைக் கடத்தி பணம் பறிக்க முயல்வதுடன் அவர்களது உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளதே) சொல்வதில்லையா?

2. அல்லது வருமான வரிக்கு பயந்து சொல்வதில்லையா? அப்படியானால் வருமான வரித்துறையினர் கோயிலில் வந்து யார் இந்த மாலையைக் கொடுத்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாதா? அல்லது கோயில் அலுவலகமே வருமான வரித்துறையினரிடம் "சாரி ஸார்.. எங்களுக்கே அவர் யார்ன்னு சொல்லலை.. மாலையைக் கொடுத்தார்.. போயிட்டார். அவ்ர் தமிழ் பேசினதிலிருந்து தமிழர்-னு தெரியுது. ஆனால் அவரைப் பத்தி வேற எதுவும் தெரியாது!!" அப்படீன்னு சொல்லி விடுவாங்களோ?

3. அப்படியே வருமான வரிக்கு பயந்திருந்தால் இந்த தொகையை பெருமாளுக்குக் கொடுப்பதை விட வருமான வரித்துறையினரிடம் தந்திருக்கலாமே!! ஆண்டவனும் இதையே ஆசிர்வதித்திருப்பாரென்று நம்பலாமே?

4. சென்னையிலேருந்து வந்து 2 கோடி ரூபாய்க்கு ஆண்டவனுக்கு ஆபரணம் வாங்கித் தருபவருக்கு வழி நெடுகில் உள்ள ஏழை பாழைகளும்.. சோத்துக்குக் கூடத் திண்டாடும் குழந்தைகளும் கண்ணில் படவேயில்லையா? 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஆபரணம் ஆண்டவனுக்கு வருடத்துக்கு ஒரு நாள் அணிவித்து மீதியுள்ள நாளில் பெட்டியில் தூங்குவதற்கு.. அதைவைத்து நிறைய பேருக்கு வாழ்வு கொடுத்திருக்கலாமே.. அவருக்கு ஏன் தோன்றவில்லை?

5. இவ்வள்வு பெரிய கொடை தருபவர் நிச்சயம் ஒரு தொழிலதிபராகவோ அல்லது மிகப்பெரிய கிம்பளம் வாங்கும் அரசு அலுவலராகவோ அல்லது அரசியல்வாதியாகவோ தான் இருக்க வேண்டும் (வேறெதாவதிருந்தால் சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன்). தொழிலதிபராக இருந்தால்.. தொழிலில் வரும் மிகப்பெரிய லாபமாக இருந்தால் அதைத் தன் தொழிலாளருடன் பகிர்ந்து கொண்டிருக்கலாமென அவருக்கு ஏன் தோன்றவில்லை? கிம்பளம் வாங்கும் அரசு அலுவலரெனில் அவர் லஞ்சம் வாங்குவதையே நிறுத்தியிருக்கலாமே? செய்திருப்பாரோ?


இதுவே நானாக இருந்தால் இந்தப் பணம் மூலம் நிறைய ஏழைகளை வாழ வைத்திருப்பேன்.

13 வருடங்களுக்கு முன் (1993) ஏதோ ஒரு மனக் கஷ்டத்திலிருந்த போது மயிலாடுதுறை துலாக்கட்டம் மலைகோயில் முருகனுக்கு வெள்ளியில் கவசம் செய்து போடுகிறேன் என்று வேண்டிக் கொண்டேன். அதற்காக சவுதியிலிருந்து வாங்கி வந்த 4 கிலோ வெள்ளிக் கட்டிகள் முருகன் பெயர் எழுதப்பட்டு ஒரு மஞ்சள் துணியில் சுற்றி லாக்கரில் தூங்குகிறது. அதற்குப் பிறகு நிறைய சமூகசேவைகள் செய்தாகிவிட்டது... "முதல்ல இங்க என்னைச் சுற்றியிருக்கிற மக்களை கவனி.. அப்புறம் நான் வெள்ளிக் கவசம் போட்டுக்கிறேன்" அப்படின்னு முருகன் சொல்லிட்டான் போல.. அவனுக்குத் தெரியாதா.. எப்ப எதை என் கிட்டயிருந்து வாங்கிக்கணும்-னு...

நம்ம வலைப்பதிவர் ஜிரா/குமரன் சொல்வது போல "முருகனருள் முன்னிற்கும்" முன்னின்று வழியும் நடத்தும்.

பெயர் தெரியாத/தெரிவிக்காத அந்த பக்தருக்கு இறையருள் துணை நிற்கட்டும் !!!