Wednesday, July 26, 2006

25A. இந்தக் கார்ட்டூன் நல்லா இருக்கில்ல..

இன்று ரசித்த கார்ட்டூன்...


நன்றி: குமுதம்.

Tuesday, July 25, 2006

26A. நம்ம நாட்டுல இதக கண்டுபிடிக்கிறது கஷ்டமா?


இன்றைக்கு இரண்டு செய்திகள் என் கவனத்தைக் கவர்ந்தன?

செய்தி 1: சிறுதாவூர் பங்களா எனக்குச் சொந்தமானது அல்ல. அதில் நான் வாடகைக்குத் தான் குடியிருந்தேன் - ஜெயலலிதா அறிக்கை.
ஒரு வீடு தன்னுடையது அல்ல என்றும் அதில் தான் வாடகைக்குத் தான் இருந்ததாகவும் கூறும் ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு அது பின்னர் யாருக்குத்தான் சொந்தமானது என்று கூறுவதோ அல்லது தான் எந்ததேதியிலிருந்து எந்த தேதிவரை அங்கு இருந்ததாகவும் அதன் வாடகை எவ்வளவு .. யாரிடம் தரப்பட்டது என்று சொல்ல முடியாதா? அட.. அது அவர் தான் தனிப்படையாக வாடகை தரவில்லையென்றால்.. தனது அந்தரங்க உதவியாளரிடமிருந்தாவது அந்த செய்தியை கேட்டு வாங்கித் தந்திருக்க முடியாதா? அல்லது அந்த விவரங்களையும் சேர்த்து அறிக்கையில் வெளியிட்டால் தான் பொதுமக்களுக்கு செய்தியின் பின் உள்ள நேர்மை தெளிவாகும் என்பது தெரியாதா?


செய்தி 2: சிறுதாவூர் பங்களாவின் உரிமையாளர் யார்? - ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி

தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் மாநிலத்தின் ஒரு உடமையின் உரிமையாளர் யார் என்பதை ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தனக்குக் கீழ் வரும் பத்திரப்பதிவுத்துறையைக் கேட்டு மக்களுக்குத் தெரிவிக்கக் கூடாதா? யாராவது அந்தச் சொத்துக்கு வரி கட்டித் தானேயிருக்க வேண்டும்? அப்படியென்றால் அது யார் பேரில் உள்ளது? அவர் பெயரில் எவ்வாறு எப்பொழுது பதிவு செய்யப் பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? அதைக் கண்டு பிடித்துச் சொல்லவேண்டியது அரசின் கடமையல்லவா?

அதுவும் இந்தக் கேள்வி முதலமச்சருக்கே முக்கியமான கேள்வியென்றால்.. ஏன் பத்திரப்பதிவுத்துறை மெளனம் சாதிக்கிறது?


ஜெயலலிதாவே தங்கியிருந்து வாடகை தருகிறாறென்றால் அது எவ்வளவு பெரிய சொத்தாக இருக்க வேண்டும்? அதற்கு வாடகை எவ்வளவு பெரிய தொகையாக இருக்க வேண்டும்? அதைப் பெறுபவரோ அல்லது அதன் சொந்தக்காரரின் உறவினர்களோ தமிழகத்திலோ அல்லது செய்தியெட்டும் தொலைவிலோ இருந்தால் ஏன் இன்னும் பத்திரிகைகளுக்கு பதில் சொல்லவில்லை?

இதெல்லாம் நமது நாட்டில் மிகப்பெரிய மர்மங்களா என்ன?

இதுக்கெல்லாம் computerization ஒன்றுதான் ஒரே வழி. அனைத்து உரிமைகளும்.. உடைமைகளும் computerize செய்யப்பட்டு பொதுமக்கள் (அட ..குறைந்த பட்சம் முதலமைச்சரின் அலுவலர்களாவது) எளிதில் அணுகி விவரங்களைக் கண்டுபிடிக்க வழிவகை செய்யப்பட்வேண்டும்.


நடக்கும் என்று நம்புவோம்.

(படம் உதவி: விகடன்)

பி.கு: வாசகர்களின் ஏகோபித்த வேண்டுதல்களின் பேரில் மீள் பதிவு செய்யப் பட்டது. முன்னதை ப்ளாக்கர் சாமி விழுங்கிவிட்டது.

Friday, July 21, 2006

24. இதை இப்படித்தான் பார்ககணுமுன்னு சட்டமா இருக்கு?

ச்சின்ன வயதில் பக்கத்து வீடு அல்லது எதிர் வீட்டில் யாருக்காவது அயல் நாட்டிலிருந்து தபால் வந்தால் அந்தத தபால் வந்த கவரும் அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டாம்பும் சமயங்களில் அதில் கட்டி வந்த நைலான் கயிறும் அதி முக்கியத்துவம் பெறும்.

அந்த ஸ்டாம்பை யார் பெறுவது என்று பெரிய யுத்தமே சமயங்களில் நடக்கும். இந்த சண்டைகளில் அந்த தபாலில் வந்த செய்தியோ அல்லது பொருளோ முக்கியத்துவம் இழக்கும்.

oOo

சில வீடுகளில் வாங்கி வரப்பட்ட விலையுயர்ந்த புடவையை விட அது சுற்றி வந்த ப்ளாஸ்டிக் பை மிக முக்கியத்துவம் பெறும். அந்தப் பையை மறுநாள் யார் பள்ளிக்கு எடுத்துச் செல்வது என்று குழந்தைகளிடையே ஒரு பெரிய சண்டை மண்டை உடையும். இதற்காகவே எனக்குத் தெரிந்தவர்களின் வீட்டில் ஏதாவது விலையுயர்ந்த ஜவுளியோ... நகையோ வாங்கினால் இன்னொரு ப்ளாஸ்டிக் பை கொடுய்யா-ன்னு கேட்டு வாங்குவாங்க. இந்த பெரிய சமயோசிதத்தால் ஒரு பானிப்பட் யுத்தம் தவிர்க்கப்படும்.

oOo

சமயங்களில்.. சில வீடுகளில் LKG UKG படிக்கும் பிள்ளைகள் .. அப்பத்தான் ஆங்கிலம் கற்று மழலை ஆங்கிலம் பேசும் பிள்ளைகள் சமயத்தில் ஆங்கிலத்தில்.. Sundar Uncle met with an accident.. என்று சொல்லும் போது .."ஆஹா .. என் புள்ளை இங்கிலீஷுல என்ன என்னவோ பெருசாச் சொல்லுதே.." என்று சிலாகிக்கும் பொது.. அந்தச் செய்தியில் உள்ள விபரீதம் உரைக்காமலே போகிறது.

oOo

கம்ப்யூட்டர் கன்சல்ட்டண்ட்டுகளான நாங்கள் சமயத்தில் க்ளையண்ட் இடங்களுக்கு இது போல கருத்தரங்கங்களுக்குச் செல்வதுண்டு. வாடிக்கையாளரின் குறைகளைக் கேட்டு அதற்கு வழிவகை செய்யவேண்டிய தீர்வுகளை தயார் செய்து தர ஒப்பந்தப் புள்ளி (contract or proposal) செய்து தர வேண்டியது எங்கள் கடமை.. வாடிக்கையாளரின் பிரதிநிதி அவர்கள் சிஸ்டங்களில் தற்போது உள்ள குறைகளைப் பட்டியலிட பட்டியலிட எங்கள் புன்னகை (மனதிற்குள்) சில சமயம் வெளியிலும் விரியும். ஒவ்வொரு குறையும் எங்களுக்கு சில நூறு ஆயிரம் டாலர்கள் வியாபாரம்.. வாடிக்கையாளருக்கும் அது ஒரு சோகம் ஒர் செலவு தான்.. எங்களுக்கு அது ஒரு வியாபாரமாச்சே...

oOo

John Hopkins University வளாகத்தில்.. அமைச்சர் அன்புமணி ஆற்றிய உரையும் இப்படித்தான் ஒரு க்ளையண்ட் பிரதிநிதி கன்சல்டண்டுகளுக்கெதிரே ஆற்றிய உரை தான். இந்தியாவில் நாம் நிர்ணயிக்கத் திட்டமிட்டிருக்கிற, ஒவ்வொன்றும் 250 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படப்போகிற நான்கு பொதுமக்கள் சுகாதாரம் (public health institutes) நிலையங்களுக்கு (மொத்த திட்ட மதிப்ப்ய் 1000 கோடி ரூபாய்) john Hopkins University யின் பங்கு பற்றி அன்புமணி ஆற்றிய உரை இது. அங்கு இருந்த "அயல் நாட்டு அறிஞர்கள்" புன்னகையிலும் மகிழ்ச்சியிலும் உள்ள அர்த்தத்துக்கு காரணமாக மேலே சொன்ன பத்தியைப் படியுங்கள்...

அந்த உரையில் இந்தியாவின் பிரச்ச்சினைகளாக அவர் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றும் "அம்மாவுக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் .. அதற்கு 30 லட்ச ரூபாய் பணம் வேண்டும்.. இந்த வருட இறுதியில் எனக்கு 5000 ரூபாய்க்கு செக் வரவேண்டியிருக்கிறது" ரகம்.

ஒவ்வொரு புள்ளி விவரமும் உண்மையாகவே 'பகீர்' ரகம். அந்த வீடியோவை ஒரு மணி நேரம் பார்த்த போது எனக்கு நமது நாட்டின் தற்போதைய தேவையை நினைத்து கவலையாக இருந்தது.. ஒரு பெருமூச்சு தான் வந்தது..

சில பேருக்கு அவர் பேசிய ஆங்கிலமும்.. அவர் மொழிப்புலமையும் ..அவர் பார்க்காமலேயே சொன்ன புள்ளிவிவரங்களும் பெருமையாக இருக்கின்றன.

இங்கு நான் அமைச்சர் அன்புமணியைக் குறை கூறவில்லை.. தபால் அனுப்பியவர் சரியாகத்தான் அனுப்பினார்.. நாம் தான் அதில் ஒட்டியிருக்கிற ஸ்டாம்புக்கும் கட்டி வந்த ப்ளாஸ்டிக் கயிறுக்கும் பெருமைப் பட்டுக் கொள்கிறோம்...

சில பேருக்கு ப்ளாஸ்டிக் பை முக்கியம்.. சிலருக்கு அதில் வந்த பொருள் முக்கியம்..

சிலருக்கு குழந்தை பேசும் ஆங்கிலம் பெருமை.. சிலருக்கு.. அது சொன்ன Sundar Uncle met with an accident ல் சொல்லப்பட்ட சுந்தர் மாமாவின் உடல் நிலை எப்படியிருக்கிறதோ என்ற கவலை முக்கியம். நான் இரண்டாவது ரகம் தான்.. நம் நாட்டில் இது போன்ற விஷயங்களில் பலர் எப்பொழுதுமே முதல் ரகமாகவே இருக்கிறார்கள்...

இதை இப்படித்தான் பார்க்கணுமுன்னு சட்டமா இருக்கு?

Thursday, July 20, 2006

23. அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவை உரையாற்றிய நமது அமைச்சர்...

இந்தியா போன்ற ஒரு பெரிய குடியரசின் சுகாதார அமைச்சர் அமெரிக்கா வந்திருந்து ஒரு பெரிய பலகலைகழகத்தில் ஆற்றிய உரை குறித்தான பதிவு.
ஒரு அன்புமிகு நண்பர் இதைப் பதிந்ததற்கான காரணத்தை இங்கு இவ்வாறு கூறுகிறார்.


  • காரணம் நம் தமிழ் பத்திரிக்கைகள் நம் தமிழரின் பெருமைகளை சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைக் கொடியில் உள்ள தமிழனுக்கு செய்திகளை தருவது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி மத்திய அமைச்சர் அன்பு மணியின் செயல் பாடுகளை தெரிந்து கொள்ள ஆசைப் பட்டால் அவனுக்கு தெரிய படுத்துவது நம் தமிழ்ப் பத்திரிக்கைகளின் கடமை  • அமைச்சர் அன்புமணி John Hopkins University School of Medicineல்ஓர் கருத்து அரங்கிற்கு வந்து இருந்து, இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பற்றி பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் அழகு ஆங்கிலத்தில், தெளிவாக, அமைதியாக எந்த ஓர் ஆர்பாட்டம் இல்லாமலும் உரையாற்றினார். அதாவது தமிழகத்தில் இருந்து வந்த ஓர் மத்திய அமைச்சர் அழகு ஆங்கிலத்தில் எல்லோருக்கும் புரியும் வண்ணம், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்குப் பிறகு இவரைத்தான் நான் பார்க்கிறேன். அவருடைய பேச்சின் பொழுது ஒரு முறை கூட எந்த குறிப்புகளையும் அவர் சரி பார்த்துக் கொள்ளவில்லை. அதுமட்டும் அல்ல, அனைத்து புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்து இருந்தார். சில சில இடங்களில் நகைச் சுவையாகவும் பேசினார். அங்கு வந்து இருந்த அனைத்து மக்களும் நிரம்ப படித்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், மாணவர்கள் அனைவரும் அவருடைய பேச்சை மிக ரசித்தார்கள். மொத்ததில் அந்த 3 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. ஓர் தமிழனாக அன்பு மணியின் செயல் பாடுகளில் பெருமைப் பட்டு கொள்ள நிறைய இருக்கிறது

அமைச்சர் அன்புமணி அவர்கள் பேசிய பேச்சின் முக்கியத்துளிகள் என John Hopkins University வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரையிலிருந்து சில குறிப்புகள்:

  • இந்தியாவிலே ஏறக்குறைய 52 லட்சம் இந்தியர்கள் எய்ட்ஸ் நோயினால் (HIV வைரஸால்) பாதிக்கப் பட்டிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் ஒரே ஒரு லட்சம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அடையாளம் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
  • AIDS பரிசோதனை செய்து கொள்ள மக்கள் முன்னுக்கு வரமாட்டேனென்கிறார்கள். ஏனென்றால்.. தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று சமூகத்துக்குத் தெரிவிப்பது ஒரு கெளரவக் குறைவு என்று நினைக்கிறார்கள்
  • குறைந்த பட்சம் 30 லட்சம் காப்புறை விற்கும் கருவிகள் இந்தியாவிற்குத் தேவை. இந்த வருட இறுதிக்குள் ஒரே ஒரு லட்சம் கருவிகள் மட்டுமே நிறுவப்படலாமென்று அரசு நம்புகிறது.
  • இந்தியாவுக்கு குறைந்த பட்சம் 50,000 ஒருங்கிணைந்த பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள் தேவை. தற்போது வெறும் 2300 மட்டுமே உள்ளது.
  • மொத்தம் 620,000 கிராமங்களில் எய்ட்ஸ் பற்றி ஆலோசனை சொல்லக்கூடிய சமுக சேவகர் தேவை. ஆனால் நம்மிடம் வெறும் 88,000 சமூக சேவகர்கள் மட்டுமே உள்ளனர்.

நமது நாட்டின் மத்திய சுகாதார அமைச்சரின் முன்னால் எவ்வளவு பெரிய ப்ரச்சினை இருக்கிறது?

இங்கே அமெரிக்காவில் விஞ்ஞானிகள் மட்டும் பல தரப்பட்ட முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் பேசும் போது எவ்வளவு பெரிய பொறுப்புடன் கலந்தோலோசித்து அவர்களிடமிருந்து திட்டங்களையும் நிதியையும்.. ஆலோசனைகளையும் பெற்றிருக்க வேண்டும்?

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சரிடம் எந்தவொரு குறிப்பும் இல்லை.. எந்தக் குறிப்பையும் பார்க்காமல் "அழகு ஆங்கிலத்தில் நகைச்சுவையுடன்" பேசினார் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு பொறுப்புள்ள படித்த இந்தியக் குடிமகன் எழுதுகிறார். !!!!!

நகைச்சுவையுடன் பேசக்கூடிய ப்ரச்சினையையா பேசியிருக்கிறார் ? ஒர் பொறுப்புள்ள அமைச்சராக நிறைய குறிப்புக்களுடனும் கவலையுடனும் ஆதங்கத்துடனும் அல்லவா பேசியிருக்கவேண்டும்.

"பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி" க்கு "நம்ம ச்சின்ன அய்யா அமெரிக்காவில் 40 நிமிடம் ஆங்கிலத்தில் புத்தகத்தைப் பார்க்காமல் பேசினார்" என்பது தெரிந்தால் போதுமா? அதுவா பெருமை இங்கு?

அவர் ஆங்கிலத்தில் 40 நிமிடம் குறிப்பைப் பார்க்காமல் பேசியது என் பெருமை கிடையாது. அவர் ஆங்கிலத்தில் வேண்டுமானாலும் பேசட்டும்.. தமிழ்.. தெலுங்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசட்டும்.. எனக்கு அவர் மொழிப்புலமை பற்றியோ அவர் மொழியார்வம் பற்றியோ எனக்குக் கவலையில்லை.. அவர் என்ன பேசினார்.. எப்படி பேசினார்.. என்பது தான் எனக்கு முக்கியம். நமது நாட்டின் முன்னேயுள்ள ப்ரச்சினையையும் அதன் தீவிரத்தையும் எவ்வளவு தூரம் அயல் நாட்டு அறிஞர்கள் மற்றும் கொடையாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் என்பது முக்கியம். அவர் கையில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை எவ்வளவு கவனமாகக் கையாளுகிறார் என்று மக்கள் மனதில் அவர் ஏற்படுத்தவேண்டிய தாக்கம் முக்கியம்.

அமைச்சர் அன்புமணியின் மேல் எனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவர் மேல் எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு முக்கியமில்லை.. என் நாட்டு மக்களுக்காக அவர்களின் சுகாதார முன்னேற்றத்துக்காக அவர் என்ன செய்யப்போகிறார் என்பது தான் எனக்கு முக்கியம்.

இதே அன்புமணி அவர்கள் நமது மக்களிடமோ அல்லது கருத்தரங்கிலோ " குறைந்த பட்சம் 30 லட்சம் காப்புறை விற்கும் கருவிகள் இந்தியாவிற்குத் தேவை. இந்த வருட இறுதிக்குள் ஒரே ஒரு லட்சம் கருவிகள் மட்டுமே நிறுவப்படலாமென்று அரசு நம்புகிறது. ஒரு கருவி ஒரு இடத்தில் நிறுவ 200 டாலர் செலவாகிறது.. இங்கு கூடியுள்ள ஒவ்வொரு பொறுப்புள்ள இந்தியனும்... இந்தியாவின் ..இந்தியர்களின் சுகாதாரத்தின் மேல் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஒரேஒரு கருவிக்காவது பொறுப்பேற்க வேண்டும் என்று பொறுப்புடனும் ஆதங்கத்துடனும் கேட்டிருந்தால் இந்நேரம் ஒரு ஆயிரம் கருவிகளுக்காவது நன்கொடை வந்திருக்காதா? நான் மட்டுமே ஒரு பத்து கருவிகளை நிறுவ நன்கொடை வசூலித்திருக்க முயலமாட்டேனா? அமைச்சரின் மேல நான் தான் எவ்வளவு பெருமைப் பட்டிருப்பேன். பத்திரிக்கைகள் தான் எவ்வளவு பெருமைப் பட்டிருக்கும்?

அன்பு நண்பர் சிவா.. உங்கள் மேல் எனக்கு எந்த கோபமும் கிடையாது. நாமிருவரும் மயிலாடுதுறை தான்.. நாமிருவரும் சென்றவருடம் இதே நேரத்தில் மணிக்கணக்கில் உரையாடியிருக்கிறோம். தயவு செய்து இதை உங்களை நோக்கிய ஒரு தனிமனித தாக்குதலாக நினைக்காதீர்கள்.. இது உங்களை நோக்கியது அல்ல. இது என் மனதின் ஆதங்கம் மட்டுமே.

அன்பு வலைப்பதிவு தோழர்களே.. தயவு செய்து இதில் கட்சி மட்டும் சாதி சார்ந்த குறுகிய வட்டத்துக்குள் அடைக்காதீர்கள்.

பின்குறிப்பு: இந்தக் குறிப்பு, பதிவை எழுதியபின்பு, அமைச்சர் அன்புமணி அவர்களின் பேச்சின் முழு வீடியோப் பதிவைப் பார்த்தபின்பு எழுதப்பட்டது.

அமைச்சர் அவர்களின் பேச்சு மிகப் பொறுப்பான முறையிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. அவரின் முழுப் பேச்சின் வீடியோவையும் பார்த்தேன். மிகச் சிறப்பான முறையில் பேசியிருக்கிறார். குறிப்புக்களையும் அவ்வப்பொழுது பார்த்து கவனமுடன் தெளிவாகப் பேசியிருக்கிறார். அமைச்சரவர்களுக்கு என் மனங்கனிந்த பாராட்டுக்கள்.

அவர் பேச்சின் முழு வீடியோப் பதிவும் இங்கு உள்ளது

http://commprojects.jhsph.edu/_media/india_presentation_hi.ram

- சீமாச்சு.

அமைச்சர் அன்புமணியின் பேச்சு குறித்து நண்பர் சிவாவின் பதிவு

Monday, July 10, 2006

22. ஏன் யாருமே இதைப்பத்தி எழுதலை ?

ஆமா.. யாராவது தமிழ் வலைப்பதிவர்கள் இதைப்பத்தி எழுதியிருப்பாங்க-ன்னு காலையிலேருந்து காத்திருந்தேன்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை அனுப்பப்பட்ட GSLV F2 தோல்வியடைந்துவிட்டது. அதற்கு முதல் நாள் அனுப்பப்பட்ட அக்னி-3ம் தோல்விதான்.

GSLV தோல்வியால் மட்டும் 1000 கோடி ரூபாய் நஷ்டம்.

அடுத்தமுறை நாம் மறுபடியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கை தவறாமல் விஞ்ஞானிகள் அயராது முயலவேண்டும்.. வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

oOo

இதெல்லாம் பார்த்தால்.. எங்க கம்பியூட்டர் தொழில்ல இது போன்ற பெரிய பாதிப்பெல்லாம் கிடையாது. சமயத்துல ஒரு பெரிய project implementation தோல்வியடைந்து பெரிய நஷ்டமெல்லாம் வருவதுண்டு.. இருந்தாலும் பெரிய நஷ்டங்கள் 5 வினாடி 15 வினாடியில் நடப்பதென்பத்ல்லாம் எங்கள் தொழிலில் கிடையாது..

ப்ரொக்ராம் தப்பானா.. சர்வர் வெடித்து சிதறும் என்பது மாதிரி விபரீதங்களிருந்தால்.. இப்ப அங்கங்கே நிமிடத்துக்கு நாலு வெடிச்சிக்கிட்டிருக்கும். நல்ல வேளை அப்படியெல்லாம் இல்லை.. நாம பொழச்சோம்..

Saturday, July 08, 2006

21. இராவணன்.. இராமர் கிட்டே.. ஏன் தோத்தார் .. தெரியுமா?

1985..
நான் மயிலாடுதுறையில்.. கல்லூரியில் M.Sc. (கணிதம்) படித்துக் கொண்டிருந்த காலம். எனது நண்பர்கள் எல்லோருமே ஒரு ஒரு விதத்தில் ஒரு மாதிரியானவர்கள். அவர்களைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்..

சாம்பிளுக்குச் சொன்னால்., நம்ம வீர படையாச்சி சிவகுருநாதனைச் சொல்லலாம். அவனுக்குத் தான் ஒரு "வீரபடையாச்சி" என்பதில் ஏகத்துக்குப் பெருமை. அப்பொழுதுதான் இராமதாஸ் வன்னிய சங்கம் ஆரம்பித்து கொஞ்சம் வெற்றியடைய ஆரம்பித்திருந்ததால்.. அவனுக்கு அந்த பெருமை வேறு..யாரையாவது பத்தி ..ஏதாவது சொன்னாலும் .. "அவனை ஆஃப் பண்ணனும் மாப்பிள்ளே.. ரொம்ப துள்ளறான்.." அப்படீன்னு.. உடனே உலைச்சோறு கணக்கா கொதிக்க ஆரம்பித்துவிடுவான்... அப்பப்ப அங்க இங்க போய் ஏதாவது வம்பு தும்பை விலைக்கு வாங்கி வருவதுதான் இவன் வாடிக்கை... இவனை மாதிரி நிறைய "திராவிட ராஸ்கோல்கள்" நமது நண்பர்கள்..

சில நண்பர்கள் படிக்காதவர்கள்... இருந்தாலும் காலேஜ் பசங்ககூட ப்ரெண்டா இருந்தால் அவங்களுக்குப் பெருமை-ன்னு நம் வட்டத்தில் நட்பு பாராட்டி வருபவர்கள். அடிக்கடி நழுவும் ஒரு பாலியெஸ்டர் வெள்ளை வேட்டி அத்துடன் கொஞ்சம் பளபளப்புடன் கூடிய மஞ்சள் அல்லது கருநீல சில்க் சட்டை (இது அந்தக் காலத்தில் ரொம்ப பேமஸ்) இதுதான் சிலரின் காஸ்ட்யூம். சைக்கிளில் தான் வருவார்கள். சைக்கிள் ஒட்டும் போது வேட்டியைத் தொடை தெரிய மடித்துக் கட்டிக்கொள்ளவேண்டும். அப்பத்தான் அவங்களுக்கு ஒரு கெத்து (இது என்ன மொழி வார்த்தைங்க..).

அக்ரஹாரத்தில் இப்படி பலவிதமான ஆட்கள் வீட்டுக்கு நம்மைத் தேடிவருவதால் எனக்கே என் தெருவில் ஒரு மாதிரியான பேருதான்.. அது போகட்டும்.. விடுங்க...

oOo

இப்படி நண்பர்கள் இருந்தால் சண்டை வராமல் இருக்குமா.. வந்ததே..குழு இரண்டாக உடைந்தது. வழக்கமான சண்டைகளை விட கொஞ்சம் பெரிய சண்டை... அடிதடி.. எளிதில் உணர்ச்சி வசப்படும் நண்பர்களாதலால்.. அங்கு ஒரு நியாயமான தர்க்கத்துக்கே இடமில்லாமல் போய்விட்டது..

முட்டி மோதி சண்டை மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து நின்றது..
ஒரு வியாழக்கிழமை மாலை 7 மணி...
ஒருத்தருக்கு ஒருத்தர் மாற்றி மாற்றி புகார் சொல்லிக் கொண்டு... எல்லோரும் சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் அலுவலக வாசலில் கூடிக் கூடி பேசிக்கொண்டிருந்தோம். .... சப் இன்ஸ்பெக்டர் கொஞ்சம் பிஸி.. அதனால் நாங்களே அவர் கவனத்துக்காக காத்திருந்தோம். என்னதான் தீர்வு என்பது இன்னும் எங்களுக்கே தெரியவில்லை..

அங்கிருந்த ஒரு எழுத்தர்.. அவர் பெயர் தெரியவில்லை... எங்களை ஆரம்பத்திலிருந்தே மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்...மெதுவாக எழுந்து எங்கள் அருகில் வந்தவர்.. எங்களில் முக்கியமாகப் பட்டவர்களை ஒரு ஓரமாக ஓட்டிக் கொண்டு வந்தார்..

"தம்பிங்களா.. இப்படி வாங்க.."

"ஐயா கொஞ்சம் பிஸியாக இருக்காங்க.. நீங்கள்ளாம் கொஞ்சம் எங்க கூட வெளியே வரீஙகளா.."

எங்களை ஓட்டிக் கொண்டு வெளியே வந்தவர்.. அங்கே அருகாமையில் உள்ள ஒரு டீக்கடையின் வெளிப்புறத்துக்கு அழைத்துச் சென்றார்..

"அண்ணே.. தம்பிக்கெல்லாம் ஒரு டீ போடுங்க.."

சட்டைப் பையிலிருந்து பணம் எடுக்கப் போன என்னைக் கையமர்த்தி..
"நீ தரவேணாம் தம்பி... நானே கொடுத்திருவேன்.. கவலைப் படாதீங்க..

படிக்கிற புள்ளைங்க கிட்டேருந்து நான் காசு வாங்கறதில்லை தம்பீ... உங்ககிட்ட காசு வாங்கினால் அது உங்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாப் போயிடும்.. தயவு செஞ்சு பணத்தை உள்ளே வையுங்க.. எங்களுக்கெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சால் உங்களுக்குக் கட்டுப்படியாவாது.."

எழுத்தர் என் மதிப்பில் அதிகவே உயர்ந்தார்..

'அப்புறம் தம்பீங்களா.. யார் யாரு என்னென்ன படிக்கிறீங்க.."

அங்கிருந்த எங்கள் டென்சனைக் குறைப்பதற்காக சில சம்பிரதாயமான கேள்விகள்... எல்லோர் வயிற்றிலும் சூடான டீ இறங்கி ஒரு மிதமான மனநிலையைக் கொடுத்திருந்தது..

எழுத்தர் தொடர்ந்தார்..

"எல்லோரும் ராமாயணம் படிச்சிருக்கீங்களா..?"
"இராவணனுக்கு எத்தனை தலை?.. எத்தனை கைகள்? 10 தலை இருபது கைகள்.."
"அவன் சிறப்பு தெரியுமா..? அவன் ஒரு பெரிய சிவ பக்தன்..கைலாய மலையையே ஒரு கையால தூக்க முயற்சி பண்ணினவன்.."

"தினமும் காலையிலே 8 திசையானைகளோட சண்டை போட்டு ஜெயிச்சு பயிற்சி செய்பவன்.. "
"இராவணனைப் பத்தி இன்னும் நிறைய சொல்லலாம்.."

"இராமன் யாரு தெரியுமா ? உன்னையும் என்னையும் மாதிரி ஒரு சாதாரண மனுஷன்.. அவருக்கு ரெண்டு கை .. ரெண்டு கால்.. ஒரு தலை.. அவ்வளவுதான்.."

"இப்படியிருந்த இராமன் இராவணனை ஏன் ஜெயிச்சாருன்னு நீங்க யாராவது சொல்ல முடியுமா..?"

"ஏன்னா.. இராமர் ஒரு சாமி சார்.." - எங்களில் ஒரு முந்திரிக் கொட்டை..

எழுத்தர் தொடர்ந்தார்..

"அது தான் இல்லை.. இராவணனின் எல்லா பலங்களும்... பலவீனங்களும்.. இரகசியங்களும் தெரிந்த அவனின் தம்பி விபீஷணன்.. அவனிடமிருந்து பிரிஞ்சி... இராமர் பக்கம் வந்து சேர்ந்துட்டான்.."

"விபீஷணன் மட்டும் அப்படி வந்து சேரலைன்னா.. இராமர் ஜெயிச்சிருகிறது சந்தேகம் தான்.."
"நீங்க இப்போ சண்டை போட்டுக்கிறது யார் கூட..? இத்தனை நாளு உங்க கூட தாயா புள்ளையா பழகிக்கிட்டிருந்து உங்களைப்பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கிற உங்க ப்ரெண்டுங்க கூடத்தான்.."

"அப்படியிருக்கும் போது யார் ஜெயிச்சாலும் தோத்தாலும்... வலிக்கப்போறது எல்லாருக்கும்தான்.... அப்படியே நீங்க ஜெயிச்சாலும் அதுக்கு நீங்க கொடுக்க வேண்டிய விலை உங்களோட இந்த மாண்வப்பருவத்துல ரொம்ப பெருசா இருக்கும்..'

...
...
இப்படியே தொடர்ந்தார் அந்த தெய்வம்...

அவர் பேசப் பேச நாங்கள் செய்த தவறு எங்களுக்கு உறைத்தது..

"இனிமே நீங்க படிக்கிற காலத்துல் இந்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் வராதீங்க...

நீங்களெல்லாம் இங்க வரக்கூடாதுன்னுதான் எங்க ஆசையே...

உள்ள போயி ஐயா கிட்ட நாங்களெல்லாம் ராசியாயிட்டோம ஐயா.. ன்னு சொல்லிட்டு.. பத்திரமாக வீட்டைப்பாக்கப் போய் சேந்துக்குங்க...
"

செஞ்சோம்.. மந்திரத்துக்குக் கட்டுண்ட பூனை மாதிரி.. மனசெல்லாம் பூக்களாக கொஞ்ச காலம் திரிஞ்சோம்...
வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய தத்துவத்தை அன்று அந்த போலீஸ்காரர் எனக்குப் புரியவைத்தார்..

அவர் யாரென்று எனக்கு இன்று நினைவில்லை.... அவர் யாராயிருந்தாலும்.. என்னை ப்பொறுத்த வரை ஒரு மாதிரி மனிதன்....

oOo20. வியக்க வைக்கும் குழந்தைகள்..

பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு.. சரி இன்னிக்கு ஒரு குட்டி பதிவு போடலாம்-னு தான்..

சமீபத்தில் என்னை வியக்க வைத்த் இரண்டு குழந்தைகள்.

0Oo

நியூ ஜெர்சியில் வசிக்கும் என் நண்பரின் மகன் ஐந்து வயது ஸ்ரீகாந்த். பிறக்கும் போதே ஒரு கையில் கம்ப்யூட்டர் கீ போர்டும் இன்னொரு கையில் மெளசும் வைத்துக் கொண்டு பிறந்தவன்...

மாலையில் பள்ளி விட்டு திரும்பியவன் புஸ்தக மூட்டையை (நாங்க அப்படித்தான் ச்சின்ன வயசில் சொல்லுவோம்) விசிறி எறிந்து விட்டு விளையாடப் போய்விட்டான்.

மாலை 7 மணி....

"ஸ்ரீகாந்த்.. புத்தகப்பையை எங்க வெச்சே?" , அம்மா

"தெரியாதும்மா.. இங்க தான் எங்கேயோ வெச்சேன்.."

"அதை முதல்ல தேடி எடுத்துட்டு மத்த வேலையைப் பாரு.."

அப்புறம் மெளனம்..

பையன் மும்முரமாக கம்ப்யூட்டரில் ..

தேடாமல் என்ன செய்கிறான் என்று கோபத்துடன் போய்ப்பார்த்த அம்மாவுக்கு ஆச்சரியமும் சிரிப்பும்.

பையன் www.google.com தளத்திற்குச் சென்று Where is my school bag என்று தேடிக் கொண்டிருந்தான்..

!!!!!!!

0O0

கண்ணீர் விட்டுக் கொண்டே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த என் மனைவியைப் பார்த்து என் மூன்று வயது இளைய மகள் (சூர்யா) கண் கலங்கி அனுதாபத்துடன் கேட்ட கேள்வி.

"Is Vengayam hurting your feelings mommy?"

oOo