Sunday, December 19, 2010

107. துறவியும் துளைகளும்..

விழுப்புரம் : கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரத்தில் நடந்த அனைத்து முதலியார், வேளாளர் முன்னேற்றப் பேரவையின் நான்காம் ஆண்டு நல்விழா கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ஜாதி உணர்வு அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஒன்று. ஜாதி தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளை அரசியல் கட்சிகளால் ஒரு போதும் ஒழிக்க முடியாது. ஒரு ஜாதி மற்றொரு ஜாதியோடு மோதிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மனிதனுக்கு பக்குவம் ஏற்பட அனுபவம் தேவை. பக்குவம் வரும் போது ஞானம் வருவதால் உயர்வு பெறுகிறான்.முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள். கல்வி, வேலை வாய்ப்பில் முதலியார் மற்றும் பிள்ளைமார் உட்பட 153 ஜாதியினருக்கும் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒவ்வொருவரும் பெயருக்கு பின்னால் ஜாதிப் பெயரை சேர்த்து போடுங்கள். பிறக்கும் குழந்தைகளுக்கும், பள்ளியில் சேர்க்கும் போதும் பெயருக்கு பின் ஜாதி பெயரை சேர்த்து வையுங்கள். அப்போது தான் அவர்கள் பிற்காலத்தில் தான் பிறந்த ஜாதியை உயர்த்த பார்ப்பர்.

அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யும் போது 153 ஜாதிகளையும் ஒருங்கிணைத்து, "முதலியார் வேளாளர்' என்று ஒரே பட்டியலில் பதிவு செய்யுங்கள். சங்க நிர்வாகிகள் நன்கொடை வசூல் செய்து அதில் துவங்கும் தொழில்களுக்கு நம் ஜாதியை சேர்ந்தவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துங்கள். உங்கள் பிள்ளைகளை ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக வர முயற்சி செய்யுங்கள். இவ்வாறு மதுரை ஆதீனம் பேசினார்ஓரு துறவியின் வேடம் பூண்டு .. சமுதாயத்தின் சீர் கேடான, ஜாதி உணர்வைத் தூண்டும் வழியில் பேசிய மதுரை ஆதீனத்தைக் கண்டிக்கிறேன்.. 153 ஐக் கூட்டினால் 9 வருகிறதாம்.. அதனால் அது உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கிறதாம்.. "I love you " என்று சொல்வதற்கு 143 என்றும் குறியீடு உண்டு .. அதற்கு என்ன சொல்வாரோ..-


Wednesday, December 15, 2010

106. சீமாச்சுவின் தாம்பூலம் - 15 டிசம்பர், 2010

சமீபத்தில் இந்தியா சென்று வந்தது ரொம்ப குறுகிய கால விஜயமாக மனதில் படுகிறது. போனதென்னவோ 4 வாரங்களுக்கு.. மழையும் என் ஆசை மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப் பள்ளிக்கூடமும் என்னை மயிலாடுதுறையிலேயேக் கட்டிப் போட்டுவிட்டன.


அக்டோபர் 30 விடிகாலையில் சென்னை விமான நிலையத்தில் ஆசைஆசையாக இறங்கி ஆசை ஆசையாக டூட்டி ஃப்ரீ கடைக்குள் நுழைந்து ஆசை ஆசையாக பாட்டில்களை அள்ளிக் கொண்டேன். லக்கேஜுக்காக பெல்ட் அருகில் காத்திருக்கும் போது ”சீமாச்சு அண்ணா.. என்ன தண்ணி வாங்கிட்டீங்களா?” என்று ப்ழக்கப்பட்ட குரலை அருகில் கேட்டாலும் ஒரு உலகறிந்த பிரபலமாக (!!!) இருப்பதின் அவஸ்தை அப்பொழுதுதான் புரிந்தது. பக்கத்தில் பார்த்தால் நம்ம என்னால் இணைய ஆழ்வார் என்று அன்பாக அழைக்கப்படும் ‘மாதவிப்பந்தல்’ கேயாரெஸ். அவருடன் அளவளாவியதில் காத்திருந்த நேரம் அதிகமாகத் தெரியவில்லை. அவரை வரவேற்க வந்திருந்த குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி..

oOo

இருபது வருடங்களாக வருடத்துக்கு ஒரு முறை சில வாரங்கள் இந்தியா வந்து போயிருந்தாலும் சில விஷயங்கள் நான் செய்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. முக்கியமாக கடைத்தெருவுக்குச் சென்று எந்தப் பொருளையும் விலை கேட்டு வாங்கி கையிலிருந்து காசு கொடுத்ததில்லை. மூர்த்தி அண்ணன் புண்ணியத்தில் நான் ஒரு பொருள் பக்கம் திரும்பி 10 வினாடிகளுக்கு மேல் உற்றுப் பார்த்தாலே அந்தப் பொருள் பேக் செய்யப்பட்டு நான் போவதற்கு முன்னாடியே வீட்டில் இருக்கும்.

இந்த முறை அண்ணனிடம் பிடிவாதமாகப் பேசி (“இதெல்லாம் உனக்கெதுக்கு சீனா.. “) கடைத்தெருவுக்குச் சென்று விலைகள் விசாரித்ததில் கிட்டத்தட்ட மயக்கம் வராத குறைதான்.. (ஒரு முழ மல்லிகைப்பூ 15 ரூபாய், வீட்டில் ஒரு சிறிய விசேஷத்துக்கு வாங்கிய பூ மட்டும் மூவாயிரம் ரூபாய், பழம் இரண்டாயிரம் ரூபாய், ஸ்வீட் கார வகைகள் மூவாயிரம் ரூபாய்..) “ஆண்டவரே.. கீழ் நடுத்தரமக்கள் ( என் குடும்பம் 1990 வரை இருந்த இருந்த பொருளாதார நிலை கனவுபோல் வந்து போனது.. இப்பொழுதும் ஒண்ணும் கலைஞர் குடும்ப அளவிலெல்லாம் இல்லை தான்..இருந்தாலும்..) எல்லாம் எப்படி இந்த விலைவாசியில் குடித்தனம் நடத்துகிறார்கள் என்று ஆயாசமாக இருந்தது..

பாண்டி பஜாரில் பக்கத்திலேயே நடந்து வந்த நம்ம பதிவர் உண்மைத்தமிழன் ஆதரவாக.. “இதெல்லாம்.. இப்பல்லாம் அப்படிதாண்ணே..” என்று என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டே வந்தார்..

அப்படி செய்ய நினைத்த இன்னொரு விஷயம் பஸ்ஸில் போவது.. அரசு/தனியார் பேருந்தில் பயணம் (நாங்களெல்லம் ட்ரெயின் தான்) செய்து 8 வருடங்களாயிருந்தன.. கடைசியாக இதேபோல் ஆசைப்பட்டு 2002ல் போய் வந்ததுதான். இந்த முறை சென்னை - பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி - கடலூர், கடலூர் - சிதம்பர்ம், சிதம்பரம் - மயிலாடுதுறை ஒரே நாளில் பயணம் செய்தத்தில் பல வகைப்பட்ட அனுபவம்..


சென்னையில், நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் நண்பரொருவருடன் சென்னையிலிருந்து மயிலாடுதுறை பஸ் பயணம் என்று சொல்லி முடிவானதுடன் .. “கோயம்பேடு போகலாண்ணே..” என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே.. “அங்கெல்லாம் வேணான்ணே.. பில்லர் போயிடுங்க.. அங்கேருந்து ECR ரோட்டில் பாண்டி போக ஏஸி/ வீடியோ கோச் (இதுவரை வீடியோ பஸ்ஸில் பார்த்ததில்லை) வண்டி நிறைய கிடைக்கும் “ என்று இனிப்புத் தடவி சொன்னாரு இன்னொரு ‘அண்ணன்’. அவர் செய்தியை நம்பி பில்லர் போய் பஸ்ஸுக்கு நின்றோம்..

என் நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.. “சூப்பர் டீலக்ஸ் (அது போல ஏதோவொன்று) வீடியோ கோச்” என்று போட்ட ஒரு பஸ் ஒரு 20-30 பயணிகளுடன் வந்தது. எங்களை ஏற்றி விட வந்திருந்த நண்பர்களிருவரில் ஒருவர் ஒரு விவகாரமான கோணச் சிரிப்புடன் எங்களை ஏற்றி விட்டார்.. அப்பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்.. கொஞ்சம் இருட்டான மாலை ஆறு மணி வாக்கில் நான் உணர்ந்த் போது தான் பஸ் 20 கிமீ வேகத்தில் ECR ரோட்டில் ஊர்ந்து கொண்டிருந்தது.. பஸ்ஸ்லிருந்து ஒரு பலகீனமான ஒரு ஒட்டை உடைசல் சத்தமும் வந்து கொண்டிருந்தது.. பஸ்ஸிலிருந்த சக பயணிகளெல்லாம் முணு முணுத்துக் கொண்டிருந்தார்கள்... கொஞசம் பலமாக (மிகப் பலமாகவெல்லாம் இல்லை) சவுண்டு விட்டுக்கிட்டிருந்த பார்ட்டி..”வண்டியே மோசமான வண்டிதாங்க.. டிரைவருக்குச் சரியாக் கண்ணு தெரியலை போல.. அதனால ரொம்ப நிதானமா ஒட்டுறாருங்க.. இங்க பாருங்க எதுத்தாப்பல லைட் போட்டுக்கிட்டு இன்னொரு பஸ் வந்தாலே ஒரம் கட்டிடடறாரு பாருங்க” என்று எனக்கு பயண வரலாறு சொல்லிக்கிட்டிருந்தார்..

யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. கையிலும் எந்த மாற்றும் இருப்பதாகத் தெரியவில்லை..

சாதாராணமான பஸ்ஸில் போயிருந்தால் 7:30க்கெல்லாம் பாண்டி போய்ச் சேர்ந்திருக்கலாமாம்.. இப்பொழுது இவர் போகும் வேகத்தில் போய்ச்சேர 9 மணியாகும் போலருந்த்து.. அப்புறம் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை போய்ச் சேர நள்ளிரவு தாண்டி இர்ண்டு மணியாகலாம்... பொறுமை எல்லை மீறிக்கொண்டிருந்தது.. எனக்கு மட்டுமல்ல...

கண்டக்டரை அருகில் அழைத்தேன்..

“அண்ணே .. உங்க பேரென்னங்க..?”

“ஜெயக்குமார் சார்..”

“இப்போ பக்கத்துல பார்த்தீங்கள்ள.. ஒரு ஆ...ட்..டோக்காரன் நம்ம பஸ்ஸை முந்திக்கிட்டுப் போறாரு...”

“ஆமாம் சார்.. என்ன பண்றது..” - பொறுப்புடனும் பொறுமையுடனும் பதில்கள் தந்தார்..

“என்ன பிரச்சினைன்னு எனக்காவது கொஞ்சம் சொல்லுங்களேன்.. வண்டியில ஏதாவது பிரச்சினையா..?”

“வண்டியிலும் பிரச்சினை தான்.. ஆனால் சமாளிச்சிரலாம்.. ஆனா நம்ம டிரைவர் அடுத்த வருஷம் ரிட்டயராவுராரு சார்.. கண்ணு சரியாத் தெரியமாட்டேங்குதாம்.. நான் இப்பத்தான் முதன் முறை அவரு கூட வர்றேன் சார்.. மத்தியானமெல்லாம் சரியாத்தான் ஓட்டினாரு.. இப்பத்தான் இப்படி.. எனக்கே இப்பத்தான் தெரியும் சார்..”

“அவருக்குக் கண்ணு சரியாத்தெரியாதது தெரிஞ்சும் எப்படி வண்டி எடுக்க விட்டாங்க..?”

“இவரு வண்டி எடுத்திருக்க வேண்டாங்க.. இவரு ஆபீஸ் ட்யூட்டி கேட்டிருக்கலாம் தான்.. ஏன்னு தெரியலை சார்..”

“நீங்க வண்டி எடுப்பீங்களா.. கண்டக்டர்? “

“நான் எடுப்பேன் சார்.. ஆனால் ட்ரைவர் ட்யூட்டியிலே இருக்கும் போது கண்டக்டர் எடுக்கக் கூடாது சார்.. அது தப்பு” - அவர் தரப்பு நியாயம் சொன்னார்..


“ட்ரைவருக்கு உடம்பு சரியில்லேன்னு.. அவர் உங்களை..’நீங்க எடுங்கண்ணே’ ந்னு கேட்டால் நீங்க எடுக்கலாமா?”

“அவர் கேட்டுக்கிட்டால் நான் எடுக்கிறேங்க.. உங்களையெல்லாம் நேரத்துல பாண்டியிலே கொண்டு விட எனக்கு மட்டும் ஆசையில்லியா சார்..”

நானும் என் நண்பரும் டிரைவரிடம் சென்று வண்டியை ஓரம் கட்டச் சொன்னோம். அவருக்கும் அது தேவையாக இருந்தது போலும்.. ரொம்ப அயர்வாகக் காணப்பட்டார்.. அவரிடம் பேசி.. கண்டக்டரையே.. வண்டி எடுக்கச் சொல்லி அவரைக் கேட்டுக் கொள்ளச்சொல்லி.. கண்டக்டர் ஓட்டுனர் இடத்தில் ஏறி அமர்ந்ததும் தான் எல்லாப் பயணிகளும் சற்று நிமிர்ந்து அமர்ந்தனர்..

அடுத்த ஒரு மணி நேரம் தாண்டி மாலை 8:10க்கெல்லாம் வண்டி பாண்டிச்சேரி எல்லைக்குள் நுழையும் போதுதான் கண்டக்டரின் நன்னடத்தைக்குப் (இங்க வேற நல்ல வார்த்தை வரணும்.. நன்னடத்தை என்பது சரியில்லை.. What I want to say here is 'Conductor's service attitude of going above and beyond his responsibilities to take care of his customers.. It is really an exceptional quality among our Govt servants) பாராட்ட வேண்டுமென்று தோன்றியது. பஸ் பேருந்து நிலையத்தில் நுழைந்து விட்டால் யாருக்கும் நன்றி சொல்லவும் தோணாது.. இறங்கி விடுவிடென்று ஓடிவிடுவார்கள்.. என்று தெரியும்..

என் நண்பரிடம் (அவர் மேடையில் பேசி பழக்கமுள்ளவர்) சில குறிப்புகளைத் தந்து “கண்டக்டரைப் பாராட்டிப் பேசு.. அப்படியே இந்த பண அன்பளிப்பையும் கொடுத்து விடு “ என்று சொன்னபோது அவர் மறுத்து விட்டார்..

“இதெல்லாம் எங்க ஊரில நாங்க செய்யறதில்லை.. அவன் அவன் லேட்டாயிடிச்சேன்னு கடுப்புல இருக்கான்.. இப்போ இதெல்லாம் என்னால முடியாது”

”நீ செய்யாட்டா .. நான் செய்யுறேன்..” என்று எழுந்த போது... “ உனக்குச் சொன்னாலும் புரியாது... உனக்காகவும் புரியாது” என்று புலம்பிக்கொண்டே எழுந்தார்...


அன்பான பயணிகளே.. நமது பேருந்து ஓட்டுனரின் பார்வைக் குறைபாடும் அதனால் நாம் அனுபவித்த தாமதமும் இன்னும் சில நிமிடங்களில் நாம் பாண்டியில் இந்தப் பேருந்தை விட்டு இறங்கியதும் உங்களுக்கு மறந்து போகலாம்.. நம்மையெல்லாம் பத்திரமாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதற்காக என் நண்பரின் வேண்டுகோளை ஏற்று பேருந்தை ஓட்டுனரிடமிருந்து தகுந்த முறையில் பெற்று .. நம்மையெல்லாம் விரைவாக கொண்டு சேர்த்திருக்கிறார் நம் நடத்துனர் .. ஜெயக்குமார் அவர்கள்.. இதைச் செய்யவேண்டுமென்று அவரது வேலைக்குறிப்பில் இருக்காது... இருந்தும் நமக்காக அவர் பொறுப்பேற்று செய்தார்.. .. அவருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு எல்லோரும் .. ஒரு முறை கைதட்டி ஊக்குவியுங்கள்...”

என்று சொன்ன போது பலமான கைதட்டல் எழுந்து அடங்க சில நிமிடங்களாயிற்று..

தொடர்ந்து..

“நீஙகள் பேருந்தை விட்டு இறங்கும் போது மறக்காமல்.. நம் நடத்துனருக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்குங்கள்.. மேலும் நமது நடத்துனர் ஜெயக்குமாரின் சேவையுள்ளத்தைப் பாராட்டி இந்தச் சிறிய பணமுடிப்பினை ..என் நண்பர் சார்பாக அளிக்கவுள்ளேன்..” என்று சொன்னவுடன் இன்னும் இரண்டு பயணிகள்.. “அதோட என் பரிசையும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள்” என்று அவர்கள் பங்கைத் தந்ததும் நெகிழ்ச்சியாக் இருந்தது..

பேருந்து நிலையம் வந்தவுடன்.. இறங்கிய ஒவ்வொரு பயணியும் மறக்காமல் ”நன்றி சார்..” என்று பேருந்தை ஓட்டி வந்த நடத்துனரிடம் சொல்லிய போது அவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..

“காசெல்லாம் வாங்க மாட்டேன் சார்...இவ்வளவு பேரும் இறங்கும் போது நன்றி சொன்னாங்களே .. அதுவே நிறைவா இருந்திச்சி சார்..” என்று பிடிவாதமாக மறுத்த நடத்துனரிடம்.. பணத்தை ..”இது காசு மட்டும் இல்ல சார்.. இது ஒரு அடையாள அன்பளிப்பு.. நீங்க செஞ்ச பொறுப்பை வெறும் காசால் அளக்க நான் விரும்பவில்லை” என்று சொன்ன பிறகுதான் அவர் ஏற்றுக்கொண்டார்..

அவரிடம் அன்பாக சில நிமிடங்கள் நின்று பேசிவிட்டு .. புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகுதான் கடலூர் பேருந்தைப் பிடிக்க விரைந்தோம்


அன்றிரவு மயிலாடுதுறை வீட்டுக்குள் வரும் போது மணி இரவு 12:30

அடுத்த பேருந்தில் வந்து கொண்டிருக்கும் போது தான் உடன் பயணித்த நண்பர் சொன்னார்.. “அந்த கண்டக்டருக்குச் சந்தோஷமா இருக்கும் தானே.. அவர் இந்த நாளை மறக்க மாட்டார் தானே.... ஏனோ எங்களுக்கெல்லாம் அடுத்தவங்களைப் பாராட்ட நேரமே இருக்கிறதில்லை.. ச்சின்னதாக் கையாவது தட்டணும்னு கூடத் தோணலை.. நீ சொல்றவரைக்கும்...”

oOo

பதிவு கொஞம் நீளமாகிட்டது போல.. உண்மைத்தமிழன் பேரைச் சொன்னாலே.. பதிவும் நீண்டுடுது.. எனது டாஸ்மாக் அனுபவம், பதிவுலக நண்பர்களைச் சந்தித்தது, தீபாவளி.. கடைமுகம்.. இன்னும் சுவையான அனுபவங்கள் அடுத்த பதிவில்.. விரைவில்...

என் நண்பரின் மகனின் எந்திரன் வீடியோ.. அவசியம் நிமிடம் 2:20 லிருந்து 2:45 வரை பாருங்கள். ஒரு புன்சிரிப்பு கியாரண்டி. நிச்சயம் ரீவைண்ட் செய்து பார்த்து மறுபடியும் சிரிப்பீர்கள்

Wednesday, October 06, 2010

105. அமைச்சரும் கலெக்டரும்

அமைச்சர் துரைமுருகன் ஒரு நேர்முகத்தில்..

'நீங்கள் எப்படியும் அன்புமணிக்கு ஸீட் கொடுப்பீர்கள் என நம்பித்தானே சட்டமன்றத்தில் ஆளும் கட்சி கொண்டுவந்த மேலவைத் தீர்மானத்தை பா.ம.க. ஆதரித்தது?''

''சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருகிறார்கள் என்றால், அது மக்களை பாதிக்குமா... இல்லை மக்களுக்கு சாதகமான விஷயம்தானா என்பதை ஆராய்ந்துதான் ஒரு கட்சித் தலைமை முடிவெடுக்க வேண்டும். மேலவை முடிவு மக்களுக்கு எத்தகைய விளைவை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை... தன் மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கிடைத்தால் சரி என ராமதாஸ் நினைப்பதை என்னவென்று சொல்வது? 'தி.மு.க. துரோகம் செய்யும் என நினைத்திருந்தால், மேலவைத் தீர்மானத்தை ஆதரிக்கும் முன்பே அவர்களிடம் எழுதி வாங்கி இருப்பேன்!' என ராமதாஸ் சொல்லி இருக்கிறார். மகனுக்கு ராஜ்யசபா ஸீட் கொடுத்தால் சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் கொண்டுவந்தாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு அவர் ஆதரிக்கத் தயாராக இருக்கிறாரா? 'தமிழகத்திலேயே கொள்கையும் லட்சியமும்கொண்ட கட்சி பா.ம.க-தான்!' என கூட்டத்துக்குக் கூட்டம் முழங்கும் ராமதாஸ், மகனுக்கு ஸீட் வாங்குவதை மட்டும்தான் கொள்கையும் லட்சியமுமாகச் சொல்கிறாரா?!''


படத்தில் இருப்பது எங்க ஊரு மயிலாடுதுறை Downtown !!
கடந்த வாரத்தில் வெளியான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்ற அறிவிப்பில் நாமக்கல் கலெக்டர் சகாயத்தின் பெயரும் இருந்தது. ஆனால், அவருக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

சகாயத்தின் மாறுதல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கலெக்டரின் மாறுதல் உத்தரவை திரும்பப் பெறக் கோரி மாவட்டம் முழுக்கப் பொதுமக்கள் தினம் தினம் போராட்டத்தை நடத்துகின்றனர்.

இது ஒரு பக்கம்னா... மாவட்டம் முழுக்க இருக்கும் வி.ஏ.ஓ-க்கள், பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குறதுக்கு கலெக்டர் ரொம்பவே இடையூறா இருந்தார். வி.ஏ.ஓ-க்கள் ஒன்று கூடி கலெக்டருக்கு எதிராப் போராட்டம் நடத்தினாங்க. இப்போ அதிகார மையத்துக்காரரும் இதில் சேர்ந்துக்கிட்டாரு...'' என்று சொன்னார். ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகளில் இவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி முதல்வருக்கு அனுப்ப இருக்கிறார்களாம்செய்திகள்: நன்றி ஜூனியர் விகடன்..


ஊழலற்ற நிர்வாகம் அமைப்பதில் உறுதியாக இருக்கும் கலெக்டர் சகாயம் அவர்களுக்கு என் ஆதரவுகள்.. நாமக்கல் மாவட்டத்தில் இந்த நேர்மையாளரின் பொறுப்புக்கள் இன்னும் தேவைப்படும் நேரத்தில் அரசியல் உள்நோக்கங்களுக்காக அவரை பொறுப்பிலிருந்து மாற்றிய தமிழக அரசை நாமக்கல் மக்கள் சார்பில் நானும் கண்டிக்கிறேன் !!


Monday, October 04, 2010

104. எந்திரன்++

இப்போ அப்போ என்று ஒரு வருடமாக பேசிக்கொண்டிருந்த எந்திரன் வந்து விட்டது. முதல் நாள் டிக்கெட் விலை 30 டாலர்.. இரண்டாம் நாளிலிருந்து 20 டாலராம். அவ்வளவு காசெல்லாம் கொடுத்துப் பார்க்கக்கூடாது. அந்தக் காசை (குடும்பம் முழுவதும் பார்ப்பதென்றால் 80 டாலர்) நம்ம பள்ளிக்கூடக் கட்டடத்துக்கு 10 மூட்டை சிமெண்ட் வாங்கலாம் என்றெல்லாம் பெரிய்ய வீறாப்போடு இருந்ததெல்லா வேஸ்ட். “நீங்க வாங்க சார்.. பள்ளிக்கூடத்துக்குத் தனியா சிமெண்ட் வாங்கித்தர்றேன்” என்று சொல்லி என் விரதத்தையெல்லா கலைத்து என் குடும்பத்தையே மொத்தமாகத் தூக்கிக் கொண்டுபோய் தியேட்டரில் உட்கார்த்தி வைத்துவிட்டார் நண்பர். கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடுதான் ப்டம் பார்க்க ஆரம்பித்தாலும், போகப் போக எல்லாம் சரியாகி படமும் நன்றாக இருந்தது என் நல்ல நேரம் தான்..வசீகரனாக வந்த ரஜினி மட்டும் தான் ஒரிஜினல் ரஜினி போலும்.. தசாவதாரத்தில் கமல் ஃப்ளெட்சர் மாதிரி மேக்கப் போட்டு வந்தது போல வேறு யாரோ டூப்புக்கு ரஜினியாக மேக்கப் போட்டு சிட்டியாக (சில க்ளோசப் காட்சிகள் தவிர) உலவவிட்டு விட்டார்கள்..

“நீங்க பேசாம இங்க உக்காருங்கண்ணே.. பாக்கி நாங்க செய்யறதையெல்லாம் பார்த்திட்டிருங்க” என்று ரஜினிகிட்டேயே சொல்லிட்டு எல்லாம் தயாரிச்ச மாதிரியிருக்கு. அதனாலதானோ என்னவோ ரஜினி கூட “இது முழுக்க முழுக்க சங்கர் படம்” என்று சொல்லிட்டாரு போல.

“ரஜினி முகத்துக்கு மட்டும் தான் காசு.. ரஜினி படத்துல ரஜினி அடிக்கடி வந்தாத்தான் மக்கள் விரும்புவாங்க” அப்படீங்கிற ச்சின்ன ஃபார்முலாவை அப்படியே பெரிசாக்கி.. “அப்ப்டீன்னா... ஒரு ரஜினி.. இரண்டு ரஜினி..என்ன நூறு ரஜினி காட்டுவோம்”னு கிராபிக்ஸ் துணையில காட்டிய சங்கரின் வியாபார மூளைக்கு ஒரு சல்யூட் !!


சார்லெட்டில் தியேட்டரில் படத்தில் ரஜினி பெயர் வந்தபோது ”ரஜினின்னா ச்சும்மாவா”ன்னு எல்லோரும் ஒரே கத்தல்... ஐஸ்வர்யா பெயருக்கு யாரும் கத்த முன் வராத போது “ஐஸுன்னா .. சும்மாவா”.. என்று ஓங்கி தனியாக ஒலித்த குரல் என்னுடையது மட்டுமே.. (சார்லெட்) மக்களுக்கு ரசனையே இல்லாமல் போயிடிச்சி..

சனிக்கிழமை காலை சமீயாவிடம் பேசும் போது “எந்திரன் பாட்டு பாடுறா.. செல்லம்” அப்படீன்னா ..”ஹ..ஹ..ஹ..ஹா...” அப்படீன்னு ஹம்மிங் பண்ணினா.. அதனால் கிளிமாஞ்சரோ பாட்டுக்கு மட்டும் ஸ்பெஷல் அட்டென்ஷனோடு கவனித்தேன்...

படம் விட்டு வரும் போது “கிளிமாஞ்சரோ அப்படீன்னா என்ன Dad?" அப்படீன்னு கேட்ட என் மூத்த பெண்ணுக்கு என்ன சொல்வதென்று யோசிச்சிச் சொல்வதற்குள் ”It is the highest mountain in Africa" என்று அடிச்சிச் சொல்லிய தங்கமணியைப் பார்த்துப் பெருமைப்படுவதா, பொறாமைப்படுவதா என்று தெரியவில்லை. என்னதான் பொது அறிவு எல்லாம் படிச்சி தேர்வு எழுதி IAS இண்டர்வியூவெல்லாம் பாஸ் பண்ணியிருந்தாலும், சில நேரங்களில் பதில் மட்டும் உடனே சொல்ல வர்றதில்லை..

நாலு நாளா.. ”காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 என்று தெரியும்.. வருஷம் தெரியுமா? ” அப்படீன்னு 10 பேர்கிட்டே கேட்டு யாருக்கும் தெரியவில்லை. நான் தான் கரெக்டா 1869 என்று அடிச்சிச் சொல்லிக்கிட்டிருக்கேன். அதெல்லாம் பொது அறிவிலே சேர்த்தின்னாலும், கிளிமாஞ்சரோன்னா என்னன்னு தெரிஞ்சுக்காம இருந்திட்டமேன்னு கொஞ்சம் வெட்கம் வந்தாலும்.. “இப்பத்தான் தெரியுமே” அப்படீங்குற அலட்சியத்தையும் ஜெயிக்க முடியலை..

சார்லெட்டுல 8 வருஷமாயிருக்கேன்னு பந்தா விட்டுக்கிட்டிருக்குற பிரபல பதிவருக்கு எந்திரன் வெளியிடற தியேட்டருக்கு வழி தெரியலை.. “இங்கதாண்ணே எங்கியோ இருக்கு” ன்னு சொல்லிட்டே மெட்ராஸ் ஆட்டோக்காரர் மாதிரி 5 மைல் தள்ளி ரவுண்டெல்லாம் அடிச்சிக் கொண்டுவிட்டாரு. நாம ஏன் அவரு மானத்தியெல்லாம் வாங்குவானேன்...


0Oo

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குடும்பத்தினர் இந்தியா போயிருந்தனர்..” உங்க புள்ளைஙகளை அழைச்சிக்கிட்டு எங்கியும் என்னால இனிமே போக முடியாது.. ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்கிட்டு உங்க மானத்தை வாங்குதுங்க” அப்படீன்னு சலிச்சிக்கிட்ட தங்கமணியைச் சமாதானம் பண்ணுவதற்காக, என் பிரிய பொண்ணுங்களிடம்..”ஏண்டா இப்படி என் மானத்தை வாங்குறீங்க” என்று அன்பா கேட்டதற்கு உடன் வந்த பதில் “I didnt buy your மானம் Daddy.. your wife only did... When we fight, she kept showing everybody that we are fighting.." என்று சூடான பதில் தான் வந்துது..

நம்ம நாட்டாமைத்தனம் நம்ம வீட்டுலயே பலிக்க மாட்டேங்குது. சொம்பை வெளியே எடுக்கு முன்னாடியே நசுங்கிப் போயிடுது..

oOo

”எந்திரனுக்கு அப்புறம் என்னடா” அப்படீன்னு இரண்டு வயசு சமீயாவைக் கேட்டத்ற்கு உடனே வந்த பதில்..

எந்திரன்
O - திரன்
P - திரன்
Q - திரன்
R - திரன்
S - திரன்
T - திரன்
U - திரன்
V - திரன்
W - திரன்
X - திரன்
Y - திரன்
Z - திரன்

முழுதும் சொல்லிவிட்டுத்தான் மூச்சே விட்டாள்.. அவள் சொன்ன வேகத்தில் எனக்கே மூச்சு முட்டியது..

Sunday, September 12, 2010

103. கருணையே உருவமான நமது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்

இன்று படித்த செய்தி:

கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள், இறுதி வாய்ப்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனு தாக்கல் செய்த 14 பேரின் மனுக்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பரிசீலனைக்கு வந்தன. அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி குறைத்து உள்ளார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக 17 பேரை கொன்று குவித்த பியாராசிங் மற்றும் அவரின் மூன்று மகன்களான சரப்ஜித்சிங், சத்னாம் சிங், குருதேவ் சிங் ஆகியோர் தண்டனை குறைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கருணை மனுக்கள் 1991ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தன. இதேபோல், சொத்தை அபகரிப்பதற்காக தன் மாமா, அவரின் மூன்று சிறிய குழந்தைகள் உட்பட ஐந்து பேரை ஒட்டு மொத்தமாக கொன்ற தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்த சுப்ரீம் கோர்ட், இவரது கொடூரத்தைக் கடுமையாக சாடி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இவர்கள் தவிர உ.பி.,யில் வீடு ஒன்றுக்குள் புகுந்து, அங்கிருந்த மூன்று பேரை கொன்று, அவர்களின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றதோடு, பத்து வயது சிறுவனை சுட்டுக் கொன்று, அவனது உடலை தீயில் தூக்கி வீசிய, ஷெரோம், ஷியாம் மனோகர் மற்றும் நான்கு பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இவர்களின் தண்டனையை ஜனாதிபதி குறைத்துள்ளார். உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில், "இந்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். ஆனாலும், அவர்கள் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். பரோலில் அவர்களை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது' என, தெரிவிக்கப் பட்டுள்ளது. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட இவர்கள் எல்லாம், ஏற்கனவே 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர். இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

மரண தண்டனை கைதிகள் 14 பேரின் தண்டனையை குறைத்தது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையும் இதுபோல குறைக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்சல் குரு விவகாரத்தில் ஜனாதிபதி தன் அதிகாரத்தை எப்படி பயன்படுத்தப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

oooooooooo

குடியரசுத்தலைவரின் கருணை அதி்ர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனைகளே.. rarest of the rare cases க்கு மட்டும் வழங்கப்பட்ட நிலைகளில், இந்த தண்டனைக்குறைப்பு கவலைக்குரியதாக இருக்கிறது.


அப்ஸல்குரு, கசாப் போன்ற தீவிரவாதிகளையும் முக்கியமாக தர்மபுரி மாணவிகள் எரிப்புக் கொலைகாரர்களையும் மன்னிக்கும் முயற்சிகளுக்கு முன்னோட்டமாகத்தான் இது தெரிகிறது.

குடியரசுத்தலைவரின் கருணைமனு என்ற இந்த நடைமுறையையே ஒழித்துக் கட்டவேண்டும் என்பது என் கருத்து. சட்டம் தன் கடமையை மட்டும் செய்யட்டும் .. குற்றவாளிகளுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை..

Thursday, September 09, 2010

102. சீமாச்சுவின் தாம்பூலம் - 10 செப்டம்பர் 2010

அமெரிக்காவில் Pledge of Allegiance (இதுக்குத் தமிழ்ல என்ன சொல்றது பழமைபேசியாரே? இப்போதைக்குக் குடிமகன் விசுவாச உறுதிமொழி என்று வெச்சுக்கலாம்) என்ற ஒரு உறுதிமொழி உண்டு. ”அமெரிக்கக் கூட்டமைப்பின் கொடிக்கும் அது நிலைநாட்டும் குடியரசுக்கும் ஆண்டவனின் ஆட்சியில் பிரிக்கப்படமுடியாத ஒரு முழு குடியரசுக்கும் (One Nation Under GOD Indivisible), அனைவருக்கும் சுதந்திரமும் சமமான நீதியும் கிடைப்பதற்கும் நான் விசுவாசமானவனாக இருப்பேன்” என்று ஒவ்வொரு பள்ளிப்பிள்ளைகளும் தினமும் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

இந்த உறுதிமொழிக்கென்று ஒரு வரலாறு உண்டு. இது 118 ஆண்டுகளுக்கு முன்பு 1892 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி, பாஸ்டன் மாநகரிலிருந்து வெளியாகும் “The Youth's Companion" என்ற பத்திரிகையால் வரையறுக்கப்பட்டது. அந்த வருடம் தான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. நானூறாவது ஆண்டைச் சிறப்பிப்பதற்காகவும் பள்ளிப்பிள்ளைகளுக்கு குடியரசின் சிறப்பை எடுத்துக் காட்டவும் அந்தப் பத்திரிகை இந்த உறுதிமொழியை எழுதி வெளியிட்டது.

முதன் முதலில் வெளியிட்டபோது அந்த உறுதிமொழியில் Under GOD என்ற வார்த்தைகள் கிடையாது. இந்த வார்த்தைகள் 1954ல் அப்போதைய அதிபர் ஐசனொவர் அவர்களால் சேர்க்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நாத்திகர்களுக்கு ”Under GOD" என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. உறுதிமொழி எடுக்கும் போது அந்த வார்த்தைகளைச் சொல்லாவிட்டாலும் தங்களது நாட்டுப் பற்றில் எந்தவிதக் குறைவுமில்லை என்று அடிக்கடி வாதிடுவார்கள். அவர்களின் வாதத்தை உணர்த்தும் வகையில் சமீபத்தில் எங்கள் சார்லெட் மாநகரில் ஒரு நாத்திகர் குழு “One Nation Indivisible" என்று ஒரு பெரிய விளம்பரப்பலகையை (Billboard) ஒரு பரபரப்பான சாலையில் 40 அடி உயரத்தில் வைத்திருந்தார்கள். வாகனங்களில் செல்லும் போது அதைப் படிப்பவர்களுக்கு அதில் குறிப்பாக மறைக்கப்பட்டுச் சொல்லப்படாத “Under GOD" என்ற வாசகத்தின் பொருளும் அதற்கான எதிர்ப்பும் உடனேயே புலப்பட்டுவிடும். இவ்வளவு பெரிய தட்டியை அந்த இடத்தில் வைப்பதற்காக அவர்கள் கிட்டத்தட்ட $15,000 செலவு செய்திருப்பதாக பத்திரிகையில் பேட்டியெல்லாம் வந்திருந்தது. அந்த தட்டி வைக்கப்பட்ட மறுநாளே அதில் யாரோ கரியால் ”Under GOD" என்று எழுதிவிட்டார்கள். அவ்வளவு பரபரப்பான சாலையில் அவ்வளவு உயரத்தில் ஏறி யாரும் பார்க்காதபோது அதைச் செய்தவர் யாரென்றுதான் தெரியவில்லை..

ஆண்டவனாக இருக்குமா????

ஒருவேளை அவங்களே பரபரப்புக்காக அதைச் செய்திருக்கலாமோ???

அல்லது அவ்வாறு அதை செய்ய ஆண்டவனே தூண்டியிருப்பானோ?????


oOo

அமெரிக்காவில் இருக்குறவங்களுக்கும் ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ரொம்ப வரும் போல இருக்கு. முக்கியமா அரசு நிர்வாகத்தில் எந்த ஒரு விஷயமும் ஒரு முறைக்கு 100 முறை சரி பார்க்கப் பட்டே வெளியிடப்படும்.. அப்படியும் சென்ற வாரம் எங்க ஊர்ல நடந்த ஒரு கூத்து. முக்கியமான ஒரு நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட ஒரு பெரிய விவரப் பலகையில் அவர்கள் செய்த தவறைப் பாருங்கள்.. Independence என்ற வார்த்தைக்கு என்ன ஸ்பெல்லிங் போட்டிருக்கிறார்கள் பாருங்கள்..இந்தப் பலகையை வைத்து முடித்து சென்ற பின்னர் ஒரு தொலைக்காட்சி சேனலில் அதைப் படம் பிடித்துக் காட்டிய பின்னரே அதில் இருந்த தவறு எல்லோருக்கும் தெரிந்தது.


oOo

அமெரிக்காவில் நாளைக் குறிக்கும் போது மாதம்/தேதி/வருடம் என்றே குறிப்பார்கள். சென்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதியின் விசேஷம் என்னவென்றால் அதன் தேதியைக் குறிக்கும் போது 8/9/10 என்று எண்கள் வரிசையில் வரும். அன்று ஒஹையோ மாநிலத்தில் சின்சினாட்டி நகரில் Ella Rose என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதிலும் எல்லா பிறந்த நேரம் தான் இன்னும் விசேஷம். காலை 11:12 க்கு குழந்தை பிறந்தால் விசேஷமாக இருக்குமே என்று அவள் பெற்றோரும் மருத்துவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படிப் பிறக்காத போது கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தனர். பெற்றோரின் ஏமாற்றத்தைத் தணிக்கவே அவள் பிறந்த நேரம் இரவு 11:12. எல்லாவின் பிறந்த நேரம் 8/9/10 11:12 PM.பிறந்த போது அவள் எடை 6 lbs and 7 ounces. ரொம்ப விசேஷமான குழந்தை தான். எல்லாவுக்கு வாழ்த்துக்கள்..


oOo

என் சித்தி பையன் சந்துரு சென்னையில் கார்ப்பரேஷன் பள்ளியில் தான் படித்தான். அப்படியும் பெரிய்ய படிப்பெல்லாம் படித்து அமெரிக்காவெல்லாம் வந்து இப்பொழுது மிக வெற்றிகரமாக உலா வந்துகிட்டிருக்கான். அவன் அலுவலக நண்பர்களுடன் உரையாடும் போது அவர்கள் படித்த பள்ளிக்கூடங்களைப் பற்றிப் பேச்சு வருமாம். எல்லோரும் St Paul's, St Antony's என்று ஏதாவது பெத்த பெயராகச் சொல்லும் போது அவனுக்கு ஏற்படும் ச்சின்ன ஏமாற்றத்தைத் தவிர்க்க தான் படித்த கார்ப்பரேஷன் பள்ளியின் பெயரை St. Corps என்றேக் குறிப்பிடுவது அவன் வழக்கம். தனக்குப் பள்ளியறிவு வழங்கிய சென்னை மாநகராட்சியை ஒரு புனிதர் அளவுக்கு உயர்த்தி “St Corps" என்று அவன் சொல்லும் போது ”பேரு ஒருமாதிரியிருக்கே...அது எங்கேயிருக்கிறதென்று” இதுவரை யாரும் கேட்டதில்லையாம்..

oOo


என் நியூ ஜெர்ஸி நண்பருக்கு வாகனப்ராப்தி அமைந்துள்ளது. புதுசா ஒரு நீலக்கலர் லெக்ஸஸ் கார் வாங்கியிருக்கார். உங்க கார் படம் இன்னும் வந்து சேராததால் விமானத்துக்கு வாகன பூஜை போடற படத்தைப் போட்டிருக்கேன். கூடிய விரைவில் நீங்கள் விமானமும் வாங்க வாழ்த்துக்கள் !!


Sunday, August 08, 2010

101. சீமாச்சுவின் தாம்பூலம் - 07 ஆகஸ்ட் 2010

சிவராமனுக்கும் ப்ரியாவுக்கும் 16 வருஷம் முன்னாடியே கல்யாணம் ஆயிடிச்சி. எனக்குக் கல்யாணம் ஆகறதுக்கு சில வருடங்கள் முன்னாடி. அமெரிக்காவில் அப்பொழுது நானும் சிவாவும் ஒரே ப்ராஜெக்டில். ரொம்ப முக்கியமான கட்டத்தில் “எனக்குக் கல்யாணம்.. சென்னைக்குப் போறேன். ப்ராஜெக்டை நீயே ஒப்பேத்திடு” ந்னு சொல்லிட்டுப் போயிட்டான். அவன் செய்யற வேலையெல்லாம் நானே செஞ்சு (வேற ஆள் போட்டு அவருக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கறதுக்கு நானே எல்லாம் செஞ்சிடலாம்னு சோம்பேறித்தனம். அப்பல்லாம் அமெரிக்காவில ஆள் புடிக்கிறது கொஞ்சம் கஷடம் தான்.. அப்படியே வந்தாலும் நாம் கேக்குற டெக்னாலஜியெல்லாம் தெரிஞ்சிருக்காது ..) ப்ராஜெக்டை ஒப்பேத்திட்டேன்.

கல்யாணம் முடிஞ்சி வந்தவன் அப்படியே இந்த வேலைக்கு ராஜினாமாக் கொடுத்திட்டு வேற வேலை சேர்ந்துட்டான். நம்ம கூட வேலை பார்த்த ஆளாச்சேன்னு நான் தான் அவனைக் கூப்பிட்டு ஒரு இந்தியன் ரெஸ்டாரெண்டில் பார்ட்டி கொடுத்து அவனுக்கும் ப்ரியாவுக்கும் பரிசு வாங்கிக் கொடுத்தேன். திருமணத்துக்கு நேரே போக முடியாததால் ஏதோ என்னாலானது.

“என்னடா சிவா, ஆசை அறுபது நாள்.. மோகம் முப்பது நாள்” சொன்னாங்களே.. எல்லாம் அப்படித்தானா ந்னு என் ப்ரம்மச்சாரி சந்தேகத்தைக் (தனியா இருக்கும் போது தான்) கேட்டுத் தொலைத்தேன். “என்னது முப்பது நாளா?.. முப்பது நாள் மோந்து பார்க்கிறதுக்கே பத்தாது.. உனக்கும் கல்யாணம் ஆனாத் தெரியும்” நு நக்கலாச் சொல்லிட்டுப் போயிட்டான். சிவாவுக்குக் கொஞ்சம் பெரிய மூக்கு,, முகத்தில் பிரதானமாக அந்த மூக்கு மட்டும் தெரியும். அவனே சொல்லிட்டான்ன்னா.. அப்படித்தான் போலருக்குன்னு நானும் விட்டுட்டேன்.

அது ஆச்சி 16 வருடம். சிவாவைப் பத்தி நான் அடிக்கடி கேள்விப்படுவேன். அவனுக்கு குழந்தை வரமே வாய்க்கவில்லை என்பது அறிந்து கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. குழந்தை வரத்துக்காக ரொம்ப ஏங்கினவர்கள் அவர்கள். அப்படியே சில காலம் ஆனதும் “சிவா ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் போறான்.. அதுக்கான பேப்பர் வொர்க்கெல்லாம் முடிச்சாச்ச்சாம்” அப்படீன்னு காத்து வாக்குல கேள்விப்பட்டேன். சில காலம் கழித்து ”என்ன ஆச்சி” என்று விசாரித்ததில்.. அந்தக் குழந்தைதான்னு முடிவாயிருந்தது, ஆனால் கடைசி நேரத்துல அதுக்கு ஹார்ட்லே ஏதோ ப்ராப்ளம்னு தெரிஞ்ச உடனே “இந்தக் குழந்தை வேண்டாம்.. வேற குழந்தை ஹெல்தியாப் பாருங்க” ந்னு சொல்லி விட்டுட்டாங்க.. கேள்விப்பட்ட போது மனசு அந்தக் குழந்தையை நினைச்சிக் கவலைப் பட்டது. “அதெப்படி .. இது தான் குழந்தைன்னு மனசளவிலே முடிவு பண்ணி, கொஞ்சிட்டு வந்தப்புறம்.. வேணான்னு சொல்ல முடியும்?” ந்னு கேட்டதுக்கு “அதெல்லாம் உனக்குப் புரியாது சீமாச்சு.. அவங்களே சந்தோஷமாயிருக்கக் குழந்தையைத் தேடிக்கிட்டிருக்காங்க.. அதிலே மெடிக்கல் ப்ராப்ளம் உள்ள குழந்தையை வெச்சிக்கிட்டு அலைய முடியாது.. “ அப்படீன்னுட்டாரு இன்னொரு நண்பர்..


அந்த லாஜிக் எனக்குப் புரியலை. நானாயிருந்தால் அந்தக் குழந்தையையே எடுத்து வந்திருப்பேன். அப்படியே அதனுடைய ஹெல்த் ஒரு ப்ரச்சினையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு நல்ல வைத்திய முறைகள் கிடைக்கச் செய்திருப்பேன். கூடவே இன்னொரு ஹெல்தியான குழந்தையையும் (முதல் குழந்தைக்கு ஆயுள் குறைவாக இருக்குமோ என்ற கவலையிருந்தால்) தத்தெடுத்திருப்பேன். இதயத்தில் குறைவுடன் பிறந்தது அந்தக் குழந்தையின் பிழையில்லையே.. அப்படியே பிறந்திருந்தாலும் அதை வைத்துக் காப்பாற்றுவது என் கடமையென்று தானே ஆண்டவன் அதை என்னிடம் தந்திருப்பான். பேரும் முகமும் பார்த்திராத அந்தப் பிஞ்சுப்பூவின் எதிர்காலம் குறித்து எனக்கு இரண்டுநாட்கள் தூக்கம் போனது..

முதல் முறை பெற்றவர்களாலும் இரண்டாவது முறை சிவா தம்பதியினராலும் பிறந்த ஒரு வருடத்துக்குள்ளாகவேக் கைவிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு நல்ல பெற்றோர் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்

oOoஎங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க ..”நீ மட்டும் பத்து மாசம் முழுசா வயத்துல இருந்தேடா.. உன் அக்காவும் தங்கையும் ஒன்பது மாசம் தான். பிறக்கும் போது உன் தலை பெருசாயிருந்தது. உன்னை அப்போல்லாம் மண்டை பெருத்த மகாதேவன் நு தான் சொல்லுவோம்” அப்படீம்பாங்க. பத்து மாசம் சுமந்தாலும் ஒன்பது மாசம் சுமந்தாலும் ஏன் ஏழு மாசமே சுமந்தாலும் அம்மா அம்மா தானே.. என்னதான் நான் அம்மாவுக்குச் செல்லம்னு நானே சொல்லிக்கிட்டாலும் ஒன்பது மாசத்துலயே பிறந்த என் அக்காவும் தங்கையும் அம்மா மேல வெச்சிருக்குற பாசத்துக்கு எந்தக் குறைவும் இருந்ததா எனக்குத் தெரியல. என்ன இருந்தாலும் எனக்கு என் அம்மா ரொம்ப உயிர்.

இது எதுக்காகச் சொல்றேன்னா, நான் படித்த மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி நிதிக்காக எங்கள் பள்ளியில் படிச்ச சில முன்னாள் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அப்பொழுது ஒரு அன்புத் தம்பி சொன்னது,

“ ஒண்ணாவதிலேருந்து பத்தாவது வரைக்கும் உங்க (????) ஸ்கூல்ல தான் படிச்சேன். பதினோராம் வகுப்புக்கு எனக்கு இடம் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.. அதனால பக்கத்துல இருக்குற நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தான் படிச்சேன். அப்படி பணம் கொடுக்கிறதாயிருந்தா அந்த ஸ்கூலுக்குத்தான் கொடுப்பேன்.. உங்க ஸ்கூலுக்குக் கிடையாது” அப்படீன்னுட்டாரு. அவரோட கோவம் அவருக்கு.

“ஏன் ராஜா 10 வருஷம் படிச்ச ஸ்கூலுக்குத் தரமாட்டேங்கிறே... ஆனால் இரண்டு வருஷம் படிச்ச் ஸ்கூலுக்குத் தர்றேங்கிறியே.. எனக்கு எதிலும் வித்தியாசம் கிடையாது.. ஏழைப் பிள்ளைங்க ரெண்டு ஸ்கூல்லயும் தான் படிக்கிறாங்க எந்த ஸ்கூலுக்குக் கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.. உன் விருப்பப்படியே ஏதாவது செய் ராஜா.. ஆனால் இரண்டுக்குமே செய்யாமல் இருந்திராதே.. கொஞ்சம் புண்ணியமாப் போகும்” சொல்லிட்டேன்..

இது இப்படியாயிடிச்சா? இன்னொரு பையனிடம் பேசிட்டிருந்தேன்.

“சார் நான் பத்தாவது வரைக்கும் வேற ஸ்கூல்ல படிச்சேன்.. பதினோராவதும் பன்னிரண்டாவதும் நம்ம (!!!) ஸ்கூல்ல படிச்சேன். அங்க படிச்சதுனால தான் நான் நல்ல நிலைமையில இருக்கேன்.. அவசியம் செய்யறேன் சார்” அப்படீன்னாரு.

“ராஜா ..நீ பத்தாவது வரைக்கும் படிச்சியே அந்த ஸ்கூலுக்கும் ஏதாவது செய்யறதுன்னா செய்யேன்” அப்ப்டீன்னதுக்கு ..

“அங்க நான் நிறைய்ய காசு கட்டித்தான் சார் படிச்சேன். அவங்க கொஞ்சம் வசதியானவங்க.. நம்ம(!!) ஸ்கூல் தான் கொஞ்சம் ஏழை ஸ்கூல் அதனால நம்ம ஸ்கூலுக்குச் செய்யறேன் சார்” அப்படீன்னாரு..

இரண்டு விதமான மாணவர்கள்.. இரண்டு விதமான கண்ணோட்ட்டங்கள்.

எங்கள் பள்ளியில் எப்பொழுதும் 300-400 மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதுவார்கள். ஆனால் ஹையர் செகண்டரிக்கு முதல் பிரிவில் 100 இடங்களோ அதற்குக் குறைவாகவோத் தான் இருக்கும். அதனால் பத்தாவது தேர்ச்சியுற்ற மாணவர்கள் அனைவரையும் முதல் பிரிவில் எடுத்துக்கொள்ள் இப்பவும் இயலாது. அவர்களெல்லாம் என் சகோதரிகள் மாதிரி ஒன்பது மாதக் குழந்தைகள் தான். ஆனாலும் என் அம்மாவின் பாசம் மாதிரி தன்னிடம் படித்த எல்லா மாணவர்கள் மேலும் என் பள்ளியின் பாசம் குறைவில்லாமல் தான் இருக்கும்...

oOo
நாங்கள் படிக்கும் போது எங்கள் பள்ளிக்கும் அருகிலிருக்கு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கும், கல்வித்தரத்தில் எங்கள் பள்ளி பல படிகள் அதிகம் தான்.. அதனால் எங்கள் இரு பள்ளி மாணவர்களிடையே ஒரு விதமான கசப்புணர்வே இருக்கும். இதெல்லாம் 25 வருஷங்களுக்கு முன்னாடியே.. சமீபத்தில் எங்கள் ஊர் நண்பர் ஒருவரை ஒரு பார்ட்டியில் சந்திக்க நேர்ந்தது. நான் என் பள்ளி மாணவர்களைத் தொடர்புகொள்பவனென்ன்பது அவருக்கு முன்னாடியே தெரிந்திருந்தது..

“மாயவரமா சார்.. ரொம்ப சந்தோஷம்.. எந்த ஸ்கூல்ல படிச்சீங்க..”

நண்பர் கொஞ்சம் என்ன மிகையாகவே நகைச்சுவை உணர்வு மிக்கவர்..

“நேஷனல் ஹைஸ்கூல் இல்ல சார்..” என்று சொல்லி வாயோரமாகப் புன்னகைத்தார்..

சட்டென்று எனக்கும் சிரிப்பு வந்தாலும், “அதனாலென்ன சார்... என்னைப் பத்தி முன்னரே தெரிஞ்சிருக்கே... நீங்க எந்த ஸ்கூல் பரவாயில்லே சொல்லுங்க...”

“முனிசிபல் ஹைஸ்கூல்...”

எனக்கு அன்று பார்த்து நாக்கிலே சனி போலருக்கு...

“முனிசிபல் ஹைஸ்கூல்ல படிச்சிட்டு.. அமெரிக்கா வரைக்கும் எப்படி வந்தீங்க.. ஆச்சர்யமாயிருக்கே “

கேட்டது நானில்லை.. எனக்குள் இருந்த ஏதோவொன்றுதான். அதிலும் அந்த வரி அவரின் சொந்தத் திறமைகளை உயர்த்துவதாகக்தான் எனக்குப் பட்டது.. இருந்தாலும்.. நண்பர் அப்செட்...

”அட்டா.. உங்க ஸ்கூலைப் பத்தித் தப்பாச் சொல்லலை சார்.. கோச்சிக்காதீங்க” என்று ச்சின்னப்புள்ளைத் தனமா அவரை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று...

அப்புறம்.. நான் (நானல்ல.. என் நாக்கு) உதிர்த்த அந்த வார்த்தைகளை வைத்து நான் ரொம்ப கிண்டல் செய்யப்பட்டேன்...

பொது வாழ்வில் (!!!) நான் கற்றுக் கொண்ட இன்னொரு பாடம்..

oOo

மத்திய (ஏதோவொரு) அமைச்சர் ப்ரணாப் முகர்ஜிக்கே ஏதோவொரு வங்கியிலிருந்து போன் பண்ணி “வீடு கட்ட லோன் வேணுமா” ந்னு கேட்டாங்களாம்... ப்ரணாப் கடுப்பாயிட்டாராம்..

அரசியல்வாதிக்க்கிட்டேயே வலியப் போயி “காசு வேணுமா” (லோனோ ஏதோ வொண்ணு) கேட்டுட்டு அதை வேணாம்னு சொன்ன முதல் இந்திய அரசியல்வாதியை இப்பத்தான் பார்க்கிறேன்.. இதுவே நம்ம கழகக் கண்மணிகளிடம் கேட்டிருந்தால்.. “அது பாட்டுக்கு அது” என்று லோனை வாங்கிப்ப் போட்டுட்டு அப்புறம் அந்த பாங்கு பாடாய்ப் பட்டிருப்பாங்க..

oOo

சென்ற பதிவில் நான் சொல்லியிருந்த 95 வயசு தாத்தா இப்போ வெகு மூத்த பதிவராயிட்டார். புதிசா பதிவு ஒண்ணு ஆரம்பிச்சி அதுக்குள்ளே 5 இடுகைகள் போட்டுட்டார்.. முடிஞ்சா கொஞ்சம் பின்னூட்டங்கள் போட்டு தாத்தாவையும் ஆதரிக்க வேணுமாய் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

தாத்தாவின் பதிவுக்கு http://kppillai95.blogspot.com என்ற முகவரியைச் சொடுக்குங்கள்..

Saturday, June 19, 2010

100. தாத்தா..ஒரு பல்கலைக்கழகம்

"தாத்தா ..."

இந்த வருடத்தில் நான் சந்தித்த ஒரு மாமனிதர். இவரை நான் சந்திக்க அருளியதற்கே ஆண்டவனுக்கு நான் நன்றி செலுத்தியாகவேண்டும்..

"வாங்க தம்பீ..." ..

எப்பொழுது வீட்டுக்குள் நுழைந்தாலும், தான் அமர்ந்திருக்கும் சோஃபாவிலிருந்து எழுந்து வந்து இரண்டு கைகளாலும் என் கையைப் பற்றி மலர்ச்சியான புன்னகையுடன், "எப்போ வந்தீங்க...வாங்க.." என்று வரவேற்று, எனக்குப் பின்னால் பார்த்து என் மனைவி குழந்தைகளெல்லாம் வருகிறார்களா என சட்டென்று கவனித்து "வீட்ல யாரும் வரலீங்களா?.. எல்லாரும் சௌக்கியம்தானே" என் விசாரிப்பார்.. அவர் வீட்டில் நானிருக்கும் போதும்.. அவர் முன்னதாகத் தூங்கச் செல்லும் முன், நான் வீட்டில் எங்கிருந்தாலும் என்னைத் தேடி வந்து.. "சாப்பிட்டீங்களா.. பேசிக்கிட்டிருந்துட்டு மெதுவாக் கெளம்பலாம்.. நான் மாடிக்குத் தூங்கப் போறேன்..." அதே மாதிரி இரு கைகளாலும் என் கை பற்றிச் சொல்லிவிட்டுச் ஒருச் சின்னப் புன்முறுவலுடன் விடை பெறுவார்.. இதே உபசரிப்பு என்னுடன் நண்பர் பழமைபேசி வந்தாலும் அவருக்கும் உண்டு.. இதெல்லாம் தாத்தா எனக்குச் செய்ய வேண்டியதேயில்லை..

அவருக்கு 95 வயது.. கடந்த மார்ச் மாதம் தான் கொண்டாடினோம். அவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் நானெல்லாம் ஒரு பொருட்டேயில்லை.. இருந்தாலும் எல்லோரையும் எந்த வயதினரையும் மதித்து அவரவர் வயதுக்கு இறங்கி வந்து நம்மை, நாமிருக்கும் சூழலை வசதிப்படுத்தி நமக்குள் அவரின் அன்பைச் செலுத்துவதில் தாத்தாவைப் பார்த்து எனக்குப் பெருமையும் பொறாமையும் கூட.. சட்டென்று யாரிடமும் ஒட்டாத கூச்ச சுபாவமுள்ள என் குழந்தைகள் கூட, தாத்தாவைப் பார்த்தால் ஓடிச் சென்றுக் கட்டிக் கொள்வர். ஓடும் தூரத்தில் பாதிதூரம் தாத்தா நடந்து வந்திருப்பார்..தாத்தா திருச்சியில் ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியராக இருந்தவர். தமிழ்நாட்டு மாநில அளவில் நல்லாசிரியர் விருதை அப்போதைய கவர்னர் கே கே ஷா கையால் வாங்கியவர். விருது வாங்கும் அன்று திருச்சியிலிருந்து சென்னை சென்று அங்கு தங்கியிருந்து தாத்தா விருது வாங்கிய வைபவத்தை அவர் கடைசி மகன் டாக்டர் அஷோக்கிடம் ஒரு மாலைப் பொழுதில் கேட்டபொழுதில், தாத்தா தன் மகன் மனதில் எவ்வளவு பெருமையுடன் வீற்றிருக்கிறார் என்று புரிந்தது. தாத்தாவின் 5 குழந்தைகளிடமும் வெவ்வேறு தருணங்களில் பேசிக்கொண்டிருந்த போதுதான் தெரிந்தது ஒவ்வொருவர் மனதிலும் தாத்தா விசுவரூபமெடுத்து அமர்ந்திருக்கும் விதம். தலைமைஆசிரியர் பணியிலிருந்த போதே தமிழக பாடநூல் நிறுவனம் வெளியிட்ட உயர்நிலைப்பள்ளி பாடநூலகளுக்கான ஆசிரியர் குழுவில் தாத்தாவுக்கும் பிரதான இடம்.
Thatha with his son Dr Ravindran, Cardiologist and his grandkids.

தாத்தாச் சின்ன வயதில் ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் படித்திருக்கிறார். அவர் குடும்பப் பரம்பரையில் தாத்தா தான் முதல் பட்டதாரி. விவசாயம், வியாபாரம் மற்றும் தன் குடும்பம் சார்ந்த தொழில்களில் சிறுவயதிலேயே தாத்தாவுக்கு ஈடுபாடு இருந்திருந்தாலும், படிப்பின் மேன்மையை அப்பொழுதே உணர்ந்தவர் தாத்தா. அப்பொழுதே தன் பள்ளிப் படிப்புக்காக, தன் பெற்றோரை விட்டு வேறு ஊருக்குத் தனியாகப் படிக்க வந்த போது கல்வியின் அவசியத்தை தாத்தா உணர்திருந்தார். கல்வியையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் தான் உணர்ந்தது மட்டுமன்றி அதைத் தன் குழந்தைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தாத்தா ஊட்டியிருக்கிறாரென்பதை அவரது 95வது பிறந்தநாளைக்கு அவரது மொத்தக் குடும்பத்தையும் சந்தித்தபொழுது புரிந்தது..

"தாத்தா தான் ஆசிரியராயிற்றே.. உங்களையெல்லாம் ரொம்ப கண்டிப்பா வளர்த்தாங்களா, அஷோக்? "

"அவ்வளவு கண்டிப்பாயெல்லாம் இருக்க மாட்டாங்க.. ஆனால் நாங்க எல்லாரும் எங்க அப்பாவைப் பார்த்துத்தான் எல்லாமே கத்துக்கிட்டோம்.."

குழந்தைகளை அதட்டாமல் உருட்டாமல், மிரட்டாமல், கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிப்பதென்பது தாத்தாவிடம் நான் கற்கவேண்டிய பெரீய்ய விஷயம்..
Bloggers (சீமாச்சு, பழமைபேசி, பச்சானந்தா, குலவுசனப்ரியன்) in Florida on the eve of Thatha's 95th Birthday Party

தாத்தாவுக்கு 4 மகன்கள், 20க்கும் மேல் பேரப்பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள்.. தாத்தாவின் பிறந்த நாளைக்குப் போன போது தான் கவனித்தேன்.. ஒவ்வொருவரும் மருத்துவரகள், சிலர் வழக்கறிஞர்கள். அந்தப் பக்கம் போன ஒரு ச்சின்னப்பெண்ணை (தாத்தாவின் பேத்தி) நிறுத்தி "என்னம்மா.. எந்த க்ளாஸ் படிக்கிறே?" என்று தெரியாத்தனமா விசாரிச்சிட்டேன்.. கேட்டிருக்கக் கூடாது போலருக்கு.." நான் இப்பத்தான் மெடிசின் முடிச்சேன் அங்கிள்.. இருதய நிபுணர் (Cardiologist) ஸ்பெஷலைஸ் பண்ணப்போறேன் அங்கிள்" சொன்னதைக் கேட்டு sweet surprise.. "தெரியாம, ஒரு பொண்ணைப் பார்த்து இப்படிக் கேட்டு பல்பு வாங்கினேன்" என்று எங்க வீட்டுத் தங்கமணியிடம் சொன்ன போது, "உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை.. இங்க எல்லாரும் டாக்டர்ஸ்..இனிமே.. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் .. நீ என்ன டாக்டரும்மா..ன்னு கேளுங்க போதும்.." என்று என் பட்டிக்காட்டுத்தனத்தைப் பறைசாற்றிட்டுப் போனார்.. பக்கத்திலிருந்து களுக்கென்று சிரித்துவிட்டு.. நான் திரும்பிப்பார்த்ததும் இன்னொரு டாக்டரைப் பார்க்கிறாமாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டாரு பழமைபேசி..

நடுத்தர வர்க்கக்க குடும்பத்தில் முதல் பட்டதாரியானபோதும், ஒரு பெரீய்ய விஷனுடன் இவ்வளவு மருத்துவர்களையும் வழக்கறிஞர்களையும் உருவாக்கிய தாத்தாவின் விடா முயற்சியையும், பரந்து பட்ட அறிவையும் தினமும் வியக்காமலிருக்க முடியவில்லை.. தாத்தாவின் பிள்ளைகள் 40 வருடங்களாக அமெரிக்காவில்..தாத்தாவின் குடுமபத்தில் நிறைய்ய வெள்ளைக்காரர்கள்.. அவரின் ஒரு மகன் ஒரு வெள்ளைக்காரப் பையனைத் தத்தெடுத்து வளர்க்கிறார். எல்லாருக்கும் தாத்தா என்றால் அவ்வளவு உயிர்..

தாத்தா போகாத நாடுகளில்லை.. ரிட்டயரானவுடன் பையன்களுடன் அமெரிக்கா வந்து விட்டார். வந்தவுடன் எல்லா நாடுகளையும் சுத்திப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தாத்தாவுக்கு. "அப்பா எந்த கன்ட்ரி போகணும்னு கேட்டாலும் உடனே அனுப்பி வைத்து விடுவோம்.." சொன்னது தாத்தாவின் பையன் டாக்டர் ரவீந்திரன் Cardiologist. சார்லெட்டில் டாக்டர் அஷோக் Neurologist வீட்டில் தாத்தா சீனா சென்றிருந்த போது அப்போதைய இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனுடன் எடுத்திருந்த புகைப்படத்தைப் பார்த்தேன். தாத்தாவின் பல நாட்டு விஜயங்களை அவர் வாயாலே கேட்பதே ஒரு சுகானுபவம்.


தாத்தாவின் 95 வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக, தாத்தாவின் கடைசி மகன் டாக்டர் அஷோக்குடன் அவர் குடும்பத்துடனும், என் குடும்பத்துடனும், பழமைபேசியுடனும் சார்லெட்டிலிருந்து ஃப்ளோரிடாவுக்குக் காரில் சென்று கொண்டிருந்தோம்.. 8 மணி நேரப் பயணமிது. ஃப்ளோரிடாவில் விழா நடக்கும் இடத்தினருகில் (Melbourne, Florida) உள்ள ஒரு ஹோட்ட்டலில் எங்களுக்குத் தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாலை ஆறு மணிக்கு சார்லெட்டிலிருந்து கிளம்பினாலும் ஃப்ளாரிடா போய்ச்சேர நள்ளிரவு தாண்டி இரண்டு மணியாகிவிட்டது. ஹோட்டலுக்கு போவதற்கு முன் டாக்டர் அஷோக்கின் மூத்த மகன் பெரியப்பா வீட்ட்டுக்குப் போக ஆசைப்பட்டான். அவனது கஸின்களோடு இரவைக் கழிக்க அவனது விருப்பம். அண்ணன் வீடுவரை போய அவனை இறக்கிவிட்டு வருவதற்குக் கால தாமதம் ஆகுமென்பதால் தன் அண்ணன் மகனை(அஜய்) ஒரு பொது இடத்துக்கு வரவழைத்து தன் மகனை அவனுடன் அனுப்பிவிடலாமென்று முடிவு செய்தார். மறுநாள் விசேஷமென்பதால் வீடு களை கட்டியிருந்தது.. யாரும் தூங்கவில்லை போலும்.. நாங்கள் போகும் வழியில் ஒரு வால்மார்ட் Gas Station/Parking Lot ல் வண்டிகளை நிறுத்தி வைத்து காத்திருந்தோம். டாக்டர் ரவீந்திரனின் மகன் அஜய் அவனது அமெரிக்க நண்பர்களுடன் காரில் வந்தான். அப்பொழுது மணி இரவு இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. 8 மணி நேர பயணக்களைப்பில் வண்டிகளை விட்டு எங்கள் இருவர் குடும்பங்களும் இறங்கி காலாற நின்று கொண்டிருந்தோம். ஒரு சிவப்பு நிற கார் வந்து எங்கள் அருகில் நின்று அதிலிருந்து அஜய் இறங்கி வந்தான். அஜய்க்கு 16 வயது.. இங்கேயே பிறந்து வளர்ந்தவன்..தனது அமெரிக்க நண்பனுடன் வந்திருந்தவன.. வண்டியை விட்டு இறங்கியவன் தன் சித்தப்பாவையும் சித்தியையும் பார்த்து அடுத்த வினாடியே இருவர் காலிலும் தனித்தனியே முழுவதும் விழுந்து நமஸ்கரித்தான்.. என்னைப் பார்த்து ஒரு "Hi Uncle" மற்றும் கைகுலுக்கல்..என் குழந்தைகளுக்கு ஒரு புன்முறுவல்.. அவன் வந்து சென்ற 5 நிமிடங்களில் எனக்குள் அவ்வளவு ஆச்சரியங்கள்.. மணியோ இரவு இரண்டு.. நாங்கள் நிற்பதோ ஒரு வியாபார நிறுவனத்தின் Parking Lot.. அப்படியும் தன் வீட்டுப் பெரியவர்களை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்த அந்த இந்திய அமெரிக்க இளைஞன் என் மனதில் ஆழமாகத் தடம் பதித்தான்.Dr. Ravindran and Dr. Ashok - Thatha's sons

"என்ன்னங்க அஷோக் இது..?"

"எங்க வீட்டுல எல்லாருமே அப்படித்தாங்க.. பெரியவங்களை எங்க பார்த்தாலும் இப்படித்தான் நமஸ்காரம் பண்ணுவோம்.அது எந்த இடமானாலும் சரி.. கூட யார் இருந்தாலும் சரி.. சமயங்களில் ஏர்போர்ட்டுகளில் கூட நாங்க விழுந்து நமஸ்காரம் பண்ணியிருக்கோம்.."

அதற்கப்புறம் பேசுவதற்கு எனக்கு வார்த்தைகள் வரவில்லை.. அர்த்தபுஷ்டியுடன் என் மகள்களைப் பார்த்தேன்.. நாங்கள் எல்லோருமே அன்று இரவில் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டோம்


இத்தனை வருடம் அமெரிக்காவிலிருந்தும் தாத்தாவின் பிள்ளைகள் தங்கள் குடும்பத்தை வளர்த்த விதமும், அதில் தாத்தாவின் Value System த்தின் பங்களிப்பும் புரிந்தது..


யாராவது தாத்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் உடனேயே அந்த இடத்துலேயே ஒரு ஐந்து டாலர் நோட்டு கையில் கொடுத்துவிடுவார். தாத்தா பையில் எப்பொழுதும் ஒரு கட்டு ஐந்து டாலர் நோட்டு வைத்திருப்பார். தன்னை நமஸ்கரிக்கும் யாருக்கும் தாத்தா உடனே 5 டாலர் தந்து விடுவார். அவர் பையில் எப்பொழுதும் குறைவில்லாமல் 5 டாலர் நோட்டுக்கட்டுக்கள் வைத்திருப்பது மருமகள்களின் வேலை.. தாத்தாவின் ஒரு பேரனிடம் இது குறித்து விசாரிக்கும் போது "Thatha used to give us a dollar before. Due to inflation and economic coditions he bumped it up to 5 dollars now.. If it is very very special occasion Thatha may give 100 dollars as well" என்றான்..


தாத்தாவுக்கு ஈமெயில் அக்கவுண்ட்டும் உண்டு. யார் ஈமெயில் அனுப்பினாலும் உடனேயே ஃபோன் செய்து "உன் ஈமெயில் வந்தது.. படித்துவிட்டேன்" என்று சொல்லிவிடுவார்.

தாத்தாவுக்கு சாயங்காலம் ஆனால் சன் டீவீ வேண்டும். "Thatha.. would you like to have some wine?" சாவகாசமாகக் கேட்டு பேரன்கள் ஒரு க்ளாஸில் வைன் ஊற்றிக் கொடுப்பார்கள்.. சன் டீவி வரவில்லையென்றால் தாத்தாவிற்கு இருப்பு கொள்ளாது.. டீவி சரியாத் தெரியாத போது வந்து சரி செய்து கொடுக்குற பேரன்/பேத்திக்கு 5 டாலர் அவசியம் கிடைக்கும். இதற்காகவே தாத்தாவுக்கு அஜய்யும் விஷாலும் ஸ்பெஷல் பேரன்கள்...


இந்த 95 வயதிலும் தாத்தா மறக்காமல் ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் திருச்சி வந்து விடுவார். சுவாதீனமாக ஃப்ளைட் ஏறி சென்னையில் இறங்கி திருச்சி வந்து தன் பென்ஷனுக்கான வருடாந்திர சம்பிரதாயங்களை முடித்து வருவார். தன் பையன்களிடமிருந்து ஒண்ணரை கோடி ரூபாய் வாங்கி ஏழைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று திருச்சியில் அமைக்க ஒரு ட்ரஸ்ட் தன் மனைவி பெயரில் அமைத்திருக்கிறார். தன் காலத்துக்குள் அந்தக் காப்பகத்தை அமைத்து அங்கு ஏழை/அனாதைக் குழந்தைகள் நலமாக இருப்பதைப் பார்க்க வேண்டுமென்பது தாத்தாவின் கனவு. காப்பகத்துக்கு இப்பொழுதுதான் நிலம் பார்த்து பேசி முடித்திருக்கிறார். இந்த காப்பகம் தொடர்பான அத்தனை கடிதப் போக்குவரத்துக்களும் தாத்தாவே கவனிக்கிறார். இரவு இரண்டுமணிக்கு மேல் தாத்தா ரூமில் ஏதாவது சத்தம் கேட்டால் "Appa is talking to people in India regarding the Trust " என்கிறார் டாக்டர் அஷோக். "இதெல்லாம் அப்பாவே பார்த்துக்கிறார்.. இதில் நாங்கள் எதுவும் செய்வதில்லை.. அவருக்கு அவர் கையாலேயே எல்லாம் செஞ்சாத்தான் த்ருப்தி" என்கிறார் அஷோக்


ஃப்ளோரிடாவில் தன் சகோதரர் பெயரில் முதியவர்களுக்கான ஒரு காப்பகத்தை அமைக்க டாக்டர் ரவீந்திரன் 1 மில்லியன் 1 டாலர் நன்கொடையாகத் தந்திருக்கிறார். இந்த முதியோர் காப்பகம் தாத்தாவின் மகன் டாக்டர் ஜெயக்குமார் பிள்ளை Psychologist அவர்கள் நினைவாக அமைக்கப் படுகிறது.. இது சம்பந்தமாக ஃப்ளோரிடாவில் வெளியான செய்திக்குறிப்புச் சுட்டி

நான் திருச்சி வரும் பொழுது தாத்தாவிடம் பள்ளியில் படித்த மாணவர்களையும், அவருடன் வேலை பார்த்த ஆசிரிய ஆசிரியைகளையும் முடிந்தால் சந்திக்க வேண்டும். தாத்தாவைப் பற்றி நான் தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் எனக்கொரு நல்ல பாடமாக அமையும் என்பது என் நம்பிக்கை.

ஒவ்வொரு விஷயத்திலும் தாத்தாவின் (உயர்திரு. பழனியாண்டி பிள்ளை) குடும்பம் பிரமிக்க வைக்கிறது.. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்தது தாத்தா என்ற இந்த பெரிய ஆலமரத்தையும் அதன் ஓராயிரம் விழுதுகளையும் சந்தித்த போதுதான்..இந்த தந்தையர் தினத்தில் என் நூறாவது இடுகை தாத்தாவைப் பற்றி எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..


தாத்தாவுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்க எனக்காகவாவது இன்னும் நூறு வருஷம் இருக்க வேண்டும். நீங்கள் தொட்ட எல்லைகளை உங்கள் ஆசியுடன் நானும் தொடவேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்யவேண்டும்...

Thursday, June 17, 2010

99. சீமாச்சுவின் தாம்பூலம் - 17 ஜூன் 2010

நித்யானந்தா ஜெயிலிலிருந்து வந்துவிட்டாராம். அவரை எதற்கு ஜெயிலில் போட்டார்களென்று தெரியவில்லை. சட்டத்தின் பார்வையில் அவர் எந்த ஒரு குற்றமும் பண்ணவில்லையென்றே நான் நம்புகிறேன். மீடியா கிளப்பிவிட்ட பரபரப்பின் உச்சியில் மக்களின் ஏமாற்றத்தத்தைத் தணிக்க, அவரின் பாதுகாப்புக்க்காகவும் தான் அவரை 44 நாட்கள் உள்ளே வெச்சிருந்தாங்க போலருக்கு. வெளியில் வந்த போது 44 நாட்கள் ஜெயிலில் இருந்த வாட்டமே முகத்தில் இல்லை. நானெல்லாம் இவ்வளவு நாள் உள்ளேயிருந்திருந்தால் வெளியில் வரும் போது முகம் எப்படியிருக்குமென்று ஊகிக்கவே பயமாயிருக்கு. சட்டப்படி தப்பு ஏதும் பண்ணாவிட்டாலும் குறைந்த பட்ச குற்ற உணர்ச்சியையாவது முகத்தில் காட்டியிருந்திருக்கலாம்.

வெளியில் வந்த பிறகும் நெருப்பின் நடுவில் தவம் செய்கிறேனென்ற ஸ்டெண்ட் அடிச்சிருக்க வேண்டாம். இவர் பிரச்சினை போதாதென்று பஞ்சாக்னி தபஸ் என்ற தூய்மையான ஒரு விஷயத்தை கேலிக்குள்ளாக்கிவிட்டார்.. போட்டோவுக்கு போஸ் தருவதற்காக 2 மணி நேரம் உக்கார்ந்திருந்தார் போல..

நீதிமன்றம் விதித்த தடையின்படி அவர் சில காலம் ஆன்மீகப் பிரச்சாரம் செய்யக்கூடாதாம். இதுவும் யாரைத் திருப்தி படுத்த என்று தெரியவில்லை. ஒரு தனி மனிதர் தன் மதத்தைப் பின்பற்றுவதிலோ, அல்லது பிரச்சாரம் செய்வதோ நம் நாட்டுக் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையென்று நம்புகிறேன். அதை நீதிமன்றம் ஒருவருக்கு மறுப்பதென்பது தவறாகவேப் படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பின் முழுவடிவத்தையும் நான் பார்த்து கருத்துச் சொல்வதற்குப் போதுமான சட்ட ஞானம் எனக்கு இல்லாதபடியால் இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்..

அவசியமான குறிப்பு : நான் நித்தியானந்தாவின் பக்தனில்லை. அதனால் யாரும் அது விஷயமாக என்னைத் திட்டிப் பின்னூட்டமிடவேண்டாம்..


oOo


தமிழ்நாட்டில், பழையூரில் ஒரு இடத்தில் தெருவிளக்கு எரிவதில்லையாம். அதனால் யாரோ ஒரு குறும்புக்காரை விளக்குக் கம்பத்தில் அரிக்கேன் விளக்கைக் கட்டி விட்டிருக்கிறார். நல்ல ஐடியா..

சில வருஷங்களுக்கு முன் 1980களில், மயிலாடுதுறை தலைமைத் அஞ்சல் அலுவலகம் அருகில், ரோடு மிக மோசமாக் இருந்தது. அப்பொழுது மழை வேறு சேர்ந்து கொண்டதால், அருகே நிறைய சேறும் சகதியுமாக ரொம்ப மோசமாக இருந்தது. அப்பொழுது பாரதீய ஜனதா கட்சியினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் அஞ்சல் அலுவலகம் அருகில் “நாற்று நடும் போராட்டம்” நடத்தி ரோட்டிலேயே நாற்று நட்டு விட்டார்கள்.. கொஞ்சம் புதுமையாக இருந்தது. அதற்குப் பலனாக அரசாங்கத்தில் உடனேயே ரோடு போட்டுக் கொடுத்து விட்டார்கள்.. அப்பொழுதெல்லாம் ஜெகவீரபாண்டியன் ரொம்ப ஒல்லியாகவும் பணக்காரராக இல்லாமலும் இருந்தார்.. பிறகு MLA ஆனபிறகு எல்லா விதத்திலும் வளர்ந்து விட்டார். அப்பொழுதெல்லாம் அவர் பெயரை எழுதும் போது ஜெகவீரபாண்டியன் M.A (Eco), M.A (Pub Adm), M.Phil, B.Ed. என்று அவர் படித்த படிப்பை முழம் நீட்டு எழுதுவார்கள்.. இப்பொழுதெல்லாம் ஜேவீ Ex. MLA. மட்டும் தானாம்.. ஹூம்ம்ம்ம்

oOo

இந்த வருடம் உறவினர் பையன் ஒருவருக்கு (சொல்லிக்கொள்ளும் படியான மதிப்பெண்களில்லை) கல்லூரியில் அட்மிஷன் வாங்க வேண்டியிருந்தது. ரொம்ப வேண்டிய பையன். எல்லோரும் காலேஜ அட்மிஷனுக்கு பிப்ரவரியிலிருந்தே துண்டு போட்டுக்கிட்டிருக்கும் போது இவர்கள் தேர்வு முடிவுகள் வந்து 6 வாரம் கழித்து வந்தார்கள்...பையன் OC மாணவர் வேறு..என் அண்ணன் மகனுக்கு நான்கு வருடம் முன்பு 7 லட்ச ரூபாய் கேபிடேஷன் கொடுத்து கோவையில் ஒரு பெரிய்ய கல்லூரியில் பிப்ரவரி மாசமே (12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே) சீட்டு வாங்கினோம்.. இப்பவோ ஜீன் மாதம் வேறு.. மார்க்கும் அவ்வளவாக இல்லை.. ஊரில் உள்ள ஒரு பதிவர் தம்பிக்குப் போன் போட்டேன்..

” ராஜா... நம்ம ஊரு காலேஜ் எதிலயாவது நம்ம பையனுக்கு ஒரு சீட்டு கிடைக்குமா? மார்க்கை மட்டும் கேட்காதே...”

” என்னண்ணே.. ஒரு சீட்டாண்ணே வாங்கிடலாம்ணே.. ”

”ரொம்ப லேட்டாயிருச்சே ராஜா.. மேனேஜ் மெண்ட் கோட்டாவெல்லாம் முடிஞ்சிருக்குமே...”

”பரவாயில்லண்ணே.. ஆமாம்..நீங்க ஏண்ணே என்னைக் கேக்கிறீங்க.. உங்க பேரைச் சொன்னாலே எதுவும் கேக்காம சீட்ட்டு கொடுத்திருவாங்கண்ணே... ”

”நெசம்ம்ம்மாவா ராசா? என் பேருக்கெல்லாம் எஞ்சி்னீயரிங் காலேஜ் சீட்டெல்லாம் குடுக்குறாங்களா...?”

”என்னண்ணே.. நானே இப்பப் போயி உங்க பேரைச் சொல்லி சீட்டு வாங்கிருவேண்ணே.. உங்க பவரே உங்களுக்குத் தெரியலியேண்ணே....”

“இதெல்லாம் சொன்னா எங்க வீட்டுத் தங்கமணி கூட நம்ப மாட்டாளே ராஜா”

“அப்படி ஏதாவது சொன்னால் அண்ணிகிட்டே போனைக் குடுங்கண்ணே... நான் சொல்றேன்..”


.......

சில தொலைபேசித் தொடர்புகளில் எந்தவித சிரமமும் இல்லாமல் பையனுக்கு நல்ல கோர்ஸில் நல்ல காலேஜில் எந்தக் காசும் வாங்காமல் சீட்டு கிடைத்துவிட்டது.. என் பெயரும் ஒரு காரணமென்பதில் ஒரு மகிழ்ச்சிதான்.. அமெரிக்காவிலிருந்த தங்கமணி நேரில் சென்று கல்லூரியில் சேர்த்தாலும்.. எனக்கென்னவோ வீட்டில் கிடைக்கும் மதிப்பில் பெரிய்ய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை

ஆண்டவனுக்கு நன்றி !! பையன் நல்லமுறையில் படித்துத் தேறுவது இனி அவன் கையில்..

oOo

இந்த YouTube காணொளியில் குழந்தை வர்ஷா ஹரிகதா காலேட்ஷேபம் செய்கிறது. சீதா கல்யாணம். தொலைக்காட்சி சீரியல்களின் வரவால் தொலைந்து போகும் அபாயத்திலிருந்த இந்தக் கலை மறுபடியும் மொட்டு விடுவதில் மிகமிக மகிழ்ச்சி..

குழந்தை வர்ஷாவின் காணொளியைக் கேளுங்கள்.. உங்கள் ஆசிகளும் குழந்தைக்குச் சேரட்டும்..இன்னும் எழுத வேண்டியது நிறைய்ய இருக்கிறது.. அக்கினிச் சித்தருக்கு பதில் சொல்ல வேண்டும்.. இந்த இடுகையில் அக்கி்னி சம்பந்தமான விஷயங்கள் அதிகம் எழுதிவிட்டதால் .. அடுத்த இடுகையில் (அது நூறாவது ... அதில் வேண்டாம்..) எழுதி விடலாம்...

Tuesday, May 11, 2010

98. மாநகர மேயருடன் சீமாச்சு...

"திங்கள்கிழமை, சார்லெட் நகர மேயருடன் மதிய உணவருந்த நம் கம்பெனியிலிருந்து 8 பேர் போக வேண்டும். நீங்களும் வருகிறீர்களா?” - என்று ஒரு அதிகாரி சொன்னவுடனேயே, பறக்காவட்டித் தனமாக “இதோ வந்தூட்டேன்” அப்படீன்னு சொல்லாமல் ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் சொல்கிறேன்” என்று வாய்தா வாங்கிவிட்டேன்..முடிவு சொல்வதற்கு முன்னர் வடக்கு கேரலைனா மாநில சார்லெட் மாநகர மேயர் Anthony Foxx பற்றி கொஞ்சம் கூகுளிட்டுத் தெரிந்து கொண்டேன். மேயர்னா இங்கெல்லாம் ”மாநகரத் தந்தை “ என்றெல்லாம் பந்தா பண்ணுவதில்லை போல. 154 பவுன் தங்க மாலை போட்டுக்குவாரா? ஒரு சன் டீவீ , மூன் டீவீ கவரேஜ் உண்டா? அட்லீஸ்ட் இன்னும் 5 வருஷத்துக்குள்ள ஒரு துணைமுதல்வர் ஆவதற்கு சான்ஸ் உண்டா? ‘அஞ்சா நெஞ்சன்” மாதிரி அண்ணன்மார்கள் யாராவது உண்டா என்றெல்லாம் ஆராய்ச்சி செஞ்சுத்தான் பார்த்தேன்.. ஹூஹூம் .. ரொம்ப எளிமையான + இனிமையான + இளமையான மேயர் சார்லெட்டுக்கு வாய்த்தது ஒரு அதிர்ஷ்டம்தான்.

சார்லெட் மாநகரத்தை ஒரு “உலகத்தரம்” வாயந்த நகரமாக்குவதற்கும், இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், நகரத்தில் பன்னாட்டுக் கலாச்சாரத்தைப் போற்றுவதற்கும், வெளிநாட்டு மக்கள் இந்த நகரத்தின் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தை பேணிக்காக்க உதவியதற்கு நன்றி நவிலவும் இந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. என் கம்பெனி சார்பில் ஆசிய அமெரிக்கர் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டிருந்தேன்.

மேயரின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ள சார்லெட் பன்னாட்டு அமைப்பின் (Charlotte International Cabinet) தலைவராக இருக்கும் திருமதி டாக்ட்ர் மஹா கிங்க்ரிச் (அமெரிக்கரை மணந்து இங்கு பலவருடங்களாக இருக்கும் ஒருஇந்தியப் பேராசிரியை. பரதநாட்டியத்தில ப்ண்டிதையும் கூட..) தலைமை தாங்க, இந்திய இந்து கோவிலின் பிரதிநிதி விஷ்ணு சஹஸ்ரநாமத்திலிருந்து சில ஸ்லோகங்கள் சொல்லி தொடங்கி வைக்க, விழாவும், மதிய உணவும் மிக நன்றாக நடந்தது.

இந்த ஊரு அரசியல்வாதிகளெல்லாம் அவங்க அவங்க ஊரை முன்னேற்றுவதற்கு எப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று நினைத்த போது ரொம்ப பெருமூச்சு தான் வந்தது. மாநகர வளர்ச்சி குறித்தான் மேயரின் சிந்தனைகள் பாராட்டத்தக்கதாக இருந்தன. இனிமேல் இவர் செய்வதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அமெரிக்காவில் இவ்வளவு வருஷமிருந்திருந்தாலும், “ஊருக்கு யார் மேயர்” என்றெல்லாம் தெரிந்து கொண்டதில்லை. ( நாங்களெல்லாம் , மாநில கவர்னர், நாட்டுத் தலைவர் லெவல் மட்டும் தான் கேட்டுக்கிறதாக்கும் !!). இனிமேல் உள்ளூர் விஷயங்களிலும் ஏதோ ஒரு விஷயத்தில் பங்கெடுத்துக்கிறதென்று முடிவு பண்ணியாச்சு..

“மேயருடன் லஞ்ச்” என்று முதல்நாள் வீட்டில் பந்தா விட்டதில், 7 வயசு சூர்யாவுக்கு இருப்பு கொள்ளவில்லை.. “Daddy, when you meet the Mayor, can you get his autograph for me? " என்று கேட்டு அவளின் நோட்டையும், பேனாவையும் உடனேயே என் ஆபீஸ் பையில் வைத்து விட்டாள். திங்கள் கிழமை ஸ்கூலுக்குக் கிளம்பும் போது “மேயர்கிட்டே ஆட்டோகிராப் வாங்கிட்டு வரட்டுமாடா” என்று கேட்டதற்கு, ’நம்ம அப்பாவாவது மேயர்கிட்டே பேசறதாவது’ என்று எண்ணம் வந்திருக்கும் போல, “Try Daddy, But you dont need to.." என்று ராகமாக சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்..

மறக்காமல் சூர்யா நோட்டை மேயரிடம் எடுத்துச் சென்று, அவளை (இரண்டாங் கிளாஸ்)ப் பற்றி பெருமையாக சொல்லிவிட்டு அவளுக்கு அவள் நோட்டில் அதில் அவர் ஆட்டோகிராப்பும் வாங்கிவிட்டேனாக்கும்.

திங்கள் மாலை அவளிடம் ஆட்டோகிராப் நோட்டையும் கொடுத்து, நான் எடுத்துக் கொண்ட போட்டோவையும் காட்டிய பிறகு அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. மறுநாள் (இன்று) அந்த நோட்டை எடுத்துப் போய் அவள் வகுப்பில் ஆசிரியையிடமும், மற்ற நண்பர்களிடமும் காட்டிப் பெருமைப் பட்டாயிற்று.. “Soorya, you are so lucky to have our Mayor's autograph" என்று அவள் வகுப்புத் தோழிகள் சொன்னார்களாம்..

oOo oOo

மயிலாடுதுறை செல்லும் போது எங்க ஊரு MLA, MP, Chairman, பல கவுன்சிலர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வழக்கமுண்டு. பல மக்கள் பிரதிநிதிகள் எங்கள் வீட்டுக்கும் வருவார்கள்.. போவார்கள்.. அப்படிப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியுடன் “உற்சாக பான விருந்து” சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த இனிய மாலைப் பொழுதில், அவர் மூன்றாவது ரவுண்டு தாண்டியபோது கேட்டது “சீனு... நீங்க தான் அமெரிக்காவுல பெரிய்ய பேங்குல வேலைப் பாக்கறீங்களே.. கொஞ்சம் பணம் தர்றேன் .. உங்க பேங்க்குல அக்கவுண்ட் ஆரம்பிச்சிப் போட்டுத் தர்றீங்களா?”

அவர் “கொஞ்சம்” என்று சொன்ன அமவுண்டில் எங்க ஊரு DBTR தேசிய மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாக இடித்து 100 வகுப்பறைகளுடன் புதிய கட்டிடம் கட்டி மாணவர்கள் வசதியாகப் படிக்கலாம். நம்நாட்டுக்கு நல்ல எண்ணங்களுடைய அரசியல்வாதிகளைத் தருவதற்கு இறைவனைப் பிரார்த்திக்கிறேன் !!Tuesday, April 27, 2010

97. சீமாச்சுவின் தாம்பூலம் - 28 ஏப்ரல் 2010

பள்ளியில் நாம் படிக்கும் போது நமக்கு அமையும் ஆசிரியர்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றங்களை உண்டாக்குகிறார்களென்பது வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரைச் சந்திக்கும் போதும் உணரமுடியும். ஆனந்த விகடனில் வரும் ஒரு தொடரில் உதயச்சந்திரன் IAS அவர்களின் பேட்டியிலிருந்து சில வரிகள்..

பள்ளியில் குமாரசாமின்னு ஒரு சார்தான் எனக்கு சரித்திரம், பூகோளம் பாடங்கள் எடுத்தார். வகுப்புக் குள் நுழைந்ததும் 'குப்தர்கள் காலம்'னு கரும்பலகையில் எழுதிட்டு, 'ராஜஸ்தான் முதல்வர் யார்?', 'கியூபாவின் அதிபர் யார்?'னு தினமும் சில பொதுஅறிவுக் கேள்விகளோடுதான் பாடங்களை ஆரம்பிப்பார். அவருக்காகவே பள்ளிப் பருவத்திலேயே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் வந்தது. அந்தப் பழக்கம் கல்லூரிக்குள் கால் வைக்கும்முன்னரே தி.ஜா., சுந்தர ராமசாமி போன்றோர்களைப் பரிச்சயப்படுத்தியது. பொது அறிவு, தமிழ், இலக்கியம்னு என்னைச் சுத்தி அமைஞ்ச சூழலை கல்லூரிப் பருவம் வரை அபாரமாக் கிரகிச்சுக்கிட்டேன்!''

உதயச்சந்திரன் IAS
வய்து 38
நிர்வாக இயக்குநர்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

நான் படித்த எங்கள் ஊர் மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளியில் இதுபோல நிறைய ஆசிரியர்கள் மாணவர்க்ளின் முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தார்கள்.. எனக்கு அமைந்த ஒவ்வொரு ஆசிரியருமே நான் பெற்று வந்த வரம் தான்.

ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் என் மகளுக்கு சென்ற வாரம் என் மகளுக்கு அல்ஜீப்ரா சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிந்த்து நான் என் ஒன்பதாம்/பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர் திரு எஸ். கிருஷ்ணமூர்த்தி ஐயரை (Shri SK sir) அவர்களை எனக்குத் தெரியாமலேயே இமிடேட் செய்து கொண்டிருந்தேன் என்பது. எனக்குக் கணித்த்தில் இயல்பாகவே ஈடுபாடு இருந்ததென்றாலும், அதைப் பலவகையில் தூண்டி என்னை வளர்த்தது என் ஆசிரியர் என்பதை என்னால் எங்கும் தெளிவாகக் கூற முடியும்.

எங்கள் பள்ளி ஆர்குட் குழுமத்தில் 1990 களில் எங்கள் பள்ளியில் படித்த மாணவரொருவர் எழுதிய பின்னூட்டம் "எனக்குக் கணிதம் சொல்லிக்கொடுத்த ஜெயசீதா மேடம் எனக்குத் தெய்வம் போன்றவர்.. அவர் மட்டும் எனக்கு ஆசிரியராக அமைந்திராவிட்டால் என் இக்காலத்தை என்னால் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது"

oOo

குமுதம் ரிப்போர்ட்டரில் நித்யானந்தா பற்றி சாரு நிவேதிதா எழுதி வரும் தொடர் பெரிய அபாண்டம். நித்யானந்தா செய்ததையோ அல்லது அவர் சீடர்களின் நம்பிக்கையைக் குலைத்ததையோ நான் மறுக்க வில்லை. ஆனால் அவரைப் பற்றி சாரு எழுதுவது அவதூறு என்பது மட்டும் அந்தத் தொடரைப் படித்தாலே புரியும். ஒரு கணவன் மனைவிக்கிடையில் விவாகரத்து நடக்க் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதை விட்டு விட்டு நித்யானந்தாதான் குடும்பத்தைப் பிரித்து விட்டார், சொத்தை அபகரித்து விட்டார் என்றெல்லாம் எழுதுவது கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை. அவர் எழுத்திலேயே சொல்லிவிடலாம் அவர் சொல்லுவதெல்லான் எந்த தருக்க வாதத்திலும் சேர்க்க முடியாதென்பதை..

எதை வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி வேண்டுமானாலும் மனசாட்சியில்லாமல், சாட்சியங்களில்லாமல் எழுதலாம் என்று வந்த பிறகு, இவரையெல்லாம் படிப்பவர்களை நினைத்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நியாயமாக, நல்லதாக சாரு எதை எழுதினாலும் நான் படிக்கக் காத்திருக்கிறேன். குப்பைகளைப் படித்த் பின் அதற்கான நேர விரயத்தையும் மன உளைச்சல்களையும் நினைத்தால் தான் வேதனையாகிறது.


oOo

சமீபத்தில் மிகப் பிரபலமான் ஊடக நண்பரொருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன், கழுகு, வம்பானந்தா இன்ன பிற பத்திரிக்கை செய்திகளைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்பொழுது அவர் சொன்னது இத்தான் " அவற்றில் வரும் அரசியல் யூகங்கள் மற்றும் செய்திகள் எல்லாம் முழுக்க முழுக்கக் கற்பனைகளே. அரசியல்வாதிகளின் பாத்திரங்களும் அந்த நிகழ்ச்சி நடக்கும் இடங்களும் உண்மைதான். மற்ற் செய்திகளெல்லாம் அவர்கள் நடத்தும் மெகா சீரியல்கள் மாதிரிதான். நன்றாகக் கூர்ந்து கவனித்தால் தெரியும். அவர்களே செப்டம்பர் மாதம் தேர்தல்.. கலைஞ்ர் மனத்தில் எண்ண்வோட்டம் என்றெல்லாம் எழுதி ஜல்லியைடிப்பார்கள். சில வாரங்கள் கழித்து அவர்களே தேர்தலை 2011 க்கு மாற்றிக் கொள்ளலாம் என்று கலைஞர் முடிவெடுத்து விட்டார் என்று எழுதுவார்கள்.. தேர்தல் என்னவோ எப்ப வேண்டுமானாலும் நடக்கும் .ஆனால் அதற்கான பரபரப்பையும் அதனைப் ப்ற்றிய யூகங்களையும், உரையாடல்களையும் கற்பனையிலேயே எழுதி காசு பார்ப்பதென்பது தான் இத்தகைய பத்திரிகையின் சாரங்கள் என்று பல் ஆதாரங்களுடன் அவர் அடுக்கிய பொழுதுதான் அதன் உண்மைமுகம் எனக்கும் புரிந்த்து.


அப்ப நம்மைப் போன்ற பொது ஜனங்களைப் பற்றி இந்தப் பத்திரிகைகள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றன்..?oOo

நித்யானந்தாவுக்கு நெஞ்சுவலி என்று செய்தி படித்தவுடன் "பரவாயில்லையே..இவரும் அரசியல் வாதி அளவுக்குத் தேறிவிட்டாரே" என்று தான் பட்டது.. ஆனால் இன்றைய செய்தி "நித்யானந்தா மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்" என்று படித்த போதுதான் செய்தியை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று புரிந்தது. "உள்நோயாளிப் பிரிவிலிருந்து discharge செய்யப்படுவதற்கு" டீசண்டான தமிழ் வார்த்தை எனக்கும் தான் தெரியவில்லை..


அது சரி, ஒருத்தர் எனக்கு நெஞ்சுவலிக்கிறதென்று சொல்லும் போது.. "அதெல்லாம் உனக்கு வலிக்கவில்லை.. நீ வீட்டுக்குப் போகலாம் என்று 6 மணி நேரத்தில் எப்படிக் கூறமுடியும்?" என்ன மாதிரி டெஸ்ட்டுக்கள் எடுத்திருந்தால் அவ்வளவு நம்பிக்கையுடன் "உனக்கு வலியெல்லாம் இல்லை.. நீ போகலாம் " என்று சொல்ல முடியும்? நெஞ்சுவலி என்று கதறிக்கொண்டு மருத்துவமனையில் தங்கியிருந்த எந்த அரசியல்வாதியையும் இது போல திருப்பி அனுப்பியதாக நான் படித்ததில்லையே? சமீபத்திய உதாரணமான் சத்யம் ராமலிங்க ராஜு கூட தீவிரக் கண்காணிப்பில் சில வாரங்கள் மருத்துவமனையிலேயே இருந்ததாகத் தான் நினைவு.


நித்யானந்தாவை நான் ஆதரிக்க வில்லை. என்னைப் பொறுத்தவரை அவரை நான் வணங்கவோ பின்பற்ற்வோ இல்லை. சட்டம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான சலுகைகளையும் தீர்ப்புக்களையும் வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் வாழும் ஒரு சராசரி குடிமகன் தான்.

oOo


1968 ம் வருடத்திய விகடன் இதழ்களிலிருந்து இரு துணுக்குகள் :


துணுக்கு 1

லண்டன் நகரில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் தானாகவே இயங்கும் மாடிப்படி (Escalator) முதன் முதலில் 1911 ல் பொருத்தப் பட்ட போது பொது ஜனங்கள் அதில் சாதாரணமாக ஏறுவதற்கு அஞ்சியதால், அவர்களுக்கு பயம் போவதற்கும், அதில் ஆபத்து ஒன்றுமில்லை என்று காண்பிப்பதற்கும் மரக் கால்களையுடைய மனிதன் ஒருவனை அந்தத் தானியங்கி மாடிப்படிகளில் கீழேயும் மேலேயும் அடிக்கடிப் போய்வரச் செய்தார்கள்.

ஆனால் அந்த ஏற்பாடு அதிக நாட்கள் நிடீக்கவில்லை. மரக்கால் மனிதனும் சீக்கிரமே வேலையிலிருந்து நீக்கப்பட்டான்.

அதற்குக் காரணம் "இந்த மாதிரியான புதுமையான் கருவிகளை உபயோகிப்பதால் தான் இந்த மாதிரி ஆகிறது" என்று மரக்கால்களையுடைய மனிதனைப் பார்த்து மக்கள் அதிகமாக பயம் கொண்டது தான்.


- 1911 லேயே தானியங்கி மாடிப்படிகளும் அதுவும் பொதுமக்களுக்காக இரயில்வே ஸ்டேஷன்களில் (!!!) , மரக்கால் பொறுத்திய மனிதர்களும் லண்டனில் இருந்தார்கள். இந்தியாவுக்கு வர எவ்வளவு காலமாயிருக்கிறது !!!!!

துணுக்கு 2

கோவாவின் ஒருபகுதியில் சமீபத்தில் நடந்த் பஞ்சாயத்துத் தேர்தலில் ஒரே தொகுதியில் இரு சகோதரர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட்டார்கள் . தொகுதி மக்கள் எவ்வளவோ சொல்லியும் இருவரில் ஒருவர் வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்து விட்டன்ர். எனவே தொகுதிமக்கள் எவரும் தேர்தலில் ஓட்டுப் போட மறுத்து விட்டனர்.

இரு சகோதரர்களும் தங்களுக்காகத் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அவர்களது தாயார் மூத்தவருக்கு வாக்களித்துவிட அவர் ஜெயித்து விட்டார்.


இளையவருக்கு ஒரே ஒரு (அவரது) வாக்கு மட்டும் தான். என்றாலும் அவர் டெபாஸிட் இழக்கவில்லை. காரணம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கை அவர் பெற்றுவிட்டதால் !!!

இதுக்குத்தான் 49-O வேண்டுமென்பது !!
Monday, April 26, 2010

96. உலகம் பல விதம்..

உன்னுடைய பிள்ளைகள் கெட்டவர்களாயிருந்தால் நீ அவர்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க வேண்டாம். அவர்கள் நல்லவர்களாயிருந்தால் உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை - பல்கேரியா

ஒர் ஆணி ஒரு லாடத்தைக் காக்கும்; ஒரு லாடம் ஒரு குதிரையைக் காக்கும்; ஒரு குதிரை ஒ்ரு வீரனைக் காக்கும்; ஒரு வீரன் நாட்டையேக் காப்பான் - துருக்கி

காப்பியும் காதலும் சூடாயிருந்தால் தான் ருசி - ஜெர்மனிபதவியில் இல்லாத போது ஒருவன் கண்டிக்கிற குற்றங்களைப் பதவியில் அமர்ந்தவுடன் அவனே செய்கிறான் - சீனா


சில வருடங்களுக்கு முன்பு, மரவண்டு என்ற கணேஷ்குமார், நிறைய தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்துத் தந்தார். ரொம்ப சுவாரசியமாக இ்ருந்தது. அவற்றில் சில.

அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது

அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்

அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை

அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்

அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்

அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்

ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு

அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்; அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்; அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்; பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு; அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்; ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

குழந்தை “ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்

வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான்

இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது

உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..

உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்

தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது

பழமொழியில் உமி கிடையாது

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்; மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும்

உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்

ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண் – இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும் ஒரு விலாங்கும் இருக்கும்

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள் ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்

பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்

சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

பழைய இஞ்சியில் காரம் அதிகம்

உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்

பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்

மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம் விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்

தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்

தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

பின் குறிப்பு: மேலேயுள்ளவை பழமொழிகளின் தொகுப்பு மட்டுமே. அவற்றில் என் கருத்தென்று எதுவும் இல்லை. குறிப்பாக, மனைவி, திருமணம், மங்கையர் ஆகியவற்றின் மேல் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்புமில்லை