Wednesday, February 25, 2009

75. கலைஞர் மருத்துவமனையில் இருந்தால் இப்படித்தான் !!

சந்தடி சாக்குல இங்கிலீஷ் பேரு வெச்சிடறாங்க.. தலைவர் பாடுபட்டு வளர்த்த செம்மொழி தமிழ் என்னாத்துக்கு ஆகறது?


Hop On !! Hop Off !!




இதுக்கு என்ன ராஜா சரியான் தமிழ் !!

எனது சில முயற்சிகள் !!

1. உள்ளே குதி ! வெளியே குதி !

2. உள்ளே ,.. வெளியே.. சுருக்கமாக (உவ்வே)

3. ஏறும்மா !! எறங்கும்மா !! (கொஞ்சம் தடுமாறினால் இரட்டை அர்த்த வசனமாகிவிடும்)

4. நிக்குமோ நிக்காதோ ! (கொஞ்சம் ஜப்பானிய பேராவும் இருக்கும் )

5. வர்றியா !! வரலையா !!

உங்கள் கற்பனைக் குதிரைகளைக் கட்டவிழ்த்துவிடுங்கள்.. தேர்ந்தெடுக்கப்படும் பெயர், தலைவரிடம் ப்ரிந்துரைக்க ஆவன செய்யப்படும் !!


Saturday, February 21, 2009

74. எல்லா கடவுள்களும் இந்த வரிசைக்கு வாங்க !!

சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் நடந்த மோதல் தொடர்பாக, வக்கீல்களைக் கைது செய்யக்கூடாது என போலீஸாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக நீதிபதிகள் கூறினர். இது தொடர்பாக உள்துறைச் செயலரும் உத்திரவாதம் தந்துள்ளார்.

வக்கீல்கள் பொறுமையாக இருந்து ஒத்துழைக்க வேண்டுமென்று நீதிமன்றம் வேண்டிக் கேட்டுக் கொண்டது.

உள்துறைச்செயலரும், காவல் துறையும் தந்துள்ள உறுதிமொழிகள் :
  1. காயமடைந்த வக்கீல்கள், சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்யவில்லை.
  2. முறையான புலன் விசாரணைக்குப் பின், தலைமை நீதிபதிக்குத் தெரிவித்த பின் தேவைப்பட்டால் எதிர் காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்
  3. சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக விடுதலை செய்வோம்.
  4. நேற்று முந்தினம் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி கைது செய்யப்பட்டவர்கள், சரண்டர் செய்யப்பட வேண்டியவர்களை, ஹைகோர்ட்டில் சகஜ நிலை திரும்புவதை உறுதி செய்ய சொந்த ஜாமீனில் விடுவிப்போம்.
  5. சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் அரசின் செலவில் (அரசு மருத்துவமனையிலா அல்லது அரசு செலவில் தனியார் மருத்துவமனையிலா என்று தெரியவில்லை) சிகிச்சை
    அளிக்கப்படும்.
  6. சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவோம்.

இந்த உத்தரவாதங்களைப் பதிவு செய்த பெஞ்ச், இதைப் பின்பற்றவேண்டும் என்றும் தவறினால், கோர்ட் உத்தரவை மீறியதாகக் கருதப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இவனுங்க என்ன “வானத்துலேருந்து குதித்து” வந்தவங்களா? வக்கீல்களுக்கென்று தனிச் சட்டம் எப்போ வந்தது. இதே சட்ட திட்டங்கள் மற்ற தொழிலாளர்கள் கலவரம் செய்தபோது (இனிமேல் தயவுசெஞ்சு செய்யாதீங்கையா !!) எப்போவாவது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதா?

நீதிபதிகளை நம்ப முடியவில்லை!!


எழுத்தாளர்கள் (”சாரு கொஞ்சம் (வழக்கம் போலவே) ஓவர்!!) :

இது “தமிழ் எழுத்தாளர்கள் படைப்புக்கள் நாட்டுடமையாக்கம்” என்ற தலைப்பில் சாரு நிவேதிதா எழுதிய இடுகையிலிருந்து (மறுபடியும் சாருவா? மறுபடியும் சினேகாவா? சீமாச்சு இது அடுக்காது !!)


.... மேலும் பரிவுத்தொகை கொடுக்க இவர்கள் யார்? வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு அரசு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பொதுமக்களின் சேவகர்கள் கடவுள் ஸ்தானத்தில் இருக்கும் எழுத்தாளர்களின் மீது பரிவு காட்டுவதா? என்ன வேடிக்கை இது?

’ நான் கடவுள் ’ படத்தில் ஒரு காட்சி வருகிறது. குழந்தைகளையும், பெண்களையும், உடல் நலிவுற்றவர்களையும் கடத்திப் பிச்சை எடுக்க வைக்கும் நாயர் என்பவனை ருத்ரன் என்ற அகோரி அடித்து உதைத்துக் கொன்று தின்றும் விடுகிறான்.

அகோரிகள் பிரேதங்களை உண்பார்கள்.

ருத்ரனை போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகிறது.

” தம்பி, நீ யாரு? ” என்று கேட்கிறார் நீதிபதி.

“நான் கடவுள் ” என்கிறான் ருத்ரன்.

உடனே அவனை சித்தப் பிரமை பிடித்தவன் என்று நினைத்துக் கொள்ளும் நீதிபதி, போலீஸ்காரரை நோக்கி “ஏய்யா இப்படி கண்ட கண்ட ஆளுங்களையெல்லாம் இழுத்துண்டு வந்து நிறுத்தறே? ” என்று திட்டிவிட்டு, ருத்ரனைப் பார்த்து

“உன் விலாசம் என்ன? ” என்று கேட்கிறார்.

அதற்கு ருத்ரன் “நான் பஞ்ச பூதங்களிலும் இருப்பேன் ” என்கிறான்.

அந்த ருத்ரனைப் போன்றவர்கள் எழுத்தாளர்கள். (பிணந்தின்னிகளா சாரு ? )அவர்கள் சிருஷ்டிகர்த்தாக்கள். தேசம், மொழி, இனம், மதம், சாதி போன்ற எதற்கும் கட்டுப்படாதவர்கள். அவர்களுக்குப் போய் ஒரு சராசரி
மனிதன் பரிவுத்தொகை கொடுக்க முடியுமா?


கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு உண்டியலில் காசு போட்டு விட்டு வருகிறீர்கள். அதை பரிவுத் தொகை என்றா சொல்வீர்கள்? காணிக்கை ஐயா, காணிக்கை. இந்த உலகம் வாழ்வதற்கும், நீங்கள் ஜீவித்து இருப்பதற்கும் காரணமான கடவுளுக்குக் காட்டும் நன்றியின் ஒரு குறியிடே உண்டியலில் போடும் காசு. அதேபோல், இந்த மொழியும், இம்மொழி சார்ந்த கலாச்சாரமும், நாகரீகமும் செத்துப் போய் விடாமல் ஜீவித்திருக்க வைப்பவனே எழுத்தாளன். ( This is too much!! ) முடிந்தால் அவனுக்குக் காணிக்கை செலுத்துங்கள்; பரிவுத் தொகை தராதீர்கள்.


oOo

இவனுங்க யாருமே என் கண்ணோட்டத்தில் கடவுள்கள் இல்லை. சிலர் சில நேரங்களில் மட்டும் “மனிதனும் தெய்வமாகலாம்” என்ற நோக்கில் சிலருக்குக் கடவுள்களாகக் காட்சி தருகிறார்கள்.. அந்த வரிசையில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மனித நேயத்துடன் உதவுபவர்கள் ( வேறு யார் யார்னு நீங்க பின்னூட்டத்துல சொல்லுங்க ) , செயற்கரிய செய்யும் பெரியவர்கள் மட்டுமே கடவுள்களாக என் கண்ணுக்குத் தெரிந்தவர்கள்.


“நான் தான் கடவுள்” என்று நினைத்துக் கொண்டு அராஜகம் செய்பவர்களோ அல்லது சுய பிரஸ்தாபம் செய்து கொண்டிருப்பவர்களோ கடவுள் என்று நான் நினைப்பதில்லை !!


பின்குறிப்பு 1 : என்னை வாழ்த்த நினைக்கும் கடவுள்கள் வாழ்த்திக் கொள்ளலாம்.

பின்குறிப்பு 2: எனக்குத் தெரிஞ்சு சினேகா ரசிகர்கள் நிறைய பேருக்கு சினேகா கடவுளாக இருக்கிறார்... சில பேருக்கு (அபிஅப்பா?) தீபா வெங்கட், (நாமக்கல் சிபி?) நயன் தாரா போல..

73. சங்கத்தமிழும் சாரு நிவேதிதாவும்.

இன்று தமிழ்மணத்தில் ஒரு சுட்டியைப் படிச்சிக்கிட்டிருந்த போது அது எங்கெங்கோ போய் கடைசியில் “தமிழ் எழுத்தாளர்கள் படைப்புக்கள் நாட்டுடமையாக்கம்” என்ற தலைப்பில் சாரு நிவேதிதா எழுதிய இடுகையில் போய் நின்றது.


ஒரு எழுத்தாளரின் படைப்பென்பது அவரது மற்றும் அவர் குடும்பத்தாரது உடைமை. அவர்களின் சம்மதமின்றி அவற்றை நாட்டுடமையாக்குதல் என்று பேசுவதே தவறு என்ற சாருவின் கருத்துக்கு முழுவதும் (இந்த ஒரு கருத்துக்கு மட்டுமே.. அந்தப் பத்தியில் சாரு வேறு சில விஷயங்கள் எழுதியிருந்தார். அவையெல்லாம் விவாதத்துக்குரியவை !!) நான் உடன் படுகிறேன். அது தான் நியாயம்..


அந்தப் பத்தியில் சாரு எழுதுகிறார்..

சங்க காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது: அரசனைக் காண வந்த ஒரு புலவன் களைப்பு மிகுதியால் அரசனின் கட்டிலில் உறங்கி விட, அதை எதேச்சையாகக் காண நேரும் அரசன் அந்தப் புலவனின் பக்கத்தில் நின்றபடி அவன் எழுந்து கொள்ளும் வரை சாமரம் வீசினான்.

சாரு குறிப்பிட்ட அந்த சங்ககாலப் புலவர் பெயர் மோசு கீரனார். அந்தத் தமிழ் மன்னன் சேர நாட்டையாண்ட தகடூர் எறிந்த சேரமான் இரும்பொறை. அவர் படுத்துறங்கியது அரசனின் கட்டில் அல்ல.. அது முரசுக்கட்டில்.

இந்தச் சம்பவம் பற்றிப் புறநானூறு பாடல் 50 -ல் மோசு கீரனார் பாடிய பாடலுக்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சங்கத்தமிழ் புத்தகத்தில் விரிவாக எழுதுகிறார்.



கலைஞர் அவர்களின் வரிகள் தனி நிறத்தில் கொடுக்கப் பட்டுள்ளன.


மன்னனைத்தேடி வெகுதூரம் நடந்து வந்து களைப்புடன் வந்த மோசு கீரனார் ஓய்வு தேடினார். மன்னனை அவரால் உடனே சந்திக்க இயலவில்லை. மன்னன் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று கேள்வியுறுகிறார் (சாப்பிட்ட்டுவிட்டு மத்யானத் தூக்கம் போடுவது சங்கத்தமிழரின்
பழக்கம் போலும் !!)


.... மன்னன் உறங்குவது கேள்வியுற்று
அவனைக் காண அரண்மனையில் காத்திருந்தார்.
அவருக்கும் ஓய்வு கொள்ள வேண்டுமென்றோர் உணர்வு;


வீரமுரசம் வைக்கின்ற கட்டிலொன்று
வெண்மலர்கள் நிறைந்தவாறு இருக்கக்கண்டார்!
குருதி வழியும் போர்முகத்தில்
கொட்டுகின்ற முரசு வைக்கும்
கட்டிலென்று அறியாத புலவர் ஏறு
கண்ணுறங்க வசதியெனப் படுத்துக் கொண்டார் !!


வெற்றிகொள் முரசு வீற்றிருக்கும் கட்டில்மீது
வேறெவரும் படுப்பதெனில் பெருங்குற்றமென்
வேந்தர்கள் வெகுண்டெழுந்து தலைதனையே
வெட்டி வீழ்த்தும் காலம் அது!!


நீராட்டி எடுத்து வர வீரர் சிலர் - அந்தப்
போராட்டக் கள முரசை அகற்றியதால்
விவரம் தெரியா வித்தகப்புலவர் - அதில்
விழிகளை மூடி உறங்கலுற்றார் !


சிறிது நேரம் சென்ற பின்னர் ...அரசன் உறக்கம் களைந்து விழிப்புற்றான் !!


மாளிகையின் முன்புறத்தில் உலவுவதற்கு
மாமன்னன் வந்தபோது வியப்புற்று
முரசுக் கட்டிலருகே விரைந்தான் - அங்கு
மோசு கீரனார் உறங்குதல் கண்டான் !

"வாள் எடுத்து வந்திடவோ அரசே?" யென்று
ஆள் ஒருவன் வணங்கி நின்றான்...

அரசனின் விழிகள் நெருப்பைப் பொழியும்;
அவனது மொழியில் ஆத்திரம் வழியும்;
என்றந்த வீரன் நினைத்தற்கு மாறாக
”எடுத்து வா விசிறியை!” என்றான் வேந்தன் !!


காவலனோடிக் கொண்டு வந்த கவரியினைக்
கைகளில் ஏந்திக் கவிஞர் மீது
கனிவுடன் வீசிப் பணிவிடை புரிந்தான்
நனிமிகு புகழுடன் நாடாண்ட வேந்தன் !!


களைப்பு நீங்கிப் புலவர் எழுகின்ற வரையில்
கவரி வீசுதலை மன்னன் நிறுத்திவிடவில்லை..
நெடுநேரம் கழிந்த பின்னர் எழுந்த புலவர்;
திடுமெனக் குதித்தார் கட்டிலிலிருந்து;
“மன்னவனே என்ன இது?” எனத்துடித்தார்! - “இந்தச்
சின்னவன் பெற்ற பேறு” என்றான் சேரன் !!

“தமிழுக்குத் தொண்டு செய்தால் - அந்தத்
தமிழ் உள்ளளவும் வாழ்வோம் என்றடிவாக
என்னகத்தே வந்துள்ள தங்களுக்கு
நான் செய்த தொண்டு இஃதே” என்றான் சேரன்!

தேன் பெய்த பழச்சாறாய் பாட்டொன்றைப் பரிசாய்த் தந்தார் புலவர் !!!


‘மாசுஅற விசித்த வார்புஉறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதிவேட்கை உருகெழு முரசம்’ (புறநா.50)


வலிமையும் பெருமையும் உடைய தலைவனே! குற்றமில்லாது பின்னப்பட்ட வாரையுடையதும், கருமரத்தால் அழகுறச் செய்யப்பட்டதும், மயிர்ப்பீலிகளாலும் நவரத்தின மணிமாலைகளாலும் அணி செய்யப்பட்டதுமான இம்முரசு கட்டில் எண்ணெய் நுரைபோன்று மென்மையான உழிஞைப்பூக்களால் இனிது விளங்க, அதன் தன்மை அறியாது ஏறி உறங்கிக் கிடந்த என் தலையைக் கொய்யாது எனக்கு பணிவிடை செய்தவனே நீ வாழ்க எனப் பாடுகிறார்.



சாருவின் எழுத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்பு அவரது எழுத்துக்களில் அவரது சீரோ டிகிரி புத்தகத்தைப் படிக்காதவர்கள் என் எழுத்துக்களைச் சிலாகிக்க முடியாது என்ற தொனி முகத்தில் அறையும். என்னுடன் நியூயார்க் இரயிலில் வரும் நண்பரிடம்
இருந்த அந்தப் புத்தகத்தைக் கடன் கேட்டேன். என்னை ஒரு மாதிரி பார்த்தவர், “உங்க சொந்த ரிஸ்க்குல படிங்க !! அப்புறம் என்னைத் திட்டாதீங்க” என்று சொல்லித்தான் கொடுத்தார். மூன்று பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. ரண வேதனையாக இருந்தது. அந்தப் புத்தகத்தைத் தலை சுற்றி வீசியெறிந்து விட்டு நண்பரின் அதற்கான விலையைக் (”30 ரூ புத்தகத்தை 10 ரூபாய்க்காவது வாங்கிக்குங்க சார்” புத்தகக்கடைகாரர் கெஞ்சிக் கொடுத்ததாகக் கூறி ) கொடுப்பதாக கூறியபோது என் வீட்டில் ஒரு காபி மட்டும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு நன்றி சொன்னார் !!


அது முதல் சாருவை எப்பொழுதாவது “படிக்க எதுவுமே இல்லாதபோது மட்டுமே படிப்பது வழக்கம். அவர் எழுதும் பல விஷயங்கள் (குறிப்பாக லத்தீன் அமெரிக்க விஷயங்கள்) என் தலைக்குள் நுழைவதில்லை. எந்த இலக்கியத்திலுமே எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது. ஒரு
சாதாரண சராசரி வாசகனுக்கு உள்ள ஆர்வம் மட்டுமே எனக்கு உண்டு !!


ஆனாலும், இந்த “மோசு கீரனார்.. முரசுக்கட்டில் எல்லாம் 8ம் வகுப்புப் படிக்கும் போது தமிழ்ப் பாடத்தில் படித்ததுதான்”. சாரு பத்தி படித்ததுமே இவர்தான் அவர்... இந்தக் கட்டில் தான் அந்தக் கட்டில் எனப் புரிந்துவிட்டது. அரசர் சேர அரசர் என்று தெரிந்ததேயொழிய முழுப்பெயர் தெரியவில்லை.
கலைஞரின் சங்கத் தமிழ் புத்தகத்தைப் புரட்டியவுடன் சரியாக 5 நிமிடங்களில் அல்வாவாக விஷயம் கிடைத்தது.


ஒரு சாதாரண வாசகப் பாமரனாக, இப்போ சாரு நிவேதிதா அவர்களிடம் ஒரு கேள்வி (கேள்வி கேட்பதுதான் இப்ப வலப்பதிவுலக ஃபேஷன்.


“எது எதுவோ வாயில நுழையாத இலத்தீன், பிரெஞ்சு, கூபா (இதை இப்படித்தான் சொல்ல வேண்டுமென்று எல்லாருக்கும் சாரு கத்துக் கொடுத்தார் !!), பிரேசில் எழுத்தாளர் இலக்கிய ஆர்வலர் பேரெல்லாம் ஆராய்ஞ்சு எழுதறீங்க. இந்த மோசுகீரனார் விஷயத்தை கொஞ்சம்
விவரமாப் பாத்து எழுதியிருக்கலாமே. இது வெறும் 8-ம் கிளாஸ் விஷயமாயிற்றே.. இதெல்லாம் தாண்டித் தானே வந்திருப்பீங்க !! இதுக்கு ஒரு 5 நிமிஷம் செலவழிக்கறதுல உங்களுக்கு என்ன தயக்கம் ??




பின் குறிப்பு 1 : இந்தக் கேள்விக்கு சாரு என்னைத் திட்டினால் அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். இது வெறும் கேள்வி மட்டுமே. இந்தக் கேள்விக்கு சாரு பதில் சொல்லித்தான் தீர வேண்டுமென்று “சாகும் வரை 4 நாட்கள்” உண்ணாவிரதமிருக்கவோ அல்லது சாரு வீட்டுக்கெதிரில் தீக்குளிக்கவோ நான் தயாரில்லை !!


பின் குறிப்பு 2: இந்தப் பதிவுக்கு சினேகா படம் எதற்கு என்ற நியாயமான கேள்விக்கு என் பதில்,”சாருவுக்கான என் கேள்வி வெறும் நட்புணர்வில் மட்டுமே கேட்கப்பட்ட கேள்வி. மற்றபடிஅவரையோ அவர் வாசகர்களையோ புண்படுத்துவதற்காக இல்லை என்பதை “சினேக” முறையில் குறியீடாக உணர்த்த மட்டுமே சினேகா படம் போடப்பட்டுள்ளது.

Thursday, February 19, 2009

72. இவனெல்லாம் ஒரு வக்கீலா?

நேற்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சுப்ரமணியசாமிக்கு நேர்ந்ததைப் படிக்கும் போது ஒரு இந்தியக் குடிமகனாக வெட்கப்படுகிறேன்..

ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் முன்பாகவே ஒரு மனுதாரர் (ஒரு முன்னாள் மத்திய அமைச்சரும் கூட) அவமானப்படுத்தப்பட்டார் என்பதை நினைக்கும் போது ஒரு சாதாரணக் குடிமகனாக, சட்டம் ஒழுங்கை நினைத்து கவலை வருகிறது

கீழே உள்ள படத்தில் பாருங்கள். ஒரு வக்கீல் ஒரு அரைச் செங்கல்லை ஆயுதமாக வைத்து செய்யும் அநியாயத்தை. இந்தச் செங்கல், இவர் வீசும் வேகத்தில் ஒரு மனிதர் (அவர் யாராக வேண்டுமானால் இருக்கட்டுமே !!) மேல் பட்டால் அவர் ஆயுளுக்கும் முடமாக மாட்டாரா? அவரை நம்பிப் பிழைக்கும் குடும்பத்துக்கும் ஆயுளுக்கும் கவலையளிக்கும் நிலை ஏற்படாதா?




ஒரு தனிப்பட்ட மனிதரின்.. குடும்பத்தின் வேதனையை இவர் நேரில் பார்த்திருக்க மாட்டாரா? எத்தனன எத்தனை விதமான் நோய்கள் !! எத்தனை விதமான உடல் ஊனங்கள் !! அவர்கள் ஒவ்வொரு நாளையும் எவ்வளவு கஷ்டப்பட்டுத் தள்ளுகிறார்கள் என்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா?


இந்த செங்கல் .. இவர் மனைவியின் தலையையோ அல்லது குழந்தையின் தலையையோ (ஆண்டவரே மன்னியும் !!) பதம் பார்த்தால் இவர் எவ்வளவு வேதனையில் துடிப்பார்?

இங்கே என்ன மாங்காயா அடிக்கிறார்கள்? இவரையெல்லாம் சட்டம் படிக்க வைத்தது இதுக்குத்தானா?

இவ்வளவும் செய்துவிட்டு சுப்ரமணியசாமி மேலே தீண்டாமை பாதுகாப்பு குற்றச்சாட்டு வேறு பதிகின்றனராம்?

இவனெல்லாம் ஒரு வழக்கறிஞர் !

இவரும் இவர் வழி வந்தவர்களும் நாளைய சமுதாயத்தில் முன்னேறுவதற்காக, ரிசர்வேஷனும் ஏற்படுத்தி, அவருக்கு படிக்கும் போது உதவித்தொகையும் அளித்து, தங்குவதற்கு இடமும் வசதிகளும் படிப்பும் அரசாங்க செலவில் அளித்து, அவரை ஒரு வழக்கறிஞ்ர் ஆக்கினால்....

இவர் என்ன செய்யவேண்டும்? இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு நன்றிக்கடன் செலுத்த வேண்டும?







எந்த அரசாங்கம் இவர் முன்னேறுவதற்காக உழைத்ததோ.. எந்த மக்களின் வரிப்ப்ணம் இவரின் படிப்புக்கும் வசதிக்கும் செலவழிக்கப்பட்டதோ.. அவர்களின் சொத்துக்களுக்கு இவர் கோபத்திற்காக இவர் தீ வைத்து நாசமாக்குவாராம்..


அறிவில்லையாடா உனக்கு?

நீங்கள் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். இந்த காரியம் மன்னிக்கப்பட முடியாதது !!!

இதுவா நாங்கள் விரும்பிய சமுதாய முன்னேற்றம். இதற்காகவா, நீங்கள் முன்னேறவேண்டும் என்று நாங்களெல்லாம் கனவு கண்டோம் !!

ஒரு சமுதாய ஊழியனாக.. என் சொந்த முயற்சியிலும் என் சொந்த பணத்திலும் ..என் தனிப்பட்ட உழைப்பிலும்...என் குடும்பத்தின் உழைப்பிலும் என் சொந்த விருப்பத்தினாலும், ஆத்மார்த்தமாக இவர் சார்ந்த சமூக மக்க்ளை காத்து அவர்களுக்கு கல்வியும் செல்வமும் பெற ஒரு சமூக ஊழியனாக உழைப்பவன் என்ற என் பொறுப்பில்... இந்த வழக்கறிஞரின் செயலைப் பார்த்து...

நான் வெட்கப்படுகிறேன் !! நான் தலை குனிகிறேன் !!!

Thursday, February 12, 2009

71. அபிஅப்பாவின் குடும்ப அரசியல் !!

நமக்கெல்லாம் நம்ம கலைஞர் செய்யற குடும்ப அரசியல் தான் தெரியும். "குடும்ப" அரசியல்னா என்ன, எப்படி செய்யறதுன்னு நான் கலைஞரைப் பாத்துத்தான் கத்துக்கிட்டேன்.. இன்னும் எங்கியும் செஞ்சுப் பழகலை.. ஆனால் நம்ம அபிஅப்பா இப்பவே ஆரம்பிச்சுட்டார் போல..


கனிமொழி நிஜம்மாவே கவிஞரா ன்னு எல்லாம் எனக்குத் தெரியாது. அவங்க எழுதின கவிதைன்னு நான் படிச்சது எல்லாம் அந்த "தென்னாடுடைய சிவன்" கவிதை தான்.. ஆனால் அதுவும் அவங்க எழுதினதான்னு அவங்க கையெழுத்துல பாத்தாத்தான் தெரியும்..


இந்தமாதிரி நான் கேட்பேன் என்று முன்னாடியே தெரிஞ்சோ என்னமோ, நம்ப அபி பாப்பா கையெழுத்துல தானே எழுதிய கவிதையை ஸ்கேன் பண்ணிப் போட்டுட்டாரு... இப்போ நானே எந்தக் கேள்வியையும் கேட்க முடியாம "மயிலைக்கவிஞர் அபி பாப்பா" ன்னு தாசில்தார் சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டியதாப் போச்சு.. "மயிலை" என்பது மயிலாடுதுறையைக் குறிக்க வேண்டுமானாலும் வெச்சுக்கலாம் அல்லது "மழலைக் கவிஞர்" என்பதின் மெட்ராஸ் தமிழ் மொயிபெயர்ப்பாயும் வெச்சுக்கலாம..







இது என்ன கவிதை வகைன்னு தமிழறிந்த சான்றோரெல்லாம் திகைப்புல இருக்காங்க.. நம்ம மாதவிப்பந்தல் கேயாரெஸ் "இது எண்சீர் கழி நெடிலடி ஆசிரியவிருத்தம் தான்" என்று நியூ ஜெர்ஸியிலிருந்து துண்டைப்போட்டுத் தாண்டுறாரு.. நானென்னவோ இது "தரகு கொச்சகக் கலிப்பாவா இருக்குமோ" ன்னு நிகண்டு, சுகண்டு மிகண்டு எல்லாம் தேடிக்கிட்டிருக்கேன்..

நம்மக் கவிஞரின் முதல் அதிரடிக் கவிதையே இலக்கிய உலகத்துக்கே ஒரு புதிய பாதையாகப் பரிணமித்தது குறித்து மிக மகிழ்ச்சியடைகிறேன் !!



எது எப்படியோ..நம்ப அபிஅப்பாவின் குடும்ப அரசியல் வளர்ந்தால்.. எங்க ஊரு மயிலாடுதுறைக்கும் ஒரு இலக்கிட எம்.பி அப்புறம் ச்சின்னதா ஒரு கேபினெட் லெவல் மத்திய அமைச்சர் ப்தவியும் கெடைக்கும். ஏதோ எங்க அமைச்சர் அபிபாப்பா புண்ணியத்துல நானும் அபிஅப்பாவும் சேர்ந்து எங்க ஊர் DBTR National Higher Secondary School கட்டடங்களைக் கட்டிக்குவோம்..


மயிலாடுதுறையில் சமீபத்தில் கவிஞரைச் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது.. என்ன்மாய் ஒரு நுண்ணரசியல் வாதங்கள்.. எல்லாரையும் ஒட்டியும் பலசமய்ங்களில் வெட்டியும் பேசிய பாங்கு... எல்லாம் பார்க்கும் போது.. நம்ம பதிவர் அபிஅப்பாவே இதெல்லாம் நம்ம கவிஞரிடமிருந்து தான் கற்று வந்திருக்கிறார் என்பது உள்ளங்கை ஆப்பிள் போலத் தெளிவாகத் தெரிகிறது..


எப்போதும் கலைஞருடன் ஒட்டியே இருக்கும் ஆற்க்காட்டார் மாதிரி .அந்த ந்ட்டுப் பாப்பாவும் இப்போ இருக்கிறார்ப்போல் தெரிகிறது.. கவிதையிலே கையெழுத்து போடும் போது "நட்ராஜ்" -னு நட்டுப்பாப்பா பேரையும் போட்டதிலிருந்தே.. இன்னொரு "தென் மண்டல அமைப்புச் செயலாளர் உருவாகிறார்" னு தெரியவில்லையா..

நாலு பேருக்கு நல்லதுன்னா ஓண்ணுமே தப்பில்லை-ன்னு நம்ம வேலு நாயக்கர் சொன்னா மாதிரி.. எங்க ஊருக்கே நல்லது-ன்னா அபிஅப்பாவின் குடும்ப அரசியலும் தப்பில்லைதான்..

அபிஅப்பாவின் குடும்பம் வாழ்க!!!

புகைப்படம்: கவிஞருடன் நான்.. (புகைப்படம் எடுத்தவர் "எதிர்கால தென்மண்டல அமைப்புச் செயலாளர்" alias மயிலை ஆற்காட்டார் alias நட்டுப்பாப்பா )

Monday, February 02, 2009

70. கவிதை - கலைஞர் கருணாநிதி !!

மந்த மாருதத் தாலாட்டில் உறங்குதற்கு
மாட மாளிகை கட்டி வாழ்கின்ற பெரியீர் !

பணம் பணம் பணமென்று பாட்டாளியின் வியர்வையிலே
தினம் தினம் குளியல் நடத்திக் குவிக்கின்றீர் செல்வத்தை !

பிணம் தின்னும் கழுகு போல நீவிர்;
பெருக்க வைக்கின்றீர் உமது வயிற்றை !

இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே ஏழைகளைத் தள்ளிவிட்டு
பொருள் தேடி அலைகின்றீர்: போதுமென்ற மனதின்றி!

வாழ்வில் பெருக்கல் ஒன்றையேக் குறிக்கோளாய்க் கொண்டோரே ;
வார்த்தையொன்று கேட்கின்றேன் பதில் சொல்வீர்!!
மாணிக்கப் பொரியலும் மரகதக் கூட்டுமா இலையிலிட்டு உண்கின்றீர்?

வைரத்தால் வறுவல் செய்து வைடூர்ய அவியலுடன்
முத்துப் பவளமெனும் மணிகளால் செய்திட்ட அரிசியையா
குத்தி உலையிலிட்டுக் குடற்பையை நிரப்புகின்றீர்?

என்றதொரு கருத்தமைந்த கேள்வியினைக்
குன்றமெனச் செல்வன் குவிக்கின்ற மனிதரிடம்;
மன்றமேறி அறிஞ்ர் அண்ணா கேட்டார் - அதனை
மறவாமல் என்றும் நாம் கேட்கின்றோம் !!




உண்பது நாழி; உடுப்பவை இரண்டேயெனும்
உண்மைதனை உணர்ந்த பின்னும்,
வறுமையில் பலர் வாட; வளமிகு செல்வப்
பெருமையில் சிலர் ஆடல் நீதிதானோ?

உலகில் பிறந்தார் அனைவருக்கும்;
உடல், உள்ளத் தேவையெல்லாம்
ஒன்றாக இருக்கும் போது - இதனை
நன்றாகச் சிந்திக்காமல்
வெள்ளம் போல் பொருள் எதற்கு ஒருவன் சேர்த்தல் வேண்டும்?
பள்ளம் போல் வாழ்வினிலே பலர் எதற்குச் சாதல் வேண்டும்?



தனக்கே எலாம் எனும் தனியுடமை தகர்த்துத்
தரித்திரத்தை விரட்டுவதற்குத் தக்க வழி காண
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொதுமைக் கொள்கையினை
வகுத்தளித்து வையத்தில் இன்பம் காண்பது தன் வாழ்வெடுத்த பயனாகும்..!!



இப்படியெல்லாம் கலைஞர் "சங்கத் தமிழ்" புத்தகத்திலே பக்கம் 288-ல் சொல்லியிருக்கிறார் !!



அந்தப் படத்தில் உள்ள பையன் இதெல்லாம் கலைஞரைப் பார்த்துக் கேட்கிறமாதிரி இருக்கிற தென்று நீங்கள் நினனத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை..


படம் உதவி: நண்பரும் சக பதிவருமான ஐயப்பன்