இந்த வார குமுதம் ஜங்ஷனில், நகைச்சுவை நடிகர் திரு வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களின் நேர்காணலில், "நீங்கள் பேசும் பெரும்பாலன வசனங்களில் இரட்டை அர்த்தங்களின் நெடி சற்றுத் தூக்கலாகவே காணப்படுகிறதே?" என்ற கேள்விக்கு மூர்த்தி அவர்களின் பதில்,"நடிப்பு தான் எனக்கு சோறு போடுகின்றது. அதுதான் என் தொழிலுங்கூட. ஆகவே அங்கு இயக்குனர் சொல்கின்றபடி ஆடவேண்டும், பாடவேண்டும், கத்த வேண்டும். ஆனால் இதை வைத்து என் தனிப்பட்ட குணாதிசயங்களை எடை போட்டால் நான் என்ன செய்வது? நான் வசனம் பேசி நடித்த ஒரு படத்தைப் பார்த்த பெண் தணிக்கை அதிகாரி ஒருவர் அந்தப் படத்தில் என் வசனத்திற்கு மட்டும் பதினான்கு கட் செய்துவிட்டு தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு கட் பண்ணிய செய்தியையும் என்னிடம் கூறினார். அதற்கு நான் நன்றி சொன்னபோது, "நீங்க வக்கீலுக்குப் படிச்சவராமே, இப்படியெல்லாம் இரட்டை அர்த்த வசனம் பேசலாமா?" என்றவுடன், அவருக்கு நான் சொன்ன பதில் இதுதான். ஆங்கில அகராதியை முதன் முதலாகக் கண்டுபிடித்த ஜான்சனுக்கு ஒரு பெண் போன் செய்து உங்களுடைய அகராதியில் நிறைய அசிங்கமான வார்த்தைகளெல்லாம் இடம் பெற்றிருக்கின்றன. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சொன்னார். அதற்கு ஜான்சன் 'அதைவிட அதிகமாகவே நல்ல வார்த்தைகள் இருக்கின்றதே அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா, ஏன் கெட்டதையேப் பார்க்கின்றீர்கள். நல்லனவற்றைப் பாருங்கள்' என்றாராம். அந்த பதிலைத்தாண் அந்த தணிக்கைக்குழு அதிகாரிக்கும் நான் சொன்னேன். சினிமா என்பது ஒரு மூன்று மணி நேரப் பொழுதுபோக்கு. அதில் எல்லாவித ரசிகர்களின் ரசனைகளுக்கேற்பவும் சிரிக்க வைப்பதற்காகவும் நாங்கள் பேசும் வசனங்களை திரையரங்கோடு சிரித்து மகிழ்ந்து மறந்துவிடவேண்டும். அதை வீடு வரை இழுத்து வந்து நாள் பூராவும் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. குறிப்பாச் சொல்லணும்னா இரட்டை அர்த்த வசனங்கிறது என் தொழில். மற்றபடி ஆன்மிகம் தான் என் வாழ்வியல்."
ஆஹா! திரையுலகில் 25 வருடங்களைத் தொடப்போகும் வெண்ணிறஆடை மூர்த்தியிடமிருந்து என்னவொரு அருமையான பதில்.
அவரின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தால் நான் இந்தக் கேள்வியைத்தான் கேட்க வேண்டுமென்று இருந்தேன். இப்பொழுது தான் அவர் பதில் சொல்லிவிட்டாரே.
மூர்த்தி அவர்களே, இரட்டை அர்த்த வசனம் உங்கள் தொழில் அல்ல. நகைச்சுவை நடிப்பு தான் உங்கள் தொழில். இன்றைக்குத் தமிழில் உள்ள அனைத்தது நகைச்சுவை நடிகர்களிலுமே அதிக அளவு இரட்டை அர்த்த வசனக் காமெடி உங்களுடையதுதானாக இருக்கும். நேற்று முளைத்த ரமேஷ் கன்னா வுக்குக்கூட "காமெடித் தொகுப்பு" வெளிவந்திருக்கும் நிலையில், எங்காவது "வெண்ணிறஆடை மூர்த்தி காமெடித்தொகுப்பு" என்று வீடியோ கதம்பம் ஏன் "திருட்டு விசிடி" யாகக்கூட வெளிவரவில்லை என்று உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் இரட்டை அர்த்த்க் காமெடிக்கு உலகில் என்ன மதிப்பு என்று கூடப் புரியவில்லையா?
உங்கள் தொழிலில் 'நான் இப்படித்தான் செய்வேன்... இப்படியெல்லாம் செய்யமாட்டேன்" என்று தொழில் தர்மத்தை வைத்துக்கொண்டு அதன் படி நடக்கக் கூடிய எல்லாவித பலங்களும் உங்களிடம் இல்லையா?
'நான் என் தொழில் தர்மப்படி தான் நடப்பேன்' என்று வாதிட்டு உங்கள் டைரக்டரை திருப்தி படுத்தக்கூடிய வாதத்திறமையை உங்கள் வக்கீல் படிப்பு உங்களுக்குத் தரவில்லையா?
இன்றைக்கு உள்ள அனைத்து டைரக்டர்களும் உங்கள் 25 வருட சினிமா வாழ்வுக்கு மதிப்பளிக்ககூடிய இளைஞர்களாக இருந்தும் அவர்களிடம் உங்கள் தர்மங்களை நிலை செய்யக்கூடிய கடமையை உங்கள் தொழில் உங்களுக்குச் சொல்லவில்லையா?
அப்படி ஒரு இரட்டை அர்த்த வசனம் தான் பேசவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் டைரக்டரிடம் 'இந்த வாய்ப்பே போனாலும், பரவாயில்லை, நான் அப்படி நடிக்க மாட்டேன்' என்று வாய்ப்பை உதறிவிட்டு வரக்கூடிய ஒரு பொருளாதார நிலையை உங்கள் 25 வருட சினிமா அனுபவம் உங்களுக்குத் தரவில்லையா? இன்றும் கூட "இந்தப் பணம் வந்தால்தான் சாப்பாடு, இந்தப் படம் வந்தால் தான் புகழ்" என்ற அறிமுகக் கலைஞனின் நிலையில் தான் நீங்கள் இன்னும் இருக்கிறீர்களா?
ஜான்சனை உதாரணம் கூறி நிரூபிக்க முயல்கிறீரே, அதில் கூட அவரைக் கேள்வி கேட்ட பெண்ணின் கேள்வியில் இருந்த நியாயத்தை உங்களால் உணர முடியவில்லையா? ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் இல்லாமலில்லை. அதை உங்கள் அகராதியில் சேர்த்திருப்பதின் மூலம் அந்த வார்த்தைகளுக்கு ஒரு நிரந்தர வாழ்வையல்லவா அது ஏற்படுத்திவிட்டது. அன்று, 'நான் நல்ல வார்த்தைகள் மட்டும் தான் தொகுப்பேன்' என்று ஒரு தர்மத்தை வகுத்துக்கொண்டு கெட்ட வார்த்தைகளை அவர் தவிர்த்திருந்தால் அந்த கெட்ட வார்த்தைகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டிருக்காதா? உலகின் முதல் அகராதியைத் தொகுத்தவர் என்ற முறையில் அவர் காட்டிய நல்வழியில் எல்லாரும் சென்றிருப்பார்களே. எவ்வளவு பெரிய வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார் என்றல்லவா அந்தப் பெண் கேட்டிருக்கிறாள்?
"இருக்கும் கெட்டதை விட்டு விட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்ற அளவுகோல்கள் எல்லாவற்றிற்கும் பொருந்துமா? தலை வாழைஇலை நிறைய நல்ல சாப்பாட்டைப் பரிமாறி, ஒரு ஓரத்தில் ..... வைத்து விட்டு.. அது தான் இலை நிறைய நல்ல பதார்த்தங்கள் இருக்கிற்தே அதைச் சாப்பிடக்கூடாதா என்று கேட்டால் உங்களால் சாப்பிட முடியுமா ?
ஒரு மூத்த நகைச்சுவைக் கலைஞர் என்ற முறையில் இனியாவது நல்ல அளவுகோல்களை எடுத்துக்கொண்டு நல்ல நகைச்சுவையை எங்களுக்கும் எங்கள் தலைமுறைக்கும் நீங்கள் தரவேண்டுமென்பதுதான் எங்கள் அவா. முயற்சி செய்யுங்கள்.. முடியாததில்லை...
இது வெண்ணிற ஆடை மூர்த்திக்கு மட்டும் எழுதியதில்லை. அவர் வந்து என் blog-ஐப் படிக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தான். . எனக்கும் தான்.
Sunday, November 28, 2004
Subscribe to:
Posts (Atom)