எல்லாரும் அவியல், துவையல், பிரியாணி, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல், என்ற தலைப்புக்களில் கதம்பமாய் எழுதுகிறார்களே..நாமும் எழுதுவோமென்று தேடினால் அப்படி ஒரு தலைப்பு கிடைக்கவேயில்லை.
சென்ற பதிவில் முகமூடியண்ணா வேறு ”எல்லாரும் கைமா கொத்துப் பரோட்டா ஊசிப்போன இட்லி சாம்பார்னு எழுதறாங்க.. நீங்களும் இந்தமாதிரி கலவைப் பதிவுக்கு எம்பளத்தஞ்சி குறிப்புகள் மாதிரி எதுனா - ஒரு மண் வாசனைதான் - பேர் வெக்கலாமே?” அது மாதிரி தலைப்பு வெக்கக் கூடாதாவென்று கேட்டு விட்டார்.. எங்க ஊருப் பக்கம் ரொம்ப ஃபேம்ஸ்-னு பார்க்க்ப் போனா.. கும்பகோணம் வெற்றிலையும் பன்னீர்ப் புகையிலையும் தான்...அதனால் தான் இந்தப் புது வரவு “வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு”
oOo
இட்லி வடைக்கே சாம்பாரா?
சமீபத்திய ஒரு இட்லி வடை பதிவில் ”மூன்று - Friday November 27, 2009" பதிவில் “எங்கெங்கு காணிணும் சக்தியடா” என்ற் பாரதியாரின் வரி என்று குறிப்பிட்டிருந்தார்.. அதற்கு பின்னூட்டமிட்ட ஒருவர் (மோகன் தாஸ்) இது பாரதிதாசன் வரி என்று குறிப்பதற்காக.. “இது பாரதிக்குத் தெரியுமா?” என்று கேட்டிருந்தார்..
அதற்குப் பிறகு அதை இட்லிவடையும் கௌரவமாகத் திருத்திவிட்டார்..
நான் கேள்விப்பட்ட வரையில்.. முதன் முதலாக பாரதியாரை, கனக சுப்பு ரத்தினம் (பாரதி தாசனின் இயற்பெயர்) ஒரு திருமண வீட்டில் சந்திக்கிறார். அப்பொழுது சுப்புரத்தினத்தை பாரதியாரிடம் அறிமுகப் படுத்துகிறார்கள்.. அவரும் கவிதையெல்லாம் எழுதுவாரென அறிந்த பாரதி.. ”இப்பொழுது உடனே ஒரு கவிதை எழுதுங்கள்” என்று பணிக்க.. பாரதிதாசனோ “எதைப் பற்றி எழுதுவது என்று ஒரு கணம் தயங்க” அப்பொழுது பாரதியார் எடுத்துக் கொடுத்த வரி தான், “எங்கெங்கு காணினும் சக்தியடா.. தம்பீ ஏழு கடல் அவள் வண்ணமடா” என்பது..
டெக்னிகலாகப் பார்த்தால் அந்த வரி பாரதியார் வரியே தான்.. பாரதியாருக்கு அந்த வரி தெரியும்..
NHM Writer-ல் ப்ரச்சினையா..
இதுக்கு யாராவது ஒரு உதவி சொல்லுங்களேன்.. எல்லாரும் புகழ்ந்ததைப் பார்த்து இ-கலப்பையிலிருந்து NHM Writer க்கு மாறியவன் நான். Alt-2 அடித்து தமிழ் யூனிகோடு Windows Vista வில் NotePad வைத்து டைப்படிக்கிறேன்.. எப்பொழுதெல்லாம் 'ட்' மற்றும் 'த்' அடிக்க நேருகிறதோ அப்பொழுதெல்லாம் cursor எங்காவது போய் உட்கார்ந்து கொண்டுவிடுகிறது.. அதற்கு மேல் அடித்தால் கர்ஸர் வேறு இடத்தில் போய் டைப்படிக்கிறது.. சமயத்தில் shift வேறு அடிப்பதால் பாதிக்கு மேல் முன்னால் டைப்படித்ததன் மேல் அடித்து மேட்டர் காணாமல் போய் விடுகிறது.
ரொம்பப் பாடாய்ப் படுத்துகிறது. எழுதும் வேகம் ரொம்ப குறைந்து விடுகிறது.. ஏற்கெனவே நான் ரொம்ப (!!) வேகமாக தமிழ் டைப்படிப்பவன். இப்பொழுது இது வேறு படுத்துகிறது..
சரி நாம் திரும்பி இ-கலப்பைக்கே போய்விடலாம் என்று போய்ப்பார்த்தால் ஓசியில் கிடைத்த Tavultesoft Keyman இப்பொழுது $19 ஆக்கிவிட்டார்கள்..
தமிழுக்கு சேவை செய்வது இப்பொழுதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியாகிவிட்டது.. ஓசியில் பதிவெழுத முடியாது போலருக்கு..
oOo
சும்மா வந்து குறை மட்டும் சொல்லிப் போகாமல் சமீபத்தில் கேட்ட ஒரு கவிதை..
ஒரு பள்ளி மாணவி எழுதியதாம்.. எனக்குச் சொன்னவருக்கும் மாணவி பெயர் தெரிந்திருக்கவில்லை..அந்த மாணவியின் திறமைக்கு வந்தனங்கள்..
தலைப்பு: பெண்
நாங்களும் பாபர் மசூதிகள் போலத்தான்..
எங்களைக் கட்டுவதற்கு
யாரும் தயாராயில்லை
இடிப்பதற்கு மட்டுமே வருகிறார்கள் !!
oOo oOo oOo
வந்தேமாதரத்தை விற்று விட்டார்கள் போலிருக்கிறது.. பாவம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள்.. அவர்கள் மூச்சுக்காற்றாய் சுவாசித்தது இப்பொழுது ஜப்பான்காரனிடம்.
சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை YouTube-ல் ஏற்றினேன். நான் படித்த மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி பற்றிய ஒரு காணொளி அது. அந்தக் காணொளியைப் பதிவு செய்த வீடியோக்காரர் அதற்குப் பின்னணி இசையாக AR Rahman சமீபத்தில் இசையமைத்த வந்தே மாதரம் பாட்டைப் போட்டிருந்தார். அதைப் பார்த்த YouTube, "Part of the contents of this Video is copyrighted by Sony Entertainment Company, Japan" என்று கடித்துத் துப்பிவிட்டது. நம்ம பள்ளோடத்தையே ஜப்பான் காரன் கிட்டே வித்துட்டாங்களான்னு சந்தேகத்துல ரொம்ப குழம்பி யோசிச்சதுல.. “வந்தே மாதரத்தை” ஏ ஆர் ரஹ்மான் தான் வித்துட்டாராம்..
ஏதோ ஒரு படத்துல இப்படிதான் சென்னையில் LIC கட்டடத்தை விலை பேசி விற்பது போலக் காட்சி வரும்.. இப்போ நெஜம்மாவே வந்தே மாதரம் ஜப்பான்காரன் கையில்.. ச்சும்மாப் பாடக்கூடாது.. “சோனிக்குக் காசு கொடுத்துத்தான் பாடணும்.. ஆமா...”
என்னதான் அவங்க சொல்றது புத்திக்கு உரைத்தாலும்.. வந்தே மாதரம் பாடலின் உரிமை ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருக்கிறது என்று சொல்லும் போது.. ஒரு “மாதிரியாக” இருந்தது.. உங்களுக்கும் அப்படித் தோணினால் சொல்லுங்கள்..
சோனிதான் இப்படின்னா... சோனியாம்மாவும் இப்படியே.. அதேபோன்று தான் இதுவும்..
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பர் ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் பரிசளித்தார். அது நமது முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய “The Discovery of India" By Oxford University Press of India புத்தகம். அதனுள்ளே பார்த்தபோது அதில் “Copyright: Sonia Gandhi" என்று இருந்தது.
நேரு (1889 - 1964) இறந்து போய் 45 வருடங்களாகிவிட்டன. அவர் நமது நாட்டின் பிரதமராய் வேறு இருந்தவர். இன்னுமா இவரது எழுத்துக்களை நாட்டுடமையாக்காமல் இருக்கிறார்கள்? அது தான் போகட்டும்.. பிரதமர் பதவியையேத் தியாகம் (???) செய்த அம்மணீ சொக்கத் தங்கம் சோனியாவுக்குக் கூடவா நேரு எழுதிய புத்தகங்களுக்கான உரிமையை நாட்டுக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ அர்ப்பணிக்க வேண்டுமென்று இன்னும் தோணவில்லையா?
என்னமோப் போங்கள்!!
oOo

ரொம்ப “பழைய” விஷயங்களையேப் பேசி எழுதி வருகிற ஒரு “பழம் பெரும்” பதிவர் ஒருவர் இந்த வாரயிறுதியில் வீட்டுக்கு வந்திருந்தார்.. “வாராத ஐயா வந்திருக்காங்க.. அவருக்கு பழசுதான் புடிக்கும் போலருக்கே...” ந்னு நெனச்சி..நானும் என் மனைவியும் அவர் கண் எதிரிலேயே 20 நிமிடம் தேடி பழைய தமிழ்ப்பட (கலாட்டா கல்யாணம், மூன்று தெய்வங்கள், உத்தமபுத்திரன்)
பாடல்களைக்கொண்ட ஒரு VCD போட்டோம்.. ஐயா முகத்துப் புன்னகைக்காக எங்கள் குடும்பமே அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.. எல்லாரும் மலைச்சிப் போறமாதிரி கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி....
”ஐயா.. ஏதாவது வடிவேலு காமெடி இருக்கா? இருந்தால் போடுங்களேன்.. இது ரொம்ப பழசாயில்லே இருக்கு !!!”
oOo
என் மூன்றாவது பெண் சமீயாவுக்கு (இப்போ 19 மாசம் வயசாகிறது) தமிழும் ஆங்கிலமும் ஒரே நேரத்தில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்..
சமீபத்தில் அவள் அழகாக “அ, ஆ, இ, ஈ, உ ஊ, எ, ஏ, ஐ, J, K, L, M, N" என்று சொன்ன போதுதான் நாங்கள் செய்த குழப்பம் புரிந்தது..
குழப்பியது நாங்கள் தான்.. அவளென்னவோ ரொம்ம்ம்ம்ம்ம்பத் தெளிவு..