எங்கள் பள்ளிக்கூடத்தைப் (DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை) பொறுத்தவரையில் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டுக்கான முக்கியப்பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளேன். கடந்த 108 வ்ருடங்களில் (எங்க ஸ்கூலுக்கான வயசுங்கோவ்) எங்க ஸ்கூலில் படித்துச் சென்ற முன்னாள் மாணவர்களையும் அவர்தம் சந்ததிகளையும் தொடர்புகொண்டு அவர்களிடமிருந்த நிதிபெற்று எங்கள் ஸ்கூலை பெரிய கட்டமைப்பு வசதிகளுடன் கட்ட வேண்டிய பொறுப்பு எனக்கும் எங்கள் நிர்வாகக் குழுவினருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் என் முயற்சிகளனைத்தும் இதைச் சார்ந்தே அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
பள்ளியின் முன்னாள் மாணவர்களுடன் பேசுவதே ரொம்ப சுவாரஸ்யமானதாக இருக்கிறது. "என் கூட 1980-ல 9A படிச்ச சரசு இப்ப எங்க இருக்காங்க தெரியுமா சார்?" என்ற முன்னாள் தோழிகள் பற்றிய ஆட்டோகிராப்தனமான கேள்விகளை, முன் வழுக்கை விழுந்து இரண்டு மூன்று குழந்தைகளுடன் இருக்கும் 30-40 வயது முன்னாள் மாணவர்களிடமிருந்து கேட்கும் போது.. என்னதான் ஃபோனில் பேசினாலும் அவர்களின் கண்களில் தெறிக்கும் பளிச்..பளிச் களைக் உணரமுடிகிறது.. இன்னும் சுவாரசியங்கள் விரியும் கதைகள் கிடைக்கலாம்.. எல்லாவற்றையும் சொன்னவர்களும் ரசிக்கும் விதமாக "தாம்பூலத்தில்" எழுதலாமென்றிருக்கிறேன்..
இப்போதைக்கு என் பதிவைப் படிக்க இன்னும் 10 சிறப்பு வாசகிகள் (நம்புங்க சார்..) கெடச்சிருக்காங்க...
oOo oOo
மயிலாடுதுறையிலிருக்கும் போது வருஷா வருஷம் எதிர்பார்க்கிற திருவிழான்னா.. ஐப்பசி மாதத்து கடைமுகமும் தேரும் தான். ச்சின்னவயசில இந்த 10 நாட்களும் ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். எங்க ஊரு மகாதானத்தெருவில் இரண்டு பக்கமும் கிட்டத்தட்ட அரைக்கிலோமீட்டருக்கு திருவிழாக்கடைகள் பரப்பியிருக்கும்.. எல்லா விதமான விளையாட்டுச் சாமான்களும் ("எதையெடுத்தாலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்" வகையறாக்கள்.. நான் சொல்வது 1980-களில்) கிடைக்கும்.. அப்பொழுது ஆசைப்பட்டதென்றால் ஒரு பக்கட் தண்ணீரில் தானாக ஓடும் ஒருச் சின்னக் கப்பல் (ஓடம்?) போன்ற பொம்மைதான்.. சிவப்பும் கருப்பும் கலந்த திமுக கொடி கலரில் இருக்க்ம்.. தகரத்தில் செய்யப்பட்டிருக்கும்.. பின்னால் ஒரு சூடம் கொளுத்தி வைக்கவேண்டும்.. கொஞ்சம் மண்ணெண்ணை ஊத்திவிட்டால்.. கப்பல் வாயகன்ற பாத்திரத்திலுள்ள தண்ணீரிலோ அல்லது பக்கெட்டிலோ "டுட்..டுட்.." என்ற சத்தத்துடன் ஓடும்.. அந்தக் கப்பல் அப்பொழுதெல்லாம் 2 ரூபாய்தான்.. அப்போதைய என் பொருளாதாரத்துக்கு அது ரொம்பவே அதிகம்..
அப்பொழுதெல்லாம் அந்த ஆப்பிள் பலூன் 30 காசுதான்.. வாங்க ஆசை மட்டுமிருக்கும்.. எப்பொழுதோ அப்பாவிடம் கேட்டது நினனவிருக்கு.. இந்த முறை ஊருக்குப் போனபோது (30 வருஷம் கழித்து)... ஆசையாக ஆப்பிள் பலூன் ஒன்று எங்கிருந்தோ வாங்கி வந்து கொடுத்தார்.. சிரிப்பு வந்தது.. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்று தெரியவில்லை.. கொஞ்ச நேரம் என் சைக்கிளில் கட்டி வைத்திருந்துவிட்டு ஒரு குழந்தையிடம் கொடுத்துவிட்டேன்..
சில சமயம் எப்பொழுதோ கேட்ட அல்லது ஏங்கிய சில விஷயங்கள் ரொம்ப காலதாமதமாக நட்க்கிறது..
இது போல் 1980 களில் எனக்கொரு முக்கியமான தேவையிருந்தது.. ஒரு என்னுடைய இந்தத் தேவையினால்..பலன் என்னவோ எங்க ஊரு சாமிங்களுக்குத்தான் ..மூன்று வருடங்களுக்கு என்க்கு இது தான் பிரார்த்தனை.. தினமும் கோவிலுக்குச் சென்று விடுவேன்... சிலசமயம் பல கோயில்களுக்கு.. காவிரிக்கரை மங்கள் வினாயகர் பிள்ளையார், மலைக்கோவில் முருகன், ஐயப்பன், சேந்தங்குடி துர்க்கையம்மன், வள்ளலார் கோவில் மேதா தக்ஷிணாமூர்த்தி, திருவிழந்தூர் ஆஞ்சநேயர் எல்லார் கிட்டேயும் அப்ளிகேஷன் போட்டிருந்தேன்.. அருணா சூடம் வில்லைகள்.. நடராஜ் கற்பூரக் கட்டிகள்.. வாங்கி எல்லாருக்கும் ஏத்தியிருக்கேன்.. இந்த எல்லா சாமிகளும் எனக்கு ரொம்ப கடன் பட்டிருக்காங்க.. ஏன்னா.. என் பிரார்த்தனனகளையெல்லாம் கேட்டுவிட்டு .. என் ஸ்லோகமெல்லாம், சூடமெல்லாம் வாங்கிக்கிட்டு அப்பொழுதெல்லாம் ஒண்ணுமே செய்யலை.. "சீமாச்சு.. வேற் ஏதாவது வேலையிருந்தாப் போயிப் பாரு" ன்னு வெரட்டி விட்டுட்டாங்க....
30 வருஷம் கழித்து எல்லா சாமிக்கும் இப்போத்தான் என் பிரார்த்தனை நினைவுக்கு வந்த மாதிரி.. எல்லாம் சேர்ந்து இப்போ "அதை நிறைவேற்றவா" என்று காலிங் பெல் அடிக்கிறாங்கள்.. அதெல்லாம் ஒண்ணு வேணாம்-னு சாமிக்கிட்டே சொல்லி அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சி..
ஆனா ஒண்ணு மட்டும் புரிஞ்சுது.. அப்பா வாங்கிக்கொடுத்த ஆப்பிள் பலூனுக்கும் ஆண்டவன் முருகன் வேணுமான்னு கேட்ட பழைய பிரார்த்தனைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.. ஆப்பிள் பலூன்களுக்கு வயசாவதில்லை...
oOo oOo
சமீபத்தில் ஒரு அறுபது வயது பெரியவரைச் சந்தித்தேன்.. ஒரு பார்ட்டியில்.. அவர் பீர் உட்பட எந்த விதமான மதுபானமும் அருந்துவதில்லையென்று சொன்னார்.. அவர் சொன்ன காரணம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்தது..
அவர் காலேஜ் படிக்கும் நாட்களில்... ஒரு நாள் வர் காலேஜ் கிளம்பிக் கொண்டிருந்த போது அவரின் அம்மா சிகரெட், மது பற்றிய கேட்டார்களாம்.. தன் மகன் எங்கே அதெல்லாம் ஆரம்பித்து விடப்போகிறானோ என்ற் ஒரு கவலையில் அந்தப் பேச்சு வந்ததாம்.. அப்பொழுது அவர் சொன்னாராம் "இன்னும் அதெல்லாம் தொடவேண்டிய தேவை எனக்கு வரவில்லை.. நிச்சயம் வராதென்று நம்புகிறேன்.." என்று சொன்னாராம்.. பெரிய்ய வாக்குறுதியெல்லாம் இல்லை.. அது ஒரு சாதாரண் உரையாடல் தான்..
அன்று மாலை கல்லூரியிலிருந்து திரும்புவதற்குள் ஏதோ ஒரு விபத்தில் அவர் அம்மா கோமாவுக்குச் சென்று சில நாட்களில் இறந்து விட்டார்..
அம்மாவுடன் தனக்கு ஏற்பட்ட அந்தக் கடைசி உரையாடலின் நினைவாக அவர் இன்னும் (கிட்டத்தட்ட 45 வருடங்களாக) சிகரெட், மது இரண்டும் தொடுவதில்லையாம்..
அவர் விவரித்த விதம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.. அம்மாவுடனான.. அவரின் அன்பும் அதன் மேலான் மரியாதையும் புரிந்தது..
நானும் ஒரு "அம்மா செல்லம்.. அம்மா பையன் தான்.."
oOo
ஆதவன் படம் நன்றாக இருந்தது.. ஊரிலேயே (கோவையில் செண்ட்ரல் தியேட்டரில்) ஒரு முறை பார்த்துவிட்டிருந்தாலும் இங்கு வந்து வீட்டிலும் குடும்பத்துடன் பார்த்தேன்..
நயன் தாரா "Its ....OK" என்று முகத்தைச் சுழட்டிச் சொல்லுமிடங்களில் ரீவைண்ட் பண்ணிப் பண்ணிப் பார்த்ததில்ல் தங்கமணி முகத்தில் அனல் பறந்தது...
இதுக்கெல்லாம் பயப்படுற் ஆளாயென்ன நாம?