
நெஜமாவே யோசிக்க வெச்ச விஷயம் அது..
கொஞ்ச நாள் முன்னாடியே புரிஞ்சுட்டாலும்.. இப்ப உஷாவின் போஸ்டில் இதைப் படித்ததும் நாம எழுதிடுவோமேன்னு தோணிச்சு...
உஷா என்ன சொன்னாங்க-ன்னு கீழே கொடுத்திருக்கேன்..
இப்ப நம்ம கதை..
அமெரிக்கா வந்ததிலிருந்து குளிர்கால ஒலிம்பிக்ஸில் இந்த பிகர் ஸ்கேட்டிங் தவறாமல் பார்த்து விடுவதுண்டு. அதிலும் மிஷேல் க்வான் தான் நம்ம பேவரிட் ஆட்டக் காரர். இதில் ஒவ்வொரு முறையும் ஆட்டக்காரர்கள் நடு ஆட்டத்தில் தரையிலிருந்து எழும்பி இரண்டு முறை.. மூன்று முறைச்சுற்றி மீண்டும் தரை தொட்டு தொடர்ந்து ஆடும் போது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும். இவங்களுக்கெல்லாம் எப்படி இந்த பேலன்ஸ் கிடைக்கிறது.. எப்படி இவங்களுக்கு தலை சுற்றாமல் இருக்கிறது என்று ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.. கேட்க ஆளுமில்லாததால்.. அப்படி ஒன்றும் (என்) தலை சுற்றும் விஷயமில்லாதலால்.. விடை தெரியாத ஆச்சரியமாகவே மனதுக்குள் இருந்து வந்தது...
திருமணம் ஆகி மகள்களும் பிறந்து..முதல் மகள் (7 வயது) இங்கே பக்கத்தில் ஒரு அமெரிக்க நடனப் பள்ளியில் பாலே நடனம் பயின்று வருகிறாள்...
நமக்கு அது பற்றி ரொம்ப தெரியாது. நடனப் பள்ளி எங்கிருக்கிறதென்று மட்டும் தெரியும். இரண்டாவதும் மகளாகப் பிறந்த்தினால்... என் மனைவிக்கு குடும்பத்தில் 75% மெஜாரிட்டி கிடைத்து தனிப்பெரும் கட்சியாக உதயமானபின் வாயை மூடியவன் தான்.. இன்னும் திறக்கவில்லை...
ஒரு நாள்.. பாலேயிலிருந்து திரும்பி வந்த மகள்.. செம குஷி மூடில் .. "என் டான்ஸ் பார்க்கிறியாப்பா..' என்று கேட்டுக் கொண்டே.. ஒரு பெரிய சுற்று சுற்றி ஒயிலாக என் அருகில் வந்து நின்றாள்...
அவள் சுற்றுவதைப் பார்த்ததும் மனதுக்குள் இருந்த ஆச்சரியம் விழித்துக் கொண்டது.. நாம் கும்பிடும் சாமியே "தகப்பன் சாமி" ஆயிற்றே.. மகளிடமிருந்து கற்றுக் கொண்டாலும் ஞானம் ஞானந்தானே.....
'ஏண்டா கண்ணம்மா... இவ்வளவு சுத்து சுத்தறியே... தலை சுத்துமேடா ... கண்ணம்மா... .."
"அதெல்லாம் சுத்தாதுப்பா.,.."
"உன்னப் பாக்கற எனக்கே தலை சுத்திடிச்சே.. கண்ணம்மா.. உனக்கு எப்படி..?"
"அதுக்குத்தாம்பா டெக்னிக்... டீச்சர் சொல்லிக் கொடுத்திருக்காங்க..."
"நான் ஆடும் போது என் பார்வையை நல்லா கவனிங்க..." மீண்டும் சுற்றிச் சுற்றி ஆடினாள்..
நான் நன்றாக கவனித்தேன்.. அவள் பார்வை முழுதும் ஒரு தூணையே பார்த்துக் கொண்டிருந்த்து..
"பார்த்தியாப்பா...' - இது மகள்...
"ம்ம்..." - இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் நான்..
"இந்த மாதிரி ச்சுற்றி ஆடும் போது.. பார்வையை அலைய விடாமல்.. ஓரு நிலையான பொருளையே பார்த்துக் கொண்டிருந்தால்..நமக்குத் தலையைச் சுற்றாது.. நிறைய நேரம் ஆடலாம்..." - சொல்லிற்று தகப்பன் சாமி..
விஷயம் புரிந்தது.. இந்த ஆச்சரியம் மட்டுமில்லை.. அதைவிடபெரிய கேள்விக்கும் மனதில் விடை கிடைத்தது...
ஆஹா... இதுவல்லவோ இறை தத்துவம்...இதுவல்லவோ இறைவன்.. வாழ்க்கை நம்மை எப்படி சுழட்டிப் போட்டாலும்.. மனத்தை மட்டும்..மாறாத ..அந்த இறைவனடியில் வைத்திருந்தால்.... நமக்குச்..சுழல்களும்...பேருவகை தருமே...
மனசுக்குள்ளிருந்து ஆச்சரியம் விடைபெற்றது.. .. நான் வணங்கும் செல்வமுத்துக் குமர ஸ்வாமியை எனக்கு அறிமுகம் செய்து வைத்த என் பெற்றோரை நெஞ்சம் வணங்கியது..
"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்"
திருக்குறள் கடவுள்வாழ்த்து... பொருள்
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ் வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
=== ***** =========
இனி உஷாவின் பெருமை.... அவங்க பெருமை..அவங்களுக்கு.. எங்க வூரு மருமகளாச்சே.. அதுவும் எனக்கு ரொம்ப காலம் அறிமுகமானவங்க குடும்பத்து மருமகள் வேறு...
//
உஷாவின் ப்ளாகிலிருந்து....பெருமை- என் மகனும், மகளும் என்ன தேர்வு, பிரச்சனை என்றாலும் கடவுளை கும்பிடாதது. அவர்கள் இந்த சுயசிந்தனை எனக்கு பெருமைதான். கடவுள் நம்பிக்கையை கேலி செய்ய நான் சொல்லிக் கொடுக்கவில்லை. நம்பிக்கை இல்லை என்பது வெறும் பேஷன் இல்லை. இந்த உறுதியைக் கடைப்பிடிப்பது மிக கடினம். பதினைந்து வயது மகனுக்கு ஏன் உபநயனம் செய்யவில்லை என்று கேட்டால், நாம் பிறந்த சாதி உயர்ந்த சாதி என்பதை பறை சாற்றுவதாக இந்த சடங்கு உள்ளது என்று அவன் மறுக்கும்பொழுது, இது போதும் என்று பெற்ற மனம் நெகிழ்ந்துப் போகிறது. நாளை அவர்கள் மாறினாலும் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்.
//