Tuesday, April 06, 2010

94. உங்க கிட்டே ஒரு ரூபாய்/டாலர் இருக்குமா?


நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு வழக்கமான காலை நேரம். நானும் கூட வேலை பார்க்கும் இன்னொரு நண்பரும் காபி அருந்த கஃபேடரியா போயிருந்தோம். காபி கலந்து கையில் எடுத்து வரும் போது எதிரே இன்னொரு நண்பர் வந்தார். அலுவலக்த்தில் இன்னொரு மீட்டிங் முடித்து விட்டு அவசரமாக வரும் வழியில் கஃபேடரியா வந்து விட்டார். காபி வாங்க கையில் காசு எடுத்து வரவில்லை. அவரின் டெஸ்க் இருக்கும் அலுவலகம் போய் எடுத்து வரவும் நேரமில்லை. அப்படிப் போய் வந்தால் அடுத்த மீட்டிங்குக்கு நேரமாகிவிடும். எங்களைப் பார்த்தவுடனே என் நண்பரிடம் வந்தார்.

"கையில ஒரு டாலர் இருக்காங்க? காஃபி வாங்கணும். பர்ஸ் ஆபீஸ்ல இருக்கு" ‍ நியாயமான காரணம். எல்லாருக்கும் ஏற்படற சூழ்நிலைதான்.

என்னுடன் வந்த நபர், தன் கையில் வைத்திருந்த காபி கப்பை என்னிடம் கொடுத்து விட்டு உடனேயே பர்ஸைப் பிரித்து ஒரு 20 டாலர் நோட்டை எடுத்துக் கொடுத்தார். அவரும் வாங்கிக் கொண்டு அவசரமாகச் சென்றுவிட்டார். அவர் பர்ஸைத் திருப்பி வைக்கும் போது தான் கவனித்தேன் அவரிடம் சில ஒரு டாலர் நோட்டுக்களும் இருந்தன.

"என்னங்க, அதான் ஒரு டாலர் நோட்டுத்தான் உங்க கிட்டே இருக்குதே. அதைக் கொடுத்திருக்க வேண்டியது தானே.. ஏன் 20 டாலர் கொடுத்தீங்க?"


"நீங்களே யோசிச்சிச் சொல்லுங்க, பார்க்கலாம்"

"தெரியலீங்களே.. நானாயிருந்தா ஒரு டாலர் கொடுத்துவிட்டு பேசாமல் போயிருப்பேனே"

"அது தான் தப்பு. வந்தவர் ஒரு மேனேஜர். ரொம்ப பிஸி ஆன ஆளு.. நானும் ஒரு டாலர் கொடுத்திருந்தால் அவர் வாங்கிக்கிட்டு மறந்து போயிருவார். என்னாலயும் அவரை அடுத்த தடவை பார்க்கும் போது 'என் கிட்டே ஒரு டாலர் வாங்கினீங்களே.. கொடுக்கறீங்களா?' ந்னு கேட்க முடியாது. அல்பமா ஒரு பார்வை பார்த்தாலும் பார்ப்பார். இதே இருபது டாலர் கொடுத்தால், காபி வாங்கி பாக்கி அவர் பையில் இருக்கும். நாள் முழுக்க எப்போ அந்தப் பணத்தைப் பார்த்தாலும் அவருக்கு என் கிட்டே வாங்கினது நினைவுக்கு வரும். மறக்காமல் திருப்பிக் கொடுத்திடுவார். அப்படியே இல்லேன்னாலும், நான் அவர் கிட்டே கேட்டு வாங்கும் போது சில்லியாத் தோணாது. இப்பச் சொல்லுங்க, ஒரு டாலர் கொடுத்திட்டு மறந்து போறது நல்லதா, இல்லே இருபது டாலர் கொடுத்திட்டு திரும்பி வாங்கறது நல்லதா?"

"விளக்கமெல்லாம் நல்லாருந்தது.. உங்க கிட்டே ஒரு டாலர் இருக்குமா?"






இதே மாதிரி ஒரு சூழ்நிலை. மயிலாடுதுறையில் இருக்கும் போது மூர்த்தி அண்ணன் வீட்டில் அவருடன் உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பேன். ஊரில் எல்லாருக்கும் உதவும் ஒரு பெரிய பரோபகாரி அவர். ஊரில் என்ன ஒரு விசேஷம் இருந்தாலும் அவரிடம் நன்கொடை கேட்டு வந்து விடுவார்கள். அவரும் சமயத்துக்குத் தகுந்தாற் போல் ஏதாவது பொறுப்பு எடுத்து உதவுவார். சில சமயம், சிலர் சொந்தக் காரணங்களுக்காக உதவி கேட்டு வருவதும் உண்டு.

ஒரு நாள் இப்படி உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கும் போது ஒருவர் வந்தார். கொஞ்சம் பழக்கப்பட்ட முகம் போல் இருந்தது. அண்ணனின் கட்டட வேலைகளில் முன்னாட்களில் வேலை செய்து வந்தவர். சமீப காலங்களில் அவரை நான் பார்த்ததில்லை. என்னைப் பார்த்தவுடன், பரிச்சயம் உணர்ந்து "என்ன தம்பீ நல்லாருக்கீங்களா" என்று விசாரித்து விட்டு அண்ணனைப் பார்த்து தலை சொறிந்தார்.

"என்ன நைனா, எப்படியிருக்கீங்க.. ரொம்ப நாளா இந்தப்பக்கம் காணோமே..?

"ஆமாண்ணே.. இப்பல்லாம் உடம்புக்கு முடியலை.."

"என்ன விசேஷம்.. எங்க இந்தப்பக்கம்? இப்பத்தான் உங்களுக்கு இந்த வழி தெரிஞ்சுதாக்கும்?"

"இல்லண்ணே.. அவசரமா ஒரு தேவை.. உங்க கிட்டே வந்தால் ஏதாவது செய்வீங்க‍ன்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன்" ‍ சொல்லிவிட்டு என்னைப் பார்த்து தலை சொறிந்தார்..

"சொல்லுங்க .. பார்ப்போம். ஒண்ணும் ப்ரச்சினையில்லை. தம்பி நம்ம தம்பிதான்.. பரவாயில்லை.. கூச்சப்படாமல் சொல்லுங்க"

"என் பொண்ணுக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன். ஒரு லட்ச ரூபாய் போலக் குறையுது.. நீங்க கடன் கொடுத்தால் 2 மாசத்துல திருப்பிக் கொடுத்துடறேன். பணம் வெளியிலேருந்து வரவேண்டியிருக்குங்க.. வந்த உடனே கொடுத்திடறண்ணே"

"என்ன நைனா, இப்ப சொல்றீங்க. இப்பத்தான் போக்கு வரத்து சிலது முடிச்சேன். இப்ப வந்து சொல்றீங்களே.. உங்களுக்குத் தராம இருக்க முடியுமா?"

"உங்களுக்கு குறைச்சலா அண்ணே.. பணம் எப்படியும் எனக்கு 2 மாசத்துலே வந்திரும். கொடுத்திடறேண்ணே.. ஒரு ரூவா முடியாட்டாலும் பாதியாவது கொடுத்து உதவுங்கண்ணே.. வர வேண்டிய இடத்துலேருந்து பணம் வந்த உடனே உங்களுக்கு முதல்ல திருப்பிடறேண்ணே.. பொண்ணு கல்யாணம் வெச்சாச்சு.." ‍ திருப்பித் திருப்பி அதையே சொல்லிக்கொண்டிருந்தார்..


கடைசியாக அண்ணன்,
"பொண்ணு கல்யாணம்னு சொல்றீங்க.. நானும் கொடுக்கணும் ஆசைதான்.. இப்ப நேரம் சரியில்ல.. என்னால முடிஞ்சது, கல்யாணத்துக்கு ஒரு மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்துடறேன்.. சந்தோஷமா கல்யாணத்தை நடத்துங்க"

வந்தவரும் வேறு வழில்லாமல், ஒரு மூட்டை இலவச அரிசிக்கு உத்திரவாதம் (இதெல்லாம் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசி காலத்துக்கு முன்னால்) வாங்கி சந்தோஷமாகச் சென்றுவிட்டார்.

அப்புறம் அவர் போனப்புறம், அண்ணன் அவர் லாஜிக்கை சொன்னார்.

"சீனா, இவரு நல்லவருதான். நம்ம கட்டடத்துலயெல்லாம் வேல பார்த்திருக்காரு. ஒரு வகையில நாணயஸ்தரும் கூட. ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் அவருக்கு இருக்குற சூழ்நிலையிலே திருப்பிக் கொடுக்க முடியாது. அப்புறம் நம்மளைப் பார்க்க கூச்சப்பட்டுக்கிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போவாரு. கட்டடத்துக்கு வேலைக்கும் வரமாட்டாரு. எங்க நாம அவர் கூலியை கடனிலே கழிச்சிருவோமோன்னு வேலைக்கும் வரமாட்டாரு.. ஒரு லட்ச ரூபா கடனாக் கொடுத்தா நம்க்கு பணமும் வராது. ஒரு நல்ல தொழிலாளியும் கிடைக்க மாட்டாரு. இதே ஒரு மூட்டை அரிசி கொடுத்தா, நமக்கு கல்யாணத்துக்கு உதவி செஞ்ச புண்ணியமாவும் போகும். அவரும் அடுத்தாப்பல நம்மகிட்டே வேலைக்கும் வருவாரு"

நல்ல லாஜிக். நிறைய பேர்கிட்டே இந்த மாதிரி பணம் கொடுத்து அனுபவப்பட்டிருக்காரு. அனுபவத்தைப் போல சிறந்த ஆசான் எதுவும் இல்லை..



சில சமயங்கள்ல மக்கள் விதவிதமா யோசிக்கிற விஷயம் வியப்பா இருக்கு. ஒரே சிச்சுவேஷன், இரண்டு பேரு இரண்டு விதமாச் செஞ்சது நியாயமாவேப் பட்டது. உங்களுக்கும் இந்த விதமான சூழ்நிலை (கடன் கேட்ட போதோ, அல்லது கொடுக்கும் போதோ அல்லது மறுக்க முடியாம மாட்டிக்கிட்ட போதோ) இருந்திருந்தால் சொல்லுங்க..


பி.கு: சினேகா விடுப்பில் இருப்பதால்.. இப்போதைக்கு மீரா ஜாஸ்மின்..

15 comments:

sriram said...

அண்ணே, நான் காபி குடிக்க போயிட்டே இருக்கேன், ஒரு டாலர் என் அக்கௌண்ட்ல போட்டுடுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சீமாச்சு.. said...

//
sriram said...
அண்ணே, நான் காபி குடிக்க போயிட்டே இருக்கேன், ஒரு டாலர் என் அக்கௌண்ட்ல போட்டுடுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

பதிவு போட்டு 2 நிமிஷம் கூட ஆகலை அதுக்குள்ள ஒரு பின்னூட்டமா?

ஸ்ரீராம், உங்க வேகம் பிரமிக்க வைக்குது..

இடுகையைப் படிச்சீங்களா, இல்லியா? நாளைக்குப் பேசும் போது இந்த இடுகையிலிருந்து கேள்வி கேட்பேன்..

நன்றி..

Santhini said...

Very Good Logic. Hope I could remember it to apply when needed.

பழமைபேசி said...

”பழமை, காருக்கு பெட்ரோல் போடணும்...கிரிடிட் கார்டு எடுத்துட்ட வர மறந்துட்டேன்...இருபது டாலர்க்கு உங்க கார்டை யூஸ் பண்ணிப் போடலாம்...நான் உங்களுக்கு காசு தந்தர்றேன்!”

“ஓ, அதனாலென்ன? உங்களை ஏர்ப் போர்ட்ல ட்ராப் செய்தவிட்டு உங்க கார் எங்கிட்டத்தான ஒரு வாரம் பத்து நாளைக்கு இருக்கப் போகுது? பெட்ரோல் போட்டுத் தர்றீங்க... உங்களுக்குப் பெரிய மனசுங்ண்ணே!”

உண்மைத்தமிழன் said...

[[[அனுபவத்தைப் போல சிறந்த ஆசான் எதுவும் இல்லை..]]]

நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைண்ணே..!

ஆயில்யன் said...

சாதுர்யமாக தவிர்த்தல் அப்படின்னு வைச்சுகிடலாம் - கண்டிப்பா ஒரு அனுபவ குறிப்பு இருக்கும் !


இரண்டு பேர் இரண்டு அனுபவம் மட்டும் சொல்லியிருக்கீங்கன்னு ஆனா இங்க இன்னுமொரு அனுபவம் மூணாவதா சாதுர்யமாக சொல்லுதல் நடந்திருக்கு !

சினேகா விடுப்பில் மீரா வெட்கத்தில்

இதுதான் :)))

அரசூரான் said...

//பழமைபேசி said...
”பழமை, காருக்கு பெட்ரோல் போடணும்...கிரிடிட் கார்டு எடுத்துட்ட வர மறந்துட்டேன்...இருபது டாலர்க்கு உங்க கார்டை யூஸ் பண்ணிப் போடலாம்...நான் உங்களுக்கு காசு தந்தர்றேன்!”

“ஓ, அதனாலென்ன? உங்களை ஏர்ப் போர்ட்ல ட்ராப் செய்தவிட்டு உங்க கார் எங்கிட்டத்தான ஒரு வாரம் பத்து நாளைக்கு இருக்கப் போகுது? பெட்ரோல் போட்டுத் தர்றீங்க... உங்களுக்குப் பெரிய மனசுங்ண்ணே!”//
பழமை, அவர் எங்கூர்காரரு... பார்த்தீங்கள்ள..., ரெண்டு அனுபவத்தை பார்த்தும் உங்களுக்கு 1 டாலரும் கொடுத்து 1 மூட்டை அரிசியும் கொடுத்து இருக்காரு, அதாங்க பெட்ரோலும் போட்டு காரையும் உங்ககிட்ட கொடுத்து இருக்காரே சீமாச்சு... ரொம்ப நல்லவரு.... அவ்வ்வ்வ்வ்

சீமாச்சு.. said...

//பழமைபேசி said...
”பழமை, காருக்கு பெட்ரோல் போடணும்...கிரிடிட் கார்டு எடுத்துட்ட வர மறந்துட்டேன்...இருபது டாலர்க்கு உங்க கார்டை யூஸ் பண்ணிப் போடலாம்...நான் உங்களுக்கு காசு தந்தர்றேன்!”

“ஓ, அதனாலென்ன? உங்களை ஏர்ப் போர்ட்ல ட்ராப் செய்தவிட்டு உங்க கார் எங்கிட்டத்தான ஒரு வாரம் பத்து நாளைக்கு இருக்கப் போகுது? பெட்ரோல் போட்டுத் தர்றீங்க... உங்களுக்குப் பெரிய மனசுங்ண்ணே!”

//
ஐயா, இந்த உரையாடலை எங்கியோ கேட்ட மாதிரியிருக்கே. நான் தானா அது?

காசு, கீசு திருப்பிக் கொடுக்க மறந்துட்ட்டனா? இப்படிப் போட்டு வாஙகறீங்களே...

சீமாச்சு.. said...

//Nanum enn Kadavulum... said...
Very Good Logic. Hope I could remember it to apply when needed.//

ஐயா, வாங்க, உங்கள் வரவு நல்வரவாகுக.

இராகவன் நைஜிரியா said...

அனுபவம் புதுமை....

கடன் கொடுப்பதிலும் இரண்டு விதங்கள் காட்டியிருக்கீங்க... சூப்பர் அண்ணே.

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கிங்க. நானும் நிறைய பேருக்கு பணம் கொடுத்து விட்டு ஏமாந்துள்ளேன். ஒரு சமயம் நான் ஒரு பிரபல பதிவருடன் பேசிக் கொண்டு இருக்கும் போது பணம் கேட்டு அழைப்பு வந்தது. நான் தர்ம சங்கடத்துடன் பேசி முடிக்கும் போது அந்த பதிவர் சொன்னார். இப்படி வெளி நாட்டில் இருக்கும் போது பணம் கேட்கும் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். நாமும் கொடுத்து திருப்பிக் கேக்காமல் சங்கடம். ஆனா நமக்கு மட்டும் என்ன சும்மாவா கிடைக்குது.? இனிமேல் யாராவது அவசியம் இல்லாமல் கேட்டால் நிறைய காலதாமதம் செய். நூறு டாலர் கேட்டால் எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து 25 டாலர் கொடு என்றார். இரண்டு முறை இப்படி செய்தால் மூன்றாம் முறை கேட்பது குறைந்து விடும் என்றார். நல்ல அட்வைஸ் ஆக இருந்தது. இதுவே யாருக்காவது உதவி என்றால் அல்லது கஷ்டம் என்றால் இந்த பதிவர்தான் முதலில் உதவி செய்வார்.

நாமக்கல் சிபி said...

எனக்குக் கூட 1 டாலர் தேவைப் படுது!

பழனி மலை முருகன் டாலர்!

அபி அப்பா said...
This comment has been removed by the author.
www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இது நல்ல (ராஜ)தந்திரம்தான்.