Saturday, June 19, 2010

100. தாத்தா..ஒரு பல்கலைக்கழகம்

"தாத்தா ..."

இந்த வருடத்தில் நான் சந்தித்த ஒரு மாமனிதர். இவரை நான் சந்திக்க அருளியதற்கே ஆண்டவனுக்கு நான் நன்றி செலுத்தியாகவேண்டும்..

"வாங்க தம்பீ..." ..

எப்பொழுது வீட்டுக்குள் நுழைந்தாலும், தான் அமர்ந்திருக்கும் சோஃபாவிலிருந்து எழுந்து வந்து இரண்டு கைகளாலும் என் கையைப் பற்றி மலர்ச்சியான புன்னகையுடன், "எப்போ வந்தீங்க...வாங்க.." என்று வரவேற்று, எனக்குப் பின்னால் பார்த்து என் மனைவி குழந்தைகளெல்லாம் வருகிறார்களா என சட்டென்று கவனித்து "வீட்ல யாரும் வரலீங்களா?.. எல்லாரும் சௌக்கியம்தானே" என் விசாரிப்பார்.. அவர் வீட்டில் நானிருக்கும் போதும்.. அவர் முன்னதாகத் தூங்கச் செல்லும் முன், நான் வீட்டில் எங்கிருந்தாலும் என்னைத் தேடி வந்து.. "சாப்பிட்டீங்களா.. பேசிக்கிட்டிருந்துட்டு மெதுவாக் கெளம்பலாம்.. நான் மாடிக்குத் தூங்கப் போறேன்..." அதே மாதிரி இரு கைகளாலும் என் கை பற்றிச் சொல்லிவிட்டுச் ஒருச் சின்னப் புன்முறுவலுடன் விடை பெறுவார்.. இதே உபசரிப்பு என்னுடன் நண்பர் பழமைபேசி வந்தாலும் அவருக்கும் உண்டு.. இதெல்லாம் தாத்தா எனக்குச் செய்ய வேண்டியதேயில்லை..

அவருக்கு 95 வயது.. கடந்த மார்ச் மாதம் தான் கொண்டாடினோம். அவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் நானெல்லாம் ஒரு பொருட்டேயில்லை.. இருந்தாலும் எல்லோரையும் எந்த வயதினரையும் மதித்து அவரவர் வயதுக்கு இறங்கி வந்து நம்மை, நாமிருக்கும் சூழலை வசதிப்படுத்தி நமக்குள் அவரின் அன்பைச் செலுத்துவதில் தாத்தாவைப் பார்த்து எனக்குப் பெருமையும் பொறாமையும் கூட.. சட்டென்று யாரிடமும் ஒட்டாத கூச்ச சுபாவமுள்ள என் குழந்தைகள் கூட, தாத்தாவைப் பார்த்தால் ஓடிச் சென்றுக் கட்டிக் கொள்வர். ஓடும் தூரத்தில் பாதிதூரம் தாத்தா நடந்து வந்திருப்பார்..



தாத்தா திருச்சியில் ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியராக இருந்தவர். தமிழ்நாட்டு மாநில அளவில் நல்லாசிரியர் விருதை அப்போதைய கவர்னர் கே கே ஷா கையால் வாங்கியவர். விருது வாங்கும் அன்று திருச்சியிலிருந்து சென்னை சென்று அங்கு தங்கியிருந்து தாத்தா விருது வாங்கிய வைபவத்தை அவர் கடைசி மகன் டாக்டர் அஷோக்கிடம் ஒரு மாலைப் பொழுதில் கேட்டபொழுதில், தாத்தா தன் மகன் மனதில் எவ்வளவு பெருமையுடன் வீற்றிருக்கிறார் என்று புரிந்தது. தாத்தாவின் 5 குழந்தைகளிடமும் வெவ்வேறு தருணங்களில் பேசிக்கொண்டிருந்த போதுதான் தெரிந்தது ஒவ்வொருவர் மனதிலும் தாத்தா விசுவரூபமெடுத்து அமர்ந்திருக்கும் விதம். தலைமைஆசிரியர் பணியிலிருந்த போதே தமிழக பாடநூல் நிறுவனம் வெளியிட்ட உயர்நிலைப்பள்ளி பாடநூலகளுக்கான ஆசிரியர் குழுவில் தாத்தாவுக்கும் பிரதான இடம்.




Thatha with his son Dr Ravindran, Cardiologist and his grandkids.

தாத்தாச் சின்ன வயதில் ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் படித்திருக்கிறார். அவர் குடும்பப் பரம்பரையில் தாத்தா தான் முதல் பட்டதாரி. விவசாயம், வியாபாரம் மற்றும் தன் குடும்பம் சார்ந்த தொழில்களில் சிறுவயதிலேயே தாத்தாவுக்கு ஈடுபாடு இருந்திருந்தாலும், படிப்பின் மேன்மையை அப்பொழுதே உணர்ந்தவர் தாத்தா. அப்பொழுதே தன் பள்ளிப் படிப்புக்காக, தன் பெற்றோரை விட்டு வேறு ஊருக்குத் தனியாகப் படிக்க வந்த போது கல்வியின் அவசியத்தை தாத்தா உணர்திருந்தார். கல்வியையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் தான் உணர்ந்தது மட்டுமன்றி அதைத் தன் குழந்தைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தாத்தா ஊட்டியிருக்கிறாரென்பதை அவரது 95வது பிறந்தநாளைக்கு அவரது மொத்தக் குடும்பத்தையும் சந்தித்தபொழுது புரிந்தது..

"தாத்தா தான் ஆசிரியராயிற்றே.. உங்களையெல்லாம் ரொம்ப கண்டிப்பா வளர்த்தாங்களா, அஷோக்? "

"அவ்வளவு கண்டிப்பாயெல்லாம் இருக்க மாட்டாங்க.. ஆனால் நாங்க எல்லாரும் எங்க அப்பாவைப் பார்த்துத்தான் எல்லாமே கத்துக்கிட்டோம்.."

குழந்தைகளை அதட்டாமல் உருட்டாமல், மிரட்டாமல், கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிப்பதென்பது தாத்தாவிடம் நான் கற்கவேண்டிய பெரீய்ய விஷயம்..




Bloggers (சீமாச்சு, பழமைபேசி, பச்சானந்தா, குலவுசனப்ரியன்) in Florida on the eve of Thatha's 95th Birthday Party

தாத்தாவுக்கு 4 மகன்கள், 20க்கும் மேல் பேரப்பிள்ளைகள், மருமகன்கள், மருமகள்கள்.. தாத்தாவின் பிறந்த நாளைக்குப் போன போது தான் கவனித்தேன்.. ஒவ்வொருவரும் மருத்துவரகள், சிலர் வழக்கறிஞர்கள். அந்தப் பக்கம் போன ஒரு ச்சின்னப்பெண்ணை (தாத்தாவின் பேத்தி) நிறுத்தி "என்னம்மா.. எந்த க்ளாஸ் படிக்கிறே?" என்று தெரியாத்தனமா விசாரிச்சிட்டேன்.. கேட்டிருக்கக் கூடாது போலருக்கு.." நான் இப்பத்தான் மெடிசின் முடிச்சேன் அங்கிள்.. இருதய நிபுணர் (Cardiologist) ஸ்பெஷலைஸ் பண்ணப்போறேன் அங்கிள்" சொன்னதைக் கேட்டு sweet surprise.. "தெரியாம, ஒரு பொண்ணைப் பார்த்து இப்படிக் கேட்டு பல்பு வாங்கினேன்" என்று எங்க வீட்டுத் தங்கமணியிடம் சொன்ன போது, "உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை.. இங்க எல்லாரும் டாக்டர்ஸ்..இனிமே.. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் .. நீ என்ன டாக்டரும்மா..ன்னு கேளுங்க போதும்.." என்று என் பட்டிக்காட்டுத்தனத்தைப் பறைசாற்றிட்டுப் போனார்.. பக்கத்திலிருந்து களுக்கென்று சிரித்துவிட்டு.. நான் திரும்பிப்பார்த்ததும் இன்னொரு டாக்டரைப் பார்க்கிறாமாதிரி முகத்தைத் திருப்பிக்கிட்டாரு பழமைபேசி..

நடுத்தர வர்க்கக்க குடும்பத்தில் முதல் பட்டதாரியானபோதும், ஒரு பெரீய்ய விஷனுடன் இவ்வளவு மருத்துவர்களையும் வழக்கறிஞர்களையும் உருவாக்கிய தாத்தாவின் விடா முயற்சியையும், பரந்து பட்ட அறிவையும் தினமும் வியக்காமலிருக்க முடியவில்லை.. தாத்தாவின் பிள்ளைகள் 40 வருடங்களாக அமெரிக்காவில்..தாத்தாவின் குடுமபத்தில் நிறைய்ய வெள்ளைக்காரர்கள்.. அவரின் ஒரு மகன் ஒரு வெள்ளைக்காரப் பையனைத் தத்தெடுத்து வளர்க்கிறார். எல்லாருக்கும் தாத்தா என்றால் அவ்வளவு உயிர்..

தாத்தா போகாத நாடுகளில்லை.. ரிட்டயரானவுடன் பையன்களுடன் அமெரிக்கா வந்து விட்டார். வந்தவுடன் எல்லா நாடுகளையும் சுத்திப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தாத்தாவுக்கு. "அப்பா எந்த கன்ட்ரி போகணும்னு கேட்டாலும் உடனே அனுப்பி வைத்து விடுவோம்.." சொன்னது தாத்தாவின் பையன் டாக்டர் ரவீந்திரன் Cardiologist. சார்லெட்டில் டாக்டர் அஷோக் Neurologist வீட்டில் தாத்தா சீனா சென்றிருந்த போது அப்போதைய இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனுடன் எடுத்திருந்த புகைப்படத்தைப் பார்த்தேன். தாத்தாவின் பல நாட்டு விஜயங்களை அவர் வாயாலே கேட்பதே ஒரு சுகானுபவம்.


தாத்தாவின் 95 வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக, தாத்தாவின் கடைசி மகன் டாக்டர் அஷோக்குடன் அவர் குடும்பத்துடனும், என் குடும்பத்துடனும், பழமைபேசியுடனும் சார்லெட்டிலிருந்து ஃப்ளோரிடாவுக்குக் காரில் சென்று கொண்டிருந்தோம்.. 8 மணி நேரப் பயணமிது. ஃப்ளோரிடாவில் விழா நடக்கும் இடத்தினருகில் (Melbourne, Florida) உள்ள ஒரு ஹோட்ட்டலில் எங்களுக்குத் தங்க இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாலை ஆறு மணிக்கு சார்லெட்டிலிருந்து கிளம்பினாலும் ஃப்ளாரிடா போய்ச்சேர நள்ளிரவு தாண்டி இரண்டு மணியாகிவிட்டது. ஹோட்டலுக்கு போவதற்கு முன் டாக்டர் அஷோக்கின் மூத்த மகன் பெரியப்பா வீட்ட்டுக்குப் போக ஆசைப்பட்டான். அவனது கஸின்களோடு இரவைக் கழிக்க அவனது விருப்பம். அண்ணன் வீடுவரை போய அவனை இறக்கிவிட்டு வருவதற்குக் கால தாமதம் ஆகுமென்பதால் தன் அண்ணன் மகனை(அஜய்) ஒரு பொது இடத்துக்கு வரவழைத்து தன் மகனை அவனுடன் அனுப்பிவிடலாமென்று முடிவு செய்தார். மறுநாள் விசேஷமென்பதால் வீடு களை கட்டியிருந்தது.. யாரும் தூங்கவில்லை போலும்.. நாங்கள் போகும் வழியில் ஒரு வால்மார்ட் Gas Station/Parking Lot ல் வண்டிகளை நிறுத்தி வைத்து காத்திருந்தோம். டாக்டர் ரவீந்திரனின் மகன் அஜய் அவனது அமெரிக்க நண்பர்களுடன் காரில் வந்தான். அப்பொழுது மணி இரவு இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. 8 மணி நேர பயணக்களைப்பில் வண்டிகளை விட்டு எங்கள் இருவர் குடும்பங்களும் இறங்கி காலாற நின்று கொண்டிருந்தோம். ஒரு சிவப்பு நிற கார் வந்து எங்கள் அருகில் நின்று அதிலிருந்து அஜய் இறங்கி வந்தான். அஜய்க்கு 16 வயது.. இங்கேயே பிறந்து வளர்ந்தவன்..தனது அமெரிக்க நண்பனுடன் வந்திருந்தவன.. வண்டியை விட்டு இறங்கியவன் தன் சித்தப்பாவையும் சித்தியையும் பார்த்து அடுத்த வினாடியே இருவர் காலிலும் தனித்தனியே முழுவதும் விழுந்து நமஸ்கரித்தான்.. என்னைப் பார்த்து ஒரு "Hi Uncle" மற்றும் கைகுலுக்கல்..என் குழந்தைகளுக்கு ஒரு புன்முறுவல்.. அவன் வந்து சென்ற 5 நிமிடங்களில் எனக்குள் அவ்வளவு ஆச்சரியங்கள்.. மணியோ இரவு இரண்டு.. நாங்கள் நிற்பதோ ஒரு வியாபார நிறுவனத்தின் Parking Lot.. அப்படியும் தன் வீட்டுப் பெரியவர்களை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்த அந்த இந்திய அமெரிக்க இளைஞன் என் மனதில் ஆழமாகத் தடம் பதித்தான்.



Dr. Ravindran and Dr. Ashok - Thatha's sons

"என்ன்னங்க அஷோக் இது..?"

"எங்க வீட்டுல எல்லாருமே அப்படித்தாங்க.. பெரியவங்களை எங்க பார்த்தாலும் இப்படித்தான் நமஸ்காரம் பண்ணுவோம்.அது எந்த இடமானாலும் சரி.. கூட யார் இருந்தாலும் சரி.. சமயங்களில் ஏர்போர்ட்டுகளில் கூட நாங்க விழுந்து நமஸ்காரம் பண்ணியிருக்கோம்.."

அதற்கப்புறம் பேசுவதற்கு எனக்கு வார்த்தைகள் வரவில்லை.. அர்த்தபுஷ்டியுடன் என் மகள்களைப் பார்த்தேன்.. நாங்கள் எல்லோருமே அன்று இரவில் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டோம்


இத்தனை வருடம் அமெரிக்காவிலிருந்தும் தாத்தாவின் பிள்ளைகள் தங்கள் குடும்பத்தை வளர்த்த விதமும், அதில் தாத்தாவின் Value System த்தின் பங்களிப்பும் புரிந்தது..


யாராவது தாத்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் உடனேயே அந்த இடத்துலேயே ஒரு ஐந்து டாலர் நோட்டு கையில் கொடுத்துவிடுவார். தாத்தா பையில் எப்பொழுதும் ஒரு கட்டு ஐந்து டாலர் நோட்டு வைத்திருப்பார். தன்னை நமஸ்கரிக்கும் யாருக்கும் தாத்தா உடனே 5 டாலர் தந்து விடுவார். அவர் பையில் எப்பொழுதும் குறைவில்லாமல் 5 டாலர் நோட்டுக்கட்டுக்கள் வைத்திருப்பது மருமகள்களின் வேலை.. தாத்தாவின் ஒரு பேரனிடம் இது குறித்து விசாரிக்கும் போது "Thatha used to give us a dollar before. Due to inflation and economic coditions he bumped it up to 5 dollars now.. If it is very very special occasion Thatha may give 100 dollars as well" என்றான்..


தாத்தாவுக்கு ஈமெயில் அக்கவுண்ட்டும் உண்டு. யார் ஈமெயில் அனுப்பினாலும் உடனேயே ஃபோன் செய்து "உன் ஈமெயில் வந்தது.. படித்துவிட்டேன்" என்று சொல்லிவிடுவார்.

தாத்தாவுக்கு சாயங்காலம் ஆனால் சன் டீவீ வேண்டும். "Thatha.. would you like to have some wine?" சாவகாசமாகக் கேட்டு பேரன்கள் ஒரு க்ளாஸில் வைன் ஊற்றிக் கொடுப்பார்கள்.. சன் டீவி வரவில்லையென்றால் தாத்தாவிற்கு இருப்பு கொள்ளாது.. டீவி சரியாத் தெரியாத போது வந்து சரி செய்து கொடுக்குற பேரன்/பேத்திக்கு 5 டாலர் அவசியம் கிடைக்கும். இதற்காகவே தாத்தாவுக்கு அஜய்யும் விஷாலும் ஸ்பெஷல் பேரன்கள்...


இந்த 95 வயதிலும் தாத்தா மறக்காமல் ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் திருச்சி வந்து விடுவார். சுவாதீனமாக ஃப்ளைட் ஏறி சென்னையில் இறங்கி திருச்சி வந்து தன் பென்ஷனுக்கான வருடாந்திர சம்பிரதாயங்களை முடித்து வருவார். தன் பையன்களிடமிருந்து ஒண்ணரை கோடி ரூபாய் வாங்கி ஏழைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று திருச்சியில் அமைக்க ஒரு ட்ரஸ்ட் தன் மனைவி பெயரில் அமைத்திருக்கிறார். தன் காலத்துக்குள் அந்தக் காப்பகத்தை அமைத்து அங்கு ஏழை/அனாதைக் குழந்தைகள் நலமாக இருப்பதைப் பார்க்க வேண்டுமென்பது தாத்தாவின் கனவு. காப்பகத்துக்கு இப்பொழுதுதான் நிலம் பார்த்து பேசி முடித்திருக்கிறார். இந்த காப்பகம் தொடர்பான அத்தனை கடிதப் போக்குவரத்துக்களும் தாத்தாவே கவனிக்கிறார். இரவு இரண்டுமணிக்கு மேல் தாத்தா ரூமில் ஏதாவது சத்தம் கேட்டால் "Appa is talking to people in India regarding the Trust " என்கிறார் டாக்டர் அஷோக். "இதெல்லாம் அப்பாவே பார்த்துக்கிறார்.. இதில் நாங்கள் எதுவும் செய்வதில்லை.. அவருக்கு அவர் கையாலேயே எல்லாம் செஞ்சாத்தான் த்ருப்தி" என்கிறார் அஷோக்


ஃப்ளோரிடாவில் தன் சகோதரர் பெயரில் முதியவர்களுக்கான ஒரு காப்பகத்தை அமைக்க டாக்டர் ரவீந்திரன் 1 மில்லியன் 1 டாலர் நன்கொடையாகத் தந்திருக்கிறார். இந்த முதியோர் காப்பகம் தாத்தாவின் மகன் டாக்டர் ஜெயக்குமார் பிள்ளை Psychologist அவர்கள் நினைவாக அமைக்கப் படுகிறது.. இது சம்பந்தமாக ஃப்ளோரிடாவில் வெளியான செய்திக்குறிப்புச் சுட்டி

நான் திருச்சி வரும் பொழுது தாத்தாவிடம் பள்ளியில் படித்த மாணவர்களையும், அவருடன் வேலை பார்த்த ஆசிரிய ஆசிரியைகளையும் முடிந்தால் சந்திக்க வேண்டும். தாத்தாவைப் பற்றி நான் தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் எனக்கொரு நல்ல பாடமாக அமையும் என்பது என் நம்பிக்கை.

ஒவ்வொரு விஷயத்திலும் தாத்தாவின் (உயர்திரு. பழனியாண்டி பிள்ளை) குடும்பம் பிரமிக்க வைக்கிறது.. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்தது தாத்தா என்ற இந்த பெரிய ஆலமரத்தையும் அதன் ஓராயிரம் விழுதுகளையும் சந்தித்த போதுதான்..இந்த தந்தையர் தினத்தில் என் நூறாவது இடுகை தாத்தாவைப் பற்றி எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..


தாத்தாவுக்கு ஒரு வேண்டுகோள்: நீங்க எனக்காகவாவது இன்னும் நூறு வருஷம் இருக்க வேண்டும். நீங்கள் தொட்ட எல்லைகளை உங்கள் ஆசியுடன் நானும் தொடவேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இன்னும் நிறைய நல்ல காரியங்கள் செய்யவேண்டும்...

Thursday, June 17, 2010

99. சீமாச்சுவின் தாம்பூலம் - 17 ஜூன் 2010

நித்யானந்தா ஜெயிலிலிருந்து வந்துவிட்டாராம். அவரை எதற்கு ஜெயிலில் போட்டார்களென்று தெரியவில்லை. சட்டத்தின் பார்வையில் அவர் எந்த ஒரு குற்றமும் பண்ணவில்லையென்றே நான் நம்புகிறேன். மீடியா கிளப்பிவிட்ட பரபரப்பின் உச்சியில் மக்களின் ஏமாற்றத்தத்தைத் தணிக்க, அவரின் பாதுகாப்புக்க்காகவும் தான் அவரை 44 நாட்கள் உள்ளே வெச்சிருந்தாங்க போலருக்கு. வெளியில் வந்த போது 44 நாட்கள் ஜெயிலில் இருந்த வாட்டமே முகத்தில் இல்லை. நானெல்லாம் இவ்வளவு நாள் உள்ளேயிருந்திருந்தால் வெளியில் வரும் போது முகம் எப்படியிருக்குமென்று ஊகிக்கவே பயமாயிருக்கு. சட்டப்படி தப்பு ஏதும் பண்ணாவிட்டாலும் குறைந்த பட்ச குற்ற உணர்ச்சியையாவது முகத்தில் காட்டியிருந்திருக்கலாம்.

வெளியில் வந்த பிறகும் நெருப்பின் நடுவில் தவம் செய்கிறேனென்ற ஸ்டெண்ட் அடிச்சிருக்க வேண்டாம். இவர் பிரச்சினை போதாதென்று பஞ்சாக்னி தபஸ் என்ற தூய்மையான ஒரு விஷயத்தை கேலிக்குள்ளாக்கிவிட்டார்.. போட்டோவுக்கு போஸ் தருவதற்காக 2 மணி நேரம் உக்கார்ந்திருந்தார் போல..

நீதிமன்றம் விதித்த தடையின்படி அவர் சில காலம் ஆன்மீகப் பிரச்சாரம் செய்யக்கூடாதாம். இதுவும் யாரைத் திருப்தி படுத்த என்று தெரியவில்லை. ஒரு தனி மனிதர் தன் மதத்தைப் பின்பற்றுவதிலோ, அல்லது பிரச்சாரம் செய்வதோ நம் நாட்டுக் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையென்று நம்புகிறேன். அதை நீதிமன்றம் ஒருவருக்கு மறுப்பதென்பது தவறாகவேப் படுகிறது. நீதிமன்றத் தீர்ப்பின் முழுவடிவத்தையும் நான் பார்த்து கருத்துச் சொல்வதற்குப் போதுமான சட்ட ஞானம் எனக்கு இல்லாதபடியால் இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்..

அவசியமான குறிப்பு : நான் நித்தியானந்தாவின் பக்தனில்லை. அதனால் யாரும் அது விஷயமாக என்னைத் திட்டிப் பின்னூட்டமிடவேண்டாம்..


oOo


தமிழ்நாட்டில், பழையூரில் ஒரு இடத்தில் தெருவிளக்கு எரிவதில்லையாம். அதனால் யாரோ ஒரு குறும்புக்காரை விளக்குக் கம்பத்தில் அரிக்கேன் விளக்கைக் கட்டி விட்டிருக்கிறார். நல்ல ஐடியா..

சில வருஷங்களுக்கு முன் 1980களில், மயிலாடுதுறை தலைமைத் அஞ்சல் அலுவலகம் அருகில், ரோடு மிக மோசமாக் இருந்தது. அப்பொழுது மழை வேறு சேர்ந்து கொண்டதால், அருகே நிறைய சேறும் சகதியுமாக ரொம்ப மோசமாக இருந்தது. அப்பொழுது பாரதீய ஜனதா கட்சியினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் அஞ்சல் அலுவலகம் அருகில் “நாற்று நடும் போராட்டம்” நடத்தி ரோட்டிலேயே நாற்று நட்டு விட்டார்கள்.. கொஞ்சம் புதுமையாக இருந்தது. அதற்குப் பலனாக அரசாங்கத்தில் உடனேயே ரோடு போட்டுக் கொடுத்து விட்டார்கள்.. அப்பொழுதெல்லாம் ஜெகவீரபாண்டியன் ரொம்ப ஒல்லியாகவும் பணக்காரராக இல்லாமலும் இருந்தார்.. பிறகு MLA ஆனபிறகு எல்லா விதத்திலும் வளர்ந்து விட்டார். அப்பொழுதெல்லாம் அவர் பெயரை எழுதும் போது ஜெகவீரபாண்டியன் M.A (Eco), M.A (Pub Adm), M.Phil, B.Ed. என்று அவர் படித்த படிப்பை முழம் நீட்டு எழுதுவார்கள்.. இப்பொழுதெல்லாம் ஜேவீ Ex. MLA. மட்டும் தானாம்.. ஹூம்ம்ம்ம்





oOo

இந்த வருடம் உறவினர் பையன் ஒருவருக்கு (சொல்லிக்கொள்ளும் படியான மதிப்பெண்களில்லை) கல்லூரியில் அட்மிஷன் வாங்க வேண்டியிருந்தது. ரொம்ப வேண்டிய பையன். எல்லோரும் காலேஜ அட்மிஷனுக்கு பிப்ரவரியிலிருந்தே துண்டு போட்டுக்கிட்டிருக்கும் போது இவர்கள் தேர்வு முடிவுகள் வந்து 6 வாரம் கழித்து வந்தார்கள்...பையன் OC மாணவர் வேறு..என் அண்ணன் மகனுக்கு நான்கு வருடம் முன்பு 7 லட்ச ரூபாய் கேபிடேஷன் கொடுத்து கோவையில் ஒரு பெரிய்ய கல்லூரியில் பிப்ரவரி மாசமே (12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே) சீட்டு வாங்கினோம்.. இப்பவோ ஜீன் மாதம் வேறு.. மார்க்கும் அவ்வளவாக இல்லை.. ஊரில் உள்ள ஒரு பதிவர் தம்பிக்குப் போன் போட்டேன்..

” ராஜா... நம்ம ஊரு காலேஜ் எதிலயாவது நம்ம பையனுக்கு ஒரு சீட்டு கிடைக்குமா? மார்க்கை மட்டும் கேட்காதே...”

” என்னண்ணே.. ஒரு சீட்டாண்ணே வாங்கிடலாம்ணே.. ”

”ரொம்ப லேட்டாயிருச்சே ராஜா.. மேனேஜ் மெண்ட் கோட்டாவெல்லாம் முடிஞ்சிருக்குமே...”

”பரவாயில்லண்ணே.. ஆமாம்..நீங்க ஏண்ணே என்னைக் கேக்கிறீங்க.. உங்க பேரைச் சொன்னாலே எதுவும் கேக்காம சீட்ட்டு கொடுத்திருவாங்கண்ணே... ”

”நெசம்ம்ம்மாவா ராசா? என் பேருக்கெல்லாம் எஞ்சி்னீயரிங் காலேஜ் சீட்டெல்லாம் குடுக்குறாங்களா...?”

”என்னண்ணே.. நானே இப்பப் போயி உங்க பேரைச் சொல்லி சீட்டு வாங்கிருவேண்ணே.. உங்க பவரே உங்களுக்குத் தெரியலியேண்ணே....”

“இதெல்லாம் சொன்னா எங்க வீட்டுத் தங்கமணி கூட நம்ப மாட்டாளே ராஜா”

“அப்படி ஏதாவது சொன்னால் அண்ணிகிட்டே போனைக் குடுங்கண்ணே... நான் சொல்றேன்..”


.......

சில தொலைபேசித் தொடர்புகளில் எந்தவித சிரமமும் இல்லாமல் பையனுக்கு நல்ல கோர்ஸில் நல்ல காலேஜில் எந்தக் காசும் வாங்காமல் சீட்டு கிடைத்துவிட்டது.. என் பெயரும் ஒரு காரணமென்பதில் ஒரு மகிழ்ச்சிதான்.. அமெரிக்காவிலிருந்த தங்கமணி நேரில் சென்று கல்லூரியில் சேர்த்தாலும்.. எனக்கென்னவோ வீட்டில் கிடைக்கும் மதிப்பில் பெரிய்ய மாற்றமிருப்பதாகத் தெரியவில்லை

ஆண்டவனுக்கு நன்றி !! பையன் நல்லமுறையில் படித்துத் தேறுவது இனி அவன் கையில்..

oOo

இந்த YouTube காணொளியில் குழந்தை வர்ஷா ஹரிகதா காலேட்ஷேபம் செய்கிறது. சீதா கல்யாணம். தொலைக்காட்சி சீரியல்களின் வரவால் தொலைந்து போகும் அபாயத்திலிருந்த இந்தக் கலை மறுபடியும் மொட்டு விடுவதில் மிகமிக மகிழ்ச்சி..

குழந்தை வர்ஷாவின் காணொளியைக் கேளுங்கள்.. உங்கள் ஆசிகளும் குழந்தைக்குச் சேரட்டும்..



இன்னும் எழுத வேண்டியது நிறைய்ய இருக்கிறது.. அக்கினிச் சித்தருக்கு பதில் சொல்ல வேண்டும்.. இந்த இடுகையில் அக்கி்னி சம்பந்தமான விஷயங்கள் அதிகம் எழுதிவிட்டதால் .. அடுத்த இடுகையில் (அது நூறாவது ... அதில் வேண்டாம்..) எழுதி விடலாம்...