இப்போ அப்போ என்று ஒரு வருடமாக பேசிக்கொண்டிருந்த எந்திரன் வந்து விட்டது. முதல் நாள் டிக்கெட் விலை 30 டாலர்.. இரண்டாம் நாளிலிருந்து 20 டாலராம். அவ்வளவு காசெல்லாம் கொடுத்துப் பார்க்கக்கூடாது. அந்தக் காசை (குடும்பம் முழுவதும் பார்ப்பதென்றால் 80 டாலர்) நம்ம பள்ளிக்கூடக் கட்டடத்துக்கு 10 மூட்டை சிமெண்ட் வாங்கலாம் என்றெல்லாம் பெரிய்ய வீறாப்போடு இருந்ததெல்லா வேஸ்ட். “நீங்க வாங்க சார்.. பள்ளிக்கூடத்துக்குத் தனியா சிமெண்ட் வாங்கித்தர்றேன்” என்று சொல்லி என் விரதத்தையெல்லா கலைத்து என் குடும்பத்தையே மொத்தமாகத் தூக்கிக் கொண்டுபோய் தியேட்டரில் உட்கார்த்தி வைத்துவிட்டார் நண்பர். கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடுதான் ப்டம் பார்க்க ஆரம்பித்தாலும், போகப் போக எல்லாம் சரியாகி படமும் நன்றாக இருந்தது என் நல்ல நேரம் தான்..
வசீகரனாக வந்த ரஜினி மட்டும் தான் ஒரிஜினல் ரஜினி போலும்.. தசாவதாரத்தில் கமல் ஃப்ளெட்சர் மாதிரி மேக்கப் போட்டு வந்தது போல வேறு யாரோ டூப்புக்கு ரஜினியாக மேக்கப் போட்டு சிட்டியாக (சில க்ளோசப் காட்சிகள் தவிர) உலவவிட்டு விட்டார்கள்..
“நீங்க பேசாம இங்க உக்காருங்கண்ணே.. பாக்கி நாங்க செய்யறதையெல்லாம் பார்த்திட்டிருங்க” என்று ரஜினிகிட்டேயே சொல்லிட்டு எல்லாம் தயாரிச்ச மாதிரியிருக்கு. அதனாலதானோ என்னவோ ரஜினி கூட “இது முழுக்க முழுக்க சங்கர் படம்” என்று சொல்லிட்டாரு போல.
“ரஜினி முகத்துக்கு மட்டும் தான் காசு.. ரஜினி படத்துல ரஜினி அடிக்கடி வந்தாத்தான் மக்கள் விரும்புவாங்க” அப்படீங்கிற ச்சின்ன ஃபார்முலாவை அப்படியே பெரிசாக்கி.. “அப்ப்டீன்னா... ஒரு ரஜினி.. இரண்டு ரஜினி..என்ன நூறு ரஜினி காட்டுவோம்”னு கிராபிக்ஸ் துணையில காட்டிய சங்கரின் வியாபார மூளைக்கு ஒரு சல்யூட் !!
சார்லெட்டில் தியேட்டரில் படத்தில் ரஜினி பெயர் வந்தபோது ”ரஜினின்னா ச்சும்மாவா”ன்னு எல்லோரும் ஒரே கத்தல்... ஐஸ்வர்யா பெயருக்கு யாரும் கத்த முன் வராத போது “ஐஸுன்னா .. சும்மாவா”.. என்று ஓங்கி தனியாக ஒலித்த குரல் என்னுடையது மட்டுமே.. (சார்லெட்) மக்களுக்கு ரசனையே இல்லாமல் போயிடிச்சி..
சனிக்கிழமை காலை சமீயாவிடம் பேசும் போது “எந்திரன் பாட்டு பாடுறா.. செல்லம்” அப்படீன்னா ..”ஹ..ஹ..ஹ..ஹா...” அப்படீன்னு ஹம்மிங் பண்ணினா.. அதனால் கிளிமாஞ்சரோ பாட்டுக்கு மட்டும் ஸ்பெஷல் அட்டென்ஷனோடு கவனித்தேன்...
படம் விட்டு வரும் போது “கிளிமாஞ்சரோ அப்படீன்னா என்ன Dad?" அப்படீன்னு கேட்ட என் மூத்த பெண்ணுக்கு என்ன சொல்வதென்று யோசிச்சிச் சொல்வதற்குள் ”It is the highest mountain in Africa" என்று அடிச்சிச் சொல்லிய தங்கமணியைப் பார்த்துப் பெருமைப்படுவதா, பொறாமைப்படுவதா என்று தெரியவில்லை. என்னதான் பொது அறிவு எல்லாம் படிச்சி தேர்வு எழுதி IAS இண்டர்வியூவெல்லாம் பாஸ் பண்ணியிருந்தாலும், சில நேரங்களில் பதில் மட்டும் உடனே சொல்ல வர்றதில்லை..
நாலு நாளா.. ”காந்தி பிறந்த நாள் அக்டோபர் 2 என்று தெரியும்.. வருஷம் தெரியுமா? ” அப்படீன்னு 10 பேர்கிட்டே கேட்டு யாருக்கும் தெரியவில்லை. நான் தான் கரெக்டா 1869 என்று அடிச்சிச் சொல்லிக்கிட்டிருக்கேன். அதெல்லாம் பொது அறிவிலே சேர்த்தின்னாலும், கிளிமாஞ்சரோன்னா என்னன்னு தெரிஞ்சுக்காம இருந்திட்டமேன்னு கொஞ்சம் வெட்கம் வந்தாலும்.. “இப்பத்தான் தெரியுமே” அப்படீங்குற அலட்சியத்தையும் ஜெயிக்க முடியலை..
சார்லெட்டுல 8 வருஷமாயிருக்கேன்னு பந்தா விட்டுக்கிட்டிருக்குற பிரபல பதிவருக்கு எந்திரன் வெளியிடற தியேட்டருக்கு வழி தெரியலை.. “இங்கதாண்ணே எங்கியோ இருக்கு” ன்னு சொல்லிட்டே மெட்ராஸ் ஆட்டோக்காரர் மாதிரி 5 மைல் தள்ளி ரவுண்டெல்லாம் அடிச்சிக் கொண்டுவிட்டாரு. நாம ஏன் அவரு மானத்தியெல்லாம் வாங்குவானேன்...
0Oo
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குடும்பத்தினர் இந்தியா போயிருந்தனர்..” உங்க புள்ளைஙகளை அழைச்சிக்கிட்டு எங்கியும் என்னால இனிமே போக முடியாது.. ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்கிட்டு உங்க மானத்தை வாங்குதுங்க” அப்படீன்னு சலிச்சிக்கிட்ட தங்கமணியைச் சமாதானம் பண்ணுவதற்காக, என் பிரிய பொண்ணுங்களிடம்..”ஏண்டா இப்படி என் மானத்தை வாங்குறீங்க” என்று அன்பா கேட்டதற்கு உடன் வந்த பதில் “I didnt buy your மானம் Daddy.. your wife only did... When we fight, she kept showing everybody that we are fighting.." என்று சூடான பதில் தான் வந்துது..
நம்ம நாட்டாமைத்தனம் நம்ம வீட்டுலயே பலிக்க மாட்டேங்குது. சொம்பை வெளியே எடுக்கு முன்னாடியே நசுங்கிப் போயிடுது..
oOo
”எந்திரனுக்கு அப்புறம் என்னடா” அப்படீன்னு இரண்டு வயசு சமீயாவைக் கேட்டத்ற்கு உடனே வந்த பதில்..
எந்திரன்
O - திரன்
P - திரன்
Q - திரன்
R - திரன்
S - திரன்
T - திரன்
U - திரன்
V - திரன்
W - திரன்
X - திரன்
Y - திரன்
Z - திரன்
முழுதும் சொல்லிவிட்டுத்தான் மூச்சே விட்டாள்.. அவள் சொன்ன வேகத்தில் எனக்கே மூச்சு முட்டியது..