Sunday, October 15, 2006

33. ஏங்க இப்படியெல்லாம் இருக்காங்க...


சில நாட்களாக ஒரு புதிய இடத்தில் ஒரு புதிய வேலை...

பழைய வேலையை விட்டாச்சு.. ஒரு வருஷத்துக்கும் கொஞ்சம் மேல குப்பை கொட்டியாச்சு.. புதிய வேலை புதிய இடத்தில்.. வேலையைப் பத்தி அப்புறம் பார்ப்போம்..



இன்னும் குடும்பம் இங்கு வந்து சேரவில்லை. வர கொஞ்சம் காலமாகலாம்.. புதிய இடத்தில் தனிக்குடித்தனம் தான் இன்னும் 4 மாதங்களுக்கு.. அப்பப்ப வார இறுதியில் வீட்டுக்குப் போய் வரலாம்.. வீட்டுக்குப் போவதை விட தனிக்குடித்தனத்தில் உட்கார்ந்து படித்தால் புது வேலையில் இன்னும் கொஞ்சம் திறமை காட்டலாம்..முன்னேறலாமென்று இந்த வாரம் போகவில்லை..

oOo

அமெரிக்கா வந்து.. 13 வருடங்களுக்கு மேல ஆகிவிட்டதால்.. இப்பொழுது புதிதாக வருபவர்களை பாசமுடன் நேசித்து வழி நடத்தும் பொறுப்பு இருப்பதாக நமக்குள்ளேயே ஒரு நினைப்பு.. சமயத்தில் அது தப்பாகப் போவதும் உண்டு.. வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஏதாவது புதிதாகக் கற்றுக் கொள்வதற்கே என்று நினைப்பதால்.. தவறுகள் எல்லாம் ஆண்டவன் அருளில் நமக்கு ஏணிப்படிகள் தான்..

சென்ற வாரம் மதியம் ஒரு இந்திய உணவகத்துக்குச் சாப்பிடப் போனேன். தட்டை வைத்துக் கொண்டு தனியாக உட்கார வேண்டாமேயென்று தனியாக அமர்ந்திருந்த ஒரு இந்திய இளைஞன் (25 வயது இருக்கும்.. மராட்டியர்) என்பவர் அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே சாப்பிட்டேன்.. என் கம்பெனிக்கு அருகில் உள்ள இன்னொரு கம்பெனியில் வேலை செய்கிறாராம்.. இந்தமாதிரி இந்திய இளைஞர்கள் வந்து அமெரிக்காவில் கலக்குவதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு தற்பெருமை உண்டு.. ஆஹா நம்ம ஊரு இளைய தலைமுறை இவ்வளவு வளர்ந்திருக்கிறதேயென்று..

அதனால்.. பரஸ்பரம் தொலைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு.. தவிரவும் ஏதாவது உதவி .. தொழில் ரீதியிலோ.. அல்லது தனிப்பட்ட முறையிலோ தேவையென்றால் தயங்காமல் அழைக்குமாறு சொல்லியிருந்தேன்..

oOo

இன்று ஞாயிற்றுக்கிழமை.. இரவு 9 மணியிருக்கும்.. அந்தத் தம்பியிடமிருந்து போன் அழைப்பு.. ஆஹா.. 'பையன் எள்ளுன்னா எண்ணெயா இருக்கானே..' அப்படின்னு காலரைத் தூக்கி விட்டுக்கிட்டேன்..

'அண்ணே உங்களுக்கு நிறைய ஃப்ரீ டயம் இருக்கா... அப்படீன்னா ஒரு தொழில் வாய்ப்பு இருக்கு.. பயன் படுத்திக்கிறீங்களா?' என்றான்..


காலர் இன்னும் உயர்ந்தது..

'பையன் தொடர்ந்து விவரிக்க விவரிக்க.. அது ஆம்வே போன்ற ஒரு Multi Level Marketing விஷயம் என்று புரிந்த்து..

'ராஜா.. ரொம்ப சந்தோஷம்.. இந்த மாதிரி விஷயமென்றால் இனிமே எனக்கு போன் பண்ணாதே.. ராஜா.. முன்னேர்ற வழியைப் பாரு' என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தேன்..

கனத்த நெஞ்சுடன் பையனின் தொடர்பு எண்களை என் தொலைபேசியிலிருந்து அப்புறப் படுத்தினேன்.

ஏங்க இப்படியெல்லாம் இருக்காங்க?

5 comments:

Boston Bala said...

படம் நன்றாக இருக்கிறது.

சொவ்வறைக்கு பதில் விற்பனையில் வல்லுனராக அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றெண்ணி மெச்ச வேண்டியதுதான் : )

Unknown said...

இதனால் எல்லாம் மனம் வருத்தப்பட்டு அடுத்தவருக்கு உதவுவதை நிறுத்தாதீர்கள்.

ஆம்வே என்பது நிர்மூடர்களின் கூடாரம்

இலவசக்கொத்தனார் said...

சீமாச்சு, எந்த ஊருக்குப் போயிட்டீங்க? தற்காலிக மாற்றம்தானா இல்லை நிரந்தர இடம் பெயர்தலா?

மனசு... said...

உதவி செய்யப் போயி உபத்திரவத்தில மாட்டிகிறதுனா இதானோ... உங்க எண்ணங்கள் நல்லவைதான்... ஆனா ஊருவிட்டு ஊருவந்து எப்படியாவது சம்பாதிச்சுடனும்னுங்கற எண்ணத்துல நம்ம மக்கள் அப்படி பண்றாங்க...

நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு விசயமும் ஆண்டவன் நமக்கு காமிக்கிற ஏணிப்படிகளே....

அன்புடன்,
மனசு...

சீமாச்சு.. said...

@பாஸ்டன் பாலா
நன்றி.. சில சமயங்களில் இவர்கள் இப்படி இருக்கிறார்களேயென்று கவலை வேறு வருகிறது.. அந்தப்படம் இதற்குப் பொருத்தமாகப் பட்டது.. போட்டிருப்பது சாமியார் வேடம்.. இருப்பது கங்கைக் கரையில்.. ஏன் சூதாடுவானேன்.. ஏதோ கவிதைத்தனமான முரண் இருப்பதாகப் பட்டது. சேமித்து வைத்திருந்தேன். இன்று பிரயோசனப்பட்டது..

@செல்வன்..
நமக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கிறது.. இவர்களைப் பார்த்து நான் என்னை மாற்றிக் கொள்வதாயில்லை. என் குணம் என் கூடப் பிறந்தது.. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..

@கொத்தனார்.. இன்னும் சில நிமிடங்களில் உங்களிடம் பேசுகிறேன்..

@மனசு.. காசு சம்பாதிப்பதற்காக ஆம்வே வழி வந்தது தான் எனக்கு உறுத்தியது. இங்க அமெரிக்காவில் சம்பாதிக்க வழியா இல்லை.. என்னவோ.. இவங்களெல்லாம் ஏன் வீணாப் போறாங்க ன்னு மனசு கெடந்து அடிச்ச்சுக்குது..

என்னிக்காவது திருந்தாமயாப் போயிடப்போறாங்க...

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு