Saturday, April 28, 2007

44. இதுவும் ஒரு மாயக்கண்ணாடிதான் !!

அவரை எனக்கு ஒரு 20 வருடங்களாகத் தெரியும்.. பெயர் பாலு என்று வைத்துக் கொள்வோமே (நிஜப் பெயர் வேண்டாமே..)

எங்கள் ஊரில் ஒரு நாவிதர். என் நண்பருக்கு நண்பராக அறிமுகம். மயிலாடுதுறையிலேயே இருந்து அங்கேயே ஒரு சிறிய கடை வைத்துக் கொண்டு அங்கேயே இருந்தவர். வருமானம் கடையையொட்டியே இருந்ததால் அதிகமாக வெளியில் செல்லமாட்டார். கடை உண்டு.. வீடு உண்டு என்ற வரையில் மிகத் தன்னடக்கமான மனிதர்.


என்க்குத் தெரிந்து பாலுவை நான் முதன் முறை சந்தித்தது சென்னையில். என் நண்பருடன் சென்னை வந்திருந்தார். நான் வேலை பார்க்கும் இடத்திற்கு என் நண்பர் இவருடன் என்னைத் தேடிவந்திருந்தார். நல்ல மதிய வேளை.. நண்பருடன் பேச வேண்டியது வேறு அதிகம் இருந்ததால்.. எங்கேயாவது நிம்மதியாக அமர்ந்து பேச வேண்டும் போலிருந்தது... இன்னும் சாப்பிடவில்லையாதலால் இருவரையும் அழைத்துக் கொண்டு பக்கத்திலுள்ள ஐந்து நட்சத்திர உணவக்த்துக்குச் சென்றேன். பாலு இதற்கு முன்பு ஒரு நட்சத்திரம் கூடப் பார்த்ததில்லையாதலால்.. அதிகமாகவே கேள்விகள் கேட்டுக் கொண்டு.. எல்லாவற்றையும் சுத்திச் சுத்திப் பார்த்துக் கொண்டு ஆச்சரிய இமயமாக வந்து கொண்டிருந்தார். ஒண்ண்ரை மணி நேரம் சாப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்த போது.. அவருக்கு ரொம்ப சந்தோஷம். '" தலைவா.... என் வாழ்க்கையிலேயே என்னை ஃபைவ் ஸ்டார்ல சாப்பிட வெச்ச் ஒரே ஆளு நீங்க தான் தலைவா.. நன்றி " என்று உளமாறக் கூறிவிட்டுச் சென்றார்.."

அதற்குப் பிறகு அதிகம் அவ்வளவாகப் பழக வாய்ப்புக் கிடைக்கவில்லை.. வெளிநாடுகளிலிருந்து ஊருக்குப் போகும் போது காலை வேளைகளில் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் சைக்கிளில் முன்னாள் ஒரு பையனையும் பின்னால் ஒரு பையனையும் வைத்துக் கொண்டு பள்ளீக்குக் கொண்டு செல்வார். பையன்களுக்கு அப்பொழுதெல்லாம் 5-6 வயதிருக்கும். பள்ளிச் சீருடை அணிந்திருப்பார்கள். வாசலில் நான் நிற்பது தெரிந்தால் ச்சின்னதாக ஒரு வணக்கம்.. அல்லது தலையாட்டலுடன் புன்முறுவல் எப்பொழுதும் உண்டு.

ஊரிலிருந்து விடுமுறையில் வரும் போதும் போகும் அவர் கடையில் சென்று முடி திருத்திக் கொள்வதுண்டு... குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று அக்கறையாகக் கேட்டுக் கொள்வேன். "நிறையப் படிச்சு உங்களை மாதிரி வரணும் தலைவா.." என்று ஆசைகளைக் கனவுகளைப் பரிமாறிக் கொள்வார். நானும் " குழந்தைகள் படிப்புக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டால் சொல்லுங்கள் செய்கிறேன் என்று உறுதியளித்திருந்தேன்". எப்பொழுது போனாலும் மற்ற எல்லா வாடிக்கையாளர்களையும் பொறுத்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டு.. என்க்கு பொறுமையாக முடிதிருத்துவார்... முடிதிருத்தி முடிக்கும் போது சில நூறு ரூபாய்த் தாள்கள் கை மாறும். நானும் எண்ணுவதில்லை.. அவரும் எண்ணிப் பார்த்ததில்லை..

வருடா வருடம் நடப்பதுதான்... குழந்தைகள் படிப்பில் அவருக்குக் கொள்ளை ஆர்வம்...

இந்த முறைப் போயிருந்த போதும் அவர் கடைக்குச் சென்றிருந்தேன். பொறுமையாகவே முடி வெட்டினார்.. வ்ழக்கத்துக்கு மாறாகப் பேச்சு குறைந்திருந்தது... எனக்கும் கொஞ்சம் அமைதி தேவைப் பட்டதால் பேச்சுக் கொடுக்கவில்லை...

அப்படியும் முடி வெட்டி முடியும் தருவாயில்..." பையன்களெல்லாம் எப்படிப் படிக்கிறானுங்க தலைவரே.." என்று விஷய ஆர்வத்துடன் கேட்டு வைத்தேன்..

கேட்டிருக்கக் கூடாதோ...

பக்கத்து இருக்கையில் முடிவெட்டிக் கொண்டிருந்த பையனை அப்பொழுதுதான் கவனித்தேன்... அவனைக் காட்டி .. 'பெரியவன் இப்பொழுது என் கூடத்தான் இருக்கான் தலைவா... தொழில் கத்துக் கொடுத்துக் கிட்டு இருக்கேன்.. ச்சின்னவன் .. என் தம்பி கடையில (அவரும் முடிதிருத்துபவர் தான்) இருக்கான்" என்றார்..

சொல்லும் போது தெரிந்த்து அந்தத் தகப்பனின் வலி... பையன் முகத்தில் பெரியதாக ஒண்ணும் உணர்ச்சிகளில்லை.. தகப்பனின் கனவுகள் இருந்த்ததோ.. அவை பெரிய வ்லியுடன் நொறுங்கியிருப்பதோ தெரியாதவனாகத் தான் தெரிந்தான்....


படம்: இந்த வருட குடியரசு தினத்தன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் பாடுவதை தலைமையாசிரியையுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என் அப்பா.

5 comments:

Anonymous said...

இது போல் உண்மையில் பின் தங்கியவர்க்குதான் இட ஓதுக்கீடு கொடுக்கப் பட வேண்டும். டாக்டர் ராமதாஸின் வாரிசுகளுக்கும், டாக்டர் கிருஷ்ணசாமியின் வாரிசுகளுக்கும் அல்ல.

துளசி கோபால் said...

அடடா........... பசங்க படிக்கலையா? நல்லாப் படிக்கிறப் பசங்கதானெ?

SurveySan said...

பையன் படிப்புத் தொடராததுக்கு காரணம் கேட்டிருக்கலாமே?

பணப் பற்றாக்குறை? உதவியிருக்கலாமே?

சீமாச்சு.. said...

அனானி, உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

துளசியக்கா, சர்வேசன், வருகைக்கு நன்றி..
அந்தப் பையன்கள் படிப்பில் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லையென்று நினைக்கிறேன். பணப்பற்றாக்க்குறை ஒரு விஷயமாகத் தெரியவில்லை. அப்படி பணம் ஒரு விஷயமாக இருந்திருந்தால் அவர் என்னை அணுகியிருப்பார். நான் கல்வி விஷயத்தில் மயிலாடுதுறையில் நிறய்ய பேருக்கு உதவி வருவது அனைவருக்கும் தெரியும்.. என்னை அறிந்திருந்த அவ்ர், அவர் பையன்கள் படிப்புப் பற்றி எப்பொழுதும் நான் விசாரிப்பவ்வன் என்று தெரிந்த அவர்.. என்னை அணுகியிருப்பார்...


பையன்களுக்குத்தான் படிப்பில் ஆர்வம் இல்லை போலும்...


இவர்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகிவிடமுடியாது. அப்ப்டியாயின் இது போன்ற பையன்களால் அவை காலியிடங்களாகவே கிடக்கும்...!!


இந்தப் பையன்களின் பெற்றோருக்கு தன் குழந்தைகளிட்ம படிப்பின் பெருமையை எடுத்துரைக்கும் பக்குவம் இருப்பதில்லை.. என்க்குத் தெரிந்து நிறைய பேருக்கு சின்ன வயதிலேயே திருமணம் ஆகி குழந்தை பிறந்து விடுகிறது. அதற்குப் பிறகு.. குழந்தையும் தன் போக்கில் தான் வள்ர்கிறது..

எனவே.. உண்மையான பிரச்சினை வேறு. அதை அணுக வேண்டிய கோணங்களும் வேறு...

யாராவது எடுத்துச் சொல்லவேண்டும்..

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு

selventhiran said...

சீமாச்சு படித்து முடித்ததும் என்னவோ போல் ஆகிவிட்டதூ. "தந்தைக்கும் மகனுக்குமான உறவு படகிற்கும் மரத்தச்சனுக்கும் உள்ள உறவைப் போன்றது. அந்த படகை செய்தவர் மரத்தச்சன் தான் என்றாலும் அவர் அதை ரொம்பநாள் வைத்திருந்து உரிமை கொண்டாட முடியாது. நீரில் விட்டுத்தான் ஆக வேண்டும். அது நன்றாக பயணித்தால் கரையில் நின்று மகிழலாம். கவிழ்ந்தால் அதே கரையில் நின்று கண்ணீர் வடிக்கத்தான் முடியும்" என்ற எஸ். ராமகிருஷ்ணனின் வார்த்தைகள்தான் நிணைவுக்கு வருகின்றன. அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளுக்கே பதில் சொல்ல இயலாத வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட மனிதர்கள் இட ஒதுக்கீடு இருந்தால் மட்டும் படித்து விட முடியுமா?