அலுவலகத்தில் புதியதாக சேர்ந்துள்ள ஒரு வடமாநிலத் தோழியிடம் அவர் குடும்பம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்..
உத்திரப் பிரதேசத்தில் லக்னோவில் செட்டிலாகியிருக்கும் ஒரு சிறிய குடும்பம். அப்பா, அம்மா, என் தோழி மற்றும் அவரது இளைய சகோதரன். தோழிக்கு இப்பொழுதுதான் 23 வயதாகிறது. அவர் தம்பிக்கு 19 வயதிருக்கலாம்.
அப்பா ஐஐடி கான்பூரில் படித்தவர். அவர் திறமைக்கேற்ற ஒரு சிறந்த வேலை. கை மற்றும் பை நிறைய சம்பளமும் கூட.. குழந்தைகள் பிறந்த பொழுதிருந்தே ஐஐடியின் அருமை பெருமைகளைச் சொல்லி வளர்த்துள்ளார். 'படித்தால் ஐஐடியில் படிக்க வேண்டும்.. இல்லையென்றால் வேஸ்ட்' என்ற விதை குழந்தைகள் மனதில் சிறு வயதிலேயே ஊன்றப் பட்டுவிட்டது.
அப்பாவின் பெருமிதங்களும் பெருமைகளும் விதைகளுக்கு நல்ல உரமுமாகிவிட்டன. பையன் 9ம் வகுப்பு வரும் போதே ஐஐடி நுழைவுத்தேர்வுக்குக் கொம்பு சீவித் தயார் செய்யப் பட்டான். எல்லா புத்தகங்களும் (அக்கா படித்த போது வாங்கியது சேர்த்து) எல்லா தபால் மற்றும் நேர்முக தேர்வு தயாரிப்பு மையங்களும் பையனை இன்னும் இன்னும் தயார் செய்தன.
வீட்டுக்கு வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடம் கூட 'அடுத்த வருஷம் தம்பி ஐஐடி தான் படிக்கப் போறான்..' என்று சொல்லப்பட்டது. அறை எடுக்கப்போகும் ஹாஸ்டல் பெயர் கூட முடிவு செய்தாகிவிட்டது.
ஐஐடி தேர்வும் வந்து போனது.
பையன் நன்றாகத்தான் எழுதியிருந்தான்.
இருந்தும் தேர்வாகவில்லை..
மனதுக்குள் அசுர வளர்ச்சியடைந்த ஐஐடி விதை தன் குணத்தைக் காண்பித்தது. தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து பையனால் மீள முடியவில்லை. பையன் புத்தகமும் கையுமாக இன்னும் அலைகிறான். மூன்று முறை தற்கொலைக்கும் முயற்சி செய்திருக்கிறான். காப்பாற்றிவிட்டார்கள்..
மணியான வேலையை உதறிவிட்டு அப்பாவும் அம்மாவும் பையனின் அருகிலிருந்து கண்ணை இமை காப்பது போல காத்துக் கொண்டிருக்கிறார்கள்... பையன் தேறிவிடுவான் என்று நாமும் பிரார்த்திக்கலாம் !!..
1990 வரை இந்த ஐஐடியில் படித்து மேல் நாடுகள் சென்றவர்களால் தான் இந்தியாவின் பெருமை ஓரளவுக்கு நிலை நாட்டப் பட்டிருக்கிறது என்று சொன்னால் அது சரிதான்.. 1990க்குப் பின் நமது வளர்ச்சிக்கு இவர்களது உழைப்பும் ஒரு காரணம் தான். நாட்டுக்காக அவர்கள் தனிப்பட்ட முறையில் பெரியதாக உழைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் உண்டுதான். இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட திறமைகள் ஐஐடியின் பிராண்ட் அமெரிக்காவில் நிலை நாட்டப்பட ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
நானும் 1981 -ல் ஐஐடியில் படிக்கத் தேர்வுக்குத் தயார் செய்து நல்ல ரேங்க் வாங்கியவன் தான். கையில் காசில்லாததால் B.Tech சேரமுடியவில்லை. எந்த ஒரு தோல்விக்காக அந்தப் பையன் தன் உயிரை மாய்க்கத் துணிந்தானோ அந்த வெற்றியைப் பெற்றிருந்தும் பண வசதியில்லாததால் என்னால் சேர்ந்து படிக்க இயலவில்லை. அதன் பிறகு ஐஐடியில் M.Tech படித்து முடித்து விட்டேன். அது ஒரு தனிக்கதை.. அதை விடுங்கள்...
அந்த நிறுவனத்தில் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் முயற்சியில் யாரும் பெரிய பண்டிதனாவதில்லை. இயல்பாகவே பையன் திறமைசாலியாக இருந்தால் அவன் மிகத் திறமைசாலியாவதற்கு அங்கு உள்ள சூழ்நிலை (தரம் மிகுந்த சூழ்நிலை, மற்ற உயர்தர மாணவர்களுட்னான போட்டி) மேலும் வசதியளிக்கிறது. அது மட்டுமே..அங்கு படிக்க நுழையும் போது மாணவன் என்ன ஒரு தரத்தில் நுழைகிறான் என்பது மட்டுமே முக்கியம்.
அங்கு படிப்பதற்காக மாணவனைத் தயார் செய்வதில் தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறதே தவிர.. இட ஒதுக்கீட்டில் அவனை உள்ளே நுழைப்பதில் ஒரு மாணவனால் தற்போதைய ஐஐடி தரத்தில் வெற்றி பெற முடியும் என்பது தவறாகத்தான் முடியும்.
மற்ற உயர் கல்வி நிலையங்களில் மாணவன் தேறவில்லையெனில் அந்த இழப்பு மாணவனுக்கு மட்டுமே... ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்தர உயர்நிலைக் கல்வி நிலையங்களில் தரக் குறைவான மாணவர்கள் வருவது, இந்த நிறுவனங்களின் உலகளாவிய தரச் சான்றுக்கு (Brand Name) மாசு கற்பிக்க மட்டுமே பயன் படும்.
மாணவன் எந்த சாதியைச் சேர்ந்தவனானாலும் பரவாயில்லை.. அவனின் உழைப்பும் தரமும் மட்டுமே அவன் ஐஐடி ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் அவன் படிக்க தகுதியாக்கப் பட வேண்டும்...
5 comments:
ஐ.ஐ.டியின் தரம் குறையப் போவதைப் பற்றி யாரும் கவலைப் படப் போவதில்லை.
மதிப்பெண் பெற்றும், பணப்பற்றாக்குறையால் சேர முடியாமல் தவிப்பவனுக்கு, இட ஒதுக்கீடு கொடுப்பது அவசியம்.
ஐ.ஐ.டியில் படித்து வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் பெரிய தேசத் துரோகி போல் பலரால் சித்தரிக்கப் படுவதை பார்த்துள்ளேன்.
ஊரில் இருந்து சுரண்டுபவர்களை விட, ஊருக்கு வெளியே சென்று, தேசத்துக்கு பண வரவு ஈட்டும் இவர்கள் பல மடங்கு மேன்மையானவர்கள்.
:-) - இதை தவிர வேறு எதுவும் சொல்லத் தோணலை எனக்கு...
//இயல்பாகவே பையன் திறமைசாலியாக இருந்தால் அவன் மிகத் திறமைசாலியாவதற்கு அங்கு உள்ள சூழ்நிலை (தரம் மிகுந்த சூழ்நிலை, மற்ற உயர்தர மாணவர்களுட்னான போட்டி) மேலும் வசதியளிக்கிறது. அது மட்டுமே..அங்கு படிக்க நுழையும் போது மாணவன் என்ன ஒரு தரத்தில் நுழைகிறான் என்பது மட்டுமே முக்கியம்.//
நீங்கள் எழுதியது மிகவும் சரி. நான் அண்ணா பல்கலைகழகத்தில் PhD முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ளேன். அங்கும் இதே நிலமைதான். பெரும்பாலான ஆசிரியர்கள் படிப்பை முடித்த பிறகு update செய்வதே இல்லை. மாணவர்கள் தங்களின்
சொந்த திறமை காரணமாகத்தான் மிளிருகிறார்கள்
//அந்த நிறுவனத்தில் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.. அங்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின் முயற்சியில் யாரும் பெரிய பண்டிதனாவதில்லை. //
நீங்கள் எழுதியது மிகவும் சரி. நான் அண்ணா பல்கலைகழகத்தில் PhD முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ளேன். அங்கும் (அண்ணா பல்கலைகழகத்திலும்) இதே நிலமைதான். பெரும்பாலான ஆசிரியர்கள் படிப்பை முடித்த பிறகு update செய்வதே இல்லை. மாணவர்கள் தங்களின் சொந்த திறமை காரணமாகத்தான் மிளிருகிறார்கள்
//நீங்கள் எழுதியது மிகவும் சரி. நான் அண்ணா பல்கலைகழகத்தில் PhD முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ளேன். அங்கும் (அண்ணா பல்கலைகழகத்திலும்) இதே நிலமைதான். பெரும்பாலான ஆசிரியர்கள் படிப்பை முடித்த பிறகு update செய்வதே இல்லை. மாணவர்கள் தங்களின் சொந்த திறமை காரணமாகத்தான் மிளிருகிறார்கள்
//
மறத்தமிழன் .. வருகைக்கு நன்றி.. உங்கள் ph.d க்கு என் வந்தனங்கள்.
நமது கல்லூரி ஆசிரியர்கள் மட்டுமின்றி, நம் நாட்டு மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற எந்த்த் துறை வல்லுனர்களிடம் கூட தன் தகுதியை மேம்படுத்திக்கொள்வதற்கான முனைப்பு குறைந்து கொண்டுதான் வருகிறது..
இது நம் சமூகம் நமக்குத் தந்துள்ள ஒரு சுமை தான்...
என்ன செயவது?
சீமாச்சு
Post a Comment