குழந்தையின் கை விரல்களில் கொஞ்சம் பெரியதாக வளர்ந்து விட்ட நகங்களை கவனித்துவிட்டு அதை வாராவாரம் வெட்டிக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அவள் நகங்களை வெட்டிக் கொண்டே அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
"ஏண்டா, கண்ணம்மா .. நகமெல்லாம் இவ்வளவு வள்ர்ந்திருக்கே.. அம்மா கிட்ட சொல்லி வெட்டிக்கக் கூடாதா? இங்க பாரு அப்பா மேல scratch பண்ணிட்டே பாரு.. அப்பாவுக்கு வலிக்காதா?"
"சாரி டாடி.. நான் வேண்டுமென்றே செய்யவில்லை.. அது ஒரு ஆக்ஸிடெண்ட்... "
(என் கையில் கீறியிருந்த இடத்தில் ச்சின்னதாக ஒரு முத்தம் தந்தாள்.)
"இப்ப வலிக்கலைடா செல்லமே.. இனிமேல் நகத்தை சரியாக வெட்டிக்கோ..!"
"சரி டாடி.. என் டீச்சர் Jodi .. அவங்க கையில் பெரிய பெரிய நகங்கள் வளர்த்து இருக்காங்க.."
"அப்படியா... அப்ப அவங்க.. க்ளாஸில் உன்னைத் தொடும் போது எப்பவாவது உன்னை hurt பண்ணியிருக்காங்களா?"
(தகப்பனுக்கான ஜாக்கிரதை உணர்ச்சியில் இந்தக் கேள்வி வந்தது.. இதற்கு என் மகள் தந்த பதில் தான் என்னை யோசிக்க வைத்து விட்டது.. அவள் பதில் அவள் வார்த்தைகளிலேயே.. )
She is my TEACHER daddy... How can she HURT ME?
"She is my TEACHER" என்ற இடத்தில் ஒரு பெருமையின் பிரதிபலிப்பு... "How can she HURT me?" என்ற இடத்தில் நிச்சயமாக என் ஆசிரியர் என்னைக் காயப்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு அதீதமான நம்பிக்கை என்னை ஆச்சர்யப் படுத்தியது..
நாமெல்லாம் வளர்ந்த பொழுது "ஏதாவது விஷமம் பண்ணினால் .. வாத்யார் கிட்ட சொல்லி அடிக்கச் சொல்வேன்" என்று சொல்லித்தான் வளர்க்கப் பட்டோம். ஆசிரியர் என்பவரே ரொம்பக் கண்டிப்பானவர் என்று உருவகிக்கப் பட்டுத் தான் நமக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கப் பட்டது.
இங்கு அமெரிக்காவில் என் மகள் படிக்கும் பொழுது அவளின் வார்த்தை ஒரு பெரிய சிந்தனையை என்னுள் தோற்றுவித்து விட்டது... என்றாவது நம் சமூகம் இது போன்ற அன்பான பாதுகாப்பான சிந்தனைகளை நம் குழந்தைகளிடம் வளர்பதற்கான சூழ்நிலைகள் நம் நாட்டில் தோன்றுமா?
இதற்கு நடுவில் "எட்டாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியரின் செக்ஸ் குறும்பு" போன்ற ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் டைப் தலைப்புக்கள் வந்து ... நம் நாட்டு மாணவ மாணவிகளின் பாதுகாப்பற்ற நிலையை நினைத்து கவலை கொள்ளச் செய்கிறது..
எங்கு.. எந்த இடத்தில் தவறு ஆரம்பமாகிறது? எப்படித் தடுப்பது?