குள்ளமான உருவம்.. சட்டென்று லாலு பிரசாத் யாதவை நினைவு படுத்தும் வட்டமான முகம். நெற்றியில் எப்பொழுதும் திருமண். கண்ணியமான தோற்றம். தன்னலமற்று .. எல்லோர் நலமும் வேண்டி.. எப்போதும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கும் மனம்..
ஆசிரியராக வேலை பார்ப்பதாக நினைக்காமல் ஆசிரியராகவே வாழ்பவர்...
மாணவர்களுக்கு தான் படித்த தமிழ் மட்டுமின்றி.. இசையும், ஆன்மீகமும், அறநெறியும் கலந்து போதித்தவர்...
ஐம்பத்தியிரண்டு வயதிலும் மாணவனாக .. ஆராய்ச்சி மாணவனாக மாறி முனைவர்பட்டம் பெற்றவர்...
எவ்வளவோ ஆசான்களைப் பெற்றிருந்தும்.. இவரிடம் ஒவ்வொருவரும் தமிழ் படித்திருந்தால் தான் ஒரு ஆசிரியருக்குரிய இலக்கணம் காண முடியுமென்று இவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும் உளமாறப் போற்றிக் கூற முடியும்...
கம்பரையும் வால்மீகியையும்.. கரைத்துக் குடித்தவர்.. வில்லி பாரதத்தில் வித்தகர்.. பிரபந்த்த்தில் மூழ்கித் திளைத்தவர்...
oOo
மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது.. ஒவ்வொரு நாளும்.. காலையில்..திரு இந்தளூரிலிருந்து டாக்டர் இராமமூர்த்திசாலை வழியாக நடந்துதான் பள்ளிக்கு வருவார். வரும் வழியில் தான் அவர் படித்த நகராட்சி மேல்நிலைப்பள்ளி.. ஒவ்வொரு நாளும் அங்கு வரும் பொழுது.. சில விநாடிகள்.. நின்று.. காலணிகளைக் கழற்றி.. தான் படித்த ப்ள்ளியை வணங்கி விட்டுத் தான் தொடருவார்... இது ஒவ்வொரு நாளும் காணக்கிடைத்த காட்சி..
இப்படிப்பட்ட ஆசிரியரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்..
கடந்த ஏப்ரல் (2007) மாதத்தில் அவர் உடல்நிலை சரியில்லாதிருந்தார். அவர் பிழைப்பது மருத்துவ ரீதியாக மிகக் கடினம் அவர் இருந்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர் குணமடைய வேண்டுமென்று...இவ்வாறு பிரார்த்தித்திருந்தேன்..
//எல்லா மருத்துவ சூழ்நிலைகளையும் தாண்டி.. எங்கள் ஆசிரியர், தேரழுந்தூர் டாக்டர் ஆ. இராமபத்திராச்சாரியார் மீண்டு எழ.. எல்லாம் வல்ல இறைவன்.. திருமருந்தீஸ்வரரின் செல்லப் புதல்வர்.. ஆசிரியர்க்கெல்லாம் முதன்மையான் ஆசிரியர்.. என் மனம் நிறை தெய்வம்.. எல்லோரையும் காத்து நிற்கும் வைத்தீஸ்வரன்கோயில் செல்வமுத்துக்குமரசாமியை வேண்டுகிறேன்...
//
எங்கள் வேண்டுதல் கேட்டு, ஆசிரியர் சீரிய முறையில் குணமடைந்து வருகிறார்.
ஆசிரியரை கடந்த மார்ச் மாதம் 19 -ம் தேதி பாண்டிச்சேரியில் சந்தித்தேன். உடல் நிலை தேறி வருகிறது. இன்னும் பேச் வரவில்லை. எத்தனை பிரபந்த்ங்கள், உபன்யாசங்கள் 30 வருட ஆசிரியர் தொழில்.. இவ்வளவும் பேசிய வாயால்.. இப்பொழுது அட்சரம் உச்சரிக்க இயலவில்லை. அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.
அவரைச் சந்தித்து அவரிடம் மாணவர்களின் பிரார்த்தனைகளைச் சொன்னேன். நமக்காக அவர் நல்ல முறையில் குணமடைந்து வருவார் என நம்புகிறேன்..
ஏப்ரல் 1,2007 அன்று பங்குனி உத்திரத் திருநாளின், தேரழுந்தூரில் நமது ஆசிரியர் செய்த உபன்யாசத்தைக் கேட்க, இந்த சுட்டியில் சொடுக்கவும்.
(இந்த சுட்டியைத் தந்து உதவிய நம்து சக வலைப் பதிவர் இணைய ஆழ்வார் மாதவிப்பந்தல் KRS அவர்களுக்கு நன்றி )
அப்பல்லோ மருத்துவமனையில் ஆசிரியர் இருந்த போது, எங்கள் (சீமாச்சு, அபிஅப்பா) வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு ஸ்பெஷல் உதவிகள் பெற்றுத் தந்த டாக்டர் டெல்பின் விக்டோரியா அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.
4 comments:
மகிழ்ச்சியான செய்தி...
ஆசிரியரை பார்க்கும் பொழுது மனம் வருத்தமாக உள்ளது.
வாழ்க வளமுடன்...
நன்றி சீமாச்சு
மயிலாடுதுறை சிவா...
மிக்க மகிழ்வாக இருக்கின்றது சீமாச்சு அண்ணா! நான் துபாய் திரும்பும் முன் போய் பார்த்துவர கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்!
மற்றபடி நம் பள்ளி சம்மந்தமாக ஒரு தனி மடலிடுகிறேன். உங்கள் மேலான ஆலோசனை வேண்டும்!!
சீக்கிரம் குணமடையட்டும் ஆண்டவன் அருளால்.
மகிழ்ச்சியான செய்தி...
நன்றி அண்ணா!
Post a Comment