Wednesday, April 14, 2010

95. வெற்றிலை பாக்கு சீவல் (அ) தாம்பூலம் from சீமாச்சு..

ரொம்ப நாள் முன்னாடி, தமிழ் செய்தித் தளத்தில் சொர்ணமால்யா நடிக்கும் ஒரு படத்துக்கான் ஸ்டில்ஸைப் பார்த்த போது சொரேரென்றது. ஒரு நல்ல நடனம் தெரிந்த நடிகை, அந்த மாதிரி ஒரு ஏடாகூடக் கோணத்தில் நடிகர் ஸ்ரீமானுடன் இருக்கும் ஸ்டில்லைக் கண்டவுடனேயே, அந்தப் படத்தை மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். படமும் வெளியில் வந்து பெட்டியில் சுருண்டு விட்டது போலும். அமெரிக்காவில் வழக்கமாக நான் டிவிடி வாங்கும் கடை வரைக்குமெல்லாம் கூட படம் வரவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனபோது அவர் வீட்டில் ஒரு பெரிய அட்டைப்பெட்டி முழுக்கத் தமிழ்ப்பட டிவிடிக்கள் இருந்தன. அசுவாரசியமாகக் குடைந்து கொண்டிருந்தபோது சிக்கினார் மீண்டும் ஸ்வர்ணமால்யா. படத்தின் பெயர் "சாரி எனக்குக் கல்யாணமாயிடிச்சி". ஏடாகூடமான படமாயிருக்கும் போலருக்கே என்று வீட்டில் எல்லாரும் தூங்கிய பிறகு பார்த்தால் (ஹையா.. நானும் உலக சினிமாவெல்லாம் பார்க்கிறேனே... அமெரிக்காவில் உட்கார்ந்து பார்த்தால் எல்லா தமிழ்ப்படமும் இங்கு உலகசினிமாதான்..) ஒரு முழுநீள பாக்யராஜ் படம் போலத்தான் இருந்தது. ஸ்வர்ணமால்யா படு டீஸண்டாக நடித்திருந்தார். பாண்டு, எம். எஸ் பாஸ்கர் இன்னும் ஒரு நடிகர் மூவருக்கும் சபலிஸ்டான கேரக்டர்கள். கதை சாதாரணமான கதை தான். குழந்தைகள் எல்லாம் தூங்கின பிறகு மனைவியுடன் திட்டு வாங்காமல் தைரியமாகப் பார்க்கலாம்..

oOo oOo oOo


நாகலிங்கப் பூ ஒரு விசேஷமான பூ. பள்ளிக்கூட நாட்களில் ஒரே ஒரு இடத்தில் நாகலிங்கப்பூ பூக்கும் மரம் பார்த்திருக்கிறேன். மயிலாடுதுறையில் மணிக்கூண்டு அருகே ராஜ்பில்டிங் (எங்க ஊரின் முதல் பல மாடி ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது) 1976ல் கட்டினார்கள். கடையெல்லாம் மேல் மாடியில் வைத்தால் யார் போய் வாங்குவார்கள் என்று விசேஷமாகப் பார்த்த நாட்கள். முதல் மாடியில் ஒரு பெரிய ஆபீஸில் மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் (DEO Office) இருந்தது. பத்தாவது பொதுத் தேர்வு முடிவுகள் வந்து ஒரு வாரம் கழித்து மதிப்பெண் தாள்கள் DEO ஆபீஸில் வந்திருப்பதாக செய்தி வந்தது. எங்கள் பள்ளியிலிருந்து தலைமையாசிரியர் P இராமசாமி ஐயரைத் தொடர்ந்து ராஜ்பில்டிங் வந்து (அவரைத் தொடர்ந்து வந்தது நாங்கள் மொத்தம் 30 மாணவர்கள் ) அவரை அலுவலகத்துக்குள் அனுப்பிவிட்டு ராஜ் பில்டிங் கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்தோம். எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மதிப்பெண்கள் மாடியிலிருக்க, இதயங்கள் இது வரையில்லாத வேகத்தில் தந்தியடிக்க, வாய் மட்டும் கந்தர் ஷஷ்டி கவசம் முணுமுணுத்துக் கொண்டிருக்க கொல்லையில் இருந்த அந்த மரத்தினடியில் பார்த்தால் நிறைய பூக்கள் உதிர்ந்து கிடந்தன. பார்த்தால் அத்தனையும் நாகலிங்கப்பூக்கள். உள்ளங்கை அகலத்தில் பெரீய்ய பூக்கள். படமெடுத்தாடும் ஐந்து தலை நாகத்தினடியில் சிவலிங்கம் இருக்கிற மாதிரி இருக்கும். பார்க்க விசித்திரமாக இருக்கும். தினமலரில் படத்தைப் பார்த்தவுடன் பத்தாம் வகுப்பு நினைவலைகள் வந்துவிட்டன.
oOo oOo oOo



என் பள்ளியின் மேல் காதல் கொண்டு நான் அலைவதைப் பார்த்து என் அப்பாவுக்கும் அவர் படித்த் பள்ளியைப் பார்க்கும் ஆசை வந்து விட்டது. அப்பாவுக்கு இப்பொழுது 92 வயது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் அவர் பள்ளிக்கும் போய் தான் படித்த வகுப்பறைகளையும் இன்றைய மாணவர்களையும் போய்ப் பார்த்து வந்தார். தன் பேத்திகளுக்கும் ஆசிரியர்களையும் இந்நாள் மாணவர்களையும் அறிமுகப்படுத்திவிட்டு தன்னையும் முன்னாள் மாணவராக அறிமுகம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார். 1930 முதல் 1936 வரை அப்பா படித்த உயர்நிலைப் பள்ளி அது. தஞ்சாவூர் செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி. அப்பா படித்த நினைவாக இந்தப் பள்ளிக்கும் ஏதாவது உதவிகள் செய்கிறேனென்று அப்பாவிடம் சொல்லியுள்ளேன்.

தாத்தாவின் ஸ்கூலைப் பார்த்ததில் என் மகள்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அப்பா படித்த போது இருந்த தலைமையாசிரிய ஆசிரியர்களெல்லாம் உயரே புகைப்படத்திலிருந்த அப்பாவையும் என் மகள்களையும் ஆசிர்வதித்தார்கள். பள்ளியில் படித்த் போது அதிக மதிப்பெண்கள் எடுத்து தலைமையாசிரியரிடமிருந்து பரிசாகப் பெற்ற ஷேக்ஸ்பியர் புத்தகம் இப்பொழுது என் கையில்.


oOo oOo oOo

தமிழகத்துக்கு மேலவை வரப்போகுதாம். தீர்மானமெல்லாம் நிறைவேற்றி அனுப்பியாகிவிட்டது. மேலவை என்பது ஒரு நல்ல விஷயம் தான். ஆனாலும் இத்தனை வருடங்கள் இல்லாமல் பழகியாகிவிட்டது. இப்பொழுது எதற்கு என்பது தான் புரியவில்லை. இருக்கும் சட்டசபையே ஒரு புகழ்ச்சி மேடையாகிவிட்டது. இதில் மேலவை வேறா? ஊழல் செய்வதென்று முடிவு செய்துவிட்ட அரசியல்வாதிகள் எப்படி செய்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். என்றாவது ஒருநாள் ஒரு நேர்மையான அரசும் அதிகாரிகளும் நமக்குக் கிடைப்பார்களென்று கனவு கண்டு கொண்டிருக்கும் சாதாரண குடிமகன் நான். எந்தக் கட்சியையும் சாரவில்லை. கல்லூரியில் படிக்கும் போது நண்பரொருவர் பிடிவாதமாக வாங்கிக் கொடுத்த திமுக உறுப்பினர் அட்டை வீட்டில் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கிறது..

oOo oOo oOo

சானியா மிர்சா இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டதில் ஒரு ரசிகனாக எனக்கு உடன்பாடில்லை.. நம்மளைக் கேட்டாக் கல்யாணம் பண்ணிக்கிடறாங்க. சொல்லியிருந்தால் நல்ல அமெரிக்க மாப்பிள்ளையாக பார்த்து நாம கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்க மாட்டோமா. ஏன், தோஹாவில் இருக்கும் நம்ம தம்பி ஆயில்யனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா? கேரளா பொண்ணுதான் வேணும்னு ஒத்தைக்காலில் நின்னுக்கிட்டிருக்கும் ஆயில்யன் போனாப் போவுதுன்னு தெலுங்குப் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்திருக்க மாட்டாரா ? போயும் போயும் பாக்கிஸ்தான் மாப்பிள்ளைதான் கிடைச்சாரா? எப்படியோ நல்லாஇருந்தால் சரிதான். எங்கிருந்தாலும் வாழ்க. வருங்காலத்தில் சானியாவை இந்தோ‍‍பாக் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கலாம்.

பிரபலமான பெண்களெல்லாம் ஏன் இரண்டாம் தாரமாகப் போவதையே விரும்புகிறார்களென்று ரொம்ப நாள் முன்னாடி ஒரு மனநல மருத்துவர் ஆராய்ந்து எழுதியிருந்தார். ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான கட்டுரை அது. நினைவிலில்லை. இப்பொழுதெல்லாம் மனநல மருத்துவரெல்லாம் தமிழ் இணையத்தில் சாதிச் சண்டை போடுவதில் ரொம்ப பிஸியென்று ஒரு பிரபல பதிவர் அங்கலாய்த்துக் கொண்டார்.. நமக்கேன் வம்பு ?


தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

7 comments:

ஆயில்யன் said...

சொர்ணமால்யா ரசிகரா???

ஆஹா முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் நம்ம ஊர்ல நாட்டியாஞ்சலியில எடுத்த போட்டோஸ அனுப்பிச்சிருப்பேன் :))


ராஜ் பில்டிங் - ரொம்ப பேமாஸான மாடி கட்டிடம் - இண்ட்ரஸ்டிங்கான தகவல் அப்ப ரொம்ப காலமா டிஇஓ ஆபிஸ் அங்கதான் இருக்குதா?

படித்த பள்ளிகூடம் விசிட் நினைவுகளை மீட்டெடுக்கும் அற்புதம்!



கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏன் ஹைதராபாத்லயே எம்புட்டு பேரு இருக்காங்க அவுங்க கூடாதா?:)

பனித்துளி சங்கர் said...

////////தாத்தாவின் ஸ்கூலைப் பார்த்ததில் என் மகள்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அப்பா படித்த போது இருந்த தலைமையாசிரிய ஆசிரியர்களெல்லாம் உயரே புகைப்படத்திலிருந்த அப்பாவையும் என் மகள்களையும் ஆசிர்வதித்தார்கள். பள்ளியில் படித்த் போது அதிக மதிப்பெண்கள் எடுத்து தலைமையாசிரியரிடமிருந்து பரிசாகப் பெற்ற ஷேக்ஸ்பியர் புத்தகம் இப்பொழுது என் கையில்.//////


கடந்த நினைவுகள் எப்பொழுதும் ஒரு இனிமைதான் .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

சீமாச்சு.. said...

//ஏன் ஹைதராபாத்லயே எம்புட்டு பேரு இருக்காங்க அவுங்க கூடாதா?:)//

ஆஹா, தாராளமாகக் கட்டிக்கிட்டிருக்கலாமே.. ஆனா சானியாவுக்குத்தான் புடிக்கலை..

சீமாச்சு.. said...

//கடந்த நினைவுகள் எப்பொழுதும் ஒரு இனிமைதான் .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்//

வாங்க பனித்துளி சங்கர். உங்களை மாதிரியானவர்களின் ஆதரவில் தான் வண்டி ஓடுது..

நன்றி

பழமைபேசி said...

மலரும் நினைவுகள் அபாரம்....

ஆனா, அது? இஃகிஃகி..... யெப்பா, இனி வாய்ப்பூட்டோடத்தான் வரணும் போல இருக்கு....

வாய் திறக்காம எப்படிங்க சாப்பிட முடியும்? வர்றதே அதுக்குத்தான??

Unknown said...

//ஆனா, அது? இஃகிஃகி..... யெப்பா, இனி வாய்ப்பூட்டோடத்தான் வரணும் போல இருக்கு....

வாய் திறக்காம எப்படிங்க சாப்பிட முடியும்? வர்றதே அதுக்குத்தான??
//
அந்த பிரபல பதிவர் எங்க வூட்ட்டுக்கு சாப்பிட எல்லாம் வ்ர்லீங்கோ.. ரொம்ம்ம்ம்ப தூரத்துல இருக்காருங்க அவர். ஃபோன் ல பேசினதுதாங்க..

நீங்க எப்பவும் போல வரலாம். யாரும் பர்மிஷன் இல்லாமல் அவங்க பேசறதை வலையில போடறதில்லீங்..

பதிவர் தர்மமுங்க...

natpu valai said...

அண்ணா
நாகலிங்கம் பூ மயிலாடுதுறையில் ராமமூர்த்தி சார் வீட்டு கொல்லையிலும் கிடைக்கும். (பள்ளிக்கு எதிர் வீடு) அருமையான நினைவுகள். பூவிலிருந்து பாம்பு வரும் என்ற மூடநம்பிக்கையில் பூவை தொடாத நாட்களும் உண்டு