Sunday, September 12, 2010

103. கருணையே உருவமான நமது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்

இன்று படித்த செய்தி:

கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள், இறுதி வாய்ப்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனு தாக்கல் செய்த 14 பேரின் மனுக்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பரிசீலனைக்கு வந்தன. அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி குறைத்து உள்ளார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக 17 பேரை கொன்று குவித்த பியாராசிங் மற்றும் அவரின் மூன்று மகன்களான சரப்ஜித்சிங், சத்னாம் சிங், குருதேவ் சிங் ஆகியோர் தண்டனை குறைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கருணை மனுக்கள் 1991ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தன. இதேபோல், சொத்தை அபகரிப்பதற்காக தன் மாமா, அவரின் மூன்று சிறிய குழந்தைகள் உட்பட ஐந்து பேரை ஒட்டு மொத்தமாக கொன்ற தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்த சுப்ரீம் கோர்ட், இவரது கொடூரத்தைக் கடுமையாக சாடி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இவர்கள் தவிர உ.பி.,யில் வீடு ஒன்றுக்குள் புகுந்து, அங்கிருந்த மூன்று பேரை கொன்று, அவர்களின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றதோடு, பத்து வயது சிறுவனை சுட்டுக் கொன்று, அவனது உடலை தீயில் தூக்கி வீசிய, ஷெரோம், ஷியாம் மனோகர் மற்றும் நான்கு பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இவர்களின் தண்டனையை ஜனாதிபதி குறைத்துள்ளார். உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில், "இந்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். ஆனாலும், அவர்கள் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். பரோலில் அவர்களை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது' என, தெரிவிக்கப் பட்டுள்ளது. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட இவர்கள் எல்லாம், ஏற்கனவே 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர். இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

மரண தண்டனை கைதிகள் 14 பேரின் தண்டனையை குறைத்தது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையும் இதுபோல குறைக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்சல் குரு விவகாரத்தில் ஜனாதிபதி தன் அதிகாரத்தை எப்படி பயன்படுத்தப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

oooooooooo

குடியரசுத்தலைவரின் கருணை அதி்ர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனைகளே.. rarest of the rare cases க்கு மட்டும் வழங்கப்பட்ட நிலைகளில், இந்த தண்டனைக்குறைப்பு கவலைக்குரியதாக இருக்கிறது.


அப்ஸல்குரு, கசாப் போன்ற தீவிரவாதிகளையும் முக்கியமாக தர்மபுரி மாணவிகள் எரிப்புக் கொலைகாரர்களையும் மன்னிக்கும் முயற்சிகளுக்கு முன்னோட்டமாகத்தான் இது தெரிகிறது.

குடியரசுத்தலைவரின் கருணைமனு என்ற இந்த நடைமுறையையே ஒழித்துக் கட்டவேண்டும் என்பது என் கருத்து. சட்டம் தன் கடமையை மட்டும் செய்யட்டும் .. குற்றவாளிகளுக்கு யாருடைய கருணையும் தேவையில்லை..

Thursday, September 09, 2010

102. சீமாச்சுவின் தாம்பூலம் - 10 செப்டம்பர் 2010

அமெரிக்காவில் Pledge of Allegiance (இதுக்குத் தமிழ்ல என்ன சொல்றது பழமைபேசியாரே? இப்போதைக்குக் குடிமகன் விசுவாச உறுதிமொழி என்று வெச்சுக்கலாம்) என்ற ஒரு உறுதிமொழி உண்டு. ”அமெரிக்கக் கூட்டமைப்பின் கொடிக்கும் அது நிலைநாட்டும் குடியரசுக்கும் ஆண்டவனின் ஆட்சியில் பிரிக்கப்படமுடியாத ஒரு முழு குடியரசுக்கும் (One Nation Under GOD Indivisible), அனைவருக்கும் சுதந்திரமும் சமமான நீதியும் கிடைப்பதற்கும் நான் விசுவாசமானவனாக இருப்பேன்” என்று ஒவ்வொரு பள்ளிப்பிள்ளைகளும் தினமும் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

இந்த உறுதிமொழிக்கென்று ஒரு வரலாறு உண்டு. இது 118 ஆண்டுகளுக்கு முன்பு 1892 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி, பாஸ்டன் மாநகரிலிருந்து வெளியாகும் “The Youth's Companion" என்ற பத்திரிகையால் வரையறுக்கப்பட்டது. அந்த வருடம் தான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. நானூறாவது ஆண்டைச் சிறப்பிப்பதற்காகவும் பள்ளிப்பிள்ளைகளுக்கு குடியரசின் சிறப்பை எடுத்துக் காட்டவும் அந்தப் பத்திரிகை இந்த உறுதிமொழியை எழுதி வெளியிட்டது.

முதன் முதலில் வெளியிட்டபோது அந்த உறுதிமொழியில் Under GOD என்ற வார்த்தைகள் கிடையாது. இந்த வார்த்தைகள் 1954ல் அப்போதைய அதிபர் ஐசனொவர் அவர்களால் சேர்க்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நாத்திகர்களுக்கு ”Under GOD" என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. உறுதிமொழி எடுக்கும் போது அந்த வார்த்தைகளைச் சொல்லாவிட்டாலும் தங்களது நாட்டுப் பற்றில் எந்தவிதக் குறைவுமில்லை என்று அடிக்கடி வாதிடுவார்கள். அவர்களின் வாதத்தை உணர்த்தும் வகையில் சமீபத்தில் எங்கள் சார்லெட் மாநகரில் ஒரு நாத்திகர் குழு “One Nation Indivisible" என்று ஒரு பெரிய விளம்பரப்பலகையை (Billboard) ஒரு பரபரப்பான சாலையில் 40 அடி உயரத்தில் வைத்திருந்தார்கள். வாகனங்களில் செல்லும் போது அதைப் படிப்பவர்களுக்கு அதில் குறிப்பாக மறைக்கப்பட்டுச் சொல்லப்படாத “Under GOD" என்ற வாசகத்தின் பொருளும் அதற்கான எதிர்ப்பும் உடனேயே புலப்பட்டுவிடும். இவ்வளவு பெரிய தட்டியை அந்த இடத்தில் வைப்பதற்காக அவர்கள் கிட்டத்தட்ட $15,000 செலவு செய்திருப்பதாக பத்திரிகையில் பேட்டியெல்லாம் வந்திருந்தது. அந்த தட்டி வைக்கப்பட்ட மறுநாளே அதில் யாரோ கரியால் ”Under GOD" என்று எழுதிவிட்டார்கள். அவ்வளவு பரபரப்பான சாலையில் அவ்வளவு உயரத்தில் ஏறி யாரும் பார்க்காதபோது அதைச் செய்தவர் யாரென்றுதான் தெரியவில்லை..

ஆண்டவனாக இருக்குமா????

ஒருவேளை அவங்களே பரபரப்புக்காக அதைச் செய்திருக்கலாமோ???

அல்லது அவ்வாறு அதை செய்ய ஆண்டவனே தூண்டியிருப்பானோ?????






oOo

அமெரிக்காவில் இருக்குறவங்களுக்கும் ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ரொம்ப வரும் போல இருக்கு. முக்கியமா அரசு நிர்வாகத்தில் எந்த ஒரு விஷயமும் ஒரு முறைக்கு 100 முறை சரி பார்க்கப் பட்டே வெளியிடப்படும்.. அப்படியும் சென்ற வாரம் எங்க ஊர்ல நடந்த ஒரு கூத்து. முக்கியமான ஒரு நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட ஒரு பெரிய விவரப் பலகையில் அவர்கள் செய்த தவறைப் பாருங்கள்.. Independence என்ற வார்த்தைக்கு என்ன ஸ்பெல்லிங் போட்டிருக்கிறார்கள் பாருங்கள்..இந்தப் பலகையை வைத்து முடித்து சென்ற பின்னர் ஒரு தொலைக்காட்சி சேனலில் அதைப் படம் பிடித்துக் காட்டிய பின்னரே அதில் இருந்த தவறு எல்லோருக்கும் தெரிந்தது.


oOo

அமெரிக்காவில் நாளைக் குறிக்கும் போது மாதம்/தேதி/வருடம் என்றே குறிப்பார்கள். சென்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதியின் விசேஷம் என்னவென்றால் அதன் தேதியைக் குறிக்கும் போது 8/9/10 என்று எண்கள் வரிசையில் வரும். அன்று ஒஹையோ மாநிலத்தில் சின்சினாட்டி நகரில் Ella Rose என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதிலும் எல்லா பிறந்த நேரம் தான் இன்னும் விசேஷம். காலை 11:12 க்கு குழந்தை பிறந்தால் விசேஷமாக இருக்குமே என்று அவள் பெற்றோரும் மருத்துவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படிப் பிறக்காத போது கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தனர். பெற்றோரின் ஏமாற்றத்தைத் தணிக்கவே அவள் பிறந்த நேரம் இரவு 11:12. எல்லாவின் பிறந்த நேரம் 8/9/10 11:12 PM.பிறந்த போது அவள் எடை 6 lbs and 7 ounces. ரொம்ப விசேஷமான குழந்தை தான். எல்லாவுக்கு வாழ்த்துக்கள்..


oOo

என் சித்தி பையன் சந்துரு சென்னையில் கார்ப்பரேஷன் பள்ளியில் தான் படித்தான். அப்படியும் பெரிய்ய படிப்பெல்லாம் படித்து அமெரிக்காவெல்லாம் வந்து இப்பொழுது மிக வெற்றிகரமாக உலா வந்துகிட்டிருக்கான். அவன் அலுவலக நண்பர்களுடன் உரையாடும் போது அவர்கள் படித்த பள்ளிக்கூடங்களைப் பற்றிப் பேச்சு வருமாம். எல்லோரும் St Paul's, St Antony's என்று ஏதாவது பெத்த பெயராகச் சொல்லும் போது அவனுக்கு ஏற்படும் ச்சின்ன ஏமாற்றத்தைத் தவிர்க்க தான் படித்த கார்ப்பரேஷன் பள்ளியின் பெயரை St. Corps என்றேக் குறிப்பிடுவது அவன் வழக்கம். தனக்குப் பள்ளியறிவு வழங்கிய சென்னை மாநகராட்சியை ஒரு புனிதர் அளவுக்கு உயர்த்தி “St Corps" என்று அவன் சொல்லும் போது ”பேரு ஒருமாதிரியிருக்கே...அது எங்கேயிருக்கிறதென்று” இதுவரை யாரும் கேட்டதில்லையாம்..

oOo


என் நியூ ஜெர்ஸி நண்பருக்கு வாகனப்ராப்தி அமைந்துள்ளது. புதுசா ஒரு நீலக்கலர் லெக்ஸஸ் கார் வாங்கியிருக்கார். உங்க கார் படம் இன்னும் வந்து சேராததால் விமானத்துக்கு வாகன பூஜை போடற படத்தைப் போட்டிருக்கேன். கூடிய விரைவில் நீங்கள் விமானமும் வாங்க வாழ்த்துக்கள் !!