Thursday, September 09, 2010

102. சீமாச்சுவின் தாம்பூலம் - 10 செப்டம்பர் 2010

அமெரிக்காவில் Pledge of Allegiance (இதுக்குத் தமிழ்ல என்ன சொல்றது பழமைபேசியாரே? இப்போதைக்குக் குடிமகன் விசுவாச உறுதிமொழி என்று வெச்சுக்கலாம்) என்ற ஒரு உறுதிமொழி உண்டு. ”அமெரிக்கக் கூட்டமைப்பின் கொடிக்கும் அது நிலைநாட்டும் குடியரசுக்கும் ஆண்டவனின் ஆட்சியில் பிரிக்கப்படமுடியாத ஒரு முழு குடியரசுக்கும் (One Nation Under GOD Indivisible), அனைவருக்கும் சுதந்திரமும் சமமான நீதியும் கிடைப்பதற்கும் நான் விசுவாசமானவனாக இருப்பேன்” என்று ஒவ்வொரு பள்ளிப்பிள்ளைகளும் தினமும் இந்த உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

இந்த உறுதிமொழிக்கென்று ஒரு வரலாறு உண்டு. இது 118 ஆண்டுகளுக்கு முன்பு 1892 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி, பாஸ்டன் மாநகரிலிருந்து வெளியாகும் “The Youth's Companion" என்ற பத்திரிகையால் வரையறுக்கப்பட்டது. அந்த வருடம் தான் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. நானூறாவது ஆண்டைச் சிறப்பிப்பதற்காகவும் பள்ளிப்பிள்ளைகளுக்கு குடியரசின் சிறப்பை எடுத்துக் காட்டவும் அந்தப் பத்திரிகை இந்த உறுதிமொழியை எழுதி வெளியிட்டது.

முதன் முதலில் வெளியிட்டபோது அந்த உறுதிமொழியில் Under GOD என்ற வார்த்தைகள் கிடையாது. இந்த வார்த்தைகள் 1954ல் அப்போதைய அதிபர் ஐசனொவர் அவர்களால் சேர்க்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நாத்திகர்களுக்கு ”Under GOD" என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. உறுதிமொழி எடுக்கும் போது அந்த வார்த்தைகளைச் சொல்லாவிட்டாலும் தங்களது நாட்டுப் பற்றில் எந்தவிதக் குறைவுமில்லை என்று அடிக்கடி வாதிடுவார்கள். அவர்களின் வாதத்தை உணர்த்தும் வகையில் சமீபத்தில் எங்கள் சார்லெட் மாநகரில் ஒரு நாத்திகர் குழு “One Nation Indivisible" என்று ஒரு பெரிய விளம்பரப்பலகையை (Billboard) ஒரு பரபரப்பான சாலையில் 40 அடி உயரத்தில் வைத்திருந்தார்கள். வாகனங்களில் செல்லும் போது அதைப் படிப்பவர்களுக்கு அதில் குறிப்பாக மறைக்கப்பட்டுச் சொல்லப்படாத “Under GOD" என்ற வாசகத்தின் பொருளும் அதற்கான எதிர்ப்பும் உடனேயே புலப்பட்டுவிடும். இவ்வளவு பெரிய தட்டியை அந்த இடத்தில் வைப்பதற்காக அவர்கள் கிட்டத்தட்ட $15,000 செலவு செய்திருப்பதாக பத்திரிகையில் பேட்டியெல்லாம் வந்திருந்தது. அந்த தட்டி வைக்கப்பட்ட மறுநாளே அதில் யாரோ கரியால் ”Under GOD" என்று எழுதிவிட்டார்கள். அவ்வளவு பரபரப்பான சாலையில் அவ்வளவு உயரத்தில் ஏறி யாரும் பார்க்காதபோது அதைச் செய்தவர் யாரென்றுதான் தெரியவில்லை..

ஆண்டவனாக இருக்குமா????

ஒருவேளை அவங்களே பரபரப்புக்காக அதைச் செய்திருக்கலாமோ???

அல்லது அவ்வாறு அதை செய்ய ஆண்டவனே தூண்டியிருப்பானோ?????






oOo

அமெரிக்காவில் இருக்குறவங்களுக்கும் ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ரொம்ப வரும் போல இருக்கு. முக்கியமா அரசு நிர்வாகத்தில் எந்த ஒரு விஷயமும் ஒரு முறைக்கு 100 முறை சரி பார்க்கப் பட்டே வெளியிடப்படும்.. அப்படியும் சென்ற வாரம் எங்க ஊர்ல நடந்த ஒரு கூத்து. முக்கியமான ஒரு நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட ஒரு பெரிய விவரப் பலகையில் அவர்கள் செய்த தவறைப் பாருங்கள்.. Independence என்ற வார்த்தைக்கு என்ன ஸ்பெல்லிங் போட்டிருக்கிறார்கள் பாருங்கள்..இந்தப் பலகையை வைத்து முடித்து சென்ற பின்னர் ஒரு தொலைக்காட்சி சேனலில் அதைப் படம் பிடித்துக் காட்டிய பின்னரே அதில் இருந்த தவறு எல்லோருக்கும் தெரிந்தது.


oOo

அமெரிக்காவில் நாளைக் குறிக்கும் போது மாதம்/தேதி/வருடம் என்றே குறிப்பார்கள். சென்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதியின் விசேஷம் என்னவென்றால் அதன் தேதியைக் குறிக்கும் போது 8/9/10 என்று எண்கள் வரிசையில் வரும். அன்று ஒஹையோ மாநிலத்தில் சின்சினாட்டி நகரில் Ella Rose என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதிலும் எல்லா பிறந்த நேரம் தான் இன்னும் விசேஷம். காலை 11:12 க்கு குழந்தை பிறந்தால் விசேஷமாக இருக்குமே என்று அவள் பெற்றோரும் மருத்துவரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படிப் பிறக்காத போது கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தனர். பெற்றோரின் ஏமாற்றத்தைத் தணிக்கவே அவள் பிறந்த நேரம் இரவு 11:12. எல்லாவின் பிறந்த நேரம் 8/9/10 11:12 PM.பிறந்த போது அவள் எடை 6 lbs and 7 ounces. ரொம்ப விசேஷமான குழந்தை தான். எல்லாவுக்கு வாழ்த்துக்கள்..


oOo

என் சித்தி பையன் சந்துரு சென்னையில் கார்ப்பரேஷன் பள்ளியில் தான் படித்தான். அப்படியும் பெரிய்ய படிப்பெல்லாம் படித்து அமெரிக்காவெல்லாம் வந்து இப்பொழுது மிக வெற்றிகரமாக உலா வந்துகிட்டிருக்கான். அவன் அலுவலக நண்பர்களுடன் உரையாடும் போது அவர்கள் படித்த பள்ளிக்கூடங்களைப் பற்றிப் பேச்சு வருமாம். எல்லோரும் St Paul's, St Antony's என்று ஏதாவது பெத்த பெயராகச் சொல்லும் போது அவனுக்கு ஏற்படும் ச்சின்ன ஏமாற்றத்தைத் தவிர்க்க தான் படித்த கார்ப்பரேஷன் பள்ளியின் பெயரை St. Corps என்றேக் குறிப்பிடுவது அவன் வழக்கம். தனக்குப் பள்ளியறிவு வழங்கிய சென்னை மாநகராட்சியை ஒரு புனிதர் அளவுக்கு உயர்த்தி “St Corps" என்று அவன் சொல்லும் போது ”பேரு ஒருமாதிரியிருக்கே...அது எங்கேயிருக்கிறதென்று” இதுவரை யாரும் கேட்டதில்லையாம்..

oOo


என் நியூ ஜெர்ஸி நண்பருக்கு வாகனப்ராப்தி அமைந்துள்ளது. புதுசா ஒரு நீலக்கலர் லெக்ஸஸ் கார் வாங்கியிருக்கார். உங்க கார் படம் இன்னும் வந்து சேராததால் விமானத்துக்கு வாகன பூஜை போடற படத்தைப் போட்டிருக்கேன். கூடிய விரைவில் நீங்கள் விமானமும் வாங்க வாழ்த்துக்கள் !!


13 comments:

மருதநாயகம் said...

தாம்பூலம் மிகவும் வெயிட்டாக இருக்கிறதே

மதுரை சரவணன் said...

அனைத்துவிசயங்களும் பிடித்துஇருந்தது.மதுரையில் கார்பரேச்ன் பள்ளீகளைக் கான்வெண்ட் என்று கூறுவார்கள். பிறந்த குழந்தைக்கு என் முதல் வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

St.Corps.நல்லாத்தான் இருக்கு, ஆனா ஏதோ நெருடல். இருந்தாலும் உண்மையச் சொல்றதுன்னா எப்படி வேணுமின்னாலும் சொல்லலாம் பாருங்க..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//One Nation
Under GOD
Indivisible//

"Under" God = பெரும்பான்மை மக்களின் குறியீடான கடவுள் என்ற ஒன்றைக் கீழே இறக்கறாப் போல இருக்கு, Under-ன்னு சொல்லி! அதான் நாத்திகர்கள், மரியாதை கருதி, "Under" God வேணாம்-ங்கிறாங்க! புரிஞ்சிக்கோங்க! :)

One Nation
Indivisible

Under God or Upper God...doesnt matter, coz he is also One and In(di)visible!
இல்லை என்னும் சொல்லிலும் உளன்!

உளன்எனில் உளன்அவன் உருவம்இவ் உருவுகள்!
உளன்அலன் எனில்அவன் அருவம்இவ் உருவுகள்!
உளன்என இலன்என இவைகுணம் உடைமையில்
உளன்இரு தகைமையொடு ஒழிவுஇலன் பரந்தே!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

I like St Corps! :)
எங்கூரு வாழைப்பந்தல் பள்ளியை நாங்க St Vpl-ன்னு தான் கூப்புடுவோம்! :))

பழமைபேசி said...

அண்ணே... நெம்ப சுவாரசியமா இருக்குங்க... ஆமா, நீங்க BMW வாங்குறதுன்னு சொன்னீங்களே? எப்ப??

சீமாச்சு.. said...

//மருதநாயகம் said...
தாம்பூலம் மிகவும் வெயிட்டாக இருக்கிறதே//

வாங்க மருதநாயகம். வழக்கமாத் தாம்பூலம் சொந்த அனுபவங்களைச் சுவாரசியமா எழுதறது தான். இன்னிக்கு கொஞ்சம் நியூஸ் போட்டு ஒப்பேத்திட்டேனோன்னு எனக்கேத் தோணுகிறது

சீமாச்சு.. said...

//அனைத்துவிசயங்களும் பிடித்துஇருந்தது.மதுரையில் கார்பரேச்ன் பள்ளீகளைக் கான்வெண்ட் என்று கூறுவார்கள்.//

எனக்குப் புது விஷயங்க அது சரவணன். எனக்கென்னவோ ரொம்ப நாளா கான்வெண்ட்குக்கு ஸ்கூலுக்கும் வித்தியாசம் தெரிஞ்சதில்லை. தெரியாதுன்னு காண்பிச்சிக்கிட்டதும் இல்லை..

காதலிக்க நேரமில்லை படத்துல நாகேஷ் “எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேன்” அப்படீன்னு சொல்லும் தன் படக் கதாநாயகியிடம் “அப்படியெல்லாம் சொல்லாதே.. கான்வெண்ட்டுல படிச்சேன்னு சொல்லு” அப்படீன்னு சொல்லும் வசனம் தான் நினைவு வருகிறது

சீமாச்சு.. said...

//St.Corps.நல்லாத்தான் இருக்கு, ஆனா ஏதோ நெருடல். இருந்தாலும் உண்மையச் சொல்றதுன்னா எப்படி வேணுமின்னாலும் சொல்லலாம் பாருங்க..
//

எனக்கு உங்கள் நெருடல் புரியவில்லை. போகிறபோக்கில் சொல்லிட்டுப் போகும் இடங்களில் St Corps அப்படீன்னு சொல்லிட்டுப் போனாலும், தூண்டித்துருவிக் கேட்கும் மக்களிடம் அது Corporation School தான் என்பதை சந்துரு மறைத்ததில்லை..

சீமாச்சு.. said...

//Under God or Upper God...doesnt matter, coz he is also One and In(di)visible!
இல்லை என்னும் சொல்லிலும் உளன்!//


கேயாரெஸ், நான் என்னதான் பட்டுப்புடவை மாதிரி (!!!!!) பதிவுகள் எழுதினாலும் நீங்க தங்கத்துல வார்த்த ஜரிகை மாதிரி பின்னூட்டம் எழுதி பாராட்டுக்களை அள்ளிடறீங்க.... உங்கள் ஆன்மீகக் கருத்துக்களுக்கு என்றென்றும் நான் வாசகன் தான் !!

சீமாச்சு.. said...

//பழமைபேசி said...
அண்ணே... நெம்ப சுவாரசியமா இருக்குங்க... ஆமா, நீங்க BMW வாங்குறதுன்னு சொன்னீங்களே? எப்ப??//

பழமைபேசியாரே.. சில விஷயங்களைக் கொள்கை முடிவில் நான் தவிர்த்து வருகிறேன். என் கொள்கைகளைக் கடைசி (எது கடைசி என்பதே ஒரு தத்துவார்த்தமான கேள்விதான்) வரைக் கடைபிடிக்கத் தேவையான மன உறுதியை ஆண்டவன் எனக்கு அருளவேண்டும்..

சீமாச்சு.. said...

//எங்கூரு வாழைப்பந்தல் பள்ளியை நாங்க St Vpl-ன்னு தான் கூப்புடுவோம்! :))//

St VPL வாழ்க !!

அரசூரான் said...

ஆஹா விமான பூஜையா? சக்கரத்து கீழே எலுமிச்சை பழம் உண்டா?