Monday, July 04, 2011

122. மயிலாடுதுறையில் பரபரப்பான ஒரு வங்கிக்கொள்ளை !!

ஆசுவாசமான சோம்பேறித்தனம் மிகுந்த வெள்ளிக்கிழமை மதிய வேளை.. மதியம் இரண்டு மணியைத் தொட்டிருந்தது..

மயிலாடுதுறை காந்திஜி ரோட்டில் சுந்தரம் தியேட்டர் எதிரில் இருந்த காவல் நிலைய கண்ட்ரோல் ரூமில் இருந்த சிவப்புவிளக்கு பளீரிட்டு அலறியது.. ஸ்டேஷனே பரபரத்துப் போயிற்று..

மதிய சாப்பாடு முடித்து காலைத் தூக்கி டேபிளில் போட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எல் & ஓ செந்தில் தூக்கம் கலைந்த கடுப்பில் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார்..

பக்கத்தில் தூங்கிட்டிருந்த ரைட்டர் குமார் இவருக்கு முன்னே எழுந்து என்னவென்று விசாரிக்கச் சென்றுவிட்டார்.

கண்ட்ரோல் ரூம் கண்ணப்பன் சிவப்பு விளக்கை துடைத்து துடைத்துப் பார்த்து “நெசமாவே எரிகிறதா” என்று செக்கப் பண்ணிக்கிட்டிருந்தார்.. அந்த சிவப்பு விளக்கு மயிலாடுதுறை வங்கிகளின் பாது காப்புக்காக ஸ்பெஷலாக அனைத்து வங்கிக் கிளைகளையும் காவல் நிலையத்துக்குக் கனெக்ட் பண்ணி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் அமைத்த பொழுதில் செக் பண்ணிய பின்பு எரிந்த விளக்கு அது. அதற்குப் பிறகு 10 வருஷமாக பல்பு எரியுமா, ஃப்யூஸா என்று பார்க்கக் கூட அது எரிந்ததில்லை.

அவசரமாக வெளியே ஓடி வந்து கண்ணப்பன் ஸ்டேஷம் நடுக்கூடத்தில் அமைந்திருந்த நீருற்று (தண்ணியில்லை.. எப்பவுமே) தொட்டியருகில் நின்னுக்கிட்டு கத்தினார்..

“ஃபாங்கில் கொள்ளை முயற்சி போலருக்கு சார்..”

ஸ்டேஷனில் யார் எங்கேயிருப்பாங்க என்பது எப்பவுமே குத்து மதிப்பாகத்தான் கண்டுபிடிக்கணும். வங்கிக் கொள்ளையென்பது க்ரைமா, எல் & ஓ வா என்பது கூட கண்ணப்பனுக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை.. நிச்சயம் ட்ராஃபிக் கிடையாதென்பது தெரியும்..

வெளியே வந்திருந்த ரைட்டர் குமாருக்கும் செந்திலுக்கும் எரிச்சலாக இருந்தது..

“எந்த பாங்க் கண்ணப்பண்ணே?” - கண்ணப்பன் அடுத்த வருடம் ரிட்டயராக் இருப்பதால் அனைவருக்குமே கண்ணப்பண்ணே தான்..

“ஃபேங்க ஆஃப் பரோடான்னு கம்பியூட்டர் சொல்லுது சார்.. மகாதானத்தெரு நேஷனலைஸ்கூல் பக்கத்துல இருக்கு சார்..”

பரபரவென்று தயாரானது ஆக்‌ஷன் டீம்..

வாசலில் ராதா டீஸ்டால் வாசலில் பீடோ போட்டு கடலை போட்டுக்கிட்டுருந்த் ஸ்டேஷன் ட்ரைவர்கள் இந்நேரம் வண்டிகளில் ஏறி அமர்ந்து முடுக்கியிருந்தார்கள்...

அங்கங்கே அமர்ந்திருந்த வாட்டசாட்டமான கான்ஸ்டபிள்கள்.. தங்கள் ஆயுதங்களுடன் வேனில் தாவ (மொள்ளமாக ஏறி என்று படிக்கவும்..) மெதுவாக 5 நிமிஷத்தில் ஸ்டேஷன் காலியானது.. அங்கங்கே உக்கார்ந்திருந்த ஸ்டேஷனுக்கு கேஸ் சம்பந்தமாக விசாரிக்க/கவனிக்க வந்திருந்த சில பொதுமக்களும் வாசலில் இருந்த பாராவும் தவிர ஸ்டேஷனில் காக்கிகளையேக் காணோம்.. வாசலில் நின்றிருந்த பாராவும் தன் செல்பேசியை எடுத்து யாருக்கோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்.. “ஏதோ ஃபேங்கில கொள்ளையாம் புள்ள்..”

கண்ட்ரோல் ரூம் கண்ணப்பன் ரொம்ப பழசாப் போயிருந்த ஆப்பரேஷன் மானுவலைத் தடவித் தடவி எல்லோருக்கும் விஷயங்களைப் பரப்பிக்கிட்டிருந்தார்..

விஷயம் அங்கே இங்கே விஷமாகப் பரவி ஊர் முழுவதும் பரவியியது.. எல்லாம் ஒரு 10 நிமிடங்களில்..


****


மகாதானத்தெரு ஃபேங்க ஆஃப் பரோடா வாசல்..

திடீரென்று அங்கு சைரன் ஒலியுடன் 5 காவல்துறை வாகனங்கள் சரசரவென்று வந்து கோணல் மாணலாக நின்றன்.

வங்கி வாசலில் இருந்த ஒரு 25-சொச்சம் சைக்கிள்கள் 2 வினாடிகள் தூக்கிக் கடாசப் பட்டன. டூவீலர்கள் ஒன்றன் மேல் ஒன்றாக சரித்து விடப்பட்டன..


அதற்குள் ஒரு “அஜீத் பிரியரான” கான்ஸ்டபிள் பக்கத்திலிருந்த பள்ளி வாசல்களை இழுத்து மூடினார்.. வாசலில் நின்றிருந்த ஒரு ஆசிரியரிடம்.. ”எக்காரணம் முன்னிட்டும் காவல்துறை அறிவிப்பு வரும் வரை பள்ளி மணி அடிக்கக்கூடாது.. பள்ளி மாணவர்கள் வெளியே வரக்கூடாதென்று “ சொல்லப்பட்டது.. எங்கியாவது பள்ளிக்கூடம் திடீர்னு மணியடிச்சி.. கும்பலால மூவாயிரம் மாணவர்கள் வெளியே வந்தால் வங்கிக் கொள்ளையர்கள் கூட்டத்தில் தப்பிவிடலாம்... ஏதோ ஒரு அஜீத் படத்தில் அப்படித்தான் கும்பலைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பிப்பார்கள்.. மாயவரம் ஸ்டேஷனிலேயே ஒரு புத்திசாலி கான்ஸ்டேபிள் ஒருவர் இவர்..

அதற்குள் காவல் படை வங்கிக்குள் நுழைந்திருந்தது..

பரபரெவென்று நுழைந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.. வங்கிக்குள் ஏகத்துக்குச் சத்தமாயிருந்தது.. ஒரு மூலையில் வாடிக்கையாளர்களும் இன்னொரு மூலையில் வங்கி அதிகாரிகளுமாக குழுமி நின்றிருந்தனர்..

அழுக்கு வேஷ்டியும் கலைந்த தலையுமாக 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆள்.. ஒரேயொரு ஆள் அங்கு போடப்படிருந்த நாற்காலியில் உக்கார்ந்திருந்தார்.. அவர் கையில் ஒரு மஞ்சள் கலர் “கறார் கடை” துணிப்பை..

சில வினாடிகளில் நிலைமையை உணர்ந்த எல் & ஓ செந்தில் (சாப்பிட வீட்டுக்குப் போன க்ரைம் இன்னும் வரவில்லை.. அவசரவசரமாக சாப்பாட்டைத் தூக்கி எறிந்து விட்டு இப்பத்தான் கடைத்தெரு வரை வந்து கொண்டிருப்பதாக வயர்லெஸ் அலறியது..) ஆயுதப்படை வீரர்களை அந்த கறார்கடைக் காரரை வளைக்கச் சொல்லிவிட்டு வங்கி அதிகாரிகளிடம் சென்றார்.

“வாங்க சார்..”

“யாரு சார் எமர்ஜென்ஸி பட்டன் ப்ரெஸ் பண்ணினது..?

“நான் தான் சார்.. அவசரமாக கேஷை லாக் பண்ணிட்டு மேனேஜர் ரூம்ல வந்து ப்ப்ரெஸ் பண்ணினேன் சார்” - கேஷியர் கோபால்.

”என்ன விஷயம் சார்..”

“அந்தாளு.. கவுண்டர் கிட்டே வந்து ஒரு ஸ்லிப் கொடுத்தான் சார்.. ஸ்லிப்புல உடனே ஒரு கோடி ருபாய் தராவிட்டால் தீத்துருவேன்..” என்று எழுதியிருந்தது சார்..


*****

வங்கி வாசலில் கூட்டம் அள்ளியது..

பக்கத்தில் ச்சின்னக்கடைத் தெருவிலிருந்தும் அருகருகில் வீடுகளிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தனர்.

வெள்ளிக்கிழமை மதியம் குட்டித்தூக்கத்திலிருந்த பிரபல பதிவர் அபிஅப்பாவும் நட்டுவைத் தூக்கிக்கொண்டு..அவரது டூவீலரில் வந்துவிட்டார்..

“நம்ம ஸ்கூல் கட்ட.. கஷ்டப்பட்டு சீமாச்சி அண்ணன் கலெக்ட் பண்ற பணமெல்லாம் இந்த ஃபேங்குல தான் போட்டிருக்காரு.. தூக்கிட்டுப் பூட்டானுங்கன்ன என்ன பண்ணுவாரு அண்ணன்.. அண்ணனுக்கு ஆர்ட் அட்டாக்கே வந்திரும்.. அமெரிக்காவுக்கு ஃபோன் பண்ணனும்.. அங்க இப்ப மணி காலையில 3 மணியிருக்கும்..” என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ஆசிரியரை துளைத்துக் கொண்டிருந்தார்..


எங்கிருந்தோ கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சின்னக்கடைத்தெரு “சாந்தி ஹேர் கட்டிங் சலூன்” பாண்டி அபிஅப்பாவைப் பார்த்ததும் அரக்கபரக்க ஓடியாந்தான்..

“அண்ணே.. எப்பண்ணே துபாயிலிருந்து வந்தீங்க...? எனக்கொரு விசா கொண்டாரேன்னீங்களே..?” - அபிஅப்பாவை எப்பொழுது பார்த்தாலும் கேட்கும் கேள்வியை ஆயிரத்தோராவது தடவையாகக் கேட்டு வைத்தான்..

அபிஅப்பா அவனைப் பார்த்ததும்..” துபாயில அரிசிச்சோறெல்லாம் கிடைக்குமாண்ணே..” - இன்னொரு ஆயிரத்தொன்று..

எரிச்சலை அடக்கிக்கொண்டு அபிஅப்பா..”ஆடுத்த மாசம் உனக்கு விசா .. பாண்டி..” என்ற கழக வாக்குறுதியை சளைக்காமல் வழங்கினார்.. அடுத்த தேர்தலில் “அனைவருக்கும் இலவச துபாய் விசா திட்டத்தை பொதுக்குழுவில் சஜஸ்ட் பண்ணச் சொல்லி நம்ம அப்துல்லா அண்ணன்கிட்டே சொல்லணும்.. இல்லேண்ணா நம்ம காந்தி அண்ணிகிட்டே சொல்லி அழகிரி அண்ணன்கிட்டே சொல்லிட்டா அடுத்த தேர்தல்ல கலைஞர் ஜெயிச்ச உடனேயே நம்ம சலூன் பாண்டி துபாய் போயிடலாம் என்ற நீண்ட காலத் திட்டமும் உச்ச மண்டையில் தெறித்தது..

இப்போதைக்கு அபிஅப்பாவின் ஒரே கவலை.. “பணம் போயிருந்திச்சின்னா.. சீமாச்சு அண்ணனுக்கு உடனே சொல்லியாகணுமே” என்பது மட்டும் தான்...


கலவையான உரையாடல்களால் வங்கி வாசல் சத்தமாயிருந்திச்சி... தகவலறிந்து லோக்கல் டீவீ & பத்திரிகை நிருபர்களும் கேமிராவுடன் ஆஜராகியிருந்தார்கள்..

அவங்க கேமராவைத் தூக்கியதைப் பார்த்ததும் அபிஅப்பாவும் செல்ஃபோனைப் பையில் போட்டுவிட்டு அவசரமாக தான் தூக்கி வந்த கேனன் கேமராவைக் கையிலெடுத்தார்.. கேமராவில் பாட்டரியில்லை என்பது அவருக்குத் தெரியாது.. நேத்து ராத்திரி தான் சார்ஜ் போடுவதற்காக கிருஷ்ணா பேட்டரியைக் கழற்றியிருந்திருக்கிறது..

“மாயவரத்தான்னு ஒருத்தரு இருக்காருண்ணே.. அவர் மட்டும் இப்ப இருந்திருந்தால்.. இந்நேரம் இது பத்தி நூறு ட்வீட் விட்டிருப்பாருண்ணே.. “ பக்கத்தில் இருந்தவரிடம் இன்னொரு புலம்பல்..

“நீங்க..?”

“நான் ட்விட்டர் பக்கம போறதில்ல.. நமக்கு பஸ்ஸூ மட்டும் தான்..” - ட்விட்டரும் பஸ்ஸும் தெரியாத ஒரு அரிசிக் கடைக்காரர்கிட்டே தான் இவ்வளவு அலம்பலும்..அபிஅப்பா கிட்டேருந்து..

****

”எங்க சார் அந்த ஸ்லிப்பு?”

அரைக்குயர் ரூல்டு நோட்டிலிருந்து அவசரமாகக் கிழிக்கப்பட்ட ஒரு தாளில் நீல இங்கால் எழுதப்பட்டிருந்தது..

“அவசரமாக ஒரு ரூபாய் தரவும்.. வங்கியைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறேன்.... “

கோணல் மாணலாக நடுக்கத்துடன் கோவிந்தன் என்று ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டிருந்தது..

செந்தில் கறார்கடையை மேனேஜர் ரூமுக்குத் தள்ளி வரச் சொல்லியிருந்தார்..

மேனேஜர் ரூமில் ஒருக்களிக்கப்பட்ட கதவு பின்னால் செந்தில், கறார்கடை, மற்றும் மேனேஜர்.. மற்று இரண்டு பேர் பாதுகாப்புக்கு..

“என்னய்யா..? பேங்க் ராபரியா..?”

”ரொம்ப பசிக்குது சார்.. சாப்பாட்டுக்கு வழியில்ல சார்..” - கறார்கடை

தீவிர விசாரணையில் தெரிய வந்தது இது தான்..

கறார்கடை ஒரு மதிப்பான குடும்பத்தின் தனித்து விடப்பட்ட ஆள்.. கைவசம் கொஞ்சமும் காசில்லை..சாப்பாட்டுக்கே கஷ்டம்.. பிச்சையெடுக்க படித்த படிப்பு இடம் கொடுக்கவில்லை.. ஏதாவது மதிப்புக்குரிய குற்றம் செய்துவிட்டு ’ஜெயிலுக்குப் போயாவது அரசாங்க சாப்பாடு சாப்பிட்டு நிம்மதியா இருக்கலாம்’ என்ற நினைப்பில் அவர் அஹிம்சா போராட்டத்தில் வந்த்து தான் இந்த ஃபேங்க் ராபரி திட்டம்..

என்ன செய்வதென்று செந்திலுக்குப் புரியவில்லை..

சட்டென்று பையிலிருந்த நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து..”பக்கத்துல கடையில போயி சாப்பிட்டுட்டு.. சாயங்காலம் ஸ்டேஷனுக்கு வாய்யா” என்றார்..

பக்கத்திலிருந்த மேனேஜர் பாலுவும் அதைப் பார்த்துவிட்டு “இந்தாப்பா ..” என்று ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை கறாரிடம் நீட்டினார்..

உள்ளே சமாதானம் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்து நைசாக நுழைந்தார் கேஷியர் கோபால்..

“என்ன சார் ஸ்லிப்புல ஒரு கோடி ரூபாய் டிமாண்ட் எழுதியிருந்துதுன்னீஙக.. ஒரு ரூபாய் தான் எழுதியிருக்கு...”


“ஆமாம் சார்.. ஒரு ரூபாய்னா.. ஒரு பெரீய்ய ரூபாய்னு நெனச்சேன் சார்..”


தலையிலடித்துக்கொண்டார் செந்தில் எல் & ஓ..

க்ரைமும் உள்ளே நுழைந்துவிட்டிருந்தார் இப்போ..

”வாசல்ல செமைக் கூட்டம் சார்.. ரிப்போர்ட்டரெல்லாம் நிக்கிறானுங்க சார்.. கண்ட்ரோல் ரூம்லேருந்து மேலிடத்துக்குத் தகவல் போயி எஸ்.பி லயன்ல வந்தார் சார்..”

க்ரைமுக்கு ஏற்கெனவே ப்ளட் ப்ரெஷர் ஏகத்துக்கு ஏறிவிட்டிருந்தது.. காலையில் மாத்திரை போட்டுக்க சில நேரம் மறந்திருவார்.. இப்ப கறார்கடை விஷயம் தெரிந்தால் ‘பொளேரென்று” அவர் அறையும் அறையில்.. கறார் மண்டையைப் போட்டாலும் போட்டிருவார்..

டக்கென்று கறாரைத் தன்பக்கம் மறைத்துக் கொண்ட செந்தில்,
“க்ரைமண்ணே.. நான் விசாரிச்சிடறேன்.. நீங்க போயி கஸ்டமர்ஸ் கிட்டே ஏதாவது சொல்லி நாளைக்கு வரச் சொல்லிடுங்க..”

வங்கி அலுவலர்கள் ஒவ்வொருவராகச் சீட்டுக்குத் திரும்பினர்.

”மேனேஜர் சார்.. இது பெரிய்ய ப்ரச்சினை ஆகிரும்.. பேப்பர் ஒர்க் எல்லாம் இருக்கு.. வாசல்ல ரிப்போர்ட்டரெல்லாம் நிக்கிறாங்க.. பதில் சொல்லியாகணும்.. நீஙக் என்ன பண்றீங்க.. என் பின்னாடி வாங்க..நான் என்ன சொல்றேன்னு கவனமாக் கேட்டுக்கிட்டு அப்படியே ... ஆமாம் போட்டிருங்க...”

கறார்கடையை பின் வாசல் வழியாக சாப்பிட அனுப்பிவிட்டு.. வாசலுக்கு வந்தனர் செந்திலும் மேனேஜரும்..

“என்ன சார்.. ராபரியாமே..?” - தினமலர்..
“கிரிமினல்ஸ் புடிச்சிட்டீங்களா சார்..” - ஏதோ ஒரு டீவி..

“இது ஒரு பேங்க் ராபரி அட்டெம்ட் இல்லே.. ஒரு ஃபால்ஸ் அலார்ம் தான்.. மானேஜர் டெஸ்க்க்குக் கீழேயிருந்த அலார்ம் ஸ்விட்ச் மேலே ஒரு அணில் துள்ளி ஓடியிருந்திருக்கு.. அதனால அலார்ம் ஆக்டிவேட் ஆயிருச்சி.. பேங்கில கிரிமினல்ஸ் யாரும் இல்லை.. “ - செந்தில்..

“ஆமாம்.. காவல் துறை அதிகாரி சொல்வது போல் அணிலால் வந்த தொல்லை தான் இது.. கொல்லையில் மரங்கள் அதிகமிருப்பதால் அணில் கூட்டம் இங்கு அதிகம்..” சொன்னவர் மேனேஜர் பாலு..


அசுவாரசியமாகக் கூட்டம் கலையத்துவங்கியது.. அபிஅப்பாவுக்கும் பெரிய்ய நிம்மதி.. ”நம்ம ஸ்கூல் பணம் பத்திரமாத்தான் இருக்கு..”

பேட்டரி இல்லேன்னு தெரிஞ்சும்.. சலூன் பாண்டி பார்த்துடப் போறானேன்னு கவுரவத்துக்காக.. ரெண்டு தடவை கிளிக்கிவிட்டு நட்டுவைத் தள்ளிக்கிட்டு நடந்தார் அபிஅப்பா..


பின்குறிப்பு: சமீபத்தில் அமெரிக்காவில் எங்க ஊருக்கு அருகில் கேஸ்டோனியா என்ற இடத்தில் இது போல ஒரு நல்லவர் சாப்பாட்டுக்கு வழியின்றி.. பேங்கில் போய் ஒரு டாலர் ஒரே ஒரு டாலர் திருடி கவுரவமாக ஜெயிலுக்குச் சென்றார்.. இதுவே மயிலாடுதுறையில் நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்த்த்தின் விளைவு இந்த்ச் சிறுகதை..

பின் பின் குறிப்பு: “எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது” என்று பாராட்டிப் போடப்படும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..




14 comments:

கொக்கரக்கோ said...

“எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது”

போட்டுட்டேன்!!!! :)))

அபி அப்பா said...

அண்ணே! நான் கூட பயந்துகிட்டே படிச்சேன். எங்க போட்டு வச்ச ஸ்கூல் பணம் எல்லாம் லவட்டிகிட்டு போய்ட்டாங்களோன்னு. கவலையே படாதீங்க அண்ணே, நான் இருக்கும் போது வேற ஒரு பயல் லவட்ட முடியாது:-))) இப்ப ஸ்கூல்க்கு தான் போறேன். வந்து மீதி கச்சேரி வச்சுக்கறேன்:-))))))))))))))))

cheena (சீனா) said...

சீமாச்சு - நல்லா இருந்துச்சி கத - ஆயில்ஸ் கல்யாணத்துக்கு நான் வேற அங்கே போயிருந்தேனா - பயந்துட்டேன் - நல்ல வேளை - போலீஸ் அழகா ஹேண்டில் பண்ணிட்டாங்க

vasu balaji said...

:))))))

Rajan said...

எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது

Thiruneelakandan said...

எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது

Thiruneelakandan said...
This comment has been removed by the author.
Thiruneelakandan said...

எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது

ரோகிணிசிவா said...

“எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது”







சீமாச்சு அண்ணா என் அக்கவுன்ட் நம்பர் கிருஷ்ணா அண்ணி கிட்ட இருக்கு

chinnapiyan said...

summaa sollakkoodaathu. romba nallaave irunthuchchu. karpanai.I wonder, so many twitters at Mayavaram!!

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் "வாத்தியார் சுஜாதா பாணியில்" விறுவிறுப்பாகத்தான் இருந்தது..

அபியப்பா ஊர்ல இருக்கும்போதே இப்படின்னா அவர் ஊரைவிட்டுக் கிளம்பினா என்னென்ன ஆகுமோ..?

Shobha said...

“எழுத்தாளர் சுஜாதா பாணியில் விறுவிறுப்பா இருந்தது."
//பேட்டரி இல்லேன்னு தெரிஞ்சும்.. சலூன் பாண்டி பார்த்துடப் போறானேன்னு கவுரவத்துக்காக.. ரெண்டு தடவை கிளிக்கிவிட்டு நட்டுவைத் தள்ளிக்கிட்டு நடந்தார் அபிஅப்பா..// idhu sooper.

//கவலையே படாதீங்க அண்ணே, நான் இருக்கும் போது வேற ஒரு பயல் லவட்ட முடியாது:-))//
abi appa idhukku enna artham/

kkk said...

Nachunnu irunthathu.

அரசூரான் said...

அண்ணே... கொலை முயற்ச்சி... மன்னிக்கவும் கதை முயற்ச்சி சூப்பரண்ணே சூப்பர்.