Wednesday, June 08, 2011

121. பறவைக் குழந்தை

சில தினங்களுக்கு முன் என் குழந்தைகளும் அவர்கள் தோழிகளும் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். திடீரென்று வீட்டு வாசலில் ஹோ வென்று சத்தத்துடன் குழந்தைகள் கும்பலாக நின்றிருந்த போது “யாருக்கேனும் அடி பட்டுவிட்ட்தா” என்று சத்தத்துடன் எட்டிப் பார்த்தால் என் பெரிய மகளின் கைகளில் ஒரு குட்டிப் பறவை. உயிருடன் இருந்தது. ரொம்பக் குட்டியாக ஒரு பறவைக் குழந்தை. அப்பொழுதுதான் முட்டையிலிருந்து பொறிந்திருக்க வேண்டும். எப்படி என் வீட்டு வாசலுக்கு வந்ததென்று தெரியவில்லை..


கையில் எடுத்து வந்து ஆராய்ந்தார்கள் குழந்தைகள். பறவையின் காலில் ஒரு சிறிய முள் குத்தியிருந்தது. அதை மிக லாகவமாக வெளியேற்றி அதைச் சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கொண்டு வந்தார்கள். தாய்ப்பறவையைக் காணவில்லை. பறவைக்கும் பறக்கத் தெரியவில்லை. அப்படியே “போட்டுவிட்டு வா” என்று சொல்ல மனிதாபிமானத்துக்கும் இடமில்லை.

கூகுளில் தேடிப்பார்த்து பறவையின் ரகம் “American Robin" என்று கண்டுபிடித்து அதற்கு “ராபி” என்று நாமகரணம் சூட்டும் வைபவமும் நடந்துவிட்டது. வீட்டிலிருந்த பழைய பறவைக்கூடு அதற்கு இல்லமாகவும் மாறிவிட்டது. சில புழுக்களையும், தானியங்களையும் சாப்பிடக் கொடுத்தால் குழந்தையின் வயிறு அதை ஜீரணிக்கச் சிரமப்பட்டது.

என் மனைவி அருகிலிருந்த PetsMart கடைக்குச் சென்று குட்டிப் பறவைகளுக்கு விசேஷமாகத் தரும் Bird Formula வும் Ink filler ம் வாங்கி வந்து மாவு கரைத்து ஊட்டிக் கொண்டிருந்தாள். Ink Filler ஆல் ஒவ்வொரு முறையும் 10 முறை சாப்பாடு தந்து கொண்டிருந்தாள். இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை அதற்கு பசிக்கிறது. வாயருகில் உணவு எடுத்துச் சென்றால் ஆசையாக வாய் திறந்து காண்பிக்கிறது.

இரண்டு வாரங்களாக இதுதான் வேலை. “I want to keep her with us till she grows big.. for its life Daddy !!" என்று சூர்யா சொல்லிவிட்டாள்..

இன்று என் குடும்பம் இந்தியா கிளம்பி சென்று விட்டது.. “ராபியை பத்திரமாகப் பார்த்துக்கோ டாடி..” என்று சொல்லிச் சென்றிருக்கிறாள் சூர்யா.. ஏர் போர்ட்டிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் போது எனக்கும் பசி.. ஏதாவது சாப்பிடலாமென்று கையில் எடுத்த போது ராபியின் குரல்... பசி போலிருக்கிறது. நாம் சாப்பிடும் முன்பு ஒரு பசித்த வயிறுக்கு சோறு போடவேண்டுமே என்று அதற்கும் உணவு கரைத்து ஊட்டினேன்.. இன்று மட்டும் 6 முறை உணவு கொடுத்தாகிவிட்டது. எனக்கு அதற்கும் ஒரு பந்தம் வளர்ந்துவிட்டது போலும்..

குழந்தைக்குப் பறக்கத் தெரியவில்லை இன்னும். கையில் எடுத்து வீட்டு வாசலில் வந்தால் ஆசையுடன் வானம் பார்க்கிறது. பறக்க முயற்சிக்கத் தெரியவில்லை.

நாளை அலுவலக நாள். நான் அலுவலகம் சென்றால் குழந்தைக்கு யார் சோறூட்டுவது? பசிக்குமே.. வியாழன் வெள்ளி இரு தினங்களும் வீட்டிலிருந்தே வேலை பார்க்க வேண்டும் தான்..

பக்கத்தில் இரண்டு மைல்கள் தள்ளியிருக்கும் ஒரு தெலுங்கு அன்பர் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த வாரம் முதல் பகல் வேளைகளில் அவர் வீட்டிலும் இரவுகள், வாரயிறுதிகளில் என் வீட்டிலும் வைத்து பராமரிக்க வேண்டும்.

குடும்பம் இந்தியாவிலிருந்து திரும்பி வரும் வரை இது ஒரு பெரிய பொறுப்புதான். அதற்குள் அது பறக்க நினைத்தால் உதவலாம்.. வெளியில் விட்டுவிட சூர்யா ஒத்துக்கொள்ளமாட்டாள்.. தினமும் கேள்விகள் கேட்பாள்.. விமானம் நியூயார்க் ஏர்போட்டிலிருந்த போது ஃபோன் செய்து..” ராபி சாப்பிட்டாச்சா..” என்று கேட்ட பின்புதான் “நீ சாப்பிட்டியா டாடி..” கேட்கிறாள்..

“உறவுகள் வளர்வதற்கு.. மனம் தானே காரணம்.. உள்ளங்கள் பலவிதம்...”


3 comments:

நாகை சிவா said...

:)

Ramya said...

கடையேழு வள்ளல்கள் ஏழு என்பதை கடையெட்டு வள்ளல்கள் அப்படின்னு மாத்தணும் போல இருக்கே !!! வளர்க உங்கள் பறவை தொண்டு.

sriram said...

சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்.
உங்க வீட்டுக்கு முன் பின் தெரியாத, நண்பரின் நண்பராக நடுராத்திரியில் நான் வந்தது நியாபகம் வருகிறது. உங்க விருந்தோம்பல் பத்தி தெரிந்த எனக்கு இதில் ஆச்சரியம் ஏதுமில்லை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்