Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, October 12, 2011

130. சீமாச்சுவின் தாம்பூலம் -- 12 அக்டோபர் 2011

சீமாச்சுவின் தாம்பூலம் எழுதி ரொம்ப நாளாச்சிதே.. எழுதுங்க அண்ணே என்று அன்புடன் கேட்டுக் கொண்ட அந்த வாசகருக்கு நன்றி..

oOo oOo oOo

சமீயாவுக்கு மூன்றரை வயதாகுது.. கோவையில் இருக்கிறாள்.. நாங்கள் இருக்கின்ற அபார்ட்மெண்ட் இரண்டாவது மாடியில்.. மேலே போவதும் கீழே வருவது லிஃப்டில் தான்.. அப்பப்ப போகும் போது லிஃப்டில் பட்டன்களை அமுக்குவதும் சமீயாதான்..

ஒவ்வொரு முறை கீழே செல்ல விரும்பும் க்ரௌண்ட் ஃப்ளோருக்கு ஜீரோ பட்டனை அமுக்க வேண்டும்.. ஒவ்வொரு தடவையும் கீழே போகும் போது அவள் ஜீரோ பட்டனைத்தவிர மற்ற எல்லா பட்டனையும் அமுக்குவாள்.. இது பலமுறை நடந்த பிறகு ஒரு நாள் அவளையேக் கேட்டேன்..

“ஏண்டா கண்ணம்மா.. ஜீரோ பட்டனையே அமுக்க மாட்டேங்கறே..?”

“ஜீரோன்னா ’நோ வேல்யூ’.. டாடி.. எங்க மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க.. நாம ஏன் டாடி ’நோ வேல்யூ’வுக்குப் போகணும?”


”ஏதாவது ஒண்ணு கத்துக் கொடுத்தால் அதை உடனடியாப் பிடிச்சிக்கணும்.. Fact னு ஒண்ணு இருக்கு.. Application of Fact னு ஒண்ணு இருக்கு.. எதையும் கத்துக்குறது மட்டுமில்லாமல் அதை எங்க பயன் படுத்தணுமோ அங்கேயெல்லாம் பயன் படுத்தணும்” அப்படீன்னு எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த B.M. Sankaran சார் சொல்லியிருக்கார்.. என் செல்ல மகள்கிட்டே அந்த “Immediate Application of Fact" பார்த்த உடனே.. மனசு பூரிச்சிப் போயிருச்சி...

oOo oOo oOo

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. எங்கள் ஊர் மயிலாடுதுறையில் 36 வார்டுகள் உள்ளன. அங்கிருக்கு கவுன்சிலர்கள் சிலர் நல்லவர்கள் .. நண்பர்களெனினும் எல்லாவற்றிலும் கமிஷன் அடிக்கும் மனப்பாங்கு வந்துவிட்டது..

”ஊழலற்ற உள்ளாட்சி “ அமைக்கணும்னா, கை சுத்தமானவங்க, அரசியல்ல சம்பாதிக்கணும் என்ற தேவையில்லாதவங்க தேர்தலில் போட்டி போடவேண்டும்.. எனக்கு உடனே நினைவுக்கு வந்தவங்க இரண்டு பேர்..

முதலில் மூர்த்தி அண்ணனுக்கு ஃபோன் பண்ணி...”அண்ணே .. நல்ல உள்ளாட்சி அமையணும்னா, நாமெல்லாம் ஒதுங்கி நிக்கக் கூடாதுண்ணே.. நம்ம குடும்பத்துலேருந்து அருணை ஏதாவது ஒரு வார்டுல நிப்பாட்டுங்கண்ணே..”
என்றேன்..

அருணுக்கு 23 வயதாகிறது.. பொறுப்பான பையன்.. சிவில் எஞ்சினீயரிங் டிப்ளமோ முடித்துவிட்டு கட்டிட மேற்பார்வைப் பொறியாளனாக இருக்கிறான்

“அதெல்லாம் ச்சின்னப் பையன்.. அவனையெல்லாம் அரசியல்ல இறக்கினால் வீணாப் போயிடுவான் ராஜா..!!”

என்று முதலில் மறுத்தார்..

”அப்படி அருணை நீங்க நிக்க வெக்கலேன்னா.. நான் நம்ம அப்பாவைத் தேர்தலில் நிக்க வெக்க வேண்டி வரும்..”

அப்பாவுக்கு 94 வயது...

“ஐய்யய்யோ.. அப்பாவையா..?”

“ஏன் !! இப்ப கலைஞர் நிக்கலையா.. அப்பா நிக்கட்டுமே..” வீம்புக்குத் தான் கூறினேன்..


கடைசியில் அருணே நிக்கட்டும் என்று முடிவாகி, மயிலாடுதுறை நகர்மன்ற 4 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக வைரம் சின்னத்தில் அருண் போட்டியிடுகிறான்....

வெற்றியோ தோல்வியோ.. பொருட்படுத்தவில்லை.. “நமக்கு நல்லது செய்யும் மனிதர்கள் நகர் மன்றத்தில் வரவேண்டும் “ என்று மக்கள் விரும்பினால், அவர்கள் தேர்வு செய்ய ஒரு நல்ல வேட்பாளர் தேவை.. மற்றபடி வாக்களிக்க வேண்டியது மக்கள் பொறுப்பு..


நான் கூப்பிட்ட இன்னொரு நண்பர், மயிலாடுதுறையின் பிரபல பதிவர் மற்றும் அவர் மனைவி..
“நீ கழகத் தோழன் ராஜா.. உன்னை சுயேச்சையா நிக்கச் சொல்ல எனக்கு மனசில்லை.. அதுவும் ஊழல் செய்ய மாட்டாய் என்பதிலும் நம்பிக்கையில்லை... எனவே உன் மனைவியை சுயேச்சையா நிக்க வை ராஜா..” என்று சொல்லியும்...”இதே.. முனிசிபாலிட்டி போயிட்டேயிருக்கேன் அண்ணே..” என்று சொல்லி டபாய்த்த என் அன்பிற்கினிய இளவலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...



oOo oOo oOo

1980 களின் இறுதியில்...

மயிலாடுதுறையில் ஒரு காதல் கதை...

அப்பல்லாம் ஒரு பையனுக்கு ஒரு சட்டை தைக்க வேண்டும் என்றால் எப்படியும் 100 ரூபாய் செலவாகும்.. எப்படியும் சட்டைத்துணி டீஸண்டா மீட்டர் 50 ரூபாய்க்கு எடுத்து.. முழுக்கை சட்டைக்கு 1.75 மீட்டர் துணி எடுத்தால் 90 ரூபாய் துணி மட்டுமே... தையல் கூலி 30 ரூபாய் கொடுத்தால் ஒரு சட்டையின் அடக்க விலை 120 ரூபாய் ஆகலாம்.. அதுவும் விருப்பப்பட்டவர்களுக்கு எடுக்கும் போது கொஞ்சம் ஹை குவாலிட்டியாக எடுக்க வேண்டும் என்பது வேறு...


என் நண்பன் என்னுடன் கல்லூரியில் படித்தவன். அவனுக்கு ஒரு காதலி.. அற்புதமான பொருத்தமுள்ள ஜோடி என்றால் அப்பொழுதெல்லாம் அந்த ஜோடியைத்தான் குறிப்பிடுவேன். இரண்டு பேருக்குமே நான் வேண்டப்பட்டவன் என்பதாலும் அவர்களின் காதல் எனக்கு ரொம்ப தெரிந்த விஷயமென்பதாலும் அவர்கள் இருவரின் புலம்பல்களையுமே இரண்டு பக்கமும் கேட்க வேண்டிய வெட்டி வேலை எனக்கு !!

நண்பரின் காதலி மயிலாடுதுறையிலிருந்து அருகில் உள்ள ஒரு இருபாலர் கல்லூரியில் இளநிலை வகுப்புகள் படித்துக் கொண்டிருந்தார்.. வீட்டிலிருந்து கல்லூரிக்கு வ்ர நகரப் பேருந்தில் தான் வரவேண்டும். போக வர பேருந்து கட்டணம் 40 + 40 என்பது காசுகள்.. அந்தப் பெண்ணுக்கு வீட்டில் தினமும் இரண்டு ரூபாய்கள் கைச்செலவுக்காகத் தருவார்கள்.. பேருந்து கட்டணம் 80 காசுகள் போய்விட்டதென்றால், மீதியுள்ள் ரூ 1.20 ல் டீயோ , காபியோ அல்லது நொறுக்குத் தீனியோ வாங்கித் தின்னலாம் என்பதால் அந்த இரண்டு ரூபாய்களுக்கு வீட்டில் கணக்குச் சொல்ல வேண்டியதில்லை..

இப்படியிருந்த நாட்களில், நண்பனின் பிறந்த தினத்துக்கு ஒரு விலையுயர்ந்த முழுக்கை சட்டை அந்தப் பெண் வாங்கிப் பரிசளித்தாள்.. எப்படியும் அந்தச் சட்டை ரூ 150 பெறுமானமுள்ளது.. அதனை அவள் வாங்க வேண்டுமென்றால் தினமும் ரூ 1.20 மாதிரி 125 நாட்களுக்குச் சேமித்து வாங்க வேண்டும். தினமும் இவ்வாறு சேமித்து இதற்காகவே காபி, டீ, நொறுக்குத்தீனி போன்ற சமாச்சாரங்களைத் தவிர்த்து காதலனின் பிறந்த நாளையே தினமுன் நினைத்துக் கொண்டு சேமித்து வாங்க முடிந்ததென்றால்.. அது எவ்வளவு ஒரு உயர்வான காதல்...


இது ஒரு மிக மிக சிறிய நிகழ்ச்சி தான்.. அவர்கள் வாழ்வில் நான் இதை விட பெரிய்ய தியாகங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.... இவையும் காதல் தான் என்று பார்த்து வளர்ந்த என்னிடம்... ஒரு மூத்த பதிவர் ஒருவர்...

டெஸ்டோஸ்டெரோனும், ஈஸ்ட்ரோஜென்னும் உடம்பில் உண்டாக்கும் அர்ஜ். வெளிப்படற விதத்தை காதல்ன்னு சொல்றோம். அந்த ரெண்டு சுரப்பிகள் சுரப்பது நின்னு போய்ட்டா காதல் என்று அழைக்கப்பட்ட சமாச்சாரம் டிப்பெண்டன்ஸாவோ, சுமையாவோ மாறிடும்!”

என்று காதலுக்கு வியாக்கியானம் கொடுத்தாரென்றால்..”அவரால் காதலைப் புரிந்து கொள்ள முடியாது..” என்பது தெளிவாகிறது.. அதையும் மீறித் தனக்குப் புரியாதவற்றை வரையறை செய்ய முயலும் அவரது பிடிவாதத்தை விவாதங்களினால் வெல்லவும் முடியாது...

இப்படித்தான் காதலை விளக்க முடியுமென்றால், அலுவலக வேலை என்பது வெறும் பொருளாதாரம்.. அம்மா அப்பா என்பது வரலாறு.. அது புவியியல், இது வேதியியல், மனைவி என்பது மனையியல் என்று ரொம்ப அறிவியல்தனமாக எல்லாவற்றையுமேச் சொல்லிவிடலாம்.. பொண்டாட்டி மேல் வெக்கிற அன்பு கூட ஏதோ ஒரு ஹார்மோன் தான்.. அம்மாமேல வெக்கிற அன்பும் ஹார்மோன் தான்.. புள்ளக்குட்டிங்க கூட ஒரு விதமான் வேதிவினை தான்.. இந்த மாதிரி பேசறவங்க பெரும்பாலும் சுஜாதா ரசிகராயிருப்பாங்க..சான்ஸ் இருக்கு !!


நண்பரின் இந்த வயதிலாவது (ரொம்ப ரொம்ப மூத்த பதிவரு அவரு..) அவருக்கு முதல் மரியாதை சிவாஜி லெவலில் ஒரு காதல் அமைந்து.. இன்னும் சில வருடம் கழித்து..”சீமாச்சு.. நீங்க சொன்னது உண்மைதான்.. எனக்கு இப்பத்தான் இதை என் ‘குயிலு’ புரியவெச்சா.. அருமையான ஒரு காதலைப் புரிந்து கொள்ள இந்தப் பிறவியிலேயே வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி..” அப்படீன்னு அவரு பின்னூட்டம் போடக் கடவது என்று அவரை வாழ்த்துகிறேன்...

Sunday, September 25, 2011

129. கலைஞருக்கு சூர்யாவின் மூன்று கேள்விகள் !!!

நாலாங்கிளாஸ் படிக்கும் சூர்யாவிற்கு ஹோம் வொர்க்.. அவள் வகுப்பில் கொடுத்தது...

உலக செய்தி ஒன்றைப் படித்து அதைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைய வேண்டும்.. அது தவிர அந்த செய்தி பற்றி யாரிடமாவது நேர்முகம் செய்யும் போது அவரிடம் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் எழுத வேண்டும்..

நான் சிறு வகுப்புகளில் படிக்கும் காலங்களிலெல்லாம் உள்ளூர் செய்திகளையே நான் படிக்க வாய்ப்பு கிடைக்காது.. ஆசிரியர்கள் மட்டுமே தினமணியையும், தினத்தந்தியையும் படிப்பதைப் பார்த்திருக்கிறேன். நான் படித்த பள்ளியில் ஆங்கிலச் செய்தித்தாள் படித்த ஆசிரியர்களைப் பார்த்ததாக நினைவில்லை.. ஒரு வேளை ஆங்கில செய்தித்தாள்களின் விலையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம.. மற்றபடி எனக்கு போதித்த ஆசிரியர்களின் தன்முனைப்பையும், அறிவுத் திறனையும் விமரிசிக்கும் தேவை எனக்கு இல்லை...


ஹோம் வொர்க் செய்வதற்காக வலையில் தேடி அவளே மேய்ந்து தேர்ந்தெடுத்த் செய்தி..

கடந்த காலத்தில் தான் ஆட்சி செய்து.. பல ஊழல்களால் தன் பெயரையும் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் (இரண்டும் ஒன்றுதானோ..) பெயரையும் மாசு படுத்தி.. தனது சொந்த மக்களாலேயே மிக மோசமான நிலையில் தோற்கடிக்கப்பட்டு ஒளிந்திருக்கும் ஒரு தலைவர் பற்றியது..

உலகளவில் அவரைப்பற்றிய இந்த செய்தியின் குறிப்பை நாலே நாலு வரியில்
”ஓடி ஒளிந்து கொண்ட ஒரு தலைவர்..” என்ற குறிப்பில் அழகாக எழுதினாள்..


அந்தத் தலைவரிடமே அவரை நேர்முகம் செய்யச் செல்லும் போது கேட்க வேண்டிய கேள்விகளாக அவள் எழுதியது என்னை வியப்பில் ஆழ்த்தியது..

மிக நேர்மையான கேள்விகள்..!! அவள் படித்த் செய்திகளில் அவளது புரிந்துணர்வை வெளிப்படுத்தும் கேள்விகள்...!!


1. கலைஞரே.. உங்கள் (தமிழ்) மக்களிடமிருந்தே நீங்கள் மறைந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏன் வந்ததென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?


2. கலைஞரே, உங்களை 5 முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய தமிழக மக்களே.. “நீங்கள் ஆண்டது போதும்.. இனியும் நீர் தேவையில்லை” என்று உங்களை ஒதுக்கி வைத்தது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... அதற்கு நீங்கள் எவ்வாறு காரணமானீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?


3. கலைஞரே.. நீங்களே இத்தனை முறை ஆண்டது போதாதா..? உங்கள் மக்கள் அவர்களுக்கான மாற்று தலைவரை வேண்டும் போது, அவர்களின் ஆசைக்குட்பட்டு வழிவிட்டு வேறு தலைவரை அவர்களுக்கு வழங்குவதில் உங்களுக்கென்ன தடை..?



சூர்யா எழுதிய கேள்விகளென்னவோ லிபிய அதிபர் கஃடாபிக்கானது.. அவை கலைஞருக்கும் பொருந்துவது போல் பொருத்தி எழுதியது என் கற்பனை :)



Thursday, July 28, 2011

126. என்ன தான் செய்யறது இவங்களை !!

கம்பியூட்டர் துறைக்கு வந்த பிறகு நிறைய்ய பேர் நம்மகிட்டே வேலை வாங்கித் தரச்சொல்லி உதவிக்கு வருவாங்க. அப்படி நிறைய்ய பேருக்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.. அதற்குப் பின்னர் வாழ்வில் உயர் நிலைக்குச் சென்ற பின்னர் நன்றியுடன் நினைவு கூர்ந்தவர்கள் சிலர்.. கண்டுக்காமல் போனவர்கள் பலர். உதவி செய்யும் போதே எதையும் எதிர்பார்க்காமல் செய்துவிட்டு அப்படியே மறந்தது போல் இருந்து விடுவதால் எதுவும் பாதித்ததில்லை.. அதெல்லாம் வேறு.. இன்றைக்கு ஒரு அனுபவம்.. இது போன்ற அனுபவங்கள் எனக்குப் புதிதில்லையாதலால், இது போன்ற மற்ற அனுபவங்களையும் தொகுத்து இங்கு எழுதலாம் என்று தான். இது போன்று நிறைய எழுதலாம் .. சில மட்டும் இங்கே.. இன்றைய அனுபவம் கடைசியில்..

oOo oOo oOo

1980 களின் ஆரம்பத்தில் “நீங்க பாக்குற கம்பெனியிலேயே இவனுக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்களேன் ..” ரெகமண்டேஷன் வந்த்து மிக நெருங்ங்ங்ங்கிய தோழியிடமிருந்து. வேறொரு விஷயத்தில் என்னிடம் போட்டியிலிருந்து கௌரவமாக விலகிவிட்டிருந்தபடியால் நானும் உதவ வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணின் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்..” என்பது இந்த விஷயத்தில் அந்தப் பையன் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்க வில்லை..

பையன் அப்பொழுது தஞ்சை அருகில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் MSc கணிதம் முடித்துவிட்டு கம்பியூட்டரில் ஏதோ டிப்ளமாவும் பெற்றிருந்தார். தகுதிகளைப் பொறுத்து அவர் எல்லாம் பெற்றிருந்ததால் நான் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலைக்குச் சொல்லியிருந்தேன். அப்பொழுதெல்லாம் Aptitude Test என்று ஒன்று வைப்பார்கள். கணிதத்திலும், லாஜிக்கிலும் மொத்தம் 40 கேள்விகள் கேட்பார்கள். நானும் அந்தத் தேர்வு எழுதியவன் தான். 20 பசங்களோடு தேர்வு எழுதி முடிவுக்காக பதற்றத்துடன் காத்திருந்த போது.. அவர் ஆபீஸ் ரூமிலிருந்து MD யே எழ்ந்து வந்து என்னைத் தேடிப் பிடித்து.. ’உடனே பிடி வேலையை..இன்னிலேருந்து உனக்குச் சம்பளம்” என்று தேர்வானவன் (சுயபுராணம் கொஞ்சம் ஓவர் இல்லே !!) இது நடந்தது 1988ல்..

இப்போ இந்தப் பையன் கதைக்கு வருவோம்.. Aptitude Test கேள்விகளின் தரம் எனக்குத் தெரிந்திருந்ததால் அதே போல் 50 கேள்விகளை புத்தகங்களிலிருந்து தொகுத்து அவரிடம் கொடுத்து ”டெஸ்ட்டுக்கு இதெல்லாம் படிச்சிட்டு வந்திரு ராஜா.. இண்டர்வியூவிலே நீ சாதாரணமாப் பண்ணினாப் போதும் நான் எம்.டி கிட்டே சொல்லிடறேன்” என்று சொல்லியாகிவிட்டது..

அது ஆச்சு ஒரு மாசம்.. ஒரு நாள் அவருக்கும் கம்பெனியிலிருந்து கடிதம் போய் அவர் டெஸ்ட்டுக்கும் இண்டர்வியூவுக்கும் தஞ்சையிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டார். நான் தங்கியிருந்த கோட்டூர்புரம் அறையிலேயே தங்கியிருந்துவிட்டு காலையில் டெஸ்ட்டுக்கு என்னுடன் கிளம்ப வேண்டியது.

முதல் நாள் இரவு மணி 11 இருக்கும்.. தூங்கப் போற நேரம்..

“சீமாச்சு.. ஒரே ஒரு சந்தேகம்” என்றார்....

“என்ன ராஜா.. என்ன விஷயம்?”

“நீங்க கொடுத்த் 50 கணக்குல 40 கணக்கு தெரியும் .. ஒரு பத்து கணக்கு மட்டும் எப்படி போடறதுன்னு தெரியலை.. கொஞ்சம் சொல்லித் தர்றீங்களா?”

Aptitude Test கணக்கெல்லாம் ஒன்றும் கடினம் இல்லை.. அதிக பட்சம் 8ம் வகுப்பு 9ம் வகுப்பு (சமச்சீர் இல்லை.. அப்போதைய தமிழக அரசு பாடத்திட்டம்) தரத்தில் தான் இருக்கும். அதுவுன் 50 கேள்விகள் கொடுத்து 1 மாதத்துக்கும் மேலே ஆயிடிச்சி. இவரோ கணிதத்தில் MSc வேறு. இவருக்கே தெரிந்திருக்க வேண்டும் .. இல்லையென்றால் அங்கேயே ஒரு பள்ளி கணக்கு வாத்தியார்.. இல்லேன்னா ஹையர் செகண்டரியில் நல்ல ஸ்டூடண்டாப் பார்த்து கேட்டிருந்தால் மொத்தம் 10 நிமிஷத்துல சொல்லிக்கொடுத்திருப்பாங்க....

“என்ன ராஜா.. நான் கொடுத்து 1 மாச மாச்சே.. இன்னுமா சந்தேகம்.. இந்த மாதிரி கடைசி நிமிஷத்துல கேட்டா எப்படி? “ எனக்கு வேலை முடிந்து வந்த அசதி வேறு.. தூக்கம் கண்ணை சுழற்றியது..

“எப்படியும் டெஸ்டுக்கு முன்னாடி உங்களைப் பார்க்கப்போறேன்.. அதனால உங்க கிட்டேயே கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்..”

இவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்ட அந்த அழகிய விழியாள் நினைப்பில் அன்றிரவு தூக்கம் கோவிந்தா!!

டெஸ்ட்டும் நன்றாக எழுதினார்..

எம்.டி யுடன் இண்டர்வியூவுக்குப் போனார்..

அவர் முடித்து வந்தவுடன் கேண்டிடேட்டைப் பத்தி எம்.டி என்ன நினைக்கிறார் என்று அறிவதற்குப் போனேன்..

“என்ன அருண்.. இவர் எனக்கு ‘ரொம்ப’ வேண்டியவர்.. இண்டர்வியூ எப்படிப் பண்ணினார்?”

“டெஸ்ட் நல்லா எழுதியிருந்தார்.. மத்தபடி அவருக்கு ஒண்ணுமே தெரியலையே.. நான் கேட்ட மொத்தம் 10 கேள்விக்கும் சரியா பதில் சொல்லலையே.. என்ன பண்றது..”

“கொஞ்சமாவது தேறுவாரா..?” - எவ்வளவு தப்போ அவ்வளவுக்கு சம்பளத்தைக் குறைச்சிக்கிட்டு வேலை கொடுக்கலாமே என்று நான் தருமி பாணி போஸில் கேட்டேன்..

“வாசன்.. என்னைக் கேட்டால் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்.. ஆனால் உனக்காக வேண்டுமானால் செய்கிறேன்.. இந்த முடிவை நீயே எடு.. நீயே எடுத்துக் கொள் அவரை.. உன் டீமிலேயே போட்டுக்கொள்.. எனக்கொன்றும் பிரச்சினையில்லை.. Its your call.." என்று என்னிடமே முடிவைத் தள்ளிவிட்டார்.


“ஒரு 5 நிமிஷம் டைம் குடு அருண்.. நான் யோசிச்சிட்டு வந்து சொல்றேன்..” என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்..

10 நிமிஷம் கழித்து எம்.டி கூப்பிட்டு அனுப்பினார்..

"What did you decide?"

"Lets leave him.. We will get a better candidate.." என்று சொல்லிவிட்டு பையனைப் பேக் பண்ணி தஞ்சாவூர் அனுப்பிவிட்டேன்..

அதற்குப் பிறகு யார் சிபாரிசிலோ கணக்கு ஆசிரியராக (!!) தஞ்சையில் பணியாற்றிவிட்டு.. அப்புறம் அடித்த சுக்ர தசையில் அரபு நாட்டில் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறார் அண்ணன் இப்பொழுது..

oOo oOo oOo

அதே கம்பெனி.. அதே மாதிரி வேலை.. அதே மாதிரி டெஸ்ட்.. இப்ப வந்தது ஒரு மயிலாடுதுறை பையன். எனக்கு ஒரு வருஷம் ஜூனியர் பள்ளியில். வளர்ந்ததெல்லாம் ஒரே தெரு வேறு..

முதல் நாள் இரவு என் அறைக்கு வந்து தங்கியவன் என்னிடமிருந்து எல்லாம் கேட்டுக் கொண்டான். பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் முதல் 3 ரேங்குகளுக்குள் வந்தவன் என்பதால் இவனிடம் பெரிய்ய பிரச்சினை ஒன்றுமிருக்கவில்லை.. எப்படியெல்லாம் இண்டர்வியூவில் பதில் சொல்ல வேண்டும் என்று எல்லாம் சொல்லிக்கொடுத்த பின்பு நான் தூங்கப் போகும் போது மணி இரவு இரண்டு..

காலை எழுந்தவுடன் காபியெல்லாம் குடித்துவிட்டு “என்னுடனேயே கம்பெனிக்கு வந்து விடேன்.. அங்கேயே உட்கார்ந்து நீ prepare பண்ணலாம் “ என்றதற்கு..

“12 மணிக்குத் தான் டெஸ்ட். நீ முன்னால.. போ .. நான் வந்துடறேன். மவுண்ட் ரோடு தானே..எனக்கு எல்லாம் தெரியும்..”

“சரி .. நல்லாப் படி.. நல்லா பண்ணு.. இண்டர்வியூ முடிச்சிட்டு வையிட் பண்ணு.. சேர்ந்தே போய்ச் சாப்பிடலாம்..”

மதியம் கம்பெனியில் தேர்வு அறையில் தேடிய போது ஆளைக் காணவில்லை.. என்ன ஆச்சி என்று கவலையில் இரவு வீட்டுக்கு வந்த போது.. அறைத்தோழன் பாலு...

“உன் ஆளு ஏதோ லெட்டர் கொடுத்திருக்கான்யா.. உனக்கு.. மத்யானம் அவனைக் கொண்டு போயி மயிலாடுதுறைக்கு பஸ் ஏத்தி விட்டு வந்துட்டேன்யா.. “ என்றான்..

கடிதத்தில்.. “உன் உதவிகளுக்கு நன்றி.. எனக்கு இண்டர்வியூ பத்தி ரொம்ப பயமாயிருக்கு.. எனக்கு இந்த வேலை வேண்டாம்.. நான் மாயவரம் போறேன்..” என்று இரண்டு வரி..

அதற்குப் பிறகு நண்பர் வங்கித்தேர்வு எழுதி ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக 20 வருடங்களாகக் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்..

oOo

இன்னும் மூன்று அனுபவங்கள்.. மற்றும் இன்றைய அனுபவம்.. எல்லாம் இருக்கு.. பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால் அவை நாளை தொடரும்.. நிச்சயமா..



திண்டுக்கல் நகராட்சியில் 12 லட்ச ரூபாய் செலவில் நீருற்றாம்.. நகராட்சி பள்ளிகளெல்லாம் கட்டடங்களும், கழிப்பறைகளும், வகுப்பறை வசதிகளுமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போது 12 லட்ச ரூபாய் செலவில் நீரூற்று அமைத்த அந்த நகராட்சி நிர்வாகத்தை என்ன சொல்வது????

Sunday, July 17, 2011

125. ஜெய் பத்மநாபா !! ஜெய் பத்மநாபா !!

”சீமாச்சு அண்ணன் இருக்காங்களா ?” - என் செக்ரட்டரியின் ஃபோனில் ஒரு பழக்கப்பட்ட குரல் ஒலித்தது..

“யாருங்க நீங்க..? திருப்பதி பாலாஜி சாருங்களா?”

“ஆமாம்.. அண்ணன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...”


“அண்ணன் இப்போ இன்னொரு முக்கியமான புது கஸ்டமர் கிட்டே பேசிட்டிருக்காங்களே.. இன்ஸ்டண்ட் மெஸஞ்சர் ல கூட ’டூ நாட் டிஸ்டர்ப்’ ரெட் லைட் எரியுதுங்களே..”

“நானும் பார்த்தேன்.. யாரு அது புது கஸ்டமர்?”

“இருங்க... பார்த்து சொல்றேன்.. ட்ரிவேண்ட்ரத்துலேருந்து பத்மநாப ஸ்வாமிகிட்டே பேசிட்டிருக்கார்..”

“ஆஹா...”

“அவரு முடிச்ச உட்னே உங்க கிட்டே பேசச் சொல்றேன்.. சாரிங்க.. ரொம்ப பிஸி இப்ப..”

oOo oOo oOo

இங்கே என்னுடன் பேசிக்கிட்டிருந்தார்.. பத்மநாபஸ்வாமி..

“ராஜா..என் பொக்கிஷங்களெல்லாம் இப்ப வெளியில கொண்டு வந்துட்டேன்.. நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்..எங்க அண்ணன் பாலாஜி அட்டகாசம் தாங்க முடியலை... என்னவோ பெருசா 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வெச்சிகிட்டு ரொம்ப அலம்பல் பண்ணிக்கிட்டிருக்காரு..”

“ஆமாண்ணே.. இங்க அமெரிக்காவுல எல்லாம் அவரு கோவில் தாங்க.. உலகளவுல பார்த்தா அவருக்கு ஒரு 500-600 கோவில் தேறும்ணே...” - இது நான்.




”அதான் நானும் பார்த்தேன்.. நமக்கு தேவலோகத்துல செலவாக்கு அதிகம்.. பூலோகம் இது வரை அண்ணன் கையில இருந்திச்சி.. இனிமே இங்கேயும் நம்ம கொடி நாட்டியாகணும் சீமாச்சு..”

“செஞ்சிருவோம்ணே.. நீங்களே என்னைத் தேடி வந்துட்டீங்க.. நானும் இனி உங்க அணியிலே சேர்ந்துடலாமாண்ணே..”

“வா ராஜா !! நீ தான் முதல்.. இனிமே நீதான் இங்க எல்லாத்தையும் பார்த்துக்கணும் சீமாச்சு..”

”ரொம்ப நன்றிண்ணே... வேற யார்கிட்டயாவது பொறுப்புகள் கொடுத்திருக்கீங்களாண்ணே..”

“இன்னும் இல்லே சீமாச்சு.. நீயே பார்த்து உன் அணியைத் தேர்ந்தெடுத்துக்க..”

“நீங்களே சொல்லிட்டீங்களில்லேண்ணே.. இனி அடிச்சு தூள் கெளப்பிடலாம்.. அப்புறம் நம்ம பாலாஜி அண்ணன் ஒண்ணும் பிரச்சினை பண்ண மாட்டாருங்களேண்ணே ?”

“நீ .. அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே சீமாச்சு.. நான் பார்த்துக்கிறேன்..”

“இல்லண்ணே.. இங்க தமிழ் நாட்டுல இருக்கிறமாதிரி ஏதாவது ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி சகோதரச் சண்டை மாதிரி ஏதாவது நடந்திடப் போவுது..”

“அதல்லாம் இல்லாம நான் பார்த்துக்கிறேன் சீமாச்சு...”

“அப்புறம் ஒரு சந்தேகம் பத்மநாபண்ணே..”

“சொல்லு சீமாச்சு.. எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வெச்சாப் போச்சு...”

“இங்க பூலோகத்துல இருக்குற 5 கோடி ஜனங்கள்ல என்னை எப்படி அண்ணே செலக்ட் பண்ணினீங்க?”

“நீ பொறக்கும் போதே உன்னை செலக்ட் பண்ணிட்டேன் சீமாச்சு.. உன்னை கொஞ்ச நாள் ட்ரையினிங் அனுப்புவோமுன்னு தான் பாலாஜி அண்ணன் கிட்டே இருக்கச் சொன்னேன்.. அப்புறம் உனக்கு 11, 12 ம் வகுப்புகள் -ல கெமிஸ்ட்ரி பாடம் எடுத்தவரு பேரு என்ன நினைவிருக்கா?”

“இருக்குண்ணே.. நன்ன கே.பி சாரு.. மாயவரம் நேஷனல ஹையர் செகண்டரி ஸ்கூல் ..”

“அவரு முழு பேரு என்ன?”

“கே. பத்மநாபன்..”

“உனக்கும் எனக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகணும்னு தான் நான் உனக்கு மட்டும் அவரு ரூபத்துல தெரிஞ்சேன்.. உன் வாழ்க்கையிலே எல்லாமே எழுதப் பட்ட விதி தான் சீமாச்சு...”
”ரொம்ப நன்றி பத்ம்நாபண்ணே.. அப்புறம்...”

“என்ன வேணும் சீமாச்சு..?”

“இந்த ‘தென் மண்டல அமைப்பாளர், துணைப் பொதுச் செயலாளர், கழகப் பொதுச் செயலாளர்’ மாதிரி பதவியாக் கொடுத்திருங்கண்ணே..”

“தென்மண்டலம் என்ன ராஜா.. தென்மண்டலம்.. இனி நீதான்.. இந்த பத்மநாபனுக்கு அகில உலக ஒருங்கிணைப்பாளர்..”

“அப்புறம்.. துணைமுதல்வர்.. முதல்வர் பதவியெல்லாம் உண்டில்லையாண்ணே..”

“தாராளமா.. ராஜா.. இப்பல்லாம் ஜூலையில பொதுக்குழு வெக்கிறதுதான் ஃபேஷன்.. ஜூலை 20 உன் பிறந்த நாள் அன்னிக்கு தேவலோகத்துல பொதுக்குழு வெச்சிருக்கேன்.. முப்பத்து முக்கோடி தேவர்களும் வருவாங்க.. பொதுக்குழுவுல உன்னை என் பூலோக வாரிசாகவும்.. அகில உலக ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிச்சிடறேன் ராஜா..”

“சரீண்ணே.. அங்கே கேரளாவுல உங்க தொண்டர் பத்மநாப அரசர் வாரிசெல்லாம் ஏதாவது தகராறு பண்ணிடப் போறாங்கண்ணே..”

“கவலைப் படாதே சீமாச்சு.. அவங்களுக்கெல்லாம் வயசாச்சி.. எல்லோரையும் தேவலோகத்துல பதவி கொடுத்து ப்ரமோட் பண்ணிடறேன்..”

“ரொம்ப சரீண்ணே.. அப்ப இந்த மாசம் இருபதாம் தேதி என் பிறந்தநாள்லேயே உங்க அகில உலக ஒருங்கிணைப்பாளரா பதவி ஏத்துக்கறேன் அண்ணே.. அப்படியே கொஞ்சம் கேஷ் என் அக்கவுண்ட்ல போட்டுடுங்க.. கழகப் பணிக்குத் தேவைப்படுது..”

“சரி ராஜா... இப்ப சில்லரையா 50 ஆயிரம் கோடி ரூபாய் போட்டுடறேன்.. அப்புறம் எல்லாம் உனக்குத் தானே..”

சொல்லிவிட்டு மறைந்தார் பத்மநாபஸ்வாமி..

மூடியிருந்த கையை விரித்துப் பார்த்தால்.. கையில் துளசி தளங்களும் தீர்த்தமும் .. அத்துடன்.. “ஜெய் பத்மநாபா” என்று ஒரு துண்டுச்சீட்டும் இருந்தன..

oOo oOo

ஆகவே பக்தர்களே.. கழகப் பணி ஆரம்பித்தாகிவிட்டது.. அமெரிக்காவில் முதல் ஒரிஜினல் பதமநாப ஸ்வாமி கோவிலாக என் வீட்டிலேயே ஸ்வாமி ஆவாஹனம் செய்யப்பட்டது.. பக்தர்கள் தரிசிக்க வரலாம்... ஸ்வாமி அருள் பெறலாம்... வேறெங்கிலும் கிளைக் கழகங்களோ, கோவில்களோ துவக்கப்பட வேண்டுமென்றால், முறைப்படி என்னிடம் தலைமைக் கழகத்தில் பதிவு செய்து ஆரம்பிக்கலாம்..

“ஜெய் பத்மநாபா !! ஜெய் பத்மநாபா !!”

பின்னூட்டம் போடுபவர்களுக்கு ”அகில உலக பத்மநாபர் பக்தர் முன்னேற்றப் பேரவை” உறுப்பினர் கார்டும் .. தகுதிகளுக்கேற்றாற் போல் வாரிய பதவிகளும் வழங்கப்படும்..


Wednesday, July 13, 2011

124. இந்த பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலப்பா !!

நம்ம அண்ணன் கவிஞர் வாலிகிட்டே படிச்சிப் படிச்சிச் சொன்னேன்.. எதுவாயிருந்தாலும நமக்குள்ள இருக்கட்டும்.. நீங்க பாட்டுக்குப் பத்திரிகையில எல்லாம் எழுதிடாதீங்கன்னு.

கேக்குறாருங்கிறீங்க !! எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டேங்குறாரே..

என்னையும் என் பொண்ணப் பத்தியும் விகடன்ல வேற எழுதிட்டாரு.. இனிமே வாசகர்கள் தொல்லை தாங்க முடியாது..



இந்த விளம்பரமே.. நமக்குப் புடிக்காதுன்னு சொன்னால் யாருமே.. கண்டுக்க மாட்டேங்குறாங்கப்பா !!!

Monday, July 04, 2011

123. கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி !!!

மதுமிதாவை எனக்கு ரொம்ப நாளாத் தெரியும்..

ரொம்பநாளான்னா.. ரொம்ப நாள்..

பிறப்பதற்கு முன்னாலிருந்துன்னு கூடச் சொல்லலாம்.. ஏன்னா, மது அவங்க அம்மா ஜெகதீஸ்வரி வயிற்றிலிருந்த போது எடுத்த ஸ்கேன் போட்டோவை அவங்க அப்பா கோவிந்தா காட்டிய நாளிலிருந்து தெரியும்..

நான் வேலைக்குப் போன பின் நான் மிகவும் அன்பாக நேசித்த எனது மகள் போன்றவள் மது.

மது மீது நான் கொண்ட பாசம் காரணமாகவோ என்னவோ எனக்கும் பெண்குழந்தைகள் பிடிக்கும் என்றுதான் ஆண்டவன் எனக்கு 3 மகள்களைத் தந்தானோ என்று கூட சமயங்களில் நினைப்பதுண்டு..


oOo oOo oOo

அமெரிக்காவில் மதுவுக்கு இரண்டு வயதாகும் போதெல்லாம் நானும் மதுவீட்டில் வளைய வருவேன்.

“வாத்தன் மாமா..” என்பது தான் அப்பொழுது அவள் கூப்பிடும் பெயர்.. “வாசன்” என்பதன் மழலை அது..

எப்பொழுதும் அம்மா அப்பா சொன்னதைத் தவறாமல் கேட்கும் குழந்தை அவள். இரண்டு வயதில் வாயில் விரல் போட்டுச் சப்பும் பழக்கம் உள்ளவ்ள்..

நான் பார்த்துவிட்டு..” மதூ.. வாயில விரல் போடக்கூடாது..” என்று சொன்னால் உடனே விரலை எடுத்து விடுவாள்.. ஆனால் 5 வினாடிகளில் மறுபடியும் அவள் கட்டைவிரல் அவள் வாயில்..

தனக்கு சரியென்று பட்டதை விடாமல் செய்யும் குணம் அவளுக்கு உண்டு.. அதே நேரத்தில் பெரியவர்களின் சொல்லுக்குக் கட்டுப்படும் குணமும் அதிகம். இரண்டுக்கும் இடையில் உள்ள சாமர்த்தியமான பேலன்ஸ் அவள் சாதுர்யம்..

மூன்று வயதில் அவளை க்ரீன்ஸ்பரோவில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள் அவள் பெற்றோர்.. ரொம்பத் தெளிவாக “வாத்தன் மாமா வந்தாத்தான் ஸ்கூலுக்குப் போவேன்” என்று சொல்லி விட்டாள்.. அவளுக்காக ஆபீஸை விட்டு வந்து அவளுடன் ப்ரீ கேஜி வகுப்பு அட்டெண்ட் பண்ணிய பெருமையும் எனக்கு உண்டு..

அதற்குப் பிறகு மதுவின் பெற்றோர் குடும்பத்துடன் அட்லாண்டாவுக்கு குடிபெயர்ந்து விட்டனர். அதற்குப்பிறகு 15 வருஷமாக மது அட்லாண்டா வாசி.

oOo oOo oOo

அவ்வப்பொழுது கோவிந்தாவுக்குப் ஃபோன் செய்து மதுவின் முன்னேற்றங்களைக் கேட்டறிந்து கொள்வேன்.

வகுப்பில் எப்பொழுதும் முதலாவதாகத் தேறுவது மதுவின் வழக்கம்.. அவள் ஸ்கூலில் இந்தியன் குழந்தைகளுக்கு நடுவில் அவள் ரொம்ப பாப்புலர்.. அவளது நெருங்கிய தோழி ஒரு சீனப்பெண்.. எல்லா தேசத்தவர்களும் அன்புடன் பழகும் ஒரு ஸ்வீட் பர்சனாலிட்டி மது..


மதுவுக்கு வயலின் வாசிக்கத்தெரியும்...

வீணை வாசிக்கத்தெரியும்..

கர்நாடக சங்கீதம் தெரியும்..

அதெல்லாம் மட்டுமில்லை.. அவள் பரதநாட்டியமும் தேர்ந்து சென்ற ஜூன் 18 அன்று அட்லாண்டா நகரில் ரோஸ்வெல் கல்சுரல் ஆர்ட் செண்டரில் மதுவின் பரதநாட்டிய அரங்கேற்றத்துக்குச் சென்றிருந்தேன்..

மதுவின் இந்தச் சாதனைகளால் அமெரிக்காவின் மிகப் பிரபலமான வாண்டர்பில்ட் யூனிவர்சிடியில் முழு உதவித்தொகையுடன் BS in Child Development படிக்க மதுவுக்கு அனுமதி கிடைத்துள்ளது.. இன்னும் 10 வருடங்களில் மது ஒரு திறமையான குழந்தைகள் நல மருத்துவராக வருவதற்கான முதல் படி இது.

oOo oOo oOo oOo


ஜூன் 18,
அரங்கேற்ற வளாகத்தில் 500 பேர் தமிழ் மற்றும் இந்தியர்கள், அமெரிக்கர்கள் குழுமியிருந்தனர். அனைவரும் மதுவை அறிந்தவர்கள்..

ஒவ்வொருவரையும் கோவிந்தா-ஜெகதா தம்பதியினர் முறைப்படி இல்லத்துக்குச் சென்று தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு பத்திரிகை வைத்து அழைத்து வந்தவர்கள்..

“எனக்கெல்லாம் என்னடா பத்திரிகை.. எப்பன்னு சொல்லு.. வந்திடறேன்..” என்றவனையும் மறுத்து கிட்டத்தட்ட 300 மைலகல் காரோட்டி
குடுமப்த்துடன் என் இல்லம் வரை வந்து வரவேற்றனர்.

மதுவின் நடன அரங்கேற்றம் மிக அருமையாக இருந்தது. ஆரம்பத்தில் அவள் ஆடிய தோடைய மங்கலம்.. ஜெய ஜானகீ ரமண பாட்டுக்கு நான் அப்படியே அடிமை..

இது போல் எட்டு அயிட்டங்கள். சிலப்பதிகாரத்தில் மாதவியின் அரங்கேற்ற நிகழ்ச்சியைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினாள் மதூ...

பிறகு நீண்ட ஒரு வர்ணம், சந்திரசூட ராகமாலிகை கிருதிக்கு நடனம்..ஜெயதேவர் அஷ்டபதியிலிருந்து ஒரு பாடலுக்கு நடனம் எல்லாமே மிக அழகாக அமைந்தது..

திருப்பாவையிலிருந்து “வாரணமாயிரம்” பாட்டின் போது அங்கே மது மறைந்து ஆண்டாள் அப்படியே உருவெடுத்து வந்தாற் போல் பாவனைகள் அவள் முகத்தில் மாறி மாறி அட்டகாசமாக ஆடினாள்.

அவளது ஆட்டத்தின் போது அவளது பெற்றோர் அருகில் நானும் மாமனாக அமர்ந்திருந்தேன்.. மங்களம் பாடி ஆடி முடித்தபோது அம்மா ஜெகதா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.. எனக்கும் ”என் மகள் சாதித்து விட்டாள்..” என்று பெருமையாக இருந்தது..

பெண்ணை பரதநாட்டிய அரங்கேற்றம் வரைக் கொண்டுவருவதென்பது ஒரு பெரீய்ய தவம் மாதிரி.. அதுவும் அமெரிக்கா மாதிரி நாட்டில் திருமதி சவீதா விஸ்வநாதன் மாதிரி ஒரு குரு அமைந்து எந்த வித மனத் திருப்பங்களும் இல்லாமல் 16 வருடங்கள் ஒரே இடத்தில் அமையும் மாதிரி அமைவதெல்லாம் ஆண்டவன் அருள் மட்டுமே..

மதுவின் சாதனைகள் மட்டுமன்றி அவளை இவ்வளவு தூரத்து வழி நடத்திய அவள் பெற்றோர் கோவிந்தா-ஜெகதா தம்பதியரின் முனைப்புக்கும் தவத்துக்கும் இன்னொரு தகப்பனாக நான் தலை வணங்கிறேன்..

எவ்வளவு உழைப்பு இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் என்பதை என்னால் இங்கு எழுத்தில் விவரிக்க முடியாது..



நிகழ்ச்சியின் முடிவில் மதுவைப் பாராட்டி “மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக என் செல்லக்குட்டி மதுவுக்கு இந்தப் பொன்னாடயை அணிவிக்கிறேன்..” என்று சொல்லி பொன்னாடை அணிவித்து மதுவைப் பாராட்டினேன்..

நிகழ்ச்சிக்குப் பிறகு வந்திருந்த விருந்தினர்களி புதிதாக மூன்று முன்னாள் மாணவர்கள் என் பள்ளி சார்பாக என்னிடம் அறிமுகமானது என் பள்ளிக்குக் கிடைத்த கைமேல் பலன்..

நிறைவான இரவு உணவுக்குப் பின் மதுவையும் பெற்றோரையும் மீண்டும் வாழ்த்தி விடைபெற்றேன்..



மதுவைப் பற்றி நினைக்கும் போது எனக்கு இந்த வரி தான் உடனே உதித்தது..

“கிளிஞ்சல்களே உலையரிசி.. இவளல்லவா இளவரசி.. !”

மதூ நிச்சயமாக ஒரு சாதனை இளவரசி தான்.. அவளுடன் பழகியவன்.. அவளது பாசத்துக்குரிய “வாத்தன் மாமா” நான் என்பதில் நானும் மிகப் பெருமையடைகிறேன்...