Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, March 05, 2012

132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் !!

ரொம்ப பாப்புலரான டாபிக். எல்லாப் பத்திரிகைகளும் மாய்ந்து மாய்ந்து எழுதி எழுதி காசு பார்த்த டாஃபிக் தான் இது. ஒவ்வொரு வருடமும் வந்த 52 வார ஆனந்த விகடன்களிலும், 104 வார ஜூவிக்களிலும் அதிக பட்சமாக அட்டைப்படமாக வந்தவர் நம்ம சூப்பர் ஸ்டார் தான். கடந்த 15 வருடங்களில் அதிகமாக தமிழுலகில் விவாதிக்கப்பட்ட விஷயமும் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவது பற்றித்தான்..


ரசிகர்களுக்கு “ரஜினி அரசியலுக்கு வருகிறார்” என்பதை ஒரு மாயையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும், அதனால் மட்டுமே தன்னால் நிறைய்ய சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம், பத்திரிகைகளுக்கும், சினிமாத் தயாரிப்பாளர்களுக்கும், தனக்குச் சம்பளம் தரும் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்காகவே சூப்பர் ஸ்டாருக்கும் இருந்திருக்கிறது. அதனால் மட்டுமே, அந்த எண்ணம் மட்டும் யாருக்குமே மறைந்து விடாமல் அதை நெய்யூற்றி தொடர்ந்து கனன்று கொண்டு வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அக்கறையாகச் செயல்பட்டார்கள். ரசிகர்களும் அந்தப் போதையிலிருப்பதையே இன்னும் விரும்பக்கூடிய நிலைக்கும் வந்துவிட்டனர். எனக்குத் தெரிந்து தன்பெயருக்கு முன்னால் “ரஜினி”, “சிவாஜி” மற்றும் அவர் நடித்த ப்டங்களின் பெயர்களைச் சுமந்து கொண்டு அலைந்து திரிபவர்களை இன்றைக்கும் ஃப்ளக்ஸ் போர்டுகளில் காணலாம்.

தமிழ்த் திரையுலகம், பத்திரிகையுலகம், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எப்பொழுதும் இது போல் இருந்ததில்லை. 1975ல் எடுக்கப்பட்ட சினிமா பைத்திய்ம் படத்தின் கரு, நடிகர் நடிகைகளின் மேல் ஏற்பட்டிருக்கும் இது போன்ற மாயையைக் களைவதே கருவாக எடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்கள் ரசிகர்கள் தங்களையும் அவர்களில் ஒருவராக மட்டுமே நினைக்க வேண்டும், அவர்கள் மாயையிலிருந்து விடுபட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொடரவேண்டும் என்பதற்காகவே, மக்கள் கலைஞர் ஜெயசங்கர், ஜெயலலிதா, கவர்ச்சி நடிகை சகுந்தலா, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து நிஜவாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்கிறார்கள்.

ரஜினியின் சபலத்தை (அரசியலுக்கு வருவேன் என்ற மாயையை வைத்திருப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்ற சபலத்தை)ப் 20 வருடங்களாகப் பார்க்கும் போது, சினிமா பைத்தியம் படத்தில் நடித்து தன் ரசிகர்களுக்கு மாயையைத் தெளிவிக்க வேண்டுமென்று நடித்த நடிகர்கள் தமிழ் ரசிகர்களின் வாழ்க்கையில் தெய்வங்கள் போன்றவர்கள் தான்.

சினிமா பைத்தியம் படம் வந்து எல்லோரும் மாயையிலிருந்து விடுபட்டார்கள் என்று சொல்ல முயலவில்லை. அப்படியும் நடிக, நடிகைகளின் மேல் மாயை இருந்ததால் தான் நமக்கு ஒரு எம்ஜியார், ஜெயலலிதா போன்ற முதல்வர்கள் கிடைத்தார்கள். தமிழ்ச்சினிமா உலகில் சில நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தான் சம்பாதித்த பணத்தின் மீது ஒரு திருப்தி வந்திருந்த போதிலும், தன் ரசிகர்கள், ஏன் தமிழ் சினிமா ரசிகர்கள் மேல் இருந்த அலாதியான அன்பும், செல்லுலாய்ட் உலகிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இருக்கும் இடைவெளியை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணங்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் !!

oOo oOo oOo

இந்தப் படத்தில் மக்கள் கலைஞர் ஜெயசங்கர் ஒரு நடிகராகவே நடிக்கிறார். அவர் தனது ரசிகையின் வீட்டுக்கு வரும் போது ரசிகை கேட்கும் ஒரு கேள்விக்கு அவரது பதில் ரொம்ப அழகானது..

“ஏன் சார், படத்துலயெல்லாம் எல்லாப் பெண்களையும் கட்டிப்பிடித்து நடிக்கும் போது உங்களுக்கு என்ன உணர்வுகள் வரும்?”

“நீங்க பாங்குக்குப் போயிருக்கீங்களா? அங்கே கேஷியரைப் பார்த்திருக்கீங்களா? அவருக்கு என்ன சம்பளம் இருக்கும்னு நெனக்கிறீங்க. அதைப் போல 100 மடங்கு பணத்தை ஒவ்வொரு நாளும் அவர் கையாள்வார். ஆனால் எப்பொழுதுமே அதைத் தன் பணம் னு நெனக்க மாட்டார். அது போலத் தான் எங்க நடிப்பும் தொழிலும்.”

oOo

இன்னொரு வசனம். ஜெயசங்கர் வீட்டுக்குத் தான் அனுப்பிய ஏழைப்பெண்ணின் மகளுக்குத் திருமணம் நடத்தி வைத்தீர்களான்னு கேட்கிறாள் ரசிகை..

“ஏன் சார்.. அந்தக் கல்யாணத்தை நீங்க நடத்தி வெச்சீங்களா?”


“அதெப்படிம்ம்மா முடியும். அந்தம்மாவுக்கு வழிச்செலவுக்குப் பணத்தைக் கொடுத்து ஊருக்கு அனுப்பி வெச்சிட்டேம்மா...”


“ஏன் சார்.. உங்களை வள்ளல்னு நம்பித்தானே அந்தம்மா வந்தாங்க “

“அதுக்காக.. என் சக்திக்கு மீறி நான் செய்ய முடியுமா? நான் ஓரளவுக்கு வசதியுள்ளவன் தான்.. மத்தவங்களுக்கு உதவணும்னு ஆசைப்படறவன் தான். அதுக்காக ஊரில உள்ள எல்லா ஏழைங்களுக்கும் கல்யாணம் செஞ்சி வெக்கிற வசதி என்கிட்டே இல்லைம்மா... என்கிட்ட மட்டுமில்லம்மா.. எந்த ஒரு நடிகன்கிட்டேயும் இல்ல.. “

oOo oOo oOo

oOo oOo oOo
”அம்மா, நீ அங்க பார்த்தது ராணி மங்கம்மா !! இங்க பார்க்கிறது வெறும் ஜெயலலிதாதான்.. வீரதீரமெல்லாம் படத்துல தாம்மா.. இது தான் நெஜம். நடிப்பு வேற... வாழ்க்கை வேற....”

எவ்வளவு தெளிவா ஜெயலலிதாவே எடுத்துச் சொல்லிடறாங்க..



oOo oOo oOo oOo

”நீ நெனக்கிறதுல ஒண்ணும் தப்பு இல்லம்மா.. உன்னை மாதிரி தான் எல்லாரும் நினைச்சிக்கிட்டிருக்காங்க....
இன்னிக்குப் படம் பார்க்குற பெரும்பாலான ரசிகர்கள், அடிதடி சண்டைக் காட்சிகளையும் இந்த மாதிரி நடனக்காட்சிகளையும் பார்க்கிறதுக்குத் தான் ரொம்ப ஆசைப்படறாங்க !!
பல லட்சங்களைப் போட்டுப் படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள் அவங்க பணத்தைக் காப்பாத்திக்கிறதுக்காக இந்த மாதிரி காட்சிகளையும் படத்துல புகுத்தறாங்க..”


“படத்துல நாங்க போடறதெல்லாம் வெறும் போலி வேஷம். நிஜ வாழ்க்கையில்லை.. உங்களைப் போல நிறைய்ய பேரு அதை நிஜம்முனு நம்பிக்கிட்டிருக்காங்க..!!””


கவர்ச்சி நடிகை சகுந்தலா சொல்வதை அவங்க வாயாலேயேக் கேளுங்க !!



oOo oOo oOo oOo

”போடற வேஷம் வேறே.. உண்மையான வாழ்க்கை வேறே.. சில பேரு வேஷத்தையே உண்மையான வாழ்க்கைன்னு நம்பி ஏமாந்திடறாங்க.. அவங்களுக்காக நான் வருத்தப் படறேன்...”

நடிகர் திலகம் சிவாஜி சொல்வதை அவர் வாயாலேயேக் கேளுங்க..





oOo oOo oOo oOo

”என்னை விட இவர் தான் அழகர்....”

“என்னைவிட இவர்தான் பலசாலி.. சூட்டிங்ல என்கிட்டே தோத்த மாதிரி நடிச்சாலும் உண்மையாகவே என்னைவிட இவர்தான் பலசாலி..” ந்னு தான் நடிப்புலகில் உச்சத்தில் இருக்கும் பொழுதே, தன் ரசிகர்களுக்குப் புரியும் வண்ணம் வசனம் பேசி நடிக்கக்கூடிய பெருந்தன்மை மக்கள் கலைஞர் ஜெயசங்கர் கிட்டே இருந்திருக்கிறது.

இப்பொழுது இருக்கும் எந்த நடிகரும் இது போல் இப்போ நடிக்கத் தயாராயிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுவதில்லை... ஆனால் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.. அவர்களுக்கும் வருமானம் தேவைப் படுகிறதல்லவா !!!




oOo oOo oOo

ஒரு கேள்வி:

இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் இந்தச் சினிமாப்பைத்தியம் படத்தை ரீமேக் செய்தால் அதில் யாரெல்லாம் நடிக்க முன் வருவார்கள்?

சூப்பர்ஸ்டாரின் குசேலன் இதில் கொஞ்சம் ஒப்புமைப்பட்டாலும், முழு பரிமாணத்தையும் விளக்க முடியவில்லை. அவருக்கிருக்கும் இமேஜும், அதை இந்த அளவு வளர்த்திருக்கும் மீடியாக்களுமே காரணம்.

oOo oOo oOo

இதோ ஒரு ரஜினி பைத்தியத்தின் வீடியோ.. இந்த 2 புள்ளைங்களைப் பெத்த அந்த அம்மாவின் நிலைமையை நெனச்சிப் பாருங்க.. கஷ்டம்தான் !!




அடுத்த பதிவு.. அரசியல் பதிவு !!!!


Wednesday, October 12, 2011

130. சீமாச்சுவின் தாம்பூலம் -- 12 அக்டோபர் 2011

சீமாச்சுவின் தாம்பூலம் எழுதி ரொம்ப நாளாச்சிதே.. எழுதுங்க அண்ணே என்று அன்புடன் கேட்டுக் கொண்ட அந்த வாசகருக்கு நன்றி..

oOo oOo oOo

சமீயாவுக்கு மூன்றரை வயதாகுது.. கோவையில் இருக்கிறாள்.. நாங்கள் இருக்கின்ற அபார்ட்மெண்ட் இரண்டாவது மாடியில்.. மேலே போவதும் கீழே வருவது லிஃப்டில் தான்.. அப்பப்ப போகும் போது லிஃப்டில் பட்டன்களை அமுக்குவதும் சமீயாதான்..

ஒவ்வொரு முறை கீழே செல்ல விரும்பும் க்ரௌண்ட் ஃப்ளோருக்கு ஜீரோ பட்டனை அமுக்க வேண்டும்.. ஒவ்வொரு தடவையும் கீழே போகும் போது அவள் ஜீரோ பட்டனைத்தவிர மற்ற எல்லா பட்டனையும் அமுக்குவாள்.. இது பலமுறை நடந்த பிறகு ஒரு நாள் அவளையேக் கேட்டேன்..

“ஏண்டா கண்ணம்மா.. ஜீரோ பட்டனையே அமுக்க மாட்டேங்கறே..?”

“ஜீரோன்னா ’நோ வேல்யூ’.. டாடி.. எங்க மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க.. நாம ஏன் டாடி ’நோ வேல்யூ’வுக்குப் போகணும?”


”ஏதாவது ஒண்ணு கத்துக் கொடுத்தால் அதை உடனடியாப் பிடிச்சிக்கணும்.. Fact னு ஒண்ணு இருக்கு.. Application of Fact னு ஒண்ணு இருக்கு.. எதையும் கத்துக்குறது மட்டுமில்லாமல் அதை எங்க பயன் படுத்தணுமோ அங்கேயெல்லாம் பயன் படுத்தணும்” அப்படீன்னு எனக்கு கணக்கு சொல்லிக்கொடுத்த B.M. Sankaran சார் சொல்லியிருக்கார்.. என் செல்ல மகள்கிட்டே அந்த “Immediate Application of Fact" பார்த்த உடனே.. மனசு பூரிச்சிப் போயிருச்சி...

oOo oOo oOo

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. எங்கள் ஊர் மயிலாடுதுறையில் 36 வார்டுகள் உள்ளன. அங்கிருக்கு கவுன்சிலர்கள் சிலர் நல்லவர்கள் .. நண்பர்களெனினும் எல்லாவற்றிலும் கமிஷன் அடிக்கும் மனப்பாங்கு வந்துவிட்டது..

”ஊழலற்ற உள்ளாட்சி “ அமைக்கணும்னா, கை சுத்தமானவங்க, அரசியல்ல சம்பாதிக்கணும் என்ற தேவையில்லாதவங்க தேர்தலில் போட்டி போடவேண்டும்.. எனக்கு உடனே நினைவுக்கு வந்தவங்க இரண்டு பேர்..

முதலில் மூர்த்தி அண்ணனுக்கு ஃபோன் பண்ணி...”அண்ணே .. நல்ல உள்ளாட்சி அமையணும்னா, நாமெல்லாம் ஒதுங்கி நிக்கக் கூடாதுண்ணே.. நம்ம குடும்பத்துலேருந்து அருணை ஏதாவது ஒரு வார்டுல நிப்பாட்டுங்கண்ணே..”
என்றேன்..

அருணுக்கு 23 வயதாகிறது.. பொறுப்பான பையன்.. சிவில் எஞ்சினீயரிங் டிப்ளமோ முடித்துவிட்டு கட்டிட மேற்பார்வைப் பொறியாளனாக இருக்கிறான்

“அதெல்லாம் ச்சின்னப் பையன்.. அவனையெல்லாம் அரசியல்ல இறக்கினால் வீணாப் போயிடுவான் ராஜா..!!”

என்று முதலில் மறுத்தார்..

”அப்படி அருணை நீங்க நிக்க வெக்கலேன்னா.. நான் நம்ம அப்பாவைத் தேர்தலில் நிக்க வெக்க வேண்டி வரும்..”

அப்பாவுக்கு 94 வயது...

“ஐய்யய்யோ.. அப்பாவையா..?”

“ஏன் !! இப்ப கலைஞர் நிக்கலையா.. அப்பா நிக்கட்டுமே..” வீம்புக்குத் தான் கூறினேன்..


கடைசியில் அருணே நிக்கட்டும் என்று முடிவாகி, மயிலாடுதுறை நகர்மன்ற 4 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக வைரம் சின்னத்தில் அருண் போட்டியிடுகிறான்....

வெற்றியோ தோல்வியோ.. பொருட்படுத்தவில்லை.. “நமக்கு நல்லது செய்யும் மனிதர்கள் நகர் மன்றத்தில் வரவேண்டும் “ என்று மக்கள் விரும்பினால், அவர்கள் தேர்வு செய்ய ஒரு நல்ல வேட்பாளர் தேவை.. மற்றபடி வாக்களிக்க வேண்டியது மக்கள் பொறுப்பு..


நான் கூப்பிட்ட இன்னொரு நண்பர், மயிலாடுதுறையின் பிரபல பதிவர் மற்றும் அவர் மனைவி..
“நீ கழகத் தோழன் ராஜா.. உன்னை சுயேச்சையா நிக்கச் சொல்ல எனக்கு மனசில்லை.. அதுவும் ஊழல் செய்ய மாட்டாய் என்பதிலும் நம்பிக்கையில்லை... எனவே உன் மனைவியை சுயேச்சையா நிக்க வை ராஜா..” என்று சொல்லியும்...”இதே.. முனிசிபாலிட்டி போயிட்டேயிருக்கேன் அண்ணே..” என்று சொல்லி டபாய்த்த என் அன்பிற்கினிய இளவலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்...



oOo oOo oOo

1980 களின் இறுதியில்...

மயிலாடுதுறையில் ஒரு காதல் கதை...

அப்பல்லாம் ஒரு பையனுக்கு ஒரு சட்டை தைக்க வேண்டும் என்றால் எப்படியும் 100 ரூபாய் செலவாகும்.. எப்படியும் சட்டைத்துணி டீஸண்டா மீட்டர் 50 ரூபாய்க்கு எடுத்து.. முழுக்கை சட்டைக்கு 1.75 மீட்டர் துணி எடுத்தால் 90 ரூபாய் துணி மட்டுமே... தையல் கூலி 30 ரூபாய் கொடுத்தால் ஒரு சட்டையின் அடக்க விலை 120 ரூபாய் ஆகலாம்.. அதுவும் விருப்பப்பட்டவர்களுக்கு எடுக்கும் போது கொஞ்சம் ஹை குவாலிட்டியாக எடுக்க வேண்டும் என்பது வேறு...


என் நண்பன் என்னுடன் கல்லூரியில் படித்தவன். அவனுக்கு ஒரு காதலி.. அற்புதமான பொருத்தமுள்ள ஜோடி என்றால் அப்பொழுதெல்லாம் அந்த ஜோடியைத்தான் குறிப்பிடுவேன். இரண்டு பேருக்குமே நான் வேண்டப்பட்டவன் என்பதாலும் அவர்களின் காதல் எனக்கு ரொம்ப தெரிந்த விஷயமென்பதாலும் அவர்கள் இருவரின் புலம்பல்களையுமே இரண்டு பக்கமும் கேட்க வேண்டிய வெட்டி வேலை எனக்கு !!

நண்பரின் காதலி மயிலாடுதுறையிலிருந்து அருகில் உள்ள ஒரு இருபாலர் கல்லூரியில் இளநிலை வகுப்புகள் படித்துக் கொண்டிருந்தார்.. வீட்டிலிருந்து கல்லூரிக்கு வ்ர நகரப் பேருந்தில் தான் வரவேண்டும். போக வர பேருந்து கட்டணம் 40 + 40 என்பது காசுகள்.. அந்தப் பெண்ணுக்கு வீட்டில் தினமும் இரண்டு ரூபாய்கள் கைச்செலவுக்காகத் தருவார்கள்.. பேருந்து கட்டணம் 80 காசுகள் போய்விட்டதென்றால், மீதியுள்ள் ரூ 1.20 ல் டீயோ , காபியோ அல்லது நொறுக்குத் தீனியோ வாங்கித் தின்னலாம் என்பதால் அந்த இரண்டு ரூபாய்களுக்கு வீட்டில் கணக்குச் சொல்ல வேண்டியதில்லை..

இப்படியிருந்த நாட்களில், நண்பனின் பிறந்த தினத்துக்கு ஒரு விலையுயர்ந்த முழுக்கை சட்டை அந்தப் பெண் வாங்கிப் பரிசளித்தாள்.. எப்படியும் அந்தச் சட்டை ரூ 150 பெறுமானமுள்ளது.. அதனை அவள் வாங்க வேண்டுமென்றால் தினமும் ரூ 1.20 மாதிரி 125 நாட்களுக்குச் சேமித்து வாங்க வேண்டும். தினமும் இவ்வாறு சேமித்து இதற்காகவே காபி, டீ, நொறுக்குத்தீனி போன்ற சமாச்சாரங்களைத் தவிர்த்து காதலனின் பிறந்த நாளையே தினமுன் நினைத்துக் கொண்டு சேமித்து வாங்க முடிந்ததென்றால்.. அது எவ்வளவு ஒரு உயர்வான காதல்...


இது ஒரு மிக மிக சிறிய நிகழ்ச்சி தான்.. அவர்கள் வாழ்வில் நான் இதை விட பெரிய்ய தியாகங்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.... இவையும் காதல் தான் என்று பார்த்து வளர்ந்த என்னிடம்... ஒரு மூத்த பதிவர் ஒருவர்...

டெஸ்டோஸ்டெரோனும், ஈஸ்ட்ரோஜென்னும் உடம்பில் உண்டாக்கும் அர்ஜ். வெளிப்படற விதத்தை காதல்ன்னு சொல்றோம். அந்த ரெண்டு சுரப்பிகள் சுரப்பது நின்னு போய்ட்டா காதல் என்று அழைக்கப்பட்ட சமாச்சாரம் டிப்பெண்டன்ஸாவோ, சுமையாவோ மாறிடும்!”

என்று காதலுக்கு வியாக்கியானம் கொடுத்தாரென்றால்..”அவரால் காதலைப் புரிந்து கொள்ள முடியாது..” என்பது தெளிவாகிறது.. அதையும் மீறித் தனக்குப் புரியாதவற்றை வரையறை செய்ய முயலும் அவரது பிடிவாதத்தை விவாதங்களினால் வெல்லவும் முடியாது...

இப்படித்தான் காதலை விளக்க முடியுமென்றால், அலுவலக வேலை என்பது வெறும் பொருளாதாரம்.. அம்மா அப்பா என்பது வரலாறு.. அது புவியியல், இது வேதியியல், மனைவி என்பது மனையியல் என்று ரொம்ப அறிவியல்தனமாக எல்லாவற்றையுமேச் சொல்லிவிடலாம்.. பொண்டாட்டி மேல் வெக்கிற அன்பு கூட ஏதோ ஒரு ஹார்மோன் தான்.. அம்மாமேல வெக்கிற அன்பும் ஹார்மோன் தான்.. புள்ளக்குட்டிங்க கூட ஒரு விதமான் வேதிவினை தான்.. இந்த மாதிரி பேசறவங்க பெரும்பாலும் சுஜாதா ரசிகராயிருப்பாங்க..சான்ஸ் இருக்கு !!


நண்பரின் இந்த வயதிலாவது (ரொம்ப ரொம்ப மூத்த பதிவரு அவரு..) அவருக்கு முதல் மரியாதை சிவாஜி லெவலில் ஒரு காதல் அமைந்து.. இன்னும் சில வருடம் கழித்து..”சீமாச்சு.. நீங்க சொன்னது உண்மைதான்.. எனக்கு இப்பத்தான் இதை என் ‘குயிலு’ புரியவெச்சா.. அருமையான ஒரு காதலைப் புரிந்து கொள்ள இந்தப் பிறவியிலேயே வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி..” அப்படீன்னு அவரு பின்னூட்டம் போடக் கடவது என்று அவரை வாழ்த்துகிறேன்...

Wednesday, July 13, 2011

124. இந்த பிரபலங்கள் தொல்லை தாங்க முடியலப்பா !!

நம்ம அண்ணன் கவிஞர் வாலிகிட்டே படிச்சிப் படிச்சிச் சொன்னேன்.. எதுவாயிருந்தாலும நமக்குள்ள இருக்கட்டும்.. நீங்க பாட்டுக்குப் பத்திரிகையில எல்லாம் எழுதிடாதீங்கன்னு.

கேக்குறாருங்கிறீங்க !! எவ்வளவு சொன்னாலும் கேக்கமாட்டேங்குறாரே..

என்னையும் என் பொண்ணப் பத்தியும் விகடன்ல வேற எழுதிட்டாரு.. இனிமே வாசகர்கள் தொல்லை தாங்க முடியாது..



இந்த விளம்பரமே.. நமக்குப் புடிக்காதுன்னு சொன்னால் யாருமே.. கண்டுக்க மாட்டேங்குறாங்கப்பா !!!