Sunday, January 22, 2006

7. ச்சின்னஞ்சிறு கதை - எங்கேயோ படித்தது

இது எங்கேயோ படித்த ஒரு துணுக்கு. நினைவிலிருந்து எழுதுவது. எங்கேயென்று நினைவில்லை.


ஒரு வகுப்பில் ஒரு போட்டி நடந்தது. மாணவர்கள் ஆளுக்கு ஒரு சிறுகதை எழுதவேண்டும். கதைக்கான கரு எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும் சில விதிகள்..

1. கதை ஒரு அரச பரம்பரை கதையாக இருந்தால் நலம்.
2. குடும்பம் சம்பந்தமாகவும் இருக்கவேண்டும்.
3. அதில் காதல் இருப்பது உத்தமம்
4. கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும்.
5. கதை ரொம்ப பெரியதாக்க இருக்கக் கூடாது. ச்சின்னதாக இருப்பது நலம்.

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற ரொம்பச் சின்னஞ்சிறுகதை.

கதையின் தலைப்பு: மகத நாட்டு இளவரசி

"

இளவரசியார் கர்ப்பமாக இருக்கிறாராம். யாரந்தக் காதலன்?


"

என் கேள்விக்கு என்ன பதில்?

இதுவும் என் மகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் தான்.

இங்கு அமெரிக்காவிலிருக்கும் சராசரி இந்திய கம்ப்யூட்டர் கன்சல்டண்ட் குடும்பச் சூழல் தான் நமக்கும். நான்.. என் அலுவலகம் உண்டு.. வேலையுண்டு.. வீடு உண்டு என்று இருக்கும் சராசரி இந்தியக் குடிமகன் தான்.
ஆண்டவன் அருளில் எனக்கு அமைந்த மனைவிதான் குடும்ப மற்றும், குழந்தைகளின் தேவைகளையும் என் தேவைகளையும் கவனிப்பது எல்லாம். ஒரு எவர்சில்வர் தட்டில் சாம்பார் சாதமோ, ரசம் சாதமோ, தயிர் சாதமோ பிசைந்து போட்டு, காய்கறிகள் போட்டு, ஒரு ஸ்பூனும் போட்டு, தட்டு விளிம்பை துடைத்து (இல்லாட்டி ஐயாவுக்கு கோபம் வந்திரும் இல்ல!!) கொண்டு வந்து கையில் கொடுப்பது வரை.. எல்லாம் நமக்கு நடக்கும் (யாரும் கண்ணு கிண்ணு போட்டுடாதீங்கப்பா... பெண்ணியவாதிகள் யாரும் நான் ஆபீஸ் போகும் வழியில் கருப்புக் கொடி காட்டிடாதீங்க...!)
வீட்டுக்குத் தேவையான பால், தயிர், காய்கறி எல்லாம் வாங்கி வருவதும், வாரயிறுதியில் யார் வீட்டில் பார்ட்டி என்பதை நினைவு வைத்திருந்து சொல்வதும் மனைவிதான் (டுபுக்கு பாணியில் சொல்வதானால் தங்கமணி தான்.. என் பாணியில் சொன்னால் ரப்ரி தேவி)

குழந்தைகளைப் பொறுத்தவரை எல்லாமும் அம்மாதான். காலையில் அவர்களை எழுப்பி, பள்ளிக்கூடத்துக்குத் தயார்ப் படுத்தி, அவர்களை பள்ளியில் விட்டு.. மாலை வீட்டுக்கு அழைத்து வருவதும், அவர்களுடன் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்ய வைப்பதும், சாப்பாடு பரிமாறுவதும், அப்புறம் தூங்கப் போகும் போது அவர்களுக்கு கதைகள் சொல்லி, பாட்டுப்பாடித் தூங்க வைப்பதும் எல்லாம் அம்மாதான்.

ஒரு நாளிரவு நானும் பொழுது போகாமல் 'இன்னிக்கு நான் உங்களைத் தூங்க வைக்கிறேன்' என்று சொன்னேன்.

சில சிணுங்கல்கள்.. மற்றும் மனைவியுடனிருந்த சமாதான வார்த்தைகள் 'ஒரு நாள் அப்பாவோடத்தான் தூங்குங்களேன்..' எல்லாம் முடிந்து குழந்தைகளுடன் படுக்கையில் நான்.

இந்தப்பக்கம் ச்சின்னப் பெண் (3 வயது). இந்தப் பக்கம் பெரிய பெண் (7 வயது).. நடுவில் நான்... எனக்குத் தெரிந்த சசின்ன வயசுக் கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன் (அப்பொழுதுதான் உணர்ந்தேன்.. வாழ்க்கையில் ஒரு பெரிய மகிழ்ச்சியை நான் ரொம்ப நாள் கண்டுக் கொள்ளாமலிருந்திருக்கிறேன் என்று...)
என் மகளுடனான உரையாடலில் ஒரு பகுதி.. வழக்கமாக என் கேள்விகள் அல்லது பதில்கள் தமிழில்.. என் மகள் ஆங்கிலத்தில்...

மகள்: அப்பா! நான் ஒண்ணு கேட்டால் கோச்சுக்கக் கூடாது...
நான் :ஏண்டா கண்ணம்மா.. நான் கோச்சுக்க மாட்டேன்.
மகள்: I Love you a lot !! நீ அதனால எல்லாம் கவலைப் படாதே!! ஆனால் எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..
நான்: (கொஞ்சம் தயக்கத்துடன்) தெரிஞ்ச வரையிலும் சொல்றேம்மா.. தெரியாட்டா நாம ரெண்டு பேரும் internet-ல தேடி பதில் கண்டு பிடிக்கலாம்.

மகள்: மறுபடியும் சொல்றேன் I Love you.. தப்பா நெனச்சுக்காதே..
நான்: கவலைப் படாதே.. தப்பா நெனச்சுக்கலை.... I Love you too !!

மகள்: எனக்கு எல்லாமும் அம்மா தான் செய்யறா.. என்னை எழுப்பி விடறதுல இருந்து, ஸ்கூல் போய் வரும் வரை.. தூங்கப் பண்ணுவது வரை.. எல்லாம் அம்மாதான் செய்யறா..
.................Then Why in the world we need Daddies ???

அதற்குப் பிறகு நான் பேசவேயில்லை. ஏழு வயது மகளுக்கு பயாலஜி க்ளாஸ் எடுக்காமல் அவளுக்குப் புரியவைக்க எனக்கு இன்னும் தெரியவில்லை...
என் மகளின் சந்தேகத்தைத் தீர்க்கும் பதில் தருபவருக்கு, மரவண்டு கணேஷிடம் சொல்லி ஒரு நல்ல புத்தகம் பார்சல் செய்யப்படும்.

Monday, January 16, 2006

புதிய கோணங்கள் - 1

அன்பிற்குரிய மனைவியுடனும், ரொம்ப செல்ல மகளுடனும் பாஸ்டனில் வாழ்ந்து வந்த நேரம்.
மகளுக்கு அப்பொழுது வயது நான்கு. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் அதிகம் (அளவுக்கு அதிகமான) மற்ற குழந்தைகளுடன் நேரம் செலவிட வழியில்லை.
கூடுமான வரையில் எனது நண்பர்களுக்கெல்லாம் ஒன்று திருமணமாகவில்லை அல்லது ஒரிரண்டு வயதில் பெண் மகவு மட்டுமே உண்டு.
என் மகள் படிக்கும் பள்ளியிலும் (வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள் மட்டுமே.. அதுவும் மூன்று மணி நேரம்) எல்லோரும் அனேகமாக பெண் குழந்தைகளே !!

பக்கத்து வீட்டில் ஒரு பெங்காலி-மலையாளி குடும்பம் குடி வந்தது. அவர்கள் வீட்டில் ஒரு நான்கு வயது பையன் உண்டு.

என் மனைவிக்கும் இது ஒரு வசதியாக இருந்தது. சில (வெகு சில) நேரங்களில் மகளை அவர்கள் வீட்டுக்கு விளையாட அனுப்புவார்கள்.

ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்திருந்த நேரம். வழக்கமாக ஓடி வந்து கட்டிக் கொள்ளும் மகள் என்னிடம் பேசாமல் ஏதோ யோசனையில் இருந்தாள். மனைவிக்கும் என்ன விஷயமென்று தெரிந்திருக்க வில்லை.

"மதியம் சாயோக் (பக்கத்து வீட்டுப் பையன் பேர்) வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்து ஒரு யோசனையாகவே இருக்கிறாள் என்ன வென்று தெரியவில்லை" - மனைவி

என் மகளிடம் என்னவென்று கேட்போமென்று நெருங்கினேன்.
உரையாடல் வழக்கமான பாணியில்.. நான் தமிழில் கேள்விகள், என் மகள் எல்லாக் குழந்தைகள் பாணியில் ஆங்கிலத்தில் பதில். உரையாடல் சுவை கருதி அனைத்தும் தமிழில்...


"என்னடா கண்ணம்மா !!"

"ம்ம்.. ஒண்ணுமில்லப்பா.."

"சும்மா சொல்லு.."

"நான் ஒண்ணு சொல்றேன்.. யார் கிட்டேயும் சொல்ல மாட்டியே"

"சரி"

"அம்மா கிட்ட கூட சொல்லக் கூடாது'

"சரி"

"பின்கி ப்ராமிஸ்"

இரண்டு பேரும் வலது கை சுண்டி விரல் கோர்த்து சத்தியம் செய்து கொண்டோம்.

"இன்னிக்கு சாயோக்கைப் பார்த்தேன் "

"சரி. என்ன சொன்னான்?"

"ட்ரெஸ் இல்லாமல் பார்த்தேன்.."

"அதனால என்ன? அவனும் பேபிதானே"

"இல்ல இது வேற.."

"என்ன? சரியாச் சொல்லு"

"This guy has got A TAIL !!!!!!!!!!!!!!!!!!!!!!"

Wednesday, January 04, 2006

பாலாபிஷேகம்.


ஆஞ்சனேய ஜெயந்திக்கு பாலாபிஷேகம் செய்யும் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனசு என்னவோ கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1008 குடங்கள். ஒரு குடத்துக்கு 4 லிட்டர் பால் என்று கொண்டால் கூட ஏறக்குறைய 4000 லிட்டர் பால். பஞ்சவடி ஆஞ்சனேயருக்கு ஒரு 1008 லிட்டர். எவ்வளவு பால், குழந்தைகளுக்கான ஒரு அத்யாவசியமான உணவுப்பொருள் வீணடிக்கப்பட்டிருக்கிறது?


இந்த நாட்டில் எத்தனைக் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா ஆன்மீக வாதிகளுக்கு கொஞ்சமாவது ஒரு சமுதாயப் பொறுப்பிருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா.
இறைவன் என்றால் என்னவென்றுதான் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
பக்தி என்றால் என்னவென்று உண்மையாகவே இவர்களுக்குத் தெரியவில்லையா.


இதெல்லாம் ஒரு தனி மனிதனின் வழிபாட்டு முறைகள். இதில் தலையிடக்கூடாதென்றெல்லாம் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இது போன்ற மெகா விஷயங்கள் எல்லாமே ஒரு ஈகோ விஷயமாகவே படுகிறது. அரசியல்வாதிகள் தான் ஒரு பக்கம் சமுதாயச் சீரழிவுக்குக் காரணமாகிறார்களென்றால், இப்பொழுது ஆன்மீகவாதிகளும் ஒரு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.


தனிமனிதர்களின் செயல்கள் சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் போது எதிர்த்துக் கேட்பதில் தவறொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் கூட, சில மாதங்களில் வறட்சி என்று அறிவிக்கப்பட்டால், தண்ணீரை அநாவசியமாக்ச் செலவு செய்யக்கூடாது. கார் அலம்புதல், புல்வெளிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற செயல்கள் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகக் கருதப்படும்.
அதுபோல், இந்தியாவில் பிறந்திருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் குடிக்கக் கிடைக்கும் வரை இதுபோல் "மெகா" (கவனிக்க. மெகா மட்டுமே) அபிஷேகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்தத் தடையையும் மக்கள் உளமாற ஏற்று, கோவில்களில் போலீஸ் வந்து அளக்கும் படியில்லாமல் மனசாட்சிப் படி அனுசரிக்க வேண்டும்.

இது போன்ற முரட்டு பக்தர்களை, அந்த ஆஞ்சனேய மகாபிரபு தான் வந்து திருத்த வேண்டும்.

பின் குறிப்பு:
1. தயவு செய்து இதை மாற்று மதத்து கண்ணோட்டங்களுக்கு சென்று, பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். சீமாச்சு யாரிடமும் விலை போகவில்லை. என் மனதில் அந்த ஆஞ்சனேயரே வந்து சொல்லித்தான் இதை எழுதியுள்ளேன்.

2. நான் ஒன்றும் நாத்திகவாதியில்லை. எத்தனை முறை ஆஞ்சனேயர் கோயிலைச் சுற்றியுள்ளேன் என்பது மயிலாடுதுறை திருஇந்தளூர் ஆஞ்சனேயருக்குத் தெரியும்.