Sunday, January 22, 2006

என் கேள்விக்கு என்ன பதில்?

இதுவும் என் மகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் தான்.

இங்கு அமெரிக்காவிலிருக்கும் சராசரி இந்திய கம்ப்யூட்டர் கன்சல்டண்ட் குடும்பச் சூழல் தான் நமக்கும். நான்.. என் அலுவலகம் உண்டு.. வேலையுண்டு.. வீடு உண்டு என்று இருக்கும் சராசரி இந்தியக் குடிமகன் தான்.
ஆண்டவன் அருளில் எனக்கு அமைந்த மனைவிதான் குடும்ப மற்றும், குழந்தைகளின் தேவைகளையும் என் தேவைகளையும் கவனிப்பது எல்லாம். ஒரு எவர்சில்வர் தட்டில் சாம்பார் சாதமோ, ரசம் சாதமோ, தயிர் சாதமோ பிசைந்து போட்டு, காய்கறிகள் போட்டு, ஒரு ஸ்பூனும் போட்டு, தட்டு விளிம்பை துடைத்து (இல்லாட்டி ஐயாவுக்கு கோபம் வந்திரும் இல்ல!!) கொண்டு வந்து கையில் கொடுப்பது வரை.. எல்லாம் நமக்கு நடக்கும் (யாரும் கண்ணு கிண்ணு போட்டுடாதீங்கப்பா... பெண்ணியவாதிகள் யாரும் நான் ஆபீஸ் போகும் வழியில் கருப்புக் கொடி காட்டிடாதீங்க...!)
வீட்டுக்குத் தேவையான பால், தயிர், காய்கறி எல்லாம் வாங்கி வருவதும், வாரயிறுதியில் யார் வீட்டில் பார்ட்டி என்பதை நினைவு வைத்திருந்து சொல்வதும் மனைவிதான் (டுபுக்கு பாணியில் சொல்வதானால் தங்கமணி தான்.. என் பாணியில் சொன்னால் ரப்ரி தேவி)

குழந்தைகளைப் பொறுத்தவரை எல்லாமும் அம்மாதான். காலையில் அவர்களை எழுப்பி, பள்ளிக்கூடத்துக்குத் தயார்ப் படுத்தி, அவர்களை பள்ளியில் விட்டு.. மாலை வீட்டுக்கு அழைத்து வருவதும், அவர்களுடன் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்ய வைப்பதும், சாப்பாடு பரிமாறுவதும், அப்புறம் தூங்கப் போகும் போது அவர்களுக்கு கதைகள் சொல்லி, பாட்டுப்பாடித் தூங்க வைப்பதும் எல்லாம் அம்மாதான்.

ஒரு நாளிரவு நானும் பொழுது போகாமல் 'இன்னிக்கு நான் உங்களைத் தூங்க வைக்கிறேன்' என்று சொன்னேன்.

சில சிணுங்கல்கள்.. மற்றும் மனைவியுடனிருந்த சமாதான வார்த்தைகள் 'ஒரு நாள் அப்பாவோடத்தான் தூங்குங்களேன்..' எல்லாம் முடிந்து குழந்தைகளுடன் படுக்கையில் நான்.

இந்தப்பக்கம் ச்சின்னப் பெண் (3 வயது). இந்தப் பக்கம் பெரிய பெண் (7 வயது).. நடுவில் நான்... எனக்குத் தெரிந்த சசின்ன வயசுக் கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன் (அப்பொழுதுதான் உணர்ந்தேன்.. வாழ்க்கையில் ஒரு பெரிய மகிழ்ச்சியை நான் ரொம்ப நாள் கண்டுக் கொள்ளாமலிருந்திருக்கிறேன் என்று...)
என் மகளுடனான உரையாடலில் ஒரு பகுதி.. வழக்கமாக என் கேள்விகள் அல்லது பதில்கள் தமிழில்.. என் மகள் ஆங்கிலத்தில்...

மகள்: அப்பா! நான் ஒண்ணு கேட்டால் கோச்சுக்கக் கூடாது...
நான் :ஏண்டா கண்ணம்மா.. நான் கோச்சுக்க மாட்டேன்.
மகள்: I Love you a lot !! நீ அதனால எல்லாம் கவலைப் படாதே!! ஆனால் எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு..
நான்: (கொஞ்சம் தயக்கத்துடன்) தெரிஞ்ச வரையிலும் சொல்றேம்மா.. தெரியாட்டா நாம ரெண்டு பேரும் internet-ல தேடி பதில் கண்டு பிடிக்கலாம்.

மகள்: மறுபடியும் சொல்றேன் I Love you.. தப்பா நெனச்சுக்காதே..
நான்: கவலைப் படாதே.. தப்பா நெனச்சுக்கலை.... I Love you too !!

மகள்: எனக்கு எல்லாமும் அம்மா தான் செய்யறா.. என்னை எழுப்பி விடறதுல இருந்து, ஸ்கூல் போய் வரும் வரை.. தூங்கப் பண்ணுவது வரை.. எல்லாம் அம்மாதான் செய்யறா..
.................Then Why in the world we need Daddies ???

அதற்குப் பிறகு நான் பேசவேயில்லை. ஏழு வயது மகளுக்கு பயாலஜி க்ளாஸ் எடுக்காமல் அவளுக்குப் புரியவைக்க எனக்கு இன்னும் தெரியவில்லை...
என் மகளின் சந்தேகத்தைத் தீர்க்கும் பதில் தருபவருக்கு, மரவண்டு கணேஷிடம் சொல்லி ஒரு நல்ல புத்தகம் பார்சல் செய்யப்படும்.

6 comments:

பரஞ்சோதி said...

நெத்தியடி கேள்வி.

உங்க மகள் மிகவும் புத்திச்சாலி பெண்.

என் மகளுக்கு ஒரு வயது தான் ஆகிறது, பேச ஆரம்பித்ததும் என்ன என்ன கேட்க போகிறாரோ என்று பயமாக இருக்குது. அதான் இப்போவே அவருடன் அதிக நேரம் செலவழிக்கிறேன், இப்போவே சின்ன சின்ன பாடங்கள் சொல்லி கொடுக்கிறேன்.

ஒரு பெண், மகளாக இருந்தாலும் சரி, தாயாக இருந்தாலும் சரி, அவர்களின் தியாகங்கள் முன்னால் ஆண்கள் ஒன்றுமே இல்லை.

G.Ragavan said...

உண்மையிலேயே தமிழில் அப்பாவுக்கு பல பொறுப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன.

ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே - பெற்று ஒரு பிள்ளையை பொறுப்பாக எல்லாருக்கும் காட்டுவது தாயின் கடன் (பெற்றுப் போடுவது மட்டுமல்ல).

சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே - இதுதாங்க ஒங்க பொறுப்பு. இதுக்கு நான் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை.

இதைப் பலபேரு புரிஞ்சிக்கிறதே இல்லைன்னு நெனைக்கிறேன்.

பிரதீப் said...

இந்தக் காலத்துப் புள்ளைக இன்னும் என்னென்னவோ கேள்விகள் எல்லாம் கேப்பாங்க, தயாரா இருங்க!

ராகவன்,
நீங்க இன்னும் கோமா ஸ்டேஜில இருக்கீங்கன்னு நினைக்கிறேன். இப்ப அப்பாக்கள் எல்லாருக்கும் ஒரே வேலைதான்

"வீட்டில் கேள்வி கேக்காத ஒரு ஏ டி எம்"

Thangamani said...

//Then Why in the world we need Daddies ???
//

Nice question!

Thanks for the post. :)

பரஞ்சோதி said...

கொஞ்ச நாள் ஒரு குழந்தை தந்தையிடமே கடன் வாங்கி, அவரிடமே கொடுத்து தன்னிடம் கொஞ்ச நேரமாவது பேசுங்க என்று சொன்ன கதையை படித்தேன். அதுமாதிரியே உங்க மகளின் கேள்வியும் இருக்குது.

சீமாச்சு.. said...

அன்பின் பரஞ்சோதி, ராகவன்,பிரதீப்,பாபிள், தங்கமணி, ராஜ்..
எல்லோருக்கும் என் நன்றிகள்.. குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது...
அவளுக்கு என்ன எண்ணமோ.. ஒரு அப்பா .. ஒரு அம்மாவுக்கு பதில்...
ரெண்டுமே அம்மாவாக இருந்தால் நல்லா இருக்குமே.. என்று நினைக்கிறாள் போலும்....
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...