Wednesday, January 04, 2006

பாலாபிஷேகம்.


ஆஞ்சனேய ஜெயந்திக்கு பாலாபிஷேகம் செய்யும் இந்தப் படங்களைப் பார்த்ததும் மனசு என்னவோ கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1008 குடங்கள். ஒரு குடத்துக்கு 4 லிட்டர் பால் என்று கொண்டால் கூட ஏறக்குறைய 4000 லிட்டர் பால். பஞ்சவடி ஆஞ்சனேயருக்கு ஒரு 1008 லிட்டர். எவ்வளவு பால், குழந்தைகளுக்கான ஒரு அத்யாவசியமான உணவுப்பொருள் வீணடிக்கப்பட்டிருக்கிறது?


இந்த நாட்டில் எத்தனைக் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா ஆன்மீக வாதிகளுக்கு கொஞ்சமாவது ஒரு சமுதாயப் பொறுப்பிருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா.
இறைவன் என்றால் என்னவென்றுதான் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?
பக்தி என்றால் என்னவென்று உண்மையாகவே இவர்களுக்குத் தெரியவில்லையா.


இதெல்லாம் ஒரு தனி மனிதனின் வழிபாட்டு முறைகள். இதில் தலையிடக்கூடாதென்றெல்லாம் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இது போன்ற மெகா விஷயங்கள் எல்லாமே ஒரு ஈகோ விஷயமாகவே படுகிறது. அரசியல்வாதிகள் தான் ஒரு பக்கம் சமுதாயச் சீரழிவுக்குக் காரணமாகிறார்களென்றால், இப்பொழுது ஆன்மீகவாதிகளும் ஒரு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.


தனிமனிதர்களின் செயல்கள் சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாகும் போது எதிர்த்துக் கேட்பதில் தவறொன்றுமிருப்பதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவில் கூட, சில மாதங்களில் வறட்சி என்று அறிவிக்கப்பட்டால், தண்ணீரை அநாவசியமாக்ச் செலவு செய்யக்கூடாது. கார் அலம்புதல், புல்வெளிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற செயல்கள் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகக் கருதப்படும்.
அதுபோல், இந்தியாவில் பிறந்திருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பால் குடிக்கக் கிடைக்கும் வரை இதுபோல் "மெகா" (கவனிக்க. மெகா மட்டுமே) அபிஷேகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்தத் தடையையும் மக்கள் உளமாற ஏற்று, கோவில்களில் போலீஸ் வந்து அளக்கும் படியில்லாமல் மனசாட்சிப் படி அனுசரிக்க வேண்டும்.

இது போன்ற முரட்டு பக்தர்களை, அந்த ஆஞ்சனேய மகாபிரபு தான் வந்து திருத்த வேண்டும்.

பின் குறிப்பு:
1. தயவு செய்து இதை மாற்று மதத்து கண்ணோட்டங்களுக்கு சென்று, பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். சீமாச்சு யாரிடமும் விலை போகவில்லை. என் மனதில் அந்த ஆஞ்சனேயரே வந்து சொல்லித்தான் இதை எழுதியுள்ளேன்.

2. நான் ஒன்றும் நாத்திகவாதியில்லை. எத்தனை முறை ஆஞ்சனேயர் கோயிலைச் சுற்றியுள்ளேன் என்பது மயிலாடுதுறை திருஇந்தளூர் ஆஞ்சனேயருக்குத் தெரியும்.

5 comments:

Seemachu said...

testing !!

Jsri said...

சீமாச்சு, இந்தப் பதிவை இப்போதுதான் படிக்கிறேன். பக்தி என்ற பெயரில் உணவுப் பொருள்களை வீணாக்குவதில் 'மெகா', 'மினி' சைஸெல்லாம் இல்லை. யார் எந்த அளவு செய்தாலும் தவறுதான். இது பால், தயிர், பஞ்சாமிர்தம், வெண்ணை, எண்ணை என்று எந்த உணவுப் பொருளுக்கும் பொருந்தும். என்னை(யும்) அடிக்கடி வருந்தவைக்கும் விஷயங்களில் இது மிக முக்கியமானது.

இதைச் சொல்லவெல்லாம் யாரும் விலைபோயிருக்க வேண்டியதில்லை. ஒரு இந்துவாக இதைச் சொல்ல எனக்கு எல்லா உரிமையும் இருப்பதாகவே நினைக்கிறேன்.

Seemachu said...

அன்பின் ஜெயஸ்ரீ,
உங்கள் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி.
இப்பொழுது தான் என் நண்பர் ஒரு நாமக்கல்காரர் போன் பண்ணினார். அது எப்படி எங்க ஊர் ஆஞ்சனேயரைச் சொல்லப்போகும் என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார். பாலைவிட தண்ணீர் விலை அதிகம்.... அதனால் பாலில் பண்ணினால் ஒண்ணும் தவறு இல்லை என்று சும்மனாச்சுக்கும் ஒரு காரணம் சொன்னார்...
இப்படியும் சில பேர்..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

ezhisai said...

does anyone have any rational thinking over these matters? who satrted all these abishekams?either way namakkappuram when kids ask these questions we do not have any replys. adhu appadithaan is not an answer. thank you for highlighting this matter. pesinaal thappu illai. aththuzhaai

ரோகிணிசிவா said...

m also against it