Friday, August 11, 2006

28. இப்ப நீங்க எங்க இருக்கீங்க?


1994-ல் ஏப்ரல் மாதத்தில் அட்லாண்டா நகரில் முதன்முதலில் வந்து இறங்கியதால்.. நமக்கு முதலில் அடைக்கலம் கொடுத்த ஊர் ஆச்சேயென்று அட்லாண்டா மேலே ஒரு பாசமேயிருந்தது. அப்பொழுது திருமணமும் ஆகியிருக்கவில்லை.


கொஞ்சம் கொஞ்சமாக இந்தியக் கண்ணிப் பொறியாளர்கள் அமெரிக்காவில் தலை காட்ட ஆரம்பித்திருந்த நேரம் அது.

நானும் என் நண்பர்கள்...முன்னாள் வகுப்புத் தோழர்கள் என்று பலரை எனது கம்பெனிக்கு அடையாளம் காட்டி H1B விசாக்கு அப்ளை பண்ணி நிறைய பேரை அட்லாண்டாவிற்கு அழைத்து வந்திருந்தேன். அது தவிரவும் புதிதாக அங்கேயே சேர்ந்த நண்பர்களால் அந்த ஒரு இடத்தில் மட்டுமே எனக்கு 20-30 பேர் நண்பர்களாக இருந்தார்கள்... அவர்களுடன் மிக எளிதாக நேரம் போவதான பொழுதுபோக்கு வசதி இருந்தது...

யாருக்குப் ப்ராஜெக்ட் பார்ப்பதானாலும் அவர்கள் கம்பெனியில் முடிந்தவரை அட்லாண்டாவிலேயெ பாருங்க.. வேற எங்கேயும்னா.. சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று சொல்லிவிடுவார்கள்... கூடுமானவரை நண்பர்கள் ஒரே இடத்தில் இருக்கலாமல்லாவா? அவர்களும் தலையாட்டிவிட்டு வெளியில் பாஸ்டன், நியூஜெர்சி, கலிபோர்னியா என்று தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் (நாம சொல்றதை யாரு கேக்கறாங்க?)

அப்பொழுதெல்லாம் (இப்பொழுது மட்டும் என்னவாம்?) எல்லாரும் ப்ராஜெக்ட் பார்ப்பதனால் குறைந்தது 6 மாதம் அல்லது ஒரு வருஷம் அல்லது அதற்கு மேல் செல்லும் ப்ராஜெக்டாகப் பாருங்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொரு இடத்திலும் போய் அந்த ஊரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, அபார்ட்மெண்ட் பார்த்து வாடகை எடுத்து செட்டிலாகி ஒரு பழகுவதற்கு ஒரு 2 மாசம் ஆகலாம். அதற்குள் ப்ராஜெக்ட் முடிந்துவிட்டால் மறுபடியும் இந்த வேலைகளை இன்னொரு இடத்திலிருந்து ஆரம்பிப்பதென்பது ஒரு பெரிய கடி.

இந்த விஷயத்தில் என்னுடைய அணுகுமுறையே தனி.

அப்பொழுது திருமணமாகியிருக்கவில்லையாதலால் எனது மொத்த சொந்தமே இரண்டு சூட்கேஸுகளுக்குள் அடங்கிவிடும். தேவைக்கு அதிகமாக எதுவும் சொத்து சேர்ப்பதில்லை. அப்படியே ஒரு ஊரில் ஏதாவது வாங்கினால் அதை அந்த ஊரிலேயே அறைத் தோழர்களுக்கோ அல்லது வேறு நண்பர்களுக்கோ அன்பளிப்பாகவோ அல்லது (நான் மீண்டும் கேட்கும் வரை) பயன்படுத்தும் உரிமையையோ தந்துவிடுவது உண்டு. இவ்வாறு நான் விட்டுவந்தது மிக அதிகம். சில நூறு தமிழ்ப் புத்தகங்களும் அதில் அடக்கம்.

நான் என் கம்பெனியில் கேட்கும் ப்ராஜெக்ட் வகைகள் தனி. எனக்கு அதிக பட்சமாக 6 வாரத்துக்கு மேல் எந்தவித ப்ராஜெக்ட்டும் பார்க்காதீர்கள் என்று சொல்லிவிடுவது உண்டு. இந்தமாதிரி ப்ராஜெக்ட்களில் ஒரு வசதியென்னவென்றால்.. ஓட்டலின் அறை வாடகை, வாடகைக் கார், மற்றும் இதர செலவுகள் கம்பெனியோ அல்லது வாடிக்கையாளரோ தந்து விடுவார்கள். நமக்கு கைக்காசு பைசா செலவழியாது. சமயங்களில் வாரத்துக்கு இருபதிலிருந்து முப்பது மணிநேரம் ஓவர்டைமும் கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனிக்கும் இதில் வருமானம் அதிகம். அதனால் அந்த கம்பெனிக்கு நான் ஒரு செல்லப் பிள்ளையாகவே இருந்தேன் (அப்பொழுது..)

1995-ல் ஜூன் மாதத்தில் இப்படித்தான் ஒரு முறை நான் பாஸ்டனில் சென்று மாட்டிக்கொண்டென். எனக்கென எல்லா வசதிகளும் உள்ள ஒரு தனி அறை.. அதில் நான் மட்டுமே. வேலையிலிருந்து வந்தவுடன் பொழுது போகாமல் என் அட்லாண்டா நண்பர்களுக்குப் போன் செய்து பேசிக்கொண்டிருப்பேன். (அப்பொழுது இண்டர்நெட்டில் அவ்வளவு வளர்ச்சி கிடையாது. யாஹூ, கூகுள், ச்சாட், ப்ளாக் எல்லாம் பிறக்காத நேரம். ஏன் .. செல்போன் கூட இவ்வளவு மலிவாகக் கிடையாது.. அதெல்லாம் ஒரு கனவு சமாச்சாரம் மட்டும் தான்)

தினமும் மாலை வந்தவுடன் பாஸ்டனிலிருந்துகொண்டு அட்லாண்டா நண்பர்களுக்குப் போன்.. அப்படியொன்றும் பெரிய விஷயங்களெல்லாமில்லை.. வெறும் வெட்டி அரட்டை தான்.. தினமும் ஒரு இரண்டு மணி நேரம் இப்படியே எல்லாருக்கும் போன் போட்டுபேசிக் கொண்டிருப்பது தான் ஒரே பொழுதுபோக்கு.

அப்பொழுது தான் ஒரு நாள் மனசுக்குள் ஒரு மின்னல் அடித்தது.

நாம என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? - மனசுக்குள் ஒரு கேள்வி.

ஏன்? ஒண்ணும் தப்பா தெரியலையே... நண்பர்கள் கிட்டதானே பேசிக்கிட்டிருக்கோம்..

இங்க பாஸ்டனில் நாம இருக்கும் போது.. அட்லாண்டா நண்பர்கள் கிட்ட என்ன தினசரி பேச்சு?

ஏன் பேசினால் என்ன?

பேசக்கூடாதூன்னு சொல்லலை? ஏன் தினசரி பேச்சுன்னுதான் கேக்குறேன்?

பேசினால் என்ன தப்பு? - மறுபடியும் நானே

பேசறதூங்கறதை விடு.. நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே அப்படீன்னு சுருக்கமா சொல்லிப்பாரு...

இங்க பாஸ்டனில் வந்து இருந்து கொண்டு 1000 மைல் தொலைவில் உள்ள அட்லாண்டாவில் மனதளவில் வாழ முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்

ஏன் அப்படி செய்யணும்?

ஏன்னா.. எனக்கு இங்க பாஸ்டனில் நண்பர்கள் இல்லை..

அப்பொழுது தான் புரிந்தது என் தவறு.
அடிக்கடி அட்லாண்டா நண்பர்களுக்குப் போன் செய்வதை விட்டுவிட்டு வெளியில் சென்று பழகத்துவங்கினேன். நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடிந்தது. அதற்குப்பின் என் நடைமுறையில் நிறைய மாற்றங்கள். பாஸ்டனிலேயே நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இதே போக்கில் போகும் ஒவ்வொரு ஊரிலும் நிறைய நண்பர்கள்... எனக்குள் ஒரு பெரிய மாற்றமே நிகழ்ந்தது..

oOo

இதை ஏன் இப்ப எழுதினேன்? இங்க வலைப்பூவில் நிறைய நண்பர்களைப் பார்க்கிறேன்.

இவங்க எதைப் பத்தி எழுதறாங்க?

அவர்கள் ஒவ்வொருவரும் இருக்கும் இடங்களும் செய்யும் தொழில்களும் அபரிமிதமானவை. சில பேர் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு Ph.d யெல்லாம் வாங்கியிருக்காங்க. அவர்கள் இருக்கும் இடங்களில்..அங்கு வாழும் வாழ்க்கையில் அவர்கள் அனுவங்களில் சுவையான விஷயங்கள் அதிகமாக இருக்கும். இதைப் பற்றி எழுதலாம்..

அல்லது அவர்கள் சிறு வயதில் சொந்த ஊரில் நடந்த சில் நல்ல காரியங்கள் அல்லது சந்தித்த சிறந்த மனிதர்களைப் பற்றி எழுதலாம்.

அதெல்லாம் எழுதினால் படிப்பவர்களுக்கும் அது ஒரு சிறந்த சுவையான அனுபவச் சித்திரமாக இருக்கும்.

இதெல்லாம் இங்கு கிடைப்பது அபூர்வமாகவே இருக்கிறது. அதை விட்டுவிட்டு இவர்கள் எதை எழுதுகிறார்கள்?

இவர்களே சொந்த ஊரில் இருந்தால் படித்துவிட்டு தூக்கியெறிந்துவிட்டு அல்லது மறந்துவிட்டு செல்லும் செய்திகளையும் அல்லது அங்கிருந்தால் படிக்க நேரமேயில்லாத செய்திகளையும் இங்கிருந்து படித்துவிட்டு.. அதற்கு ஒரு மணிநேரம் செலவு செய்து பதிவு எழுதி.. அதற்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதிலும் எழுத எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் பாருங்கள்...

ஏன் இப்படி?

பத்துவருடங்களுக்கு மேல் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நண்பர் எழுதிய புத்தகத்துக்கு விமரிசனம் எழுதிய ஒருவர்.."தமிழகத்தில் வசிக்கும் ஒரு சராசரித் தமிழனுக்குக் தெரிந்த அளவை விட மிக அதிகமாக இந்த ஆசிரியருக்கு தமிழ்ச் சிறுபத்திரிகை அரசியல் தெரிந்திருக்கிறது" என்று எழுதினார்.

அவர் சொன்னதன் காரணம் எனக்கு என்னென்னவோ புரிய வைக்கிறது..

தமிழகத்தில் வசிக்கும், தமிழ்ப்பதிவுகளுக்கு ரொம்ப அறிமுகமில்லாத ஒருவர் சமீபத்தில் சில தமிழ்ப்பதிவுகளைப் படித்துவிட்டு என்னிடம் சொன்னது..
"இங்க இந்தியாவுல இருக்கறவனெல்லாம் வெளிநாடு போக மாட்டோமா-ன்னு கனவு கண்டுகிட்டிருக்கான். இவங்களெல்லாம் ஏதோ முன்னோர் பண்ணிய புண்ணியத்தில் அதிர்ஷ்டவசமாக வெளிநாட்டில் இருக்கும் பாக்கியம் பெற்றிருக்காங்க.. அங்க போய உட்கார்ந்து நல்ல விஷயங்களை எழுதலாமில்லே.. ஏன் இப்படி பைசா பெறாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்கிறாங்க?"

அவருக்கு என்னிடம் பதிலில்லை... யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

(பாவனா படம் ஒரு அழகுக்காகத்தான். நன்றி: விகடன்)

7 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவு சீமாச்சு. இப்படி இன்னும் பலர் யோசிக்கத் தொடங்கினால் நல்ல பதிவுகள் அதிகம் வரும். அந்நாளுக்கு அதிகம் காத்திருக்க வேண்டாமென நம்புவோமாக.

kekkE PikkuNi #25511630 said...

அங்க போய உட்கார்ந்து நல்ல விஷயங்களை எழுதலாமில்லே.. ஏன் இப்படி பைசா பெறாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்கிறாங்க?

அது தெரிஞ்சா உலகம் உருப்பட்டுடுமே, அதனால தான்.

பாவனா படம் ஏன்? ஏன் அது சம்பந்தமே இல்லாததுன்னு தோணலை?

ஹிஹி.

Seemachu said...

//பாவனா படம் ஏன்? ஏன் அது சம்பந்தமே இல்லாததுன்னு தோணலை?

ஹிஹி.
//

இவ்வளவு தூரம் என் பதிவ படிச்சிட்டு பாவனா படம் சம்பந்தமில்லாததுன்னு எப்படீங்க நினச்சீங்க? அவங்க எவ்வளவு அழகா உக்காந்துகிட்டு ஆழமா யோசிக்கிறாங்க.

அந்த யோசனையைக் காட்டறதுக்குத்தான் அவங்க படத்தையேப் போட்டேன். இதே நான் அப்படி உக்காந்து யோசிக்கிற மாதிரி படம் போட்டிருந்தேன்னா.. நீங்க இந்த முழம் நீளப் பதிவை படிச்சிருப்பீங்கன்னு நெனக்கிறீங்க !!அன்புடன்
சீமாச்சு...

Seemachu said...

இலவசக் கொத்தனார்..
வாங்க வாங்க.., நான் எழுதற பதிவுகளெல்லாம் யாரையாவது யோசிக்க வெச்ச்சாச் சரிதான் !!

அன்புடன்,
சீமாச்சு...

Chandravathanaa said...

நல்ல பதிவு

ஜீவா (Jeeva Venkataraman) said...

:-)
நல்லா இருந்தது!

Anonymous said...

Dear Cheemachu,

Sorry to put this comment so lately. On Dec 2009, I got an offer at UAE and settled at Al Ain - a small quite place. I do had such a feeling and without doubt this article has made me to think in a different perspective.

Thanks a lot

B K Ramachandran

ramachandran.bk@gmail.com