Saturday, August 12, 2006

29. இப்படியெல்லாமும் நடக்குது தான்!!

தமிழகத்தில் ஒரு ச்சின்ன ஊரில் உள்ள நண்பர் குடும்பத்துடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர் குடும்பத்தின் நலன் கருதி ஊரும் பேரும் வெளியிட விரும்பவில்லை.


மிக ஏழ்மை நிலையில் உள்ள குடும்பம்தான். ஊரில் நண்பர் வளர்ந்து வரும் அரசியல்வாதி. (இந்திரா) காங்கிரஸ்காரர். காலையிலும் மாலையிலும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு கட்சி ஆபீஸே கதியென்று கிடப்பவர்.

நண்பரின் மனைவி காங்கிரஸ் கட்சி சார்ந்த வார்டு கவுன்சிலர். அங்கங்கே அவ்வப்பொழுது கிடைக்கும் கமிஷன் மட்டுமே வருமானம். (ஆமாம் இதில் எவ்வளவு வருமானம் வரும்? எனக்குத் தெரியாது!). கணவன், ஒரு மனைவி (அரசியல்வாதியில்லையா.. அதனால் அந்த 'ஒரு' தேவைபடுகிறது) ஒரு பையன் (இவனைப் பற்றிய சம்பவம் தான் இப்பொழுது..) மற்றும் இரண்டு பெண்கள். சொல்லத்தக்க சேமிப்புகள் என்று எதுவும் கிடையாது!!

நான் 7-8 வருடங்களாக நிதியுதவி செய்து படித்து வரும் நிறைய மாணவர்களில் இவனும் ஒருவன். இவனின் மூன்றாவது வகுப்பிலிருந்து இவனின் பள்ளிச்செலவுகள் அனனத்தும் என்னைச் சார்ந்தவை. சாதாரணமாக நன்முறையில் படிக்கும் ஒரு மாணவன். அவ்னின் மதிப்பெண்களில் எனக்கு அவ்வளவாக எதிர்பார்ப்புகள் இல்லையென்றாலும்.. அந்தக் குடும்பத்திலிருந்து ஒரு பையன் படித்து வளர்ந்து முன்னேற வேண்டுமென்பது என் ஆசை.

பையன் இந்த வருடம்தான் மெட்ரிகுலேஷனில் பத்தாவது தேர்வு எழுதியிருந்தான். சாதாரணமாக பிள்ளைகள் தேர்வு எழுதி ரிசல்ட் வந்தால் எனக்கு செய்திகள் வரும்தான். நானும் ஆர்வமாக இதெல்லாம் விசாரித்துத் தெரிந்துகொள்ளும் வகைதான். பையனின் தேர்வு முடிவுகள் எனக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அதனால் பேச்சினூடே விசாரிக்க வேண்டியதாகிவிட்டது.

நண்பரின் மனைவியிடம் (கவுன்சிலர் அம்மா) நடந்த உரையாடலின் ஒரு பகுதி... உரையாடலில் பையனின் பெயர் அவனின் நலம் கருதி மாற்றப்பட்டுள்ளது.

'அப்புறம் என்னங்க விசேஷம்?"

"ஒண்ணும் இல்லீங்க.. நம்ம அருணுதான் இப்படிப் பண்ணிட்டான்!!"

"ஏன் அவனுக்கு என்ன ஆச்சு..?"

"இல்லே.... இப்பத்தான் பரிட்சை எழுதியிருக்கான். இந்த வாரம்தான் மார்க்கு வரும் போலத்தெரியுது"

"அப்படியா.. எல்லாருக்கும் மார்க் வந்திருச்சி போலத்தெரியுதே.. ஏன் இவனுக்கு மட்டும் தாமதம் ஆகுது?"

"இல்லைங்க.. இவனுக்கு ஒரு பேப்பர்ல ஒரு மார்க்குல போயிட்டுது.. மறுபடியும் எழுதியிருக்கிறான்.. அதான் தாமதம்"

"அப்படியா.. எனக்குச் சொல்லவேயில்லீங்களே... நிறைய பேர் மார்க்.. பாஸ் எல்லா விவரமும் சொன்னாங்க.. இவன் விஷயம் மட்டும் நமக்கு வரவேயில்லீங்களே.. இதான் காரணமா?"

"ஆமாங்க ! வெளியில சொல்லவே வெட்கமா இருக்குங்க!! அதான் சொல்லலை.. இல்லேன்னா நானே போன் பண்ணிச் சொல்லிருப்பேனுங்களே"

"பரவாயில்லையே! அதனால என்ன? மறுபடியும் எழுதினா பாஸ் பண்ணிட்டுப் போறான்! இன்னும் நல்லாப் படிச்சிருக்கலாம்... மாமா ரொம்ப வருத்தப்பட்டாங்க-ன்னு சொல்லிடுங்க!!"

"இல்லைங்க.. இவனுக்கு ஒரு மார்க்குல போயிடிச்சின்ன உடனே பள்ளிக் கூடத்துலேருந்து டீச்சரெல்லாம் வீட்டுக்கே வந்துட்டாங்க !!"

(எனக்கு இது ஒரு ஆச்சரியமான செய்திதான்!! பையன் பெயிலானா டீச்சரெல்லாம் இப்ப வீட்டுக்கே வந்துடறாங்களா.. நாங்க படிக்கிற காலத்துல பையனோட அப்பா அம்மா வெல்லாம் தானே பள்ளிக்கூடத்துக்குப் போய்ப் பார்க்கணும்?)

"அப்படீங்களா?"

"அப்புறம்.. மெட்ராஸெல்லாம் போய் டைரக்டரை எல்லாம் பாத்து ஏதாவது செய்ய முடியுமான்னெல்லாம் முயற்சி பண்ணினோம்.. நெறய செலவெல்லாம் ஆச்சு"

"அப்படீங்க்ளா?"

"இவங்க அப்பா மெட்ராஸ்ல அமைச்சர் பொன்முடியெல்லாம் வேற பாத்தாங்க.. அவர் மூலமா ஏதாவது செய்ய முடியுமான்னெல்லாம் முயற்சி பண்ணினோம்!! இவனுக்காக பண்ணாத செலவெல்லாம் இல்லீங்க!!"

"அப்படீங்களா?"

"அப்புறம் தான் இதெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரிஞ்சுது. இதெல்லாம் பண்ணியிருக்கக் கூடாதோ?"

"ஏங்க! வேஸ்ட்டுன்னுதான் தெரிஞ்சுதா? தப்புன்னெல்லாம் தெரியலையா?"

"ம்ம்ம்ம்ம்"

"நாங்களெல்லாம் படிக்கும் போது பையன் படிக்கணும்னு எங்க அப்பா அம்மாவெல்லாம் ரா முழுக்க முழிச்சிக்கிட்டு எங்களைப் படிக்க வைக்க எல்லா தியாகமும் செய்வாங்க!! அவன் பரிச்சைக்குப் படிக்கும் போது நீங்க இதெல்லாம் பண்ணின மாதிரி தெரியல.. இப்ப போய் இப்படி பண்ணினேன்னு சொல்றீங்களே?"

"இல்லீங்க.. பள்ளிக் கூடத்துல தான் அவங்க சொன்னாங்க.. மினிஸ்டரைப் பாருங்க அப்படீன்னாங்க.. அதான் செஞ்சோம்"

"இப்ப பள்ளிக்கூடத்துலயே இதெல்லாம் சொல்றாங்களா?"

"ஆமாம்.. இவனும் பாஸ் பண்ணிட்டா.. பள்ளிக்கூடம் பேரு நல்லாயிடுங்களே! அதுக்காக சொன்னாங்களா யிருக்கும்!!"

"இப்படி சொன்னாங்களே.. இதைச் செய்யலாமான்னு நீங்க யோசிச்சீங்களா? இல்ல .. என்னைத் தான் நீங்க கேட்டீங்களா?"

"இல்லீங்க.. தோணலீங்க.. பையனுக்கு ஒரு வருஷம் வேஸ்டாயிடுமோன்னு தான் இப்படி செஞ்சோம்..."

இவ்வளவு அக்கறையாயிருக்கிற நீங்கள் அவன் படிக்கும் போது அவன் பக்கத்துலயிருந்து சொல்லிக் கொடுத்து ஊக்கப் படுத்தியிருக்கலாமில்லே!!"

"ம்ம்ம்ம்ம்"

"இப்ப நீங்க செஞ்சதெல்லாம் தர்மத்தைத் தாண்டிய செயல்கள்!! தயவு செஞ்சு இனிமே இப்படியெல்லாம் செய்யாதீங்க... அப்படி செஞ்சுட்டு என் கிட்டே நட்பு பாராட்டி உதவி கேட்டெல்லாம் வராதீங்க!! ரொம்ப நன்றிங்க!!"

oOo

அவர்கள் மனம் புண்படக் கூடாது என்று வேறு விஷயங்களைப் பேசி உரையாடலை மிதமாக முடித்தேன்.

இதுல எனக்கு என்ன புரிஞ்சுது?

இப்பல்லாம் மக்களுக்குத் தப்பு எது, தர்மம எதுன்னே யோசிக்கத் தெரியலயா இல்ல யோசிக்க விரும்ப மாட்டேங்கறாங்களா?

அமைச்சர் பெருமக்களெல்லாம் எல்லோருக்கும் அணுகும் முறையில இருந்தாலும் மக்கள் அவர்களை ஒரு நியாயமான ப்ரச்சினைகளுக்காக அணுகுவதில்லையோ?

இது தப்பாயிருந்தாலும் என் நண்பரே இன்னும் கொஞ்சம் பணம் தள்ளியிருந்தா இதுவும் நடந்திருக்குமோ?

என் நண்பரே இதை "நான் EVKS இளங்கோவன் கோஷ்டி ங்கிறதால் இத பொன்முடி எனக்கு செஞ்சு கொடுக்கல... நான் வாசன் கோஷ்டியா இருந்தா செஞ்சிருப்பானுங்க... திமுக பொன்முடி நினைச்சிருந்தா என் பையனுக்கு ஒரு வருஷம் மிச்சமாயிருக்கும்" அப்ப்டீன்னு திசை திருப்பியிருக்கலாமோ ? (தன் பையன் சரியாகப் படிக்காததோ அல்லது இவர் அவன் படிக்கும் போது அவன் மேல் கவனம் செலுத்தாததோ ஒரு ப்ரச்சினையேயில்லை என்று ஒரம் கட்டப்பட்டிருக்குமோ?)

அரசியல்வாதிங்கிறதால அவர் எப்படி வேணும்னாலும் திசை திருப்பலாம..

நான் படிக்க வெச்ச.. படிக்க வைக்க நிதியுதவி செய்கிற ஒரு பையன் பெயிலானதில் எனக்கு வருத்தங்கள் இருந்தாலும்... அவனின் பெற்றோர்களின் தவறான் அணுகுமுறைகள் தோல்வியடைந்ததில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் தெரிகிறது.

இன்னும் அந்தப் பையனிடம் நான் பேசவில்லை..பேசினால்..
"அம்மா அப்பாதான் இப்படித் தவறாக முயற்சி செஞ்சாங்கன்னா..நீ வேணாம்னு தடுத்திருக்க வேண்டாமா?" என்று கேட்க வேண்டும்.

அடுத்த தலைமுறையின் மீது எனக்கு இன்னும் நம்பிக்கையிருக்கிறது!!!

3 comments:

ஜெ. ராம்கி said...

//இப்ப நீங்க செஞ்சதெல்லாம் தர்மத்தைத் தாண்டிய செயல்கள்!! தயவு செஞ்சு இனிமே இப்படியெல்லாம் செய்யாதீங்க... அப்படி செஞ்சுட்டு என் கிட்டே நட்பு பாராட்டி உதவி கேட்டெல்லாம் வராதீங்க!! ரொம்ப நன்றிங்க!!"

:-) Well done!

சிறில் அலெக்ஸ் said...

பணம் காசு பண்ணுவதிலேயே பெற்றோர்கள் கவனமாயிருக்க பிள்ளைகள் எப்படியோ போயிட்டிருக்காங்க.

உண்மையில் இதில் பாடம் கத்துக்கொள்ளவேண்டியது நாமேதான்.

மா சிவகுமார் said...

:-(

அன்புடன்,

மா சிவகுமார்