Wednesday, March 14, 2007

41. இதே போல எல்லாரும் செஞ்சா நல்லாருக்குமே !!

இந்த முறை இந்தியா போன போது செய்த பல நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று.

நண்பரொருவர் வீட்டுத் திருமணம். ஓரளவுக்கு வசதி வாய்ப்புகள் நிறைந்தவர் அவர். நகரில் இருக்கும் நிறைய குடும்பங்கள் அவர்களுக்கு உறவினர்கள் தாம். திருமணத்திற்கென்று நிறைய பேர் வந்தார்கள்.. எல்லோரிடமிருந்தும் வகை வகையான பரிசுப் பொருட்கள் வரும் என்பது எனக்கு நன்கு தெரியும்.

நானும் இதில் ஏதாவது ஒன்றை கொடுத்து விட்டு விடலாம் என்று தோன்றவில்லை. மணப்பெண் வீட்டாருடன் என் நெருக்கத்திற்கும், இளைய தலைமுறைக்கு
நல்லெண்ணம் வளர்க்கும் முறையிலும் மறக்க முடியாத ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆசை..


ooo

நான் படித்த பள்ளி எங்கள் வீட்டு அருகாமையில் உள்ளது. அரசு ஆதரவு பெற்ற தனியார் நடத்தும் பள்ளி. 80 வருடங்களுக்கு மேலும் மயிலாடுதுறையில் இருந்து வருகிறது.

மிகவும் ஏழ்மையான பள்ளி. இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவன் (ஒன்று முதல் ஐந்து வகுப்பு) என்ற முறையில் எனது பள்ளிக்கு நிறையவே உதவிகள் செய்து வந்துள்ளேன்.


தொலைக் காட்சிப் பெட்டி, நிறைய நூல்கள், நிறைய ஏழை மாணவர்களுக்கு உதவிகள்.. ம்ற்றும் இந்த பள்ளிக்கு 6 வகுப்பறைகள் கொண்டஒரு கட்டடம் (12.5 இலட்சங்கள் என் மொத்த செலவில்) என்று இந்த பள்ளிக்கு நிறைய உதவிகள்.


இந்த முறையும் ஊருக்குச் சென்ற போது பள்ளிக்குச் சென்றிருந்தேன். தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஒரு அலமாரி கூட சரியாயில்லை. வெறும் ஸ்டூல் மீது வைத்திருந்தார்கள்.. உட்கார்ந்து பார்க்கும் மாணவர் யார் மீதாவது தவறி விழுந்து விடும் வாய்ப்புகள் உண்டு.. அது தவிர புத்தகங்கள் அடுக்கி வைக்கவும் அலமாரிகள் இல்லை.


தொலைக்காட்சிப் பெட்டி வைக்க ஒரு பெரிய அலமாரி.. மற்றும் புத்தகங்கள் வைக்க மூன்று அலமாரிகள் ஆகியவை ரூபாய பத்தாயிரத்துக்கு நான் வாங்கித்தரலாமென்று முடிவுசெய்தேன்... இவையெல்லாம் பள்ளிக்கு பரிசளிக்க வேண்டும்... ஆனால் இவை நண்பர் வீட்டுத் திருமணத்தின் போது மணமக்கள் சார்பாக.. அவர்கள் திருமண தினத்தை முன்னிட்டு அவர்கள் கரங்களால் அளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.


பள்ளியிலும் சரி யென்று சொல்லிவிட்டார்கள்...

என் நண்பரோ பெண்ணின் தகப்பனார். என் சமூக சிந்தனைகள் யெல்லாம் அவருக்கும் தெரியும். அவர் மறுப்பு எதுவும் சொல்ல மாட்டாரென்ற நம்பிக்கை வேறு. ஆனால் மாப்பிள்ளை வீட்டில் எதுவும் சொல்லாமலிருக்க வேண்டுமே என்ற நியாயமான தயக்கம் அவருக்கும் இருந்தது... எல்லாம் இறைவன் செயல்.. செய்து விடுவோம் என்று நம்பிக்கை இருந்தது...

திருமண நாளும் வந்தது. காலையிலிருந்து மணமக்கள் ரொம்ப பரபரப்பாக இருந்தார்கள்.. எல்லார் காலிலும் விழுந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கி களைத்த மாதிரியும் இருந்தது...


இதற்கு நடுவில் என் கோரிக்கை வேறு.. 'பெண்ணும் மாப்பிள்ளையும் முஹூர்த்தம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் அவசியமாக பள்ளிக்கு வந்து இந்த அன்பளிப்பை அவர்கள் கையால் தர வேண்டும் என்ற என் கோரிக்கை வேறு வைக்கப் பட்டது'

மாப்பிள்ளை வீட்டாரும் பார்க்கலாம் என்று தான் சொன்னார்கள்..

முஹூர்த்தம் முடிந்து.. ராகு காலம் முடிந்து.. மண்டபத்தை விட்டுக் கிளம்பினால் கார் எங்கேயும் நிற்கக் கூடாது என்ற மரபு வேறு குறுக்கே நின்றது..


நானோ பள்ளியில் எல்லா ஏற்பாடுகளையும் அடிக்கடி போயப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.. ஏதாவது காரணத்தால் எதையாவது 'சொதப்பி' விட்டால்.. மணமக்களுக்கு.. அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான நாளில் மறக்க முடியாத தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடுவோமோ என்ற பயம் வேறு.. அதனால் நிகழ்ச்சியின் பொறுப்பு முழுவதும் என் கையில்.. .. . வேறு யாரையும் நம்பிக் கொடுத்தால்.. அவரைத் திட்டி ஒன்றும் பயனிருக்காது...


'மாலை வாங்கியாச்சா?'

'வாழ்த்துரை எழுதியாச்சா?

'எல்லாரும் வரவேற்க வருவாங்களா?"

"ஜூஸ் ஏற்பாடு பண்ணியாச்சா? "

"போட்டோ வீடியோ வெல்லாம் சொல்லியாச்சா?"

ஏகப்பட்ட கேள்விகள்.. ஏகப்பட்ட அலைச்சல்கள்..

ஒரு வழியாக.. மணப்பெண்ணின் தனிப்பட்ட் கோரிக்கையில்.. ('அந்த் அண்ணன் நல்லவங்க.. பாவம்.. ') எல்லாமும் சேர்ந்து....

மாப்பிள்ளையின் பெரிய மனதும் சேர்ந்து ('வண்டி 5 நிமிஷம் பள்ளிக்கூடத்தில் நின்னா.. ஒண்ணும் ஆகிடாது.... வழியில சிக்னல் போட்டா நிக்கிறதில்லையா... அந்த மாதிரி நின்னுடுவோம்...) மணமக்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு 5 நிமிடம் எனக்காக (இந்த அண்ணனுக்காக மட்டும்) நிற்க சம்மதம் கிடைத்தது..


அதற்குப் பின் எனக்குப் பள்ளியில் தான் வேலை.. மணமக்களை வரவேற்று...
ஆசிரிய ஆசிரியைகளின் சுருக்கமான வாழ்த்துரைகளை வழங்கி.. மணமக்களுக்கு மாலை அணிவித்து.. அவர்கள் திருக்கரங்களினாலேயே..பரிசுப் பொருட்களை திறந்து வைத்து பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினோம்...

மணமகனுக்கு மிக்க மகிழ்ச்சி.. அவரே ஒலிபெருக்கியை வாங்கி எல்லோருக்கும் நன்றி சொன்னபோது.. இந்தக் கணத்தை அவர் நன்கு உள் வாங்கிக் கொண்டார் என்று தெரிந்தது..

மணமகன், மணமகள் இருவீட்டாருக்கும் மிக மிக மகிழ்ச்சி.. எல்லோரிடமும் ஒரு நிறைவான மனத்தைப் பார்க்க முடிந்தது...

அவர்கள் வந்த வாகனங்களில் (பள்ளியில் அவர்கள் இருந்தது 20 நிமிடங்கள்) அவர்களை வழியனுப்பி வைத்த போது ஒரு பெரிய நிகழ்ச்சியை.. களங்கமில்லாமல்.. ராணுவ துல்லியத்துடன் நடத்திய களைப்பு எனக்குள் இருந்தது...





இதனால் நான் சாதிக்க நினைத்தது பல;
  1. இது போன்று முக்கியமான நாட்களில் ஒரு பொது நிறுவனத்திற்கு நன்கொடை கொடுக்க எல்லோரையும் நினைக்கச் செய்ய வேண்டும்.
  2. மணமக்களுக்கு இது போன்ற நல்ல நினைவுகள் கொடுத்தால்.. அவர்கள் இல்லறத்தில் அவர்கள் இது போன்று நல்ல காரியங்கள் செய்ய முன் வருவார்கள்.. (அவர்கள் வாழ்வில் வெற்றி பெற எல்லோருடைய ஆசிகளும் சேரும் போது.. அவர்கள் இல்லறம் நிச்சயமாக வெற்றி பெறும்)
  3. இதைப் பார்க்கின்ற பள்ளி மாணவர்களும் வரதட்சணைக்கு பதிலாக இது போல் என் திருமணத்தன்று செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.. (இது பச்சை மண்ணில் தூவப்பட்ட விதையல்லவா?)


இந்த மூன்றையுமே நான் ஓரளவுக்கு திருப்தியாக செய்த மாதிரி இருந்தது... எல்லாம் எனக்கு மிகத் திருப்தியாக இருந்தது... என் கோரிக்கைக்கு இணங்கிய மணமகன் சிவகுமாரின் பரந்த உள்ளத்திற்கு என் நன்றிகள்...

அவர்கள் மணவாழ்க்கை மிகச்சிறப்பாக அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்....













பி.கு: இந்தப் படங்களில் என் பெயருக்கு முன்னால் 'கல்வி வள்ளல்' என்று போட்டுள்ளதைக் கண்டுக்காதீங்க.. அது என் அன்புப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் என் மேலுள்ள அதீத அன்பினால் செய்த ஒரு 'உயர்வு நவிற்சி அணி' விஷயம் அது.... அந்தப் பட்டம் வாங்க நான் இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என்று எனக்கு நினைவூட்ட சொல்லப் பட்ட விஷயம் அது.. நண்பர் அபிஅப்பா.. அவங்க பாப்பாவை பரத நாட்டியக் கிளாசிலே சேர்த்து விட்டுட்டு பிரபல நாட்டியமேதை பத்மா சுப்ரமணியத்தையே சவாலுக்கு அழைக்கலையா... (பத்மா சுப்ரமணியன் அவர்களே.. சவாலைச் சந்த்திக்கத் தயாரா? (பாகம் 1)) அது மாதிரின்னு நினைச்சுக்கோங்க..

9 comments:

சீமாச்சு.. said...

அந்த முதல் படத்தில் மணமக்களுடன் நிற்பது சாட்சாத் நானேதான்..


அன்புடன்
சீமாச்சு...

மாதங்கி said...

very inspiring Seemachu!

அபி அப்பா said...

சீமாச்சு! நான் அப்படி தலைப்பு வைத்தது ஒரிஜினல் நம்ம DBTR குசும்பு தான் தவிர, நிச்சயமாக அந்த மேதையை கலங்க படுத்த அல்ல.:-))) பிறகு..நான் உங்ககிட்டே ஏற்கனவே கேட்ட அண்ண சார் பத்திய "தன்னம்பிக்கை" பதிவை இன்று வெளியிடால் பொறுத்தமாக இருக்கும்.

அபி அப்பா said...

லிங்க் கொடுத்ததுக்கு நன்றி! மிக்க நன்றி!

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள் சீமாச்சு

கண்மணி/kanmani said...

எப்பவாச்சும்,யாருக்காச்சும் தான் இதுமாதிரி வித்தியாசமாய் செயல்படுத்தத் தோன்றும்.உங்கமுயற்சிக்கும்,ஒத்துழைப்பு தந்த மணமக்களுக்கும் பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

ரொம்ப நல்ல விஷயம்.

நீங்க எல்லாருமே நம்ம படிச்ச பள்ளிக்கூடத்துக்கு இப்படி எதாவது செஞ்சா
நல்லது.

அதென்ன நீங்க?

நாந்தான் வருசம் ஒரு பள்ளின்னு ஓடிக்கிட்டு இருந்தேனேப்பா.
யாருக்குன்னு செய்வேன்?

அதான் எதாவது ஆதரவு இல்லாத மக்களுக்குக் கொஞ்சம் செஞ்சுடறேன்.

Hariharan # 03985177737685368452 said...

சீமாச்சு,

நல்ல விஷயம் செஞ்சு காட்டி இருக்கீங்க!

மொய் வழியாக மெய்யாக நலப்பணி செய்யலாம்னு சொல்லியிருக்கீங்க!

பாரதி காண மறந்த புதுமைஆண்
:-))

இந்த விஷயத்தை எல்லோருமே ஒருதரமாவது ஈ அடிச்சான் காப்பி அவசியம் அடிக்கணும்!

Anonymous said...

கிரேட்ங்க, ரொம்ப சந்தோஷமாய் இருந்துச்சி. கொடை கொடுப்பது மட்டும் பெரிதல்ல. அதை கொடுக்கும் விதமும் முக்கியம்தான் என்று உணர வச்சிட்டீங்க. மேலுக்கு வரும்போது மற்றவர்களுக்கு எதாவது செய்யணுங்க. இல்லன்னா என்ன பயன்? அதை ஒரு இயக்கம் மாதிரி வளக்கணுங்க.உங்கள் கொடை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.