எனக்குத் தெரிந்த என் கிறுக்குத் தனங்கள் ஐந்தை எழுதவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிற அபிஅப்பாவிற்கு ( கோபி, பாசமலர், கொத்ஸுக்கு அபிஅப்பாவின் சூடான பதில் ) எனது நன்றிகள்.
இதுவரை இது போல கேட்டவர்களுக்கு அவர்கள் அன்புக்குக்கட்டுப்பட்டு நான் எழுத நினைத்தும் எழுத் விஷயமில்லாததால் எழுத முடியவில்லை. இன்னொரு முறை அது போல் புறக்கணிக்கக் கூடாது என்று இப்பொழுது எழுதிவிட முயற்சி...
அபிஅப்பா அழைத்த ஐந்து பேரில் இரண்டு பேர் மயிலாடுதுறைக்காரர்கள்.. எங்கள் ஊருக்கு 40% இடஒதுக்கீடு தந்த "மயிலாடுதுறை தந்த நகைச்சுவைப் பேரொளி" "பெண் ரெட்டைவால் ரெங்குடு" அபிபாப்பா IAS (எதிர்காலம்) அவர்களின் அப்பாவுக்கு நன்றி!! நன்றி!!
இப்பொழுது என் கிறுக்குத் தனங்கள் .. கொஞ்சம் சீரியஸாக இருந்தால் மன்னிச்சுக்கோங்க.
கிறுக்குத் தனம் 1:
பெரிய மற்றும் பேர் பெற்ற கோவில்களுக்கு அவ்வளவாகச் செல்வதில்லை. திருப்பதிக்கு, வாழ்நாளிலேயே இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே சென்றதுண்டு. அதுவும் அலுவலகத்தில் என் க்ளையண்டின் உயரதிகாரி வற்புறுத்தி அழைத்துச் சென்றதுதான்.
கோயில்களுக்குச் செல்லும் போது.. சாமியைப் பார்க்காமல் கோவில் பராமரிப்பைப் பார்த்து.. கோவிலுக்கு என்னென்ன தேவை என்று குறித்துக் கொண்டு.. முடியும் போது நினைவாகச் செய்து கொடுப்பது.. (அபிஷேகக் குடங்கள், தீபாராதனன விஷயங்கள், தண்ணீர் கொண்டு வரும் மோட்டார், வெங்கல மணி, சுவருக்கு டைல்ஸ், டிஸ்டெம்பர், பூட்டுக்கள்) சமயங்களில் சாமியைப் பார்க்காமலே திரும்பி வந்ததுண்டு... என்னுடன் கூட வந்து சாமி கும்பிட ஓடிப்போய்.. தீபாராதனை ஒற்றிவிட்டு நெற்றியிலும் கையிலும் திருநீறும் குங்குமமாய் ஓடிவந்து ..'கோயிலுக்கு வந்துட்டு சாமி பாக்காம இருக்குற ஒரே ஆளு நீயாத் தான் டா இருக்கும்" சொன்ன நண்பருக்கு நான் சொன்ன பதில் "சாமியை நான் பாக்கணுங்கறே.. சாமி நம்மைப் பார்த்தா பத்தாது.. இப்ப அவரு என்னைப் பாத்திருக்க மாட்டாருன்னா நெனக்குற?"
கிறுக்குத்தனம் 2:
சென்ற வருடம் என் மூத்த மகளின் பிறந்த நாளுக்கு ஒரு talking globe ($150) வாங்கித் தந்தாள் என் தங்கமணி. அது உலகத்திலுள்ள நாடுகளின் பெயர், பணத்தின் பெயர், தலை நகரம், இடங்களுக்கிடையேயான தூரம் எல்லாம் சொல்லும். அதை வைத்து நிறைய பொது அறிவு வளர்க்கலாம். அதை வைத்து என் மகள் விளையாடும் போது ..
"இதைப் போல இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ் கிடைக்குமா? ஒரு 500 டாலர் ஆனாலும் பரவாயில்லை..? " - நான்
"உங்க பொண்ணுக்கு இது போதும்.. இன்னும் பெரிசு வாங்கினால் அவளால கையில் எடுத்துக் கொண்டு போக முடியாது.." - தங்கமணி
"இவளுக்கு இல்லை கண்ணம்மா.. இன்னும் பெரிசா வாங்கி மாயவரத்துல நம்ம ஸ்கூல்ல வெச்சா.. நம்ம புள்ளைங்க நிறையக் கத்துக்குமே..ன்னு தான்.."
எல்லாத்தையுமே அடுத்தவங்களுக்காகப் பார்த்துப் பார்த்து... 'இந்தாளுக்கு தன் குடும்பத்துக்கு வேண்டியதே தெரியமாட்டேங்குதே" என்று ஒரு குற்றச்சாட்டை இன்னும் சுமப்பது..
கிறுக்குத்தனம் 3:
இந்த வருடம் மயிலாடுதுறையில் குடியரசு தின விழாவில் பள்ளிக்குக் கொடியேற்றி, சிறப்புரையாற்றச் சென்றிருந்த போது.. குழந்தைகளுக்குப் பரிசு வழங்க வேண்டியிருந்தது.. அப்பொழுது தன் மகளின் ஆட்டத்தைக் காண வந்திருந்த ஒரு (ஏழை உழைப்பாளி) தந்தையை மேடைக்கு அழைத்து அவரையும் சில பரிசுகளை அவர் கையால் வழங்க வைத்தது...
"எங்க ஸ்கூல் 80 வருச வரலாற்றுல் இது வரைக்கும் இந்த மாதிரி, விழாவுக்கு வந்த பெற்றோரை வைத்து பரிசு வழங்கியது கிடையாது சார்.. எங்களாலயெல்லாம் இப்படி செய்ய முடிஞ்சிருக்காது சார்.. நீங்க இப்படி எப்படி எல்லா மரபுகளையும் பொட்டு பொட்டுன்னு உடைக்கிறீங்க?.. "
இந்தப் பள்ளியின் இந்நாள் ஆசிரியை ஒருவரின் கேள்வி.
கிறுக்குத்தனம் 4:
2002 ம் வருஷம்.. நவம்பர் 7ம் தேதி.. இறந்து போன அம்மாவுக்கு நவம்பர் 9ம் தேதி மதியம் இடுகாட்டில் காரியம் செய்து கொண்டிருக்கிறேன். சிதையில் அடுக்குவதற்கு முன் அம்மாவின் உடல் கீழே மண்ணில் கிடத்தப் பட்டு நான் மந்திரங்கள் சொல்லிச் சுற்றி வருகிறேன்.. லேசாக.. மிக லேசாகத் தூறல் போட்டுக் கொண்டிருக்கிறது. 'கொண்டுவந்த அக்னி அணைந்து விடாது' என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருந்தாலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் இருந்தது... எல்லார் கண்ணிலும் ஈரம்.. கொஞ்சம் கண்ணீர்.. கொஞ்சம் மழைத் துளிகள்..
சுற்றி வருவதை ஒரிரு வினாடிகள் நிறுத்தி...
'அண்ணே.. மூர்த்தியண்ணே.. இப்படி வாங்கண்ணே"
'என்ன சீனா?"
"கொஞ்சமா மழை பெய்யும் போது நமக்கே காரியம் பண்ண சிரமமாயிருக்கே.. மத்தவங்கள்ளாம் எவ்வளவு சிரமப்படுவாங்க்? 2 லட்ச ரூபாய் தரேன்.. இங்க அம்மா பேர்ல ஒரு மண்டபம் கட்டிடுங்கண்ணே..?"
"முதல்ல அம்மா காரியத்தை முடிச்சு.. கரை சேர்த்துட்டு வா, சீனா.. அப்புறமா யோசிக்கலாமே.." - அழுது கொண்டே சொன்ன என் தாய்க்குத் தலை மகன்..
இந்த யோசனை எல்லோராலும் பிறகு நிராகரிக்கப் பட்டது.. "அபர (அசுப) காரியங்களெல்லாம் தனி ஆளாகச் செய்யக்கூடாது.. அப்புறம் அடிக்கடி இடுகாட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை வரலாம்... அது குடும்பத்துக்கு நல்லதல்ல" என்று சொல்லி.. "வேற வேலையிருந்தா பாரு.. ராஜா" என்று வழிகாட்டப்பட்டேன்..
கிறுக்குத்தனம் 5:
அதே நாள்.. அதே இடுகாடு.. சிதையில் அம்மா.. உடலெல்லாம் வரட்டியால் மூடப்பட்டு...கடைசியாக அம்மாவின் முகத்துக்கு முத்தம் தந்து அழுது வாய்க்கரிசி இட்டேன்.
"வேற யாராவது போடணுமா? கூப்பிடணுமா?"
வந்திருந்தவர்களில் மற்ற் சாதி நண்பர்கள், அன்பர்கள் மரபு கருதி ஒதுங்கியிருந்தார்கள்..
"யார் போடணும்னு ஆசைப் பட்டாலும் போடச்சொல்லுங்களேன்" - நான்
"நம்ம வழக்கத்துல வேற யாரும் போடக்கூடாது.. மாப்பிள்ளை" - மரபு தெரிந்த முதியவர் ஒருவர்..
"பரவாயில்ல.. மாமா.. நான் வெளி நாட்டில் இருந்த போது இவாள்ளாம் தான் எங்கம்மாவை தன் அம்மா மாதிரி பாத்துக் கிட்டிருந்தா.. இப்ப நான் மட்டும் திரும்பி வந்து 'இது என் அம்மா.. உங்களுக்கு அம்மா இல்ல' ன்னு சொந்தம் கொண்டாடறது ரொம்ப பெரிய சுயநலம்... அவங்களும் வாய்க்கரிசி போடணும்.."
கண்ணீருடன் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டபோது.. அங்கு வழிவ்ழியாய் வந்த பல மரபுகள் உடைக்கப் பட்டன... என் தாய்க்கு அன்று ஆயிரம் மகன்கள் உணவிட்டார்க்ள்.... நிறைந்த மனதுடன் என் அம்மா வானெய்தினார்கள்
நிறைவு:
இதெல்லாம் என் கிறுக்குத் தனங்களென்று எல்லாரும் சொல்லத்தான் சொல்றாங்க.. நான் தான் இல்லேன்னு சொல்லிக் கிட்டிருக்கேன்.. உங்களுக்கும் அப்படித் தோணீனால் சொல்லுங்களேன்..
கிறுக்குத்தனங்கள் எழுதி முடித்தவுடன், வேறு ஐவரை இந்த விளையாட்டுக்கு அழைப்பதென்பது மரபு.. அம்மா நினைவில் கண்ணீருடன் முடிப்பதால் வேறு யார் நினைவும் மனதில் இப்பொழுது இல்லை.. தொடர விருப்பப் பட்டவர்கள் தொடரலாம்...
8 comments:
த்சு..........ஒண்ணும் சொல்ல முடியாமப் பண்ணிட்டீங்க சீமாச்சு.
அய்யா சாமி, இதெல்லாம் கிறுக்குதனம் இல்லைய்யா. நல்லா இருங்க.
(அப்புறம் அந்த க்ளோப் நானும் வாங்கியாச்சு, ஆனா 100 டாலர்தான் குடுத்தேன். தங்கமணி கிட்ட இந்த பின்னூட்டத்தைக் காட்டதீங்க. இப்போ நம்ம 5 வயசு பையன் நம்மளை சாக்கடைப்பீ சாரி ஜியாக்கிரபியில் பெண்டு நிமுத்தறான்.) :)))
கண்ணீரோட முடிச்ச பதிவுல கலாட்டா பின்னூட்டம் போடறது சரியாத் தப்பான்னு தெரியலை. தப்பா இருந்தா வெளியிடாதீங்க ப்ளீஸ்.
இதுக்கு பெயர் கிறுக்குத்தனமெல்லாம் கிடையாது. ஆர்வக்கோளாறுஅல்லது எதையாது புரட்டிப்போடணும் எண்ட நிதான வெறி.அல்லது வித்தியாசமா சாதிக்கணும் எண்ட தன் ஆர்வம்.அல்லது எல்லோரையும் வித்தியாசமா சந்தோசப்படுத்தணும் என்ற எண்ணமிகுதி.
உங்க சொந்த ஊரு எது?
நல்ல காரியம் செய்து இருக்கீங்க, எனக்கும் நான் படித்த பள்ளிக்கு உதவனம்னு ஆசை இருக்கு , அது ந்டக்கும்
அப்புறம் இதெல்லாம் கிறுக்கு தனம் இல்லை , உண்மையான கிறுக்கு தனம் னா என்னான்னு என் பக்கம் வந்து பாருங்க
மாயவரத்துல பள்ளிக்கூடம் பேர் சொல்லமுடியுமா?
மத்தவங்களுக்கு நல்லது நினைக்கிறதே இப்ப அப்நார்மல் ஆகிடுச்சு .
கடைசியில் கண்ணீர் வரவழைச்சிட்டீங்க.
நன்றி S.S.வாசன் அண்ணா! மிக்க நன்றி, நீங்கள் செய்த இத்தனையும் எனக்கு தெறியும். நான் ஒவ்வொறு முறை போகும் போதும் நம்ம புஷ்பவள்ளி டீச்சரும், K.R சாரும் நீங்கள் செய்து வருவதை சொல்லுவார்கள்!(அம்மா பெயரில் உள்ள பசுமடம் முதல் சப்ஜாடா தெறியும்)என் அழைப்பு ஏற்று வந்து உங்கள் கிறுக்கில்லா நல்ல குணங்களை சொன்னதுக்கு மிக்க நன்றி!
அன்பு முத்துலெட்சுமி,
உங்கள் வருகைக்கு நன்றி !!
இந்தப் பதிவிலுள்ள பள்ளியின் பெய்ர் 'குருமூர்த்தி நடுநிலைப் பள்ளி'. இது மயிலாடுதுறையில் வள்ளலார் கோவில் அருகில் பூம்புகார் சாலையில் இருக்கிறது..
இங்கு தான் நான் ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரையில் படித்தேன்.
எனது அன்புக்குரிய இன்னொரு பள்ளி, நான் படித்த DBTR தேசிய மேல்நிலைப் பள்ளி. இங்கு நான் 6 முதல் 12 வகுப்புகள் வரைப்படித்தேன்.
//மத்தவங்களுக்கு நல்லது நினைக்கிறதே இப்ப அப்நார்மல் ஆகிடுச்சு .
கடைசியில் கண்ணீர் வரவழைச்சிட்டீங்க.//
நன்றி!!
அன்புடன்,
சீமாச்சு...
அன்பு நளாயினி மேடம்,
முதல் முறையாக என் பதிவுக்கு வந்தமைக்கு நன்றி..
//இதுக்கு பெயர் கிறுக்குத்தனமெல்லாம் கிடையாது. ஆர்வக்கோளாறுஅல்லது எதையாது புரட்டிப்போடணும் எண்ட நிதான வெறி.அல்லது வித்தியாசமா சாதிக்கணும் எண்ட தன் ஆர்வம்.அல்லது எல்லோரையும் வித்தியாசமா சந்தோசப்படுத்தணும் என்ற எண்ணமிகுதி. //
இது தானா அது.. அப்படீன்னு எனக்கு இன்னும் புரியலை.. நீங்க சொல்ற விஷயங்கள் நடிகர் பார்த்திபனைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கேன். நான் அப்படியா-ன்னு எனக்குப் புரியலை..
நன்றி.
அன்புடன்,
சீமாச்சு...
Post a Comment