Monday, May 30, 2011

120. வளை (டை)யோசை கலகலகலவென கவிதைகள் படித்திட...

பக்கத்தில் உள்ள செய்தியை ஒரு முறைக்கு இரு முறை படித்து விடுங்கள்..
கோவையைச் சேர்ந்த சீனிவாசன் சொல்கிறார்.. தனக்கும் சுமதிக்கும் காதல் பூத்த முதல் தருணத்தைச் சொல்கிறார்..” ஊர்ல மாரியம்மன் கோவில் திருவிழா..சுமதி அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க..கோயில்ல பொங்கல் வெச்சாங்க..நான் தோஸ்த்துக்களோடசாப்பிடப் போனேன். சுமதி பரிமாறினப்ப என் இலையில் மட்டும் பொங்கல் அதிகமாக விழுந்தது...அப்பவே நான் அவங்ககிட்டே விழுந்துட்டேன்” என்று..


எவ்வளவு கவித்துவமான காதல் இது.. சுமதி பரிமாறும் போது எல்லோருக்கும் எவ்வளவு போடுகிறார் என்பதை கவனித்து.. தனக்கு மட்டும் அதிகமா விழ்ந்ததில் காதலை இவர் பரிமாறியிருக்கிறார்.. நியாயமாகத்தான் தெரிகிறது.. இதே போல ஒரு காட்சி சுப்ரமணியபுரம் படத்திலும் வரும். நான் ரசிச்ச் ஒரு காட்சி அது..


விகடனின் பின்னூட்டப் பெட்டியில் இந்தச் செய்தியின் கீழேயே....காதல் தெரியாத ஒரு அபிஸ்து வாசகர்..”பொங்கல் ஒரு கரண்டி கூட போட்டாலெல்லாம் காதல் வருமா?” என்று கேட்கிறார்.. அவருக்கு இன்னொரு காதல் இளவரசர் அழகாக பதில் சொல்கிறார்..” இங்கு பொங்கலுக்கும் காதலுக்கும் பெரிய்ய சம்பந்தமில்லை.. பொங்கல் அதிகமாகப் போடுவதில் காதலின் பரிமாணம் தெரிகிறது” ரொம்ப நியாயம்..

இதைப்படிச்ச போது.. எனக்குள்ளும் கொசுவர்த்தி சுத்தியது.. ஆனால் என்(ங்கள்) விஷயத்தில் பொங்கல் இல்லை.. ஆனால் வடை.. (அதனால் தானோ என்னவோ, தமிழ் இலக்கியங்கள் (?) பொங்கல்-வடை என்று எப்பொழுதுமே சேர்த்துச் சொல்கின்றன..


சில வருடங்களுக்கு முன்னர்.. (சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு எந்த வருடமென்று தெரியும்.. ஆனால்.. அது இங்கு முக்கியமில்லை..)



வடக்கு அமெரிக்கா நகரங்களில் உள்ள சில நூற்று சொச்ச கோவில்களில் ஒரு கோவில்.. தென்னிந்தியக் கோவில்.. நண்பர் வீட்டு விசேஷத்திற்காக அனைவரும் கோவிலில் குழுமியிருந்தோம். கிட்டத்தட்ட 150 பேர்... அனைவரும் நண்பர் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள்.. மற்றும் சில உள்ளூரார்..

கோவிலில் இறை சன்னதியில் பூஜை நடந்து கொண்டிருந்தது. மடப்பள்ளியில் (கிச்சனில்) அன்றைய உணவும் பிரசாதமும் தயாராகிக்கொண்டிருந்தது.. மடப்பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று வந்து கொண்டிருந்த சில தன்னார்வலர்களில் ஒரு நீல நிற சூரிதார் அணிந்த ஒரு கிளியும் அடக்கம். பறந்து விரிந்து கட்டுக்குள் அடங்க மறுத்த சுருள் முடி, நல்ல நிறம்.. சாண்டில்யன் கதைகளில் விவரிக்கப்படும் அரசிளங்குமரிகளின் விவரணையில் முழு அளவு பொருந்தக்கூடிய அழகுப் பதுமை அந்தக் கிளி.. (இந்தப் பெண்களையெல்லாம் அந்த சாண்டில்யன் கிழவர் எப்படி பக்கம் பக்கமாக வர்ணிக்கிறாரோ.. நமக்கெல்லாம் வர்ணனையெல்லாம் மனதில் வருகிறது.. எழுத வரும் போது மட்டும் குணா பட கமலஹாஸன் அலவில் திணறுகிறது..) மற்ற தன்னார்வலர்கள் ஆண்கள்..

என்னுடன் நின்றிருந்து இரண்டு இளைஞர்களுக்கும், இரண்டு பேரிளைஞர்களுக்கும் மடப்பள்ளியில் தயாராகிக் கொண்டிருந்த வடை வாசனையில் ஒரு கண்.. அதிலும் ஒருவர் வடைப் பிரியர்.. இரண்டு முறை மடப்பள்ளியை அணுகி... “அதெல்லாம் நெய்வேத்தியத்துக்கு அப்புறம் தான் சார். அதுவும் பரிமாறும் போது தான்..” என்று பேச்சு வாங்கி வந்துவிட்டார்... அப்பொழுது தான் அங்கு நான் நுழைகிறேன்.. என்னையும் வம்புக்கிழுத்தனர்.. “என்னடா பெரீய்ய சீமாச்சு நீ.. முடிந்தால் கிச்சனிலிருந்து வடை வாங்கிக்கொடு பார்க்கலாம்..” என்று பெட்டு கட்டினர்.. நானும் முயற்சி செய்து பார்த்தேன் .. கிட்டத்தட்ட முடியவில்லை.. ஆனாலும் நான் வீறாப்பாக..”எது எப்படியோ.. இன்று கோவிலில் முதல் வடை எனக்குத்தான்..” என்று சபதமிட்டேன்.. “ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியாது..” .. எங்கள் வாக்குவாதம் நடந்த இடத்தில் (நீலக்)கிளியும் அவ்வப்போது போய வர இருந்தது.. நானும் (அனேகமாக எல்லாரும் தான்..) அதன் நடவடிக்கைகளை ஓரக்கண்ணால் அனுபவித்துக் கொண்டிருந்தனர். எங்கள் உரையாடல் முழுவதும் நடந்தது தமிழில்.. சிறிது விசாரித்ததில்.. கிளிக்கு தமிழ் தெரியாது.. கன்னடம் மட்டுமே புரியும் என்பது சில துப்பறியும் சாம்புக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பரிமாறப்பட்டது..

அதற்குள் சன்னதியில் பூஜை விறுவிறுப்படைய எல்லாரும் அங்கு அழைக்கப்பட்டோம்.. அங்கு நடந்த பல பரிமாற்றங்களில் மதிய நேரம் 1 மணியைத் தொட்டதும்.. வயிறு பசிக்க ஆரம்பித்ததும்.. ஏதாவது சாப்பிட்டால் போதும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.. வடையும் கிளியும் மனதுக்குள் வந்து வந்து போனாலும் சபதம் மட்டும் மறந்து விட்டது.. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மைதான் போலும்.. எனக்கே சபதம் மறந்து விட்டது..

சாப்பாட்டு நேரம்.. எல்லோரும் வரிசையாக தரையில் அமர்த்தப்பட்டோம்.. வரிசைக்கு 25 பேர் வீதம் 6 வரிசை பந்தி அமர்வு.. என்னுடம் பெட்டு கட்டிய பேரிளைஞ்ர் ஞாபகமாக முதல் வரிசையில் முதலில் அமர்ந்திருந்தார்.. நான் (சபத) நினைவில்லாமல் முதல் வரிசையில் 15 வதாக இன்னொரு நண்பருடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தேன்..

தன்னார்வலர்களும்.. (நீலக்)கிளியும் உணவு பரிமாறினார்கள்..பாயாசம், பருப்பு, சாதம், பொறியல் வகையறாக்கள் முதல் வரிசையிலிருந்து பரிமாறப்பட்டன.. குனிந்து சாதம் பார்த்துக் கொண்டிருந்த என் முகம் முழுவது ஒரு நீல நிற் ஒளி பாய்ந்தது.. சுற்றியிருப்பவர்களெல்லாம் fade out ஆகிக்கொண்டிருந்தனர்.. என் இலையில் மட்டும் இரண்டு (நண்பர்களே.. கவனிக்கவும்.. ஒன்று இல்லை.. இரண்டு) வடைகள் விழுந்தன.. சில வினாடிகள் மட்டும் அங்கேயே (என்னருகிலேயே) நின்றுவிட்டு முதல் வரிசையின் முதலுக்குச் சென்று வடை பரிமாற ஆரம்பித்தது நீலக்கிளி..

எனக்குத்தான் விழுந்தது....முதல் மட்டுமல்ல.. முதல் இரண்டு வடைகளும்..... எனக்குக் கிடைத்தது மிக ஸ்பெஷலாக வரிசை மாறிவந்து பரிமாறப்பட்ட வடை(கள்)...

இதுவே தமிழ்ப்படமாகயிருந்திருந்தால்.. அப்படியே கட் பண்ணி சுவிட்சர்லாந்திலோ.. மச்சுபிச்சுவிலோ ஒரு டூயட் பாடியிருக்கலாம்..

பொங்கல் காதல் மாதிரியே.. இங்கேயும் ஒரு காதல் பூத்ததுதான்.. ஆனால் சூழ்நிலையின் அபத்தத்தை உணர்ந்து (எனக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள்.. நீலக்கிளியின் கால் விரல்களிலும் புது மெட்டி..-வடை போடும் போது கவனித்தது..) அந்தக்காதல்..அப்பொழுதே விடை (வடை??) பெற்றுக்கொண்டது..

ஆகவே.. நண்பர்களே.. பொங்கல் அதிகமாக இலையில் விழுந்தாலும் காதல் மலரும்.. வடை கிடைத்தாலும் காதல் மலரும்...

இங்கு பொங்கலுக்கும் வடைக்கும் காதல் உறவல்ல.. அவை வெறும் தூதுப்புறாக்களே....

Friday, May 27, 2011

119. கலாம் ஐயா... சலாம்.. சலாம்..

விகடன் இதழ் செய்யும் சில புண்ணியங்களில் ஒன்று.. நமது அப்துல் கலாம் ஐயாவிடமிருந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் வாங்கிப் போட்டதும் ஒன்று.

அவர் பதிலளித்த கேள்விகளில் எனக்குப் பிடித்தமான கேள்வி பதில்களைக் கீழே கொடுத்திருக்கிறேன். முதல் இரண்டு கேள்வி-பதில்கள் எனக்கு மிக மிகப் பிடித்தன.. அதுவும் அந்த முதல் கேள்விக்கான பதில்.. அருமையிலும் அருமை..

நான் மிகமிக ரசித்த வரிகள்..

'நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்குத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும்.

அந்தக் கேள்விBoldயைக் கேட்டவர் எங்கள் ஊர் வழக்கறிஞரும், எனது மனதுக்குகந்த பள்ளியான.. மயிலாடுதுறை DBTR தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும் எனது ஜூனியரும்.. அபிஅப்பாவின் நண்பருமான.. ராஜ்மோகன்..

ரொம்ப நன்றி ராஜ்மோகன்.. ரொம்ப ரொம்ப நன்றி கலாம் ஐயா !!



கி.ராஜ்மோகன், மயிலாடுதுறை.

''அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக மலிந்துவிட்ட இந்தக் காலத்தில், நீங்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி துவங்கக் கூடாது? இளைஞர்கள் நாங்கள் உங்களுக்குத் தார்மீக ஆதரவு அளிப்போமே?''

''நண்பர்களே, ஊழலை ஒழிப்பதற்காகப் பல சட்டங்கள் இருக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத் தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார் கள். லஞ்சம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள்தான் தங்கள் பணிகளின்போது ஊழலில் ஈடுபடு கிறார்கள். ஆனால், ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்கக் கூடிய சூழ்நிலை வர வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும்? இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபட்டு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது? இளைஞர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? லஞ்சத்தால் வரும் இழிவுகளை எப்படி அந்தக் குழந்தைகளால், இளைஞர்களால் தாங்கிக்கொள்ள முடியும்? ஊழலால் வரும் பணத்தில் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் துரதிர்ஷ்டவசமாக லஞ்சத்தில் ஈடு படும் பெற்றோர்களை மாற்ற முடியுமா என்பது தான் கேள்வி. மாற்ற முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை. ஏனென்றால், அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம், இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் தங்களின் பெற்றோர்கள் மீது பிரயோகிப்பார்கள் என்றால், லஞ்சத்தைவிட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால், தான் பெற்ற பிள்ளைகள் அவமானமாக நினைக்கும் ஓர் இழி செயலான ஊழலைச் செய்ய, எந்த ஒரு பெற்றோருக்கும் மனம் வராது. ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தில் உள்ள இளைய சமுதாயமும், லஞ்சத்துக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால், நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு, ஊழலில் இருந்து விடுபடும். அதை விடுத்து, ஒரு தலைவனால் மட்டுமே, அல்லது ஒரு கட்சியால் அல்லது மீடியாவால் அல்லது சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாடு மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு வீடும் மாற வேண்டும்.

இதற்காகத்தான் இளைய சமுதாயத்துக்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஓர் இளைஞர்கள் இயக்கம். அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், 'என்னால் எதைக் கொடுக்க முடியும்’ அல்லது 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை, இளைஞர்கள் மனதில் உருவாக்குவதுதான். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து, அதைச் செயல்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். 'எனக்கு வேண்டும்’ என்ற சுய நல எண்ணம்தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடு மாறும்.

'நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்குத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும். இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்குத் தயாரா? வாருங்கள் நண்பர்களே!''

ச.செந்தமிழன், கானாடுகாத்தான்.

''உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வொன்றை எங்களுடன் பகிர்ந்துகொள்வீர்களா?''

''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''



''நாட்டின் வளர்ச்சிக்கு அடுத்த தலைமுறை என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் நீங்கள், இன்று நாட்டைச் சீரழித்துக் கெடுக்கும் ஊழலை எதிர்க்க அண்ணா ஹஜாரேவைப்போல ஏன் ஓர் இயக்கம் தொடங்கவில்லை? உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் ஏராளமானோர் இணைந்திருப்போமே!''

''இந்தியாவை வளமான நாடாக்க, எண்ணற்ற இளம் தலைவர்கள், தொலை நோக்குப் பார்வையுடன் உருவாக வேண்டும். இந்தியா அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கப்பட்டுவிட்டால், தன்னலம் இல்லா, தன்னம்பிக்கை உடைய தலைவர்கள், நம்மிடையே தோன்றுவார்கள். காலம், அவர்களது வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இது, காலத்தின் கட்டாயம். நீங்கள் ஒரு தலைவரை ஏர் நோக்கிப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் பல தலைவர்களை உருவாக்க முயற்சித் துக் கொண்டு இருக்கிறேன்!''



ஆர்.சுரேஷ், துறையூர்-10.

''சினிமாக்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களைக் காட்டும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''

''நான் சினிமா பார்த்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தீவிரவாதிகளுக்கு நாடு கிடையாது, மதம் கிடையாது, நல்ல மன நிலை கிடையாது. நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க ஐந்து அம்சம்கொண்ட NCET (National Vampaign to Eradicate Terrorism ) என்ற திட்டத்தை முன்வைத்தேன். அதாவது, தீவிரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்த இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி உருவாக்கப்பட வேண்டும். உடனடியாக விசாரித்து நீதி வழங்கும் வகையில் சட்டம் இயற்றி, நீதிமன்றம் கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மக்கள், அரசுடன் கைகோத்து, தீவிரவாதிகளை அடையாளம் காண வேண்டும். அறிமுகம் இல்லாத சந்தேகம் ஏற்படுத்தும் நபர்களுக்கு, தீர விசாரிக்காமல் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. மற்றும் தேசிய அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஆவணம் இல்லாமல், எந்த வசதியையும், சலுகையையும், பொருள்களையும் வாங்க முடியாது என்ற நிலை வர வேண்டும். இந்த யோசனையில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றி இருக்கிறது!''

ச.கோபிநாத், சேலம்.



''தற்போதைய நிலையில் 'இந்தியன்’ என்று சொல்லிக்கொள்வதால், பெருமைப்படும் விஷயங்கள் என்ன மிஞ்சி இருக்கின்றன நம் நாட்டில்?''

''சுதந்திரம் அடைந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. உலகத்திலேயே இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. 64 வருட ஜனநாயகப் பயணத்தில் எவ்வளவோ நல்லது நடந்திருக்கிறது. எவ்வளவோ தீமைகள் நடந்திருக்கின்றன. எவ்வளவோ சாதனைகளையும், வேதனைகளையும் தாண்டி நாம் நடை போட்டுக்கொண்டு இருக்கிறோம். இவற்றுக்கு நடுவில், ஆகாயத்தில் மின்னும் நட்சத்திரம்போல் ஒன்று மின்னிக்கொண்டு இருக்கிறது. அந்த நம்பிக்கை நட்சத்திரம்தான் ஜனநாயகம்... ஜனநாயகம்... ஜனநாயகம்!''


தாமரை நிலவன், திருத்துறைப்பூண்டி.

''தாங்கள் சிறுபான்மை இனத்தவராகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டதோ, சந்தோஷப்பட்டதோ உண்டா?''

''அதைப்பற்றி சிந்தித்ததே இல்லை. அப்படிச் சிந்திக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதே இல்லை. ஒரு முறை டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா மேல்நிலைப் பள்ளி யில் ஹமீலா அக்தர் என்ற மாணவி இதே கேள்வியைக் கேட்டார். அந்த மாணவிக்கு பினாச்சியோ என்ற கவிஞரின் வரிகளில் சொன்ன பதில் என்ன என்றால்...

'நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால்,
நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்!’

என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை... உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால்... நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்!''


ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.

''உங்கள் இளமைப் பருவத்து நண்பர்கள் உங்கள் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள்?''

''என் இளமைப் பருவத்து நண்பர் திரு. சம்பத்குமார் என் சுக துக்கங்களில் இன்னும் பங்கெடுக்கிறார். என் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். சமூக நல சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். என் நண்பரின் மகிழ்ச்சி என்னுடைய மகிழ்ச்சி. அவர் குடும்பமும் எங்கள் குடும்பமும் நல்ல குடும்ப நண்பர்களாகத் திகழ்கிறோம்!''

ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.

''நீங்கள் வாசித்த வரிகளில், நேசித்த வரிகள்?''

''ஹோஷ்மின் உங்கள் கேள்விகள் இரண்டும் நல்ல கருத்துள்ளவை. வாசித்த வரிகளில்

2 + 2 = 4 வரிகள் நான் நேசித்தது.

'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’

'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’

திருக்குறளின் இந்த நாலு வரிகளும் ஒவ்வொருடைய வாழ்விலும் அச்சாணிகளாகத் திகழ வேண்டும்!''


''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''

''6,000 வருடங்கள்கொண்ட இந்திய வரலாற்றில், இந்தியாவை இந்தியர்கள் ஆண்டது 600 வருடங்கள் மட்டுமே. காரணம் என்ன? நாம் வலிமையோடு இல்லாததின் காரணமாக, இந்தியாவின் வளம் மற்றவர்களால் தொடர்ந்து அபகரிக்கப் பட்டது.

வலிமைதான் வலிமையை மதிக்கும். நம்மைச் சுற்றி 10,000 அணுகுண்டுகளுடன் ரஷ்யாவும் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் இருக்கும்போது, நாம் மட்டும் கையைக் கட்டிக்கொண்டு தபஸ் பண்ண முடியாது. எனவேதான், நமது வலிமையை உலகத்துக்கு நிரூபிக்க அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அதுதான் நமது வலிமையை உலகுக்குப் பறைசாற்றியது. இந்தியாவைப்பற்றிய மதிப்பை உயர்த்தியது.

ஆனால், நாம்தான் முதன்முதலாக 'அணுகுண்டைப் பயன்படுத்த மாட்டோம்’ என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு, உலகத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறோம்.

இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. உலகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!''

பெ.கருணா, வாசுதேவநல்லூர்.

''அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு கலாமின் ஆதரவு உண்டா?''

''இதுவரை நடந்தது நன்றாகவே நடந்தது. இனிமேல் நடப்பதும் நன்றாகவே நடக்கும்!''



Sunday, May 22, 2011

118. தேவை பிரம்ம ராட்சத பூதங்கள்!!!



நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுத் தோல்விக்குக் காரணங்களை அலசும் முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி ஒரு காரணமாகக் குறிப்பிட்ட ,

”தமிழ்நாட்டிற்கென்றே தனியான ‘ஜபர்தஸ்துகளை’ ஜனநாயக விரோதச் செயல்களைச் சாட்டைகளாகக் கொண்டு சர்வாதிகார ‘பாட்டை’ வகுத்துக் கொண்ட தேர்தல் கமிஷன் என்ற பிரம்மராட்சத பூதம்”

என்று தேர்தல் கமிஷனைக் குறிப்பிடுகிறார்.


தமிழகத்தின் சராசரி வாக்காளர்களால் பாராட்டப்பட்ட, ஏன் தெய்வமாகவே பார்க்கப்பட்ட தேர்தல் கமிஷனர் திரு பிரவீண் குமாரின் செய்கைகள் எந்த விதத்திலும் ஜனநாயக விரோதமானவில்லை என்பது ஊழலின் ஊற்றுக்கண்களுக்குத் தெரியப்போவதில்லை..

“மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்.. வாக்களித்தவர்களுக்கு என் நன்றி” என்று பெருந்தன்மையாகத் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தெரியாதவர்களுக்கு.. நன்மைதரும் தெய்வங்களெல்லாம் பிரம்ம ராட்சதர்களாகவேதான் தெரியும்..

தெரியட்டும்...

இந்தியாவில் நீதியையும் நேர்மையையும் ஊழலற்ற ஜனநாயகத்தையும் நிலைநாட்ட நமக்குத் தேவை பிரவீண்குமார் போன்ற (எதிரிகளுக்கு) பிரம்மராட்சச பூதங்கள் போலத் தோற்றமளிக்கும் தெய்வங்கள் தான் !!

117. வெட்கமில்லாதவர்களா இவர்கள்?

எங்க ஊர் மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜ்குமார் பற்றி நான் பெருமையாக நினைத்த காலங்கள் உண்டு. அவருடைய செய்கைகளை நான் நேரில் இருந்து பார்த்த நிகழ்வுகள் உண்டு என்பதால் அவர் அந்த பெருமைக்கு உரியவர்தான் என நினைத்ததுண்டு.. தேர்தல் தோல்வி என்பது ஒருவரை எப்படி மாற்றும் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம்..

நான் மட்டுமல்ல. இவர்தான் எங்கள் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராகவேண்டும் என இவருக்கு வாக்களித்த 60,000 வாக்காளர்கள் இவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்..

இன்னொருவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால்.. அவரை மனதார வாழ்த்திவிட்டு தனது அலுவலகத்தை அவரிடம் நல்ல முறையில் ஒப்படைத்து வருவார் என நான் நினைத்தேன்.. இந்த மாதிரி சட்டமன்ற அலுவலக காம்பவுண்ட் சுவரை உடைத்து எடுத்துச் செல்வாரென்றும் அதனை நியாயப்படுத்திப் பேசுவார் என்றும் நான் நம்பவில்லை..

அவரை அடுத்த முறை சந்திக்கும் போது இது குறித்து நிச்சயம் கேட்டு பதில் எழுதுகிறேன்..


*******

தோல்வியைத் தழுவிய மயிலாடு துறை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அலுவலகத்தில், தான் கட்டிய சுற்றுச் சுவரையும் இடித்து அதனை அள்ளிப்போட் டுக்கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

‘இப்படி எல்லாம் நடக்குமா?’ என்ற ஆச்சரியத்துடன் பலரிடம் விசாரித்தோம்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பாங்க் சாலையில் அரசுக்குச் சொந்தமான சட்டமன்ற அலுவலகக் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தைச் சுற்றிலும் வெறும் முள்வேலியால் ஒரு தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார் அலுவலகத்தைச் சுற்றி தனது சொந்த செலவில் ஒரு சுற்றுச்சுவரை அமைத்தார்.

ஐந்து வருடங்கள் அந்த அலுவலகத்தைப் பயன்படுத்தி வந்த ராஜ்குமார், சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் பால. அருட்செல்வனிடம் 3,017 வாக்குகள் வித் தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

‘தொகுதிக்குப் புதியவரான தே.மு.தி.க. வேட்பாளர் பால. அருட்செல்வனை எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு ஒன்றும் பெரிய காரியமில்லை’ என்று தேர்தல் சமயத்தில் தெம்பாக வலம் வந்தவருக்கு மக்களின் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்துவிட, நொந்துபோனார் ராஜ்குமார்.


இதற்கிடையே, எம்.எல்.ஏ.வின் உத்தரவின் பேரில் அவரது ஆட்கள் அலுவலக ‘காம்பவுண்ட்’ சுவரை இடித்தனர்.

இந்நிலையில், பிரச்னைக்குரிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாரிடமே ‘ஏன் காம்பவுண்ட் சுவரை இடித்தீர்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினோம்.

“நானே அமைத்தேன். நானே எடுத்துக்கொண்டேன். இந்த ‘காம்பவுண்ட் சுவரை ரை அமைத்துக்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ‘தற்காலிக சுற்றுச்சுவர்’ என்று அனுமதியை வாங்கித்தான் கட்டினேன். இப்போது அவர்களே எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

அதனால் சுவரை இடித்து ‘ரெடிமேட் காம்பவுண்ட் பிளேட்களை’ எடுத்தேன். இனி அரசு கட்டிக்கொள்ளட்டும். அலுவலகத்தை முறைப்படி காலி செய்து கொடுக்க வேண் டும் என்ற அடிப்படையில்தான், நான் சொந்த செலவில் கட்டிய ‘காம்பவுண்டை’ எடுத்துக்கொண்டு ஏற்கெனவே இருந்த நிலையில் ஒப்படைத்திருக்கிறேன். என்று கூறினார்.

செய்தி உதவி: குமுதம் ரிப்போர்ட்டர்