Monday, May 30, 2011

120. வளை (டை)யோசை கலகலகலவென கவிதைகள் படித்திட...

பக்கத்தில் உள்ள செய்தியை ஒரு முறைக்கு இரு முறை படித்து விடுங்கள்..
கோவையைச் சேர்ந்த சீனிவாசன் சொல்கிறார்.. தனக்கும் சுமதிக்கும் காதல் பூத்த முதல் தருணத்தைச் சொல்கிறார்..” ஊர்ல மாரியம்மன் கோவில் திருவிழா..சுமதி அவங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க..கோயில்ல பொங்கல் வெச்சாங்க..நான் தோஸ்த்துக்களோடசாப்பிடப் போனேன். சுமதி பரிமாறினப்ப என் இலையில் மட்டும் பொங்கல் அதிகமாக விழுந்தது...அப்பவே நான் அவங்ககிட்டே விழுந்துட்டேன்” என்று..


எவ்வளவு கவித்துவமான காதல் இது.. சுமதி பரிமாறும் போது எல்லோருக்கும் எவ்வளவு போடுகிறார் என்பதை கவனித்து.. தனக்கு மட்டும் அதிகமா விழ்ந்ததில் காதலை இவர் பரிமாறியிருக்கிறார்.. நியாயமாகத்தான் தெரிகிறது.. இதே போல ஒரு காட்சி சுப்ரமணியபுரம் படத்திலும் வரும். நான் ரசிச்ச் ஒரு காட்சி அது..


விகடனின் பின்னூட்டப் பெட்டியில் இந்தச் செய்தியின் கீழேயே....காதல் தெரியாத ஒரு அபிஸ்து வாசகர்..”பொங்கல் ஒரு கரண்டி கூட போட்டாலெல்லாம் காதல் வருமா?” என்று கேட்கிறார்.. அவருக்கு இன்னொரு காதல் இளவரசர் அழகாக பதில் சொல்கிறார்..” இங்கு பொங்கலுக்கும் காதலுக்கும் பெரிய்ய சம்பந்தமில்லை.. பொங்கல் அதிகமாகப் போடுவதில் காதலின் பரிமாணம் தெரிகிறது” ரொம்ப நியாயம்..

இதைப்படிச்ச போது.. எனக்குள்ளும் கொசுவர்த்தி சுத்தியது.. ஆனால் என்(ங்கள்) விஷயத்தில் பொங்கல் இல்லை.. ஆனால் வடை.. (அதனால் தானோ என்னவோ, தமிழ் இலக்கியங்கள் (?) பொங்கல்-வடை என்று எப்பொழுதுமே சேர்த்துச் சொல்கின்றன..


சில வருடங்களுக்கு முன்னர்.. (சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு எந்த வருடமென்று தெரியும்.. ஆனால்.. அது இங்கு முக்கியமில்லை..)வடக்கு அமெரிக்கா நகரங்களில் உள்ள சில நூற்று சொச்ச கோவில்களில் ஒரு கோவில்.. தென்னிந்தியக் கோவில்.. நண்பர் வீட்டு விசேஷத்திற்காக அனைவரும் கோவிலில் குழுமியிருந்தோம். கிட்டத்தட்ட 150 பேர்... அனைவரும் நண்பர் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள்.. மற்றும் சில உள்ளூரார்..

கோவிலில் இறை சன்னதியில் பூஜை நடந்து கொண்டிருந்தது. மடப்பள்ளியில் (கிச்சனில்) அன்றைய உணவும் பிரசாதமும் தயாராகிக்கொண்டிருந்தது.. மடப்பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று வந்து கொண்டிருந்த சில தன்னார்வலர்களில் ஒரு நீல நிற சூரிதார் அணிந்த ஒரு கிளியும் அடக்கம். பறந்து விரிந்து கட்டுக்குள் அடங்க மறுத்த சுருள் முடி, நல்ல நிறம்.. சாண்டில்யன் கதைகளில் விவரிக்கப்படும் அரசிளங்குமரிகளின் விவரணையில் முழு அளவு பொருந்தக்கூடிய அழகுப் பதுமை அந்தக் கிளி.. (இந்தப் பெண்களையெல்லாம் அந்த சாண்டில்யன் கிழவர் எப்படி பக்கம் பக்கமாக வர்ணிக்கிறாரோ.. நமக்கெல்லாம் வர்ணனையெல்லாம் மனதில் வருகிறது.. எழுத வரும் போது மட்டும் குணா பட கமலஹாஸன் அலவில் திணறுகிறது..) மற்ற தன்னார்வலர்கள் ஆண்கள்..

என்னுடன் நின்றிருந்து இரண்டு இளைஞர்களுக்கும், இரண்டு பேரிளைஞர்களுக்கும் மடப்பள்ளியில் தயாராகிக் கொண்டிருந்த வடை வாசனையில் ஒரு கண்.. அதிலும் ஒருவர் வடைப் பிரியர்.. இரண்டு முறை மடப்பள்ளியை அணுகி... “அதெல்லாம் நெய்வேத்தியத்துக்கு அப்புறம் தான் சார். அதுவும் பரிமாறும் போது தான்..” என்று பேச்சு வாங்கி வந்துவிட்டார்... அப்பொழுது தான் அங்கு நான் நுழைகிறேன்.. என்னையும் வம்புக்கிழுத்தனர்.. “என்னடா பெரீய்ய சீமாச்சு நீ.. முடிந்தால் கிச்சனிலிருந்து வடை வாங்கிக்கொடு பார்க்கலாம்..” என்று பெட்டு கட்டினர்.. நானும் முயற்சி செய்து பார்த்தேன் .. கிட்டத்தட்ட முடியவில்லை.. ஆனாலும் நான் வீறாப்பாக..”எது எப்படியோ.. இன்று கோவிலில் முதல் வடை எனக்குத்தான்..” என்று சபதமிட்டேன்.. “ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியாது..” .. எங்கள் வாக்குவாதம் நடந்த இடத்தில் (நீலக்)கிளியும் அவ்வப்போது போய வர இருந்தது.. நானும் (அனேகமாக எல்லாரும் தான்..) அதன் நடவடிக்கைகளை ஓரக்கண்ணால் அனுபவித்துக் கொண்டிருந்தனர். எங்கள் உரையாடல் முழுவதும் நடந்தது தமிழில்.. சிறிது விசாரித்ததில்.. கிளிக்கு தமிழ் தெரியாது.. கன்னடம் மட்டுமே புரியும் என்பது சில துப்பறியும் சாம்புக்களால் கண்டுபிடிக்கப்பட்டு பரிமாறப்பட்டது..

அதற்குள் சன்னதியில் பூஜை விறுவிறுப்படைய எல்லாரும் அங்கு அழைக்கப்பட்டோம்.. அங்கு நடந்த பல பரிமாற்றங்களில் மதிய நேரம் 1 மணியைத் தொட்டதும்.. வயிறு பசிக்க ஆரம்பித்ததும்.. ஏதாவது சாப்பிட்டால் போதும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.. வடையும் கிளியும் மனதுக்குள் வந்து வந்து போனாலும் சபதம் மட்டும் மறந்து விட்டது.. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது உண்மைதான் போலும்.. எனக்கே சபதம் மறந்து விட்டது..

சாப்பாட்டு நேரம்.. எல்லோரும் வரிசையாக தரையில் அமர்த்தப்பட்டோம்.. வரிசைக்கு 25 பேர் வீதம் 6 வரிசை பந்தி அமர்வு.. என்னுடம் பெட்டு கட்டிய பேரிளைஞ்ர் ஞாபகமாக முதல் வரிசையில் முதலில் அமர்ந்திருந்தார்.. நான் (சபத) நினைவில்லாமல் முதல் வரிசையில் 15 வதாக இன்னொரு நண்பருடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தேன்..

தன்னார்வலர்களும்.. (நீலக்)கிளியும் உணவு பரிமாறினார்கள்..பாயாசம், பருப்பு, சாதம், பொறியல் வகையறாக்கள் முதல் வரிசையிலிருந்து பரிமாறப்பட்டன.. குனிந்து சாதம் பார்த்துக் கொண்டிருந்த என் முகம் முழுவது ஒரு நீல நிற் ஒளி பாய்ந்தது.. சுற்றியிருப்பவர்களெல்லாம் fade out ஆகிக்கொண்டிருந்தனர்.. என் இலையில் மட்டும் இரண்டு (நண்பர்களே.. கவனிக்கவும்.. ஒன்று இல்லை.. இரண்டு) வடைகள் விழுந்தன.. சில வினாடிகள் மட்டும் அங்கேயே (என்னருகிலேயே) நின்றுவிட்டு முதல் வரிசையின் முதலுக்குச் சென்று வடை பரிமாற ஆரம்பித்தது நீலக்கிளி..

எனக்குத்தான் விழுந்தது....முதல் மட்டுமல்ல.. முதல் இரண்டு வடைகளும்..... எனக்குக் கிடைத்தது மிக ஸ்பெஷலாக வரிசை மாறிவந்து பரிமாறப்பட்ட வடை(கள்)...

இதுவே தமிழ்ப்படமாகயிருந்திருந்தால்.. அப்படியே கட் பண்ணி சுவிட்சர்லாந்திலோ.. மச்சுபிச்சுவிலோ ஒரு டூயட் பாடியிருக்கலாம்..

பொங்கல் காதல் மாதிரியே.. இங்கேயும் ஒரு காதல் பூத்ததுதான்.. ஆனால் சூழ்நிலையின் அபத்தத்தை உணர்ந்து (எனக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள்.. நீலக்கிளியின் கால் விரல்களிலும் புது மெட்டி..-வடை போடும் போது கவனித்தது..) அந்தக்காதல்..அப்பொழுதே விடை (வடை??) பெற்றுக்கொண்டது..

ஆகவே.. நண்பர்களே.. பொங்கல் அதிகமாக இலையில் விழுந்தாலும் காதல் மலரும்.. வடை கிடைத்தாலும் காதல் மலரும்...

இங்கு பொங்கலுக்கும் வடைக்கும் காதல் உறவல்ல.. அவை வெறும் தூதுப்புறாக்களே....

11 comments:

Vidhoosh said...

// என் முகம் முழுவது ஒரு நீல நிற் ஒளி பாய்ந்தது..//
சான்ஸ்லெஸ் டைமிங் :)))

உண்மைத்தமிழன் said...

அண்ணே..

மனதில் விழுந்த ஒன்றை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து தூக்கியெறிந்த உமது பொறுப்புணர்ச்சி மிகவும் பாராட்டத்தக்கது..!

அந்தக் கிளியின் பெயர், அட்ரஸ் கிடைக்குமா..? நீங்க உத்தமர்.. ஒதுங்கிக்குங்க..!

KVR said...

செம செம செம :-)))

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))))))

க.பாலாசி said...

//அப்படியே கட் பண்ணி சுவிட்சர்லாந்திலோ.. மச்சுபிச்சுவிலோ ஒரு டூயட் பாடியிருக்கலாம்.. //

ஹா..ஹா... :-)) சுவாரசியம்..

sriram said...

அண்ணே..
கோவில்ல உண்டகட்டி வாங்கி சாப்பிட்டதைகூட இவ்வளவு சுவாரசியமா சொல்ல முடியுமா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Seemachu said...

@Vidhoosh, KVR, ChinnaPaiyan, & Balaji
ரொம்ப நன்றி ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

Seemachu said...

உண்மைத்தமிழரே.. உங்களுக்கு ஒரு மிக அழகான கிளி கிடைக்க வாழ்த்துக்கள்.. உள்ளூரிலேயே நல்ல தகுந்த ஜோடிக்கிளியாத் தேடுங்க..

உண்மைத்தமிழன் -னு பேரு வெச்சிக்கிட்டு ஒரு கன்னடப்பைங்கிளிக்காக ஏங்குவது தமிழுக்கே இழுக்கு.. நல்ல தமிழ்க்கிளியாப் பாருங்க..

Seemachu said...

//கோவில்ல உண்டகட்டி வாங்கி சாப்பிட்டதைகூட இவ்வளவு சுவாரசியமா சொல்ல முடியுமா?//

ஸ்ரீராம், உண்டக்கட்டின்னெல்லாம் சொல்லக்கூடாது.. அன்னலட்சுமி..

இது ஒரு அக்மார்க் உண்மைச்சம்பவம்.. சாட்சிங்களெல்லாம் வெச்சிருக்கேன்..

அந்த வடைக்கு அப்புறம் நான் நானாக மாற எனக்குச் சில தினங்கள் பிடித்தன என்பதும் உண்மை.. என்னைச்சுற்றி பொறாமையோட ஒரு ஆளு சுத்திக்கிட்டிருந்தாரென்பதும் உண்மை !!!

மற்றவை நேரில்

Vetri said...

அண்ணா! பாஸ்டன் ஸ்ரீராமை நானும் வழி மொழிகிறேன்!

Ramachandranwrites said...

"அந்த வடைக்கு அப்புறம் நான் நானாக மாற எனக்குச் சில தினங்கள் பிடித்தன என்பதும் உண்மை.."

முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். உங்கள் நேர்மைக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனம்